Posts Tagged ‘hoopoe’
கொண்டலாத்தியின் கூட்டைக் கண்டேன்
இன்று பைக்கில் பயணித்துக் கொண்டிருந்தபோது சாலையோரத்திலிருந்து ஒரு கொண்டலாத்தி பறந்து செல்வதைப் பார்த்தேன். அது அமர்ந்திருந்த இடத்தை நெருங்கியவுடன் அந்த இடத்தை நோட்டமிட்டபோது சில்வர் ஓக் மரத்துளையில் இருந்து தலை நீட்டி எட்டிப்பார்த்தது ஒரு கொண்டலாத்தி. உடனே பைக்கை நிறுத்தி அதை போட்டோ எடுத்துக்கொண்டேன்.
கொண்டலாத்தியின் கூடு துர்நாற்றமடிக்கும், அதில் குப்பை கூளங்களை சேமித்து வைத்திருக்கும் என படித்தது நினைவுக்கு வந்தது. அருகில் சென்று பார்க்கவில்லை. கூடு வைக்கும் பறவைகளை தொந்தரவு செய்யக்கூடாதல்லவா? எனினும் எடுத்த புகைப்படத்தை கொஞ்சம் பெரிதாக்கிப் பார்த்த போது கூட்டிலிருந்து மெல்லிய கயிறு போல ஏதோ தொங்கிக்கொண்டிருந்தது. இது இப்பறவை கொண்டு வந்து சேர்த்ததா எனத் தெரியவில்லை. கொண்டலாத்தியை இங்கே இதற்கு முன் பார்த்திருந்தாலும் இவற்றின் கூட்டினைக் காண்பது இதுவே முதல் முறை.
காக்கை, சிட்டுக்குருவி போல் அடிக்கடி தென்படும் பறவையல்ல கொண்டலாத்தி. எப்போதாவது தரையில் நடந்து தனது நீண்ட அலகால் கொத்திக் கொத்தி பூச்சிகளையும், புழுக்களையும் எடுத்து தின்பதைக் காணலாம். பெரும்பாலும் தனியாகவே தென்படும். வெளிறிய பழுப்புப் தலையும் வயிறும், இறக்கையும் வாலும் கருப்பு வெள்ளை பட்டைகளைக் கொண்டும் இருக்கும். இவற்றின் நீண்ட அலகைப் பார்த்து சிலர் இவற்றை மரங்கொத்தி என்று தவறாகக் நினைத்துக்கொள்வார்கள்.
கொண்டலாத்தியின் அழகு அதன் விசிறி போன்ற கொண்டைதான். தலையின் மேலுள்ள சிறகுகளை அவ்வப்போது சிலுப்பி, விறைப்பாக நிற்பதால் அவை கொண்டைபோன்ற தோற்றத்தை அளிக்கும். எனினும் எல்லா நேரத்திலும் அவை விரிந்து காணப்படுவதில்லை. அப்படி கொண்டையோடு காணும்போதெல்லாம் செவ்விந்தியனின் தலையலங்காரம்தான் எனக்கு நினைவுக்கு வரும். அதன் கொண்டை ஒரு அழகென்றால் அது பறந்து செல்லும் விதமோ அழகோ அழகு. அலைபோல மேலெழும்பி கீழே தாழ்ந்து பறந்து செல்லும். அப்போது இறக்கைகளை அடித்துக் கொண்டும் பிறகு உடலோடு சேர்த்து வைத்தும் பறந்து செல்லும். அப்போது அதன் இறக்கைகளிலும் வால் சிறகுகளிலும் உள்ள கருப்பு வெள்ளை வரிகள் அழகாகத் தோற்றமளிக்கும் (பறந்து செல்லும் காட்சியை இங்கே காண்க).
கொண்டலாத்தியின் குரல் எனக்குப் பரிச்சயமானதுதான். இவை உரக்கக் குரலெழுப்புவதில்லை. எனினும் தூரத்திலிருந்து குரலெழுப்பினாலும் அடையாளம் காணுமளவிற்கு தெளிவாகக் கேட்கும். இதன் குரலை வைத்தே இதற்குப் பெயரிட்டார்கள். இதன் ஆங்கிலப்பெயர் Hoopoe (Upupa epops). இப்பறவை குரலெழுப்புவது ஊப்..ஊப்..ஊப்.. என்றிருக்கும். இதனாலேயே Hoopoe எனப் பெயர் பெற்றது. குக்..குக்..குக்.. எனக் குரலெழுப்புவதால் குக்குருவான் (Barbet)எனப் பெயர் பெற்றதைப் போல. இவ்வாறு உச்சரிப்பதை வைத்தே பெயரிடுவதை ஆங்கிலத்தில் Onomatopoetic என்பர்.
