Posts Tagged ‘odonates’
குளவித் தும்பி
குளவித் தும்பி River heliodor Libellago lineata: படத்தில் உள்ளது ஆண் குளவித்தும்பி. இப்பெயர் வரக் காரணம் மஞ்சள் உடல் கொண்ட குளவியைப் போன்ற தோற்றத்தினால். தூரத்தில் இருந்து பார்த்தால் குளவியைப் போலவே தோன்றும். சுமார் 2 சென்டி மீட்டர் நீளம் தான் இருக்கும். ஆற்றோரத்தில் சில வேளைகளில் இரண்டு ஆண் குளவித்தும்பிகள் ஒன்றை ஒன்று எதிர்த்துப் பறந்து கொண்டிருப்பதைக் காணலாம். அது ஒரு கண்கொள்ளாக் காட்சி. கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் அவை பறக்கும் இடத்தினருகிலேயே பெண் குளவித்தும்பி அமர்ந்திருப்பதைக் காணலாம். அவை பறந்து சண்டையிட்டுக் கொண்டிருப்பது அவளுடைய கவனத்தை ஈர்ப்பதற்காகத்தான்.
செந்தலைப் பஞ்சுருட்டான்
செந்தலைப் பஞ்சுருட்டான் (Chestnut-headed bee-eater Merops leschenaulti): ஒரிடத்தில் அமர்ந்து நோட்டம் விட்டு, பறந்து செல்லும் பூச்சிகளைக் கண்டதும் பறந்து சென்று காற்றிலேயே அவற்றை லாவகமாகப் பிடிக்கும். மீண்டும் இருந்த இடத்திற்கே வந்தமர்ந்து பிடித்த இரையை உண்ணும். தட்டானை அலகில் பிடித்து வைத்துக் கொண்டு மின்கம்பியில் அமர்ந்திருந்த இப்பறவையைப் படம் பிடிக்க முயற்சித்த போது எனக்கு எதிரே அமராமல் வேறிடத்திற்குப் பறந்து சென்றுவிட்டது. ஒரு புதரின் மறைவில் காத்திருந்து அங்கு வந்தவுடன் இலைகளினூடாக எடுக்கப்பட்டப் படம். ஆகவேதான் இந்த பச்சைப் படலம்.
பச்சை நிறமே, மரகதப் பச்சை நிறமே!
காட்டோடை சல சல வென விடாமல் ஓசையெழுப்பிக் கொண்டிருந்தது. இலேசாக தென்றல் வீசியதில் ஓடைக்கரையில் இருந்த அத்தி மரத்திலிருந்து ஓரிரு பழுத்த இலைகள் உதிர்ந்து நீரோடையில் விழுந்து பயணிக்க ஆரம்பித்தன. விதவிதமான தகரைச் செடிகளும் (பெரணிகள் – Ferns), காட்டுக் காசித்தும்பை செடிகளும் (Impatiens), ஓடைக்கரையோரம் வளர்ந்து அந்த ஓடையின் அழகிற்கு அழகு சேர்த்துக் கொண்டிருந்தன. நான் அருகில் இருந்த பாறையின் மேல் அமர்ந்திருந்தேன். ஒரு குறிப்பிட்ட ஊசித்தட்டானைக் காண்பதற்காக.
அதன் பெயர் மரகதத்தும்பி, ஆங்கிலத்தில் Stream Glory என்பர். இதன் அழகை குறிப்பாக ஆண் மரகதத்தும்பியின் அழகை சொல்லில் வர்ணிக்க முடியாது. இதை நேரில் பார்ப்பவர்கள் வியப்பில் திக்குமுக்காடிப் போவார்கள். மரகதத்தும்பி, கிழக்கத்திய நாடுகளில் (oriental region) வனப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தென்படும். ஆணின் வாயுறுப்புகள் (Mandibles), மார்பு (Thorax), வயிறு (Abdomen – நாம் வால் என நினைப்பது) அனைத்தும் மரகதப் பச்சை நிறத்தில் இருக்கும். இரு பெரிய கரிய கூட்டுக் கண்கள் (Compound Eyes) தலையில் அமைந்திருக்கும். பூச்சிகளைப் பிடிக்க உதவும் கூர்மையான முட்கள் அமைந்த கால்களும் பச்சை நிறமே. இரண்டு சோடி இறக்கைகளில், முன்னிறக்கைகள் ஒளி ஊடுருவும் வகையில் நிறமற்று இருக்கும். அமர்ந்திருக்கும் போது மடக்கி வைக்கப்பட்டிருக்கும் பின்னிறக்கையின் மேற்புறம் தூரத்திலிருந்து பார்க்கும் போது கரிய நிறத்தில் இருந்தாலும் சூரிய ஒளியில் பார்த்தால் பளபளக்கும் செப்பு நிறத்தில் இருக்கும். எனினும் நம் கண்ணைக் கவர்வது தகதகவென மின்னும் மரகதப் பச்சை நிறமும், பளபளக்கும் கருப்பு முனைகளைக் கொண்ட இப்பின்னிறக்கையின் உட்புறமே.
பெண் மரகதத்தும்பியின் உடல் மஞ்சள் கலந்த ஆனால் பளபளக்கும் பச்சை நிறம். இவற்றின் இறக்கைகள் தேன் நிறத்தில் ஒளி ஊடுறுவும் தன்மையுடன் இருக்கும். இறக்கைகளில் இரண்டு வெண்புள்ளிகள் இருக்கும். இவை ஓடைக்கு அருகில் வருவது பெரும்பாலும் இனப்பெருக்க காலங்களில் மட்டுமே. ஓடையின் அருகில் இருக்கும் தாவரங்களின் மேலோ, நீரிலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருக்கும், குச்சி அல்லது பாறையின் மீதோ அமர்ந்திருக்கும். இவற்றைக் கவர ஆண் தும்பி பல முயற்சிகளை மேற்கொள்ளும். முதலில் முட்டையிடுவதற்கான சரியான இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இவை நீரின் அடியில் இருக்கும் குச்சியிலோ, வேரிலோ தான் முட்டையிடும். நீரோட்டம் சரியான அளவிலும், நல்ல சூரிய வெளிச்சமும் இருக்க வேண்டும்.
