Posts Tagged ‘eBird’
“2.0 – படம் அறிவியலுக்கு எதிரான படம்!” – ஆனந்த விகடன் நேர்காணல்
“2.0 – படம் அறிவியலுக்கு எதிரான படம்!” – ஆனந்த விகடன் இதழுக்காக (01-05-2019/25-௦4-2019-Online) பத்திரிக்கையாளர் திரு. க. சுபகுணம் அவர்களிடம் பகிர்ந்தவை..
நேர்காணலின் முழு வடிவம் கீழே:
பறவைகள். பூவுலகில் வாழும் உயிரினங்களில் மனித இனத்தின் ஈர்ப்பையும் அன்பையும் சற்றுக் கூடுதலாகப் பெற்ற உயிரினம். மனிதனால் இவ்வுலகில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களால் வெகுவாக பாதிக்கப்படுவதும் பறவைகளே. சூழலியல் பாதுகாப்பில் ஒருவரை ஈடுபடுத்த வேண்டுமென்றால் முதலில் அவரைப் பறவை நோக்குதலுக்குப் பழக்கவேண்டும். அதுவே தானாக அவரை அடுத்தகட்டத்திற்கு இட்டுச்சென்றுவிடும். அத்தகைய பறவை நோக்குதலைத் தமிழகத்தில் பரவலாக்கியதில் பல பறவை ஆய்வாளர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் முக்கியப் பங்குண்டு. அத்தகைய பறவை ஆய்வாளர்களில் முக்கியமானவர் ப.ஜெகநாதன். மக்கள் அறிவியல் (Citizen Science) தமிழ்ச் சமுதாயத்தில் பரவலானதிலும் இவருடைய பங்கு மிக முக்கியமானது. ஆய்வாளர்கள் மக்களிடமிருந்து பிரிந்து நிற்கக்கூடாது, அவர்கள் மக்களுடன் நிற்க வேண்டும். அதை நடைமுறையில் செய்துகொண்டிருப்பவர். இயற்கை பாதுகாப்பு நிறுவனம் (Nature Conservation Foundation) சார்பாக காட்டுயிரியலாளராக வால்பாறையில் ஆய்வுகளைச் செய்துவரும் அவருடனான நேர்காணல் இனி…
ஆய்வுத்துறையில் குறிப்பாகப் பறவைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற உந்துதல் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?
1996-ம் ஆண்டு மாயவரத்தில் உள்ள ஏ.வி.சி கல்லூரியில் முதுகலையில் காட்டுயிரியல் படித்துக் கொண்டிருந்தேன். மக்கள் மத்தியில் காட்டுயிர் ஒளிப்படக்கலை மீதான ஆர்வம் வளர்ந்துகொண்டிருந்த சமயம். என் களஆய்வுக்காக தவளைகள், பாம்புகள், முதலைகள் போன்ற உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்துகொண்டிருந்தேன். ஒகேனக்கல், பிலிகூண்டு, ராசிமணல் போன்ற பகுதிகளின் நதியோரங்களில் தான் களப்பணி. அப்போது பறவைகள் மீது அதீத ஆர்வம் இல்லையென்றாலும், ஓரளவுக்குப் பறவைகளைப் பார்க்கும் பழக்கமிருந்தது. அந்தச் சமயத்தில் என் பெற்றோர்கள் ஒரு இருநோக்கியை பரிசளித்தார்கள். அது மிகவும் பயனுடையதாக இருந்தது. காவிரிக் கரையில் நடந்து செல்லும் போது பல விதமான பறவைகளை முதன் முதலாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆக, பறவைகள்மீது உங்களுக்கு அளப்பரிய ஆர்வம் வந்ததற்கு அந்த இருநோக்கியை காரணமாகச் சொல்லலாமா?
அதுவும் ஒரு காரணம் என்று சொல்லலாம். நான் பறவைகளைப் பார்க்கத்தொடங்கியது நூல்களில் தான்! சாலிம் அலி எழுதிய இந்தியப் பறவைகள் (The Book of Indian Birds) எனும் நூலை ஆர்வத்துடன் தினமும் புரட்டிக்கொண்டிருப்பேன். அதில் உள்ள பலவகையான பறவைகளின் ஓவியங்களை பார்க்கையில் அவற்றை நேரில் பார்க்கும் ஆசை எழும். பறவை பார்த்தல் எப்போதும் அங்கிருந்துதான் தொடங்கும். நூலில் நாம் பார்க்கும் படங்கள் மனதில் பதியும்போது அவற்றை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் இயல்பாகவே குழந்தையைப்போல் துள்ளிக் குதிப்போம். படத்தில் பார்த்த ஒன்றை நேரில் பார்த்தால் யாருக்குத்தான் ஆனந்தமாக இருக்காது.
அப்படிப் பார்த்ததில் எந்தப் பறவை முதலிடத்தில் உள்ளது?
முதலிடம் என்று ஒன்றை மட்டும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. எனினும் இன்னும் நீங்காமல் நினைவில் நிற்பது ஒகேனக்கல் வனப்பகுதிகளில் முதன்முதலில் கண்ட மஞ்சள் தொண்டை சிட்டு (Yellow-throated Sparrow), மாயவரம் கல்லூரி விடுதியில் இருந்து பார்த்த கொண்டைக் குயில் (Red-winged Crested Cuckoo), களக்காட்டில் பார்த்த பெரிய இருவாச்சி (Great Pied Hornbill) போன்றவற்றைச் சொல்லலாம். இன்னும் பார்க்க வேண்டிய பறவைகள் எத்தனையோ உள்ளன. ஆக இந்தப் பட்டியல் என்றுமே முடியாது.
இந்தப் பறவைகளை எல்லாம் புத்தகத்தில் பார்த்துப் பழகியபின் நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்ததும் மகிழ்ச்சியடைந்தேன். அப்படித் தொடங்கிய ஆர்வம்தான் இதுவரை இழுத்து வந்துள்ளது. பறவைகளைப் பார்க்க இருநோக்கி வேண்டுமென்றில்லை, ஆர்வம் இருந்தால் போதும். முதலில் பறவைகளின் படங்களை நாம் பார்க்கவேண்டும். அதை நேரில் பார்க்கையில் நாமே தானாக இனம் காண முயல்வோம். அதுதான் ஆர்வத்தின் முதல்படி. அவற்றின் குரலைக் கேட்டு அறிந்து கொள்வோம். அதன்பிறகு அவற்றைக் கூர்ந்து கவனிக்க இருநோக்கிகள் நமக்குப் பயன்படும்.
பறவை நோக்குதல் பொதுமக்களிடத்தில் பரவுவது அவசியமானதா?
பறவை நோக்குதல் என்பதொரு அருமையான பொழுதுபோக்கு. குழந்தைகள் முன்பெல்லாம் தெருவில் விளையாடுவார்கள், குளத்தில் குளிக்கப்போவார்கள். அவை தற்காலத்தில் மிகவும் குறைந்துவிட்டது. குளம், ஏரி, காடு மேடுகள் எல்லாம் சுற்றும்போது அங்கிருக்கும் மரங்கள் உயிரினங்களின் பெயர்களைத் தெரிந்து வைத்திருப்போம். அதெல்லாம் தற்போது இல்லாமலே போய்க்கொண்டிருக்கிறது. தொலைக்காட்சி, செல்போன்கள் அவர்களை ஓரிடத்தில் முடக்கி வைக்கிறது. அதனால், தம்மைச் சுற்றியுள்ள இயற்கையைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. அவற்றிலிருந்து அவர்களைத் திசை திருப்ப, இயற்கைமீது பற்றுதல் ஏற்படுத்த, அதைப் பாதுகாக்க வேண்டுமென்ற சிந்தனை உதிக்கப் பறவை நோக்குதல் பயன்படும். பறவை என்றில்லை, வண்ணத்துப்பூச்சிகள், தட்டான்கள், பூச்சிகள், என இயற்கையில் உள்ள எந்த உயிரினாமாக வேண்டுமானாலும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும், நமக்குப் பிடித்தால்தானே பாதுகாக்க நினைப்போம். ஆதலால், இயற்கையைப் பிடிக்க வைக்கவேண்டும். அதற்குப் பறவை நோக்குதல் முதல் படி. அதன்மூலம் பறவைகளை மட்டுமில்லாமல் அவற்றின் வாழிடங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களைத் தூண்டும். ஒரு சதுப்புநிலம் ஆக்கிரமிக்கப் படுகிறதென்றால் அதை எதிர்த்து மக்களைப் போராட வைக்கும்.
அதையும் தாண்டி, பறவை நோக்குதலில் ஈடுபடும் ஒருவர் பொறியாளராக மாறினால் அணை கட்டுவதாக இருந்தாலும், காட்டின் குறுக்கே சாலை போட நேர்ந்தாலும் அங்கு சூழலியல் தாக்க மதிப்பீடு முறையாகச் செய்யவேண்டுமென்று நினைப்பார். அங்கிருக்கும் உயிரினங்களின் வாழிடம் அழியக்கூடாதென்ற கரிசனத்தோடு நடந்து கொள்வார் என எதிர்பார்க்கலாம். இதெல்லாமே பறவை நோக்குதல் தரும் பலன்களாகக் கருதலாம். ஒரு பொறுப்புள்ள சூழலியல்வாதியாக மக்களை உருவாக்குதில் இது மிகப்பெரிய பங்காற்றும்.
மக்கள் அறிவியல், தமிழகத்தில் தற்போது அதிகமாகப் பேசப்படுகிறது, நடைமுறையிலும் செயல்பட்டு வருகிறது. மக்களை இதுமாதிரியான அறிவியல்பூர்வ முயற்சிகளில் பங்கெடுக்க வைப்பது எப்படி சாத்தியமானது? இதுபற்றிக் கொஞ்சம் விளக்கமாகக் கூறமுடியுமா!
நீங்களும்தான் இதைச் செய்கிறீர்கள். விகடன் மாணவப் பத்திரிகையாளர்கள் திட்டத்தை நடத்துகிறீர்களே, அது எதற்காக?
மாணவர்களுக்கு சமுதாயப் பிரச்னைகளைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். அதை எப்படி அணுகவேண்டுமென்ற புரிதல் அவர்களுக்குக் கிடைக்கவேண்டும். எதிர்காலத்தில் அவர்கள் பத்திரிகையாளராக வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி, சமூக மற்றும் அரசியல் பிரச்னைகளைப் பற்றிய புரிதல் அவர்களுக்குக் கிடைக்கவேண்டும் என்பதற்காக நடத்துகிறோம். அதுதானே சமுதாயத்தின் சிறந்த மனிதராக அவர்களுக்குத் துணைபுரியும்.
இதுவும் கிட்டத்தட்ட அதேபோலத்தான். இதழியல் என்பது ஒரு துறை என்பதையும் தாண்டி அதை பொது மக்களும் செய்யமுடியுமென்ற (Citizen Journalism) நம்பிக்கையை எப்படி நீங்கள் விதைத்தீர்களோ அதையேதான் மக்கள் அறிவியல் (Citizen Science) மூலம் சூழலியல் துறையிலும் செய்யமுடிகிறது. அப்போதுதானே சிறந்த சூழலியல் பாதுகாவலனாக மக்கள் வாழமுடியும்.
மக்கள் அறிவியல் பற்றி இன்னும் விரிவாகக் கூறமுடியுமா… அது எப்படி அறிவியல் வளர்ச்சியில் பங்கு வகிக்கின்றது? இது எப்படி பறவைகள் அல்லது இயற்கை பாதுகாப்பில் உதவும்?
ஒருவர் ஒரு பறவையைப் பார்க்கிறார். அதன் பெயர், பார்த்த இடம், நேரம் அனைத்தையும் குறிப்பேட்டில் எழுதி வைத்துக்கொள்கிறார். இதுவொரு முக்கியமான தரவு (Data). உதாரணத்திற்கு, 1980-களில் தஞ்சாவூரில் ஒருவரிடம் பாறு கழுகின் படமும் பார்த்த நேரம், இடம் போன்ற தகவல்களும் இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அதை அவரே வைத்திருந்தால், அவர் இறந்தபின் அது பயனில்லாமல் போய்விடும். பொதுவெளியில் அதாவது eBird, Wikipedia, Wikimedia Commons போன்ற Portal களில் அதை உள்ளிட்டால் அதே தரவுகள் ஆவணமாகும். இங்கெல்லாம் முன்பு பாறுகள் இருந்திருக்கிறது, இப்போது இல்லாமல் போய்விட்டது என்ற தகவல் ஆய்வுகளில் பயன்படும். அதுவும், அழிவின் விளிம்பிலிருக்கும் பாறு போன்ற பறவைகளின் தரவுகள் பொக்கிஷங்களைப் போல. அது பல முடிச்சுகளை அவிழ்க்கவும், ஆய்வுகளை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தவும்கூடப் பயன்படும்.
சிட்டுக்குருவியால் அழியும் தருவாயில் இல்லை என்பதை நிரூபிக்கவும் இது போன்ற திட்டங்கள் உதவும். (பார்க்க Citizen Sparrow ).
உதாரணமாக ஒரு ஏரி அல்லது குறிப்பிட்ட வனப்பகுதியில் இருந்து இருந்து பலரும் அங்கிருக்கும் பறவைகளை பல்லாண்டு காலமாக தொடர்ந்து கண்காணிப்பதன் மூலமாகவும் அவற்றை eBirdல் உள்ளிடுவதன் மூலமும் அங்குள்ள பொதுப்பறவைகளையும், அரிய பறவைகளையும், வலசை வரும் பறவைகளையும், அவற்றின் அடர்வையும் (density) அறிய முடியும். சில ஆண்டுகளுக்கு முன் அதிகமாக இருந்த ஒரு வகைப் பறவை இந்த ஆண்டு கணக்கெடுப்பில் குறைந்து போனதென்றால் அதை அறிந்து கொண்டு அதற்கான காரணம் என்னவென்பதை ஆராய்ந்து அவற்றை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடலாம்.
ஒரு வேளை யாரோனும் அந்த ஏரியில் மண்கொட்டி நிரப்பி கட்டடம் கட்ட வந்தாலோ அல்லது குறிப்பிட்ட வனப்பகுதியின் குறுக்கே பெரிய அகலமான சாலையை போட வந்தாலோ அதனால் ஏற்படப்போகும் பாதிப்புகளை பொதுவெளியில் உள்ள மக்களால் சேகரிக்கப்பட்ட தரவுகளை வைத்தே அந்தத் திட்டம் வேண்டுமா வேண்டாமா என்பதை அறிவியல் பூர்வமாக நிர்ணயிக்க முடியும்.
ஆக தரவுகள் சேகரிப்பதுதான் இதன் நோக்கமா?
இல்லை. இதுபோன்ற தரவுகளை மக்கள் அறிவியல் மூலமாகச் சேகரிக்க வைப்பது மக்களுக்கும் அதன்மூலம் அறிவியல் சார்பான புரிதலை ஏற்படுத்தவும் தான். அவர்கள் சேகரிக்கும் தரவுகளைப் பொதுத்தளத்தில் பதிவிட ஊக்குவிக்கும் போது, அதன்மூலம் மிகப்பெரிய ஒரு கடலில் நாம் போட்ட துளியும் இருக்கிறதென்று அவர்கள் உணர்வார்கள். அது அறிவியல் மனப்பான்மையோடு அனைத்தையும் அணுகவேண்டுமென்ற சிந்தனையை அவர்களிடம் மேன்மேலும் அதிகரிக்கும்.
