Posts Tagged ‘Orangutan’
கருகப்போகும் காடுகள் – Fire of Sumatra நூல் அறிமுகம்

காட்டுயிர் பாதுகாப்பு அதில் உள்ள சிக்கல்கள், இயற்கை வரலாறு குறித்து பலரும் பல கட்டுரைகள் வழியாகப் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர். தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி. எனினும் கற்பனைக் கதைகள், புதினங்கள் வழியாக (non-fiction) இந்தத் தகவல்களையும் கருத்துகளையும் சொல்வதென்பதும் ஒரு சிறந்த வழியே. அதுவும் அந்தக் கதை உயிரோட்டமாகவும், விறுவிறுப்பாகவும், படிப்பவரின் உணர்வுகளைத் தூண்டும் வகையிலும் இருக்கும்போது சொல்லவரும் கருத்துகள் எளிதில் மனதில் பதியும். புள்ளிவிவரங்களையும், அறிவியல் முறைகளையும், கோட்பாடுகளையும், விளக்கங்களையும், மட்டுமே கொண்ட கட்டுரைகளைவிட இதையெல்லாம் கொண்ட கதை படிப்பவரின் கவனத்தை எளிதில் ஈர்க்கும். இயற்கை, சுற்றுச்சூழல், காட்டுயிர் குறித்துப் பேசும், குழந்தைகளுக்கான படைப்புகள் இந்த வகையில் அதிகமாக இருக்கும். ஆனால், முழுநீள நாவல்கள் குறைவே. மேலை நாடுகளில் இது போன்ற படைப்புகளைக் காணலாம். ஆனால், இந்தியாவில் அதுவும் ஆங்கிலத்தில் இவ்வகையான படைப்புகள் அரிதே. அண்மையில் (2021) வெளியான C.R. ரமண கைலாஷ் எழுதிய “Fire of Sumatra” புலிகள், அவற்றின் வாழ்க்கை முறை, மனிதர்களால் அவை எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஆகியவற்றைப் பற்றிப் பேசும் ஓர் ஆங்கில நாவல்.
இந்த நாவலின் பெயரில் உள்ளது போல் இந்த நாவலின் காட்சிக்களம் சுமத்ரா தீவாக இருந்தாலும், புலிகள், அவற்றின் வாழிடங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உலக அளவில் பொதுவானதே. கதைக்களமும், கதாபாத்திரங்களும் கற்பனையாக இருந்தாலும், சொல்லப்படும் கருத்துகளும், நிகழ்வுகளும் அறிவியல் துல்லியம் கொண்டவை. இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரங்கள் ஒரு புலியின் குடும்பமும், அவற்றைக் காப்பாற்ற முயலும் காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களும், அவர்களுக்கு உதவும் உள்ளூர் ஆர்வலர்கள் சிலருமே. புலிக் குடும்பத்தில் ஐந்து பேர் – அம்மா, அப்பா, மூன்று குட்டிகள். புலிகளில் பெரும்பாலும் பெண் புலிகளே குட்டியைப் பேணுகின்றன. அரிதாகவே ஆண் புலி குட்டிகளைப் பராமரிக்கின்றன, இந்தக் கதையில் வருவதுபோல.
அம்மா புலியான சத்ரா குட்டிகளுக்காக இரை தேட அவற்றை விட்டுச் செல்லும்போது காட்டுத்தீயில் சிக்கி மயங்கிவிடுகிறாள். கண்விழித்துப் பார்க்கும்போது, சில காட்டுயிர் ஆர்வலர்களால் காப்பாற்றப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டுக் கிடக்கிறாள். அங்கு ஏற்கனவே பொறியில் சிக்கி காலை இழந்த வாலி எனும் மற்றொரு புலியைச் சந்திக்கிறாள். அவர்கள் தங்களது நிலைமைகளைப் பற்றி ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்கின்றனர். சத்ரா, தனது குட்டிகளைப் பிரிந்து வாடுகிறாள். அவள் மீண்டும் காட்டுக்குள் சென்றாளா? குட்டிகளோடு சேர்ந்தாளா? என்பதைத்தான் மிக அழகாகவும், சுவாரசியமாகவும் சொல்கிறது இந்த நாவல்.
