Posts Tagged ‘nilgiri marten’
இந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா
இந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா

வரையாடு (Nilgiri Tahr). Photo: Kalyan Varma/Wikimedia Commons
கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இச்சரணாலயம் 1976ல் ஏற்படுத்தப்பட்டது. இதன் பரப்பு 850 சதுர கி.மீ. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமான இப்பகுதி பல்லுயிரியத்திற்கு பெயர் போனது. இந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதி. குடைசீத்த மரங்கள் கொண்ட தரைக்காடுகள், புல்வெளிகளையும் புதர்களையும் கொண்ட வெட்ட வெளிப் பகுதிகள், மழைக்காடுகள், இலையுதிர்காடுகள், ஆற்றோரக்காடுகள், மலையுச்சிப் புல்வெளிகள், சோலைக்காடுகள் என பல வகையான வாழிடங்களைக் கொண்டது. இதனாலேயே பலவித தாவர மற்றும் விலங்குகளின் பன்மயத்தைக் கொண்டுள்ளது. வேங்கைப்புலி, சிறுத்தை, செந்நாய், நரி, சிறுத்தைப்பூனை, கரடி, யானை, மிளா, கேளையாடு (Barking Deer), புள்ளி மான், சருகுமான், காட்டெருது (Gaur), மற்றும் ஓரிடவாழ்விகளான (Endemic species) வரையாடு (Nilgiri Tahr), நீலகிரி கருமந்தி (Nilgiri Langur), சோலைமந்தி (சிங்கவால் குரங்கு), பழுப்பு மரநாய் (Brown Palm Civet), சின்ன பறக்கும் அணில் (Travancore Flying Squirrel) முதலிய பாலுட்டிகளும், ஆனைமலை சாலியா ஓணான் (Anaimalai Spiny Lizard), மலபார் குழிவிரியன் (Malabar pit viper) முதலிய ஊர்வன இனங்களும், பல வகையான காலில்லாத் தவளைகள் (Caecilians), கொட்டான் எனும் பாதாளத் தவளை (Purple frog), என பல அரிய உயிரினங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது இப்பகுதி. பெரிய இருவாசி (Great Hornbill), கருங்கழுகு (Black Eagle) என சுமார் 218 வகைப் பறவைகள் இப்பகுதியில் தென்படுகின்றன. அவற்றில் நீலகிரி நெட்டைக்காலி (Nilgiri Pipit), மலபார் இருவாசி (Malabar Grey Hornbill), நீலகிரி ஈப்பிடிப்பான் (Nilgiri Flycatcher) போன்ற 12 வகை பறவைகள் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் மட்டுமே தென்படும் ஓரிடவாழ்விகள் ஆகும்.

கொட்டான் எனும் பாதாளத் தவளை (Purple frog). Photo by David Raju/Wikimedia Commons
இது தவிர இங்கு மட்டுமே தென்படக்கூடிய காட்டு காசித்தும்பைச் செடிகளும், ஆர்கிடுகளும் (Orchids), ஏனைய பிற அரிய தாவரங்களும் இங்குண்டு. மேலும் காடர்கள், மலை மலசர்கள். மலசர்கள், முதுவர்கள், புலையர்கள், எரவலர்கள் என பல வித பழங்குடியினரும் வாழும் பகுதி இது. இந்திரா காந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசிய பூங்காவைச் சுற்றி கேரளா பகுதியில் பரம்பிகுளம் புலிகள் காப்பகம், சின்னார் காட்டுயிர் சரணாலயம், வாழச்சால் காப்புக்காடு, எரவிகுளம் தேசியபூங்கா என தொடர்ச்சியான வனப்பகுதிகளைக் கொண்டுள்ளதால், பலவித காட்டுயிர்களுக்கும், யானைகளுக்குமான மிக முக்கியமான வழித்தடமாக இப்பகுதி அறியப்படுகிறது.