மக்கள் அறிவியல் தரவு சேகரிப்பதற்கான கருவி மட்டுமல்ல. நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது போன்றவற்றை மக்கள் புரிந்துகொள்ள உதவும் ஒரு செயல்முறை.
மக்கள் அறிவியல், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை புரிந்துகொள்ளவும் அதைக் கணிக்கவும்கூடப் பயன்படுமாமே! உண்மையாகவா?
சூழியல் சுட்டிக்காட்டிகளான பறவைகளுக்கு காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை வைத்து அவைகளோடு இவ்வுலகில் இருக்கும் நமக்கும் எந்த விதத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதை அறியலாம். பூமி சூடாதல், காலந்தவறி பெய்யும் மழை, பனி, உயரும் கடல் மட்டம் போன்றவை பறவைகளையும் அவற்றின் வாழிடங்களையும் வெகுவாக பாதிக்கிறது.
வெப்பநிலை உயர்வால் உலகில் உள்ள வனப்பகுதிகளில் வசிக்கும் பல பறவைகள் பாதிப்படைந்துள்ளன. வெகுதூரத்தில் இருந்து வலசை வரும் பறவைகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள. உதாரணமாக ஒரு பழவுண்ணிப் பறவை வகை அது அது வலசை சென்ற இடத்தில் இருந்து கிளம்பி கூடமைக்கும் இடத்திற்கு செல்கிறது. அவ்வேளையில் அங்கே அவை உண்ணும் ஒரு பழ மரம் காலந்தவறி முன்னமே பூத்து காய்த்து பழுத்து ஓய்ந்து விடுகிறது. அப்போது அங்கு வரும் அப்பறவைகளுக்கு போதுமான உணவு கிடைக்காமல் போகலாம். அவை அங்கே செல்வது கூடமைத்து தம் இனத்தைப் பெருக்க. ஆனால் போதிய உணவு இல்லாததால் சில பறவைகள் கூடமைகாமல் போகலாம், அப்படியே கூடமைத்தாலும் குஞ்சுகளுக்கு சரிவர உணவு கிடைக்காமல் அவை இறந்து போகலாம்.
ஒரு பகுதிக்கு ஒரு வகையான பறவை வலசை வரும் நாள் அல்லது வாரம் அதே போல அவை அந்த இடத்தை விட்டு கிளம்பும் நாள் அல்லது வாரம் என்பது மிகவும் முக்கியமான தரவு. இதை பல பறவையாளர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக பதிவு செய்து பொதுவெளியில் உள்ளிடும் போது இது ஒரு முக்கியமானத் தரவாகும். இந்தத் தரவுகள் மூலமாக ஒரு பறவை ஓரிடத்தில் எத்தனை நாட்கள் தங்குகின்றன என்பது தெரியும். அதேபோல் இதற்குமுன் எத்தனை நாட்கள் தங்கியிருந்தன என்பதும் தெரியும். இந்தக் காலகட்டம் தற்போது மாறுபடுகிறது. அதற்குக் காரணம் அந்த இடத்திலிருக்கும் தட்பவெப்ப நிலையில் நடக்கும் மாற்றங்கள். அந்த மாற்றங்களுக்குக் காரணம் காலநிலை மாற்றமா என்பதை ஆராய முடியும். மக்கள் தரவுகளாகப் பதிவேற்றும்போது அதைவைத்து ஆய்வு மாதிரி ஒன்றை உருவாக்கி அந்தப் பகுதிகளில் காலநிலை மாற்றத்தால் என்னென்ன விளைவுகள் எதிர்காலத்தில் ஏற்படுமென்றுகூடக் கணிக்கமுடியும். அதற்கு மக்கள் அறிவியல் உதவும்.
இதுமாதிரியான தரவுகளை மக்கள் பதிவிட்டதன் மூலமாகக் கார்னெல் பல்கலைக்கழக (Cornell University) ஆய்வாளர்கள் தற்போது காலநிலை மாற்றத் தால் ஏற்படும் பாதிப்பை கணிக்கின்றனர். வலசைகள் முன்பு எப்படியிருந்தன, இப்போது எப்படி மாறியிருக்கின்றன, காலப்போக்கில் அது எப்படி மாறுபடும் என்பதையும் அவர்கள் இதன்மூலம் சொல்கிறார்கள். மக்கள் அறிவியல் குடிமக்களிடம் அறிவியல்சார்ந்த புரிதலை ஏற்படுத்துவதோடு நின்றுவிடாமல் ஆய்வுகளில் அவர்களையும் பங்கெடுக்க வைக்கின்றது. ஆம், அறிவியல் ஆய்வுகளில் மக்களும் பங்கெடுக்க முடியும். மக்கள் அறிவியலைக் கையிலெடுப்பதன் மூலம் ஆய்வாளர்கள் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை கணிப்பதற்கு மக்கள் உதவவேண்டும்.
சமீப காலங்களில் போலி அறிவியல் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அறிவியற்பூர்வமாக ஆதாரமற்றவைகளை அறிவியல் சாயம் பூசிப் பிரசாரம் செய்கிறார்களே! அதை எப்படி அணுகுவது?
இப்போதில்லை, இந்த மாதிரியான பிரச்னைகள் ஆரம்ப காலத்திலிருந்தே இருந்துவருகிறது. இன்னமும் பூமி தட்டை என்று சொல்லக்கூடியவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். இவை இருந்துகொண்டேயிருக்கும். இவற்றைக் கண்டு சினங்கொண்டு, மிரண்டு, மன அழுத்தத்தில் அமர்ந்துவிடக்கூடாது. சொல்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். காலநிலை மாற்றமே பொய்யென்று சொல்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். அமெரிக்காவின் ஆகப்பெரிய இரண்டு கட்சிகளும் தற்போது சண்டையிட்டுக் கொள்வதே இதுகுறித்துத்தானே. தெரியாமல் பேசுபவர்களுக்குச் சொல்லிப் புரியவைக்கலாம். தெரிந்தே அரசியல் ஆதாயத்திற்காகப் பேசுபவர்களைக் கண்டுகொள்ளாமல் கடந்துசென்றுவிட வேண்டும். காலப்போக்கில் அவையெல்லாம் நீர்த்துப்போகும். அதைக்கண்டு பயப்பட வேண்டியதில்லை.
ஆனால், ஒரு விஞ்ஞானி அமைதியாக இருந்துவிடக் கூடாது. அவர்கள் சொல்வதிலிருக்கும் உண்மைத்தன்மையை ஆராயவேண்டும். காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள் மட்டுமில்லை, அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவரகளுமே இதில் வாய்திறந்து பேசவேண்டும். அதுமாதிரியான போலி அறிவியல்களைத் தக்க ஆதாரங்களோடு போட்டுடைக்க வேண்டும். ஆராய்ச்சியாளர்களாக அது அவர்களுடைய கடமை.
இந்தப் போலி அறிவியல் சூழலியல் பாதுகாப்பையும் பாதிக்கிறதா! மக்களிடம் பரவிக் கொண்டிருக்கும் இதுமாதிரியான விஷயங்களைக் கலைந்து உண்மைகளை எப்படிக் கொண்டுசெல்வது?
அறிவியல்பூர்வ மனப்பான்மை என்பது ஒரு சமுதாயத்திற்கு மிக முக்கியமானது. எதையும் பகுத்தறியும் திறன் சமுதாயத்தில் வளரவேண்டும். அது நம்மிடம் மிகக் குறைவாகவே இருந்தது. தற்போதும் அப்படித்தான் இருக்கிறதென்றாலும் ஓரளவுக்கு அது மாறிவருகிறது. ஒருவர் அறிவியலுக்குப் புறம்பான கருத்தைச் சொல்லும்போது பெரும்பாலானவர்கள் அவரைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். மக்கள் மத்தியில் அறிவியல் பார்வை வளர்ந்து வருகிறது. முன்பே சொன்னது போல் மக்கள் அறிவியல் மூலமாகவும் அறிவியல்பூர்வ மனப்பாங்கை வளர்த்தெடுக்க முடியும். அறிந்தவர்கள் அனைவரும் இதற்காக உழைத்துக் கொண்டே இருந்தால் போதும் அவை தானாக நீர்த்துப்போய்விடும்.
2.0 படம் பற்றிய உங்கள் கருத்து…
நான் அந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை. பலர் சொல்வதை வைத்தும் அப்படத்தைப் பற்றிய கட்டுரைகளை படித்ததை வைத்தும் தான் சொல்கிறேன்.
ஆய்வாளர்கள் ஆண்டுக்கணக்கில் உழைத்துக் கண்டுபிடிக்கும் விஷயங்களை இதுபோன்ற அறிவியல் அடிப்படையற்ற திரைப்படங்கள் ஒரு நொடியில் தகர்த்துவிடுகின்றன. கைப்பேசி கோபுரங்களால் பறவைகள் அழிவதாக அந்தப் படத்தில் பேசியிருப்பது ஏற்கனவே பலமுறை பொய்ச் செய்தியென்று நிரூபிக்கப்பட்டு புதைக்கப்பட்ட விஷயம். அடிப்படைத் தேடுதல்கூட இல்லாமல், அதை மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வது அறிவியலுக்குப் புறம்பானது.
தமிழ்நாட்டில் eBirdல் பறவைத் தகவல்கள் இல்லாத இடங்கள்
பறவைகளின் எங்கெங்கெல்லாம் பரவியியுள்ளன என்பது பற்றிய தகவல் அவற்றின் பாதுகாப்பிற்கும், அவற்றின் வாழிடங்களின் பாதுகாப்பிற்கும் உதவும். அண்மைக் காலங்களில் eBird மூலம் நம்மைச்சுற்றியுள்ள பறவைகளை பதிவு செய்து தகவல்களை சமர்ப்பிப்பதால் பறவைகள் குறித்த புரிதல் ஓரளவிற்கு தெரிந்துள்ளது. பறவை ஆர்வலர்கள் பெரும்பாலும் எங்கே பறவை வகைகள் அதிகமாகத் தென்படுகிறதோ அங்கேயே செல்வார்கள். இதனால் ஒரு சில பகுதிகளில் (உதாரணமாக கோடியக்கரை, முதுமலை சரணாலம்) உள்ள பறவைகளின் பரவல், எண்ணிக்கை போன்ற தகவல்கள் ஒப்பீட்டளவில் அதிகமாகவும், ஏனைய தமிழகப் பகுதிகளில் குறைந்த அல்லது முற்றிலும் தகவல்களே இல்லாத நிலையும் ஏற்படுகிறது.
இதை அறிந்து கொள்ள ஆராய்ச்சியாளரும், பறவை ஆர்வலருமான அஸ்வின் விஸ்வநாதன் ஒரு விரிவான, எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நிலப்படத்தை தயாரித்திருக்கிறார். அதைப் பெற இங்கே சொடுக்கவும். (இதை தரவிறக்கம் செய்து, கைபேசியை விட கணினியில் பார்ப்பது நல்லது)
இதற்காக அவர் தமிழ்நாட்டின் மேல் 1௦ X 1௦ கி.மீ கட்டங்களை இட்டு அதற்குள் எத்தனை வகையான பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, எத்தனை பறவை பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன, எத்தனை பறவை ஆர்வலர்கள் இதைச் செய்துள்ளனர் என்கிற தரவுகளை பொதித்து வைத்துள்ளார்.
வெளிர் நிறக் கட்டங்கள், தகவல்கள் முற்றிலும் இல்லை என்பதைக் குறிக்கும். திராட்சை நிறக் கட்டங்கள், மிகக் குறைந்த அல்லது முழுமையான பட்டியல்கள் (Complete Checklist) இல்லாத இடங்களைக் குறிக்கும். பச்சை, மஞ்சள் ஒப்பீட்டளவில் அதிகமான தரவுகளைக் கொண்ட இடங்கள்.
இதிலிருந்து முற்றிலும் அல்லது மிகக் குறைந்த தகவல்கள் இல்லாத இடங்களை மட்டும் எடுத்து அதை ஒரு கூகுள் நிலப்படத்தின் மேல் (சிவப்புச் சதுரங்கள்) வைக்கப்பட்டுள்ளது.
அதிகமான காலி இடங்கள் இருப்பது கரூர் மாவட்டம். அதனைத் தொடர்ந்து சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் முதலிய மாவட்டங்கள். வட தமிழகத்திலும் பல இடங்கள் ஆங்காங்கே உள்ளன.
இப்போது பறவை ஆர்வலர்களான நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த சிவப்பு சதுரத்திற்குள் சென்று பறவைகளைப் பார்த்து, கணக்கிட்டு அந்த பட்டியலை eBirdல் சமர்ப்பிக்க வேண்டியதுதான். உங்கள் ஊருக்குப் பக்கத்தில் இந்த கட்டங்கள் இருந்தால் அவசியம் அங்கு சென்று பறவைகளை பட்டியலிடுங்கள்.
இந்த நிலப்படத்தை பெற இங்கே சொடுக்கவும். ஒரு வேளை இது உங்களது கைபேசியில் திறக்கவில்லையெனில் கணினியில் முயற்சிக்கவும்.
பறவை நோக்குதல் ஒரு உருப்படியான பொழுதுபோக்கு என்றாலும், அதைச் செய்யும் போது நம்மை மகிழ வைக்கும் பறவைகளுக்காகவும் நம்மாலனதைச் செய்வது நல்லது.
ஒரு வேடிக்கையான விளையாட்டைத் தொடங்கலாம். இந்த ஆண்டின் இறுதியில் எத்தனை கட்டங்களில் தகவல்கள் நிரம்புகின்றன என்றும், காலியிடங்களை நிரப்பும் பணியை யார் அதிகம் செய்கிறார்கள் என்றும் பார்க்கலாம்.
பறவைப் பித்தர்கள்
பறவை நோக்குவோர் வேடிக்கையானவர்கள். அவர்களுக்கு பல ஆசைகளும், பல வகையான ஆசைகளும், புதிது புதிதாக உதித்துக் கொண்டே இருக்கும். ஒரே ஆண்டில் முடிந்த அளவிற்கு தங்கள் நாட்டில் இருந்து அல்லது மாநிலத்தில் இருந்து அதிக வகையான பறவைகளைப் பார்த்து விட வேண்டும் என்பது பொதுவானது. ஆனால் eBird எனும் இணைய தளம் வந்தவுடன் இவற்றோடு வேறு பல ஆசைகளும் வந்து சேர்ந்து கொண்டது. இதுவரை தங்கள் களப்புத்தகத்தில் மட்டுமே குறிப்புகளை எழுதி வந்தவர்கள் அதிலிருந்து மாறி தாங்கள் பார்க்கும், படமெடுக்கும் பறவைகளை, அவற்றின் எண்ணிக்கைகளை eBird செயலி மூலம் பதிவிட ஆரம்பித்தார்கள். இது போன்ற மக்கள் அறிவியல் திட்டங்களுக்கு பங்களிப்பதன் மூலம் பறவைகளின் பரவலும், நிலையையும் அறிந்து கொள்ள முடியும். பறவை நோக்குவோரும் அவர்கள் இந்த ஆண்டு, இந்த மாதம் எத்தனை வகையான பறவைகளை, எங்கெங்கே பார்த்திருக்கிறார்கள் எனும் தகவலை அறிந்து கொள்ள முடியும். இதனால், எதிர் வரும் பறவைப் பயணங்களில் எங்கே எப்போது எந்த வகையான பறவைகளைப் பார்க்கலாம் எனும் தகவல்களைத் திரட்டி சரியான முறையில் திட்டமிடமுடிகிறது.
