Posts Tagged ‘Indian Peafowl’
இது ஒரு நல்ல வாய்ப்பு – ஒலி வடிவம்
தி இந்து தமிழ் செய்த்தித்தாளின் உயிர்மூச்சு இணைப்பிதழில் 4-4-2020 அன்று வெளியான கட்டுரையின் முழுப்பதிப்பு ஒலி வடிவில்.
இந்தக் கட்டுரையை ஒலிவடிவில் பேசித் தந்த மேகலா சுப்பையாவுக்கும், காணொளி ஆக்கித் தந்த வெ. இராஜராஜனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
பின்னணி இசை உபயம்
Naoya Sakamata – Dissociation” is under a Creative Commos license (CC BY 3.0). Music promoted by BreakingCopyright: http://bit.ly/2PjvKm7
“Steffen Daum – Goodbye My Dear” is under a Creative Commons license (CC-BY 3.0) Music promoted by BreakingCopyright: https://youtu.be/X7evDQiP3yI
பறவைகளின் குரலோசை ஒலிப்பதிவு
குயில் (ஆண்) – Peter Boesman, XC426536. Accessible at www.xeno-canto.org/426536.
குயில் (பெண்) – Mandar Bhagat, XC203530. Accessible at www.xeno-canto.org/203530
காகம் – Vivek Puliyeri, XC191299. Accessible at www.xeno-canto.org/191299.
சிட்டுக்குருவி – Nelson Conceição, XC533271. Accessible at www.xeno-canto.org/533271
செண்பகம் – Peter Boesman, XC290517. Accessible at www.xeno-canto.org/290517
செம்மூக்கு ஆள்காட்டி – AUDEVARD Aurélien, XC446880. Accessible at www.xeno-canto.org/446880.
இது ஒரு நல்ல வாய்ப்பு
இது ஒரு நல்ல வாய்ப்பு. நமக்காக, நாமே ஏற்படுத்திக் கொண்ட வாய்ப்பு.
உறவுகளைப் புதுப்பிக்க, மேம்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு. இயற்கையுடனான நமக்குள்ள உறவுகளைச் சொல்கிறேன். எவ்வளவு அமைதியாக இருக்கிறது? இதற்கு முன் அனுபவிக்காத அமைதி. எப்போதும் இப்படியே இருந்துவிடாதா என ஏங்க வைக்கும் அமைதி. இத்தனை காலமாக எவ்வளவு இரைச்சல்களை கேட்டுக்கொண்டிருந்தோம்? நாம் வகுத்து வைத்த எல்லைகளில் போரிட்ட இரைச்சல், தரையின் அடியிலும், கடலின் அடியிலும் அணுகுண்டை வெடிக்க வைத்த போது ஏற்பட்ட இரைச்சல், மலைகளை வெடி வைத்துத் தகர்த்ததனால் எழுப்பிய இரைச்சல், கனரக வாகனங்கள் காட்டை அழிக்கும் போது எழுந்த இரைச்சல், மதப் பண்டிகைகள், கேளிக்கைகள் என நாம் ஏற்படுத்திக் கொண்ட இரைச்சல் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

Atomic bombing Nagasaki (Photo: Wikimedia commons) | A 21 kiloton underwater nuclear weapons effects test (Photo: Wikimedia Commons)
இந்த இரைச்சலை எல்லாம் சகித்துக் கொண்டு, இவற்றிலிருந்து கொஞ்ச நாட்களாவது விலகி இருக்க வேண்டுமென, அமைதியான இடங்களுக்குச் சென்றதும், அங்கு சென்றும் இரைச்சலை ஏற்படுத்தியது இப்போது நினைவுக்கு வருகிறதா? தேடிச்சென்ற அமைதி இப்போது தேடாமலேயே வந்துவிட்டது. அதை அனுபவிக்க வேண்டாமா? இத்தனை நாட்களாக நமது காதுகளை நாமே செவிடாக்கிக் கொண்டும், நம்மைச் சுற்றியிருந்த பல உயிரினங்களின் குரல்வளைகளை நெரித்து, அவற்றை பேசவிடாமலும் செய்து கொண்டிருந்தோம். நம் உலகம் வாயை மூடிக்கொண்டிருக்கும் போது நாமிருக்கும் உலகின் குரலை கேட்க எவ்வளவு நன்றாக இருக்கிறது?