கொண்டலாத்தி ஆதி காலத்திலிருந்தே மனிதனை தன் அழகால் கவர்ந்திழுத்திருக்கிறது. உலகப் புராணங்கள் பலவற்றிலும், திருக்குர்ஆனிலும் கூட இப்பறவையினைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றது. கொண்டலாத்தி இஸ்ரேல் நாட்டின் தேசியப் பறவை. நம் பஞ்சாப் மாநிலப் பறவையும் கூட இதுதான். பறவைகளைப் பற்றிய அருமையான தமிழ் புதுக்கவிதைகளைக் கொண்ட தொகுப்பு ஒன்று இருக்கிறது தெரியுமா? அந்த கவிதை நூலின் பெயரும் “கொண்டலாத்தி”!
கொண்டலாத்தி கவிதைகள்
எனக்கு பறவைகளைப் பார்க்கப்பிடிக்கும். பறவைகளை ஆராயப்பிடிக்கும். அவற்றை படமெடுக்கவும் பிடிக்கும். எனக்கு நல்ல கவிதைகளைப் படிக்கப்படிக்கும். படித்து ரசிக்கப்பிடிக்கும். ஆனால் கவிதைகளைப் பற்றி விமர்சனம் செய்ய எனக்குத் தகுதியில்லை. அது பறவைகளைப் பற்றிய கவிதைகளாக இருந்தாலும் கூட. ஆனால் படித்து மகிழ்ந்ததை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் எந்தத் தவறும் இல்லையே. இதுவரை ஆங்கிலத்திலேயே பறவைக் கவிதைகளை படித்த எனக்கு தமிழில் அதுவும் தமிழகப் பறவைகளைப் பற்றிய கவிதைகளைப் படிக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிட்டியது.
எந்த ஒரு புத்தகக் கடைக்குச் சென்றாலும், தமிழில் இயற்கையைப்பற்றிய நூல்களைத் தேடுவதும் அவற்றை வாங்குவதுமே என் வேலை. சென்னையில் அண்மையில் நிகழ்ந்த 35வது புத்தகக் கண்காட்சியில் எனது கண்கள் இப்படிப்பட்ட புத்தகங்களை தேடிக்கொண்டிருந்த போது க்ரியா பதிப்பகத்தாரின் கடைக்குள் நுழைந்து எனது கண்களை மேயவிட்டபோது முதலில் என்னை ஈர்த்தது கொண்டலாத்தி எனும் புத்தகம். ஹூப்பூ (Hoopoe) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அழகான பறவையின் அட்டைப்படத்தை கொண்டது. பொதுவாக பறவைகளையும், விலங்குகளையும், இயற்கைக் காட்சிகளையும் அட்டையில் கொண்டுள்ள புத்தகங்களின் உள்ளே, படத்திற்கும் உள்ளடக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. அந்த எண்ணத்துடனேயே அழகாக வடிவமைக்கப்பட்ட இப்புத்தகத்தை கையில் எடுத்து உள்ளே பார்த்த எனக்கு ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் தலைக்கேரியது.
பறவைகளைப்பற்றிய கவிதைத் தொகுப்பு கொண்டலாத்தி. அதுவும் தமிழகத்தில் நம் வீட்டுப்புறத்தில், வயல் வெளிகளில் பொதுவாக பறந்து திரியும் பறவைகளைப்பற்றியது. இப்பறவைகளைப் பார்த்திராதவர் இருக்க முடியாது. ஒரு வேளை பார்த்திருக்காவிடினும் இக்கவிதைத் தொகுப்பை படித்தபின் நிச்சயமாக பறவைகளைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
இயற்கையை ரசிப்பவர்கள், இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை கொண்டவர்கள் இயற்கையின் ஒரு அங்கமான பறவைகளைக் கண்டு ரசிக்காமல் இருக்கமாட்டார்கள். பல காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள் உருவாகக் காரணமானது பறவைகளே. பல கவிஞர்களையும் கவர்ந்திழுத்து கவிதைகள் பல பாட வைத்தன பறவைகள். ஆங்கிலக் கவிஞர்கள் பலர் அவரவர் ஊர்களில் தென்படும் பறவைகளைப் பற்றி பல கவிதைகள் எழுதியுள்ளனர். ஷேக்ஸ்பியரின் நாடகங்களிலும், கவிதைகளிலும் பறவைகளைப் பற்றிய குறிப்புகள் வெகுவாகத் தென்படுகிறது. இருப்பினும் எனக்குப் பரிச்சயமான, பிடித்த பறவைக் கவிதைகள், வானம்பாடியைப் பற்றி ஷெல்லி பாடிய Ode to a Skylark, இரவாடிப்பறவையான நைட்டிங்கேலைப் பற்றி கீட்ஸ் பாடிய Ode to a Nightingale, பாப்லோ நெருதா வடித்த பறவைப் பார்ப்பதைப் பற்றிய Ode to Birdwatching போன்ற கவிதைகளும் கூழக்கடாவைப் (Pelican) பற்றி Dixon Lanier Merritt என்பவர் எழுதிய வேடிக்கையான பாட்டும்தான். எனக்கு நெடுநாளாக ஒரு ஆதங்கம் இருந்தது, இதைப்போலெல்லாம் எழுத இங்கு ஆளில்லையே என்று. அந்தக் குறை இப்புத்தகத்தைப் படித்ததும் தீர்ந்துவிட்டது.