அவரவர் கற்பனைக்கு ஏற்ப, வசதி வாய்ப்புக்கு ஏற்ப இந்த திட்டமிடலும், பறவை நோக்கும் ஆசைகளும் பலதரப்பட்டவைகளாக இருக்கும். பறவைகள் கணக்கெடுப்பு நாட்களில் அதிக பட்டியல்களை உள்ளிடவேண்டும், நாள் முழுக்க பறவைகளைப் பார்த்து பதிவிட வேண்டும், பல மாவட்டங்களுக்கு சென்று பறவைகளைப் பார்க்க வேண்டும் போன்றவை. இவற்றில் என்னைப் பொறுத்தவரை கிறுக்குத்தனமான ஒரு ஆசை இந்த ஆண்டின் முதல் பறவை நான் பார்த்ததாகத்தான் இருக்க வேண்டும் என நள்ளிரவு 12:00 க்கு எழுந்து பறவைகளை பார்க்கத் தொடங்குவது. பல வேளைகளில் காகமும், மாடப்புறாவும்தான் இருக்கும். ஒழுங்காகத் திட்டமிட்டு இரவாடிப் பறவைகள் இருக்கும் வாழிடத்திற்குச் சென்று காத்திருந்தால் நாள் தொடங்கி சில நிமிடங்களில் நமக்கு நல்வாய்ப்பு அமைந்தால் ஏதாவது ஆந்தைகளை பார்க்கவோ, அவற்றின் குரலைக் கேட்கவோ முடியும், இல்லையெனில் பட்டியலில் பறவைகளே இருக்காது.
பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு இந்த ஆண்டு 14-17 ஜனவரியில் நடைபெற்றது. எனக்கும் ஒரு ஆசை வந்தது. வீட்டின் அருகில் ஒரு கோயில் உள்ளது. அங்கே கூகையை (வெண்ணாந்தை) எளிதில் காணலாம். ஆகவே நள்ளிரவு அங்கே சென்று முதல் பறவையாக அதைப் பார்த்துவிடலாம் என திட்டமிட்டேன். பொதுவாக பொங்கல் கொண்டாடுவது தஞ்சை கரந்தையில் உள்ள பெற்றோர்களுடன் தான். பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பும் வீட்டின் மொட்டைமாடியில் இருந்து குடும்பத்தோடு சேர்ந்து செய்வதும் வழக்கம். இந்த கூகை பார்க்கும் திட்டத்தை சொன்னவுடன், ‘இதெல்லாம் வேண்டாத வேலை, ராத்திரி நேரத்துல தெருவுல ஒரே நாயா கெடக்கு, தனியா போற வேலையெல்லாம் வேண்டாம், துரத்த ஆரம்பிக்கும், பனி வேற கொட்டுது, ஆந்தை நீ வருவன்னு என்ன உட்காந்துகிட்டு கெடக்குதா? பேசாம படு” என அம்மா சொன்னாள். மனைவி என்னைப் பார்க்கும் பார்வையிலிருந்தே, ’என்ன விட்டுட்டு நீ மட்டும் தனியா போறியா? எனக் கேட்பது தெரிந்தது. அப்பாவைக் கூப்பிட்டால் உடனே வந்து விடுவார், ஆனால் அவரைத் தொந்தரவு செய்ய மனமில்லை. முதல் நாள் இல்லையென்றால் என்ன அடுத்து வரும் நாட்களில் பார்க்கலாம் என, முடிவை மாற்றிக் கொண்டு அம்மா சொன்னது போல் ‘பேசாமல் படுத்தேன்’.
பொங்கல் தினங்களில் பறவைகளை கணக்கெடுப்பது 2015ல் தொடங்கியது. இது ஐந்தாவது ஆண்டு. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் உள்ள எல்லா பறவை ஆர்வலர்களும் இந்த நான்கு தினங்களில் பறவைகளைப் பார்த்து பதிவிடுவார்கள். இதனால் காலப்போக்கில் இந்த நாட்களில் இப்பகுதிகளில் உள்ள பறவைகளின் பரவல், எண்ணிக்கை, நிலை என்ன என்பதை நாம் கணிக்க முடியும். ஆண்டு தோறும் பறவை ஆர்வலர்களின் எண்ணிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக கூடிக்கொண்டே வருவதும் மகிழ்ச்சியை அளிக்கிறது. எனினும் சென்னை, காஞ்சிபுரம், சேலம், கோவை முதலிய மாவட்டங்களில் மட்டுமே ஓரளவிற்கு பறவை நோக்குவோர் உள்ளனர். பெரம்பலூர், நாமக்கல், கரூர், தேனீ போன்ற மாவட்டங்களில் இது வரை நடந்துள்ள கணக்கெடுப்புகளில் மிகக் குறைவான அல்லது ஒருவர் கூட இல்லாதது ஒரு பெரிய குறை. எதிர் வரும் காலங்களில் அங்கு பல கூட்டங்கள், பறவை நோக்கல் உலா போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அருகில் உள்ள மாவட்டங்களில் இருக்கும் பறவை ஆர்வலர்களை ஊக்குவிக்க வேண்டும். எனினும் இந்த ஆண்டு கணக்கெடுப்பில் எப்படி தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களில் இருந்தும் பறவைகளைப் பார்த்து தரவுகளை சேகரிப்பது? ஒரே வழி நாமே சூறாவளி சுற்றுப் பயணம் தமிழகம் மேற்கொண்டு பறவைகளைப் பார்த்து பட்டியளிடவேண்டியதுதான். இதைத்தான் மூன்று பறவை ஆர்வலர்கள் செய்தார்கள்.
கோவை மாவட்டத்தைத் சேர்ந்த அருள்வேலன் (வங்கி மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர்), செல்வகணேஷ் (இவர் பள்ளி ஆசிரியர்), இவர்களுடன் பெங்களூரைச் சேர்ந்த காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ஹரீஷாவும் மூன்றே நாட்களில் (ஜனவரி 14 -16) தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கும், தமிழகப் பகுதியில் உள்ள புதுவை, காரைக்காலுக்கும் சென்று பறவைகளைப் பார்த்து பதிவு செய்து வந்துள்ளனர்.

மூன்று நாளில் 33 மாவட்டங்களுக்கு (32 – தமிழ்நாட்டில், புதுச்சேரி&காரைக்கால்) சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பறவைகளைப் பதிவிட்ட மும்மூர்த்திகள் (இடமிருந்து வலமாக) – அருள்வேலன், செல்வகணேஷ், ஹரீஷா.
இதை அறிந்த புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரும், பறவை ஆர்வலலருமான சுரேந்தர் பூபாலன் நாமும் ஏதாவது செய்ய வேண்டுமே என யோசித்திருக்கிறார். தமிழகம் முழுவதும் போகமுடியாது, ஆகவே அருகில் இருக்கும் பெரிய நீர்நிலைகளுக்கு செல்வது என முடிவு செய்தார். ஒன்றல்ல இரண்டல்ல நான்கு நாட்களில் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள 40 நீர்நிலைகளுக்கு பயணித்து சென்று அங்குள்ள பறவைகளையும், அந்த நீர்நிலைகளின் நிலையையும் பதிவு செய்துள்ளார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த பறவை ஆர்வலர் ராஜராஜன் சற்றே புதுமையாக யோசித்திருக்கிறார். பல வகையான பறவைகளை எளிதில் காணக்கூடிய சரணாலம், நீர்நிலைகளுக்குத் தான் பொதுவாக பறவை ஆர்வலர்கள் செல்வார்கள். அப்படியில்லாமல், அவர் வசிக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றுகள், புதர் காடு, கடலோரம், சமவெளி ஊர்ப்புறம் என போன்ற பல வகையான வாழிடங்களில் இதுவரை பறவையாளர்கள் பயணிக்காத பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள பறவைகளைப் பார்த்து பதிவு செய்திருக்கிறார்.
இராஜராஜன் தான் பயணித்த அனுபவத்தை ஒரு சிறிய படமாக தாயாரித்துள்ளார். அதைக் கிழே காணவும்.
இது மட்டுமல்லாமல் மேற்குறிப்பட்ட 3 நாட்களில் 33 மாவட்டங்கள் பறவைப் பயணம் மேற்கொண்ட குழுவினரின் பயணத்தைப் பற்றியும் ஒரு சிறிய படத்தைத் தயாரித்துள்ளார். அதையும் கிழே காணவும்
பல இடங்களுக்கு பயணிப்பது எல்லாராலும் இயலாத காரியம். ஆகவே சேலத்தில் உள்ள பறவை ஆர்வலர்கள் தமிழகத்திலேயே அதிக நேரம் பறவை நோக்கலில் ஈடுபடுவது என முடிவுசெய்தனர். தாரமங்கலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவரான சுப்ரமணிய சிவா அவரது வீட்டின் அருகில், ஊர்ப்புறங்களில், அருகில் உள்ள நீர்நிலைகளுக்கெல்லாம் சென்று, நான்கு நாட்களில் 47 மணி நேரம் பறவை நோக்கலில் ஈடுபட்டார்.
தனி நபர்கள் மட்டுமல்ல பள்ளிகளும், கல்லூரிகளும் கூட்டாக பறவை நோக்கலில் ஈடுபட்டனர். மதுரையில் உள்ள லேடி டோக் கல்லூரியின் விலங்கியல் துறை பேராசிரியையான ப்ரியா ராஜேந்திரனும் அவரது மாணவிகளும் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பயணித்து பறவைகளை பதிவு செய்துள்ளனர். இராஜபாளையம் ராஜுஸ் கல்லூரியில் பணிபுரியும் விஷ்ணு சங்கரும் அவரது மாணவர்களும், பொள்ளாச்சியில் உள்ள நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லுரியின் தாவரவியல் துறை பேராசிரியயையான லோகமதேவியும் அவரது மாணவர்களும் தங்களது வளாகத்தில் உள்ள பறவைகளைப் பதிவிட்டிருக்கிறார்கள்.

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு பயணத்தில் மதுரையைச் சேர்ந்த இறகுகள் அமைப்பின் இரவீந்தரன் மற்றும் லேடி டோக் கல்லூரி பேராசிரியர் ப்ரியா ராஜேந்திரனும் அவரது மாணவியர்களும்.

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பில் இராஜபாளையம் ராஜுஸ் கல்லூரியில் பணிபுரியும் விஷ்ணு சங்கரும் அவரது மாணவர்களும்.

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பில் நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லுரியின் தாவரவியல் துறை பொள்ளாச்சி பேராசிரியர் லோகமாதேவியும் அவரது மாணவிகளும்.
தமிழ் நாட்டில் இதுவரை பதிவு 525 வகையான பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் இந்த பொங்கல் தினங்களில் மட்டுமே 362 வகையான பறவைகளை பார்த்து பதிவிடப்பட்டுள்ளது. பறவை நோக்கல் ஒரு நல்ல பொழுதுபோக்கு எனினும் இது போன்ற மக்கள் அறிவியல் திட்டங்களில் பங்கு பெற்று நாம் பார்த்ததை பொது வெளியில் பதிவிடும் போது, அந்தத் தரவுகள் நாம் பார்த்து ரசிக்கும் பறவைகளுக்கும், அவற்றின் வாழிடங்களை பாதுகாப்பதற்கும் பேருதவி புரியும். இந்த ஆண்டு சுமார் 200 பறவை நோக்குவோர் இந்த கணக்கெடுப்பில் பங்கு பெற்றனர். பொறுப்பான, செயல் திறம்மிக்க இது போன்ற பல பறவைப் பித்தர்கள் இன்னும் பன்மடங்காகப் பெருகவேண்டும் என்பதே என் அவா. பறவைகளைக் காக்க பித்தர்களானால் ஒன்றும் தவறேதும் இல்லைதானே?!
பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு 2019 அறிக்கை
https://drive.google.com/file/d/1crK1fhc_Lh1vhabrdz3L4f9ZJY2528mm/view
16 மார்ச் 2019 ஆண்டு தி இந்து தமிழ் திசை நாளிதழின் ‘உயிர்மூச்சு’ இணைப்பில் வெளிவந்த கட்டுரையின் முழு வடிவம்.
“பறவைப் பித்தர்கள் – https://tamil.thehindu.com/general/environment/article26552673.ece”
தமிழகத்தில் eBirdல் இது வரை பறவைகள் பார்க்கப்படாத இடங்கள்
அப்படிக் கூட இடங்கள் உள்ளதா எனக்கேட்டால் ஆம், உள்ளது. அந்த இடங்களை eBirdல் எப்படி கண்டுபிடிப்பது?
1. https://ebird.org/content/india/ க்கு செல்லுங்கள்
2. Explore – ஐ சொடுக்கவும்
3. Species Map ஐ சொடுக்கவும்
4. பொதுவாக எல்லா இடங்களிலும் எளிதில் காணக்கூடிய பறவை ஒன்றின் பெயரை Species பகுதியில் அடிக்கவும் (உதாரணமாக House Crow)
5. Locationல் Tamil Nadu என அடிக்கவும்
6. இப்போது தென்னிந்திய வரைபடமும், House Crow வின் பரவலும் திரையில் விரியும்.
7. அடர் ஊதா நிறத்தில் இருக்கும் பகுதிகளில் இருந்து சமர்ப்பிக்கப்பட்ட 40-100% பறவைப் பட்டியல்களில் House Crow பதிவுசெய்யப்பட்டுள்ளது. இள ஊதா நிறம் குறைவாக பதிவு செய்யப்பட்டதைக் குறிக்கும். சாம்பல் நிறம் அங்கே பறவைகள் பார்த்து பட்டியல் சமர்ப்பிக்கப்படுள்ளது, ஆனால் காகம் அந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.
8. இது தவிர சில கட்டங்கள், சாம்பல் நிறத்தில் கூட இல்லாமல் வரைபடம் தெளிவாகத் தெரியும். அந்தப் பகுதிகள் தான் இது வரை பறவைகளே பார்க்கப்படாத இடங்கள்.
9. இப்பொது Locationல் உங்களது மாவட்டத்தின் பெயரை அடிக்கவும். உங்கள் பகுதிகளில் இது போன்ற காலி இடங்கள் இருந்தால் அப்பகுதிக்குச் சென்று பறவைகளைப் பார்த்து பட்டியலிட்டு eBirdல் சமர்ப்பிக்கவும்.
10. இப்போது Dateக்கு சென்று Year-Round, All Years என்பதை சொடுக்கவும். CUSTOM DATE RANGE… பகுதியில் கிழே மாதம் வாரியாக (Jan–Jan, Feb-Feb போன்று) காகத்தின் பரவலை/பதிவை பார்க்கவும். பல இடங்கள் காலியாக இருப்பதைக் காணலாம்.
இது போல வேறு பல பறவைகளுக்கும் பார்த்து அறியவும். உதாரணமாக Common Myna அல்லது Large-billed Crow போன்ற பறவைகளின் பெயர்களையும் மாதம் வாரியாக பார்த்து அவற்றின் பரவல் நிலையை அறிந்து அதற்குத் தக்க உங்களது பறவை நோக்கலை திட்டமிடவும்.