தேன் இழிஞ்சான் (Nilgiri Marten Martes gwatkinsii) சாலையைக் கடக்கும் காட்சி. (இணைக்கப்பட்ட படங்கள்). Photo: P. Jeganathan/ Wikimedia Commons
இந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயத்துடன் 108 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கரியன் சோலை, அக்காமலை புல்வெளி, மஞ்சம்பட்டி ஆகிய பகுதிகள் 1989ல் சேர்க்கப்பட்டு தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது. தேக்குமரக்காடு, சோலைக்காடு, மழைக்காடு, மலையுச்சிப் புல்வெளிகள் என பல பல்லுயிரியம் செழிக்கும் மிக முக்கியமான வாழிடங்களைக் கொண்டது இப்பகுதி. யானை, வேங்கைப்புலி, சிறுத்தை, தேன் இழிஞ்சான் (Nilgiri Marten), சிறுத்தைப் பூனை, வரையாடு முதலிய பாலுட்டிகளும், பெரிய இருவாசி, மலபார் இருவாசி, தவளைவாயன், நீலகிரி நெட்டைக்காலி, குட்டை இறக்கையன் முதலிய பறவைகளும், பல வகையான வண்ணத்துப்பூச்சிகளும், தட்டான்களும், காட்டு காசித்தும்மை, ஆர்கிட் முதலிய பல அரிய தாவரங்களும் இப்பகுதியில் தென்படுகின்றன.
—
மனோரமா இயர்புக் 2015 ல் “தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள்” எனும் தலைப்பில் (பக்கங்கள் 178-195) வெளியான நெடுங்கட்டுரையின் ஒரு பகுதி.
களக்காடு தந்த பரிசுகள்
இயற்கை ஆர்வலர்களுக்கும், காட்டுயிர் களப்பணியாளர்களுக்கும் அவசியம் இருக்க வேண்டிய பழக்கங்களில் ஒன்று அவர்கள் காண்பதை, அவதானிப்பதை களக்குறிப்பேட்டில் உடனுக்குடன் பதிவு செய்வது. எனது களக்காடு-முண்டந்துறை களக்குறிப்பேட்டை அன்மையில் திறந்து, பார்த்துக் கொண்டிருந்தேன். என் கண் முன்னே வந்தது: புலி, யானை, கரடி, கொம்பு புலி, செந்நாய், பழுப்பு மரநாய், அலங்கு, சிறுத்தைப் பூனை, வரையாடு, நீலகிரி கருமந்தி, சிங்கவால் குரங்கு, பறக்கும் அணில் மலபார் முள்வால் எலி, பெரிய இருவாசி, கருப்பு மரங்கொத்தி, காட்டுக்குருகு, கருநாகம், பறக்கும் பல்லி, பல வகையான பூச்சிகள் மற்றும் பல தாவரங்கள். குறிப்புகளைக் காணக்காண கண் முன்னே விரிந்தன பல காட்சிகள்.
****
சிலம்பனும் நானும் காட்டுப்பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தோம். வளைந்து செல்லும் அந்த தடத்தின் மறு முனையிலிருந்து ஏதோ உறுமும் ஒலி கேட்டது. இருநாட்களுக்கு முன் அப்பகுதியில் கரடிகள் இரண்டு கத்திக் கொண்டிருந்ததைக் கேட்டிருந்தோம். களப்பணி உதவியாளரான சிலம்பன், அவரிடமிருந்த அரிவாளால் வழியில் இருந்த மரங்களில் தட்டிக்கொண்டும், அவ்வப்போது கணைத்துக் கொண்டும் வந்தார். ஏதாவது ஒலி எழுப்பிக்கொண்டே நடந்தால் ஒரு வேளை ஏதெனும் பெரிய காட்டுயிர்கள் நாம் போகும் வழியில் இருந்தால், விலகிச் சென்றுவிடும். மெல்ல நடந்து முன்னேறிக் கொண்டிருந்த போது சட்டென சிலம்பன் நின்று, என்னிடம் சொன்னார், “அங்க ஏதோ நகர்ந்து போகுது, புலி மாதிரி இருக்கு” என்றார். நாங்கள் நின்று கொண்டிருந்த தடத்தின் சரிவான மேற்பகுதியில் காட்டு வாழைகள் நிறைந்த அந்த பகுதியில் சுமார் 20மீ தூரத்தில் ஒரு புலி இடமிருந்து வலமாக நடந்து சென்றது. புலியை இயற்கையான சூழலில் அப்போதுதான் நான் முதல் முறையாகப் பார்த்தேன்.