அதே வேளையில் புலிகளில் வாழ்க்கை முறையையும், அவற்றைக் குறித்த பல இயற்கை வரலாற்றுக் குறிப்புகளும், அவற்றுக்கு மனிதர்களால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் புலிகளே சொல்வதுபோல அமைத்திருப்பது நிச்சயம் வாசகர்களைக் கவரும். சொல்லப்படும் சில கருத்துகள் நம்மை ஆழமாகச் சிந்திக்கவும் வைக்கும். எடுத்துக்காட்டாக, புலிக்குட்டிகளில் ஒன்று தன் தந்தையிடம், “மனிதர்கள் புத்திசாலிகளா?” எனக் கேட்கிறாள் (பக்கம் 86). அதற்குத் தந்தைப் புலி சொல்லும் பதில், “நம்மை திறமையாகக் கொல்வதாலும், நமது வாழிடத்தையும் அழிப்பதாலும் அவர்களைப் புத்திசாலிகள் என்று சொல்வதா? அல்லது இவற்றையெல்லாம் செய்வதால் அவர்களுக்குப் பின்னாளில் ஏற்படப் போகும் விளைவுகளை அறியாமல் இருப்பதால், அவர்களை மனப்பக்குவம் இல்லாத மூடர்கள் என்று சொல்வதா எனத் தெரியவில்லை”.
கதைக்களம் இந்தோனேசியாவைச் சேர்ந்த சுமத்ரா தீவில் நடைபெறுகிறது. ஆகவே அங்குள்ள சில காட்டுயிர்கள் குறித்தும், வனப்பகுதிகளுக்கு ஏற்படும் பேராபத்துகள் குறித்தும் நாம் இந்த நாவலின் வழியே அறிய முடிகிறது. குறிப்பாக, பாமாயில் (எண்ணெய்ப்பனை) சாகுபடிக்காகக் காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து. பாமாயில் தோட்டமிடுவதற்காக, மழைக்காடுகளை வெட்டிச் சாய்த்து அந்த இடத்தை தீ வைத்துக் கொளுத்தும் கொடுமை நடக்கிறது (இது கதையில் மட்டுமல்ல இன்றும் நடந்துகொண்டிருக்கும் ஒரு நிகழ்வுதான்). அந்தக் காடுகளில் தென்படும் ஒரு அரிய வகை வாலில்லாக் குரங்கினம் ‘ஒராங்ஊத்தன்’ (Orangutan). மரவாழ் உயிரினங்களான இவை காடழிப்புக் காரணமாக அழிவின் விளிம்பில் உள்ளன. இந்த நாவலின் ஒரு பகுதியில் (பக்கம் 161) தீ வைத்துக் கொளுத்தப்பட்ட ஒரு காட்டுப் பகுதிக்குச் செல்லும் ஒரு காட்டுயிர் ஆராய்ச்சியாளர் அந்த இடத்தில், தப்பிச் செல்ல முடியாமல் கருகிப்போன ஒரு ஒராங்ஊத்தனின் சடலத்தைக் காண்கிறார். அது தனது இரு கைகளாலும் எதையே கட்டிப்பிடித்துக்கொண்டே எரிந்துபோயிருக்கிறது. கொஞ்சம் கவனித்துப்பார்க்கும்போது அதன் கரங்களுக்குள் இருப்பது கருகிப்போன குட்டி ஒராங்ஊத்தன் என்பதை அறிகிறார். இதைப் படிக்கும்போதே இந்தக் கொடூரமான காட்சி நம் கண்முன்னே வந்து நெஞ்சை உருக வைக்கிறது. அதே வேளையில் இதுபோன்ற நிலை இந்தியக் காடுகளுக்கும், அதில் வாழும் உயிரினங்களுக்கும் நிகழப்போகிறது என்பதை நினைக்கும்போது மனம் கலங்காமல் இருக்க முடியவில்லை.
