UYIRI

Nature writing in Tamil

Posts Tagged ‘Non-human neighbours

என் வீட்டுத் தோட்டத்தில் – சருகுமான்

leave a comment »

சருகுமான் Mouse Deer Indian Spotted Chevrotain (Moschiola indica)    

நானிருக்கும் வீட்டிலிருந்து எனது அலுவலகம் செல்ல பரந்து விரிந்த தேயிலைத் தோட்டம், தீவுக்காட்டுப்பகுதியின் வழியாகச் செல்லும் சாலையில் பயணிக்க வேண்டும். செல்லும் போது காட்டெருது, சிங்கவால் குரங்கு, கேளையாடு, மலையனில் பலவிதமான பறவைகள் யாவும் காணக்கிடைக்கும். இயற்கையை விரும்பும் காட்டுயிர் ஆராய்ச்சியாளனுக்கு இதை விட வேறு என்ன வேண்டும். உண்மையில் காடுதான் அலுவலகம். அங்கு நடக்கும் நிகழ்வுகளை அவதானித்து, பதிவு செய்து, வெளியுலகிற்கு தெரிவிக்க அது தொடர்பான வேலைகளைச் செய்ய என்போன்றோருக்கு செங்கற்கலால் ஆன கட்டிடம் தேவைப்படுகிறது. வீட்டுக்குப் பக்கத்திலும் காட்டுயிர், அலுவலகம் போகும் வழியிலும் காட்டுயிர், அலுவலத்தின் அடுத்தும் காட்டுயிர் என்றால் அது சொர்க்கம் தானே! எனினும் காலையில் சென்று மாலையில் வீடு திரும்புவதில் எனக்கு நாட்டமில்லை. பகலில் சென்று இரவில் (முடிந்தால் நடு இரவில்) வீடு திரும்புவதில் தான் சுகமே. ஏனெனில் பகலில் திரியும் காட்டுயிர்களையும் காணலாம், இரவாடி விலங்குகளான காட்டுப்பன்றி, மிளா, புனுகு பூனை, முயல், முள்ளம்பன்றி, அதிருஷ்டமிருந்தால் சிறுத்தை, சருகுமான் முதலியவற்றையும் காணலாம். அடிக்கடி பார்க்கும் விலங்குகளைக் காட்டிலும் எப்போதாவது காணக்கிடைக்கும் உயிரின்ங்களின் பால் ஈர்ப்பு இருப்பது இயல்பே. ஆகவே சருகுமானை பார்க்கும் நாள் சிறந்த நாள் தான். காட்டு வழியே போகும் போது சாலையின் குறுக்கே ஓடினால் ஒழிய சருகுமானை எளிதில் பார்ப்பது கடினம். இரவில் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரும் போது சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் அவ்வப்போது கண்டதுண்டு.

காட்டின் தரைப்பகுதியில் சருகுகளினூடே பகலில் படுத்திருக்கும். அருகில் செல்லும் வரை நம்மால் அது இருப்பதை பார்த்தறிய முடியது. அந்த அளவிற்கு சுற்றுப்புறத்துடன் ஒன்றிப் போயிருக்கும். இதற்கு உருமறைத்தோற்றம்(camouflage) என்று பெயர். அதாவது, ஒரு உயிரினத்தின் உடலின் நிறமோ அல்லது சிறகுகளோ அவை இருக்கும் சூழலின் நிறத்தை ஒத்து இருந்தால் அவை சுற்றுப்புறச்சூழலோடு ஒன்றிப்போய் எளிதில் கண்ணிற்கு புலப்படாத வண்ணம் அமைந்திருப்பதே உருமறைத்தோற்றம். இப்பண்பு அவற்றை பிடிக்க வரும் எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்காகவோ, அவை மற்ற இரைஉயிரினங்களை பிடிப்பதற்காகவோ பெரிதும் உதவும். உதாரணம்: பச்சோந்தி, பச்சைப்பாம்பு.