****
ஒரு நான் களப்பணி உதவியாளரான ராஜாமணியும் நானும் செங்குத்தான காட்டுப்பாதையின் மேலேறிக் கொண்டிருந்தோம். அடிபருத்த ஒரு பெரிய மரம் ஒன்று தடத்தின் நடுவில் இருந்தது. அதைச் சுற்றிலும் பழங்கள் கீழே சிதறிக் கிடந்தன. அம்மரத்தைச் சுற்றிக் கொண்டு சென்றபோது மரத்தின் பின்னால் இருந்து ஏதோ ஒரு கருப்பான காட்டுயிர் உர்ர்..என உறுமிக்கொண்டு எங்களை நோக்கி வந்தது. சட்டெனத் திரும்பி இருவரும் ஓட ஆரம்பித்தோம். உருண்டு, புரண்டு சரிவான அந்தப் பாதையின் கீழ்ப்பகுதியை வந்தடைந்தோம். பின்பு தான் உணர்ந்தோம் அது ஒரு கரடி என. கரடிகளுக்கு நுகரும் சக்தி அதிகம், எனினும் கண் பார்வையும், கேட்கும் திறனும் சற்று கம்மி. மரத்தின் கீழிருக்கும் பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நாங்கள் அங்கு சென்று அதை திடுக்கிடச் செய்ததால்தான் எங்களைக் கண்டு உறுமி விரட்டியிருக்கிறது.
****
காட்டுக்குள் இருந்த ஒரு கட்டிடத்தில் தங்கியிருந்து களப்பணியில் ஈடுபட்டிருந்த சமயம் அது. ஒரு நாள் மாலை யானைகளின் பிளிறல் வீட்டின் அருகில் கேட்டது. இரவானதும் வீட்டின் பின்னால் இருந்த புற்கள் நிறைந்த பகுதியில் சலசலக்கும் ஒலி கேட்டு அங்கிருந்த சன்னலைத் திறந்த போது யானைக் குட்டியொன்று நின்று கொண்டிருந்ததைக் கண்டேன். உடனே அதை மூடிவிட்டு வீட்டுக்குள் வந்துவிட்டேன். சற்று நேரத்திற்கெல்லாம் 5-6 யானைகள் வீட்டின் முன்னே வெகு அருகில் வந்து நின்றுகொண்டிருந்தன. எரிந்து கொண்டிருந்த பெட்ரோமாக்ஸ் விளக்கை (அங்கு மின்வசதிகள் கிடையாது) அணைத்துவிட்டு கண்ணாடி சன்னல்கள் வழியாக யானைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவை அனைத்தையும் தெளிவானக் காண வீட்டுக்குள் அங்குமிங்கும் நடந்ததை அக்கூட்டத்திலிருந்த ஒரு யானை கேட்டிருக்க வேண்டும். உடனே நான் இருக்கும் திசையை நோக்கி தனது தும்பிக்கையை வைத்து நுகர்ந்தது. பின்னர் யானைகள் அனைத்தும் திரும்பி எதிர்த் திசையில் செல்ல ஆரம்பித்தன. அன்று முழு நிலவு. இரவுநேரத்திலும், நிலவின் ஒளியில் ஒரு யானைத்திரளை வெகு அருகில் கண்டது ஒரு மறக்க முடியாத நிகழ்வு.
****
களப்பணிக்காக ஒரு நாள் காட்டுப்பாதையில் சென்று கொண்டிருந்த போது தரையிலிருந்து சரசரவென ஏதோ ஒரு காட்டுயிர் அருகிலிருந்த ஒரு பெரிய ஆத்துவாரி மரத்தினைப் பற்றிக் கொண்டு மேலேறியது. நான்கு கால்களாலும் மரத்தண்டினைப் பற்றி மேலேறி ஒரு கிளையை அடைந்தது. பின்பு இலாவகமாக மரக்கிளைகளினூடே ஏதோ தரையில் நடந்து செல்வது போல அனாயாசமாக மரம் விட்டு மரம் தாவி சென்றது. நீலகிரி மார்டென் (Nilgiri Marten) என ஆங்கிலத்திலும் கொம்பு புலி என பொதுவாக அழைக்கப்படும் இது, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலேயே மிக அரிதான உயிரினங்களில் ஒன்று. மரநாய், கீரி, நீர்நாய் முதலிய சிறு ஊனுண்ணி (smaller carnivore) வகையைச் சேர்ந்தது. மரநாயைப் போன்ற உடலும், நீண்ட அடர்ந்த வாலும், அழகான வெளிர் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற கழுத்தும் கொண்ட ஒரு அழகான உயிரினம் இது.
