Posts Tagged ‘Kaliveli Lake’
செங்கால் நாரையும், மூங்கணத்தானும், பொன்னிறப் பல்லியும்
– விழுப்புரம் மாவட்ட பயணக் குறிப்புகள்
அண்மையில் விழுப்புரம் மாவட்டத்தில் சில இடங்களில் பணி நிமித்தம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இந்த ஆண்டு (2016) நவம்பர் பின் பாதியில் சுமார் பத்து நாட்களில் விழுப்புரம், செஞ்சி, கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, கல்வராயன் மலைப்பகுதி என சுற்றியதில் பணியைத் தவிரவும் எதிர்பார்த்துக் காத்திருந்த சில ஆசைகள் நிறைவேறியது.
நாராய் நாராய் செங்கால் நாராய்
விழுப்புரத்தில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள வீடுர் நீர்த்தேக்கத்திற்கு ஒரு நாள் மாலை நண்பர்கள் சுவாமி ரப்யா, சேகர், மகேஷ் ஆகியோருடன் சென்றிருந்தேன். பொழுது சாய இன்னும் கொஞ்சம் நேரம் தான் இருந்தது, ஆகவே வண்டியை விட்டு இறங்கியவுடன் சாலையில் இருந்து நீர்தேக்கத்தின் உயரமான கரையின் மேலே அவசர அவசரமாக ஏறினோம். எனது இருநோக்கியை கூட வந்திருந்த ஒரு நண்பரிடம் கொடுத்திருந்தேன். அவர் எனக்கு முன்னால் சற்று தூரத்தில் போய்க்கொண்டிருந்தார். நான் மேலே ஏறியதும் விசாலமான அந்த நீர்த்தேக்கத்தை இடமிருந்து வலமாக நோட்டம் விட்டேன். அணைக்கு சற்று முன்னே தூரத்தில் கொஞ்சமாக தண்ணீர் தேங்கி கிடந்தது. புற்கள் நிறைந்த தரையில் நின்று கொண்டிருந்த ஒரு பெரிய பறவையை பார்த்தமாத்திரத்திலேயே அடையாளம் கண்டுக்கொண்டேன். அது செங்கால் நாரை! வெள்ளை வெளேர் என உடல், அதன் பின் பகுதி அடர்ந்த கருப்பு. தூரத்தில் இருந்து பார்க்கும் போது இனப்பருக்கக் காலத்தில் இருக்கும் நத்தை குத்தி நாரையும் கிட்டத்தட்ட இது போலத்தான் தோன்றும். எனினும் நிற்கும் விதம், அலகின் நிறம், வடிவம் இவற்றை வைத்து இந்த இரு பறவைகளையும் பிரித்தறிய முடியும். நண்பரை அழைத்து இருநோக்கியை வைத்து பார்த்தேன். சிவந்த அலகைக் கொண்ட அழகான செங்கால் நாரை அது! சென்ற அனைவரும் இருநோக்கியை பகிர்ந்து வலசை வந்த அந்த அழகான பறவையை கண்டுகளித்தோம். செங்கால் நாரை இருந்த இடத்திற்கு சற்று தொலைவிலேயே ஏராளமான நத்தைகுத்தி நாரைகள் இருந்தன. ஆனால் அவற்றின் இறக்கைகள் சாம்பல் நிறத்தில் இருந்தது.
செங்கால் நாரைகள் மத்திய ஆசியப் பகுதியிலும், ஐரோப்பாவிலும் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை இந்தியப் பகுதிகளில் செப்டம்பர் மாதம் முதல் மே மாத இறுதி வரை இருப்பதாகத் தெரிகிறது. எனினும் தமிழ் நாட்டில் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை பதிவு செய்யப்பட்டுள்ளது. செங்கால் நாரைகள் அவை இனப்பெருக்கம் செய்யும் இடங்களில் (ஐரோப்பிய நாடுகளில்) மரங்களின் மீதோ, வீட்டில் உள்ள புகைபோக்கிக்கு மேலோ, கட்டிடங்களின் மீதோ பெரிய கூடு கட்டி குஞ்சு பொரிக்கும். ஆண்டுதோறும் ஒரே கூட்டினை திருபத் திரும்ப உபயோகிக்கும். இப்பறவைகள் தங்கள் வீடுகளில் கூடமைப்பது நல்ல சகுனம் எனும் நம்பிக்கை அவ்வூர் மக்களிடம் இருகிறது. ஆகவே அவற்றின் கூடுகளை அவர்கள் தொந்தரவாக நினைப்பதில்லை.
