UYIRI

Nature writing in Tamil

Posts Tagged ‘Nest

கொண்டலாத்தியின் கூட்டைக் கண்டேன்

with 2 comments

இன்று பைக்கில் பயணித்துக் கொண்டிருந்தபோது சாலையோரத்திலிருந்து ஒரு கொண்டலாத்தி பறந்து செல்வதைப் பார்த்தேன். அது அமர்ந்திருந்த இடத்தை நெருங்கியவுடன் அந்த இடத்தை நோட்டமிட்டபோது சில்வர் ஓக் மரத்துளையில் இருந்து தலை நீட்டி எட்டிப்பார்த்தது ஒரு கொண்டலாத்தி. உடனே பைக்கை நிறுத்தி அதை போட்டோ எடுத்துக்கொண்டேன்.

கொண்டலாத்தியின் கூடு துர்நாற்றமடிக்கும், அதில் குப்பை கூளங்களை சேமித்து வைத்திருக்கும் என படித்தது நினைவுக்கு வந்தது. அருகில் சென்று பார்க்கவில்லை. கூடு வைக்கும் பறவைகளை தொந்தரவு செய்யக்கூடாதல்லவா? எனினும் எடுத்த புகைப்படத்தை கொஞ்சம் பெரிதாக்கிப் பார்த்த போது கூட்டிலிருந்து மெல்லிய கயிறு போல ஏதோ தொங்கிக்கொண்டிருந்தது. இது இப்பறவை கொண்டு வந்து சேர்த்ததா எனத் தெரியவில்லை. கொண்டலாத்தியை இங்கே இதற்கு முன் பார்த்திருந்தாலும் இவற்றின் கூட்டினைக் காண்பது இதுவே முதல் முறை.

கூட்டுக்குள்  கொண்டலாத்தி

கூட்டுக்குள் கொண்டலாத்தி

காக்கை, சிட்டுக்குருவி போல் அடிக்கடி தென்படும் பறவையல்ல கொண்டலாத்தி. எப்போதாவது தரையில் நடந்து தனது நீண்ட அலகால் கொத்திக் கொத்தி பூச்சிகளையும், புழுக்களையும் எடுத்து தின்பதைக் காணலாம். பெரும்பாலும் தனியாகவே தென்படும். வெளிறிய பழுப்புப் தலையும் வயிறும், இறக்கையும் வாலும் கருப்பு வெள்ளை பட்டைகளைக் கொண்டும் இருக்கும். இவற்றின் நீண்ட அலகைப் பார்த்து சிலர் இவற்றை மரங்கொத்தி என்று தவறாகக் நினைத்துக்கொள்வார்கள்.

கொண்டலாத்தி

கொண்டலாத்தி Eurasian Hoopoe (Upupa epops) Photo: Ramki Sreenivasan

கொண்டலாத்தியின் அழகு அதன் விசிறி போன்ற கொண்டைதான். தலையின் மேலுள்ள சிறகுகளை அவ்வப்போது சிலுப்பி, விறைப்பாக நிற்பதால் அவை கொண்டைபோன்ற தோற்றத்தை அளிக்கும். எனினும் எல்லா நேரத்திலும் அவை விரிந்து காணப்படுவதில்லை. அப்படி கொண்டையோடு காணும்போதெல்லாம் செவ்விந்தியனின் தலையலங்காரம்தான் எனக்கு நினைவுக்கு வரும். அதன் கொண்டை ஒரு அழகென்றால் அது பறந்து செல்லும் விதமோ அழகோ அழகு. அலைபோல மேலெழும்பி கீழே தாழ்ந்து பறந்து செல்லும். அப்போது இறக்கைகளை அடித்துக் கொண்டும் பிறகு உடலோடு சேர்த்து வைத்தும் பறந்து செல்லும். அப்போது அதன் இறக்கைகளிலும் வால் சிறகுகளிலும் உள்ள கருப்பு வெள்ளை வரிகள் அழகாகத் தோற்றமளிக்கும் (பறந்து செல்லும் காட்சியை இங்கே காண்க).