இந்தியாவில் தென்படும் மான் இனங்களிலேயே மிகச்சிறியது சருகுமான். இதன் உயரம் ஒரு அடிதான், உடலின் நீளமும் (முகத்திலிருந்து வால்வரை) சுமார் 50-58 செமீ தான் இருக்கும். சருகுமான் ஒரு விசித்திரமான மான்வகை. பரிணாம ரீதியில் இவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. மிகப்பழமை வாய்ந்த பாலுட்டியினத்தில் ஒன்று சருகுமான். இவை அதிகம் பரவி காணப்பட்டது ஓலிகோசீன் – மியோசீன் காலங்களில், அதாவது 35-5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு. தொல்லுயிர் படிமங்கள் (Fossils) வாயிலாக இதை அறியமுடிகிறது. சருகுமான் மானினத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் மான்களுக்கு இருப்பதுபோல் முன்னிரண்டு வெட்டுப்பற்கள் இவற்றிற்கு கிடையாது. மேலும் மூன்று பகுதிகளைக் கொண்ட குடல் இருக்கும் (மான்களின் குடல் நான்கு பகுதிகளைக் கொண்டது). ஆகவே இவை மானினத்தின் முன்தோன்றிகள் (Primitive) எனக் கருதப்படுகிறது. இதனாலேயெ இவை இப்போதும் வாழும் தொல்லுயிரி (Living Fossil) மற்றுமொறு வியக்கத்தக்க பண்பு சருகுமானினம் உடற்கூறு ரீதியில் பன்றி இனத்தின் பண்புகளையும் கொண்டுள்ளது.  ஆனைமலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினரான காடர்கள் இவ்விலங்கிற்குத் தரும் பெயர் என்ன தெரியுமா? கூரன் பன்னி! சருகுமானின் வகைகள் ஆப்பிரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் தென்படுகின்றன. இந்தியாவில் தக்கான பீடபூமி, கிழக்கு, மேற்கு மலைத்தொடரின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் இவை வசிக்கின்றன. இலங்கையிலும், நேபாளத்திலும் இவை வாழ்கின்றன.

சருகுமான்கள் சிறுத்தைகளின் முக்கிய உணவாக அறியப்படுகிறது (விரிவான கட்டுரை இங்கே). இவை வெகுவளவில் திருட்டுத்தனமாக வேட்டையாடப்பட்டும், சில நேரங்களில் சாலையைக் கடக்கும் போது சீறிவரும் வாகனங்களில் அடிபட்டும் இறக்கின்றன. இரவிலும் அந்திசாயும் நேரங்களில் மட்டுமே அதிகம் பார்க்கக்கூடிய சருகுமானை ஒரு நாள் பகலிலேயே காணக்கிட்டியது. அதுவும் என் வீட்டு சமையலறைக்கு வெகு அருகாமையிலேயே! சமையலறையின் பின்பக்கக் கதவைத் திறந்தால் கொல்லைப்புறம். காய்கறிகளை அறிந்து வரும் தோல், தண்டு, மிச்சமீதி உணவு யாவற்றையும் வேலியருகே ஒரு குழிதோண்டி அதில் போட்டு வைப்போம். பிளாஸ்டிக் குப்பைகளை போடுவதில்லை. வேலியை அடுத்து களைகள் மண்டிய புதர்க்காடும் அதனைத்தொடர்ந்து தேயிலைத் தோட்டமும் இருக்கும். வேலியின் ஓரிடத்தில் விலங்குகள் அடிக்கடி வந்து போனதால் ஒரு அடி உயரமுள்ள திறப்பு இருக்கும். காட்டுப்பன்றிகள் குட்டிகளுடன் அந்த குப்பைத் தொட்டிக்கு அவ்வழியே அவ்வப்போது வந்து போகும். நாங்கள் குப்பை கொட்ட ஆரம்பித்தபின் தான் அந்த நுழைவாயில் உருவாகியிருந்தது.

காலையில் தூங்கிக்கொண்டிருந்த என்னை ஊரிலிருந்து வந்திருந்த எனது பெற்றோர்கள் என்னை எழுப்பி சருகுமான் வந்திருப்பதாகச் சொன்னார்கள். தூக்கம் கலைந்த எரிச்சலில் எதையோ பார்த்துவிட்டு சருகுமான் என சொல்கிறீர்கள் என முனகிக்கொண்டே அடுப்படிக்குச் சென்று, அப்பா கை நீட்டி காண்பித்த இடத்தைப் பார்த்தல், ஒரு அழகான சருகுமான்! அன்று ஏதோ ஒரு கீரையை ஆய்ந்து தண்டை அங்கே அம்மா கொட்டியிருந்தாள். அதையும் வாழைப்பழத்தோலையும் தின்று கொண்டிருந்தது. உடனே ஓடிச்சென்று காமிராவை எடுத்து வந்து ஒருக்களித்து வைக்கப்பட்ட கதவின் பின் நின்று, ஆசைதீர ’கிளிக்’ செய்துகொண்டே இருந்தேன். அது அலுத்துபோனதும் வீடியே எடுக்க ஆரம்பித்தேன். அப்பாவும் அவர் பங்கிற்கு தனது கைபேசியின் காமிரா மூலம் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார். சற்று நேரம் அமைதியாக சாப்பிட்டவுடன் வேலியின் அருகில் இருந்த நுழைவாயிலின் வழியே புதருக்குள் சென்று மறைந்தது. தொடர்ந்து 3-4 நாட்கள் அதே இடத்திற்கு வந்து காய்கறி குப்பைகளை மேய்ந்துவிட்டுச் சென்றது  அந்தச் சருகுமான்.