இதற்கு முன் இந்தப் பறவையை குஜராத்தில் பாத்ததுண்டு. தமிழகத்தில் பார்ப்பது இது தான் முதல் முறை. பொழுது சாயும் வரை அங்கிருந்த பல பறவைகளையும் கண்டுகளித்துவிட்டு, கொஞ்சம் முன்பே வந்திருக்கலாம் என நொந்து கொண்டே அங்கிருந்து கிளம்பினோம்.
கல்வராயன் மலைப் பயணம்
கள்ளக்குறிச்சிக்கு சென்ற போது அருகில் இருக்கும் கல்வராயன் மலைப் பகுதிக்கும் சென்று வரலாம் என முடிவு செய்தேன். கூட வர யாரும் நண்பர்கள் இல்லை ஆகவே தனியே ஒரு வண்டியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஒரு நாள் அதிகாலை கிளம்பினேன். மிகவும் வேகமாகப் போகவேண்டாம், பாட்டு போடவேண்டாம், வண்டி ஓட்டிக்கொண்டே கைபேசியில் பேசவேண்டாம், போகும் வழியில் பல இடங்களில் பல முறை பறவைகளைப் பார்க்க வண்டியை நிறுத்த வேண்டி வரும், என்னிடம் ரொக்கமாக பணம் இல்லை எனவே ஆகும் செலவை உங்களது வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைப்பேன் என்றெல்லாம் முன்கூட்டியே ஓட்டுனரிடம் எனது நிபந்தனைகளைச் சொல்லியிருந்தேன்.

கல்வராயன் மலைக்குப் போகும் வழியில் சாலையின் இருபுறமும் உள்ள மரங்கள். Photo: P Jeganathan, via Wikimedia Commons.
கச்சிராப்பாளையத்தில் இருந்து பரிகம் வரை இருந்த சாலை இன்னும் “மேம்படுத்தப்படாமல்” இருபுறமும் மரங்களுடன் மிகவும் அழகாக இருந்தது. இரண்டு வண்டிகள் பக்கம் பக்கமாக பயணிக்க போதுமான இடமிருந்தது. எனினும் இதை இருவழிச் சாலையாக்க பலர் முயன்று கொண்டிருக்கக்கூடும். சாலையோர மரங்கள் சிலரின் கண்ணை உறுத்திக்கொண்டே தான் இருக்கும். வண்டியை நிறுத்தி மரங்கள் சூழ்ந்த அந்தச் சாலையை படமெடுத்துக் கொண்டேன். இன்னும் எத்தனை நாட்களுக்கு இவை இருக்கும் என நினைத்து பெருமூச்சுடன் பயணத்தைத் தொடர்ந்தேன். பரிகம் அருகில் நீரில்லாத கோமுகி ஆற்றையும் அதைத் தொடர்ந்து கோமுகி அணையையும் கண்டேன். சற்று தூரத்தில் மலைப்பாதை ஆரம்பமானது.
போகும் வழியில் பெரியார் நீர்வீழ்ச்சி என ஓரிடத்தில் எழுதியிருந்தது (வனத்துறைக்கு ஒரு வேண்டுகோள் – அது நீர்வீழ்ச்சி அல்ல அருவி என திருத்தி எழுதவும், மேலும் அங்கே ஒரு குப்பைத் தொட்டியை வைக்கவும், சுற்றுலாவினர் போட்டுச் செல்லும் பிளாஸ்டிக் குப்பைகள், மதுக்குப்பிகளை அவ்வப்போது அப்புறப்படுத்தவும்). சரி பறவைகளைப் பார்க்கலாம் என அங்கே இறங்கி அங்கிருந்த ஓடைக்கு அருகே சென்றேன். நீர் வரத்து இல்லாததால் ஆள் அரவம் இல்லை. அங்கும் இங்குமாக சில இடங்களில் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. சாம்பால் வாலாட்டி ஒன்று என்னைக் கண்டதும் வாலை ஆட்டிக்கொண்டே வீச் என கத்திக் கொண்டு பறந்து சென்றது. சின்ன மீன்கொத்தியையும், ஈப்பிடிப்பான்களையும் பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாரா விதமாக துடுப்புவால் கரிச்சான் ஒன்று பறந்து வந்து அருகில் உள்ள மரக்கிளையில் அமர்ந்தது. சுமார் அரை மணி நேரம் அங்கிருந்த பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு கிளம்பினேன்.