ஆண் தும்பி அந்த இடத்தைச் சுற்றிப் பறந்து வலம் வந்து அந்தப் பகுதியை தனதாக்கிக் கொள்ள வேண்டும். இதுபோன்ற நல்ல இடத்தை பிடிக்க போட்டியும் வரும். அப்போது அங்கு நுழையும் ஆண் தும்பியை துரத்தி விடும். அல்லது பலம் வாய்ந்த ஆணாக இருப்பின் அமர்ந்தவாறே தனது வயிற்றுப்பகுதியை மேலே தூக்கிய நிலையில், பளபளக்கும் இறக்கையை ஒரு முறை வேகமாக விரித்துக் காண்பித்தால் போதும். பின்னர் தனது துணையைத் தேடி ஆண் தும்பி அதன் முன்னே நடனமாடும். ஆம், அப்படித்தான் தெரியும் நமக்கு. பெண் அமர்ந்திருக்கும் இடத்தினருகில் சென்று ஆண் 8 வடிவத்தில் முதலில் சிறகடித்துப் பறக்கும். அது கண்கொள்ளாக் காட்சி. பிறகு அவளை சம்மதிக்க வைக்க தனது இடத்தைக் காண்பிக்கக் கூட்டிச் செல்லும். அதன் பின் அப்பெண் தும்பி சம்மதித்தால் அவையிரண்டும் இணைசேரும்.
அடுத்து முட்டையிடும் பணி. சரியான இடம் பார்த்து பெண் தும்பி தனது முட்டைகளை இடும்போது ஆணும் அதைச் சுற்றிப் பறந்து பாதுகாக்க்கும். சில வேளைகளில் பெண்ணானது நீருக்கு அடியிலும் மூழ்கி முட்டையிட வேண்டியிருக்கும். இந்த முட்டை பொரிந்து இதன் தோற்றுவளரி (லார்வா) பல ஆண்டுகள் நீரினடியிலேயே வாழும். முழு வளர்ச்சியடைந்த பின் சரியான வேளையில் நீரினருகில் இருக்கும் தாவரங்களின் மேலேறி தோலுரித்து வெளிவந்து பறக்க ஆரம்பிக்கும்.
நான் அமர்ந்திருந்த தெளிந்த ஓடையின் அருகில், மரங்களினூடாக சுள்ளெனெ சூரிய ஒளி வீச ஆரம்பித்தது. ஓடிக்கொண்டிருந்த தெளிந்த நீரை குத்திக் கிழித்து ஓடைத்தரையைக் காட்டியது அந்த சூரிய ஒளி. நீரின் அடியில் இருந்த பாசிகளும், நீர்த்தாவரங்களும் நீரோட்டத்தின் போக்கிற்கு அசைந்தாடிக் கொண்டிப்பது தெரிந்தது. நீரினடியில் மீன் கூட்டமொன்று வோகமாக நீந்திப் போவது தெரிந்தது. தூரத்தீல் சிறிய மீன்கொத்தி ஒன்று மரக்கிளையில் அமர்ந்து ஓடும் நீரையே பார்த்துக் கொண்டிருந்தது. ஓடையின் அருகிலிருந்து ஒரு சீகாரப்பூங்குருவி (Malabar Whistling Thrush) தனது இரம்மியமான குரலில் பாட ஆரம்பித்தது. நான் அமர்ந்திருந்த பாறையின் பக்கம் காட்டுநீர்நாயின் (Small-clawed Otter) எச்சம் பரவிக் கிடந்தது. நேற்று இரவுதான் அவை இங்கே வந்திருக்க வேண்டும், ஏனெனில் நண்டின் ஓட்டுத் துகள்களைக் கொண்ட அந்த எச்சத்தின் அருமையான மணம் இன்னும் போகவில்லை.
சூரிய ஒளி மெல்ல தலைக்கேறியது. இரண்டு ஆண் மரகதத்தும்பிகள் ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு வந்தன. நான் காண வந்த காட்சி இதுதான். காட்டோடை பல அற்புதங்கள் பொதிந்த இடம் தான் என்றாலும், என்னைப் பொறுத்தவரை மரகதம் போன்ற தும்பிகள் இல்லாமல் எந்த ஒரு நீரோடையும் முழுமையடைவதில்லை.
**********
“தட்டான்கள் என அழைக்கப்பட்டாலும் சங்க இலக்கியங்களில் இவை தும்பி எனப்படுகின்றன. தட்டான்களில் இரு வகையுண்டு. அமரும்போது இறக்கையை பக்கவாட்டில் விரித்து (ஏரோ ப்ளேன் போல) வைத்திருப்பவை தட்டான்கள். இவற்றின் கண்கள் அருகருகே இருக்கும். இறக்கையை மடக்கி வைத்துக் கொண்டு அமருபவை ஊசித்தட்டான்கள். இவை பெரும்பாலும் தட்டான்களைவிட உருவில் சிறியதாகவும், ஒல்லியான உடலையும் கொண்டிருக்கும். தட்டான்களுக்கு ஆறு கால்களும், இரண்டு சோடி இறக்கைகளும் இருக்கும். தட்டான்கள் நமக்கு நன்மை செய்யும் பூச்சியினம். நீரினடியில் இருக்கும் தோற்றுவளரிப் பருவத்திலும், பல பூச்சிகளையும், கொசுக்களின் முட்டைகளையும் உட்கொள்கின்றன. அவை முதிர்ந்த பறக்கும் தட்டான்களானதும் கொசுக்களையும், இன்னும் பிற பூச்சியினங்களையும் உணவாகக் கொண்டு அவற்றின் எண்ணிக்கையை கட்டுப் படுத்துகின்றன. உலகில் சுமார் 6000 வகையும், அவற்றில் சுமார் 536 வகை, இந்தியாவில் இருப்பதாகவும் அறியப்படுகிறது. இந்தியத் தட்டான்களை இனங்கான, அவற்றைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள K. A. Subramaniyan எழுதிய “Dragonflies of India” ஐ நாடவும். இந்நூலை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். அதற்கான உரலி
http://www.vigyanprasar.gov.in/digilib/Showmetaxml.aspx?BookID=364“
**********
தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 15th July 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDFஐ இங்கே பெறலாம்.