கொண்டலாத்தியின் குரல் எனக்குப் பரிச்சயமானதுதான். இவை உரக்கக் குரலெழுப்புவதில்லை. எனினும் தூரத்திலிருந்து குரலெழுப்பினாலும் அடையாளம் காணுமளவிற்கு  தெளிவாகக் கேட்கும். இதன் குரலை வைத்தே இதற்குப் பெயரிட்டார்கள். இதன் ஆங்கிலப்பெயர் Hoopoe (Upupa epops). இப்பறவை குரலெழுப்புவது ஊப்..ஊப்..ஊப்.. என்றிருக்கும். இதனாலேயே Hoopoe எனப் பெயர் பெற்றது. குக்..குக்..குக்.. எனக் குரலெழுப்புவதால் குக்குருவான் (Barbet)எனப் பெயர் பெற்றதைப் போல. இவ்வாறு உச்சரிப்பதை வைத்தே பெயரிடுவதை ஆங்கிலத்தில் Onomatopoetic என்பர்.

கொண்டலாத்தி ஆதி காலத்திலிருந்தே மனிதனை தன் அழகால் கவர்ந்திழுத்திருக்கிறது. உலகப் புராணங்கள் பலவற்றிலும், திருக்குர்ஆனிலும் கூட இப்பறவையினைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றது. கொண்டலாத்தி இஸ்ரேல் நாட்டின் தேசியப் பறவை. நம் பஞ்சாப் மாநிலப் பறவையும் கூட இதுதான். பறவைகளைப் பற்றிய அருமையான தமிழ் புதுக்கவிதைகளைக் கொண்ட தொகுப்பு ஒன்று இருக்கிறது தெரியுமா? அந்த கவிதை நூலின் பெயரும் “கொண்டலாத்தி”!

Written by P Jeganathan

April 23, 2013 at 7:00 pm

Posted in Birds

Tagged with ,

தூக்கணாங்குருவிக் கூடு

leave a comment »

தூக்கணாங்குருவியைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆங்கிலப் பெயர்  Baya Weaver (Ploceus philippinus) இப்பறவையைப் பார்த்திருக்காவிடினும் நேரிலோ அல்லது படங்களிலோ அதன் கூட்டையாவது கண்டிருப்போம். பெட்டைச் சிட்டுக்குருவியைப் போன்ற தோற்றமும் அளவும் உடையது தூக்கணாங்ருவி. பழுப்பு நிற உடலில் அடர் பழுப்பு நிறத்தில் வரிவரியான பட்டைகள் தென்படும். ஆணும், பெட்டையும் ஒரே வித தோற்றத்தையும் நிறத்தையும் கொண்டிருப்பதால் இவற்றை இனம் பிரித்து அறிவது கடினம். ஆனால் இனப்பெருக்க காலங்களில் மட்டும் (கூடு வைக்கும் சமயங்களில்) ஆண் தூக்கணாங்குருவியின் உச்சந்தலை, மார்பு, முதுகுப்பகுதியின் இறகுகளில் பளீரென்ற மஞ்சள் நிறம் தென்படும்.

baya male female

தூக்கணாங்குருவி -இனப்பெருக்க கால ஆணும், பெட்டையும் (உள்படம்):
Photos: Baya Weaver Male in breeding plumage – Kalyan Varma, Inset Female – J M Garg from Wikipedia

தூக்கணாங்குருவிகள் பெரும்பாலும் தானியங்களையே உண்ணும். அதற்கு ஏதுவாக அவை கூம்பு போன்ற அலகினைக் கொண்டிருக்கும். எனினும் கூடு வைக்கும் காலங்களில் அவை பூச்சிகளை குஞ்சிற்கு ஊட்டி தானும் உண்ணும்.

தூக்கணாங்குருவி இந்தியா முழுவதும் பரவலாகக் தென்படும் ஒரு குருவி வகை. தென்னாசிய நாடுகளிலும் இவை பரவி காணப்படுகின்றன. இவற்றை கூட்டம் கூட்டமாக வாழும் பண்புள்ளவை. சில வேளைகளில் சிட்டுக்குருவி, தினைக்குருவிகளுடனும் சேர்ந்து தந்திக்கம்பிகளில் அமர்ந்திருப்பதையும், வயல்வெளிகளில் தனியங்களை உண்ணுவதையும் காணலாம்.