சமையல் எண்ணெய்களில் மலிவான பாமாயிலை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவில் 13 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பாமாயில் பயிரிடுவதற்கான ஒப்புதலைச் சென்ற ஆண்டு (ஆகஸ்டு 2021) இந்திய அரசு அளித்துள்ளது. இது இந்தியாவில் உள்ள இயற்கை ஆர்வலர்களைப் பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. அதனால், சுமார் 100க்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள், இயற்கை ஆர்வலர்கள் அனைவரும் சேர்ந்து இந்தியப் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். இதில் மலேசியாவும், இந்தோனேசியாவும் செய்த பெரும் தவறை இந்தியாவும் செய்யாமல் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். பாமாயில் சாகுபடிக்காக அந்த நாடுகளில் இருந்த பல்லுயிர்ப்பன்மை வாய்ந்த மழைக்காடுகளைத் திருத்தி அழித்துவிட்டனர், அதுபோல இங்கும் நடக்கவிடக் கூடாது என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
தேசிய சமையல் எண்ணெய் உற்பத்தித் திட்டத்தில் பாமாயிலின் (National Mission on Edible Oils – Oil Palm – NMEO-OP) உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கும் நோக்கத்தில், இந்தியாவில் குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களிலும், அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் சிறப்பு கவனம் செலுத்தப்போவதாகவும், இதைப் பயிரிடுவதற்கான மானியங்களும், உதவித்தொகைகளும் அளிக்கப்படும் எனவும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், முதலான வடகிழக்கு மாநிலங்களும், அந்தமான் நிக்கோபார் தீவுகளும் உலக அளவில் பல்லுயிர்ப்பன்மை மிகுந்த இடங்கள். இங்குள்ள இயற்கையான வாழிடங்களை எந்த வகையிலும் சீர்குலைப்பது அங்குள்ள காட்டுயிர்களுக்கும், அங்கு வாழும் மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
எளிமையான ஆங்கிலத்தில் அனைவரும் புரிந்துகொள்ளும் நடையில் உள்ளது இந்த நாவல். எனினும் நடுவில் சற்றே விறுவிறுப்பு குறைந்து தொய்வு ஏற்படுவது போன்ற உணர்வு எழுகிறது. நாவலாசிரியர் ரமண கைலாஷ் அவர்கள் எட்டு வயதாக இருந்தபோது பாதி கருகிய நிலையில் இருந்த ஒராங்ஊத்தனின் படத்தைக் கண்டிருக்கிறார் (அந்தப் படங்களை இங்கே காணலாம்). அதன் பாதிப்பில் விளைந்ததுதான் இந்த நாவலும், அதில் அவர் விவரித்திருக்கும் கருகிய ஒராங்ஊத்தன் காட்சியும். அவரது பதினான்கு வயதில் இந்த நாவலை எழுதியிருக்கிறார். நாவலின் கதைக்கரு, அதில் விளக்கப்பட்டுள்ள காட்டுயிர்களின் இயற்கை வரலாறு, காட்டுயிர்ப் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள், கருத்தாக்கங்கள் போன்றவற்றை இந்தச் சிறு வயதில் உள்வாங்கி இப்படிப்பட்ட நாவலை எழுதிய அவரை வியந்து பாராட்டலாம். எனினும், எனது எண்ண ஓட்டங்கள் சற்றே வேறுபட்டிருந்தது. இவரைப் போன்ற இளைய தலைமுறை இயற்கை ஆர்வலர்களை நாம் எந்த அளவுக்கு எதிர்மறையான பாதிப்புகளுக்கு உள்ளாக்கியிருக்கிறோம் என்கிற கவலைதான் மேலோங்கியிருந்தது.
—-
தி இந்து தமிழ் 07 May 2022 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம். அக்கட்டுரைக்கான உரலி இங்கே.
பல்லுயிர் பாதுகாப்பிற்கு நாம் என்ன செய்யலாம்?
இப்பூமிப்பந்தினை சீரழிவிலிருந்து பாதுகாக்க நாம் என்ன செய்யலாம் என யோசிக்கும் முன் ஏன் பாதுகாக்க வேண்டும் என்ற கேள்வியை முதலில் கேட்க வேண்டும்.
இதைப் நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் வேளையில் பல்லாயிரக்கணக்கான சதுர அடி வனப்பகுதிகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதிலுள்ள எண்ணிலடங்கா உயிரினங்கள் தங்கள் வாழிடங்களை இழந்து தவிக்கின்றன, பல உயிரினங்கள் இந்த உலகிலிருந்து முற்றிலுமாக அழிந்து போகின்றன. இவற்றையெல்லாம் பாதுகாக்கத் தான் வேண்டுமா? இதனால் என்ன பயன்? நான் இருப்பது நகரத்தில், காட்டைக் காப்பாற்றுவதால் எனக்கு என்ன கிடைக்கும்?