Indian Spotted Chevrotain (Moschiola indica)

Indian Spotted Chevrotain (Moschiola indica) (Photo: P. Jeganathan)

சருகுமானின் படம் இயற்கைச் சூழலில் எடுக்கப்பட்டது மிகக்குறைவே. காட்டில் வைக்கப்படும் தானியங்கிக் காமிரக்களில் பதிவு செய்யப்பட்ட படங்களே அதிகம். எனது நண்பர்களுடனும், இந்தியாவின் மூத்த காட்டுயிர் விஞ்ஞானியான Dr. A J T ஜான்சிங் அவர்களிடம் இந்தப்படத்தை மின்னஞ்சலில் பகிர்ந்து கொண்டேன். உடனே அவரது Mammals of South Asia எனும் புத்தகத்தில் சேர்ப்பதற்காக கேட்டு வாங்கிக் கொண்டார். சருகுமானை பகலில் பார்த்த அனுபவம் மறக்க முடியாதது. என் வீட்டு சருகுமானை இதே இந்த வீடியோவில் நீங்கள் காணலாம்.

பின்னணி இசை இல்லை, ஆனால் இதைப் பார்க்கும் போதெல்லாம், என் மனதில் வாணி ஜெயராம், ”சருகுமானைப் பாருங்கள் அழகு…” என பாடுவது போலவே இருக்கிறது.

Written by P Jeganathan

December 7, 2012 at 3:46 pm

என் வீட்டுத் தோட்டத்தில் – கேளையாடு

leave a comment »

முதலிலேயே சொல்லிவிடுகிறேன், எனக்கு சொந்தமாக வீடும் இல்லை, வீட்டைச்சுற்றி நீங்கள் நினைப்பது போல் பூந்தோட்டமும் இல்லை. நானிருப்பது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் உயரமான ஒரு பகுதியில். நான் தங்கியிருந்த வாடகை வீட்டைச்சுற்றி, தேயிலைத் தோட்டம் இருக்கும். ஆங்காங்கே களைச் செடிகள் மண்டியும், உண்ணிச் செடியின் புதர்களும், சூடமரம் (யூகலிப்டஸ் மரத்தை இங்கு இப்படித்தான் சொல்வார்கள், தைல மரம் என சொல்வாரும் உண்டு), கல்யாண முருங்கை (காப்பி தோட்டத்தில் நிழலுக்காக வளர்க்கப்படும் Erithrina எனும் வகை மரம், செந்நிற இதழ்களைக் கொண்ட மலருடையது. இதே வகையில் தரைநாட்டில் தண்டில் முள்ளுள்ள கல்யான முருங்கையும் உண்டு, அது முள்ளு முருங்கை என்றும் அறியப்படும்),  தேயிலைத்தோட்டத்தில் நிழலுக்கென வளர்க்கப்படும் சவுக்கு மரமும் (இது சமவெளிகளில் கடலோரங்களில் உள்ள, கிளைகளற்று ஒரே தண்டுடன், ஊசி போன்ற இலைகளுடன் இருக்கும் சவுக்குமரம் அல்ல, சில்வர் ஓக் எனப்படும் விதேசி மரம்) இருக்கும். நானிருந்தது நெருக்கமான வீடுகள் இல்லாத பகுதியில். எனது வீட்டிலிருந்து சற்று தள்ளி தேயிலைத் தோட்டத்தொழிலாளிகளின் குடியிருப்பு வரிசை இருக்கும். மேற்கில் உள்ள ஒரு நீரோடையில் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டி அங்கிருந்து நீரை ஒரு திறந்த, தரையோடமைந்த தண்ணீர் தொட்டியில் சேகரிக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து தண்ணீரை வடிகட்டி குழாய் வழியே அருகிலிருந்த குடியிருப்புகளுக்கு கொண்டு செல்லப்படும். அதே திசையில் என் வீட்டிலிருந்து பார்த்தால் அருகில் உள்ள மலை தெரியும். அதன் ஒரு பக்கம் மரமேதுமில்லாது புற்கள் நிறைந்தும், மறுபக்கம் தேயிலை பயிரிடப்பட்டுமிருக்கும். வடக்கில் சுமார் 2 கீமீ தூரம் வரை தேயிலைத்தொட்டம், அதனையடுத்து மழைக்காட்டின் தொடக்கம்.

தேயிலையும் , காடும், வீடும்

தேயிலையும் , காடும், வீடும் (Photo: Divya & Sridhar)

செடிகளும் ஆங்காங்கே மரங்கள் இருப்பதாலும், இருக்குமிடத்தைச் சுற்றி வனப்பகுதியாதலாலும் சில காட்டுயிர்களை அவ்வப்போது காணலாம். வீட்டுயிர்களும் உண்டு. அதாவது வீட்டின் வெகு அருகிலும், வீட்டுக்குள்ளும் அடிக்கடி வந்து செல்பவை அல்லது வீட்டுக்குள்ளேயே என்னோடு குடியிருப்பவை (பெரும்பாலும் பூச்சிகள்). வீட்டு வாசல் விசாலமானது. வீட்டைச் சுற்றி வேலியிருக்கும். நுழைவாயிலில் அடைப்பு ஏதும் கிடையாது. இதுதான் எனது அமைவிடம், வாழிடம், சுற்றுப்புறம் எல்லாம். இங்கு நான் பார்த்த உயிரினங்களைத்தான் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.

