Posts Tagged ‘GBBC’
தமிழ்நாட்டில் eBirdல் பறவைத் தகவல்கள் இல்லாத இடங்கள்
பறவைகளின் எங்கெங்கெல்லாம் பரவியியுள்ளன என்பது பற்றிய தகவல் அவற்றின் பாதுகாப்பிற்கும், அவற்றின் வாழிடங்களின் பாதுகாப்பிற்கும் உதவும். அண்மைக் காலங்களில் eBird மூலம் நம்மைச்சுற்றியுள்ள பறவைகளை பதிவு செய்து தகவல்களை சமர்ப்பிப்பதால் பறவைகள் குறித்த புரிதல் ஓரளவிற்கு தெரிந்துள்ளது. பறவை ஆர்வலர்கள் பெரும்பாலும் எங்கே பறவை வகைகள் அதிகமாகத் தென்படுகிறதோ அங்கேயே செல்வார்கள். இதனால் ஒரு சில பகுதிகளில் (உதாரணமாக கோடியக்கரை, முதுமலை சரணாலம்) உள்ள பறவைகளின் பரவல், எண்ணிக்கை போன்ற தகவல்கள் ஒப்பீட்டளவில் அதிகமாகவும், ஏனைய தமிழகப் பகுதிகளில் குறைந்த அல்லது முற்றிலும் தகவல்களே இல்லாத நிலையும் ஏற்படுகிறது.
இதை அறிந்து கொள்ள ஆராய்ச்சியாளரும், பறவை ஆர்வலருமான அஸ்வின் விஸ்வநாதன் ஒரு விரிவான, எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நிலப்படத்தை தயாரித்திருக்கிறார். அதைப் பெற இங்கே சொடுக்கவும். (இதை தரவிறக்கம் செய்து, கைபேசியை விட கணினியில் பார்ப்பது நல்லது)
இதற்காக அவர் தமிழ்நாட்டின் மேல் 1௦ X 1௦ கி.மீ கட்டங்களை இட்டு அதற்குள் எத்தனை வகையான பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, எத்தனை பறவை பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன, எத்தனை பறவை ஆர்வலர்கள் இதைச் செய்துள்ளனர் என்கிற தரவுகளை பொதித்து வைத்துள்ளார்.
வெளிர் நிறக் கட்டங்கள், தகவல்கள் முற்றிலும் இல்லை என்பதைக் குறிக்கும். திராட்சை நிறக் கட்டங்கள், மிகக் குறைந்த அல்லது முழுமையான பட்டியல்கள் (Complete Checklist) இல்லாத இடங்களைக் குறிக்கும். பச்சை, மஞ்சள் ஒப்பீட்டளவில் அதிகமான தரவுகளைக் கொண்ட இடங்கள்.
இதிலிருந்து முற்றிலும் அல்லது மிகக் குறைந்த தகவல்கள் இல்லாத இடங்களை மட்டும் எடுத்து அதை ஒரு கூகுள் நிலப்படத்தின் மேல் (சிவப்புச் சதுரங்கள்) வைக்கப்பட்டுள்ளது.
அதிகமான காலி இடங்கள் இருப்பது கரூர் மாவட்டம். அதனைத் தொடர்ந்து சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் முதலிய மாவட்டங்கள். வட தமிழகத்திலும் பல இடங்கள் ஆங்காங்கே உள்ளன.
இப்போது பறவை ஆர்வலர்களான நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த சிவப்பு சதுரத்திற்குள் சென்று பறவைகளைப் பார்த்து, கணக்கிட்டு அந்த பட்டியலை eBirdல் சமர்ப்பிக்க வேண்டியதுதான். உங்கள் ஊருக்குப் பக்கத்தில் இந்த கட்டங்கள் இருந்தால் அவசியம் அங்கு சென்று பறவைகளை பட்டியலிடுங்கள்.
இந்த நிலப்படத்தை பெற இங்கே சொடுக்கவும். ஒரு வேளை இது உங்களது கைபேசியில் திறக்கவில்லையெனில் கணினியில் முயற்சிக்கவும்.
பறவை நோக்குதல் ஒரு உருப்படியான பொழுதுபோக்கு என்றாலும், அதைச் செய்யும் போது நம்மை மகிழ வைக்கும் பறவைகளுக்காகவும் நம்மாலனதைச் செய்வது நல்லது.
ஒரு வேடிக்கையான விளையாட்டைத் தொடங்கலாம். இந்த ஆண்டின் இறுதியில் எத்தனை கட்டங்களில் தகவல்கள் நிரம்புகின்றன என்றும், காலியிடங்களை நிரப்பும் பணியை யார் அதிகம் செய்கிறார்கள் என்றும் பார்க்கலாம்.
பொங்கல் பறவைகள்
சக்கரைப் பொங்கல் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் என் அம்மா செய்யும் சக்கரைப் பொங்கலென்றால் கேட்கவே வேண்டாம். பச்சை அரிசியும், வெல்லமும், பாசிப்பயறும், முந்திரிப்பருப்பும், காய்ந்த திராட்சையும், ஏலக்காயும் சேர்த்து பொங்கல் செய்து, அதில் நெய்யை ஊற்றி கம கமவென மணக்கும் அந்த சக்கரைப் பொங்கலை கையில் எடுத்து, வாயில் வைக்கும் முன்பே நாக்கில் எச்சில் ஊறும். நெய் மணக்கும் அந்த சக்கரைப் பொங்கலை விழுங்கும் போது, நாக்கில் தங்கும் அதன் அளவான இனிப்பும், இளஞ்சூட்டில் தொண்டையில் இறங்கும் போது உள்ள இதமான அந்த உணர்வும் மனதில் என்றென்றும் தங்கியிருக்கும். அம்மா அவளது அன்பைக் கலந்து செய்ததாயிற்றே!
பல ஆண்டுகளாக வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதனால் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகளுக்கு போவது முடியாத காரியம். அப்போதெல்லாம் அம்மா குறைபட்டுக் கொள்வாள். “நீ வராம இந்த வருசம் பொங்கலே நல்லா இல்லாடா, சக்கரை பொங்கல் செஞ்சி உன்னை நெனச்சிகிட்டே சாப்பிட்டேண்டா” என்பாள். வாய்ப்பு கிடைக்கும் வேளையில் வீட்டுக்குப் போகும் போதெல்லாம் தவறாமல் சக்கரைப் பொங்கல் செய்து தருவாள்.
ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை எங்கள் வீட்டில் சிறப்பாக நடந்தது. பல ஆண்டுகள் கழித்து பொங்கலுக்கு வீட்டிற்குச் சென்றிருந்தேன். அதில் பெற்றோருக்கும் மகிழ்ச்சி. எனக்கும் மகிழ்ச்சி. ஆனால் எனது மகிழ்ச்சிக்கு காரணம் சக்கரப் பொங்கல் மட்டுமல்ல. எனது அப்பாவுடன் சேர்ந்து பறவைகளைப் பார்க்கச் சென்றதனாலும் தான்.
ஆம், இந்த ஆண்டு (2015) பொங்கல் தின பறவைகள் கணக்கெடுப்பு (Pongal Bird Count) முதன் முதலாக தொடங்கப்பட்டது. சென்ற நவம்பர் மாதம், தமிழக பறவை ஆர்வலர்கள் குழுவினர் சந்திப்பு, திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அதில் பொங்கல் தின பறவைகள் கணக்கெடுப்பு நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. மேலும் விவரங்களுக்கு இந்த வலைப்பதிவைக் காணவும்.
தஞ்சை, கரந்தையிலிருந்து வயல் வெளிகள் சூழ்ந்த சுற்றுச்சாலை வழியாக மாரியம்மன் கோயிலுக்கு அருகில் இருக்கும் சமுத்திரம் ஏரிக்குச் சென்றோம். அப்பா பைக் ஓட்ட நான் பின்னே அமர்ந்து வேண்டிய இடங்களிலெல்லாம் நிறுத்தச் சொல்லி பறவைகளைப் பார்த்து வந்தேன். சமுத்திரம் ஏரி மிகப் பழமையானது. அதைப் பற்றிய சுவாரசியமான செவிவழிக் கதையை அப்பா சொன்னார். மராத்திய காலத்தில் ஏற்படுத்தப்பட்டது இந்த ஏரி. அப்போதிருந்த அரசி சமுத்திரத்தையே பார்த்தது கிடையாதாம். ஆகவே அரண்மனையில் கிழக்கு நோக்கி இருக்கும் ஷார்ஜா மாடி அல்லது தொள்ளக்காது மண்டபத்தின் மேலேறிப் பார்த்தால் தெரியும் படி இந்தப் பரந்த ஏரியை வெட்டினார்களாம். சமுத்திரம் இது போலத்தான் இருக்கும் என அரசிக்கு காண்பிப்பதற்காக வெட்டப்பட்ட ஏரியாம் இது. ஆனால் இப்பொது இந்த பழைய மாளிகைகளின் மேலே ஏற முடியுமா எனத் தெரியவில்லை. அப்படியே ஏறிப் பார்த்தாலும், காங்கிரீட் கட்டிடங்களின் வழியாக சமுத்திரம் ஏரி தெரியுமா என்பதும் சந்தேகமே.
சமுத்திரம் ஏரியில் ஆகாயத்தாமரைகள் அடர்ந்திருந்தது. ஆகவே பறவைகள் மிக அதிகமாக இல்லை, எனினும் சுமார் 20 வகைப் பறவைகளைப் பார்த்து பட்டியலிட்டோம் (பட்டியலை இங்கே காணலாம்). மோகன் மாமாவும் பறவை பார்ப்பதில் எங்களுடன் சேர்ந்து கொண்டார். வெயில் ஏற ஆரம்பித்ததும் வீடு திரும்பி சக்கரைப் பொங்கலைச் சுவைத்தேன். வீட்டில் பெற்றோர்களுடன் இருந்தது, பறவைகளைப் பார்த்தது, பொங்கல் தின பறவைகள் கணக்கெடுப்பிற்கு பங்களித்தது என இனிமையாகக் கழிந்தது பொங்கல்.