சினிமாவும், காட்டுயிரும் அவற்றின் வாழிடங்களும்
எந்தத் தமிழ் சினிமாவைப் பார்க்கும் போதும் அதில் வரும் கதாநாயகியையும், காமெடியையும் ரசிப்பதைத் தவிர எனக்கு வேறு ஒரு பொழுதுபோக்கும் உண்டு. அவுட் டோர் லொக்கேஷனில் எடுக்கப்பட்டிருந்தால் அது இந்தியாவா இல்லை உலகில் எந்தப்பகுதி, எவ்வகையான வனப்பகுதி, படத்தில் வரும் காட்சியைப் பொறுத்து எந்த அளவுக்கு அவ்வகையான வாழிடத்திற்கு அந்த ஷூட்டிங்கினால் பாதிப்பு ஏற்பட்டிருக்கும், என்பதையெல்லாம் பற்றியே எனது யோசனை இருக்கும். ஒரு வேளை ஏதேனும் பறவையையோ, பூச்சியையோ, மரத்தையோ காண்பிக்கும்போது அது எனக்குத் பரிச்சயமான ஒன்றாக இருந்தால் அருகில் இருப்பவர்களிடம் அதைப்பற்றிச் சொல்லுவேன். பெரும்பாலும் அவர்களிடமிருந்து வரும் பதில், “பேசாமல் படத்தைப் பார்”.
தமிழ்ப் படங்களில் பல காட்சிகளில் காட்டுயிர்களையும் அவற்றின் வாழிடங்களையும் காணலாம். நான் குறிப்பிடுவது பழைய படங்களில் வருவதுபோல் கதாநாயகர்கள் சண்டையிட்டு அடக்கும் (?) சிங்கத்தையே, புலியையோ, அல்லது டைரக்டர் இராமநாராயணனின் படத்தில் காட்டப்படும் பழக்கப்படுத்தப்பட்ட சர்க்கஸ் விலங்குகளையோ இல்லை, இயற்கையான சூழலில் தென்படும் உயிரினங்களை. பாரதிராஜா, ராஜ்கிரண் போன்றவர்களின் படங்களில் அழகிய வயல்வெளியையும், நீர்நிலைகளையும் கொண்ட கிராமங்களைக் காணலாம். வெள்ளைகொக்குகள், மீன்கொத்திகள் பறப்பதையும், பூச்சிகளையும், மீன்கள் துள்ளித்திரிவதையும் அவ்வப்போது காண்பிப்பார்கள். மணிரத்னத்தின் பல படங்களில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளின் பல இடங்களைக் காணலாம்.
இதுபோல, தமிழ் சினிமாவில் ஏதாவது பறவையோ, வண்ணத்துப்பூச்சியோ சில நொடிகள் தான் வந்து போகும். ஆனால், சமீபத்தில் பார்த்த “வாகை சூட வா” எனும் அருமையான படத்தில் சர சர சாரக்காத்து வீசும் போது…என்ற பாடலில் கிராமப்புறங்களில் பார்க்கக்கூடிய சில அழகான உயிரினங்களைக் கொண்ட இயற்கைக் காட்சிகளை படம்பிடித்து இப்பாடலின் பல இடங்களில் காண்பித்திருப்பார்கள். தொலைக்காட்சியில் அடுத்த முறை இந்தப்பாடலை பார்க்கும் போது கீழே பட்டியலிடப்பட்டிருக்கும் விளக்கங்களை (பாடலின் ஆரம்பத்திலிருந்து வரும் காட்சிகளுடன்) ஒப்பிட்டுப் பார்த்து மகிழுங்கள்:
1. கதாநாயகன் மின்மினிப்பூச்சியைப் பிடித்து நாயகியின் நெற்றியில் அதைப் பொட்டாக வைப்பான். மின்மினிப் பூச்சி மின்னுவதேன் தெரியுமா? தனது இரையையும், துணையையும் கவர்வதற்காக. எப்படி மின்னுகிறது தெரியுமா? அதனுடலில் இருக்கும் லூசிபெரின் (Luciferin) எனும் ஒரு வித வேதிப் பொருள் ஆக்ஸிஜனுடன் கலப்பதால் பளிச்சிடும் பச்சை நிற ஒளி இப்பூச்சியின் பின் பக்கத்திலிருந்து உமிழுகிறது.
2. ஒரு மஞ்சள் நிறத் தட்டான் தனது வயிற்றுப்பகுதியின் கீழ் நுனிப்பகுதியை (நாம் வால் என பிடித்து விளையாடும் பகுதி) தண்ணீரின் மேல் தொட்டுத் தொட்டுப் பறக்கும். அதன் மேலேயே சிகப்பு நிறத்தில் இன்னொரு தட்டானும் பறந்து கொண்டிருக்கும். மஞ்சள் நிறத்தில் இருப்பது பெண் தட்டான். அது தனது முட்டையை தண்ணீரில் இட்டுக்கொண்டிருக்கிறது. அதன் மேலே பறக்கும் சிகப்பு நிறத்தட்டானே அதன் ஆண் துணை. அது பறந்து கொண்டே தனது பெண் துணையை மற்ற ஆண் தட்டான்களிடமிருந்து பாதுகாக்கிறது.
3. கவுதாரி ஓடுவதை (அல்லது ஓடவிட்டுப்) படமெடுத்திருப்பார்கள்.
4. அடுத்து வருவது எலி. வயல் எலியாக இருக்கக்கூடும்.
5. ஒரு பறவை நீர்க் கரையின் ஓரத்தில் அமர்ந்திருப்பதைப்போன்ற காட்சி. இது Chestnut-bellied Sandgrouse எனும் பறவை. வறண்ட வெட்ட வெளிகளிலும், புதர் காடுகளிலும் இதைப் பார்க்கலாம். தமிழிலில் கல்கவுதாரி எனப்படும் (எனினும் இது கவுதாரி இனத்தைச் சார்ந்தது இல்லை). தரையில் இருக்கும் தானியங்கள், புற்களின் விதைகள் முதலியவற்றை சாப்பிடும். உச்சி வெயில் நேரத்தில் காட்டிலுள்ள நீர்க்குட்டைகளின் ஓரத்தில் தாகத்தைத் தனிக்க கூட்டமாக வந்திறங்குவதைக் காணலாம். ஆனால் இந்தப்பாடலில் காண்பிக்கப்படும் கல்கவுதாரியை இயற்கையான சூழலில் படம்பிடித்த மாதிரி தெரியவில்லை.