****
இந்நிகழ்வுகள் எல்லாம் நடந்தது 1999ல். நான் இருந்தது களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பத்தில். இது 1988ல் தோற்றுவிக்கப்பட்ட தமிழகத்தின் முதல் புலிகள் காப்பகம். இப்போது இந்த புலிகள் காப்பத்திற்கு வயது 25. ஒரு ஆரம்ப நிலை காட்டுயிர் ஆராய்ச்சியாளனாக எனது 25 வது வயதில் அங்கு சென்ற எனக்கு, களப்பணியின் போது பல வித அனுபவங்களையும், பல மறக்க முடியாத தருணங்களையும் எனக்களித்தது களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் தான். படங்களில் மட்டுமே பார்த்து ரசித்துக் கொண்டிருந்த, பார்பேன் என கனவிலும் நினைத்திராத பல உயிரிங்களை முதன்முதலில் கண்டதும் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் தான்.
மழைக்காட்டில் தென்படும் சிறு ஊனுண்ணிகளில் ஒன்றான பழுப்பு மரநாய் (Brown palm Civet) பற்றிய ஆராய்ச்சியில் களப்பணி உதவியாளனாக இங்கு பதினோரு மாதங்கள் தங்கியிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பழுப்பு மரநாய் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டுமே தென்படும் ஓரிடவாழ்வியாகும் (Western Ghats Endemic). இந்த அரிய வகை மரநாய் ஒரு இரவாடி (Nocturnal) ஆகும். இரவிலும் பகலிலும் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் மழைகாட்டுப் பகுதிகளில் திரிந்து களப்பணி மேற்கொள்ளும் வேளையில் இக்கானகத்தின் செல்வங்கள் பலவற்றை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.
உலகில் உள்ள பல்லுயிர் செழுப்பிடங்களில் ஒன்று (biodiversity hotspot) மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதி. இந்த மலைத்தொடரில் தீண்டப்படாத, தொன்னலம் வாய்ந்த வனப்பகுதிகளைக் கொண்ட வெகு சில இடங்களில் ஒன்று களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம். இதன் மொத்த பரப்பு 895 சதுர கி.மீ. அகஸ்தியமலை உயிர்கோள மண்டலத்தின் ஒரு பகுதியான இது பல்லுயிரியத்தில் சிறந்து விளங்கும் பகுதிகளில் மிகவும் முக்கியமான இடங்களில் ஒன்று. சுமார் 150 ஓரிடவாழ் தாவர வகைகளும், 33 வகை மீன்களும், 37 வகை நீர்நில வாழ்விகளும், 81 வகை ஊர்வனங்களும், 273 வகை பறவையினங்களும், 77 வகையான பாலுட்டிகளும் இதுவரை இப்பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல அரிய உயிரினங்களின் வாழ்விடமாகத் திகழ்கிறது. தென்னிந்தியாவிலேயே ஐந்து வகை குரங்கினங்களைக் (சோலைமந்தி (சிங்கவால் குரங்கு), நீலகிரி கருமந்தி, வெள்ளை மந்தி, நாட்டுக்குரங்கு மற்றும் தேவாங்கு) கொண்ட வெகு சில பகுதிகளில் ஒன்றாகவும் இப்பகுதி அறியப்படுகிறது. இப்பகுதியில் எண்ணற்ற பல காட்டோடைகளும், கொடமாடியாறு, நம்பியாறு, பச்சையாறு, கீழ் மணிமுத்தாறு, தமிரபரணி, சேர்வலாறு, கடனாநதி, ராமநதி போன்ற ஆறுகளும் உற்பத்தியாவதால் நதிகளின் சரணாலயமாகவும் கருதப்படுகிறது.
புலிகள் காப்பகங்கள் புலிகளை மட்டும் பாதுகாப்பதில்லை. புலிகளையும் சேர்த்து பல வித வாழிடங்களையும், உயிரினங்களையும், நிலவமைப்புகளையும் பாதுகாக்கிறது. புலிகள் பாதுகாப்பு இன்றியமையாதது. ஏனெனில் அது காட்டுயிர்களுக்கு மட்டுமல்ல மனிதகுலத்திற்கும் நன்மை புரிவது.
*******
தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 3oth September 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF ஐ இங்கே பெறலாம்.