Posts Tagged ‘Monoculture Plantations’
காப்பி நல்லதா? டீ நல்லதா?
தலைப்பை பார்த்துவிட்டு நமது உடல் நலத்திற்கு நல்லது காப்பியா? டீயா? என்பதைப்பற்றிய கட்டுரையென நினைக்க வேண்டாம். காப்பியும், தேயிலையும் பல அரிய காட்டுயிர்களின் உறைவிடமான மேற்குத்தொடர்ச்சிமலையிலுள்ள காடுகளை அழித்தே பயிரிடப்பட்டுள்ளன. இக்காட்டுயிர்களுக்கும், சுற்றுப்புற சூழலுக்கும் நல்லது எது (அதாவது கொஞ்சமாகக் கெடுதல் செய்வது எது?) காப்பியா? தேயிலையா? இதைப்பற்றித்தான் இக்கட்டுரை. அதற்குமுன், மனிதகுலத்தின் அன்றாட வாழ்விலிருந்து பிரிக்கமுடியாத அங்கமான காப்பி, டீயின் வரலாற்றை பார்ப்போம்.
காப்பிச்செடியின் பூர்வீகம் ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள எத்தியோப்பியா. காப்பிக்கொட்டைச் சாற்றிலிருந்து காப்பி பானமாக தயாரிக்கலாம் என்பது உலகிற்கு தெரியவந்த கதையே நல்ல காப்பியைப் போலவே சுவையானது. காப்பி கண்டுபிடிக்கப்பட்டதற்கான பலவிதமான புராணக்கதைகள் இருந்தாலும் இரண்டு கதைகளே மிகவும் பிரசித்திபெற்றது.
எத்தியோப்பியாவில் ஹத்ஜி ஓமர் என்பவன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவனது எதிரிகள் அவனை ஊரைவிட்டு வெளியேறினார்கள். பல இடங்களுக்கு சுற்றித்திரிந்த அவன் பசியால் வாடியபோது காட்டிலுள்ள ஒரு புதரிலிருந்த சிகப்புப் பழங்களை பறித்துச் சாப்பிட்டான். கொஞ்சம் கசப்பாக இருந்ததனால் அப்பழங்களைச் வறுத்துச் சாப்பிடலாம் என எண்ணினான். வறுத்தபின் மிகக்கடினமாகிப் போனதால் அவற்றை நீரில் ஊறவைத்தான். பழத்தின் கடினத்தன்மை மாறாவிட்டாலும் அது ஊறவைக்கப்பட்ட நீர் கரிய நிறமாக மாறியிருந்தது. அச்சாற்றைக் குடித்தபின் அவனது களைப்பு நீங்கி அளவில்லாத புத்துணர்ச்சி அடைந்தான். ஊர் திரும்பிய அவன் காப்பிச்செடியின் இந்த விசித்திரமான குணத்தையும் தனது அனுபவத்தையும் ஊர் மக்களிடையே பரப்பலானான். அதன் பின்னரே காப்பியின் புகழ் ஊரெங்கும் பரவியது.
இரண்டாவது கதை இதைவிட வேடிக்கையானது. எத்தியேப்பியாவில் கால்தி எனும் ஆடுமேய்க்கும் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் அருகிலிருந்த காட்டுப்பகுதிக்கு ஆடுமேய்க்கச் சென்றபோது அவனது மந்தையிலுள்ள ஆடுகள் மற்றவைகளைப் போலல்லாமல் எப்போதும் குதூகலத்துடன் துள்ளிக்குதித்து விளையாடுவதைக் கண்டான். ஒரு வகையான பழத்தைத்தின்ற பின்னேயே இவை இவ்வாறு அதனை உணர்ந்த அவன் தாமும் அப்பழங்களை சாப்பிட ஆரம்பித்தான். இதனால் ஆடுகளுடன் சேர்ந்து அவனும் கவலைகளையெல்லாம் மறந்து ஆட ஆரம்பித்தான். அப்போது அவ்வழியே சென்ற மதகுரு ஒருவர் இக்காட்சியைக் கண்டு வியந்து இம்மகிழ்ச்சிக்கான காரணத்தை கேட்டபோது கால்தி ஒருவகையான பழத்தை சாப்பிட்டபின் அவனுக்கு மிகுந்த சக்தியும், புத்துணர்ச்சியும் கிடைத்ததாகக் கூறினான். அம்மதகுருவிற்கு ஒரு சிக்கலிருந்தது. அவர் தியானம் மேற்கொள்ளும் போது தூங்கிவிருவதே அது. இப்பழத்தைப்பற்றி அறிந்ததும் அவரும் அதை சாப்பிட ஆரம்பித்தார். அது நல்ல பலனை அளித்தது. இப்பழத்தைன் விசித்திரமான குணத்தைப் பற்றி மற்ற மதகுருமார்களுக்கும் எடுத்துச் சொன்னார். அதில் ஒருவர் அப்பழங்களை காய வைத்து, நீரில் கொதிக்க வைத்து அச்சாற்றினை பருக ஆரம்பித்தார். இவ்வாறே காப்பி உலகிற்கு அறிமுகமானதாக புராணக்கதைகள் சொல்கின்றன.