6. அதற்கு அடுத்து வருவது காட்டு முயல். Rabbit என நாம் பொதுவாகச் சொல்லுவது. ஆனால் இந்தியாவில் Rabbit இனம் கிடையாது. உணவிற்காகவும், செல்லப்பிராணியாகவும் மட்டுமே வளர்க்கப்படுகிறது. இந்தப்பாடலில் வருவது Black naped Hare – கதாநாயகி காதைப்பிடித்து தூக்கும் போது இம்முயலின் கரிய பிடரியைத் தெளிவாகக் காணலாம். இக்காட்டு முயல் இந்தியாவின் பல பகுதிகளில் இது திருட்டு வேட்டையாடப்படுகிறது. இந்திய வனவிலங்குச் சட்டத்தின் படி இது தண்டிக்கத் தகுந்த குற்றம்.
7. அடுத்து குளத்தில் மீன் அல்லது பாம்பு நீந்துவதைக் காண்பிப்பார்கள். ஒரு சில வினாடிகள் மட்டுமே வருவதால் தெளிவாகச் சொல்ல முடியவில்லை.
8. நத்தையைச் சமைப்பதற்காக கதாநாயகி தயார் செய்வாள்.
9. சிகப்பு நிற உடலில் கரும்புள்ளிகளையுடைய Blister Beetle-ஐ போன்ற வண்டுகள் புல்லின் மேலும் கீழுமாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கும்.
10. மழைபெய்து கொண்டிருக்கும் போது ஒரு மீன் பனைமரத்தின் மேலேறுவது போல ஒரு காட்சி. இதற்கு மரமேறி கெண்டை என்று பெயர். இதன் சிறப்பு என்னவென்றால் சுமார் 6 மணிநேரம் கூட நீருக்கு வெளியிலும் வந்து சுவாசிக்கக் கூடிய திறன் படைத்தது. ஆனால் இந்த படத்தில் காண்பித்திருப்பது போல செங்குத்தாக ஏற முடியுமா எனத்தெரியவில்லை. இக்காட்சியைக் காணும் போதும், இதற்கு அடுத்து வரும் பறவையும் நிச்சயமாக graphics தான் என்பது புலப்படுகிறது.
அடுத்து நான் பார்த்து வியந்த காட்சி “3” (மூன்று) எனும் படத்திலிருந்து. இப்படத்தில் கதாநாயகன், நாயகியின் வீட்டின் முன் நின்று கொண்டு அவளிடன் தனது காதலைச் சொல்லுவான். அக்காட்சியின் போது நாயகியின் கண்களில் தெரியும் பயம் கலந்த பிரமிப்பையும், பூரிப்பையும் பலர் ரசித்திருக்கலாம். ஆனால் நான் பூரிப்படைந்ததும், ரசித்ததும், அந்தக் காட்சியின் பின்னனியில் ஒரு பறவையின் இனிமையான குரலைக் கேட்டுத்தான். விசிலடிப்பது போன்ற அந்தக்குரல் குயிலினத்தைச் சேர்ந்த Indian Cuckoo எனும் பறவையினுடையது. இதன் குரல் நான்கு சுரங்களைக் (notes) கொண்டது. பறவைகள் பாடும் விதத்தையும், குரலையும் வைத்து அதற்கு செல்லப்பெயரிடுவது வழக்கம். ஆங்கிலத்தில் இப்பறவையின் குரல் கேட்பதற்கு, “One more bottle” என்று ஒலிப்பதைப் போலிருப்பதாக குறிப்பிடுகின்றனர். அடுத்த முறை இந்தக் காட்சியைக் காணும் போது இந்தத் தகவலை நினைத்துப் பாருங்கள். காட்சியை விட இந்தப் பறவையின் இனிமையான குரல் உங்களுக்கு நிச்சயமாகப் பிடித்துப் போகும்.
பழைய தமிழ்ப்படங்களில் புலி, சிறுத்தை, சிங்கம் முதலிய விலங்குகளுடன் கதாநாயகன் கட்டிப்பிடித்து சண்டையிட்டு அவற்றை கொல்லுவது போன்ற காட்சியைக் காணலாம். பல வேளைகளில் இந்த விலங்குகளுக்கெல்லாம் வாயைத் தைத்த பின்னரே படத்தில் நடிக்க விடுவார்கள். அதேபோல படத்திலும், சர்க்கஸிலும் வரும் யானைகளை அவை குட்டியாக இருக்கும் போதே பிடித்து வந்து, அடித்து, அங்குசத்தால் குத்திக் கொடுமைப்படுத்தியே அவர்கள் சொல்லுவதையெல்லாம் கேட்க வைப்பார்கள். இந்த உண்மையெல்லாம் தெரிந்ததனால் படங்களில் இவ்வுயிர்கள் வரும் காட்சிகளை என்னால் ரசிக்க முடிவதில்லை.
பெரிய விலங்குகள் மட்டுமல்ல, சின்னஞ்சிறு உயிரினங்களையும் வதைத்து எடுக்கப்பட்ட காட்சிகளையும் நான் ரசிப்பதில்லை. “மீரா” எனும் படத்தில் ஒரு பாடல் காட்சியில் பல வண்ணத்துப்பூச்சிகளை கதாநாயகி கையில் வைத்து விளையாடுவாள். அவற்றில் சில போலிகள் என்றாலும் நிச்சயமாக சில உயிருள்ள வண்ணத்துப்பூச்சிகள் என்பது உற்று நோக்கினால் தெரியும். “சத்யா” எனும் படத்தில் வரும் ஒரு பாடலில் கதாநாயகன் தட்டானைப் பிடித்து நாயகியின் மேல் விடுவது போன்ற காட்சி வரும். சமீபத்தில் வெளியான “இராவணன்” படத்தின் ஆரம்பக் காட்சிகளில் ஒரு தட்டானைக் காண்பிப்பார்கள். பிடித்து வைத்து படமெடுத்திருக்கிறார்கள் என்பது பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது.