மிக எளிதான அனைவரும் அறிந்த பதில்கள் இதுதான். காடு செழித்தால் நாடு செழிக்கும், மரமிருந்தால் தான் மழை பொழியும். மற்ற எல்லாக் கேள்விகளுக்கும் முழுமையாக விடையளிப்பதோ, இதையெல்லாம் செய்யலாம் என்பதை பட்டியலிடுவதோ இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. ஆனால் அந்த விடையைத் தேடிக் கண்டுபிடிக்கும் ஆர்வத்தை ஊட்டுவதும், வழியையும் காட்டுவதும் தான்.
முதலில் நாம் அனைவரும் செய்யக்கூடியது இயற்கைப் பேணல், காட்டுயிர் பாதுகாப்பு சார்ந்த புத்தகங்களை படிப்பது. தமிழில் இவற்றைப் பற்றிய புத்தகங்கள் குறைவு, எனினும் சு. தியடோர் பாஸ்கரன் (உயிர்மை மாத இதழில் எழுதி வருபவர்), ச. முகமது அலி (காட்டுயிர் எனும் இதழின் ஆசிரியர்) ஆதி. வள்ளியப்பன் (துளிர், பூவுலகு முதலிய அறிவியல் இதழ்களில் எழுதி வருபவர்) போன்ற சில சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை வாங்கிப் படிக்கலாம். பல்லுயிர்ப்பாதுகாப்பின் (Biodiversity Conservation) அவசியத்தைப் பற்றி, ”இன்னும் பிறக்காத தலைமுறைக்காக” எனும் புத்தகத்தில் (உயிர்மை பதிப்பகம்) சு. தியடோர் பாஸ்கரன் அவர்களின் வார்த்தைகளை இங்கே மேற்கோள் காட்டுகிறேன்:
“…சில தீரா நோய்களுக்கு மருந்து, உணவுப் பற்றாக்குறைக்கு நிவாரணம் என பல தீர்வுகள் இப்பல்லுயிரியத்தில் மறைந்திருக்கலாம். சகல உயிர்களுக்கும் ஆதாரமான சூழலியல் செயலாக்கங்களுக்கு இந்த உயிரின வளம்தான் அடிப்படை என்பதையும், மக்களின் நல்வாழ்விற்குப் பல்லுயிரியமே மூல சுருதி என்பதையும் நம் முன்னோர்கள் உணர்ந்திருந்தார்கள் என்பதற்குப் பல ஆதாரங்கள் உண்டு. பல்லுயிர் ஓம்புதல் (322) என்று வள்ளுவர் குறிப்பிடுவதும் இந்த அக்கறையையே. இந்த உயிர்வளம் நமது வம்சாவளிச் சொத்து. இழந்துபோனால் மீட்க முடியாத ஐசுவரியம்….”
இந்த வார்த்தைகளே போதுமானவை, மேலும் தெரிந்து கொள்ள புறவுலகு சார்ந்த கட்டுரைகளையும், புத்தகங்களையும் படிக்கலாம். படித்தால் மட்டும் போதாது அதன் வழி நடத்தல் வேண்டும். இயற்கையின் பால் நாட்டம் ஏற்பட்டு அவற்றைக் காணவும், மகிழவும் செய்தால் மட்டுமே அவற்றைக் காப்பாற்ற முடியாது. அது ஒரு அக்கறையாக வளர வேண்டும்.