கேளையாடு Indian Muntjac or Barking Deer Muntiacus muntjak

கேளையாட்டை எப்போதாவது எனது வீட்டினருகில் பார்க்கலாம். ஆள் அரவமற்று இருந்தால் வீட்டிற்கு வரும் கல் பதித்த சாலையில் நடந்து வரும். வெட்டியிழுத்து பின்னங்காலை வெட்டியிழுத்து மெதுவாக நடந்து வரும் அதன் நடையே தனி அழகு. மனிதர்களால் மாற்றியமைக்கப்பட்ட பகுதியகளான தேயிலை, காப்பித்தோட்டங்களில் உள்ள திறந்த வெளிகளில் உள்ள புற்களை மேய்ந்து கொண்டிருக்கும் போது தூரத்திலிருந்து எளிதில் காணலாம்.

கேளையாடு எனப்பெயர் பெற்றாலும் இது ஆடு இனத்தைச் சேர்ந்ததல்ல. மானினம். பொதுவாக மான் என்றால் கிளைத்த கொம்புடனிருக்கும். ஆனால் கேளையாட்டிற்கு பெரிய, கிளைத்த கொம்புகள் கிடையாது. இதன் ஆங்கிலப்பெயரான Barking deer ல் இருந்து இவற்றின் குரல் நாய் குரைப்பதைப் போன்றிருக்கும் என்பதை அறியலாம். இவை சாதாரணமாக குரலெழுப்புவதில்லை. ஏதேனும் அபாயமேற்பாட்டல் தான் குரைப்பது போன்று சப்தமெழுப்பும். வெகுதூரத்திலிருந்த்து காட்டினுள் குரலெழுப்பும் போது கூட இதைக் கேட்க முடியும். பொதுவாக தனித்தே இருக்கும், ஆனால் இனப்பெருக்கக் காலங்களில் சோடியாகத் திரியும். சில நேரங்களில் குட்டியுடன் காணலாம்.

இந்தியா முழுவதுமுள்ள மரங்களடர்ந்த வனப்பகுதிகளில் தென்படுகின்றன. கடலோரங்களிலும், குளிரான பனிப்பிரதேசங்களிலும், பாலைவனப்பகுதிகளிலும் இவை இருப்பதில்லை. இவற்றின் உடல் செந்நிறமானது. இது முழுவளர்ச்சியடைந்த கொம்பு சுமார் 2-3 அங்குல நீளமிருக்கும். முனையில் வளைந்திருக்கும். முகத்தில் கொம்பின் அடிப்பகுதியில் ‘V’ வடிவத்தில் உள்ள எலும்பு துருத்திக்கொண்டிருக்கும். பகலில் திரியும். புற்கள், இலை தழைகள், பழங்களை உண்ணும். ஏப்ரல்-ஜூன் மாதங்களில் கொம்புகளை உதிர்க்கும். பகலில் சுற்றித்திரிந்தாலும் காட்டினுள் இவற்றை எளிதில் கண்டுவிட முடியாது. மிகுந்த கூச்ச்சுபாவம் உடையது. நம்மைக் கண்டவுடன் விருட்டென ஓடிவிடும்.

கேளையாடு Indian Muntjac or Barking Deer Muntiacus muntjak (Photo: Kalyan Varma)

கேளையாடு Indian Muntjac or Barking Deer Muntiacus muntjak (Photo: Kalyan Varma)

ஒரு முறை எனது நண்பருடன் காட்டினையடுத்து இருந்த தேயிலைத் தோட்டப்பாதையில் நடந்து சென்றபோது எதிரே தூரத்திலிருந்து வந்துகொண்டிருந்த கேளையாட்டினைக் கண்டதும் ஆடாமல் அசையாமல் நின்றுவிட்டோம். அழகான நடைநடந்து, மெல்ல மெல்ல அருகில் வர வர நாங்களும் நெஞ்சு படபடக்க நின்றிருந்தோம். பார்த்தவுடனேயே எங்களது காமிராவை தயார் நிலையில் வைத்திருந்தோம். படமெடுத்தால் நன்கு தெளிவாகத் தெரியும் தூரத்தை அடைந்தவுடன் விடாமல் ’கிளிக்’ செய்து பதிவு செய்துகொண்டிருந்தோம். பாதையின் நடுவே இருவர் நின்று கொண்டிருப்பதைக் கண்களில் மிரட்சியுடன் சற்று தூரத்தில் நின்று உற்று நோக்கிய வண்ணம் இருந்தது.  பிறகு மெதுவாக தேயிலைப் புதருக்கு அருகில் இருந்த வழியில் நடந்து சென்று எங்கள் பார்வையிலிருந்து மறைந்தது.