காப்பியைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் 1000ம் ஆண்டிலிருந்தே இருக்கிறது. எத்தியோப்பியாவிலிருந்து எகிப்து மற்றும் ஏமன் போன்ற அரபு நாடுகளுக்கு 12ம் நூற்றாண்டு வாக்கில் காப்பி பரவ ஆரம்பித்தது. காப்பிக்கொட்டையை வறுத்து அரைத்து பொடியாக்கி அதில் வெந்நீரை ஊற்றி சாறெடுத்து குடிக்கும் முறை அரேபியர்களிடமிருந்தே வந்தது. அரேபியர்கள் இப்பானத்தை ‘க்வாவா’ என்றழைத்தனர். இதுவே மருவி தற்போதுள்ள காப்பி ஆனது.
இந்தியாவிற்குள் காப்பி வந்தது 17ம் நூற்றாண்டில். இந்தியாவிலிருந்து மெக்காவிற்கு புனிதப்பயணம் மேற்கொண்ட பாபா புதான் கர்நாடகாவிலுள்ள அவரது ஊரான சிக்மங்களூருக்கு திரும்பி வந்தபோது கைப்பிடி அளவு காப்பி விதைகளையும் எடுத்து வந்தார். அவற்றை அவரது தோட்டத்தில் விதைத்துவைத்தார். இவ்வாறே காப்பி இந்தியாவில் வேரூன்றியது.
அதற்கு முன் நாம் காலையில் எதைக்குடித்துக்கொண்டிருந்திருப்போம்? தமிழகத்தில் நீராகாரம் என ஆ. இரா. வேங்கடாசலபதியின் ”அந்தக் காலத்தில் காப்பி இல்லை” (காலச்சுவடு பதிப்பகம்) வாயிலாகத் தெரிகிறது. தமிழகத்தில் காப்பி எப்போது, எப்படி வேறூன்றியது போன்ற சுவாரசியமான தகவல்களை இவரது ஆய்வுக்கட்டுரை விளக்குகிறது.
சரி இப்போது கொஞ்சம் டீயைப் பருகுவோம். தேயிலையின் பூர்வீகம் சீனா. இங்கு தேயிலையை முதன்முதலில் மருத்துவத்திற்காக கிமு 2737லிருந்தே பயன்படுத்தியதாக புராணங்கள் கூறுவதாகத் தெரிகிறது. சுமார் 200 வகையான தேயிலைச் மரங்கள் இருப்பதால் தேயிலையின் தாய்நாடு எனக்கருதப்படுவது சீனாவிலுள்ள யுனான் மாகாணமே. ஆம் தேயிலை உயரமாக வளரக்கூடிய மரம் அதை அவ்வப்போது இளந்தளிர்களுக்காக வெட்டி குட்டையான புதராகவே வைக்கப்படுகிறது. கிபி 200ம் ஆண்டிலிருந்தே தேயிலையை பயிரிட்டு மற்ற நாடுகளுக்கு வணிகம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் சீனர்கள். இங்கிருந்து கிபி 800ல் ஜப்பானுக்கும் பிறகு அங்கிருந்து ஐரோப்பாவிற்கு டச்சு வணிகம் மூலமாக கிபி 1610ல் தேயிலை சென்றடைந்தது. அதன்பிறகுதான் தேயிலை வெகுவாக செழிக்க ஆரம்பித்தது. ஆங்கிலேயர்களை தேநீர் வெகுவாகக் கவர்ந்ததால் கிழக்கிந்தியக் கம்பெனி சீனாவிலிருந்து தேயிலையை பெருமளவில் இறக்குமதி செய்ய ஆரம்பித்த்து. 18ம் நூற்றாண்டில் இவ்விரு தேசங்களுக்குமிடையேயான உறவும், விலையும் பச்சைச் தேயிலையைப்போல கசக்க ஆரம்பித்தது. இதனால் ஆங்கிலேயர்கள் தேயிலையை பயிரிடுவதற்கு தகுந்த சூழலுள்ள இடங்களைத் தேட ஆரம்பித்தனர்.