பண்டிகை நாட்களில் பறவைகள் பார்ப்பது இந்தியாவில் இப்போது பெருகி வருகிறது. மேலை நாடுகளில் கிருஸ்துமஸ் தினத்தன்று பொதுமக்கள் தங்களது வீட்டினருகிலோ, வீட்டினை அடுத்த சுற்றுப்புறங்களிலோ அங்கு தென்படும் பறவைகளைப் பார்த்து பட்டியல் தயார் செய்து eBird எனும் இணையத்தில் உள்ளிடுவார்கள். Christmas Bird Count எனும் இக்கணக்கெடுப்பு பல்லாண்டு காலமாக தொடர்ந்து நடந்து வரும் செயல்பாடு. இதன் மூலம் பல பொதுப்பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளையும், பரவலையும் அறிந்து கொள்ள முடியும். இது போலவே கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு (GBBC – Great Backyard Bird Count) நடைபெற்று வருகிறது. அண்மையில் கேரளாவில் ஓணம் பண்டிகையின் போது பறவைகள் கணக்கெடுப்பு (Onam Bird Count) நடத்தப்பட்டது.
பறவைகள் சூழியல் சுட்டிக்காட்டிகள் (Ecological Indicators). நாம் வசிக்கும் பகுதியில், அல்லது ஓர் இயற்கையான வாழிடத்தில் இருக்கும் பறவைகளின் வகைகள், அவற்றின் எண்ணிக்கை முதலியவற்றை, தொடர்ந்து நெடுங்காலத்திற்கு கண்காணித்து வருவதன் மூலம், அந்த இடத்தின் தன்மை எவ்வாறு மாறுபடுகிறது என்பதை அறியலாம். அதாவது, அங்கு வாழும் உயிரினங்களுக்கு (ஊர்ப்புறமாகவோ, நகரமாகவோ இருப்பின் அங்கு வசிக்கும் மனிதர்களாகிய நம்மையும் சேர்த்து) அந்த இடம் வாழத் தகுந்ததாக இருக்கிறதா? அல்லது சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருகிறதா? என்பதை பறவைகளின் எண்ணிக்கையையும், வகையையும் வைத்து அறிவியலாளார்கள் கணக்கிடுவார்கள். அது போலவே வலசை வரும் பறவைகளின் நாளையும், நேரத்தையும் தொடர்ந்து பல ஆண்டுகள் பதிவு செய்து வருவதன் மூலம் புறச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை (Climate Change) கணிக்க முடியும்.
ஆகவே, பறவைகளின், அவற்றின் வாழிடங்களின் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்கும், ஆதரவும் மிகவும் அவசியம். பறவைகளின் பால், புறவுலகின் பால் நாட்டமேற்பட, அவற்றின் மேல் கரிசனம் கொள்ள பொது மக்களிடையேயும், இளைய தலைமுறையினரிடையேயும் பறவைகள் அவதானித்தல் (Birdwatching) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் அவசியம். இதை ஒரு நல்ல பொழுது போக்காக அனைவரும் பழக வேண்டும். பறவைகள் பற்றிய விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் ஏற்படுத்த இது போன்ற பொங்கல் தின பறவைகள் மற்றும் ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு முதலியவற்றை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பறவைகளைக் கணக்கெடுப்பதும், அவற்றை குறித்துக் கொள்வதும், பின்பு eBirdல் உள்ளிடுவதும் முக்கியம் தான் என்றாலும், முதலில் பறவைகளைப் பார்த்து ரசிக்கும் எண்ணத்தை அனைவரிடமும் வளர்க்க வேண்டும். இது போன்ற நற்செயல்கள் தான், நமக்கு புறவுலகின் பால் நாட்டத்தை ஏற்படுத்தவும், இயற்கையை ரசிக்கவும், நாம் வாழும் சூழலைப் போற்றிப் பாதுகக்க வேண்டும் என்கிற அக்கறையை ஏற்படுத்தும்.
நம் பெற்றோர்கள் நம்மிடம் வைத்திருக்கும் பாசத்தையும், கரிசனத்தையும் போல், நாம் நம் குழந்தைகளிடம் காட்டும் அன்பைப் போல், நமது சுற்றுப்புறச்சூழலின் மேலும், அதில் வாழும் உயிரினங்களின் மேலும் நாம் அன்பு காட்ட வேண்டும்.
என் அம்மா எனக்கு சக்கரைப் பொங்கலைப் பாசத்துடன் தருவது போல் இந்த பூமித்தாய் எனக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் பறவைகளையும் இன்னும் எண்ணிலடங்கா உயிரினங்களையும் கொடுத்திருக்கிறாள். எனக்கு சக்கரைப் பொங்கல் எவ்வளவு பிடிக்குமோ அந்த அளவு இல்லையில்லை அதையும் விட அதிகமாகப் பிடித்தது பறவைகள் பார்ப்பது. உங்களுக்கு?
——
வண்ணத் தூதர்களைத் தேடி எனும் தலைப்பில் 14 பிப்ரவரி 2015 அன்று தி ஹிந்து தமிழ் தினசரியின் உயிர்மூச்சு இணைப்பில் வெளியான கட்டுரையின் முழு வடிவம். அக்கட்டுரையின் உரலி இதோ, PDF இதோ.
ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு – 2015 (GBBC-2015)
ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு இந்த ஆண்டு 13-16 பிப்ரவரியில் நடக்கவுள்ளது. அமெரிக்க நாடுகளில் 1998ல் தொடங்கப்பட்ட இந்த ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு (Great Backyard Bird Count – GBBC), இந்தியாவில் முதன் முதலில் 2013ல் நடத்தப்பட்டது. சென்ற ஆண்டு இந்தியா முழுவதிலிருந்தும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவை ஆர்வலர்கள், பொது மக்கள் அனைவரும் சேர்ந்து சுமார் 3000 பறவைப் பட்டியல்களை eBird இணையத்தில் உள்ளிட்டார்கள். சுமார் 800 வகையான பறவைகள் இந்த நான்கு நாட்களில் பதிவு செய்யப்பட்டது. பறவை பட்டியல் உள்ளிட்டதில், உலகிலேயே இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடத்தில் (முதலிடம் கேரளாவிற்கு), 605 பறவைப் பட்டியல்கள் உள்ளிடப்பட்டது, இதில் 348 பறவை வகைகளும் பதிவு செய்யப்பட்டது.

ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு 2013 மற்றும் 2014ல். (விளக்கப்படத்தை பெரிதாகக் காண படத்தின் மேல் சுட்டவும்)
பறவைகள் சூழியல் சுட்டிக்காட்டிகள் (Ecological Indicators). நாம் வசிக்கும் பகுதியில், அல்லது ஓர் இயற்கையான வாழிடத்தில் இருக்கும் பறவைகளின் வகைகள், அவற்றின் எண்ணிக்கை முதலியவற்றை தொடர்ந்து நெடுங்காலத்திற்கு கண்காணித்து வருவதன் மூலம், அந்த இடத்தின் தன்மை எவ்வாறு மாறுபடுகிறது என்பதை அறியலாம். அதாவது, அங்கு வாழும் உயிரினங்களுக்கு (ஊர்ப்புறமாகவோ, நகரமாகவோ இருப்பின் அங்கு வசிக்கும் மனிதர்களாகிய நம்மையும் சேர்த்து) அந்த இடம் வாழத் தகுந்ததாக இருக்கிறதா? அல்லது சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருகிறதா? என்பதை பறவைகளின் எண்ணிக்கையையும், வகையையும் வைத்து அறிவியலாளார்கள் கணக்கிடுவார்கள். அது போலவே வலசை வரும் பறவைகளின் நாளையும், நேரத்தையும் தொடர்ந்து பல ஆண்டுகள் பதிவு செய்து வருவதன் மூலம் புறச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை கணிக்க முடியும்.
இவ்வகையான கணக்கெடுப்பில் ஆர்வமுள்ள, புறவுலகின் மேல் கரிசனம் உள்ள யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம். இது போன்ற மக்கள் அறிவியல் திட்டங்கள் பொதுமக்களுக்கும், மாணவ, மாணவியருக்கும் புறவுலகின் பால் ஆர்வத்தை ஏற்படுத்தும். தங்களைச் சுற்றியுள்ள பறவைகளை பார்த்து மகிழ்வதுடன், அறிவியல் ஆராய்ச்சிக்கும் பங்களிக்கும் வாய்ப்பாக அமையும். இந்தக் கணக்கெடுப்பில் பங்கு கொள்ள ஆர்வமுள்ளவர்கள் எங்கோ வெகு தூரம் சென்று பறவைகளைக் கண்டுகளித்து, கணக்கெடுக்கத் தேவையில்லை. தங்கள் வீடுகளில் இருந்தோ, தங்களது பள்ளி, கல்லூரி வளாகத்திலிருந்தோ, பூங்கா, ஏரி, குளம் போன்ற பொது இடங்களிலிருந்தோ பறவைகளை கவனித்து eBirdல் பட்டியலிடலாம்.
இந்த ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (GBBC) பற்றியும், நாம் பார்த்து கணக்கிட்ட பறவைகளின் வகைகளையும், அவற்றின் எண்ணிக்கையையும் eBirdல் எவ்வாறு உள்ளிட்டு பட்டியல் தயார் செய்வது என்பதையும் விளக்கும் ஓர் அறிமுகக் கையேட்டை (An Introductory Guide to Great Backyard Bird Count – GBBC & eBird) இங்கே (PDF-32MB) தரவிறக்கம் செய்து கொள்ளலாம். (கீழே உள்ள படத்தைச் சுட்டவும் – click the image below to download)
இந்தியாவில் பரவலாகத் தென்படும் சில பொதுப்பறவைகளை அறிந்து கொள்ள/அடையாளம் காண, பறவைகளைப் பற்றிய தமிழ் நூல்களைப் பற்றி அறிந்து கொள்ள, இந்த காட்சியளிப்பைதரவிறக்கம் (PDF)செய்து கொள்ளவும். இதே காட்சியளிப்பை படமாக (Image) தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
மேலும் விவரங்களுக்கு காண்க: www.birdcount.in
தொடர்புக்கு: மின்னஞ்சல் – birdcountindia@gmail.com
நீங்களும் விஞ்ஞானிதான்!