முந்தைய நாள் இணையத்தில் கல்வராயன் மலைப்பகுதியில் பார்க்க வேண்டிய இடங்களை தேடிப்பார்த்தேன். மேகம் அருவியின் படங்கள் ஏராளமாக வந்து விழுந்தன. பறவைகளைப் பார்த்து பட்டியலிடும் வலைத்தளமான eBirdல் பார்த்த போது அங்குள்ள பறவைகளைப் பற்றிய தகவல்கள் ஏதும் இல்லை. ஆகவே அங்கே செல்லலாம் என முடிவு செய்து அதன் அருகில் இருக்கும் ஊரான வெள்ளிமலைக்கு வந்தடைந்தோம். அங்கே மேகம் அருவிக்கு எப்படிச் செல்வது என்று கேட்டபோது குறத்திக்குன்றம் எனும் ஊரில் இருந்து போகவேண்டும் என்றார்கள்.
குறத்திக்குன்றத்திற்கு நாங்கள் வந்தடைந்த போது மணி சுமார் ஒன்றரை இருக்கும். அவ்வூரில் மேகம் அருவிக்கு போக வழித்துணைக்கு யாராவது வரமுடியுமா என விசாரித்த போது சதீஷ் எனும் இளைஞர் தாம் அழைத்துச் செல்வதாகச் சொன்னார். நல்ல வெய்யிலில் கிளம்பினோம். நான் மதிய உணவு சாப்பிடவில்லை, இரண்டு வாழைப்பழமும் எனது அலுமினியப் புட்டியில் குடிக்கத் தண்ணீரும் எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தோம்.
சதீஷ் கல்வராயன் மலையின் பூர்விகக் குடியைச் சேர்ந்த இளைஞர். நடக்க ஆரம்பித்ததில் இருந்து என்னை முன்னே அனுப்பி விட்டு சற்று பின்னால் தள்ளியே கைபேசியில் யாருடனோ வளவளவென பேசிக்கொண்டே வந்தார். ஓரிடத்தில் பாதை இரண்டாகப் பிரிந்தது. அவரோ மிகவும் மும்முரமாக பேசிக்கொண்டே இருந்தார். உச்சி வெயில் மண்டையை பிளந்தது, எனக்கு சற்று கோபமும் வந்தது. காட்டிற்குள் பறவைகள் பார்க்கச் செல்லும்போது பேசக்கூடாது என்றும் சற்று பேச்சை நிறுத்தி விட்டு எனக்கு வழியை காண்பிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
வட கிழக்கு பருவ மழை பொய்த்துப் போனதால் காடு வாடிப்போய் இருந்தது. மெதுவாக சதீஷிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன். அவர் ஒன்பதாவது வரை படித்ததாகவும், அவரது பெற்றோருக்கு விவசாயப் பணியில் உதவுவதாகவும் சொன்னார். அங்கிருந்த மரம் ஒன்றின் பெயரைக் கேட்டேன் தெரியாது என்றார். எனக்கு ஆச்சர்யமாகவும், சற்று கவலையாகவும் இருந்தது. காட்டுக்குள் எப்போதெல்லாம் வருவாய் எனக் கேட்டேன், எப்போதாவதுதான் என்றார். இந்தக் காட்டுக்குள் என்ன என்ன பெரிய உயிரினங்கள் இருக்கின்றன எனக் கேட்டேன். காட்டுக்குள்ளே அதிகம் பார்த்ததில்லை ஆனால் ஊரின் அருகில் உள்ள பயிர்களை மேய காட்டு மாடுகள் (காட்டெருது) வருவதுண்டு எனவும், மான்களைக் கண்டதில்லை என்றார். மேகம் அருவி எனும் பெயர் நிச்சயமாக அண்மையில் வைத்த பெயராகத்தான் இருக்கும். சுற்றுலா மேம்பாட்டுக்காக இது போன்ற அழகான, அதிகம் அறியப்படாத இடங்களை கண்டுபிடித்து புதிதாக ஏதாவது பெயரிட்டு, அந்த இடங்களைச் சீரழிப்பதுதான் நமக்கு வாடிக்கையாயிற்றே. பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மேகம் அருவிக்கு அவர்கள் ஊரில் வழங்கும் பெயர் என்னவென்று கேட்டேன். அப்படி ஏதும் இல்லை என்றார், ஒரு வேலை இருந்தால், அவரது பெற்றோர்களிடம் கேட்டால் தெரியும் என்றார். சுமார் முக்கால் மணி நேர நடைக்குப் பின் களைப்பாக இருந்ததால் ஒரு மர நிழலில் அமர்ந்தோம். சதீஷ் தனது கைபேசியை நோண்ட ஆரம்பித்தார்.