இரைவிலங்குகளைக் கண்டால் ஓடிமறையும் கேளையாடு பலவேளைகளில் குரைப்பது போன்ற அபாயக் குரலெழுப்பும். கேளையாட்டை அவ்வபோது ஆங்காங்கே கண்டும், அதன் அபாயக் குரலொலியை கேட்டுக் கொண்டும் இருந்தால், அந்த வாழிடத்தின் நிலையின் தரத்தை சுட்டிக்காட்டும். இதன் அபாயக்குரல் கேட்காமல் போனால் அதன் வாழிடத்திற்கு நிச்சயமாக ஏதோ ஒரு அபாயம் ஏற்பட்டிருக்கிறதென்றே கொள்ளலாம். அதுவும் குறிப்பாக காடுகளைத் திருத்தி அமைக்கப்பட்ட தேயிலை, காப்பி, ஏலத் தோட்டங்களுக்கு இது பொறுந்தும். இவற்றின் வாழிடத்தில் தகுந்த சூழலும், தாவரங்களும் இல்லையெனில் அவை அங்கு அற்றுபோகின்றன. இரசாயன உரங்கள், பூச்சிகொல்லிகள் தெளித்தல், வனப்பகுதிகளை முற்றிலுமாக அழித்தல் போன்ற காரணங்களாலும், திருட்டுவேட்டையினாலும், இவை அருகிவிடுகின்றன. இவை சிறுத்தைகளின் முக்கிய உணவு என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இவை அற்றுப்போனால் இரைகொல்லியான சிறுத்தைக்கும் உணவில்லாமல் போகும். அந்நிலையில் அவை தெருநாய்களையும், பன்றிகளையும், கோழிகளையும் பிடிக்க மக்கள் வசிக்கும் பகுதிகளில் வர நேரிடும். அப்போது தற்செயலாக மனிதர்களையோ, குழந்தைகளையோ தாக்குவது போன்ற விபத்துகளும் நேரிடலாம். ஆகவே கேளையாட்டின் அபாயக்குரல் இப்பகுதிகளில் கேட்கவில்லையெனில் அது மனிதர்களுக்கே அபாயம் என்பதை நாம் அனைவரும் புரிந்து செயல்படல் வேண்டும்.

Written by P Jeganathan

December 7, 2012 at 1:48 pm

என் பக்கத்து வீட்டுப் பழுப்புக் கீச்சான்

leave a comment »

ஒவ்வொறு முறையும் பகலில் எனது வீட்டிலிருந்து வெளியே போகும் போது என்னையறியாமல் தலையைத் திருப்பி வழியில் உள்ள அந்த மரத்தை எனது கண்கள் நோட்டமிடும். சுமார் 10 அடி உயரமே இருக்கும் அந்த மரத்தின் கீழ்க் கிளையை நோக்கியே எனது பார்வை இருக்கும். நான் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பது பழுப்புப் கீச்சானை (Brown Shrike Lanius cristatus). இங்கு தென்படும் மற்ற பறவைகளை ஒப்பிட்டால் அது அப்படி ஒன்றும் விசித்திரமானதோ, கொள்ளைகொள்ளும் அழகு வாய்ந்ததோ, ரம்யமான குரலைக்கொண்டதோ இல்லை. ஆனாலும் இப்பழுப்புக் கீச்சான் அழகுதான். அதுவும் என் வீட்டினருகே இருக்கும் இம்மரத்தின் கீழ்க் கிளையில் வந்தமரும் இப்பழுப்புக் கீச்சானை எனக்கு மிகவும் பிடிக்கும். இதன் தனிச்சிறப்பே பல்லாயிரம் மைல்கள் கடந்து ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களில் இந்தியாவிற்கு வருகை தருவதே. சைபீரியா அதனையடுத்தப்பகுதிகளில் இவை கூடமைக்கின்றன. அங்கு கடும்குளிர் நிலவும் காலங்களில் தெற்கு நோக்கி பயணிக்கின்றன.