தியாகராஜனும், தேவாவும், அப்ரஹாமும் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிக்கு அதிகாலையிலேயே வந்தடைந்து விட்டார்கள். பள்ளிக்கரணையின் வெவ்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்று பறவைகளை பார்த்து கணக்கெடுத்துக் கொண்டிருந்தனர். சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு அவர்களுக்கு பயிற்சியளித்து, இந்த நடவடிக்கைகளை ஒருங்கினைக்கும் திருநாரணனுடன் சேர்ந்து, அவர்கள் அன்று பார்த்த பறவைகளின் பட்டியலை eBird இணையதளத்தில் உள்ளீடு செய்தார்கள். அன்று ஞாயிற்றுக் கிழமை. இது முடித்து மாலை வீடு திரும்பியதும் அவர்களது வீட்டுபாடங்களை எழுதவோ, படிக்கவோ வேண்டும். ஆம் அவர்கள் அனைவரும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிக்கும் மாணவர்கள். அவர்கள் பறவை ஆராய்ச்சியாளர்கள் அல்ல. சென்னையைச் சேர்ந்த இயற்கை அறக்கட்டளை (The Nature Trust) எனும் இயற்கைக் குழுவின் அங்கத்தினர்கள். இவர்கள் இப்படி உருப்படியாக பொழுதைக் கழித்து ஓரிடத்திலிருக்கும் பறவைகளின் வகைகளையும், எண்ணிக்கையையும் பட்டியலிடுவது, பல ஆராய்ச்சியாளர்களும், பறவையியலாளர்களுக்கும் உதவியாக இருக்கிறது. ஏனெனில் ஆராய்ச்சியாளர்கள் எல்லா இடங்களிலும் எல்லா நேரத்திலும் இது போன்ற பணிகளைச் செய்வது இயலாத காரியம். ஆகவே இது போன்ற இயற்கை ஆர்வலர்களின் பங்கு அவர்களுக்கு பேருதவி புரிகிறது.
*****
சில ஆண்டுகளாக சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன, பல இடங்களில் அற்று போய்விட்டன என்றெல்லாம் செய்தி வந்து கொண்டிருந்தது. இது உண்மையா எனக் கண்டறிய நாடு தழுவிய சிட்டுக்குருவிகள் கணக்கெடுப்பு இணையத்தில் 1 April முதல் 15 June 2012 வரை நடத்தப்பட்டது. இதில் சிட்டுக்குருவிகளை அவரவர் வீட்டின் அருகில், ஊரில், பொது இடங்களில் பார்த்த விவரங்கள் கேட்கப்பட்டது.
இந்த துரித, இணைய கணக்கெடுப்பின் மூலம் சிட்டுக்குருவிகள் இந்தியாவின் பல பகுதிகளில் பல பரவியிருப்பதும், பல இடங்களில் குறிப்பாக கிராமப்புறங்களில் ஒரளவு நல்ல எண்ணிக்கையில் இருப்பதையும், மாநகரங்களின் சில பகுதிகளில் அவை குறைந்த எண்ணிக்கையில் இருப்பதையும் அறிய முடிந்தது. நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின்பே அவை சில இடங்களில் ஏன் குறைந்து வருகின்றன என்பதை அறிய முடியும் என்றாலும், இது போன்ற துரித கணக்கெடுப்பின் (Rapid Survey) மூலம் தற்போதைய நிலையை ஓரளவிற்கு மதிப்பிட முடிந்தது. இந்த கணக்கெடுப்பின் முடிவில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையைப் பற்றி 10666 பதிவுகள், 8425 இடங்களிலிருந்து கிடைத்தது. இத்தகவல்களை அளித்தது 5655 பங்களிப்பாளர்கள் (மேலும் விவரங்களுக்கு காண்க www.citizensparrow.in). இவர்கள் யாவரும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களோ அல்லது விஞ்ஞானிகளோ அல்ல. பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களுமே.
*****
காட்டுயிர்களை, இயற்கையான வாழிடங்களை பாதுகாப்பதிலும், இது சம்பந்தமாக நடைபெறும் அறிவியல் ஆராய்ச்சிகளிலும் பொதுமக்கள் பங்களிக்க முடியுமா? என்றால், நிச்சயமாக முடியும். சொல்லப் போனால் பல வித அறிவியல் ஆராய்ச்சிகளிலும், பல்லுயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் இது போன்ற பங்களிப்புகள் மென்மேலும் பெருகிவருகின்றன. பொதுமக்கள் அறிவியல் ஆராய்ச்சிக்கு உதவும் இத்திட்டத்திற்கு மக்கள் அறிவியல் (citizen science) என்று பெயர்.
புறவுலகினைப் போற்றுதல், சுற்றுச்சூழல் மென்மேலும் சீரழியாமல் பாதுகாத்தல், காட்டுயிர்களைப் பேணுதல், வாழிடங்களை மதித்தல், இயற்கையை நேர்மையான பொறுப்பான முறையில் அனுபவித்தல் பற்றிய புரிதல்களை பொதுமக்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் சுற்றுச்சூழல் கல்வி (Environmental Education) அல்லது இயற்கைக் கல்வியின் (Nature Education) மூலம் விளக்க முடியும். எனினும், வகுப்பில் பாடமாக படிப்பதைக் காட்டிலும் தாமாகவே இவற்றிற்கான அவசியத்தை உணர்ந்தால் ஒருவரின் மனதில் இவற்றைப் பற்றிய புரிதல்கள் எளிதில் பதியும். ஒரு முறை இப்படி உணர்ந்தால் இயற்கைப் பாதுகாப்பிலும், சுற்றுச்சூழலை பேணுவதிலும் பற்றுதல் ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும் அதற்கான நற்செயல்களையும், நற்பண்புகளையும் கடைபிடிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
உதாரணமாக சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்காமல் துணிப் பையை எடுத்துச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள நாம் இளைய தலைமுறையினரை பழக்க அவர்களிடம் இதைப் பற்றி எப்போதும் போதிப்பது சில வேளைகளில் அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். அப்படிச் செய்யாமல், பெற்றோர்களே ஒரு முன் உதாரணமாக இருந்து இதைக் கடைபிடித்தால், அவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கும் அசிங்கமான காட்சியைக் கொண்ட படங்களையும், ஒளிப்படங்களையும் காட்டும் போது இது குறித்த புரிதல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அல்லது பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கும் இடங்களுக்கு நேரடியாகக் கூட்டிச் சென்று காண்பித்தால் அக்காட்சி அவர்களின் உணர்வினைத் தூண்டி சுற்றுச்சூழலுக்குப் புறம்பான செயல்களை செய்யாமல் இருக்க வழிகோலும்.
அது போல காட்டுயிர்களையும், அவற்றின் இயற்கையான வாழிடங்களையும் பற்றி பல மணி நேரம் வகுப்பிலோ, கருத்தரங்குகளிலோ சொல்லிக் கொடுப்பதைக் காட்டிலும், அவை வாழும் இடங்களுக்கே ஒருவரை அழைத்துச் சென்று காட்டுவது நல்லது. ஏனெனில், படிப்பதைக் காட்டிலும் நேரடி அனுபவதில் கிடைக்கும் பட்டறிவே சிறந்தது. இதற்காக வெகு தொலைவு பயணம் செய்துதான் காட்டுயிர்களைப் பார்க்கவேண்டும் என்று இல்லை. நம் வீட்டில் இருக்கும், சிலந்தியையும், பல்லியையும், வீட்டைச் சுற்றித் திரியும் பல வகைப் பறவைகளையும், அணிலையும், பல வகையான அழகிய தாவரங்களையும், மரங்களையும் பார்த்து ரசிக்கலாம். நகரத்தில் வசித்தாலும் அங்கும் பல (வளர்ப்பு உயிரிகள் அல்லாத) இயற்கையாக சுற்றித்திரியும் பல உயிரினங்களும், பல வகை மரங்களும், செடி கொடிகளும், இருக்கவே செய்கின்றன.
இப்படி புறவுலகின் மேல் ஆர்வத்தைத் தூண்ட, கரிசனம் காட்ட மற்றொரு வழி பொது மக்களையும், மாணவர்களையும், இயற்கை ஆர்வலர்களையும் அறிவியல் ஆராய்ச்சியில் மக்கள் அறிவியல் திட்டங்களில் பங்கு பெற வைத்தல். இதனால் புறவுலகினைப் பற்றிய புரிதலும், இயற்கையின் விந்தைகளை நேரிடையாக பார்த்து அனுபவிக்கும் வாய்ப்பும், அதே வேளையில் இது சம்பந்தமாக நடக்கும் ஆராய்ச்சிகளுக்கு நேரிடையாக பங்களிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
மக்கள் அறிவியல் திட்டங்களின் தலையாய நோக்கங்களில் ஒன்று, இத்திட்டங்களில் பங்கு பெறுவோர் வெறும் தகவல் சேகரிக்கும் வேலையை செய்பவர்களாக மட்டும் இல்லாமல் அதை ஏன் செய்கிறார்கள் எனும் அறிவியல் பின்னனியை தெரிந்து கொள்ளவும், அதைப் பற்றிய அறிவை மென்மேலும் பெருக்கிக் கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டுவதும், ஒரு பொறுப்பான இயற்கைவாதிக்கான பண்பை வளர்ப்பதற்காகவும் தான்.
வளர்ந்த நாடுகளில் பல மக்கள் அறிவியல் திட்டங்களும், அதற்கு பொதுமக்கள் பலரும் பங்களிப்பதும் அதிகம். ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இவை இப்போதுதான் தொடங்கப்பட்டு வருகின்றன. இது போன்ற திட்டங்கள் குறிப்பாக அதிக மக்கள் தொகையுள்ள நாடுகளில் அறியப்படாத அறிவியல் தகவல்கள் பலவற்றை பலரது ஒத்துழைப்புடன் சேகரிக்க உதவும். அது மட்டுமல்லாமல், இத்திட்டங்களின் மூலம் அனைவருக்கும் சுற்றுச்சூழல் பேணல், இயற்கை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வையும் ஊட்ட முடியும்.
இதுபோன்ற மக்கள் அறிவியல் திட்டங்கள் செயல்படுவது மக்களின் உதவியுடன், நாம் அனைவரும் வாழும் இப்பூமியின் நலனுக்காக. ஆகவே இதற்குப் பங்களிக்கும் மக்கள் நேர்மையாக இருந்து உண்மையான தகவலையே அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் இத்திட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆகவே இது போன்ற திட்டங்களுக்கு பங்களிப்பவர்கள் பொருப்புடன் செயல்படுதல் அவசியம்.
பல்லுயிர்ப் பாதுகாப்பிற்கும், சுற்றுச்சூழல் பேணலுக்கும் சூழியல்வாதிகளும், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களும், சுற்றுச்சூழல்வாதிகளும் மட்டுமே பங்களிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கைப் பாதுகாப்பு, புறவுலகின் பால் கரிசனம் முதலியவை இந்த பூமியில் வாழும் ஓவ்வொருவருக்கும் அவசியம் இருக்க வேண்டிய பண்புகளில் ஒன்று. மக்கள் அறிவியல் திட்டங்கள் அதற்கான வாய்ப்பை அனைவருக்கும் அளிக்கின்றன.