நான் நகரத்தில் இருக்கிறேன், நான் வறுமையில் வாடும் ஒரு இந்தியக் குடிமகன், என்னால் பல்லுயிர் பாதுகாப்பிற்கு என்ன செய்து விட முடியும் என்பகிறீர்களா? நகரத்திலுள்ளவர்கள் மட்டுமல்ல நாம் அனைவரும் செய்யக்கூடியவற்றை கீழே பட்டியலிட்டிருக்கிறேன். இது எனதல்ல. Andrew Balmford எனும் சூழியல் விஞ்ஞானி சமீபத்தில் எழுதிய Wild Hope எனும் நூலில் சொன்னது. நம் இந்தியச் சூழலுக்கேற்ப சிலவற்றை இணைத்துள்ளேன். அவர் கூறுவதாவது:
காட்டுயிர், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பாடுபடுவோருக்கு உதவுதல்:
நம்மால் நேரிடையாக இவற்றில் பங்குபெறமுடியாவிடின் இந்தக்காரியங்களைச் செய்வோருக்கு அல்லது அவர்களது அமைப்பு, சங்கம், நிறுவனங்களுக்கு பண உதவி செய்யலாம். எனினும், இந்த அமைப்புகள் உண்மையிலேயே இயங்குகின்றனவா? இதுவரை அவர்கள் சாதித்தது என்ன? செய்து கொண்டிருப்பது என்ன? எப்படிப்பட்ட நிபுணர்களை, அனுபவசாலிகளைக் கொண்டுள்ளன? போன்ற விவரங்களை பகுத்தறிந்து உதவுதல் நலம். அரசு சாரா நிறுவனங்கள் உள்நாட்டிலும், பண்ணாட்டளவிலும் பல உள்ளன. Greenpeace, World Wildlife Fund for Nature (WWF) போன்ற பண்ணாட்டு அரசு சாரா அமைப்புகளுக்கு இந்தியாவிலும் கிளைகள் உண்டு. இந்தியாவில் Bombay Natural History Society, Keystone Foundation தமிழகத்தில் கோவையிலுள்ள ஓசை, சிறுதுளி அமைப்புகள், அருளகம், பூவுலகின் நண்பர்கள், Madras Naturalist Society முதலியவற்றைச் சொல்லலாம்.
பங்களித்தல்:
வெறும் பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு (நன்கொடையோ, அன்பளிப்போ அல்லது அந்த அமைப்புகள் விற்கும் பொருட்களை வாங்கியோ) நான் பல்லுயிர்ப் பாதுகாப்பிற்குத் துணைபோகிறேன் என்று சொல்லாமல் அந்த அமைப்புகளின் வேலைகளில் பங்கு கொண்டு தொண்டூழியம் (Volunteering) செய்யலாம்.
கருத்துகளை அனைவருக்கும் தெரிவியுங்கள், போராடுங்கள்:
கடைக்குச் செல்லும் போது கூடவே பையை எடுத்துச் செல்வது, பிளாஸ்டிக் பைகளை வாங்காமல் இருப்பது, தேவையில்லாத நேரத்தில் மின் சாதனங்களை அனைத்தல், கூடியவரை நமது சொந்த பெட்ரோல், டீசல் வாகனங்களில் செல்லாமல் பேருந்து, இரயிலில் செல்லுதல், தண்ணீரை சிக்கனமாக செலவு செய்தல், வனப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் போது அங்கு குப்பைகளை போடாமல் இருத்தல் போன்ற, நாம் செய்யும் சிறு சிறு காரியங்கள் நிச்சயமாக உதவும். நாம் ஒருவர் இவற்றைப் பின்பற்றினால் போதாது. இயற்கைச் செல்வங்களை பாதுகாக்க நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லலாம். இயற்கைக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் கலந்து கொள்ளலாம், அவற்றிற்காக குரலெழுப்பலாம்.
பார்த்து வாங்க வேண்டும்:
நாம் அன்றாடம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஏதே ஒரு வகையில் இயற்கைச் சீரழிவிற்கு நம்மை அறியாமல் துணைபோகிறோம். காலையில் எழுந்து காபியோ, டீயோ குடிக்கிறோம். அது பயிரிடப்படுவது வனங்களை அழித்தே. இதனால் பல உயிரினங்கள் அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளன. சமைக்கப் பயன்படும் பாம் ஆயில் (Palm Oil) பயிரிடப்படுவது பல சதுர கிமீ பரப்புள்ள மழைக்காடுகளை அழித்தே. இதனால் இந்தோனிஷியாவில் உள்ள ஒராங்உடான் (Orangutan) எனும் அரிய வகை குரங்கினத்தின் வாழிடம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு வருகிறது. கோல்டன் (Coltan) நாம் பேசும் மொபைலில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான உலோகத் தாது. ஆப்பிரிக்காவில் இதைத் தோண்டி எடுக்க காடுகளை அழிப்பதால் அங்கு வாழும் கொரில்லாக்கள் (Gorilla) அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளன.