இதைச் செய்வதால் என்ன பயன்?
பறவைகளின் பரவல், எண்ணிக்கை, அடர்வு போன்ற காரணிகள் அவற்றின் பாதுகாப்பிற்கும், அவற்றின் வாழிடங்களின் பாதுகாப்பிற்கும் உதவும். ஓரிடத்தில் இருந்து தொடர்ச்சியாக பறவைகளைப் பார்த்து பதிவு செய்து வந்தால் மட்டுமே அந்த இடத்தில் அவற்றின் சரியான, துல்லியமான, உண்மை நிலையை அறிய முடியும்.
நாம் பதிவு செய்யும் ஒவ்வொரு பறவையின் குறிப்பும் அவற்றின் பாதுகாப்பிற்கும் உதவும்.
தமிழ் நாட்டில் எங்கே, எப்போது பறவைகளைப் பார்க்க வேண்டும்?
தமிழ்நாட்டில் பறவை பார்த்தலும், அப்படி பார்ப்பதை eBirdல் உள்ளிடுவதும் அண்மைக் காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகின்றது.
எனினும், தற்போது தமிழ்நாட்டில் பறவை பார்ப்போர் அதிகமாக இருக்கும் இடங்களில் இருந்தே (உதாரணமாக கோவை, சென்னை, காஞ்சிபுரம் முதலிய மாவட்டங்கள்) eBirdல் பறவைப் பட்டியல்கள் அதிகமாக வந்து குவிகின்றன. ஆனாலும் இந்த இடங்களில் கூட ஆண்டு முழுவதும் ஒரே சீராக (அதாவது மாதா மாதம் அல்லது வாரா வாரம்) பறவைகள் பார்க்கப்பட்டு பட்டியல்கள் eBirdல் வந்து சேர்கிறதா என்றால் இல்லை.
சில மாவட்டங்களில் ஒரு சில குறிப்பிட்ட பறவை ஆர்வலர்களாலும், குழுவினர்களாலும் (உதாரணமாக சென்னையில் The Nature Trust, கோவையில் Coimbatore Nature Society – CNS), அப்பகுதிகளில் பறவைகள் பார்ப்பதும் பட்டியலிடுவதும் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. எனினும் மாவட்ட அளவில் பார்க்கும் போது இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஓரிரு குறிப்பிட்ட இடங்களில் மற்றும் காலங்களில் மட்டுமே தொடந்து நடைபெறும்.
சில மாவட்டங்களில் சில காலங்களில் மட்டும் அதிகமான பறவைப் பட்டியல்கள் சமர்ப்பிக்கப்படும். உதாரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோடியக்கரைக்கு பல பறவை ஆர்வலர்கள் செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை வலசை வரும் பறவைகளைக் காணச் செல்வார்கள். ஆனால் இடைப்பட்ட மாதங்களில் (ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதங்களில்) அப்பகுதியில் உள்ள பறவைகளின் நிலை பற்றிய தகவல்கள் குறைவாகவே இருக்கும்.
பறவைகளின் பரவல், எண்ணிக்கை, அடர்வு போன்ற காரணிகள் அவற்றின் பாதுகாப்பிற்கும், அவற்றின் வாழிடங்களின் பாதுகாப்பிற்கும் உதவும். ஓரிடத்தில் இருந்து தொடர்ச்சியாக பறவைகளைப் பார்த்து பதிவு செய்து வந்தால் மட்டுமே அந்த இடத்தில் அவற்றின் சரியான, துல்லியமான, உண்மை நிலையை அறிய முடியும்.
அந்த ஓர் இடம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியாகவும் அதாவது சரணாலயம், நீர்நிலை அல்லது பரந்த நிலப்பரப்பாகவும் அதாவது ஒரு ஊர், மாவட்டம், மாநிலம், நாடு என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
தமிழ் நாட்டில் தற்போது மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. பாண்டிச்சேரியையும் காரைக்காலையும் சேர்த்தால் 34. இவற்றில் எந்த எந்த மாவட்டங்களில் எந்த எந்த மாதங்களில் பறவைகள் பார்க்கப்பட்டு eBirdல் உள்ளிடப்படுகின்றன என்று பார்த்த போது சில உபயோகமுள்ள தகவல்களை பட்டை வரைபடத்தின் மூலம் (Bar Chart) அறிய முடிந்தது. அதன் முடிவுகளில் சிலவற்றை இக்கட்டுரையில் காணலாம்.
அதற்கு முன் இந்த பட்டை வரைபடத்தினை (Bar Chart) எப்படி eBirdல் அடைவது என்பதையும் அதை புரிந்து கொள்வது எப்படி என்பதையும் அறிந்து கொள்வோம்.
1. eBird India இணையத்திற்கு செல்லவும்
2. Explore Data வை சொடுக்கவும்
3. Bar Charts ஐ சொடுக்கவும்
4. Choose a Locationல் Select a region:ல் Tamil Nadu ஐ தேர்ந்தெடுக்கவும்
5. Then select a subregion: ல் Counties in Tamil Nadu வை தேர்ந்தெடுக்கவும்
6. பின்னர் “Continue” வை சொடுக்கவும்
7. தமிழ் நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களும் பட்டியலிடப் பட்டிருக்கும். அதில் நீங்கள் பார்க்க விரும்பும் மாவட்டத்தை தேர்ந்தெடுத்து “Continue” வை சொடுக்கினால் பட்டை வரைபடத்தை அடையலாம்.
இந்த பட்டை வரைபடத்தில் (eBirdல்) ஒரு மாதம் நான்கு வாரங்களாக பிரிக்கப்பட்டு இருக்கும். 1-7 முதல் வாரம், 8-14, இரண்டாவது வாரம், 15-21 முன்றாவது வாரம், 22 30 or 31 நான்காம் வாரம். அதாவது மாதத்தின் கடைசி வாரத்தில் நாட்கள் அதிகம்.
இப்போது உதாரணமாக அரியலூர் மாவட்டத்தை எடுத்துக் கொள்வோம். இந்த மாவட்டத்தில் Lesser Whistling Duck (Dendrocygna javanica) – சீழ்கைச் சிரவி – ஜனவரி முதல் வாரத்திலும் மூன்றாவது வாரத்திலும் பார்க்கப்பட்டதை பச்சை நிற பட்டையை வைத்து அறிந்து கொள்ளலாம். இரண்டாவது வாரத்தில் அந்த மாவட்டத்தில் பறவைகள் பார்க்கப்பட்டு பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டாலும் சீழ்கை சிரவி பதிவு செய்யப்படவில்லை. ஆகவேதான் அங்கே இளநீல வெற்றிடம் உள்ளது. ஆனால் மார்ச் நான்காம் வாரத்தை கவனியுங்கள். இளங்கருப்பு புள்ளிகளால் ஆனா பட்டையால் நிரப்பப்படிருக்கும். இது போதிய தரவுகள் இல்லை என்பதை அதாவது அந்த மாவட்டத்தில், அந்த வாரத்தில் பறவைகளைப் பார்த்து ஒரு பட்டியல்கூட உள்ளிடப்படவில்லை என்பதைக் குறிக்கிறது.
இந்த பட்டை வரைபடம் மிகக் குறைவான தரவுகளைக் (Data) கொண்டே தீட்டப்பட்டுள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் ஜனவரி முதல் மார்ச் வரை ஓரளவிற்கு பறவைகளைப் பார்த்து பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதன் பின் தொடர்ச்சியாக அப்படி ஒன்றும் பெரிய நிகழ்வுகள் ஏதும் இல்லை. இந்த பட்டை வரைபடம் 1900ம் ஆண்டு முதல் 2016 வரை உள்ளிடப்பட்ட தரவுகளைக் கொண்டது. எனினும் பெரும்பாலான பட்டியல்கள் 2014 க்குப் பிறகுதான் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன (மேலும் விவரங்களுக்கு இந்த உரலியை சொடுக்கவும்). அதுவும் பெரும்பாலும் கரைவெட்டி பறவைகள் சரணாலத்தில் இருந்து, ஓரிரு பறவை ஆர்வலர்களால் மட்டுமே பதிவு செய்யப்பட்டவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நாம் உதாரணத்திற்கு எடுத்துக் கொண்ட அரியலூர் மாவட்டத்தைப் போல எல்லா 34 மாவட்டங்களின் நிலையை July 2016 முதல் வாரத்தில் எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட பட்டை வரைபடங்களின் மூலம் அறியலாம்.
இந்த வெற்றிடங்களை நிரப்ப என்ன செய்யலாம்?
- பறவை ஆர்வலர்கள் தங்கள் தங்கியிருக்கும் மாவட்டங்களின் பட்டை வரைபடைத்தை eBirdல் பார்த்து, எந்த எந்த வாரங்களில் அல்லது மாதங்களில் பறவைகளைப் பற்றிய விவரங்களில் வெற்றிடங்கள் இருக்கிறன என்பதைக் கண்டறிந்து அந்த குறிப்பிட்ட காலங்களில் பறவைகளைப் பார்த்து பட்டியலிடலாம்.
- ஒரிரு பறவை ஆர்வலர்களாலோ, குழுவினர்களாலோ ஒரு மாவட்டத்தில் உள்ள எல்லா இடங்களுக்கும் சென்று பறவைகளைப் பார்த்து பட்டியலிடுவது என்பது முடியாத காரியம். ஆகவே தங்களது மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு பறவைகள், பறவை பார்த்தல், அவற்றின் முக்கியத்துவம் முதலியவற்றை கருத்தரங்குகள், பட்டறைகள் மூலம் எடுத்துச் சொல்லலாம். அவர்களுக்கு சரியான தருணத்தில் eBird ஐ பற்றி எடுத்துச் சொல்லலாம்.
- பறவை ஆர்வலர்கள் இதற்கு முன் பல்வேறு மாவட்டங்களில் பார்த்து குறித்து வைத்திருந்தால் அல்லது பழைய நிழற்படங்களில் இருந்து பறவைகளைப் பற்றிய (இடம், எண்ணிக்கை நேரம் போன்ற) தகவல்களை அறிந்து Historical அல்லது Incidental முறையில் eBirdல் உள்ளிடலாம்.
- அதிகம் பயணம் செய்யும் பறவை ஆர்வலர்களாக இருந்தால் தாங்கள் இருக்கும் மாவட்டத்திற்கு அருகில் இருக்கும் மாவட்டங்களில் எந்த மாதங்களில் விவரங்கள் இல்லை என்பதை eBirdல் பார்த்து தங்களது பயணங்களை திட்டமிட்டு அங்கே சென்று பறவைகளைப் பார்த்து பட்டியலிடலாம்.
- இது கொஞ்சம் வினோதமான யோசனை. நீங்கள் கொஞ்சம் adventurous typeஆக இருந்தால், நேரமும், கொஞ்சம் பணமும் இருந்தால் தனியாகவோ அல்லது ஒரு குழுவாகவோ ஆகஸ்டு இரண்டாவது வாரத்தில் (8-14 தேதிகளில்) அதாவது இந்த ஆண்டின் 30ஆவது வாரத்தில் அரியலூர், கடலூர், தருமபுரி, கன்னியாகுமரி, கரூர், நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருநெல்வேலி, திருவாரூர், திருவண்ணாமலை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள பறவைகளைப் பார்த்து பட்டியலிடவும். இப்படிச் செய்தால் ஒரே வாரத்தில் 16 மாவட்டங்களில் உள்ள வெற்றிடங்களை நிறப்ப முடியும். அவரவர் வசதி, விருப்பத்திற்கு ஏற்றவாறு பைக்கிலோ, பேருந்திலோ, இரயிலிலோ, தனியாக ஒரு வண்டியைப் பிடித்துக் கொண்டோ பயணம் செய்யலாம். இந்த வினோதமான பயணத்திற்கு ஆகஸ்டில் முடியவில்லை என்றால் செப்டம்பர் முதலிரண்டு வாரங்கள் உகந்தவை. அப்படியெல்லாம் செய்ய முடியவில்லையெனில் அடுத்த ஆண்டு (2017) மார்ச் 3ம் வாரம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சென்று பறவை பட்டியல்களை eBirdல் சமர்ப்பித்தால் அங்குள்ள ஒரே ஒரு வெற்றிடத்தை அடைத்த பெருமை உங்களுக்கு வரும்!
மேலே உள்ள 34 மாவட்டங்களின் பட்டை வரைபடங்களை அடிப்படையாக வைத்து ஒரு வரைபடம் தயாரித்துள்ளேன். இது எந்த எந்த மாவட்டங்களில் எத்தனை வாரங்கள் இது போன்ற இடைவெளிகள் உள்ளன, ஒரே வாரத்தில் அதிகபட்சமாக எத்தனை மாவட்டங்களில் இது போன்ற இடைவெளிகள் உள்ளன என்பதை அறிய உதவும். இந்தத் தரவுகளை இந்த Excel File ல் பார்க்கலாம்.

இளநீல பின்னணியில் புள்ளிகளைக் கொண்ட கட்டங்கள் eBird ல் அந்த மாவட்டத்தில் அந்த வாரத்தில்/மாதத்தில் பறவைப் பட்டியல்கள் எதுவுமே இல்லாததைக் குறிக்கிறது. July 2016 முதல் வாரத்தில் eBird ல் உள்ள பட்டை வரைபடத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது இந்த வரைபடம்.
இன்னும் பல ஆண்டுகள் இந்த 34 மாவட்டங்களின் பல பகுதிகளில் இருந்து பலரும் எல்லா மாதங்களில் இருந்தும் பறவைகளைப் பார்த்து eBirdல் பட்டியலிட்டால் அந்த மாவட்டத்தில் உள்ள பறவையினங்களையும், அவற்றின் பரவல், எண்ணிக்கை, தென்படும் காலம் முதலிய விவரங்களையும் ஓரளவிற்கு தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
பறவைகளைப் பார்த்து eBirdல் பட்டியலிட்டு நாம் எத்தனை வகையான பறவைகளைப் பார்த்திருக்கிறோம், எத்தனை பட்டியல்களை சமர்ப்பித்திருக்கிறோம் என்று மட்டும் பார்ப்பது ஒரு நல்ல பறவை ஆர்வலர்களுக்கு அழகல்ல. அவரவர் வாழும் பகுதிகளில் எந்த எந்த இடங்களில்/ காலங்களில் இருந்து தரவுகள் குறைவாகவோ அல்லது முற்றிலும் இல்லாமலோ இருந்தால் அந்த வெற்றிடங்களையும் நிரப்புவது ஒரு பொறுப்பான பறவை ஆர்வலரின் கடமையாகும்.
பொங்கல் பறவைகள் – 2016
பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு (ஜனவரி 15-18) இரண்டாம் ஆண்டும் (2016) இனிதே நடந்து முடிந்தது. தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து பலர் பங்கு கொண்டனர். நான்கு நாட்கள் நடந்த இக்கணக்கெடுப்பில் இதுவரை (18 ஜனவரி 22:30 மணிவரை) 530 பறவைப் பட்டியல்கள் eBird இணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. சுமார் 322 வகையான பறவைகள் பார்த்து பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு birdcount.inல் இப்பக்கத்தைக் காண்க.