இந்தப் புத்தகத்தில் உள்ள கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது அவற்றின் அறிவியல் துல்லியம். அதாவது பறவைகளின் குணங்களை கூர்மையாக கவனித்து ஒரு தேர்ந்த ஆராய்ச்சியாளன் எவ்வாறு ஆராய்ச்சிக்கட்டுரையில் மிகத்துல்லியமாக விவரிக்கிறானோ அதைப்போலவே ஆசை கவிதையாக வடித்துள்ளார். பொதுவாக தமிழ் சினிமாப்பாடல்களில் அவ்வப்போது பறவைகளைப்பற்றிய வரிகள் வருவதுண்டு. ஆனால் பெரும்பாலும் அவற்றின் பெயர்களும், விவரிக்கப்படும் குணங்களும் பாடலாசிரியரின் கற்பனையில் விளைந்ததாகவே இருக்கும். அறிவியல் துல்லியம் இருக்காது. இந்தக் கவிதைகள் அப்படியல்ல. பறவைகளைக் கூர்ந்து நோக்கி, ரசித்து, அனுபவித்து எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொண்டு ரசிக்கும் வகையில் எழுதப்பட்டவை. சங்கத்தமிழ் படைப்புகள் பலவற்றில் பறவைகளைப்பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன. அவற்றை தமிழ் அறிஞர்கள் மட்டுமே படித்து மகிழ முடியும். அவர்கள் படித்து விளக்கிச் சொல்லிய உரைகளிலிருந்தே நாம் படித்து அறிய முடியும். ஆனால் ஆசையின் பறவைக் கவிதைகளை படித்தவுடன் நமக்கு அப்பறவையை மீண்டும் காண ஆசை வரும். கவிதையில் உள்ள பறவையைக் கண்டிருக்காவிடினும் அதைப்பற்றிப்படித்தபின் அதைக் காணத்தூண்டும்.
ஆசை தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று பலவகையான பறவைகளைப் பார்த்து அவைகளையெல்லாம் பற்றி பற்பல கவிதைகள் வடிக்க வேண்டும் என்பது எனது அவா. சீகாரப்பூங்குருவி (Malabar Whistling Thrush) பாடுவதை கேட்டாலும், இருவாசிப் பறவை பறப்பதை பார்த்தாலும் இவர் எவ்விதமாய் கவிதை புனைவார் என்று எண்ணும்போதே மகிழ்ச்சியும் அக்கவிதைகளைப் பார்க்க எனக்கு இப்பவே ஆவலாகவும் இருக்கிறது. இப்பறவைக் கவிதை உலகிற்குத் தெரியவந்தது 2010ல். ஆனால் 2012 வரையில் இது பற்றி அறியாமலிருந்திருகிறேன். வெட்கமாகத்தான் இருக்கிறது என்றாலும் இப்பொழுதாவது பார்த்தேனே என்ற நிம்மதியே நிலவுகிறது என் மனதில். இது ஏதோ ஒரு அறிய பறவையை உயிருடன் அதன் வாழிடத்தில் முதன் முதலில் பார்த்த மகிழ்ச்சியையே ஏற்படுத்துகிறது.
இந்த புத்தகத்தின் ஒவ்வொறு வரியையும் ஒவ்வொறு பக்கத்தையும் படிக்கும் பொழுது எனக்குள் ஏற்பட்ட கிளர்ச்சியை, உணர்வை நான் பறவைகளைப் பார்க்கும் போதும் அவற்றை கண்டு வியக்கும் போதும் ஏற்படும் உணர்வுக்கு ஒப்பாக நினைக்கிறேன். இந்தக் கவிதைகளின் இலக்கணம் சரியானது தானா என்றெல்லாம் எனக்குத்தெரியாது. அதைப்பற்றி நான் கவலைப்படவும் இல்லை. ஏனெனில் இப்புத்தகத்திலுள்ள கவிதைகள் ஒவ்வொன்றிலும் நான் பறவைகளைப் பார்க்கிறேன். நான் பறவைகளைக் காதலிக்கிறேன். ஆகவே இப்புத்தகத்தையும் தான்.
அக்டோபர் 2012 புத்தகம் பேசுது இதழில் வெளியான நூல் அறிமுகம். இக்கட்டுரையின் PDF இதோ.
இந்நூலை வாங்க தொடர்பு கொள்க – க்ரியா பதிப்பகம்: தொலைபேசி எண்: +91-44-4202 0283 & +91-72999-05950
மின்னஞ்சல்: creapublishers@gmail.com இணைய வழியில் வாங்க உரலி இதோ