இந்தியாவில் செயல்பட்டு வரும் சில மக்கள் அறிவியல் திட்டங்கள்:
காலநிலை மாற்றத்தை (Climate change) தாவரங்களின் வாழ்வியலை ஆவணப்படுத்துவதன் மூலம் அறியும் திட்டம். அதாவது இத்திட்டத்தில் ஒரு மரம் இளந்தளிர்களை, பூக்களை, காய்களை, கணிகளை எந்த வாரத்தில், மாதத்தில் தோற்றுவிக்கின்றன என்பதை அவதானித்து இணையத்தில் ஆவணப்படுத்துதல் வேண்டும். உதாரணமாக வேப்பம்பூ சித்திரையில் பூக்கும் என்பதை அறிவோம். ஆனால் ஒவ்வோர் ஆண்டும் வேப்பமரம் சரியாக சித்திரையில் தான் பூக்கிறதா, அல்லது சற்று முன்போ அல்லது தாமதமாகவோ பூக்கிறதா என்பதை அறிய, அது பூக்கும் நாளை/வாரத்தை தொடர்ந்து பல ஆண்டுகள் ஆவணப்படுத்தப்படவேண்டும். ஒரு வேளை தாமதமாகப் பூத்தால் தட்ப வெப்ப நிலை, மழையளவு போன்ற காரணிகளுக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என ஆராய்ந்து அறிய முடியும். மாத்ருபூமி மலையாள தினசரியின் SEED திட்டதின் கீழ் தற்போது கேரளாவிலிருந்து பல பள்ளி மாணவர்கள் இத்திட்டத்திற்கு பங்களித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு காண்க www.seasonwatch.in
*******
வலசை வந்து போகும் விருந்தாளிப் பறவைகள் ஓரிடத்திற்கு வருவது எப்போது, அங்கிருந்து அவை மீண்டும் திரும்பிப் போவதெப்போது? இதை அறியும் முயற்சியிலேயே சுமார் பத்தாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மக்கள் அறிவியல் திட்டம். இதைத் தெரிந்து கொள்வதால் லாபம் என்ன? வலசை வரும் பறவைகளை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேரும் நாட்களை ஆண்டாண்டு காலமாக கண்காணித்து வருவதன் மூலம் புறச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை கணிக்க முடியும். காலநிலை மாற்றத்தினால் வலசை பறவைகளின் வலசைப் பயணமும் பாதிப்படையும். எனினும் இந்திய துணைக்கண்டத்தில் இது பற்றிய புரிதல்கள் இன்னும் தெளிவாக இல்லை. இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவே இத்திட்டம் தொடங்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு காண்க www.migrantwatch.in
*******
ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (Great Backyard Bird Count – GBBC)
இந்நிகழ்ச்சி உலகம் முழுவதும் (இந்தியாவில் இது கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது) பிப்ரவரி மாதம் 13 முதல் 16ம் தேதி வரை நடைபெறும்.
உலகம் முழுவதும் உள்ள பறவைகளை ஒரே நேரத்தில் ஒவ்வோர் ஆண்டும் கணக்கிடுவதால், பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களை ஆண்டு தோறும் கண்காணிக்க முடியும். ஓரிடத்தில் அவற்றின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை வைத்து அதற்கான காரணங்களைக் கண்டறியவும் முடியும். வரும் ஆண்டு தமிழகத்தில் பொங்கல் தின பறவைகள் கணக்கெடுப்பு (Pongal Bird Count) நடத்தப்பட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு காண்க GBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது? ஏன்? எப்படி?
மற்றும் www.birdcount.in
*******
நாம் ஓரிடத்தில் பார்க்கும் பறவைகளின் பட்டியலை இந்த இணையதளத்தில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். பலர் இவ்வறு தங்களது அவதானிப்புகளை சமர்ப்பித்தால், பறவைகளின் பரவலையும், எண்ணிக்கையையும் இந்த இணையதளத்தின் மூலம் அறிய முடியும். இதன் மூலம் பறவை பார்ப்போரும், பறவை ஆராய்ச்சியாளர்களும், பொதுமக்களும் பயனடைவார்கள். Migrantwatch, GBBC முதலிய திட்டங்களுக்காக eBird இணையதளம் மூலமாகவே பறவைப் பட்டியலை, அவதானிப்பை உள்ளீடு செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு காண்க http://www.ebird.org மற்றும்
*******
India Biodiversity Portal (இந்தியப் பல்லுயிரிய வலைவாசல்)
இந்தியாவில் உள்ள அனைத்து உயிரினங்களைப் பற்றிய தகவல்களை ஓரே இடத்தில் சேகரிக்கும் திட்டம். உதாரணமாக ஒரு வண்ணத்துப்பூச்சி அல்லது ஒரு தாவரத்தினைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் ஒரே பக்கத்தில் சேகரித்து வைக்கப்பட்டு அனைவரும் இத்தகவல்களை பார்த்தறிந்து பயன்பெறலாம். இந்த வலைவாசலில் அங்கத்தினராக இருக்கும் பல அறிஞர்களிடமும் உயிரினங்களைப் பற்றிய சந்தேகங்களை கேட்டறிந்து கொள்ளலாம். உதாரணமாக நாம் காணும் ஏதோ ஒரு தாவரத்தின் பெயரோ, தகவலோ தெரியவில்லை எனில், அத்தாவரத்தின் படத்தை இந்த வலைவாசலில் உள்ளீடு செய்தால் அங்குள்ள தாவரவியலாளார்கள் அத்தாவரத்தை அடையாளம் காண உதவுவார்கள்.
அண்மையில் இந்த வலைவாசலின் ஒரு அங்கமான TreesIndia நடத்திய Neighbourhood Tree Campaign (மரம் பார்ப்போம் மரம் காப்போம்) எனும் மரங்கள் கணக்கெடுப்பில் பலர் கலந்துகொண்டு அவரவர் வீடுகளில், தெருக்களில் உள்ள மரங்களின் வகையை, எண்ணிக்கையை, இருப்பிடத்தை பட்டியலிட்டு இந்த வலைவாசலில் உள்ளீடு செய்தார்கள்.
மேலும் விவரங்களுக்கு www.indiabiodiversity.org மற்றும் மரம் பார்ப்போம் மரம் காப்போம்
*******
Hornbill Watch – இந்திய இருவாசிகளுக்கான இணையதளம்
இருவாசி ஒரு அழகான பறவையினம். இவை அத்திப் பழங்களையே பெரும்பாலும் உண்டு வாழும். மிகப்பெரிய மரங்களில் கூடு கட்டும். இந்தியாவில் 9 வகையான இருவாசிப் பறவைகள் உள்ளன. இவற்றின் இறக்கைகளுக்காகவும், மண்டையோட்டிற்காகவும் இவை கள்ள வேட்டையாடப்படுவதாலும், வாழிட அழிப்பினாலும், மிகப்பெரிய மரங்களை வெட்டிச் சாய்ப்பதாலும், இவை அபாயத்திற்குள்ளாகியுள்ளன. இவற்றின் பாதுகாப்பு அவசியத்தை விளக்கவும், இவற்றின் பரவலை ஆவணப்படுத்தவும் இந்த இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நம்மிடம் இருக்கும் இந்திய இருவாசிகளின் படத்தை இந்த இணையத்தில் உள்ளீடு செய்யலாம். படம் எடுக்கப்பட்ட தேதி, நேரம், இடம் முதலிய தகவல்களையும் அளிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு காண்க http://www.hornbills.in/
*******
Conservation India (CI)
அழகிய நிலவமைப்புகளையும், காட்டுயிர்களையும் மட்டுமே பலவித கோணங்களில் படம்பிடித்துக் கொண்டிருக்காமல், இயற்கையான வாழிடங்களையும், சுற்றுச்சூழலையும் சீரழிக்கும் காட்சிகளையும் ஆவணப்படுத்தி அதை அந்த வாழிடத்திற்கும், அங்குவாழும் உயிரினங்களும் நன்மை புரியும் வகையில் இயற்கை பாதுகாப்பு ஒளிப்படங்களை எடுத்து இந்த இணைய தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். உதாரணமாக நாம் ஏதேனும் வனப்பகுதிக்குச் செல்லும் போது அங்கு கள்ள வேட்டையில் ஈடுபட்டிருப்பவர்களின் படத்தையோ, மரவெட்டிகளின் படத்தையோ எடுத்து இது பற்றி விளக்கங்களை அளித்து இந்த இணையத்தில் பதிப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு காண்க www.conservationindia.org
********
தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 18th & 25th November 2014 தினங்களில் வெளியான கட்டுரைகளின் முழுப் பதிப்பு. அக்கட்டுரைகளை 18th Nov இங்கும் (PDF) & 25th Nov இங்கும் (PDF) காணலாம்.
தமிழ் பறவைகள் (தமிழ்Birds) குழுவினர் சந்திப்பு
பறவைகள் கூட்டமாகப் பறந்து திரிவதையும், பல இடங்களிலிருந்து ஓரிடத்தில் வந்தமர்வதையும் கண்டிருப்போம். அது போலவே பறவை ஆர்வலர்கள் கூட்டம் ஒன்று 1 & 2 நவம்பர் 2014 அன்று, திண்டுக்கல், காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் ஒன்று கூடியது. பறவைகளின் பாதுகாப்பு, அவற்றின் வாழிடங்களின் பாதுகாப்பு, தமிழகத்தில் தென்படும் பறவைகளின் பரவல் முதலியவற்றைப் பகிர்ந்து கொள்ளும் தமிழ் பறவைகள் யாஹூ குழு (Tamil Birds Yahoo Group) இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்த இணைய குழு 2006ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இக்குழுவினை ஒருங்கிணைத்து நடத்துபவர் மரங்கொத்திகளைப் பற்றி ஆராய்ச்சி செய்த Dr. ஷாந்தாராம். இவர் இந்தியாவின் சிறந்த பறவையியலாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இக்குழுவில் சுமார் 630 பேர் அங்கத்தினராக இருக்கின்றனர்.
பறவைகளுக்கு நாம் வகுத்த எல்லைகள் கிடையாது. அது போலவே தமிழ் பறவைகள் யாஹூ குழு என்பது தமிழர்களை மட்டுமே கொண்டதல்ல. தமிழகத்தில் தென்படும் பறவைகளைப் பற்றியும், அவற்றின் வாழிடங்கள் பற்றியும் கரிசனம் கொண்ட தமிழர்கள் அல்லாத, தமிழகத்தில் வசிக்காத பலரும் உறுப்பினர்களாக இருக்கின்றனர். குறிப்பாக இக்கூட்டத்தினை மிகவும் முனைப்புடனும், ஆர்வத்துடனும் ஏற்பாடு செய்தவர்களில் ஒருவர் இந்தியாவின் பறவையியலுக்கு பல வகையில் பங்களித்துக் கொண்டுள்ள J. ப்ரவீனும் ஒருவர். இவர் தமிழ் பறவை யாஹூ குழுவினைப் போலவே கேரளாவில் இயங்கிவரும் கேரளா பறவைகள் யாஹூ குழுவின் ஒருங்கிணைப்பாளர் (KeralaBirder Yahoo Group). கேரளப் பறவைகளைப் பற்றிய பல்லாண்டு கால ஆராய்ச்சியில் விளைந்த “Birds of Kerala – Status and Distribution” (2011) நூலின் ஆசிரியர்களில் ஒருவர். மேலும் கேரளாவில் பல பறவைகள் கணக்கெடுப்பினை நடத்தியவர்.