என் பங்கிற்கு பல வகையான பறவைகளை பார்த்து பட்டியலிட்டுக் கொண்டிருந்தேன். பார்த்த எல்லா பறவைகளும் அழகுதான். அவற்றில் சிலவற்றை படமெடுத்துக் கொள்ள முடிந்தது. எடுத்த சில படங்களில் ஒழுங்காக வந்தவைகளில், எனக்குப் பிடித்தவைகளில் சிலவற்றை கீழே காணலாம்.
கம்பி வால் தகைவிலான் (Wire-tailed swallow) பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பில் பார்த்த பறவைகளில் மனதில் நின்ற முக்கியமான தருணங்களில் ஒன்று இப்பறவைகளைக் கண்டது. தஞ்சையில் உள்ள வெண்ணாறு ஆற்றுப்பாலத்தில் இருந்து வெகுநேரம் இப்பறவைகள் பறந்து திரிவதையும், பாலத்தின் அருகில் சென்ற கம்பியில் வந்தமர்ந்ததையும் பார்த்துக் கொண்டிருந்தோம்.
அல்லிக் குளத்தில் அல்லி இலைகளின் மேல் வந்திறங்க முயற்சித்து இலைகள் அமிழ்ந்து போக மீண்டும் குளத்தின் கரையோரமாகவே சென்று அமர்ந்தது இந்த மடையான். தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை போகும் வழியில் இருந்த புலவன்காடு எனும் ஊரின் அருகில் சாலையோரமாக இருந்தது இந்த அழகான அல்லிக்குளம்.

மாடு மேய்க்கும் பறவைகள் – உண்ணிக்கொக்கு (Cattle Egret), கரிச்சான் (Black Drongo) மற்றும் மைனா (Common Myna).
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுவூர் ஏரிக்கு சென்றிருந்தோம். அங்கு பார்த்த சில பறவைகள் தான் இவை.
எனது பறவைகள் ஆண்டு 2014
தி இந்து சித்திரை மலர் 2015 ல் “வானில் பறக்கும் புள்களைத் தேடி” எனும் தலைப்பில் வெளியான படக்கட்டுரையின் முழு வடிவம்.
—–
சில ஆண்டுகளுக்கு முன் The Big Year எனும் ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்த்தேன். அமெரிக்காவில் ஆண்டுதோறும் பறவை பார்ப்போரிடையே ஒரு போட்டி நடக்கும். ஓர் ஆண்டில் யார் அதிகமான பறவைகள் வகைகளைப் பார்த்து பதிவு செய்கிறார்கள் என்பதே அது. இந்தப் படமும் ஓர் ஆண்டில் அதிக பறவைகள் பார்க்க அமெரிக்காவின் பல மூலைகளுக்குச் செல்லும் மூவரைப் பற்றியது. இப்படிச் செய்யும் போது இவர்களுக்குள் நடக்கும் போட்டி, அவர்கள் தங்களது குடும்பத்தில், வேலை செய்யுமிடத்தில் சந்திக்கும் எதிர்கொள்ளும் இடையூறுகள் ஆகியவை பற்றி மிகவும் சுவாரசியமாக செல்லப்பட்ட படம் இது.
இப்படத்தைப் பார்க்கும் எந்த பறவை பார்ப்போருக்கும் இது போல நாமும் செய்ய வேண்டும் எனும் உந்துதல் ஏற்படும். எனினும் இதற்காக முன்பே பல வகையில் திட்டமிட வேண்டும். பயணித்திற்காக சேமிக்க வேண்டும், எங்கெங்கு சென்றால் எந்தெந்த வகைப் பறவைகளைக் காணலாம், எத்தனை வகைப் பறவைகளைக் காணலாம் என்பதையெல்லாம் ஒழுங்காகத் திட்டமிட வேண்டும். மிகுந்த பொருட்செலவும் ஆகும். இந்தியாவில் சுமார் 1300 வகையான பறவைகள் உள்ளன. இவற்றில் பாதியைக் காண வேண்டுமென்றால் கூட இந்தியாவின் பல மூலைகளுக்குச் செல்ல வேண்டி வரும். அதற்கெல்லாம் என்னிடம் நேரமும் இல்லை, பணமும் இல்லை. ஆகவே எத்தனை வகை பறவைகளைப் பார்ப்பது என்றில்லாமல் எவ்வளவு நேரம் பறவைகளுக்காக செலவழிக்கிறோம் எனப்பார்க்கலாம் என 2014 மார்ச் மாதம் முடிவு செய்தேன். தினமும் குறைந்தது 15 நிமிடங்கள், நான் எங்கே இருந்தாலும், பறவை பார்ப்பதென முடிவு செய்தேன். அப்படிப் பார்க்கப்பட்ட பறவைகளை eBird (www.ebird.org) எனும் இணையத்தில் உள்ளிட ஆரம்பித்தேன். மாதங்கள் சில கடந்தவுடன் இந்தியாவில் அதிக பறவைப் பட்டியல் உள்ளிட்டவர்களில் முதல் 10 இடத்தில் எனது பெயரைக் கண்டவுடன் இந்த ஆண்டு எப்படியாவது முதலிடத்திற்கு வர முயற்சிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டேன்.
பணி நிமித்தம் கேதர்நாத் கஸ்தூரி மான் சரணாலயத்திற்கு 2 வாரங்களுக்கு செல்ல மே மாதத்திலும், மத்திய இந்தியாவின் சில வனப்பகுதிகளுக்கும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு நான் பார்த்த பறவைகள் வகையின் எண்ணிக்கையும் சற்று உயர ஆரம்பித்தது. அப்போது தான் முடிவு செய்தேன். குறைந்தது 500 வகைப் பறவைகளையாவது இந்த ஆண்டு பார்த்து விட வேண்டு மென. ஆண்டு இறுதியில் இதற்கான பயணங்களுக்காக திட்டமிட ஆரம்பித்தேன்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, கிழக்குக் கடற்கரையோரம், இமயமலைக் காடுகள், மத்திய இந்தியக் காடுகள் ஆகிய பகுதிகளில் தென்படும் பறவைகளில் பலவற்றைப் பார்த்தாகி விட்டது. வட கிழக்கு இந்தியக் காடுகளும், தார் பாலைவனமும் தான் மிஞ்சி இருந்தது. அஸ்ஸாம், நாகாலாந்து, மேகாலா, ராஜஸ்தான், குஜராத் என டிசம்பர் மாதம் சுற்ற ஆரம்பித்தேன். படகிலும், பஸ்ஸிலும், இரயிலிலும், ஒட்டகத்திலும், நடந்து சென்றும், பல வகையான பறவைகளை கண்டு களித்தேன். ஆண்டு இறுதியில் நான் உள்ளிட்ட மொத்த பறவைப்பட்டியல்கள் 648 (eBird Checklists) பறவை வகைகளும் 500ம் மேல். இந்தியாவிலேயே 2014ம் ஆண்டு முதலிடத்தில் இருந்தேன்.
பறவைகளுக்கான எனது பயணத்தில் இதுவரையில் நான் பார்த்திராத, பல்வேறு வகையான, அழகிய, விசித்திரமான பறவைகளையும் கண்டுகளித்தேன். பார்த்த பல பறவைகளின் படங்களையும் அவ்வப்போது எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவற்றில் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
நாராய்..நாராய்..
குஜராத்தில், அஹமதாபத்திற்கு அருகில் உள்ள நல்சரோவர் பறவைகள் சரணாலயத்திற்கு பறவைகளைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தோம். போகும் வழியில் வானில் பறந்து சென்ற பறவைப் பார்க்க சட்டென வண்டியை நிறுத்தினோம். அது ஒரு செங்கால் நாரை (White Stork Ciconia ciconia). சத்திமுத்தப் புலவர் பாடிய சங்கப்பாடலில் வரும் அதே பறவைதான். ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வலசை வரும் இந்த அழகிய நாரை.
வட்டமிடும் புல்வெளிக் கழுகு
பறவை வகைகளிலேயே மிகவும் கம்பீரமான தோற்றத்துடன் இருப்பவை கழுகுகள். அவற்றின் கூரிய அலகும், கொக்கி போன்ற கால் நகங்களும், பறக்கும் நிலையில் நீண்டு அகன்ற இறக்கைகளும், அவற்றில் விரல்கள் போன்ற முதன்மைச் சிறகுகளும் அவை அமர்ந்திருந்தாலும், பறந்து கொண்டிருந்தாலும் மிடுக்கான தோற்றத்தைக் கொடுக்கும். ஐரோப்பிய, ரஷ்யா முதலான பகுதிகளிலிருந்து ஆண்டு தோறும் இந்தியாவின் வட பகுதிக்கு வலசை வரும் கழுகு இது. அங்கே Steppe எனும் பரந்து விரிந்த, மரங்கள் இல்லா புல்வெளிகளிலும், வெட்டவெளிகளிலும் வசிப்பதனாலேயே Steppe Eagle Aquila nipalensis எனப் பெயர் பெற்றது. பாறுகளைப் போலவே இவையும் Diclofenac எனும் கால்நடை வலிநீக்கி மருந்தினால் பாதிப்படைந்து எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன.
அந்தரத்தில் சாகசம்
இப்பூமிப்பந்தின் வடக்கில் இருக்கும் நாடுகளில் இருந்து கூட்டம் கூட்டமாக தென்னிந்தியாவிற்கும், குஜராத்திற்கும் வலசை வருபவை யூரெசிய பெருங்கொக்குகள் (Common Crane Grus grus). மதிய வேளையில் கூட்டமாக பறந்து வந்த இப்பெருங்கொக்குக் கூட்டம் தரயிறங்கும் முன் நீர்நிலைகளின் மேல் வட்டமடிக்கும். நீரில் இறங்கும் முன் தமது நீண்ட இறக்கையை பக்கவாட்டில் விரித்து, தலையை நிமிர்த்தி, கால்கள் இரண்டையும் நேராக வைத்துக் கொண்டு காற்றில் தவழ ஆரம்பிக்கும். அந்தரத்தில் அவை நிற்பது போலவே தோற்றமளிக்கும் இக்காட்சி பார்ப்போரை வியப்பிலாழ்த்தும்.
பெரிய அக்கா குயில்
இமயமலை அடிவாரக் காடுகளிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் தென்படும் இந்த பெரிய அக்கா குயில் (Large Hawk-Cuckoo Hierococcyx sparverioides). உத்தராஞ்சலில் ஓக் மரக்காடுகளில் திரிந்து கொண்டிருந்த போது இவற்றின் குரலை கேட்டுக் கொண்டே இருந்தேன். இதன் குரலை வைத்து அடையாளம் கண்டு கொள்ளலாம், ஆனால் பார்ப்பது கடினம். மரங்களினூடே அமர்ந்து ஓயாமல் கூவிக்கொண்டிருக்கும். எனினும் இப்பறவையை ஒரே ஒரு முறை சற்று அருகில் பார்க்கும் நல்வாய்ப்பு கிடைத்தது. இது வலசை வரும் குயிலினம். இந்தியாவின் வடபகுதியில் கடும் குளிர் காலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இப்பறவைகளைக் காணலாம். எனினும் இவை வலசை வரும் பகுதிகளில் குரலெழுப்பாமல் அமைதியாகவே இருக்கும்.
காட்டுச் சிறுஆந்தை
இந்த அழகான சிறிய ஆந்தை முற்றிலுமாக அற்றுப்போய் விட்டது பல காலம் பறவை ஆர்வலர்கள் எண்ணிக்கொண்டிருந்தனர். எனினும் 1997ல் இது மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்டது. உலகின் அரிய ஆந்தை வகைகளில் ஒன்று. மத்திய இந்தியாப் பகுதியில் உள்ள மேல்காட் புலிகள் காப்பகம் (Melghat Tiger Reserve) இப்பறவையைக் காண சிறந்த இடம். இந்த காட்டுச் சிறு ஆந்தை (Forest Owlet Heteroglaux blewitti) பகலில் தான் இரைதேடும். இலையுதிர் காடுகளிலும், தேக்குமரக் காடுகளிலும் தென்படும். ஆந்தைகளை பகலில் வெட்ட வெளியில் அமர்ந்திருப்பதைக் கண்டால் மற்ற பறவைகளுக்குப் பொறுக்காது. அவற்றைச் சூழ்ந்து கொண்டு கத்திக் குரலெழுப்பி விரட்டியடிக்க முயற்சிக்கும். சில வேளைகளில் ஆந்தைகள் எங்காவது இலை மறைவில் சென்று அமர்ந்துவிடும். எனினும் சில நேரங்களில் ஆந்தைகள் அதையெல்லாம் சட்டையே செய்யாது. நான் கண்ட இந்த காட்டுச் சிறுஆந்தையின் அருகில் வந்த சிறிய வெள்ளைக் கண்ணி கத்திக் கொண்டிருந்ததையும், அதைக் கண்டுகொள்ளாமல் அந்த ஆந்தை அப்படியே அசையாமல் அமர்ந்திருந்ததையும் பார்க்க வேடிக்கையாக இருந்தது.

காட்டுச் சிறு ஆந்தையைப் (Forest Owlet Heteroglaux blewitti) பார்த்துக் கத்தும் வெள்ளைக்கண்ணி (Oriental white-eye Zosterops palpebrosus)
பாலை சிலம்பன்
பாலை சிலம்பன்களுக்கு (Common Babbler Turdoises caudata) கண்ணைப் பறிக்கும் வண்ணச் சிறகுகள் இல்லாது, மெலியநிறங்களில் தான் இருக்கும். பொதுவாக 6 முதல் 20 பறவைகள் வரை ஆங்காங்கே பிரிந்து கூட்டமாக இரைதேடும். இடம் விட்டு இடம் போது ஒன்றன் பின் ஒன்றாக பறந்து செல்வது பார்க்க அழகாக இருக்கும். இவை நம்மூரில் இருக்கும் தவிட்டுக் குருவிகள் வகையைச் சேர்ந்தவை. வறண்ட நில புதர்க்காடுகளிலும், வெட்டவெளிகளிலும், பாலை நிலங்களிலும் இவை வசிக்கும். இந்தியாவில் பரவலாகத் தென்பட்டாலும், மேலே குறிப்பிட்ட வாழிடங்களில் தான் பார்க்க முடியும். தென்னிந்தியாவை விட வடபகுதியில் பொதுவாகப் பார்க்கலாம்.
மண்கொத்தியின் நண்டு வேட்டை
கடற்கரையில் பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது தென்பட்டது இந்த மண்கொத்தி (Common Sandpiper Actitis hypoleucos). இவை பூமியின் வடபகுதியிலிருந்து இந்தியாவிற்கு வலசை வருபவை. குடுகுடுவென கடலோரமாக ஓடி மணலைக் குத்திக் கொண்டு அதிலுள்ள பூச்சிகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. சட்டென அமைதியாக சில நொடிகள் நின்றது. பிறகு ஒரே பாய்ச்சலில் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு நண்டை அலகால் கொத்தி எடுத்தது. தலையை அங்குமிங்கும் ஆட்டி அந்த நண்டை தரையில் அடித்துக் கொண்டிருந்தது. பிறகு எதிர்பாராத வகையில் வேகமாக அருகில் தேங்கியிருந்த தண்ணீரை நோக்கி ஓடி அதில் அந்த நண்டை முக்கியது. இது போன்ற கடற்கரையில் இருக்கும் நண்டுகளை அலகால் பிடித்துக் கொண்டிருக்கும் போது தவறுதலாக விட்டு விட்டால் அவை வேகமாக ஓடி குழிக்குள் சென்று ஒளிந்து கொள்ளும். ஆனால் நீரில் அவை தப்பிக்க முடியாது. எனவே தான் நீரில் முக்கி அந்த நண்டை கொத்திக் கொத்தி சாப்பிட ஆரம்பித்தது.