இன்று காலை வீட்டினருகில் ஒரு அணில் ஓயாமல் கத்திக் கொண்டே இருந்தது. ஆண் குயில் தூரத்தில் கூவியது. பெண் குயில் வீட்டின் அருகில் இருந்த வேப்ப மரத்தில் இருந்து கெக்… கெக்… கெக்… என கத்தியது. ஆண் குயில் கருப்பு. பெண் குயில் உடலில் பழுப்பும் வெள்ளைப் புள்ளிகளும் இருக்கும். இவற்றின் நிறம் மட்டுமல்ல எழுப்பும் குரலொலியும் வேறு. காகங்கள் கரைந்தன. தெருமுனையில் சிட்டுக்குருவிகள் கத்திக்கொண்டிருந்தன. பொதுவாக வீட்டின் முகப்பில் இருந்தோ, மொட்டை மாடியில் இருந்தோ அவை இருக்கும் திசை நோக்கி பார்த்தால் மட்டுமே தென்படும். இதுவரையில் வீட்டினுள் இருந்தபடி அவற்றின் குரலை கேட்டதில்லை. ஆனால் இன்று கேட்டது. தூரத்தில் செண்பகம் ஒன்று ஊப்..ஊப்..ஊப்..என தொடந்து கத்திக் கொண்டிருந்தது. இந்தப் பறவை இப்பகுதியில் இருப்பதை இன்றுதான் அறிய முடிந்தது. அந்தி சாயும் வேலையில் ஒரு செம்மூக்கு ஆள்காட்டி வீட்டின் மேல் பறந்து கொண்டே கத்துவது கேட்டது. வீட்டுச் சன்னலில் இருந்து பார்த்த போது சப்போட்டா மரத்தில் இருந்து வௌவால்கள் இரண்டு பறந்து சென்றன. இவர்கள் யாவரும் என் தெருக்காரர்கள், அண்டை வீட்டுக்காரர்கள். இந்த அமைதியான தருணம், இவர்களையெல்லாம் அறிந்துகொள்ளும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.
சில உறவுகைளை களைவதற்கும் கூட இது ஒரு நல்ல வாய்ப்பு. நமக்கும் குப்பைகளுக்கும் இடையேயான உறவைச் சொல்கிறேன். ஒவ்வொரு நாள் காலையிலும், தெருவில் அந்த வயதான பெண்மணி நான்கு பெரிய ட்ரம்களைக் கொண்ட வண்டியை தள்ளிக்கொண்டு வருவார். ஒவ்வொரு நாளும் வீட்டு குப்பை டப்பாவும் நிரம்பி வழியும். அதில் பிளாஸ்டிக் குப்பை, காய்கறி கழிவு எல்லாம் சேர்ந்தே இருக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக குப்பை டப்பா நிரம்புவதே இல்லை. நொறுக்குத்தீனி இல்லை, ஆகவே பிளாஸ்டிக் குப்பையும் இல்லை. அப்படியே இருந்தாலும், அதிகம் சாப்பிட்டால் பருமன் அதிகரிக்கும் எனும் கவலையால், வாயைக் கட்டவும் கற்றுக் கொண்டாகிவிட்டது. வெளியில் செல்வது சரியல்ல என்பதால் ரசத்தில் மூன்று தக்காளிக்கு பதிலாக ஒன்று மட்டுமே. அதிகம் ஆசைப்படாமல், மேலும் மேலும் வேண்டும் என எண்ணாமல், இருப்பதை வைத்து சமாளிக்க, சிறியதே அழகு, குறைவே நிறைவு என்பதை இந்த அமைதியான நேரம் கற்றுத் தந்திருக்கிறது.
மற்றவர்களின் துயரங்களை உற்று நோக்கவும், அவர்கள் நிலையில் நம்மை வைத்து நினைத்துப் பார்க்கவும் இது ஒரு நல்ல வாய்ப்பு. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பது எவ்வளவு கொடுமையாக இருக்கிறது. உயிரியல் பூங்காக்களில் சிறிய கூண்டில் புலி ஒன்று ஓயாமல் அங்குமிங்கும் திரும்பித் திரும்பி நடந்து கொண்டே இருந்ததும், கோயிலில் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்ட யானை இடைவிடாமல் தலையையும், தும்பிக்கையையும் மேலும் கீழும் ஆட்டி, கால்களை மாற்றி மாற்றி வைத்துக் கொண்டே இருந்ததும் நினைவுக்கு வந்தது. இது மன அழுத்தத்தால் ஏற்படும் விளைவு. என் வீட்டு சன்னல் வழியாகப் பார்த்தால் பக்கத்து வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் வளர்ப்புக் கிளிகளின் கூண்டு தெரியும். வெகுதொலைவில் இருந்து, அமேசான் காடுகளில் இருந்தோ, ஆஸ்திரேலியாவிலிருந்தோ நம்மால் கடத்திக் கொண்டுவரப்பட்டவை அவை. வளர்ப்பு உயிரிகளின் நேசம் காரணமாக ஏற்பட்ட கள்ள சந்தையின் விளைவு. ஒவ்வொரு முறை நாம் கடைக்குச் சென்று அழகாக இருக்கிறதென்று கிளிகளை வாங்கி வரும் போது, நாமும் அந்தக் கள்ளச் சந்தையை ஊக்குவிக்கிறோம்.