1823ல் ஒரு ஸ்காட்லாந்து பயணி அஸ்ஸாம் வனங்களில் ஒரு வகையான தேயிலை மரம் இயற்கையாக வளர்வதை கண்டார். தேயிலை வளர இயற்கையான சூழல் இருப்பதை அறிந்த ஆங்கிலேயர்கள் சீனாவிலிருந்து தேயிலையின் விதைகளை இறக்குமதி செய்து அஸ்ஸாமிலுள்ள காடுகளை அழித்து தேயிலையை பயிரிட்டனர். முதன்முதலில் 1839ல் அஸ்ஸாம் டீ கப்பல் வழியாக லண்டனை அடைந்தது. இவ்வேளையில் தென்னகத்தில் காப்பியே அதிகமாகப்பயிரிடப்பட்டு வந்தது. ஒரு வகையான நோய் தாக்கியதன் விளைவால் காப்பிச்செடிகள் அழிந்து வந்ததனாலும், தேயிலை உலகச்சந்தையில் ஏறுமுகமாக இருந்ததாலும் மெல்ல மெல்ல காப்பித்தோட்டங்கள் தேயிலைத் தோட்டங்களாக மாற்றப்பட்டன. முதலாம் உலகப்போரின் போதுதான் இந்தியாவிலிருந்து தயாரிக்கப்பட்ட தேயிலையின் செல்வாக்கு சீனாவின் தேயிலையைக் காட்டிலும் வெகுவாக உயர ஆரம்பித்தது. இன்று இந்தியா தேயிலை உற்பத்தியிலும், உபயோகத்திலும் உலகலவில் இரண்டாமிடத்தில் உள்ளது.
முன்பு சொன்னது போல் இந்த இரு ஓரினத்தோட்டப்பயிர்களும் விளைவிக்கப்படுவது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளின் உயரமான பகுதிகளிலேயே. அதுவும் இத்தோட்டங்கள் பரந்து விரிந்திருப்பது பல பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை ஒட்டியே. இதனால் இத்தோட்டங்களிலும் பலவிதமான காட்டுயிர்களைக் காணமுடியும். பலவிதமான வனச்செல்வங்கள் வாழிட இழப்பாலும் திருட்டு வேட்டையாலும் நாளுக்கு நாள் அருகிவருகின்றன. இச்சூழலில் பல்லுயிர்ப்பாதுகாப்பு என்பது அரசுக்குச்சொந்தமான சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள் போன்ற பாதுகாப்பட்ட பகுதிகளில் மட்டுமல்லாமல் தனியாருக்குச்சொந்தமான காப்பி தேயிலைத் தோட்டங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். இத்தோட்டங்களில் தென்படும் அரிய பல தாவரங்களையும் விலங்குகளையும் பாதுகாப்பது அவசியம். இதற்கு இத்தோட்ட நிர்வாகம் பயிர் உற்பத்தியை பெருக்குவது மட்டுமின்றி இப்பகுதியிலுள்ள உயிரினங்கள் வாழ ஏதுவான சூழலையும் ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளையாவண்ணம் தகுந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
சரி இப்போது நம் கேள்விக்கு வருவேம். பல்லுயிர்பாதுகாப்பிற்கு நல்லது எது, காப்பியா? தேயிலையா? சூழியலாளர்களைக் கேட்டால் இவ்விரண்டிற்கிடையே காப்பித்தோட்டங்களே சற்று மேலோங்கியிருப்பதாகச் சொல்வார்கள். ஏனெனில் காப்பிச் செடி வளர மர நிழல் அவசியமாதலால் இங்கு தேயிலைத் தோட்டங்களைக்காட்டிலும் சற்றே அதிகமாக மரங்களைக் காணலாம். பல சினிமாக்களில் காண்பிக்கப்படும் பச்சைப்பசேலன பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்களில் பல்லுயிரியம் குறைவு. இவற்றை சூழியலாளர்கள் பச்சைப்பாலைவனம் என்பர். எனினும் தகுந்த சில நடவடிக்கைகளை மேற்கொண்டால் இத்தோட்டங்களும் பல காட்டுயிர்கள் வாழ்வதற்கேற்ற சூழலை உருவாக்கவும், பல்லுயிர் பாதுகாப்பிற்கு ஏற்ற இடமாக மாற்றவும் முடியும்.