தரையிரங்கும் வெண்கால் பாறு
வெண்கால் பாறு (Slender-billed Vulture Gyps tenuirostris) உலகிலேயே மிகவும் அபாயத்திற்குள்ளான பாறுகளில் ஒன்று. இமயமலை அடிவாரப் பகுதிகளும், வடகிழக்கு இந்தியாவிலும், நேபாளத்திலும் சுமார் 1000 பறவைகள் மட்டுமே தெற்போது எஞ்சியுள்ளன. இவற்றைக் காண அஸ்ஸாமில் உள்ள தின்சுக்கியா எனுமிடத்திற்குச் சென்றேன். இறந்து போன கால்நடைகளை போட்டுவைக்கும் திடலில் கூட்டமாக சுமார் 50 பறவைகளைக் கண்டேன். சில மரங்களின் மேலும், சில திடலில் கிடந்த இறந்த மாட்டின் தசைகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தன. இவைகளைக் கண்டதும் வெகுதூரம் பயணம் செய்து களைப்பும் காணாமல் போனது. இந்த அரிய பறவைகளை வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். அவற்றைப் பார்த்ததில் மகிழ்ச்சி என்றாலும், அவற்றின் நிலையை எண்ணி பெருமூச்சுடன் அந்த இடத்திலிருந்து அகன்றேன்.
கிரெளஞ்சப் பறவை
சாரஸ் என வடமொழியில் அழைக்கப்படும் மிக அழகான பெருங்கொக்கு. வால்மீகி ராமாயணத்தில் வரும் கிரெளஞ்சப் பறவை தான் இந்த சாரஸ் பெருங்கொக்கு (Sarus Crane Grus antigone). ஏரி, குளங்களில், வயல்வெளிகளில் சோடியாக இருப்பதைக் காணலாம். மத்திய மற்றும் தென்னிந்தியாவில் பரவலாகத் தென்படுகிறது. ஆளுயரத்திற்கு இருக்கும் இப்பெருங்கொக்கு நடனத்திற்குப் பெயர் போனது. மத்தியப் பிரதேசம் கோண்டியா மாவட்டத்தில் சாரஸ் சோடி ஒன்று வயலின் ஓரமாக கூடு கட்டி வைத்திருந்தது. வெகுநேரமாக ஆண் ஒன்று அடைகாத்துக் கொண்டிருந்தது. சற்று நேரத்தில் எங்கிருந்தோ பறந்து வந்த அதன் பெண் துணையைக் கண்டவுடன் எழுந்து நின்று, சிறகடித்து மேலும் கீழும் குதித்தது. வந்திறங்கிய பெட்டையும் அதைப் போலவே துள்ளிக் குதித்தது. சாரஸின் நடனம் ஒரு கண்கொள்ளாக் காட்சி.
குப்பையில் நின்றாலும்..
சில பறவைகளை எளிதில் காண அவை அதிகமாகத் தென்படும் இடங்களுக்குச் சென்று பார்த்துவிட்டு நேரத்தையும், அலைச்சலையும் மிச்சப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அது எப்படிப்பட்ட இடமாக இருந்தாலும் போவதற்குத் தயாராக இருக்க வேண்டும். பெரிய போதா நாரையைக் (Greater Adjutant Stork Leptoptilos dubius) காண அஸ்ஸாமின் தலைநகரமான குவஹாத்தியில் உள்ள பரந்து விரிந்து கிடக்கும், துர்நாற்றம் வீசும் குப்பை மேட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கு லாரி லாரியாகக் கொண்டு வந்து கொட்டும் குப்பைக் கூளங்களில் உள்ள உணவுப் பொருட்களையும், மாமிசக் கழிவுகளையும் எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தன அந்த நாரைகள். சில அங்கு குப்பைகளைத் தரம் பிரிப்பவர்களுக்கு வெகு அருகிலேயே கூட நின்று கொண்டிருக்கும். இனப்பெருக்கக் காலங்களில் இவற்றின் சிறகுகள் இல்லத தலை, கழுத்து, அதில் தொங்கும் பை போன்ற அமைப்பு யாவும் சிவப்பும், மஞ்சளும் கலந்த நிறத்தில் இருக்கும். குப்பை மேட்டில் நின்றிருந்தாலும், அந்த மாலை வெயிலில் அழகாகத்தான் இருந்தது அந்த விசித்திரமான தோற்றம் கொண்ட பறவை.
பரத்பூரில் பறக்கும் ஆண்டிவாத்து
ராஜஸ்தானில், பரத்பூரில் உள்ள உலகப்புகழ் பெற்ற கியோலதோ தேசியபூங்கா (Keoladeo National Park) பறவைகளின் சொர்கபூமி. ஆகவே பறவை பார்ப்போருக்கும் தான். சுமார் 350 வகையான பறவைகள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும் வலசை வரும் பறவைகள். குறிப்பாக வாத்து, கொக்கு, நாரை முதலிய நீர்ப்பறவைகள். படத்தில் இருப்பது வலசை வரும் ஆண் ஆண்டிவாத்து (Northern Shoveler Anas clypeata).
பறவைகளில் அரசன்
ராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது சற்று தொலைவில் அமர்ந்திருந்தது இந்த அரசக் கழுகு (Eastern Imperial Eagle Aquila heliaca). வட இந்தியாவிற்கு வலசை வரும் கழுகினங்களில் ஒன்று இது. மொதுவாக முன்னேறி சற்று அருகில் சென்று அதைப் படமெடுத்தேன். இருநோக்கியில் கண்ட போதுதான் தெரிந்தது ஏன் இதற்கு இப்பெயர் வைத்தார்கள் என. அப்படி ஒரு மிடுக்கான தோற்றம் அதற்கு.
நண்டுதிண்ணி
குஜராத்திற்கு பறவைகள் பார்க்கச் செல்லும் முன், சில குறிப்பிட்ட பறவைகளைப் பார்க்க வேண்டும் என பட்டியல் தயார் செய்திருந்தேன். அதில் முக்கியமான ஒன்று இந்த நண்டுதிண்ணி (Crab Plover Dromas ardeola). பெயருக்கு ஏற்றாற்போல் நண்டுகளையே அதிகமாக உண்ணும் பறவை. இந்தியாவின் கடலோரப்பகுதிகளுக்கு வலசை வரும். பொதுவாக தனித்தனியே இரைதேடினாலும், கூட்டமாக வந்து ஓரிடத்தில் அடையும். அது ஒரு கண்கொள்ளாக் காட்சி.
சிறிய நீல மீன்கொத்தி
இந்தியா முழுவதும் பரவலாகத் தென்படும் இந்த சிறிய நீல மீன்கொத்தி (Common Kingfisher Alcedo atthis). பரத்பூர் பறவைகள் காப்பிடத்தில் பார்த்துப் படமெடுத்தது. என்னதான் பல இடங்களுக்குச் சென்று பல வித பறவைகளைக் கண்டுகளித்தாலும், நம் ஊரில் தினமும் பார்க்கும் பறவைகள் நம் மனதில் எப்பொழுதுமே குடிகொண்டிருக்கும். சின்ன மீன்கொத்தியும் அதில் அடக்கம்.
உணவூட்டும் தந்தை
சிட்டுக்குருவிகள் (House Sparrow Passer domesticus) அழிந்து வருகின்றன என எப்படியே, யாரோ ஒரு தவறான தகவலைப் பரப்பிவிட்டு விட்டனர். நாம் பார்க்கவில்லை என்பதற்காக அவை முற்றிலும் அழிந்து விட்டது என அர்த்தமில்லை. சிட்டுக்குருவிகள் எண்ணிக்கையில் குறையாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம் தான். எனினும், அழியும் விளிம்பில் இருக்கும் இன்னும் பல வகையான பறவைகளை பாதுகாப்பதும், அதற்காகப் பாடுபடுவதுமே முதன்மையாக இருக்க வேண்டும். நாம் அடிக்கடி பார்த்து ரசிக்கும் சிட்டுக்குருவி போன்ற பொதுப்பறவைகள் (Common birds) நமக்கு எல்லாப் பறவைகளின் மேலும் நாட்டமும், கரிசனமும் ஏற்படக் காரணமாக இருக்கும். திருச்சியில் வீட்டின் முன்னே ஆண் சிட்டுக்குருவி ஒன்று அதன் குஞ்சுக்கு உணவூட்டிக் கொண்டிருந்தது. பார்க்கவே மிக அழகாக இருந்தது.
உணவிடலாமா?
நம்மில் பலர் பல காட்டுயிரினங்களுக்கு உணவிடுவதைப் பார்த்திருக்கலாம். அது சரியான செயலா? இதற்கு நேரிடையாக பதிலலிப்பது கடினம். நாம் கொடுக்கும் உணவினால், எந்த ஒரு உயிரினத்திற்கும் அவற்றின் உடல்நலத்திற்கு கேடும், இயல்பான குணத்தித்தில் மாற்றமும் ஏற்படக் கூடாது. பலர் குரங்குகளுக்கு உணவிடுவார்கள். அது பல வேளைகளில் நமக்கே பாதகமாக முடியும். சில தனிப்பட்ட குரங்குகள் கொஞ்சம் மூர்க்கத்தனமாக மாறி நம்மிடமிருந்தே உணவினை பரித்துச் செல்ல ஆரம்பித்துவிடும். எனினும் பொதுவாக பறவைகளுக்கு உணவிடுவதனால் நமக்கு அப்படி ஒன்றும் பெரிதாக பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆயினும், இதனால் அவை எந்த வகையில் பாதிப்படையும் என்கிற புரிதலும் நம்மிடையே அவ்வளவாக இல்லை. ஆகவே, எதையும் அளவோடு செய்வதே நல்லது. ராஜஸ்தானில் பயணித்துக் கொண்டிருந்தபோது சாம்பல் மைனாக்களுக்கு (Bank Myna Acridotheres ginginianus) ஒருவர் மிக்சரை அள்ளி வீசுவதைக் கண்டேன். அவை பறந்து பறந்து உணவினைப் பிடித்தது பார்க்க வேடிக்கையாக இருந்தது.
பொங்கல் பறவைகள்
சக்கரைப் பொங்கல் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் என் அம்மா செய்யும் சக்கரைப் பொங்கலென்றால் கேட்கவே வேண்டாம். பச்சை அரிசியும், வெல்லமும், பாசிப்பயறும், முந்திரிப்பருப்பும், காய்ந்த திராட்சையும், ஏலக்காயும் சேர்த்து பொங்கல் செய்து, அதில் நெய்யை ஊற்றி கம கமவென மணக்கும் அந்த சக்கரைப் பொங்கலை கையில் எடுத்து, வாயில் வைக்கும் முன்பே நாக்கில் எச்சில் ஊறும். நெய் மணக்கும் அந்த சக்கரைப் பொங்கலை விழுங்கும் போது, நாக்கில் தங்கும் அதன் அளவான இனிப்பும், இளஞ்சூட்டில் தொண்டையில் இறங்கும் போது உள்ள இதமான அந்த உணர்வும் மனதில் என்றென்றும் தங்கியிருக்கும். அம்மா அவளது அன்பைக் கலந்து செய்ததாயிற்றே!
பல ஆண்டுகளாக வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதனால் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகளுக்கு போவது முடியாத காரியம். அப்போதெல்லாம் அம்மா குறைபட்டுக் கொள்வாள். “நீ வராம இந்த வருசம் பொங்கலே நல்லா இல்லாடா, சக்கரை பொங்கல் செஞ்சி உன்னை நெனச்சிகிட்டே சாப்பிட்டேண்டா” என்பாள். வாய்ப்பு கிடைக்கும் வேளையில் வீட்டுக்குப் போகும் போதெல்லாம் தவறாமல் சக்கரைப் பொங்கல் செய்து தருவாள்.
ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை எங்கள் வீட்டில் சிறப்பாக நடந்தது. பல ஆண்டுகள் கழித்து பொங்கலுக்கு வீட்டிற்குச் சென்றிருந்தேன். அதில் பெற்றோருக்கும் மகிழ்ச்சி. எனக்கும் மகிழ்ச்சி. ஆனால் எனது மகிழ்ச்சிக்கு காரணம் சக்கரப் பொங்கல் மட்டுமல்ல. எனது அப்பாவுடன் சேர்ந்து பறவைகளைப் பார்க்கச் சென்றதனாலும் தான்.
ஆம், இந்த ஆண்டு (2015) பொங்கல் தின பறவைகள் கணக்கெடுப்பு (Pongal Bird Count) முதன் முதலாக தொடங்கப்பட்டது. சென்ற நவம்பர் மாதம், தமிழக பறவை ஆர்வலர்கள் குழுவினர் சந்திப்பு, திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அதில் பொங்கல் தின பறவைகள் கணக்கெடுப்பு நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. மேலும் விவரங்களுக்கு இந்த வலைப்பதிவைக் காணவும்.
தஞ்சை, கரந்தையிலிருந்து வயல் வெளிகள் சூழ்ந்த சுற்றுச்சாலை வழியாக மாரியம்மன் கோயிலுக்கு அருகில் இருக்கும் சமுத்திரம் ஏரிக்குச் சென்றோம். அப்பா பைக் ஓட்ட நான் பின்னே அமர்ந்து வேண்டிய இடங்களிலெல்லாம் நிறுத்தச் சொல்லி பறவைகளைப் பார்த்து வந்தேன். சமுத்திரம் ஏரி மிகப் பழமையானது. அதைப் பற்றிய சுவாரசியமான செவிவழிக் கதையை அப்பா சொன்னார். மராத்திய காலத்தில் ஏற்படுத்தப்பட்டது இந்த ஏரி. அப்போதிருந்த அரசி சமுத்திரத்தையே பார்த்தது கிடையாதாம். ஆகவே அரண்மனையில் கிழக்கு நோக்கி இருக்கும் ஷார்ஜா மாடி அல்லது தொள்ளக்காது மண்டபத்தின் மேலேறிப் பார்த்தால் தெரியும் படி இந்தப் பரந்த ஏரியை வெட்டினார்களாம். சமுத்திரம் இது போலத்தான் இருக்கும் என அரசிக்கு காண்பிப்பதற்காக வெட்டப்பட்ட ஏரியாம் இது. ஆனால் இப்பொது இந்த பழைய மாளிகைகளின் மேலே ஏற முடியுமா எனத் தெரியவில்லை. அப்படியே ஏறிப் பார்த்தாலும், காங்கிரீட் கட்டிடங்களின் வழியாக சமுத்திரம் ஏரி தெரியுமா என்பதும் சந்தேகமே.