மதிய வேளையாதலால் பறவைகள் அதிகம் தென்படவில்லை. அவற்றின் குரலொலியும் கம்மியாகத்தான் இருந்தது. வரும் வழியில் ஓரிரு இடங்களில் சில மரங்கள் வெட்டப் பட்டதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிந்தது. காட்டுப்பாதை இதற்கு முன் ஒத்தையடிப்பாதையாக இருந்ததாகவும், சுற்றுலா வளர்ச்சிக்காக அதை அகலப்படுத்தப் பட்டதாகவும் சதீஷ் சொன்னார். எனினும் இதைச் செய்து சில ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். மழை வந்து பாதையை அரித்துச் சென்றிருந்தது. நாங்கள் அமர்ந்திருத்த போதே சற்று தொலைவில் துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டது. நான் சதீஷை பாத்தேன், அவரும் என்னைப் பார்த்து விட்டு கைபேசியில் முகத்தை நுழைத்துக் கொண்டார்.
வெகுவாக கள்ள வேட்டையாடப்பட்ட வனப்பகுதிகளில் பெரிய உயிரினங்கள் (மான்கள், குரங்குகள், உருவில் பெரிய பறவைகள்) எதுவும் இருக்காது. ஆனால் காட்டைப் பார்த்தால் ஓரளவிற்கு சீரழியாமல் தென்படும். ஆங்கிலத்தில் இதை Empty forest syndrome என்பர். இந்த இடத்தைப் பார்க்கும் போது எனக்கு அந்த காலியான காட்டின் அறிகுறி தான் நினைவுக்கு வந்தது.
களைப்பு சற்று தீர்ந்தவுடன் எழுந்து நடக்க ஆரம்பித்தோம். கீழ் நோக்கிச் சென்ற பாதையின் முன்னே சில காட்டுச் சிலம்பன்கள் கத்திக் கொண்டிருந்தன. இருநோக்கியை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த போது அதே மரத்தில் அணில் போன்ற ஒரு சிறு உயிரினம் ஓடி வந்தது. அது அணில் இல்லை. மூங்கில்கள் சூழ்ந்த அந்த காட்டுப்பகுதியில் நான் கண்ட அந்த அழகான உயிரினம் ஒரு மூங்கணத்தான்! Madras Treeshrew என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த மூங்கணத்தான் அருகில் இருக்கும் சேர்வராயன் மலைப்பகுதிகளில் இருப்பதற்கான குறிப்புகள் உள்ளன. ஆகவே இந்த இடத்திலும் இருப்பது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனினும் எதிர்பாராவிதமாகக் கண்டதில் எனக்கு மகிழ்ச்சி.
இது ஒரு பூச்சியுண்ணி. எனினும் இதை பாலூட்டி வகையில் எந்த வரிசையில் (order) வைப்பது என்பதில் வகைப்பாட்டியலாளர்களுக்கு இன்று வரை பல சந்தேகங்கள் உள்ளன. ஆரம்பத்தில் இது குரங்குகள் வகைக்குக் கீழ் வரிசைப்ப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் சிலர் முயல் (rabbit), பறக்கும் லெமூர் (flying lemur), யானை மூஞ்சூறு (elephant shrew) முதலிய வகை உயிரினங்களின் வரிசையில் கொண்டு வந்தனர். எனினும் அண்மைய காலங்களில் செய்த ஆராய்ச்சிகளின் விளைவால் இந்த வகை பாலுட்டிகளை தனி வரிசையில் வைக்க வேண்டும் என வகைப்பாட்டியலளர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர். இந்தியாவில் மட்டுமே தென்படக்கூடிய உயிரினம் இது. மத்திய இந்தியா, மேற்குத்தொடர்ச்சி மலையில் சில பகுதிகள், கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதி என ஆங்காங்கே தொடர்பற்று பரவிக் காணப்படுகின்றன. மூங்கில் அதிகமாக இருக்க்கக்கூடிய இடங்களில் போதுவாக தரையில் இரைதேடிக் கொண்டிருக்கும்.
அரிய உயிரினங்களையும், நிறைய ஓரிடவாழ்விகளையும், கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்கு கிடைப்பதில்லை. இதற்கு பல காரணங்கள் உண்டு. முக்கயமாக இப்பகுதிகளின் பாதுகாப்பிற்கு ஒதுக்கப்படும் நிதியுதவியும் கம்மி. நிதி கிடைப்பதும் கடினம், ஏனெனில் புலி போன்ற அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் கவர்ச்சிகரமான, பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த உயிரினங்கள் இங்கே தென்படாதது தான். ஒரு காலத்தில் இது போன்ற உயிரினங்கள் இங்கே இருந்திருக்கும் ஆனால் அவை முற்றிலுமாக அற்றுப்போகச் செய்திருப்போம். ஆகவே பல்லுயிர் பாதுகாப்பிற்கான முன்னுரிமை இது போன்ற இடங்களுக்குக் கிடைப்பதில்லை.
கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காட்டுயிர்கள் பற்றிய ஆராய்ச்சிகள் கூட மிகவும் அரிதே. கல்வராயன் மலைப்பகுதியைப் பற்றி இணையத்தில் தேடிய போது சில தாவரங்கள் அதுவும் மூலிகைத் தாவரங்கள் பற்றிய ஆராய்ச்சிகளின் ஆய்வுக் கட்டுரைகளைத் தவிர வேறு ஏதும் கிடைக்கவில்லை. இது போன்ற இடங்களில் தாவரங்கள் மற்றும் காட்டுயிர்கள் பற்றிய ஆய்வுப் பயணங்கள் (explorations) கூட ஆங்கிலேயர் காலத்தில் நடத்தப்பட்டவை. நம் நாட்டில் காட்டுயிர் ஆராய்ச்சிக்கென ஒதுக்கப்படும் நிதியும் குறைவு, இந்தத் துறையை தேர்ந்தேடுப்பவர்களும், இதை தொழிலாகச் செய்பவர்களும் குறைவு. உயிர்ப்பன்மயமும், ஓரிடவழ்விகளும் மிகுந்த, இடங்களை Biodiversity hotspots என்பர். பெரும்பாலான ஆராய்ச்சியாளர்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும் இது போன்ற இடங்களிலும், அங்குள்ள உயிரினங்களைப் பற்றியும்தான் ஆராய்வர். நிதியுதவி சற்று எளிதாகவும், தொடந்தும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம், ஏனெனில் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இது போன்ற பகுதிகளை காப்பாற்ற வேண்டியது மிகவும் அவசியம் என்பது புரிந்து கொள்ளக்கூடியதே. அதேவேளையில் மூங்கணத்தான் போன்ற அதிகம் அறியப்படாத உயிரினங்கள் பற்றி அதுவும் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெரிதாக யாரும் ஆராய்ச்சி மேற்கொள்ளாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமாகிறது.
பாதுகாப்பு நிலையிலும், முன்னுரிமை அளிப்பதிலும் இருக்கும் இது போன்ற ஏற்றத்தாழ்வுகளினால் ஏற்படும் ஒரு முக்கியமான பாதிப்பு கல்வராயன் மலைப்பகுதி போன்ற இடங்களில் எங்கெங்கே என்ன வகையான உயிரினங்கள் உள்ளன, அவற்றின் நிலை என்ன என்பது பற்றிய புரிதல் நமக்குக் கிடைக்கும் முன்பே அவை அந்தப் பகுதிகளில் இருந்து (கள்ள வேட்டை முதலிய காரணங்களால்) முற்றுலுமாக அற்றுப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். இரண்டாவதாக இங்குள்ள நிலங்களின் பாதுகாப்பு நிலையும் (காட்டுயிர் சரணாலயம் போன்று) அவ்வளவு உறுதியானதாக இருப்பதில்லை. ஆகவே இது போன்ற இயற்கையான வாழிடங்கள் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டு (எ.கா விவசாய விரிவாக்கத்திற்காகவும், ஓரினப் பயிர்த் தோட்டங்களுக்காகவும்) சீரழிந்தோ அல்லது ஒட்டு மொத்தமாக பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்டு (எ. கா. அணை கட்டுமானத்திற்கோ, சுரங்கம் தோண்டவோ) முற்றிலுமாக அழிக்கப்பட்டு விடும் அபாயமும் உண்டு.
மேகம் அருவிக்கு சென்றபோது மாலை மூன்று மணி இருக்கும். நீர் வரத்து இல்லாத பாறையின் மேல் அமர்ந்து பறவைகளைப் பாத்துக் கொண்டிருந்தோம். எங்களைத் தவிர வேறு யாரும் இல்லாதது நிம்மதியாக இருந்தது. காட்டின் அமைதியை பறவைகள் குரலுடன் சேர்த்து ரசித்தவாறு சற்று நேரம் இளைப்பாறி விட்டு கிளம்பினோம். பள்ளத்தாக்கில் இருந்ததால் கிழிறங்கி வந்தது அவ்வளவு சிரமமாக இல்லை. ஆனால் திரும்பப் போகும் பொது மேலே ஏறிச் செல்வது அவ்வளவு எளிதாக இல்லை. நல்ல வேலையாக சூரியன் சற்று தாழ்ந்து இருந்ததால் பறவைகளின் குரலொலியும், பறந்து திரிவதும் மதிய வேளையை விட அதிகமாகவே இருந்தது. அவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டே பொழுது சாயும் முன் ஊருக்குள் வந்தடைந்தோம்.