சினிமாக்காரர்களின் வசீகரத்தினாலோ, பெரிய இடத்திலிருந்து வரும் சிபாரிசினால் ஏற்படும் நிர்பந்தத்தினாலோ வனத்துறையினர் வேறு வழியின்றி அனுமதி வழங்கி விடுவதால், பொதுமக்கள் கூட செல்ல அனுமதிக்கப்படாத பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் (core area) கூட ஒரு சில படக்காட்சிகளில் வந்து போகும். இந்தப்படங்களில் சில காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும் விதத்தைப் பார்த்தவுடனேயே அந்தக்காட்சி எடுக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு எந்த அளவிற்கு பாதிப்பை உண்டாக்கும் என்பதை ஊகிக்க முடியும். என்னதான் நல்ல படமாகவும், பிடித்த நடிக, நடிகையர் இருந்தாலும், காட்டுயிர் வாழிடங்களின் சூழலை பாதிப்படையும் வண்ணம் இருப்பதைக் காணும் போது வேதனையாக இருக்கும். தூய்மையான காட்டுயிர் வாழிடங்களில் அதாவது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலோ, ஏரி, குளம் ஆறு போன்ற நீர்நிலைகளிலோ, பாலைவனங்களிலோ, பனிபடர்ந்த மலைப்பகுதிகளிலோ சினிமா ஷூட்டிங் நடத்தப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு நிச்சயமாக பாதிப்பு ஏற்படும். நாட்டுப்புறங்களிலும், கிராமங்களிலும், புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களான ஊட்டி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டால் அந்த இடங்களில் அப்படி ஒன்றும் பெரிய சுற்றுச்சூழல் பாதிப்படையாது என்றே தோன்றுகிறது. எனினும் இது எடுக்கப்படும் காட்சியைப் பொறுத்ததே. ஆனால் வனப்பகுதிகளிலும், நீர்நிலைகளிலும் எடுக்கப்படும் ஒரு சில காட்சிகளால் நிச்சயமாக அந்த இடங்களுக்கு பாதிப்பு இருக்கும். உதாரணமாக ஒரு பாடலில் 20 பேர் ஆடிப்பாடி, பளபளக்கும் (மட்கிப்போகாத) ஜிகினாத்தாளை தூக்கி விசிறி பறக்கவிட்டால் அது அந்த இடத்தை நிச்சயமாக மாசுறச்செய்யும். அதுபோலவே காட்டில் ஓடி ஒளிந்துகொள்ளும் வில்லனையோ, கதாநாயகனையோ பலபேர் தேடிச் செல்லுவது போல எடுக்கப்படும் காட்சிகள் அந்த இடத்தின் தூய்மையையும் அமைதியையும் நிலைகுலையச்செய்யும்.
சில படங்கள் ஆரம்பிக்கும் முன்பு, ”இந்த படத்தில் பறவைகளையோ, விலங்குகளையோ துன்புறுத்தப்படவில்லை” என்று அறிவிப்பார்கள். அதுபோலவே, “இந்தப்படம் எடுக்கப்பட்ட இடங்களில் அதன் சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை” என்று சொல்லும் காலம் வரவேண்டும். அப்போதுதான் என் போன்றவர்கள் பேசாமல் படம் பார்த்து ரசிக்க முடியும்.
******
காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 13. புதிய தலைமுறை 11 அக்டோபர் 2012
தேசாந்திரியின் கானல் நீர்
கர்நாடக மாநிலத்திலுள்ள தார்வாரிலிருந்து பெங்களூருக்கு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தேன். ஹிரியூர் எனும் ஊரில் பேருந்து நிலையத்தில் மதிய உணவிற்காக கொஞ்ச நேரம் வண்டி நின்றது. ஒரே விதமாக நெடுநேரம் அமர்ந்திருக்க முடியாமல் கொஞ்சநேரம் நிற்கலாம் என வண்டியை விட்டு கீழிறங்கி வெளியே வந்தேன். பேருந்து நிலையம் அப்படி ஒன்றும் பெரியது இல்லை. சுமார் பத்து வண்டிகள் வரிசையாக வந்து நிறுத்தக்கூடிய அளவிற்கு இருந்தது. ஆனால் சுத்தமாகவே இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக காகிதங்களும், சிகரெட்டுத்துண்டுகளும், துப்பி வைத்த வெற்றிலை பாக்கு எச்சிலும் இருந்ததே தவிர பிளாஸ்டிக் குப்பைகளை காணமுடியவில்லை. பேருந்து நிலையத்தைச்சுற்றி மதில் சுவர் இருந்தது. சுத்தமாக இருந்ததற்குக் காரணம் தரை முழுவதும் சிமெண்டினால் பூசி மொழுகிப்பட்டிருந்தது கூட காரணமாக இருக்கலாம். குண்டும் குழியுமாக இருந்திருந்தால் சேரும் குப்பைகளைக் கூட்டிச் சுத்தம் செய்வது கடினமான காரியம். ஒரே சீரான சிமெண்டுத் தளத்தை சுத்தம் செய்வது எளிதாகவே இருக்கும்.
நாகணவாய்களும், காகங்களும், கரும்பருந்துகளும் வானில் பறந்தும், அருகிலுள்ள மரங்களில் அமர்ந்துமிருந்தன. எனினும் என்னைக் கவர்ந்தது நூற்றுக்கணக்கில் பறந்து கொண்டிருந்த தும்பிகளே. சமீப காலமாக எனக்கு தும்பிகளைப் பார்ப்பதும் அவற்றின் குணாதிசியங்களை பதிவு செய்வதிலும் ஆர்வம் மேலோங்கி செல்லுமிடங்களிலெல்லாம் அவற்றை உற்று நோக்குவதே வேலையாக இருக்கிறது. பூச்சியினத்தைச் சார்ந்த தும்பிகள் மிகச்சிறந்த பறக்கும் திறனைக் கொண்டவை. சிறு வயதில் தட்டானைப் பிடித்து விளையாடாதவர்கள் மிகச்சிலரே இருக்கமுடியும். தும்பி அல்லது தட்டான்களில் இரண்டு வகை உண்டு. கண்கள் இரண்டும் அருகருகில் அமைந்து, அமரும்போது இறக்கைகளை விரித்த வண்ணம் வைத்திருப்பவை தட்டான்கள். இவை பரந்த வெளிகளிலும் நீர்நிலைகளுக்கு அருகிலும் பறந்து திரிவதை காணலாம். உருவில் தட்டான்களை விடச் சற்று சிறியதாகவும், மிக மெல்லிய இறக்கைகளையும், கண்கள் சற்று இடைவெளிவிட்டு அமைந்தும், அமரும்போது இறக்கைகளை மடக்கி பின்புறம் வைத்திருப்பவை ஊசித்தட்டான்கள். இவை பெரும்பாலும் நீர்நிலைகளின் அருகில் பறந்து திரியும்.