சமுத்திரம் ஏரியில் ஆகாயத்தாமரைகள் அடர்ந்திருந்தது. ஆகவே பறவைகள் மிக அதிகமாக இல்லை, எனினும் சுமார் 20 வகைப் பறவைகளைப் பார்த்து பட்டியலிட்டோம் (பட்டியலை இங்கே காணலாம்). மோகன் மாமாவும் பறவை பார்ப்பதில் எங்களுடன் சேர்ந்து கொண்டார். வெயில் ஏற ஆரம்பித்ததும் வீடு திரும்பி சக்கரைப் பொங்கலைச் சுவைத்தேன். வீட்டில் பெற்றோர்களுடன் இருந்தது, பறவைகளைப் பார்த்தது, பொங்கல் தின பறவைகள் கணக்கெடுப்பிற்கு பங்களித்தது என இனிமையாகக் கழிந்தது பொங்கல்.
பண்டிகை நாட்களில் பறவைகள் பார்ப்பது இந்தியாவில் இப்போது பெருகி வருகிறது. மேலை நாடுகளில் கிருஸ்துமஸ் தினத்தன்று பொதுமக்கள் தங்களது வீட்டினருகிலோ, வீட்டினை அடுத்த சுற்றுப்புறங்களிலோ அங்கு தென்படும் பறவைகளைப் பார்த்து பட்டியல் தயார் செய்து eBird எனும் இணையத்தில் உள்ளிடுவார்கள். Christmas Bird Count எனும் இக்கணக்கெடுப்பு பல்லாண்டு காலமாக தொடர்ந்து நடந்து வரும் செயல்பாடு. இதன் மூலம் பல பொதுப்பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளையும், பரவலையும் அறிந்து கொள்ள முடியும். இது போலவே கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு (GBBC – Great Backyard Bird Count) நடைபெற்று வருகிறது. அண்மையில் கேரளாவில் ஓணம் பண்டிகையின் போது பறவைகள் கணக்கெடுப்பு (Onam Bird Count) நடத்தப்பட்டது.
பறவைகள் சூழியல் சுட்டிக்காட்டிகள் (Ecological Indicators). நாம் வசிக்கும் பகுதியில், அல்லது ஓர் இயற்கையான வாழிடத்தில் இருக்கும் பறவைகளின் வகைகள், அவற்றின் எண்ணிக்கை முதலியவற்றை, தொடர்ந்து நெடுங்காலத்திற்கு கண்காணித்து வருவதன் மூலம், அந்த இடத்தின் தன்மை எவ்வாறு மாறுபடுகிறது என்பதை அறியலாம். அதாவது, அங்கு வாழும் உயிரினங்களுக்கு (ஊர்ப்புறமாகவோ, நகரமாகவோ இருப்பின் அங்கு வசிக்கும் மனிதர்களாகிய நம்மையும் சேர்த்து) அந்த இடம் வாழத் தகுந்ததாக இருக்கிறதா? அல்லது சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருகிறதா? என்பதை பறவைகளின் எண்ணிக்கையையும், வகையையும் வைத்து அறிவியலாளார்கள் கணக்கிடுவார்கள். அது போலவே வலசை வரும் பறவைகளின் நாளையும், நேரத்தையும் தொடர்ந்து பல ஆண்டுகள் பதிவு செய்து வருவதன் மூலம் புறச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை (Climate Change) கணிக்க முடியும்.
ஆகவே, பறவைகளின், அவற்றின் வாழிடங்களின் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்கும், ஆதரவும் மிகவும் அவசியம். பறவைகளின் பால், புறவுலகின் பால் நாட்டமேற்பட, அவற்றின் மேல் கரிசனம் கொள்ள பொது மக்களிடையேயும், இளைய தலைமுறையினரிடையேயும் பறவைகள் அவதானித்தல் (Birdwatching) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் அவசியம். இதை ஒரு நல்ல பொழுது போக்காக அனைவரும் பழக வேண்டும். பறவைகள் பற்றிய விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் ஏற்படுத்த இது போன்ற பொங்கல் தின பறவைகள் மற்றும் ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு முதலியவற்றை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பறவைகளைக் கணக்கெடுப்பதும், அவற்றை குறித்துக் கொள்வதும், பின்பு eBirdல் உள்ளிடுவதும் முக்கியம் தான் என்றாலும், முதலில் பறவைகளைப் பார்த்து ரசிக்கும் எண்ணத்தை அனைவரிடமும் வளர்க்க வேண்டும். இது போன்ற நற்செயல்கள் தான், நமக்கு புறவுலகின் பால் நாட்டத்தை ஏற்படுத்தவும், இயற்கையை ரசிக்கவும், நாம் வாழும் சூழலைப் போற்றிப் பாதுகக்க வேண்டும் என்கிற அக்கறையை ஏற்படுத்தும்.
நம் பெற்றோர்கள் நம்மிடம் வைத்திருக்கும் பாசத்தையும், கரிசனத்தையும் போல், நாம் நம் குழந்தைகளிடம் காட்டும் அன்பைப் போல், நமது சுற்றுப்புறச்சூழலின் மேலும், அதில் வாழும் உயிரினங்களின் மேலும் நாம் அன்பு காட்ட வேண்டும்.
என் அம்மா எனக்கு சக்கரைப் பொங்கலைப் பாசத்துடன் தருவது போல் இந்த பூமித்தாய் எனக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் பறவைகளையும் இன்னும் எண்ணிலடங்கா உயிரினங்களையும் கொடுத்திருக்கிறாள். எனக்கு சக்கரைப் பொங்கல் எவ்வளவு பிடிக்குமோ அந்த அளவு இல்லையில்லை அதையும் விட அதிகமாகப் பிடித்தது பறவைகள் பார்ப்பது. உங்களுக்கு?
——
வண்ணத் தூதர்களைத் தேடி எனும் தலைப்பில் 14 பிப்ரவரி 2015 அன்று தி ஹிந்து தமிழ் தினசரியின் உயிர்மூச்சு இணைப்பில் வெளியான கட்டுரையின் முழு வடிவம். அக்கட்டுரையின் உரலி இதோ, PDF இதோ.
ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு – 2015 (GBBC-2015)
ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு இந்த ஆண்டு 13-16 பிப்ரவரியில் நடக்கவுள்ளது. அமெரிக்க நாடுகளில் 1998ல் தொடங்கப்பட்ட இந்த ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு (Great Backyard Bird Count – GBBC), இந்தியாவில் முதன் முதலில் 2013ல் நடத்தப்பட்டது. சென்ற ஆண்டு இந்தியா முழுவதிலிருந்தும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவை ஆர்வலர்கள், பொது மக்கள் அனைவரும் சேர்ந்து சுமார் 3000 பறவைப் பட்டியல்களை eBird இணையத்தில் உள்ளிட்டார்கள். சுமார் 800 வகையான பறவைகள் இந்த நான்கு நாட்களில் பதிவு செய்யப்பட்டது. பறவை பட்டியல் உள்ளிட்டதில், உலகிலேயே இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடத்தில் (முதலிடம் கேரளாவிற்கு), 605 பறவைப் பட்டியல்கள் உள்ளிடப்பட்டது, இதில் 348 பறவை வகைகளும் பதிவு செய்யப்பட்டது.

ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு 2013 மற்றும் 2014ல். (விளக்கப்படத்தை பெரிதாகக் காண படத்தின் மேல் சுட்டவும்)
பறவைகள் சூழியல் சுட்டிக்காட்டிகள் (Ecological Indicators). நாம் வசிக்கும் பகுதியில், அல்லது ஓர் இயற்கையான வாழிடத்தில் இருக்கும் பறவைகளின் வகைகள், அவற்றின் எண்ணிக்கை முதலியவற்றை தொடர்ந்து நெடுங்காலத்திற்கு கண்காணித்து வருவதன் மூலம், அந்த இடத்தின் தன்மை எவ்வாறு மாறுபடுகிறது என்பதை அறியலாம். அதாவது, அங்கு வாழும் உயிரினங்களுக்கு (ஊர்ப்புறமாகவோ, நகரமாகவோ இருப்பின் அங்கு வசிக்கும் மனிதர்களாகிய நம்மையும் சேர்த்து) அந்த இடம் வாழத் தகுந்ததாக இருக்கிறதா? அல்லது சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருகிறதா? என்பதை பறவைகளின் எண்ணிக்கையையும், வகையையும் வைத்து அறிவியலாளார்கள் கணக்கிடுவார்கள். அது போலவே வலசை வரும் பறவைகளின் நாளையும், நேரத்தையும் தொடர்ந்து பல ஆண்டுகள் பதிவு செய்து வருவதன் மூலம் புறச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை கணிக்க முடியும்.
இவ்வகையான கணக்கெடுப்பில் ஆர்வமுள்ள, புறவுலகின் மேல் கரிசனம் உள்ள யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம். இது போன்ற மக்கள் அறிவியல் திட்டங்கள் பொதுமக்களுக்கும், மாணவ, மாணவியருக்கும் புறவுலகின் பால் ஆர்வத்தை ஏற்படுத்தும். தங்களைச் சுற்றியுள்ள பறவைகளை பார்த்து மகிழ்வதுடன், அறிவியல் ஆராய்ச்சிக்கும் பங்களிக்கும் வாய்ப்பாக அமையும். இந்தக் கணக்கெடுப்பில் பங்கு கொள்ள ஆர்வமுள்ளவர்கள் எங்கோ வெகு தூரம் சென்று பறவைகளைக் கண்டுகளித்து, கணக்கெடுக்கத் தேவையில்லை. தங்கள் வீடுகளில் இருந்தோ, தங்களது பள்ளி, கல்லூரி வளாகத்திலிருந்தோ, பூங்கா, ஏரி, குளம் போன்ற பொது இடங்களிலிருந்தோ பறவைகளை கவனித்து eBirdல் பட்டியலிடலாம்.
இந்த ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (GBBC) பற்றியும், நாம் பார்த்து கணக்கிட்ட பறவைகளின் வகைகளையும், அவற்றின் எண்ணிக்கையையும் eBirdல் எவ்வாறு உள்ளிட்டு பட்டியல் தயார் செய்வது என்பதையும் விளக்கும் ஓர் அறிமுகக் கையேட்டை (An Introductory Guide to Great Backyard Bird Count – GBBC & eBird) இங்கே (PDF-32MB) தரவிறக்கம் செய்து கொள்ளலாம். (கீழே உள்ள படத்தைச் சுட்டவும் – click the image below to download)
இந்தியாவில் பரவலாகத் தென்படும் சில பொதுப்பறவைகளை அறிந்து கொள்ள/அடையாளம் காண, பறவைகளைப் பற்றிய தமிழ் நூல்களைப் பற்றி அறிந்து கொள்ள, இந்த காட்சியளிப்பைதரவிறக்கம் (PDF)செய்து கொள்ளவும். இதே காட்சியளிப்பை படமாக (Image) தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
மேலும் விவரங்களுக்கு காண்க: www.birdcount.in
தொடர்புக்கு: மின்னஞ்சல் – birdcountindia@gmail.com
நீங்களும் விஞ்ஞானிதான்!
தியாகராஜனும், தேவாவும், அப்ரஹாமும் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிக்கு அதிகாலையிலேயே வந்தடைந்து விட்டார்கள். பள்ளிக்கரணையின் வெவ்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்று பறவைகளை பார்த்து கணக்கெடுத்துக் கொண்டிருந்தனர். சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு அவர்களுக்கு பயிற்சியளித்து, இந்த நடவடிக்கைகளை ஒருங்கினைக்கும் திருநாரணனுடன் சேர்ந்து, அவர்கள் அன்று பார்த்த பறவைகளின் பட்டியலை eBird இணையதளத்தில் உள்ளீடு செய்தார்கள். அன்று ஞாயிற்றுக் கிழமை. இது முடித்து மாலை வீடு திரும்பியதும் அவர்களது வீட்டுபாடங்களை எழுதவோ, படிக்கவோ வேண்டும். ஆம் அவர்கள் அனைவரும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிக்கும் மாணவர்கள். அவர்கள் பறவை ஆராய்ச்சியாளர்கள் அல்ல. சென்னையைச் சேர்ந்த இயற்கை அறக்கட்டளை (The Nature Trust) எனும் இயற்கைக் குழுவின் அங்கத்தினர்கள். இவர்கள் இப்படி உருப்படியாக பொழுதைக் கழித்து ஓரிடத்திலிருக்கும் பறவைகளின் வகைகளையும், எண்ணிக்கையையும் பட்டியலிடுவது, பல ஆராய்ச்சியாளர்களும், பறவையியலாளர்களுக்கும் உதவியாக இருக்கிறது. ஏனெனில் ஆராய்ச்சியாளர்கள் எல்லா இடங்களிலும் எல்லா நேரத்திலும் இது போன்ற பணிகளைச் செய்வது இயலாத காரியம். ஆகவே இது போன்ற இயற்கை ஆர்வலர்களின் பங்கு அவர்களுக்கு பேருதவி புரிகிறது.
*****
சில ஆண்டுகளாக சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன, பல இடங்களில் அற்று போய்விட்டன என்றெல்லாம் செய்தி வந்து கொண்டிருந்தது. இது உண்மையா எனக் கண்டறிய நாடு தழுவிய சிட்டுக்குருவிகள் கணக்கெடுப்பு இணையத்தில் 1 April முதல் 15 June 2012 வரை நடத்தப்பட்டது. இதில் சிட்டுக்குருவிகளை அவரவர் வீட்டின் அருகில், ஊரில், பொது இடங்களில் பார்த்த விவரங்கள் கேட்கப்பட்டது.
இந்த துரித, இணைய கணக்கெடுப்பின் மூலம் சிட்டுக்குருவிகள் இந்தியாவின் பல பகுதிகளில் பல பரவியிருப்பதும், பல இடங்களில் குறிப்பாக கிராமப்புறங்களில் ஒரளவு நல்ல எண்ணிக்கையில் இருப்பதையும், மாநகரங்களின் சில பகுதிகளில் அவை குறைந்த எண்ணிக்கையில் இருப்பதையும் அறிய முடிந்தது. நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின்பே அவை சில இடங்களில் ஏன் குறைந்து வருகின்றன என்பதை அறிய முடியும் என்றாலும், இது போன்ற துரித கணக்கெடுப்பின் (Rapid Survey) மூலம் தற்போதைய நிலையை ஓரளவிற்கு மதிப்பிட முடிந்தது. இந்த கணக்கெடுப்பின் முடிவில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையைப் பற்றி 10666 பதிவுகள், 8425 இடங்களிலிருந்து கிடைத்தது. இத்தகவல்களை அளித்தது 5655 பங்களிப்பாளர்கள் (மேலும் விவரங்களுக்கு காண்க www.citizensparrow.in). இவர்கள் யாவரும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களோ அல்லது விஞ்ஞானிகளோ அல்ல. பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களுமே.
*****
காட்டுயிர்களை, இயற்கையான வாழிடங்களை பாதுகாப்பதிலும், இது சம்பந்தமாக நடைபெறும் அறிவியல் ஆராய்ச்சிகளிலும் பொதுமக்கள் பங்களிக்க முடியுமா? என்றால், நிச்சயமாக முடியும். சொல்லப் போனால் பல வித அறிவியல் ஆராய்ச்சிகளிலும், பல்லுயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் இது போன்ற பங்களிப்புகள் மென்மேலும் பெருகிவருகின்றன. பொதுமக்கள் அறிவியல் ஆராய்ச்சிக்கு உதவும் இத்திட்டத்திற்கு மக்கள் அறிவியல் (citizen science) என்று பெயர்.