அதற்காக இவற்றை பயன்படுத்தாமல் உயிர்வாழ முடியுமா? மொபைல் இல்லாத வாழ்வை நினைத்துத்தான் பார்க்க முடியுமா? முடியாது ஆனால் நல்ல, தரமான, கலப்படமில்லாத பொருட்களை வாங்குவது போல இயற்கைக்குப் புறம்பாக, இயற்கை வளத்தைச் சீரழித்து தயாரிக்கப்பட்ட பொருட்களை அடையாளம் கண்டு அவற்றை வாங்காமல் தவிர்த்தல் வேண்டும். வளங்குன்றா விவசாயத்தின் மூலமும், இயற்கை விவசாயமுறையில் பயிர் செய்யப்பட்டு விளைவிக்கப்பட்ட பொருட்களை வாங்கலாம். நுகர்வோர் பொறுப்புடன் பொருட்களை பார்த்து வாங்க ஆரம்பித்தால் அதைத் தயாரிப்போரும் பொறுப்புள்ளவர்களாக மாறுவார்கள். மாறியாக வேண்டும்.
சிறந்த உதாரணம், கிட் கேட் (Kitkat) சாக்கலேட். இதன் தயாரிப்பாளார்களான நெஸ்லே கிட்கேட் மிட்டாய் தாயாரிப்பதற்காக பாம் ஆயில் வாங்கியது ஒராங்உடான் குரங்கினத்தின் வாழிடமான மழைக்காடுகளை அழித்து விவசாயம் செய்யும் ஒரு நிறுவனத்தாரிடமிருந்து. ஆகவே ஒவ்வொரு கிட்கேட் சாப்பிடும் போதும் நாம் அந்த அரிய குரங்கினத்தை சாகடிக்கிறோம் எனும் பொருள்படும்படியான ஒரு குறும்படத்தை கிரீன்பீஸ் (Greenpeace) இயக்கத்தார் தயாரித்து வெளியிட்டனர். அதை இங்கு காணலாம்
இதைப்பார்த்த பலர் கிட்கேட் மிட்டாயை வாங்குவதை தவிர்த்தனர். இதனால் விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டது. அதன் பின் தாம் செய்வதை அறிந்து நெஸ்லே அந்த நிறுவனத்திடமிருந்து பாம் ஆயில் வாங்குவதை உடனடியாக நிறுத்திவிட்டனர். ஆகவே மக்கள் சக்திக்கு இணையானது எதுவுமில்லை.
உடும்புக்கறி, சிட்டுக்குருவி, கருங்குரங்கு லேகியங்கள், ஆமை முட்டை போன்றவற்றை சாப்பிட்டால் ஆண்மைத்தன்மை அதிகரிக்கும் என்பது உண்மையல்ல. எதையாவது எளிதில் ஏமாற்றி விற்க வேண்டும் எனில் இப்படிச் சென்னால் மக்கள் எளிதில் நம்பிவிடுவார்கள். இதற்கெல்லாம் அறிவியல் பூர்வமான சான்றுகள் இல்லை. அதுபோக காட்டுயிர்களை வேட்டையாடுவதும், அவற்றை வாங்கி ஊக்குவிப்பதும் இந்திய காட்டுயிர்ச் சட்டத்தின் படி குற்றமாகும்.
Wild Hopeல் சொல்லப்பட்ட மற்றுமொரு முக்கியமான கருத்து – ஒரு போதும் தளர்ந்து விடாதீர்கள். பல்லுயிர் பாதுகாப்பிற்கு பல வகையில் இடர்கள் வந்து கொண்டே தானிருக்கும். அவற்றைக் கண்டு துவண்டுவடலாகாது. போராடிக்கொண்டே இருக்க வேண்டும்.
எத்தனை புத்தகங்கள் படித்தாலும், பல பேர் போதித்தாலும் நாமாக உணராவிட்டால் நாம் எதையும் செய்ய முற்படுவதில்லை. எதை நாம் விரும்புகிறோமோ, நேசிக்கிறோமோ அதைத்தான் பாதுகாக்க முற்படுவோம். இந்தியா பல்லுயிரியம் மிகுந்த நாடு. நம்மிடம் இருக்கும் இயற்கைச் செல்வங்களில் பல உலகில் வேறெங்கும் கிடையாது. இதை காப்பாற்ற வேண்டியது நம் கடமை.
******
காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 16. புதிய தலைமுறை 1 நவம்பர் 2012