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியிலுள்ள பரந்து விரிந்த காப்பி, தேயிலைத்தோட்டங்களின் மத்தியில், அங்குமிங்கும் சிதறி தீவுகளைப்போல் எஞ்சியுள்ள சிறிய பரப்பளவில் அமைந்திருக்கும் பல மழைக்காட்டுத் துண்டுச்சோலைகளையும் பாதுகாக்க வேண்டும். இத்தோட்டங்களில் ஓடும் ஓடைகளில் இராசயன உரங்கள், பூச்சிகொல்லி மருந்துகள் கலந்துவிடாவண்ணம் அதன் ஓரங்களில் இம்மண்ணுக்குச் சொந்தமான தாவரங்களை வளர்த்திடல் வேண்டும். இத்தோட்டங்களில் நிழலுக்கென நடப்படும் சில்வர் ஓக், அல்பீசியா, மீசோப்சிஸ் போன்ற வெளிநாட்டு மரங்களை வளர்க்காமல் அந்தந்தப்பகுதியிலேயே இயற்கையாக வளரும் மரங்களை நடவேண்டும். இதனால் அதிலுள்ள இப்பகுதியில் தென்படும் சிங்கவால் குரங்கு, கருமந்தி, போன்ற அரிய விலங்குகள், பெரிய இருவாசி போன்ற பறவைகள், இன்னும் பலவகையான அரிய தாவரங்களையும் பாதுகாக்கலாம். இது யானைத்திரள்களின், காட்டெருதுகளின் இடையூரில்லாத இடம்பெயர்வுக்கும், மனித விலங்கு எதிர்கொள்ளலையும் கட்டுப்படுத்த உதவும். இதோடு, ஒருங்கினைந்த பயிர் மேலான்மை, இரசாயன உரங்களின் உபயோகத்தைக் குறைத்தல் அல்லது முற்றிலுமாக தவிர்த்தல், தோட்டங்களிலும் அது சார்ந்த தொழிற்சாலைகள், வீட்டுக்குடியிருப்புப் பகுதிகளில் சரியான கழிவுக்கட்டுப்பாடும், திருட்டு வேட்டைகள் ஏற்படாவண்ணம் கண்கானித்தலும் அவசியம்.
நுகர்வோராகிய நாம் என்ன செய்யலாம்? மேற்சொன்ன சில வளங்குன்றா விவசாயத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி, சுற்றுச்சூழலுக்கு தீங்கிழைக்காவண்ணம் பயிர்செய்து தயாரிக்கப்பட்ட, தகுந்த தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனங்கள் வெளியிடும் பொருட்களை வாங்கிப் பருகி அவற்றின் விற்பனையை ஊக்குவுக்கலாம். சூழியல் ஆர்வலராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் நல்ல விதத்தில் தயாரிக்கப்பட்ட காப்பியையோ, டீயையோ வாங்கிப் பருகுவது, உங்கள் உடம்பிற்கு நல்லதோ இல்லையோ நிச்சயமாக நாம் வாழும், நம் சந்ததியினர் வாழப்போகும் இப்பூமித்தாய்க்கு நல்லதே!
மேலும் விவரங்களுக்கு இந்த இணைய தளத்தைக் காணவும் – http://ecoagriculture.in/home/
******
காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 9. புதிய தலைமுறை 6 செப்டம்பர் 2012