தூக்கணாங்குருவியின் கூடமைக்கும் பண்பு அலாதியானது. இவற்றின் கூடுகளை பனைமரங்களில், ஈச்ச மரங்களில், செடிகள் வளர்ந்து கிடக்கும் கிணற்றுக்குள், சில வேளைகளில் தந்திக்கம்பிகளிலும் காணலாம். இவற்றின் கூடுகளை பெரும்பாலும் நீர்நிலைகளுக்கு அருகாமையிலும், தண்ணீர் பரப்பின் மேல் சாய்ந்த அல்லது கிளைகளைக் கொண்ட மரங்களில் காணலாம். இவற்றின் முட்டைகளையும், குஞ்சுகளையும் பிடிக்க வரும் (பாம்பு, காகம் முதலிய) இரைக்கொல்லி விலங்குகளிடமிருந்து தப்பிக்கவே இவ்வாறு கூடமைக்கின்றன.

nesting male

கூடு கட்டும் ஆண் (Photo: Radha Rangarajan)

இவை மழைக்காலத்தின் தொடக்கத்தில் கூடமைக்கத் தொடங்குகின்றன. ஆண் மட்டுமே கூடு கட்டும் பணியில் ஈடுபடும். அவை கட்டிய கூடுகளை பெட்டைக் குருவிகள் வந்து சோதனையிட்டு தமக்குப் பிடித்தமான கூட்டினைக் கட்டிய ஆண் குருவியுடன் இணை சேர்ந்து அக்கூட்டினுள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.

பெட்டைக்குருவிக்கு பிடித்த வண்ணம் ஆண் குருவி கூட்டினை எவ்வாறு கட்டுகிறது தெரியுமா? ஒரு மரத்தில் பல சோடி தூக்கணாங்குருவிகள் கூடு கட்டும். கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் மரத்தின் ஒரு பகுதியில் தான் கூடிகள் அதிகமாக இருப்பது தெரியும். அதாவது மரத்தின் மீது காற்று வந்து மோதும் திசையில் கூடுகள் இருக்காது, அதன் எதிர்புறத்தில் (Leeward position) தான் கூடுகள் இருக்கும். அது மட்டுமல்ல குழாயைப் போன்ற நீண்ட அடிப்பகுதியானது காற்றடிக்கும் திசைக்கு எதிர்புறத்தில் தான் அமைந்திருக்கும். அதாவது காற்று வலமிருந்து இடப்புறமாக வீசும் போது நீண்ட குழாய் போன்ற அமைப்பு, பந்து போன்ற கூட்டின் இடப்புறமாகவே அமைந்திருக்கும். அப்போதுதான் உள்ளிருக்கும் முட்டைகள் கீழே விழாமல் பாதுகாப்பாக இருக்கும்.

baya nest suhel illustration

கூட்டினுள் இருக்கும் முட்டைகள் வேகமாக வீசும் காற்றில் கீழே விழாமல் இருக்கும் வண்ணம் காற்றடிக்கும் திசைக்கேற்ப கூட்டின் (குழாய் போலத் தொங்கும்) நுழைவாயிலை தூக்கணாங்குருவி அமைக்கும்.
வரைபடம் Quader, S. 2006a

நீண்ட புல், நெற்பயிரின் தாள், கரும்புத்தோகை, தென்னங்கீற்று, பனை ஓலை முதலியவற்றிலிருந்து தமது கூம்பு போன்ற அலகால் நீண்ட நாரினைக் கிழித்து வந்து ஆண் குருவி கூடு கட்டத் துவங்குகிறது. மரத்தின் காற்றுப் படாத திசையில் உயரமான இடத்தைப் பிடிக்க ஆண் குருவிகள் தமக்குள் போட்டி போடும். கடைசியில் வெற்றி பெறுவது அனுபவசாலிகளே. இவை சில இடங்களில் கூடு உறுதியாக இருக்க கூட்டின் உள் பகுதியில் ஈர மண்ணைக் தமது அலகால் எடுத்து வந்து பூசுகின்றன. கூட்டின் பந்து போன்ற அமைப்பு வரை கட்டிவைத்த பின் பெட்டைக் குருவிகள் அவற்றை வந்து சோதனையிடும்.