கூண்டுக்குள் மட்டும்தான் அடைத்து வைத்திருக்கிறோமா? நம்மைத் தவிர இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் சுதந்திரமாக உலவ விடாமல், ஒடுக்கியுமல்லவா வைத்திருக்கிறோம். காபி, தேயிலை, யூக்கலிப்டஸ் என ஓரினப்பயிர்களை வளர்க்க, அகலமான சாலைகளை, இரயில் பாதைகளை அமைக்க, உயர் அழுத்த மின் கம்பிகளை கொண்டுசெல்ல, இராட்சத நீர் குழாய்களையும், கால்வாய்களையும் கட்ட, நகரங்களை விரிவாக்கி கட்டடங்களை எழுப்ப, மலைகளை வெட்டி, காடுகளைத் திருத்தி இயற்கையான வாழிடங்களை துண்டு துண்டாக்கி, அங்கு வாழும் யானைகள், சிங்கவால் குரங்குகள், மலையணில்கள், பறவைகள், சின்னஞ்சிறிய தவளைகள் முதலான பல உயிரினங்களின் வழித்தடத்தை மறித்தும், அவற்றின் போக்கை மாற்றியும், அவற்றில் பலவற்றை பலியாக்கிக் கொண்டுமல்லவா இருக்கிறோம். வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் போது நம்மால் அடைத்து வைக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட உயிரினங்களின் நிலையையும் சற்றே உணர இது ஒரு நல்ல வாய்ப்பு.
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, அனுசரித்து நடக்கவும், சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ளவும் இது ஒரு நல்ல வாய்ப்பு. நான் புரிந்து கொள்ளச் சொல்வது நாம் ஆக்கிரமித்த பகுதியில் ஏற்கனவே வசித்து வந்த உயிரினங்களை, அவற்றின் குணாதிசயங்களை. எத்தனை யானைகளை பிடித்து கட்டிவைத்திருப்போம், எத்தனை சிறுத்தைகளை ஓரிடத்தில் பிடித்து வேறு இடங்களில் விட்டு விட்டு வந்திருக்கிறோம்? எத்தனை மயில்களை நஞ்சிட்டுக் கொன்றிருப்போம்? எத்தனை பாம்புகளை அடித்தே சாகடித்திருப்போம்? சினிமாவில் நிகழ்வது போல் எந்த காட்டுயிரியும் நம்மை துரத்தித் துரத்தி வந்து கொல்வதில்லை. “துஷ்டரைக் கண்டால் தூர விலகு” என்பது போல அவை நம்மைக் காணும் போதெல்லாம் விலகியே செல்ல முற்படும் என்பதை நாம் அறியவேண்டும். எதிர்பாராவிதமாக நாம் அவற்றின் அருகில் செல்ல நேர்ந்தால் ஏற்படும் அந்த அசாதாரணமான சந்திப்பில், பயத்தில் அவை தாக்க நேரிட்டு மனிதர்கள் காயமுறவோ, இறக்கவோ செய்யலாம். ஆறறிவு கொண்ட நாம் கவனமாக இருக்க வேண்டாமா? எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டாமா? கண்ணுக்குத் தெரியாத ஒரு நுண்ணுயிரி அது நம் மேல் வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம், அதுபோல காட்டுயிர்கள் வாழும் பகுதியில் நாமும் வாழ நேர்ந்தால் நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நாம் வீட்டுக்குள்ளேயே இருக்கும் போது வீட்டில் இருப்பவர்களிடம் எவ்வளவு கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள். இருந்தாலும் அவர்களை எல்லாம் வீட்டை விட்டு விரட்டிவிடுகிறோமா? அல்லது கண்காணாத இடத்தில் விட்டுவிட்டு வருகிறோமா? எனவே, எல்லா உயிரினங்களுடனும் எச்சரிக்கையுடன், சரியான இடைவெளியில் சேர்ந்து வாழ பழகிக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு.

Coronavirus – Photo: Wikimedia Commons
யாரையும் குற்றம் சொல்லாமல் இருக்கக் கற்றுக்கொள்ள, இது ஒரு நல்ல வாய்ப்பு. வைரஸை தமிழில் தீநுண்மி என்கின்றனர். ஒரு உயிரினம் என்ன செய்ய வேண்டுமோ, அதாவது, நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதைத்தான் அதுவும் செய்கிறது. பல்கிப்பெருகிக்கொண்டுள்ளது, நாம் வளர எத்தனையோ வகையான உயிரினங்களை அழிக்கிறோம்? நமக்கு என்ன பெயர்? மனிதர்கள் என்பதை மாற்றி தீயவர்கள் என வைத்துக் கொள்ளலாமா?
இந்த அமைதியான நேரத்தில் இனிவரும் காலங்களில் இந்த உலகிற்கும், நமக்குமான உறவு எப்படி இருக்க வேண்டும் என எண்ணிப்பார்க்க, என்ன செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள, சிந்திக்க, அதை எப்போது, எப்படிச் செய்ய வேண்டும் எனத் திட்டமிட, இது ஒரு நல்ல வாய்ப்பு.
—
தி இந்து தமிழ் செய்த்தித்தாளின் இணைப்பிதழில் 4-4-2020 அன்று வெளியான கட்டுரையின் முழுப்பதிப்பு https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/547821-good-chance.html