கல்வராயன் மலைப்பகுதியில் சாலை வழியே பயணித்த போது பல இடங்களில் காடுகள் திருத்தப்பட்டு மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டிருந்தது. வீடு திரும்பிய பின் கூகுள் எர்த்தில் (Google Earth) அந்த பகுதியின் தற்போதைய செயற்கைக்கோள் நில வரைபடத்தைப் (satellite imagery) பார்த்த போது கலக்கமாக இருந்தது. மனிதன் கோமுகி ஆற்றின் தாய் மடியை எந்த அளவிற்கு தனது வசிதிக்கு ஏற்ப திருத்தி அமைத்திருக்கிறான் என்பது கண்கூடாகத் தெரிந்தது.
செஞ்சிக் கோட்டை
விழுப்புரத்தில் இருந்து செஞ்சிக்குப் போகும் வழியில் அப்பம்பட்டு எனும் ஊரில் முட்டை மிட்டாய் என்ற பெயர்ப் பலகை எங்கள் கவனத்தை ஈர்த்தது. அவசரமாக போய்க்கொண்டிருந்ததால் நிறுத்தி வாங்க முடியவில்லை. ஆனால் செஞ்சிக் கோட்டைக்குப் போகும் போது இறங்கி மிருதுவான கேக் போன்ற சுவையான முட்டை மிட்டாயை சுவைத்து விட்டுத் தான் சென்றேன். செஞ்சி பேருந்து நிலையத்திற்கு அருகிலும் இவர்களது கிளை இருக்கிறது. இனிப்புப் பிரியர்கள் இங்கு சென்றால் சையத் இனிப்பகத்தில் மட்டுமே கிடைக்கும் முட்டை மிட்டாயை தவற விட வேண்டாம்.
செஞ்சிக் கோட்டைக்குப் போக விரும்பியதன் முக்கிய காரணம் இந்தியாவில் மட்டுமே காணப்படும் இரண்டு உயிரினங்கள் அப்பகுதில் தென்படுகின்றன, அவற்றைப் பார்க்கத்தான். திருவண்ணாமலையில் இருந்து வந்திருந்த நண்பர்கள் கலைமணி, சல்மான் மற்றும் சிவகுமார் அனைவரும் காலையிலேயே செஞ்சிக் கோட்டையின் வாயிலை அடைந்தோம். முகப்பிலேயே பெரிய ஆல், அரச மரங்கள் வீற்றிருந்தன. மலையடிவாரத்தில் கோட்டைக்குச் செல்லும் படிகளின் முன்னே குரங்குகள் ஜாக்கிரதை என்ற பலகை இருந்தது. அதன் அருகிலேயே பிளாஸ்டிக் குப்பைகளும், பிளாஸ்டிக் தண்ணீர் குப்பிகளும், பிளாஸ்டிக் தட்டுகளும் சிதறிக்கிடந்தது. குப்பைபோடும் மனிதர்கள் ஜாக்கிரதை என எழுதி வைக்கவேண்டும் எனத் தோன்றியது. சில நாட்டுக் குரங்குகள் மனிதர்கள் வீசி எறிந்த மிச்ச மீதி உணவுக் குப்பைகளையும், சில அங்கிருந்த அரச மரத்தின் பழங்களையும் சுவைத்துக் கொண்டிருந்தன.
கூட வந்திருந்த நண்பர் கலைமணி ஒரு காட்டுயிர் ஆராய்ச்சியாளர். இந்தியாவில் மட்டுமே தென்படும் பொன்னிறப் பல்லியைப் (Indian Golden Gecko) பற்றி ஆராய்ச்சி செய்தவர். தற்போது தனது முனைவர் பட்டத்திற்காக மஞ்சள் தொண்டை சின்னானைப் (Yellow-throated Bulbul) பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறார். இதுவும் இந்தியாவில் மட்டுமே தென்படும் பறவை. இந்த இரண்டையுமே செஞ்சிக் கோட்டைப் பகுதிகளில் காணலாம். சிலர் யானை, புலி முதலிய பெரிய உயிரினங்களின் பால் மட்டுமே நாட்டம் கொண்டு ஆராய்ச்சி மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்காக பாடுபடுவர். ஆனால் இந்த செஞ்சிக் கோட்டை வாலிபன், முக்கியத்துவம் வாய்ந்த ஆனால் அதிகம் அறியப்படாத உயிரினங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று.