ஹிரியூர் பேருந்து நிலையத்தில் பறந்து கொண்டிருந்தவை Wandering Glider or Globe Skimmer (Pantala flavescens) எனும் வகையைச்சேர்ந்த தட்டான்கள். ஐரோப்பா, ரஷ்யா, கனடா, மற்றும் தென் துருவப்பகுதியைத் தவிர உலகில் பல பகுதிகளில் இவை பரந்து காணப்படுகின்றன. தென்னிந்தியாவில் தென்மேற்குப்பருவ மழைக்காலத்திற்குச் சற்று முன்பு இவை ஆயிரக்கணக்கில் வானில் பறந்து திரிவதைக் காணலாம். சமீபத்தில் இவற்றைப்பற்றின ஆச்சர்யமான தகவல் ஒன்று கண்டறியப்பட்டது. பல்லாயிரம் தட்டான்கள் கூட்டம் கூட்டமாக அக்டோபர் மாத ஆரம்பத்தில் தென்னிந்தியாவிலிருந்து ஆப்பிரிக்காவிற்கு கடல் கடந்து (சுமார் 3500 கீ.மீ.) வலசை போவது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவில் சுமார் 500 க்கும் மேற்பட்ட தட்டான்கள் இருந்தாலும் தமிழில் ஒவ்வொன்றிற்கும் தனியாகப் பெயரில்லை. உலகில் பல இடங்களில் தென்படுவதாலும், கடல்கடந்து கண்டம் விட்டு கண்டம் வலசை போவதாலும் நான் ஹிரியூரில் பார்த்த அந்த தட்டானுக்கு தேசாந்திரி என பெயரிட்டுக்கொண்டேன். சற்று நேரம் அத்தட்டான்களை கவனித்தவுடன் அவை அங்கே என்ன செய்கின்றன என்பது தெரிந்தது. அவை முட்டையிட்டுக்கொண்டிருந்தன. ஆமாம், அந்த பளபளப்பான தரையில் தான்.
தட்டான்களின் வாழ்க்கைச் சுழற்சிமுறை நம்மை வியக்க வைக்கும். முதிர்ந்த ஆணும் பெண்ணும் கலவி கொள்ளும் விதமே அலாதியானது. ஆண் தனது வயிற்றுப்பகுதியின் (வால் என நாம் கருதுவது) கடைசியில் இருக்கும் கொக்கி போன்ற உருப்பினால் பெண்ணின் தலையின் பின்புறம் கோர்த்துக்கொள்ளும். பெண் தனது வயிற்றுப்பகுதியின் முனையை மடக்கி ஆணின் வயிற்றுப்பகுதியின் ஆரம்பத்திலுள்ள பை போன்ற அமைப்பில் கொண்டு சேர்க்கும். இப்பையில் தான் ஆணின் விந்தணுக்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இது முடிந்தவுடன் நீர்நிலைகள் இருக்குமிடம் தேடி பறந்து சென்று தட்டானின் வகைக்கேற்ப, நீரின் மேற்பரப்பில், நீரில் மிதக்கும் தாவரங்களில், நீரோரத்திலுள்ள மண்ணில் முட்டையிடும். சில தட்டான் இனத்தில் பெண் முட்டையிட்டு முடிக்கும் வரை ஆண் அதை பிடித்துக்கொண்டே இருக்கும். தேசாந்திரியும் அப்படித்தான்.
நீரிலிட்ட முட்டை பொரிந்து தட்டானின் இளம்பருவம் நீரில் பல காலம் வாழும். முதிர்ச்சியடைந்த பின் நீரிலிருந்து வெளியே நீட்டிகொண்டிருக்கும் தாவரங்களைப் பற்றி மேலே வந்து தனது கூட்டிலிருந்து உறையை பிய்த்துக்கொண்டு இறக்கைகளை விரித்து வானில் பறக்க ஆரம்பிக்கும். தட்டான்கள் மனிதர்களுக்கு நன்மை பயக்கும் பூச்சியனத்தைச் சார்ந்தவை. நீருக்கடியில் இருக்கும் போதும் கொசுவின் முட்டைகளையும் மற்ற பூச்சிகளையும் பிடித்துண்ணும். இறக்கையுள்ள தட்டானாக வானில் பறக்கும் போதும் கொசுக்களையும் மனிதர்களுக்கு தீங்கிழைக்கும் மற்ற பூச்சிகளையும் உண்ணும்.
சரி ஹிரியூருக்கு வருவோம். நீரில் முட்டையிடுவதற்கு பதிலாக தேசாந்திரிகள் ஏன் தரையில் முட்டையிட வேண்டும்? காரணம், அந்த பளபளப்பான தரையிலிருந்து வெளிப்படும் முனைவாக்க ஒளியினால் (polarized light). இது ஒருவகையான ஒளிசார் மாசு (Polarized light pollution). பளிங்குக்கற்களினால் ஆன சமாதி, பளபளப்பான சிமெண்ட்டுத்தரை, காரின் முன் கண்ணாடி முதலியவற்றிலிருந்தும், சாலைகள் அமைக்கப் பயன்படும் அஸ்பால்ட் (asphalt) எனும் ஒரு வகை ஒட்டிக்கொள்ளும் கருமையான கலவைப் பொருளிலிருந்தும் இவ்வகையான முனைவாக்க ஒளி வெளிப்படும். இதனால் இந்த இடங்களெல்லாம் பலவகையான பூச்சிகளுக்கு நீரைப்போன்றதொரு தோற்றத்தை அளிக்கும்.