இந்தியாவில் ஒன்பது வகை கீச்சான்கள் தென்படுகின்றன. இவற்றில் மூன்று வகைக்கீச்சான்களே இந்தியத் துணைக்கண்டத்தில் கூடுகட்டி குஞ்சு பொரிக்கின்றது ஏனைய யாவும் வலசைவருபவையே. தமிழகத்தில் இம்மூன்றையும், பழுப்புக்கீச்சானையும் காணலாம். இக்கீச்சான்களுக்கு ஒரு விசித்திரமான குணமுண்டு. இவை பிடிக்கும் இரையை முட்கள் உள்ள கிளையில் குத்திச் சேமித்து வைத்து ஆர அமர சாப்பிடும். கசாப்புக்கடையில் மேடைமீது மாமிசத்தை வெட்டித் துண்டாக்கி பின்பு நமக்குக் கொடுப்பதுபோல இப்பறவையும் தனதுணவை முள்ளில் குத்தி வைத்து கூரான முனை கொண்ட அலகாலும், கால் நகங்களாலும் பற்றி இழுத்து, சிறுசிறு துண்டாகக் கிழித்து உட்கொள்ளும். இதனால் இதை ஆங்கிலத்தில் புட்சர் பறவை (Butcher Bird) என்றழைக்கின்றனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு (2008ல்) நான் இங்கு குடிவந்த போது வீட்டினருகே உள்ள சில்வர் ஓக் மரத்தில் இப்பழுப்புக்கீச்சானைக் கண்டேன். அப்போதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் அது இங்கு வந்தடையும் மாதங்களில் இம்மரத்தை பார்த்த படியே இருப்பேன். நான் தங்கியிருக்கும் இடத்தைச்சுற்றி தேயிலைத்தோட்டம் பரந்து விரிந்திருக்கும். ஆங்காங்கே நிழலுக்காக வளர்க்கப்படும் சில்வர் ஓக் மரங்கள் தனித்தனியே நின்றுகொண்டிருக்கும். அது தரும் நிழலைப்பார்த்தால் யாரும் அதை நிழலுக்காகத்தான் வளர்க்கிறார்கள் என்பதை நம்பமுடியாது. தேயிலைப் பயிரிடுவோரைக் கேட்டால் தேயிலைக்கு நிழல் தேவை ஆனால் மிக அதிகமான நிழல் தேயிலையை பாதிக்கும் என்பார்கள். ஆகவே அவ்வப்போது அம்மரத்தின் கிளைகளை முழுவதுமாக வெட்டிவிடுவார்கள். அப்படிப்பட்ட வேளைகளில் மொட்டையாகக் காட்சியளிக்கும் இம்மரம். இப்படி வெட்டினாலும் மீண்டும் சீக்கிரம் வளர்ந்துவிடும் தன்மையுள்ளதாலேயே இம்மரத்தை தேயிலைத்தோட்டங்களில் தகுந்த இடைவெளியில் நட்டு வைக்கிறார்கள். அவ்வப்போது இம்மரத்தின் தண்டில் மிளகுக் கொடியையும் ஏற்றி வளரவிடுவார்கள். நம் இந்திய மண்ணுக்குச் சொந்தமான மரம் இல்லை இந்த சில்வர் ஓக். ஆகவே இம்மரத்தின் மீது எனக்கு அப்படி ஒன்றும் பெரிய பற்றுதலோ விருப்பமே கிடையாது.
ஆனால் பழுப்புக்கீச்சான் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் எனது வீட்டினருகே இருக்கும் இந்த சில்வர் ஓக் மரத்தின் கீழ்க்கிளையில் இப்பழுப்புக்கீச்சானைக் காணலாம். நான் அவ்வழியே போகும்போதும் வரும்போதும் அதைப் பார்த்துவிட்டுத்தான் செல்வேன். பெரும்பாலும் அங்கேதான் அமர்ந்திருக்கும். சாலையிலிருந்து சுமார் 10 மீட்டரிலேயே இருந்தது அம்மரம். நான் நின்று படமெடுக்க முற்படும் போது, தலையை அங்குமிங்கும் திருப்பி கொஞ்சநேரத்தில் சீர்ர்ர்ர்ப்ப்ப்ப் என குரலெழுப்பி அங்கிருந்து பறந்து சென்றுவிடும். நானும் இன்னொரு முறை பார்த்துக்கொள்ளலாம் என பெருமூச்சோடு திரும்பிவிடுவேன். மூன்று ஆண்டுகளாக முயற்சி செய்து கடைசியில் 2011ல் பிப்ரவரி 22ம் தேதி காலைவேளையில் எப்படியாவது இன்று இப்பழுப்புக் கீச்சானை படமெடுத்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு அந்த வழியே எனது காமிராவுடன் மெல்ல நடந்து சென்றேன். எனது நல்ல நேரம், அவ்வேளையில் தனது முதுகைக் காட்டிக்கொண்டு எதிர்பக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தது அந்தப் பழுப்புக்கீச்சான். மெல்ல நடந்து சென்று சாலையிலிருந்தபடியே எனது 300மிமீ லென்சை அதன் முதுகின் மேல் குவியப்படுத்தினேன். காலை வேளையாதலால் ஓரளவிற்கு நல்ல வெளிச்சமும் இருந்த்து. அப்படியே சில நொடிகள் காமிராவின் வழியாகவே பார்த்துக்கொண்டிருந்த போதே அந்தக்கிளையிலேயே திரும்பி உட்கார்ந்தது. தொடர்ந்து மூன்று படங்கள் எடுத்திருப்பேன், அதுவரையில் அமைதியாக அமர்ந்திருந்த பழுப்புக்கீச்சான் விருட்டென்று பறந்து சென்று தூரமாக இருந்த ஒரு மரத்திற்குச் சென்றடைந்தது. காமிராத்திரையில் பார்த்தபோது மூன்றில் இரண்டு சிறந்த குவியத்துடன் காணப்பட்டது. அப்படத்தைப் பார்த்து மகிழ்ச்சியில் வீட்டிற்கு வந்தடைந்தேன்.