J . பிரவீன் (நின்று கொண்டிருப்பவர்) கேரள பறவைகள் கணக்கெடுப்பு குறித்து அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
திண்டுக்கல் கூட்டத்தில் பல இயற்கை ஆர்வலர்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள், தன்னார்வக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என சுமார் 55 பேர் பங்குபெற்றனர். இக்கூட்டத்தை இந்திய பறவை பாதுகாப்பு கூட்டமைப்பு (IBCN – Indian Bird Conservation Network), பம்பாய் இயற்கை வரலாறு சங்கம் (Bombay Natural History Society – BNHS)மெட்ராஸ் இயற்கையியல் சங்கம் (MNS – Madras Naturalist Society) மற்றும் இந்தியப் பறவைகள் கணக்கெடுப்புத் திட்டத்தை ஊக்குவிக்கும் குழுமமான BirdCount India, இயற்கை காப்புக் கழகம் (Nature Conservation Foundation – NCF) ஆகிய அமைப்புகளும், J. ப்ரவீன், Dr. T. பத்ரிநாராயணன் போன்ற தன்னார்வலர்களரும், காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறையின் பேராசிரியர்களும், மாணவர்களும் ஒருங்கிணைத்து நடத்தினர்.
பறவைகளின் பரவல், தற்போதைய பாதுகாப்பு நிலை, எண்ணிக்கை, தென்படும் காலம், அவை தென்படும் வாழிடத்தின் நிலை முதலிய தகவல்கள் அவற்றின் பாதுகாப்பிற்கு பெரிதும் உதவியாக இருக்கும். பறவை ஆராய்ச்சிக்கும், அவற்றின் பாதுகாப்பிற்கும் மேலே குறிப்பிட்ட தகவல்களும், ஒரிடத்தில் இருக்கும் பறவை வகைகளின் பட்டியலும் அடிப்படைத் தேவையாகிறது. தமிழகத்தில் பல இடங்களிலிருந்து பல்வேறு பறவைப் பட்டியல்கள் இருந்தாலும், அவை ஒருங்கிணைக்கப்படாமல் வெவ்வேறு நூல்களிலும், ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இது வரை தமிழகத்தில் செய்யப்பட்ட பல பறவைகள் ஆராய்ச்சியினாலும், பறவை ஆர்வலர்கள் பலர் பார்த்து/அவதானித்து பதிப்பித்த தரவுகளின் வாயிலாகவும் தமிழகத்தில் சுமார் 550 பறவை வகைகள் தென்படுகின்றன என்பதை அறிய முடியும். எனினும் இப்பகுதியில் அண்மைக் காலங்களில் பார்த்து/அவதானிக்கப்பட்ட பறவைகள் பற்றிய குறிப்புகள் அனைத்தும் வெவ்வேறு அறிவியல் இலக்கிய இதழ்களிலும், நூல்களிலும் பதிப்பிக்கப்பட்டும், பல பதிவு செய்யப்படாமலும் உள்ளன. ஆகவே இக்கூட்டத்தில் முதற்கட்டமாக தமிழகப் பகுதியிலிருந்து பதிவு செய்யப்பட்ட பறவை வகைகள் அனைத்தையும், பட்டியலிட்டு, ஏற்கனவே இருக்கும் பட்டியலை மேம்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

அருளகம் அமைப்பினைச் சேர்ந்த சு பாரதிதாசன் அவரது பாறு கழுகுகள் (பிணந்தின்னிக் கழுகுகள்) குறித்த ஆராய்ச்சியைப் பற்றி விளக்குகிறார்.
பறவைகளை அவதானித்து அவற்றை பட்டியலிட்டு நமது நாட்குறிப்புகளில் வைத்துக் கொள்வது நல்ல பழக்கமே. எனினும் அது நமக்கு மட்டுமே இல்லாமல் வெளியுலகிற்கும், குறிப்பாக மக்கள் அறிவியல் திட்டங்களுக்கும் பயனுள்ள வகையில் இருப்பின் நமது பறவைப் பட்டியல் (bird checklist) பறவைகள் பாதுகாப்பிற்கும், அவற்றின் வாழிடப் பாதுகாப்பிற்கும் உதவும். இவ்வகையில் பறவைப் பட்டியல்களின் களஞ்சியமான அனைவரும் பார்த்தறியும், பங்களிக்கும் வலைவாசலான eBird குறித்த காட்சிளிப்பும், விவாதங்களும் இக்கூட்டத்தில் நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள முக்கிய பறவைகள் வாழிடங்களைப் (Important Bird Areas – IBA’s) பற்றியும், அவற்றை தகுந்த கால இடைவெளியில் முறையாக கண்கானித்தல் பற்றியும், தமிழகத்தில் இருக்கும் மேலும் பல தகுதியான இடங்களை இனங்கண்டு அவற்றை முக்கிய பறவைகள் வாழிடமாக தீர்மானிக்கவும் இக்கூட்டத்தில் ஆலோசனைகளும், கருத்துக்களும் பரிமாரப்பட்டன. குறிப்பாக சென்னையில் உள்ள பள்ளிக்கரணை நீர்ச்சூழலை ஒரு முக்கிய பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.
பறவைகள், அவற்றின் வாழிடங்கள் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்கும் ஆதரவும் மிகவும் அவசியம். பறவைகளின் பால், புறவுலகின் பால் நாட்டமேற்பட, அவற்றின் மேல் கரிசனம் கொள்ள பொது மக்களிடையேயும், இளைய தலைமுறையினரிடையேயும் பறவைகள் அவதானித்தல் (Birdwatching) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பலர் ஆலோசனை வழங்கினர். இதை ஒரு நல்ல பொழுது போக்காக அனைவரும் எடுத்துக் கொள்ள மக்களிடையே எடுத்துச் சொல்வது அவசியம். ஆகவே, பறவைகள் பற்றிய விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தவும் பொங்கள் தினத்தன்று பறவைகளைப் பார்த்து கணக்கிட்டு, பட்டியலிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.
மேலை நாடுகளில் கிருஸ்துமஸ் தினத்தன்று பொதுமக்கள் தங்களது வீட்டினருகிலோ, வீட்டினை அடுத்த சுற்றுப்புறங்களிலோ அங்கு தென்படும் பறவைகளைப் பார்த்து பட்டியல் தயார் செய்து இணையத்தில் உள்ளீடு செய்வார்கள். Christmas Bird Count எனும் இக்கணக்கெடுப்பு பல்லாண்டு காலமாக தொடர்ந்து நடந்து வரும் செயல்பாடு. இதன் மூலம் பல பொதுப்பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளையும், பரவலையும் அறிந்து கொள்ள முடியும். இது போலவே கடந்த இரு ஆண்டுகளாக இந்தியாவில் ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு (GBBC – Great Backyard Bird Count) நடைபெற்று வருகிறது. அண்மையில் கேரளாவில் ஓணம் பண்டிகையின் போது பறவைகள் கணக்கெடுப்பினை KeralaBirders யாஹூ குழுவினர் நடத்தி வருகின்றனர். இவற்றைத் தொடர்ந்து 2015ம் ஆண்டிலிருந்து தமிழகத்திலும் பொங்கல் தின பறவைகள் கணக்கெடுப்பு ஜனவரி 15 முதல் 18 வரை நடத்தத் திட்டமிட இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பறவை ஆர்வலர்களுக்கான நெறிமுறைகள்
நேற்று காலை பத்திரிகையாள நண்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (Great Backyard Bird Count) பற்றிய சில ஞாயமான கேள்விகளைக் கேட்டார். அவரது கேள்விகளும் அவற்றிற்கான பதிலையும் இங்கே காணலாம்:
1. கணினி வசதியோ, இணையத் தொடர்போ இல்லாதவர்கள் எப்படி இக் கணக்கெடுப்பில் பங்கு கொள்ள முடியும்?
பறவை பார்ப்போர், இக்கணக்கெடுப்பில் பங்கு கொள்ள நினைத்தால் கணினி, இணைய வசதிகள் உள்ளவர்களின் உதவியை நாடலாம். இந்தியாவில் இது போன்ற கணக்கெடுப்புக்கள் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பமாகி வருகின்றன. எதிர் காலத்தில் அனைவரும் பங்குகொள்ளும் வசதிகள் ஏற்படலாம். இந்நிலை மாறும், மாற வேண்டும். பல வளர்ந்த நாடுகளில் கூட இப்பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது.
2. ஒரு வேளை பறவைகளை சரியாக அடையாளம் காணாமல், தவறான பறவைகளை உள்ளிட்டால் என்ன செய்வது? அல்லது ஓரிரு பறவைகளை பார்த்துவிட்டு 100க்கணக்கில் பார்த்தாக பொய்த்தகவலை அளித்தால் என்ன செய்வது?
ஒரு வேளை பறவையை தவறாக அடையாளம் கண்டு இணையத்தில் உள்ளிட்டு, அது தவறென உணர்ந்தால் மீண்டும் அதை மாற்றிக்கொள்ள eBirdல் வசதிகள் உள்ளது. ஆனால் ஒருவர் வேண்டுமென்றே அதைச் செய்தால் என்ன செய்வது? அதைத் தடுப்பதற்கும், சீர் செய்யவும் அந்த இணையத்தில் சில வசதிகள் உள்ளன. உதாரணமாக தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் இப்பகுதியில் காணப்படாத பறவை ஒன்றை உள்ளிடுகிறார் என வைத்துக் கொள்வோம். அதை அவர் உள்ளிடும் போதே திரைக்குப் பின்னால் பல வேலைகள் நடைபெறும். இந்த இணையத்தில் உள்ள வடிகட்டிகளால் (filters) அது சரிபார்க்கப்பட்டு அவரிடம் அதற்கான (சரியான விளக்கங்கள், புகைப்படம் முதலிய) ஆதாரங்கள் கேட்கப்படும். அதன் பின் அந்தக் குறிப்பிட்ட பதிவு தமிழ்நாட்டில் உள்ள பல பறவை ஆராய்ச்சியாளார்களுக்கு தெரிவிக்கப்படும். முறையான நுண்ணாய்வுக்குப் பிறகு அப்பதிவு ஏற்றுக்கொள்ள அல்லது நிராகரிக்கப்படும்.