கூடு நேர்த்தியாகக் கட்டப்பட்டிருக்கிறதா என்பதைப் பற்றி பெட்டைக்குருவிகள் அதிகம் கவலை கொள்வதில்லை. மரத்தில் எந்த இடத்தில் கூடு அமைந்திருக்கிறது என்பதை வைத்தே அவை அந்தக் கூட்டைக் கட்டிய ஆணை தமது துணையாக ஏற்றுக்கொள்கின்றன. கட்டிய கூட்டிலேயே உயர்ந்த இடத்தில் இருக்கும் கூட்டிற்கு அவை முன்னுரிமை அளிக்கின்றன. இதன் பின்னரே ஆண் குருவி நீண்ட குழாய் போன்ற நுழைவாயிலை கட்ட ஆரம்பிக்கின்றன. இதன் பின்னரே இணை சேர்வது, முட்டையிடுவது, அடைகாப்பது எல்லாம். குஞ்சு பொரித்தவுடன் அவற்றிற்கு உணவூட்டுவது பெட்டைக்குருவி மட்டுமே. மிக அரிதாகவே ஆண் குருவி குஞ்சுகளைப் பராமரிக்கின்றன. ஏனெனில், ஒரு கூட்டினை முழுதுமாக கட்டி முடித்த பின்னர் ஆண் குருவி வேறொரு கூட்டினைக் கட்டும் வேளையைத் தொடங்கி வேறொரு பெட்டைக்குருவியை கவர ஆரம்பித்து விடும்.

baya weaver nest

தூக்கணாங்குருவிக் கூடு. Photo: Ramki Sreenivasan

தகுந்த இடத்திலுள்ள மரத்தை கண்டுபிடித்து, அம்மரத்தில் சிறந்த பகுதியை மற்ற ஆண்குருவிகளுடன் போட்டி போட்டு கைப்பற்றி, மெல்லிய நாரினை தமது அலகால் கிழித்து எடுத்து வந்து, கிளையையோ, இலையின் நுனியையோ தமது கால் விரல் நகங்களால் பற்றி அதில் நாரினை இலாவகமாக சுற்றி உறுதியாக முடிச்சுப் போட்டு கூட்டினை கட்டத் துவங்குகிறது ஆண் தூக்கணாங்குருவி. அதிலிருந்து தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக நாரினை ஒன்றோடு ஒன்று சுற்றி, பிண்ணிப் பிணைத்து, சிக்கலான கூட்டின் சுவர் கட்டப்படுகிறது. இதைப் படிப்பதை விட நேரில் பார்க்கும் அனுபவம் இன்னும் அலாதியானது. அப்போது உணரலாம் பறவை உலகின் விந்தைகளில் தூக்கணாங்குருவிக் கூடும் ஒன்று என்பதை.

குறிப்பெடுக்க உதவிய நூல்கள், கட்டுரைகள்

Ali, S. and Ripley, S. D. (1987). Compact Handbook of the Birds of India and Pakistan together with those of Bangladesh, Nepal, Bhutan and Sri Lanka. Oxford University Press, Delhi.

Davis, T. A. (1973). Mud and dung plastering in Baya nests. J. Bombay Nat. Hist. Soc. 70 (1): 57–71.

Quader, S. (2006a). Sequential settlement by nesting male and female Baya weaverbirds Ploceus philippinus: the role of monsoon winds. J. Avian Biol. 37: 396-404.

Quader, S. (2006). What makes a good nest? Benefits of nest choice to female Baya weavers (Ploceus philippinus). The Auk 123 (2): 475–486.

Written by P Jeganathan

March 20, 2013 at 3:50 pm

Posted in Birds

Tagged with ,