எங்கோ பிறந்து, முதிர்ச்சியடைந்து, பல இடங்களில் பறந்து திரிந்து, தம்மை உணவாக்க வரும் பல வகையான பறவைகளிடமிருந்து தப்பித்து, தனது துணையைத்தேடி, கலவி கொண்டு, தனது இனத்தை தழைத்தோங்கச்செய்ய சரியான இடம்பார்த்து முட்டையிடும் வேளையில் நீரென்று நினைத்து தரையிலும், கற்களிலும், கண்ணாடிகளிலும் முட்டையிடும் இந்தத் தட்டான்களைப் பார்க்க வேதனையாக இருந்தது. முட்டையிடுவதில் மும்முரமாக இருந்த ஒரு சோடி வேகமாக வந்து திரும்பிய பேருந்தின் சக்கரத்தில் அடிபட்டு தரையோடு தரையாகிப் போனது. மற்ற சோடிகள் தமது முட்டையிடும் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தன.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு உயிருக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தான் இருக்கிறது. பேருந்து புறப்படத் தயாரானது. சன்னலோர இருக்கையில் அமர்ந்தபடியே தேசாந்திரிகள் முட்டையிடும் பரிதாபமான காட்சியை கண்டுகொண்டிருந்த போதே பேருந்து பெங்களூரை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது.
******
காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 7. புதிய தலைமுறை 23 ஆகஸ்ட் 2012
தட்டாம்பூச்சி பார்க்கலாம் வாங்க…
தட்டானைப் பார்க்காதவர்கள் இருக்க முடியாது. சில வேளைகளில் இரவு நேரத்தில் அவை நமது வீட்டுக்குள் புகுந்து மின்விளக்குகளைச் சுற்றி வட்டமிட்டுப் பறந்து, பின்னர் பல்லிக்கு இரையாவதையும் பார்த்திருப்போம். நம்மில் பலர் சிறு வயதில் அதைப் பிடித்து விளையாடியும் இருப்போம். அப்படிச் செய்யாமல் சற்றுநேரம் அவற்றை உற்றுநேக்குங்கள். அவற்றின் செயல்பாடுகள் மிகவும் அலாதியாகவும், பிரமிக்கத்தக்க வகையிலும், ஆச்சர்யமூட்டும் வகையிலும் இருக்கும்.
இவ்வுலகில் நாம் தோன்றுவதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வானில் பறந்து கொண்டிருப்பவை தட்டான்கள். திறமையாக பறக்கக்கூடிய பூச்சிகளில் முதலிடம் வகிப்பது தட்டான்களே! உலகில் சுமார் 6000 வகை தட்டான்கள் உள்ளன. அதில் 536 வகைத் தட்டான்கள் இந்தியாவில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
தாட்டானும் ஊசித்தட்டானும்
தட்டான் என்பது வழக்குச் சொல். சங்க இலக்கியங்களில் இவை தும்பி என்றழைக்கப்பட்டுள்ளன. தட்டான்கள் இரண்டு வகைப்படும். அமரும்போது இறக்கையை பக்கவாட்டில் விரித்து வைத்திருப்பவை தட்டான்கள். இவற்றின் கண்கள் அருகருகே அமைந்திருக்கும். இறக்கையை மடக்கி முதுகின் மேல் வைத்திருப்பவை ஊசித்தட்டான்கள். இவை தட்டான்களைவிட பெரும்பாலும் உருவத்தில் சிறியதாகவும், ஒல்லியான உடலையும் கொண்டிருக்கும். இவற்றின் இரண்டு கண்களும் இடைவெளி விட்டு அமைந்திருக்கும். தட்டான்கள் பொதுவாக நீர்நிலைகளுக்கு அருகிலும், திறந்த வெளிகளிலும் பறந்து திரியும். ஆனால் ஊசித்தட்டான்கள் பெரும்பாலும் நீர்நிலைகளுக்கு அருகிலேயேதான் இருக்கும்.

பெரும்பாலான ஊசித்தட்டான்கள் அமரும்போது இறக்கைகளை முதுகின் மேல் மடக்கி வைத்திருக்கும். தட்டானின் இறக்கைகள் அமர்ந்திருக்கும் போது விரிந்த நிலையில் இருக்கும்
உருவத்தில் வேறுபட்டிருந்தாலும் இவற்றின் வாழ்க்கைமுறை ஏறக்குறைய ஒன்றுதான். தட்டானுக்கும், ஊசித்தட்டானுக்கும் நீர்நிலைகளே உலகம். இவை முட்டையிடுவது நீரில்தான், பின் பல மாதங்கள் அல்லது வருடக்கணக்கில் இதன் லார்வா நீருக்கடியில் வாழ்கிறது. இப்ருவத்தில் இவை நீரிலுள்ள பூச்சிகள், கொசுவின் லார்வா, தலைப்பிரட்டை (தவளையின் குஞ்சு), சிறிய மீன்கள் போன்றவற்றை பிடித்து சாப்பிடுகின்றன.
பல்வேறு லார்வாப் பருவங்களின் முடிவில் வரும் இன்ஸ்டார் பருவத்தில் இவை நீருக்கு அருகிலுள்ள செடிகளில், பாறைகளில் அல்லது நீரிலிருந்து நீட்டிக்கொண்டிருக்கும் குச்சிகளில் மேல் நேக்கி மெல்ல நகர்ந்து தமது மேலுறையை கிழித்துக்கொண்டு உள்ளிருந்து முதிர்ந்த தட்டானாக வெளியே வருகின்றன. பின்பு மெதுவாக இறக்கைகளை விரித்து காற்றில் பறந்து செல்கின்றன. இந்த வியத்தகு காட்சியைக் காண இந்த படத்தைப் பாருங்கள்: தட்டான் பிறக்கும் காட்சி
(நன்றி: www.arkive.org) உயிருள்ள ஹெலிகாப்டர்
பூச்சி இனங்களிலேயே முதன்முதலில் பறக்கும் திறனைப் பெற்றவை தட்டான்களாகவே இருந்திருக்க வேண்டும் என்பதே விஞ்ஞானிகளின் யூகம். இவற்றின் பறக்கும் திறன் நம்மை வியப்பில் ஆழ்த்தும். தட்டானுடைய முதுகின் மேற்புறம் நான்கு இறக்கைகள் தனித்தனியாக அசையும் வகையில் உறுதியான தசைகளால் பிணைக்கப்பட்டிருக்கும். தட்டான்களால் விரைவாக முன்னோக்கி மட்டுமல்லாமல் தலையைத் திருப்பாமலேயே பின்னோக்கிப் பறக்கவும், இருந்த இடத்திலிருந்து நிலை மாறாமல் மேலும் கீழும் மட்டுமில்லாமல், சட்டென 3600 சுழன்று திரும்பவும் அவற்றால் முடியும். பறவையைக் கண்டு விமானத்தை மனிதன் கண்டுபிடித்ததைப் போல, ஹெலிகாப்டர் தயாரிப்பதற்கான எண்ணம் பிறந்தது தட்டானைப் பார்த்துத்தான்.