3. ஒரு வேளை பறவைகளை பார்க்காமலேயே பார்த்தாக ஒருவர் பொய்ப் பட்டியலைத் தயார் செய்து உள்ளிட்டால்?
இதுபோன்ற மக்கள் அறிவியல் (Citizen Science) திட்டங்கள் செயல்படுவது மக்களின் உதவியுடன், நாம் அனைவரும் வாழும் இப்பூமியின் நலனுக்காக. ஆகவே இதற்குப் பங்களிக்கும் மக்கள் நேர்மையாக இருந்து உண்மையான தகவலையே அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் இத்திட்டங்கள் நடத்தப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இப்பக்கத்தை காண்க
இவற்றைப் பற்றியெல்லாம் சொல்லிக்கொண்டிருந்த போது பறவை பார்த்தலைப் பற்றியும் பேச்சு திரும்பியது. பறவை பார்த்தலின் போது கடைபிடிக்க வேண்டிய, செய்யக் கூடாதவைகளைப் பற்றி விளக்கும்படி கேட்டுக்கொண்டார். அவரிடம் சொல்லியதை சற்று விரிவாகவே கீழே தந்துள்ளேன். பறவை ஆர்வலர்கள் அனைவருக்கும் இது உதவும் என்கிற நம்பிக்கையில்.
பறவை ஆர்வலர்கள் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை விதிகள்:
நேர்மை
- ஆங்கிலத்தில் பறவை பார்த்தலைப் பற்றிய ஒரு கூற்று உண்டு, “No record at all is better than an erroneous one”. இதைத்தான் பறவைபார்த்தலின் Golden Rule என்பர். அதாவது ஒரு பறவையைத் தவறாக அடையாளம் கண்டு அதைப் பார்த்ததாகச் சொல்வதை விட, நாம் பார்த்ததை குறிப்பிடாமலேயே இருத்தல் நலம். நாம் பார்க்கும் பறவை ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தது தான் என்பதை முற்றிலுமாக உறுதிசெய்துகொண்ட பிறகுதான் நாம் அதை பார்த்ததாகச் சொல்ல வேண்டும். சிறு சந்தேகம் இருந்தாலும் அந்தச் சந்தேகம் தீரும் வரை நாம் பார்க்காததைப் பார்த்ததாகச் சொல்லக்கூடாது. இது பறவை பார்த்தலின் மிக முக்கியமான விதி.
- உதாரணமாக தூரத்தில் பறந்து செல்வது காகமா அல்லது அண்டங்காக்கையா எனத் தெரியாவிட்டால் அதை உங்கள் குறிப்பேட்டில் எழுதாமலேயே இருத்தல் நலம். ஆனால் நீங்கள் பார்த்தது காகமாகத்தான் இருக்கக்கூடும் என நம்பினால் “காகம்?” என எழுதினால் அது உங்களது நேர்மையைக் காட்டும்.
பறவைகள் பாதுகாப்பு
- பறவை பார்த்தலும், பறவைகளைப் படமெடுத்தலும் வெறும் பொழுதுபோக்கிற்காக இல்லாமல், நம்மை மகிழ்விக்கும் பறவைகளுக்கும், அவற்றின் வாழிட பாதுகாப்பிற்கும் நம்மால் முடிந்த அளவில் பங்களிப்பதும், பாடுபடுவதும் பறவை ஆர்வலர்களின் கடமையாகும்.
- பறவைகளை பார்க்க வேண்டும், படமெடுக்க வேண்டும் என்பதற்காக பறவைகளையோ, அவற்றின் வாழிடத்திற்கோ எந்த விதத்திலும் தீங்கிழைக்கவோ, தொந்தரவு செய்வதோ கூடாது.
- பறவைகளின் கூட்டினருகில் செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். கூட்டின் அருகில் செல்வதால், அப்பறவைகள் மிகுந்த மனஅழுத்தத்திற்கு உள்ளாகும். இதனால் அவை அக்கூட்டினை தவிர்த்து விட்டுச் செல்லும் அபாயம் உள்ளது. ஒரு வேளை தெரியாமல் கூட்டினருகில் சென்று விட்டால் உடனடியாக அந்த இடத்திலிருந்து அகன்று விடவேண்டும்.
- தாவரங்களினூடாக பதுங்கியிருக்கும் பறவைகளை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் / படமெடுத்துவிட வேண்டும் என்கிற அதீத ஆர்வத்தில் (அல்லது வெறியில்) சப்தமெழுப்புவதோ, எதையாவது அப்பறவை இருக்குமிடம் நோக்கி விட்டெறிவதோ கூடாது. நாம் பறவைகள் பார்க்க ஒரு இடத்திற்குச் செல்லும் போது, நாம் அங்கிருப்பது பறவைகளுக்கு எந்த வகையிலும் தொந்தரவு அளிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- இரவு நேரங்களில் மரத்தில் அடைந்திருக்கும் பறவைகளையும், இரவாடிப் பறவைகளையும் (Nocturnal birds) பார்க்க டார்ச் விளக்கை அவற்றின் மேல் அடித்துப் பார்க்கும் வேளையில் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும். டார்ச் மிகுந்த ஒளி உமிழும் தன்மையுடையதாக இருக்கக் கூடாது. மிதமாக ஒளி உமிழும் டார்சையும் கூட நீண்ட நேரம் அவை இருப்பிடம் நோக்கியோ, அவற்றினை முகத்திலோ அடிப்பதைத் தவிர்க்க வேண்டும். பறவைகளை இரவில் படமெடுக்க அதிக சக்தியுள்ள ப்ளாஷினை உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். இது பறவை இருக்கும் தூரத்தைப் பொறுத்தது என்றாலும், தூரமாக இருக்கும் பறவைகளைப் படமெடுக்கக் கூட ஓரிரு முறைகளுக்கு மேல் உபயோகித்தல் கூடாது. நினைத்துப் பாருங்கள் உங்கள் முகத்தில் டார்ச்சையோ, ப்ளாஷையோ அடித்தால் எப்படிக் கண்கள் கூசுகிறதோ அதே போலத்தான் பறவைகளுக்கும்.
- நீங்கள் பறவை பார்க்கப் போகும் இடங்களில் இதுபோல் யாராவது பறவைகளுக்குத் தகாத முறையில் நடந்து கொண்டால், அவர்களுக்கு அவற்றின் தீமைகளை எடுத்துச் சொல்லவும். அதையும் மீறி அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் அவர்கள் செய்வதை ஆவணப்படுத்தி (போட்டோ, வீடியோ மூலமாக) தகுந்த அதிகாரிகளிடம் முறையிடுங்கள்.
- பறவைகளை வேட்டையாடுவதையோ, கண்ணி வைத்துப் பிடிப்பதையோ, வேறு வகையில் கொல்வதையோ பார்க்க நேரிட்டால் உடனடியாக அதை (முடிந்தால் புகைப்பட ஆதாரத்துடன்) வனத்துறையினரிடமோ, தகுந்த அதிகாரிகளிடமோ உடனடியாக தெரிவிக்கவும்.
- வீட்டின் அருகில் பறவைகளுக்கு உணவு / பருக தண்ணீர் வைத்தல், செயற்கைக் கூடுகளை அமைத்தல் நம் பறவைகளின் பால் வைத்திருக்கும் அன்பைக் காட்டுகிறது என்பது உண்மைதான். அதேவேளையில் அங்கு வரும் பறவைகளுக்கு நம் வீட்டில் வளர்க்கும், வீட்டினருகில் திரியும் பூனை, நாய் முதலிய வளர்ப்புப் பிராணிகளால் எந்தவித ஆபத்தும் ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். உணவு, கூடு வைக்கும் இடங்களை வளர்ப்புப் பிராணிகள் வரமுடியாத படி, அவற்றின் உயரத்திற்கு எட்டாத வண்ணம் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு வேளை அதுபோன்ற இடத்தை தேர்வு செய்ய முடியாவிடில் அந்த இடத்தில் பறவைகளுக்கு உணவிடுவதை தவிர்க்க வேண்டும்.
பறவைகளின் வாழிடத்தை மதித்தல்
- நாம் பறவை பார்க்கச் செல்லும் முன் அது பொது இடமா? தனியாருக்குச் சொந்தமான இடமா? அல்லது அனுமதி பெற்றுச் செல்ல வேண்டிய இடமா? என்பதை அறிந்து, தேவைப்பட்டால் தகுந்த அனுமதி பெற்ற பின்னரே அங்கு செல்ல வேண்டும்.
- பறவைகள் பார்க்கப் போகும் இடத்தில் குப்பைகளைப் போடுவதைத் தவிர்க்கவும்.
- பறவைகள் பார்க்கச் செல்லும் வேளையில் உரக்கப் பேசமல், அமைதியாக இருத்தல் நலம். இதனால் பறவைகளுக்கும் தொந்தரவில்லை, நீங்களும் அவற்றை நீண்ட நேரம் பார்த்து ரசிக்கலாம்.
- பார்க்கும் பறவைகளை களக்குறிப்பேட்டில் உடனடியாக எழுதிக்கொள்வது நல்லது. எத்தனை, எந்த இடத்தில் பார்த்தோம் என்பதையும் குறித்துக்கொள்ள வேண்டும்.
- பெயர் தெரியாத, இதற்கு முன் பார்த்திராத பறவையைப் பார்க்கும் போது, அதை நன்கு கவனித்து படம் வரைவது, விளக்கமாக குறிப்பெடுத்துக் கொள்வது நல்லது. இது களக்கையேட்டில் பார்த்து அடையாளம் காண உதவும். சந்தேகமிருப்பின் தெரிந்தவர்களிடம் ஆலோசிக்கவும். பலமுறை சரிபார்த்த பின்னர் முடிவுக்கு வரவும். தமிழ் நாட்டில் பார்க்கப்படும் பறவைகளைப் பற்றி கலந்துரையாட, தகவல்களை பரிமார Tamilbirds (in.groups.yahoo.com/group/Tamilbirds/) எனும் யாஹூ குழுமம் இயங்கி வருகிறது. அதிலுள்ள அனுபவம் மிக்க பறவை ஆர்வலர்களின் உதவியை நாடலாம்.
நமது பட்டியல் நீள வேண்டும் என்பதற்காக அரிய பறவைகளைத்தான் பார்க்க வேண்டும் எனத் தேடி அலைவதைத் தவிர்த்து, நாம் அடிக்கடிப் பார்க்கும் பொதுப் பறவைகளையும் பார்த்து ரசித்து மகிழ்தல் நலம்.