பழுப்புக் கீச்சான்

பழுப்புக் கீச்சான்

காமிராவிலிருந்து கணிணிக்குப் படத்தை இறக்கி பெரிய திரையில் பார்த்து மகிழ்ந்தேன். பழுப்புக்கீச்சானின் படம் பல சிறந்த புகைப்படக் கலைஞர்களாலும் எடுக்கப்பட்டிருக்கிறது. அப்புகைப்படங்களை ஒப்பிடும்போது நான் எடுத்த படமொன்றும் பிரமாதமானது இல்லை. இருப்பினும் எனது பழுப்புக்கீச்சானின் படம் எனக்கு உசத்தியானதே. அப்படி என்ன இருக்கிறது இந்தப் பழுப்புக்கீச்சானிடம்? ஏன் இதன் மேல் மட்டும் இவ்வளவு ஆசை? நானிருக்கும் ஊரில் இதைப்போல பல பழுப்புக்கீச்சான்கள் பறந்து திரிகின்றன. அவை அனைத்துமே இங்கு வலசை வந்தவைதான். இருப்பினும் இந்தக்குறிப்பிட்ட பழுப்புக்கீச்சானென்றால் பிரியம் தான். அதை எனது பக்கத்து வீட்டுக்காரரைப் போல நினைக்கிறேன். நான் அவ்வழியே போகும்போது அதைப்பார்த்தவுடன் என்முகத்தில் புன்னகை பரவுகிறது. ஆச்சர்யத்துடன் அதைப்பார்த்து தலையசைத்து வணக்கமிடுகிறேன், எனது பக்கத்துவீட்டுக்காரரைப் பார்த்து கையசைப்பதைப்போல. அது எப்போதுமே அக்கிளையிலேயே உட்கார்ந்து கிடப்பதில்லை. வழக்கமாக அமருமிடத்தில் இல்லையென்றால் சுற்றும் முற்றும் எனது கண்கள் அதைத் தேடுகின்றன.

அங்கு வந்தமரும் பழுப்புக்கீச்சான் ஆணா அல்லது பெண்ணா என்பது எனக்குத் தெரியாது. அதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஆண் பெண் இரண்டிற்குமே இறக்கை நிறமும், உருவ அளவும் ஏறக்குறைய ஒன்றாகத்தான் இருக்கும். அதேபோல நான் 2008ல் பார்த்த அதே பழுப்புக்கீச்சான் தான் ஒவ்வொரு ஆண்டும் எனது வீட்டிற்குப்பக்கத்திலுள்ள அந்த குறிப்பிட்ட மரத்தின் கீழ்க்கிளையில் வந்து அமருகிறதா? வேறு ஒரு பழுப்புக்கீச்சானக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அறிவியல் பூர்வமாகத்தான் இதற்கு விடை காண வேண்டும். பறவையியலாளர்கள் செய்வதுபோல் அதைப்பிடித்து அதன் காலில் பளிச்சென்று தெரியும் நிறத்தில் வளையத்தை போட்டு விட்டால் எளிதில் இனங்கண்டு கொள்ளலாம். அதற்கொல்லாம் எனக்கு நேரமில்லை. ஆனால் நான் ஒவ்வொறு ஆண்டும் பார்ப்பது ஒரே பழுப்புக்கீச்சானைத்தான் என்று எனது உள்மனது கூறியது.