புறவுலகினைப் போற்றுதல், சுற்றுச்சூழல் மென்மேலும் சீரழியாமல் பாதுகாத்தல், காட்டுயிர்களைப் பேணுதல், வாழிடங்களை மதித்தல், இயற்கையை நேர்மையான பொறுப்பான முறையில் அனுபவித்தல் பற்றிய புரிதல்களை பொதுமக்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் சுற்றுச்சூழல் கல்வி (Environmental Education) அல்லது இயற்கைக் கல்வியின் (Nature Education) மூலம் விளக்க முடியும். எனினும், வகுப்பில் பாடமாக படிப்பதைக் காட்டிலும் தாமாகவே இவற்றிற்கான அவசியத்தை உணர்ந்தால் ஒருவரின் மனதில் இவற்றைப் பற்றிய புரிதல்கள் எளிதில் பதியும். ஒரு முறை இப்படி உணர்ந்தால் இயற்கைப் பாதுகாப்பிலும், சுற்றுச்சூழலை பேணுவதிலும் பற்றுதல் ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும் அதற்கான நற்செயல்களையும், நற்பண்புகளையும் கடைபிடிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
உதாரணமாக சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்காமல் துணிப் பையை எடுத்துச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள நாம் இளைய தலைமுறையினரை பழக்க அவர்களிடம் இதைப் பற்றி எப்போதும் போதிப்பது சில வேளைகளில் அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். அப்படிச் செய்யாமல், பெற்றோர்களே ஒரு முன் உதாரணமாக இருந்து இதைக் கடைபிடித்தால், அவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கும் அசிங்கமான காட்சியைக் கொண்ட படங்களையும், ஒளிப்படங்களையும் காட்டும் போது இது குறித்த புரிதல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அல்லது பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கும் இடங்களுக்கு நேரடியாகக் கூட்டிச் சென்று காண்பித்தால் அக்காட்சி அவர்களின் உணர்வினைத் தூண்டி சுற்றுச்சூழலுக்குப் புறம்பான செயல்களை செய்யாமல் இருக்க வழிகோலும்.
அது போல காட்டுயிர்களையும், அவற்றின் இயற்கையான வாழிடங்களையும் பற்றி பல மணி நேரம் வகுப்பிலோ, கருத்தரங்குகளிலோ சொல்லிக் கொடுப்பதைக் காட்டிலும், அவை வாழும் இடங்களுக்கே ஒருவரை அழைத்துச் சென்று காட்டுவது நல்லது. ஏனெனில், படிப்பதைக் காட்டிலும் நேரடி அனுபவதில் கிடைக்கும் பட்டறிவே சிறந்தது. இதற்காக வெகு தொலைவு பயணம் செய்துதான் காட்டுயிர்களைப் பார்க்கவேண்டும் என்று இல்லை. நம் வீட்டில் இருக்கும், சிலந்தியையும், பல்லியையும், வீட்டைச் சுற்றித் திரியும் பல வகைப் பறவைகளையும், அணிலையும், பல வகையான அழகிய தாவரங்களையும், மரங்களையும் பார்த்து ரசிக்கலாம். நகரத்தில் வசித்தாலும் அங்கும் பல (வளர்ப்பு உயிரிகள் அல்லாத) இயற்கையாக சுற்றித்திரியும் பல உயிரினங்களும், பல வகை மரங்களும், செடி கொடிகளும், இருக்கவே செய்கின்றன.
இப்படி புறவுலகின் மேல் ஆர்வத்தைத் தூண்ட, கரிசனம் காட்ட மற்றொரு வழி பொது மக்களையும், மாணவர்களையும், இயற்கை ஆர்வலர்களையும் அறிவியல் ஆராய்ச்சியில் மக்கள் அறிவியல் திட்டங்களில் பங்கு பெற வைத்தல். இதனால் புறவுலகினைப் பற்றிய புரிதலும், இயற்கையின் விந்தைகளை நேரிடையாக பார்த்து அனுபவிக்கும் வாய்ப்பும், அதே வேளையில் இது சம்பந்தமாக நடக்கும் ஆராய்ச்சிகளுக்கு நேரிடையாக பங்களிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
மக்கள் அறிவியல் திட்டங்களின் தலையாய நோக்கங்களில் ஒன்று, இத்திட்டங்களில் பங்கு பெறுவோர் வெறும் தகவல் சேகரிக்கும் வேலையை செய்பவர்களாக மட்டும் இல்லாமல் அதை ஏன் செய்கிறார்கள் எனும் அறிவியல் பின்னனியை தெரிந்து கொள்ளவும், அதைப் பற்றிய அறிவை மென்மேலும் பெருக்கிக் கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டுவதும், ஒரு பொறுப்பான இயற்கைவாதிக்கான பண்பை வளர்ப்பதற்காகவும் தான்.
வளர்ந்த நாடுகளில் பல மக்கள் அறிவியல் திட்டங்களும், அதற்கு பொதுமக்கள் பலரும் பங்களிப்பதும் அதிகம். ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இவை இப்போதுதான் தொடங்கப்பட்டு வருகின்றன. இது போன்ற திட்டங்கள் குறிப்பாக அதிக மக்கள் தொகையுள்ள நாடுகளில் அறியப்படாத அறிவியல் தகவல்கள் பலவற்றை பலரது ஒத்துழைப்புடன் சேகரிக்க உதவும். அது மட்டுமல்லாமல், இத்திட்டங்களின் மூலம் அனைவருக்கும் சுற்றுச்சூழல் பேணல், இயற்கை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வையும் ஊட்ட முடியும்.
இதுபோன்ற மக்கள் அறிவியல் திட்டங்கள் செயல்படுவது மக்களின் உதவியுடன், நாம் அனைவரும் வாழும் இப்பூமியின் நலனுக்காக. ஆகவே இதற்குப் பங்களிக்கும் மக்கள் நேர்மையாக இருந்து உண்மையான தகவலையே அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் இத்திட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆகவே இது போன்ற திட்டங்களுக்கு பங்களிப்பவர்கள் பொருப்புடன் செயல்படுதல் அவசியம்.
பல்லுயிர்ப் பாதுகாப்பிற்கும், சுற்றுச்சூழல் பேணலுக்கும் சூழியல்வாதிகளும், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களும், சுற்றுச்சூழல்வாதிகளும் மட்டுமே பங்களிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கைப் பாதுகாப்பு, புறவுலகின் பால் கரிசனம் முதலியவை இந்த பூமியில் வாழும் ஓவ்வொருவருக்கும் அவசியம் இருக்க வேண்டிய பண்புகளில் ஒன்று. மக்கள் அறிவியல் திட்டங்கள் அதற்கான வாய்ப்பை அனைவருக்கும் அளிக்கின்றன.
இந்தியாவில் செயல்பட்டு வரும் சில மக்கள் அறிவியல் திட்டங்கள்:
காலநிலை மாற்றத்தை (Climate change) தாவரங்களின் வாழ்வியலை ஆவணப்படுத்துவதன் மூலம் அறியும் திட்டம். அதாவது இத்திட்டத்தில் ஒரு மரம் இளந்தளிர்களை, பூக்களை, காய்களை, கணிகளை எந்த வாரத்தில், மாதத்தில் தோற்றுவிக்கின்றன என்பதை அவதானித்து இணையத்தில் ஆவணப்படுத்துதல் வேண்டும். உதாரணமாக வேப்பம்பூ சித்திரையில் பூக்கும் என்பதை அறிவோம். ஆனால் ஒவ்வோர் ஆண்டும் வேப்பமரம் சரியாக சித்திரையில் தான் பூக்கிறதா, அல்லது சற்று முன்போ அல்லது தாமதமாகவோ பூக்கிறதா என்பதை அறிய, அது பூக்கும் நாளை/வாரத்தை தொடர்ந்து பல ஆண்டுகள் ஆவணப்படுத்தப்படவேண்டும். ஒரு வேளை தாமதமாகப் பூத்தால் தட்ப வெப்ப நிலை, மழையளவு போன்ற காரணிகளுக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என ஆராய்ந்து அறிய முடியும். மாத்ருபூமி மலையாள தினசரியின் SEED திட்டதின் கீழ் தற்போது கேரளாவிலிருந்து பல பள்ளி மாணவர்கள் இத்திட்டத்திற்கு பங்களித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு காண்க www.seasonwatch.in
*******
வலசை வந்து போகும் விருந்தாளிப் பறவைகள் ஓரிடத்திற்கு வருவது எப்போது, அங்கிருந்து அவை மீண்டும் திரும்பிப் போவதெப்போது? இதை அறியும் முயற்சியிலேயே சுமார் பத்தாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மக்கள் அறிவியல் திட்டம். இதைத் தெரிந்து கொள்வதால் லாபம் என்ன? வலசை வரும் பறவைகளை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேரும் நாட்களை ஆண்டாண்டு காலமாக கண்காணித்து வருவதன் மூலம் புறச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை கணிக்க முடியும். காலநிலை மாற்றத்தினால் வலசை பறவைகளின் வலசைப் பயணமும் பாதிப்படையும். எனினும் இந்திய துணைக்கண்டத்தில் இது பற்றிய புரிதல்கள் இன்னும் தெளிவாக இல்லை. இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவே இத்திட்டம் தொடங்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு காண்க www.migrantwatch.in
*******
ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (Great Backyard Bird Count – GBBC)
இந்நிகழ்ச்சி உலகம் முழுவதும் (இந்தியாவில் இது கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது) பிப்ரவரி மாதம் 13 முதல் 16ம் தேதி வரை நடைபெறும்.
உலகம் முழுவதும் உள்ள பறவைகளை ஒரே நேரத்தில் ஒவ்வோர் ஆண்டும் கணக்கிடுவதால், பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களை ஆண்டு தோறும் கண்காணிக்க முடியும். ஓரிடத்தில் அவற்றின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை வைத்து அதற்கான காரணங்களைக் கண்டறியவும் முடியும். வரும் ஆண்டு தமிழகத்தில் பொங்கல் தின பறவைகள் கணக்கெடுப்பு (Pongal Bird Count) நடத்தப்பட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு காண்க GBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது? ஏன்? எப்படி?
மற்றும் www.birdcount.in
*******
நாம் ஓரிடத்தில் பார்க்கும் பறவைகளின் பட்டியலை இந்த இணையதளத்தில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். பலர் இவ்வறு தங்களது அவதானிப்புகளை சமர்ப்பித்தால், பறவைகளின் பரவலையும், எண்ணிக்கையையும் இந்த இணையதளத்தின் மூலம் அறிய முடியும். இதன் மூலம் பறவை பார்ப்போரும், பறவை ஆராய்ச்சியாளர்களும், பொதுமக்களும் பயனடைவார்கள். Migrantwatch, GBBC முதலிய திட்டங்களுக்காக eBird இணையதளம் மூலமாகவே பறவைப் பட்டியலை, அவதானிப்பை உள்ளீடு செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு காண்க http://www.ebird.org மற்றும்
*******
India Biodiversity Portal (இந்தியப் பல்லுயிரிய வலைவாசல்)
இந்தியாவில் உள்ள அனைத்து உயிரினங்களைப் பற்றிய தகவல்களை ஓரே இடத்தில் சேகரிக்கும் திட்டம். உதாரணமாக ஒரு வண்ணத்துப்பூச்சி அல்லது ஒரு தாவரத்தினைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் ஒரே பக்கத்தில் சேகரித்து வைக்கப்பட்டு அனைவரும் இத்தகவல்களை பார்த்தறிந்து பயன்பெறலாம். இந்த வலைவாசலில் அங்கத்தினராக இருக்கும் பல அறிஞர்களிடமும் உயிரினங்களைப் பற்றிய சந்தேகங்களை கேட்டறிந்து கொள்ளலாம். உதாரணமாக நாம் காணும் ஏதோ ஒரு தாவரத்தின் பெயரோ, தகவலோ தெரியவில்லை எனில், அத்தாவரத்தின் படத்தை இந்த வலைவாசலில் உள்ளீடு செய்தால் அங்குள்ள தாவரவியலாளார்கள் அத்தாவரத்தை அடையாளம் காண உதவுவார்கள்.
அண்மையில் இந்த வலைவாசலின் ஒரு அங்கமான TreesIndia நடத்திய Neighbourhood Tree Campaign (மரம் பார்ப்போம் மரம் காப்போம்) எனும் மரங்கள் கணக்கெடுப்பில் பலர் கலந்துகொண்டு அவரவர் வீடுகளில், தெருக்களில் உள்ள மரங்களின் வகையை, எண்ணிக்கையை, இருப்பிடத்தை பட்டியலிட்டு இந்த வலைவாசலில் உள்ளீடு செய்தார்கள்.
மேலும் விவரங்களுக்கு www.indiabiodiversity.org மற்றும் மரம் பார்ப்போம் மரம் காப்போம்
*******
Hornbill Watch – இந்திய இருவாசிகளுக்கான இணையதளம்
இருவாசி ஒரு அழகான பறவையினம். இவை அத்திப் பழங்களையே பெரும்பாலும் உண்டு வாழும். மிகப்பெரிய மரங்களில் கூடு கட்டும். இந்தியாவில் 9 வகையான இருவாசிப் பறவைகள் உள்ளன. இவற்றின் இறக்கைகளுக்காகவும், மண்டையோட்டிற்காகவும் இவை கள்ள வேட்டையாடப்படுவதாலும், வாழிட அழிப்பினாலும், மிகப்பெரிய மரங்களை வெட்டிச் சாய்ப்பதாலும், இவை அபாயத்திற்குள்ளாகியுள்ளன. இவற்றின் பாதுகாப்பு அவசியத்தை விளக்கவும், இவற்றின் பரவலை ஆவணப்படுத்தவும் இந்த இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நம்மிடம் இருக்கும் இந்திய இருவாசிகளின் படத்தை இந்த இணையத்தில் உள்ளீடு செய்யலாம். படம் எடுக்கப்பட்ட தேதி, நேரம், இடம் முதலிய தகவல்களையும் அளிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு காண்க http://www.hornbills.in/
*******
Conservation India (CI)
அழகிய நிலவமைப்புகளையும், காட்டுயிர்களையும் மட்டுமே பலவித கோணங்களில் படம்பிடித்துக் கொண்டிருக்காமல், இயற்கையான வாழிடங்களையும், சுற்றுச்சூழலையும் சீரழிக்கும் காட்சிகளையும் ஆவணப்படுத்தி அதை அந்த வாழிடத்திற்கும், அங்குவாழும் உயிரினங்களும் நன்மை புரியும் வகையில் இயற்கை பாதுகாப்பு ஒளிப்படங்களை எடுத்து இந்த இணைய தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். உதாரணமாக நாம் ஏதேனும் வனப்பகுதிக்குச் செல்லும் போது அங்கு கள்ள வேட்டையில் ஈடுபட்டிருப்பவர்களின் படத்தையோ, மரவெட்டிகளின் படத்தையோ எடுத்து இது பற்றி விளக்கங்களை அளித்து இந்த இணையத்தில் பதிப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு காண்க www.conservationindia.org
********
தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 18th & 25th November 2014 தினங்களில் வெளியான கட்டுரைகளின் முழுப் பதிப்பு. அக்கட்டுரைகளை 18th Nov இங்கும் (PDF) & 25th Nov இங்கும் (PDF) காணலாம்.