பறந்து வந்த விருந்தினர்
காலையில் ரஹீம் வந்து ஈநாடு பத்திரிக்கையைக் கொடுத்து,”சார், பக்ஷியிலு லக்க பெடுத்தோமே கதா? தானிங்குறிஞ்சி நியூஸ் ஒச்சிந்தி” என்றார். படித்துக் காண்பிக்கச் சொன்னேன். ஆந்திராவில் பல ஆண்டுகள் இருந்தாலும் தெலுகு எழுத, படிக்க இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. உடனே அந்தக் கட்டுரையை எழுதிய பத்திரிக்கை நண்பருக்கு போன் செய்து நன்றிகளைச் சொன்னேன்.
குளித்து விட்டு தலையைத் துவட்ட மொட்டை மாடிக்குச் சென்றேன். கூடவே எனது களக்குறிப்பேட்டையும் (field notebook) பேனாவையும் எடுத்துச் சென்றேன். பைனாகுலரை எடுத்துச் செல்லவில்லை. பறவைகளை பார்க்க ஆர்வம் இருந்தால் போதும். வேறு எதுவும் தேவையில்லை. ஆனால் குறிப்பேடு அவசியம். பார்த்தை உடனே எழுதி வைக்காவிட்டால் ஒரு சில மணி நேரங்களில் நிச்சயமாக மறந்து போய்விடும்.
முதன் முதலில் பார்த்தது பெண் ஊதாத் தேன்சிட்டு. எதிரே இருந்த கட்டிடத்தில் தொங்கிக் கொண்டிருந்த நைந்து போன ஒரு சாக்கிலிருந்து சனலை அலகால் பிய்த்து எடுத்துக் கொண்டிருந்தது. கூடுகட்டுவதற்காகத்தான். சற்று நேரத்திற்கெல்லாம் ஆண் ஊதாத் தேன்சிட்டு வந்து எதிரில் இருந்த மின்கம்பத்தில் அமர்ந்தது. அதன் பளபள கரு ஊதா நிறம் சூரிய ஒளியில் தகதகவென மின்னியது. என்ன ஒரு அழகான பறவை. வீச்..வீச்..வீச்…எனக் கத்தியது. சற்று நேரத்திற்கெல்லாம் இன்னுமொரு ஆண் ஊதாத் தேன் சிட்டு அப்பக்கமாக வந்ததும் அதைத் துரத்த ஆரம்பித்தது. இரண்டும் கத்திக் கொண்டு, ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டே பறந்து சென்றன.
அடுத்ததாகப் பார்த்தது சிட்டுக்குருவிகளை (2- ஆண் இரண்டு 2-பெண்). மைனாக்கள் (4) பறந்து சென்றன. மறுபடியும் ஊதா தேன்சிட்டு ஒன்று வந்து வீட்டின் எதிரிலிருந்த மசூதியின் கூரான கோபுரத்தின் உச்சியில் அமர்ந்து கத்த ஆரப்பித்தது. முதலில் வந்து போனதாகத்தான் இருக்கவேண்டும். மீண்டும் அதை எனது எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளவில்லை. சற்று நேரத்தில் பெண் ஊதா தேன்சிட்டு மீண்டும் சனலை பிய்த்து எடுத்துக் கொண்டு போனது. தூரத்தில் இரண்டு காகங்கள் வீட்டின் தண்ணீர்த் தொட்டியின் மேல் அமர்ந்து கரைந்து கொண்டிருந்தன. உண்ணிக்கொக்கு ஒன்று தலைக்கு மேலே பறந்து சென்றது. கீ…கீ..என்ற குரலைக் கேட்டு திரும்பிப் பார்த்தேன். ஒரு பச்சைக்களி எங்கோ வேகமாகப் பறந்து போய்க்கொண்டிருந்தது. ஆணா, பெண்ணா எனத் தெரியவில்லை. ஆண் என்றால் கழுத்தில் கருப்பும் சிவப்புமாக ஒரு வளையம் இருக்கும். அடுத்ததாகப் பார்த்தது நீலவால் பஞ்சுருட்டான். நீர்நிலைகளுக்கு அருகில் அதிகம் வலம் வரும் இப்பறவை ஊருக்குள் என்ன செய்து கொண்டிருந்தது எனத் தெரியவில்லை. ஒரு வேளை அவ்வழியாகப் பறந்து செல்லும் போது பூச்சிகளைக் கண்டு பிடிக்க வந்திருக்குமோ என்னவோ. இது ஒரு வலசை வரும் பறவை என்பது குறிப்பிடத்தக்கது.
நான் இருக்கும் ஊரின் பெயர் பத்வேல். கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். கட்டிடங்கள் நிறைந்த ஆங்காங்கே ஓரிரு மரங்களுடன் கூடிய அந்தப் பகுதியில் இருபது நிமிட நேரத்திற்குள் இத்தனை பறவைகள். வீட்டினுள் தொலைபேசி மணி அடிக்கும் ஓசை கேட்டதும் உடனே பறவை பார்த்தலை முடித்துக் கொண்டு கீழே வந்தேன். என்னவோ தெரியவில்லை அன்று காலை மின்வெட்டு இல்லாமல் இருந்தது. பொதுவாக இங்கு பகலில் மின்சாரம் இருக்காது. உடனே கணினியை திறந்து எனது பறவைப்பட்டியலை (bird checklist) eBirdல் உள்ளிட்டேன்.
சேலத்திலிருந்து கணேஷ்வர் எனும் பறவை ஆர்வலர் மகிழ்ச்சி ததும்ப ஒரு மின்னஞ்ல் அனுப்பியிருந்தார். கண்ணன்குறிச்சி ஏரியில் பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது காலை 6:30 மணிக்கு ஏழு பூநாரைகள் பறந்து செல்வதைக் கண்டிருக்கிறார். அதை உடனடியாக பகிர்ந்திருந்தார். அந்த இடத்தில் அந்தப் பறவையை பார்பேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றும், தன் வாழ்வில் இது ஒரு அற்புதமான தருணம் எனவும் குறிப்பிட்டிருந்தார். படிக்கும் போதே மகிழ்ச்சியாக இருந்தது. அவர் அந்த கணத்தை தன் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார். அவரது உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஏனெனில் அது போன்ற தருணங்களை அனுபவித்தவன் நான். பறவை பார்த்தலில் ஆர்வம் உள்ள ஒவ்வொருவரும் அதை நன்கு உணர்வார்கள். அந்த ஒரு நிகழ்வில் ஏற்படும் குதூகலத்தையும், பூரிப்பையும் வார்த்தையில் சொல்லி விளக்க முடியாது. அதை அனுபவிக்க வேண்டும்.
இது போன்ற (GBBC) திட்டங்களை நடத்துவது ஏதோ பறவைகளை எண்ணுவதற்கும், பட்டியலைப் பதிவு செய்வதற்காக மட்டுமல்ல. இயற்கையின் விந்தைகளை அனைவரும் கண்டுணரவும், அனுபவித்து மகிழவும் வேண்டும் என்ற நோக்கத்தினாலும் தான். இதுபோன்ற இயற்கையின் தரிசனங்கள் தான் நாம் வாழும் இப்பூமிப் பந்தினை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை நம்மில் வித்திடும்.
Web links for GBBC
http://www.birdcount.in/events/gbbc/
GBBC In Tamil
https://uyiri.wordpress.com/2014/02/10/gbbc/
_________________________________________________________________________________
தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 16th February 2014 அன்று இணைய பதிப்பில் வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF ஐ இங்கே பெறலாம்.
GBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது? ஏன்? எப்படி?
Great Backyard Bird Count (GBBC) எனும் ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு இந்தியாவில் இரண்டாவது ஆண்டாக நடைபெற உள்ளது. 2014 பிப்ரவரி மாதம் 14 முதல் 17 வரையில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறும்.
இது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமாக ஒரே வேளையில் நடைபெறும் ஒரு மாபெரும் நிகழ்ச்சி. சென்ற ஆண்டு (2013) இந்தியா முழுவதிலிருந்தும் 202 பேர் பங்கு பெற்றனர். 438 பறவைப் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு இணையத்தில் உள்ளிடப்பட்டன, 537 பறவை வகைகள் கணக்கிடப்பட்டன. 80283 பறவைகள் எண்ணப்பட்டன. அதிகமாக பார்க்கப்பட்ட/கணக்கிடப்பட்ட பறவைகள்: மைனா, காகம், கரும்பருந்து, மாடப்புறா, கொண்டைக்குருவி, பச்சைக்கிளி, கரிச்சான் குருவி முதலியன (மேலும் விவரங்களுக்கு காண்க PDF).
உலக அளவில் 137998 பறவைப் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு இணையத்தில் உள்ளிடப்பட்டன, 4258 பறவை வகைகள் அவதானிக்கப்பட்டன, எண்ணப்பட்ட மொத்தப் பறவைகள் 33464616! (மேலும் விவரங்களுக்கு இப்பக்கத்தைக் காண்க).

GBBC Countries 2013 (Source: http://gbbc.birdcount.org/)
இதைச் செய்வது எதற்காக?
உலகம் முழுவதும் உள்ள பறவைகளை ஒரே நேரத்தில் ஒவ்வோர் ஆண்டும் கணக்கிடுவதால் பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களை ஆண்டு தோறும் கண்காணிக்க முடியும். ஓரிடத்தில் அவற்றின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை வைத்து அதற்கான காரணங்களைக் கண்டறியவும் முடியும்.
இது போன்ற நீண்ட காலத் திட்டங்களின் முடிவுகள் பறவைகளின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது. உதாரணமாக பூமிவெப்பமடைவதால் (Global Warming) எந்த அளவிற்கு பறவைகள் பாதிப்படைகின்றன என்பன போன்ற கேள்விகளுக்கு விடையறிய முடியும். பல்லுயிர் பாதுகாப்பிற்கு இத்தகைய நீண்ட கால ஆராய்ச்சி முடிவுகள் பேருதவியாக இருக்கும். இந்த ஆராய்ச்சி முடிவுகளுக்கு ஏற்றவாறு நாம் உயிரினங்களின் வாழிடங்களுக்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க முடியும்.
இதன் மூலம் நாம் வாழும் இப்பூமியின் சூழலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களை அறிந்து கொள்ள முடியும். உதாரணமாக வலசை வரும் பறவைகளை ஓரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேரும் நாட்களை ஆண்டாண்டு காலமாக கண்காணித்து வருவதன் மூலம் புறச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை (climate change) கணிக்க முடியும்.