ஒவ்வொறு ஆண்டும் அக்டோபர் மாத வாக்கில் மேற்குத்தொடர்ச்சிமலையின் ஆனைமலைப்பகுதிக்கு வந்திறங்கும் எல்லா பழுப்புக்கீச்சான்களும் அவை இங்கு இருக்கும் காலம் வரை அதாவது ஏப்ரல் மாத இறுதி வரை தமக்கென ஒரு இடத்தை வரையறுத்துக்கொண்டு அங்கு பறந்து திரிகின்றன. வெகுநாட்கள் கழித்து வந்தாலும் கடந்த ஆண்டு எந்த இடத்தில் சுற்றித்திரிந்தனவோ அதே இடத்திற்கு மறுபடியும் வருகின்றன. இது எல்லா வலசைபோகும் பறவைகளின் இயல்பாகும். இதற்குச் சான்றுகளும் இருக்கிறது. காலில் வளையமிட்ட பறவை ஒன்று, ஒவ்வொறு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு வந்து தனக்கென எல்லையை வகுத்துக்கொண்டு அப்பகுதிக்குள் தனது இனத்தைச்சார்ந்த மற்றொரு பறவையை அண்டவிடாமல் விரட்டியடித்து, தனது வீட்டைக்குறிக்கும் வகையில், எல்லையோரத்தில் உரத்த குரலெழுப்புவதும், பாடுவதுமாக இருந்ததாக பல ஆராய்ச்சிகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆகவே ஒவ்வொரு ஆண்டும் ஒரே இடத்தில் வந்தமருவதை வைத்துப்பார்க்கும் போது நான் பார்க்கும் பழுப்புக்கீச்சான் எனது பழுப்புக்கீச்சானே என்று நினைக்கத்தோன்றுகிறது.

அப்படி என்னதான் இருக்கிறது அந்த கீழ்க்கிளையில்? நான் பார்க்கும் பல வேளைகளில் அங்கேயே உட்கார்ந்து கிடக்கிறது அது. ஏன் அந்த இடம் அதற்கு அப்படி பிடித்துப்போனது? காரணமில்லாமல் இருக்காது. அந்த உயரத்திலிருந்து பார்த்தால் பூச்சிகளையும், அதன் மற்ற உணவு வைகைகளான பல்லி, ஓணான், சுண்டெலி, சிறிய பறவைகளை கண்டு வேட்டையாட ஏதுவான இருக்குமோ என்னவோ.

சில்வர் ஓக் மரத்தின் கிளைகளை ஆண்டுதோறும் வெட்டிச் சாய்க்கும் வேளையில், சமீபத்தில் எனது பழுப்புக்கீச்சான் வழக்கமாக உட்கார்ந்திருக்கும் கிளையையும் வெட்டிவிட்டார்கள். அக்கிளை மூன்று ஆண்டுகளாக வெட்டப்படாமல் முழுசாக இருந்ததே பெரிய ஆச்சர்யம். இது நடந்தது பழுப்புப் கீச்சான் இங்கு இல்லாத சமயத்தில். இந்த ஆண்டும் அது நிச்சயமாக திரும்பி அந்த இடத்திற்கு வந்து மரம் வெட்டப்பட்டதைப் பார்த்திருக்கும். அமர்ந்திருக்க அதற்குப் பிடித்தமான இடம் அந்தக் கிளை. இரண்டு அல்லது மூன்று அடி நீளம்தான் இருக்கும் அந்தச் சிறிய கிளை. வெட்டுவது ஒன்றும் கடினமான காரியமாக இருந்திருக்காது. எளிதில் ஒடித்து எறிந்திருக்கப்பட்டிருக்கலாம். ஆனால் பல்லாயிரம் மைல்கள் கடந்து இந்த இடத்திற்கு திரும்பி வரும் அந்தக் கீச்சான் கிளை காணாமல் போனதைப்பார்த்து என்ன நினைத்திருக்கும்? குழம்பிப் போயிருக்குமா? கோபப்பட்டிருக்குமா? நிச்சமாக ஏமாற்றமடைந்திருக்கும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. வழக்கமாகப் போகும் பேருந்தில் நாமக்குப் பிடித்த சன்னலோர இருக்கை கிடைக்காமல் போனால் எப்படி இருக்கும் நமக்கு?

அது நமக்கு ஒரு சாதாரண கிளை ஆனால் அப்பறவைக்கு அது வீட்டின் ஒரு பகுதி. வேலைக்குப் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பி வந்து பார்க்கும்போது உங்கள் வீட்டின் ஒரு பகுதி காணாமல் போயிருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும். ஒரு நாள் வீடே காணாமல் போனால் எப்படி இருக்கும். என்ன செய்வீர்கள்? எங்கு போவீர்கள்? எது எப்படியோ, எந்த தொந்தரவும் கொடுக்காத எனது பக்கத்துவீட்டுக்காரரை இப்போதெல்லாம் இந்தப்பக்கம் பார்க்க முடிவதில்லை. வீட்டினருகில் ஏதாவது ஒரு பழுப்புக் கீச்சானைக் காண நேர்ந்தால் இதுதானோ அது என்று நினைக்கத்தோன்றும். அடையாளம் காணவும் வழியில்லை. எங்கே இருக்கிறாய் எனதருமை பழுப்புக்கீச்சானே?

26 பிப்ரவரி 2012 அன்று தினமணி நாளிதழின் “கொண்டாட்டம்” ஞாயிறு இணைப்பில் வெளியான கட்டுரை இது.  இக்கட்டுரைக்கான உரலி இதோ. PDF இதோ.

Written by P Jeganathan

March 1, 2012 at 7:45 pm