படிகளில் மேலே ஏறிக்கொண்டிருந்த போதே குரலொலி வரும் திசையைக் கேட்டு கையைக் காட்டினார். இரண்டு மஞ்சள் தொண்டை சின்னார்கள் அங்கிருந்து பறந்து சென்றன. மிகவும் அழகான பறவை. பாறைகள் நிறைந்த பகுதிகளில் அதுவும் அத்திமரங்கள் (Ficus) இருந்தால் நிச்சயமாக இப்பறவைகளை அங்கே காணலாம். பாறைபாங்கான இடங்களில் இருப்பதால் இதை பாறை சின்னான் என்றும் சொல்லலாம். மலையின் மேல், பாதி வழியில் கமலக்கன்னியம்மன் கோயில் இருந்தது. அருகில் சிறிய குளமும் அதைச் சூழ்ந்து வெப்பாலை மரங்களும் நிறைந்திருந்த அழகான இடம். கோயிலின் பின் புறம் இருந்த பாறையில் மிகப்பழமையான அழகான ஓவியம் இருந்தது. சுற்றுலாத்தலங்களின் நியதிக்கேற்ப ஓவியத்தின் மேல் பலருடைய பெயர்களும் கிறுக்கப்பட்டிருந்தது.
அந்த இடத்தைத் தாண்டி மேலே ஏறிக்கொண்டிருந்த போது கலைமணி ஒரு பாறையின் இடுக்கில் குனிந்து பார்த்து எங்களை அழைத்தார். சத்தமிடாமல் மெதுவாகச் சென்று பார்த்தோம். ஒரு பொன்னிறப் பல்லி இருந்தது. கைபேசியின் டார்ச்சை அதன் மேலே அடித்துக் காண்பித்தார். அப்படி ஒன்றும் பொன் நிறத்தில் இல்லை. இனப்பருக்கக் காலத்தில் தான் அதுவும் ஆண் பல்லிக்குத்தான் உடலில் இலேசான பொன்னிறம் வரும் என்றார். அந்த இடத்திலேயே இன்னொரு மூலையில் பறையில் ஒட்டிக்கொண்டிருந்த இந்தப் பல்லியின் முட்டைகளைக் காண முடிந்தது. சற்றுத் தள்ளி திரளாக பொறிந்து போன முட்டைகளின் மீதங்கள் ஒட்டிக்கொண்டிருந்தது. இந்தப் பல்லியின் அறிவியல் பெயர் Calodactylodes aureus. இதில் Calodactylodes எனில் இலத்தீனில் அழகான விரல்கள் என்று பொருள். பெயருக்குத் தகுந்தாற்போல் இந்த பல்லியின் விரல்கள் அழகாக பூவின் வடிவத்தை ஒத்து இருக்கும்.
இந்தப் பல்லி வகையின் விபரம் முதன்முதலில் 1870ல் ரிச்சர்ட் ஹென்றி பெட்டோம் (Richard Henry Beddome) எனும் புகழ்பெற்ற ஆங்கிலேய இயற்கையியலாளரால் அந்நாளைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து அறியப்பட்டது. எனினும் சுமார் 100 ஆண்டுகள் கழித்து தான் திருப்பதி மலைப்பகுதியில் இப்பல்லி மீண்டும் கண்டறியப்பட்டது. அதன் பின் அண்மை காலங்களில் கலைமணியின் ஆராய்ச்சியின் விளைவால் தமிழ்நாட்டில் மேலும் சில இடங்களில் இவை இருப்பது (செஞ்சி உட்பட) தெரிய வந்துள்ளது. எனினும் இந்த பல்லி இது வரை கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து மட்டுமே அறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செஞ்சிக்கோட்டையில் நானும் நண்பர்களும். (இடமிருந்து வலமாக) திருவண்ணாமலையில் இருந்து வந்த ஓவியர் சிவக்குமார், பள்ளி ஆசிரியர் சல்மான், காட்டுயிர் ஆராய்ச்சியாளர் கலைமணி (பச்சை சட்டைக்காரர்).