இது போன்ற உலகளாவிய, நாடுதழுவிய கணக்கெடுப்பின் மூலம் சில பறவைகளின் பரவலை வெகு விரைவில் அறிந்து கொள்ள முடியும். உதாரணமாக சிட்டுக் குருவிகள் அழிந்து வருகின்றன என்கிற ஒரு (தவறான) செய்தியை பலரும் சொல்லி வந்த நிலையில், நடத்தப்பட்ட நாடு தழுவிய citizensparrow எனும் திட்டத்தின் மூலம் (2012, 1 ஏப்ரல் -15 ஜூன் வரை) இணைய கணக்கெடுப்பு (online survey) நடத்தப்பட்டது. இந்த ஆராய்ச்சி முடிவின் வாயிலாக சிட்டுக்குருவிகள் இந்தியாவில் பல இடங்களிலும் பரவியிருப்பதும், பல இடங்களில் நல்ல எண்ணிக்கையில் இருப்பதும், குறிப்பிட்ட ஓரிரு மாநகரங்களில் அருகி வருவதும் தெரிய வந்தது. இந்தத் திட்டத்தின் ஆராய்ச்சி முடிவுகளை இங்கே காணலாம்.

See http://www.citizensparrow.in for more details
மக்கள் அறிவியல் (citizenscience)
இது போன்ற நாடு தழுவிய கணக்கெடுப்பை ஓரிரு ஆராய்ச்சியாளர்களாலோ, பறவையியலாளர்களாலோ, விஞ்ஞானிகளாலோ நட்த்துவதென்பது முடியாத காரியம். ஆகவே தன்னார்வமுள்ள, இயற்கை பாதுகாப்பில் நாட்டமுள்ள பொதுமக்களின் உதவியும் அவசியம். இதுபோன்ற அறிவியல் துறைகளில் பொதுமக்களின் பங்களிப்பில் நடைபெறும் திட்டங்களை மக்கள் அறிவியல் (citizenscience) என்பர்.
மக்கள் விஞ்ஞானி (citizenscientist)
இந்தியாவில் இது போன்று சிட்டுக்குருவியின் எண்ணிக்கையை கணக்கெடுத்தல் 2012ல் நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இன்னொரு திட்டம் வலசைவரும் பறவைகளின் அவதானிப்பு (migrantwatch.in). seasonwatch எனும் திட்டம் பல்வகையான மரங்கள் பூப்பூக்கும், காய்க்கும் வேளைகளை பதிவு செய்கிறது. தற்போது நடைபெறவுள்ளது ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (GBBC). இது போன்ற மக்கள் அறிவியல் திட்டங்களுக்குப் பங்களிக்கும் ஒவ்வொருவரும் மக்கள் விஞ்ஞானி (citizen scientist) ஆவர்.
ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (GBBC)
இக்கணக்கெடுப்பிற்கு மக்கள் விஞ்ஞானியான நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்:
1. இந்தக் கணக்கெடுப்பை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஓரிடத்தில் இருந்து குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்காவது பறவைகளைப் பார்த்து எண்ணி குறித்துக்கொள்ள வேண்டும்.
2. பார்க்கும் பறவைகளை அடையாளம் கண்டு அவற்றின் எண்ணிக்கையை கணக்கிடுங்கள். (எ.கா: 5-சிட்டுக்குருவி, 2-காகம், 3 – மைனா). மிகப் பெரிய பறவைக்கூட்டங்களை எண்ணுவது அவ்வளவு எளிதல்ல. எனினும், உங்களால் முடிந்த அளவிற்கு சரியாகக் கணிக்கவும் (எ.கா: சுமார் 20-30 உண்ணிக்கொக்கு, 10-15 தகைவிலான்கள்).
3. நீங்கள் ஒவ்வொரு நாளும் (14-17 பிப்ரவரி) கணக்கிட்டு எழுதி வைத்திருக்கும் பட்டியல், ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் பறவைகளைப் பார்த்து கணக்கிட்ட பட்டியல் மற்றும் ஒரு நாளில், ஒரே இடத்திலிருந்து, வெவ்வேறு நேரங்களில் பறவைகளைப் பார்த்து கணக்கிட்டு எழுதி வைத்திருக்கும் பறவை பட்டியல் (அல்லது பட்டியல்களை) eBird இணையதளத்தில் சமர்ப்பிக்கவும்.
eBird இணையதளம்
ஒரு வேளை ebird இணையத்தில் நீங்கள் பதிவு செய்யாமல் இருந்தால் உடனே உங்களது பெயரிலோ அல்லது உங்களது நிறுவனத்தின் பெயரிலோ அல்லது குழுவின் பெயரிலோ பதிவு செய்து கொள்ளுங்கள்.
பறவைப் பட்டியலை இணைய தளத்தில் உள்ளீடு செய்தல்
இணைய தளத்தில் உங்களை பதிவு செய்து கொண்டவுடன் நீங்கள் பறவைகளைப் பார்த்து பட்டியலிட்ட இடத்தை கூகுள் வரைபடத்தில் (Google Map or Google Earth) கண்டறியவும். ஒரு வேளை அந்த இடத்தின் அட்சரேகை/தீர்க்கரேகை (latitude/longitude) தெரிந்திருந்தால் அதன் மூலமாகவோ, ஊரின், தெருவின் அடையாளங்களை வைத்து கூகுள் வரைபடத்தில் பறவைகள் பார்த்த இடத்தைக் குறித்துக் கொள்ளவும்.
நேரமும், நாளும், பறவை கணக்கிடல் முறையும்
பறவைகளைக் கணக்கிட எடுத்துக் கொண்ட நேரத்தையும் குறித்தல் வேண்டும். பறவைகளை பார்க்க ஆரம்பித்த நேரம், அதை செய்து முடித்த நேரம், பறவைகள் கணக்கிடலில் பங்கு கொண்டது எத்தனை பேர் முதலிய விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். பறவைகள் கணக்கிட்ட நாளையும், அதைச் செய்த முறையையும் பதிவு செய்தல் வேண்டும்.
நீங்கள் பறவைகளை பொதுவாக மூன்று வகைகளில் பார்த்து கணக்கிட்டிருக்கக்கூடும்.
பயணித்துக்கொண்டு (Travelling) – ஓரிடத்தில் நில்லாமல் நடந்து கொண்டோ, அல்லது வண்டியில் பயணித்துக் கொண்டோ பறவைகளைப் பார்த்து கணக்கிடுதல். (எ. கா: பூங்காவிலோ, காட்டுத் தடத்திலோ, ஏரி ஓரமாகவோ நடந்து சென்று அல்லது இரயிலில், பஸ்ஸில், காரில் பயணித்துக் கொண்டு பறவைகளை பார்த்து கணக்கிடுதல்). எவ்விதமாக பயணித்தாலும் பறவை பார்த்தலும், கணக்கிடுதலும் உங்கள் முக்கியப் பணியாக இருத்தல் வேண்டும்.
ஒரிடத்தில் நின்று கொண்டு (Stationary)– ஓரிடத்தில் நின்று கொண்டு உங்களைச் சுற்றியுள்ள பறவைகளைப் பார்த்து கணக்கிடுதல். (எ.கா: உங்கள் வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டு, குளக்கரையில் நின்று கொண்டு, பேருந்திற்காகக் காத்திருக்கும் வேளையில்).
தற்செயல் நிகழ்வு (Incidental) – பறவை பார்த்தலும் அதைக் கணக்கிடுதலும் உங்கள் முக்கிய பணியாக இல்லாமல், வேறு வேலை செய்து கொண்டிருக்கும் போதோ, பயணித்துக் கொண்டிருக்கும் போதோ (வீட்டிலிருந்து பள்ளிக்கோ, அலுவலகத்திற்கோ, நடைபழக பூங்காவிற்கோ செல்லும் போது), தற்செயலாக பார்த்த பறவைகளை தோராயமாகக் கணக்கிடல்.
உங்களது பறவைப் பட்டியலை உள்ளிடுதல்
நீங்கள் பார்த்து, கணக்கிட்ட பறவைகளை ebird வலைதளத்தில் உள்ளிட்டு பட்டியலை தயார் செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் இப்போது ஒரு மக்கள் விஞ்ஞானி!
இயற்கையின் மீதும் பறவைகளின் மீதும் கரிசனம் கொண்ட நீங்கள் செய்யப்போகும் இந்த மகத்தான பணியினை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பரிந்துரைத்து அவர்களையும் பங்குபெறச் சொல்லுங்கள்.
———-
ஊர்புறப் பறவைகள் கணக்கெடுப்பிற்கு உதவும் சில ஆதார வளங்கள்:
உங்கள் குழுவினருக்கும், மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஊர்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (GBBC) பற்றிய இந்த காட்சியளிப்பை (Presentation) தரவிறக்கம் (PDF)செய்து கொண்டு அவர்களுக்கு விளக்கமளிக்கவும். Arial Unicode MS எழுத்துருவை (Font) பயன்படுத்தவும்.
இதே காட்சியளிப்பை படமாக (Image) தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
eBird இணையதளத்தில் உங்களது பறவைப்பட்டியலை உள்ளிடும் வழிமுறைகளை அறிந்து கொள்ள இந்த காட்சியளிப்பை தரவிறக்கம் (PDF) செய்து கொள்ளவும். இதே காட்சியளிப்பை படமாக (Image) தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
தமிழ்நாட்டில் பரவலாகத் தென்படும் சில பொதுப்பறவைகளை அறிந்து கொள்ள/அடையாளம் காண, பறவைகளைப் பற்றிய தமிழ் நூல்களைப் பற்றி அறிந்து கொள்ள, இந்த காட்சியளிப்பை தரவிறக்கம் (PDF)செய்து கொள்ளவும். இதே காட்சியளிப்பை படமாக (Image) தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
eBird ன் மொபைல் அப்ளிகேஷன் (Smart phone App) http://bit.ly/1b9xcZ4 (2014 Feb 17 ம் தேதி வரை இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம்)
eBird உதவிப் பக்கம் (http://help.ebird.org/).
eBird ஐ முகநூலிலும் (Facebook) ட்விட்டரிலும் (Twitter) கூட காணலாம்.
இந்தியப் பறவைகள கணக்கெடுப்புத் திட்டம் (BirdCount India) குறித்து மேலும் அறிந்து கொள்ள அதன் Google group, Facebook, Twitter பக்கங்களுக்குச் செல்லவும்.
இந்திய பறவை கணக்கெடுப்புத் திட்டம் பற்றிய கேள்விகள் ஏதுமிருப்பின் தொடர்பு கொள்க
Email: birdcountindia@gmail.com