அழகிய உடல்
தட்டானின் உடலில் உள்ள ஒவ்வொரு பாகமும் ஆச்சரியப்படத்தக்க வகையில் அமைந்துள்ளன. இதன் உடலை மூன்று பாகங்களாக பிரிக்கலாம். தலை, மார்புப் பகுதி, வயிற்றுப் பகுதி (வால் என்று நாம் நினைப்பது அதன் வயிற்றுப்பகுதியே!). தலையில் இரண்டு கண்கள் உண்டு. இவை சாதாரண கண்கள் அல்ல, கூட்டுக்கண்கள். அதாவது ஒவ்வொரு கண்ணிலும் ஆயிரக்கணக்கான விழியாடிகள் (லென்ஸ்) உள்ளன. இவற்றுக்கு ஒம்மடீடியங்கள் என்று பெயர் (ommotidium). இதன் மூலம் எல்லா திசைகளிலும் நடக்கும் விஷயங்களை பார்க்க முடியும். மார்புப் பகுதியின் மேல் இறக்கைகளும், கீழே ஆறு கால்களும் இருக்கும், வயிற்றுப் பகுதியின் முனையில் இனப்பெருக்க நீட்சிகள் இருக்கும்.
இவற்றின் உடல் மற்றும் இறக்கையின் நிறத்தை வைத்து இனம் பிரித்து அறியலாம். சில ஊசித்தட்டான்களின் இறக்கையில் இருக்கும் நிறங்கள் சூரிய ஒளியில் தகதகவென மின்னும் பண்பு கொண்டவை. பெரும்பாலும் ஆணின் இறக்கையிலேயே இத்தகைய நிறங்கள் இருக்கும். பெண் தட்டான்களை கவர்வதற்கும், எதிரிகளை எச்சரிப்பதற்காகும் இவை பயன்படுகின்றன.
எங்கு பார்க்கலாம்?
எல்லாம் சரி, தட்டான்களை எங்கே பார்க்கலாம்? கொஞ்சம் ஜாக்கிரதையாக உற்றுப்பாருங்கள். நீங்கள் பார்க்கும் இடமெல்லாம் அவை இருப்பது உங்களுக்கு ஆச்சரியத்தைத் தரும். நீங்கள் நகரத்தில் வசிக்கிறீர்களா? உங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள மைதானங்கள், நீர்நிலைகள் கொண்ட பூங்காக்கள், புல்வெளிகள், ஓடைகள், ஏன் சாக்கடைகளில்கூட தட்டான்களைப் பார்க்கலாம். வயல்வெளி, குளங்கள், ஓடைகள் போன்றவை தட்டான்களின் சொர்க்கம். நல்ல வெயில் அடிக்கும் நாள்கள்தான் அவற்றை எளிதில் பார்ப்பதற்கான நல்ல நேரம். அவசரப்படாமல் நிதானமாக நகர்ந்து சென்றால், தட்டான்களை மிக அருகில் நெருங்கிச் சென்று, பார்த்து ரசிக்க முடியும். உங்களது செல்போனில் உள்ள கேமராவில்கூட, இந்த அழகான பூச்சிகளை படமும் எடுக்க முடியும்.
சரி, தட்டான்பூச்சிகளை கவனிக்கத் தொடங்கிவிட்டோம். எப்படி வெவ்வேறு தட்டான்பூச்சி வகைகளை பிரித்து அறிந்து கொள்வது? அதற்கு உதவும் வகையில் கே.ஏ.சுப்பிரமணியம் எழுதியுள்ள “டிராகன்ஃபிளைஸ் ஆஃப் இந்தியா” (Dragonflies of India) என்ற புத்தகம் உதவும். பல்வேறு தட்டான்பூச்சிகளை பிரித்து அறிவதற்கான விவரங்கள், அவற்றின் பழக்கவழக்கங்கள், வாழிடங்கள் போன்றவற்றை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. இந்தப் புத்தகத்தில் இந்தியாவில் தென்படும் 111 தட்டான்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. விஞ்ஞான் பிரசார் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தில் தட்டான்பூச்சிகளின் வண்ணப் படங்களும் தரப்பட்டுள்ளன.
தட்டான் மனிதர்களுக்கு நன்மை செய்யும் பூச்சி. நீருக்கடியில் இருக்கும்போது பெரும்பாலும் கொசுவின் லார்வாவை சாப்பிடுகிறது. நீரை விட்டு வெளியேறி முதிர்ந்த நிலையில் வானில் பறந்து திரியும் வேளையிலும் கொசு மற்றும் தீமை பயக்கும் பூச்சிகளை உணவாகக் கொள்கிறது. இவை பறந்து திரியும் காலம் எவ்வளவு தெரியுமா? சில நாள்களிலிருந்து ஒரு சில மாதங்கள் வரைதான். இந்த அழகிய, விசித்திரமான, நமக்கு நன்மை செய்யும் பூச்சிகளை பிடித்து துன்புறுத்தாமல், பார்த்து ரசித்து இன்புறுவோம்.
இந்தக் கட்டுரை Tamilnadu Science Forum (TNSF) வெளியிடும் துளிர் எனும் சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழில் (ஜனவரி 2012) வெளியானது. இக்கட்டுரையை இங்கு தரவிறக்கம் செய்துகொள்ளலாம். துளிர் – தட்டான்கள் ஜனவரி 2012
Edited version of this article on Odonates published in ‘Thulir’ – a science monthly magazine for kids from Tamilnadu Science Forum (TNSF). You can download the PDF of this Tamil article here.