செஞ்சிக் கோட்டை அமைந்துள்ள மலையின் உச்சியை அடைந்த போது மணி இரண்டு. உயரமான மலையின் மேலிருந்து அதைச் சுற்றியிருக்கும் பாறைப்பாங்கான மலைகளையும், குன்றுகளையும், பரந்துபட்ட தரையோடு அமைந்த முட்புதர் காடுகளையும், வயல்வெளிகளையும், செஞ்சி நகரத்தையும், ராணி கோட்டையையும் பார்க்க முடிந்தது. உச்சியில் இருந்த கோட்டையின் ஒரு பகுதிக்குச் செல்லும் படிகள் இடிந்து போயிருந்தது. இருப்பினும் சில பொறுப்பான (?), ஆர்வம்மிக்க சுற்றுலாப்பயணிகள் கற்களின் இடுக்கில் கால்களை வைத்து மேலே ஏறி சிகரத்தை அடைந்த ஆனந்தத்தில் கத்திக் கொண்டிருந்தார்கள். கீழே சீட்டு வழங்கும் இடத்தில் இருந்த இரு காவலாளிகள் கையில் பெரிய தடியை வைத்திருந்தனர். குரங்குகளை விரட்டுவதற்காக. அவர்கள் இருந்திருக்க வேண்டிய இடம் வாயில் அல்ல, விரட்ட வேண்டியது குரங்குகளை அல்ல எனத் தோன்றியது.
விழுப்புரம் மாவட்டத்தில் இந்த இடங்களைத் தவிர மழவந்தாங்கலில் இருந்து அனந்தபுரம் செல்லும் சாலையில் பயணித்து பறவைகளை பார்க்கச் சென்றோம். அருமையான முட்புதர் காட்டின் வழியே செல்லும் ஒரு வழிப்பாதையில் நடந்து சென்ற போது அரசவால் ஈப்பிடிப்பானைக் கண்டதும், ஆறு மணிக்குருவி சரியாக ஆறு மணிக்கு குரலெழுப்பியதை கேட்டதும் மறக்க முடியாத அனுபவம்.
கடைசியாக கழிவெளி
பத்து நாள் பயணத்தின் முடிவில் நண்பர் சுரேந்தர் பூபாலன் கழிவெளி ஏரிக்கு அழைத்துச் சென்றார். எனினும் மாலை வேளையில் சென்றதால் அதிக நேரம் அங்கே செலவழிக்க முடியவில்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன் இதே இடத்திற்கு சென்றிருந்தேன். அப்போது சுமார் 70 வலசை வரும் சாம்பல் தலை ஆள்காட்டிகளை ஒரே இடத்தில் பார்த்தது நினைவுக்கு வந்தது. இந்த முறை பயணித்த சில தூரத்திலேயே, வெளிச்சம் குறைவாக இருந்த போதும் அந்த நிலவமைப்பில் ஏற்பட்டிருந்த மாற்றத்தைக் காணமுடிந்தது. ஏரியின் ஓரத்தில் இறால் பண்ணை குட்டைகள் சில இருந்தன. அவற்றில் ஒன்றின் கரை இடிக்கப்பட்டிருந்தது. ஏரியின் நிலத்தை ஆக்கிரமித்து கட்டியதனால் இடிக்கப்பட்டதாகச் சொன்னார் நண்பர். இதுபோல் உடைக்கப்பட வேண்டியவை இன்னும் சில உள்ளன என்றார். முழுவதுமாக இருட்டிய பின் இரவாடிப் பறவைகளின் குரல் ஏதும் கேட்கும் என சற்று நேரம் அங்கே நின்றிருந்தோம். அப்படி எதுவும் கேட்காததால் அடுத்தமுறை பகல் வேளையிலேயே வரவேண்டும் என பேசிக்கொண்டே அங்கிருந்து கிளம்பினோம்.
கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியையும், சமவெளிகளையும், பல நீர்நிலைகளையும், கடல் புறத்தையும் கொண்ட விழுப்புரம் மாவட்டம் புவியியல் ரீதியாக தனித்துவம் வாய்ந்தது. எனினும் அங்கே உள்ள ஒசூடு ஏரியைத் தவிர பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள் வேறு ஏதும் இல்லை என்பது வியப்பாக இருக்கிறது. அதுவும் ஒசூடு ஏரி கூட சென்ற ஆண்டுதான் (2015) பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏரி புதுச்சேரியிலும் தமிழகத்திலும் பரவியுள்ளது. புதுச்சேரி அரசு 2008லேயே அவர்களது பகுதி ஏரியை பறவைகள் சரணாலயமாக அறிவித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இயற்கை வளம் மிகுந்த இந்த மாவட்டத்தில் இன்னும் பல இயற்கையான வாழிடங்களைப் பார்க்க ஆசைதான். விழிமா நகரப் பகுதிகளில் பயணிக்க மீண்டும் வாய்ப்பு கிட்டும் என்றே நம்புகிறேன்.
தி இந்து தமிழ் சித்திரை மலரில் (April 2017) ” செங்கால் நாரை தரிசனமும் ஆறு மணிக் குருவியின் அழைப்பும்” எனும் தலைப்பில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்.