Posts Tagged ‘Rainforest restoration’
சூழல்சார் கானக மீளமைப்பு – காலத்தின் கட்டாயம்
உலகெங்கிலும் கானகங்கள் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகின்றன. உலக அளவில் 1990ஆம் ஆண்டிலிருந்து 178 மில்லியன் ஹெக்டர் வனப்பரப்பு அழிக்கப்பட்டுள்ளது. அதாவது, கிட்டத்தட்ட இந்தியாவின் பரப்பளவில் சுமார் பாதியளவு அழிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தினால் ஏற்படவிருக்கும் பாதிப்புகளை ஓரளவுக்காவது குறைத்துக்கொள்ளவும், பல்லுயிர்களைப் பாதுகாக்கவும் நாம் இரண்டு முக்கியச் செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். முதலாவது, எஞ்சியிருக்கும் கானகப் பகுதிகளை மேலும் அழிக்காமலும், சீரழிக்காமலும் பாதுகாப்பது நம்முடைய தலையாய பொறுப்பாகும். இரண்டாவது, அழிவுக்குள்ளான, சீரழிவுக்குள்ளான கானகங்களை அறிவியல் பூர்வமான முறையில் சூழலியல்சார் மீளமைப்புச் செய்தல் (Ecological restoration) வேண்டும்.

இங்கே கானகம், காடு அல்லது வனம் என்பது ஒரு பொதுவான பெயர் என்பதை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். உயர்ந்தோங்கிய மரங்கள் அடர்ந்து இருக்கும் பகுதி மட்டுமே கானகம் அல்ல. வறண்ட புதர்ச் செடிகள் கொண்ட பகுதிகள், பரந்த புல்வெளிகள், பாலைவனங்கள் யாவும் கானகங்களே! அதாவது, இயற்கையான வாழிடங்கள் அனைத்தையும் நாம் கானகங்கள் என்றே புரிந்துகொள்ள வேண்டும்.
அழிந்து போன கானகங்களைச் சரியான முறையில் மீட்டெடுக்கும் முன் அந்த நிலவமைப்பின் நிலவியல் (Geology), அங்குள்ள இயல் தாவரங்கள், விலங்குகள், அப்பகுதியில் உள்ள மக்களின் கலாச்சாரம், அந்த இடம் எந்தச் சூழல் மண்டலத்தைச் (Ecoregion) சேர்ந்தது என்பது குறித்த புரிதல்கள் தேவை.
கானக மீளமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும் முன் முதலில் மூன்று முக்கிய கேள்விகளை நாம் எதிர்கொள்ள வேண்டும். எங்கே செய்ய வேண்டும்?, என்ன வகையான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்? மற்றும் எப்படி, எந்த வகையான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும்?
எங்கே மீளமைக்க வேண்டும்?
எவ்வகையான உயிரினங்கள் எங்கெங்கே வாழ்கின்றன என்பதை வைத்து உலகில் உள்ள நிலப்பகுதியைச் சுமார் 800 சூழல் மண்டலங்களாகச் சூழலியலாளர்கள் வகைப்படுத்தி உள்ளனர். இவற்றில் 51 வகையான சூழல் மண்டலங்கள் இந்தியாவில் உள்ளன (பார்க்க விக்கிபீடியா). தமிழ் நாட்டில் மட்டுமே ஏழு வகையான சூழல் மண்டலங்கள் உள்ளன.
- மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்கேயுள்ள மலையுச்சி மழைகாடுகள் (South Western Ghats montane rainforests),
- மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்கேயுள்ள ஈர இலையுதிர் காடுகள் (South Western Ghats moist deciduous forests),
- தக்காண பீடபூமியின் வறண்ட இலையுதிர் காடுகள் (South Deccan Plateau dry deciduous forests),
- தக்காணப் பகுதியின் முட்புதர் காடுகள் (Deccan thorn scrub forests),
- கிழக்குத் தக்காணப் பகுதியின் வறண்ட-பசுமை மாறாக் காடுகள் (East Deccan dry-evergreen forests),
- மலபார் கடற்கரையோர ஈரக் காடுகள் (Malabar Coast moist forests),
- கோதாவரி-கிருஷ்ணா அலையாத்திக் காடுகள் (Godavari-Krishna Mangroves)
ஒரு சூழல் மண்டலத்தில் நிலவும் இயற்பிய , உயிரியல் நிலைகளைப் புரிந்துகொள்வதன் மூலம் அங்கே எந்தப் பகுதியில் மீளமைப்புச் செய்யப்பட வேண்டும் எனும் புரிதலைப் பெற முடியும்.
என்ன செய்ய வேண்டும்?
கானக மீளமைப்பு என்றால் எல்லா இடங்களிலும் செடிகளை நட்டு வளர்த்துவிடுவது மட்டுமல்ல. அந்த இடம் ஒரு பரந்த புல்வெளியாகவோ, பாறைப்பாங்கான இடமாகவோ, நீர்நிலையாகவோ, கடலோர மணற்குன்றுகளாகவோ, பாலை நிலமாகவோ இருந்தால், அங்கே சென்று அந்த இடத்திற்குச் சம்மந்தமே இல்லாத தாவரங்களை நட்டு நிரப்புவது சரியல்ல. இந்த வகையான வெட்டவெளி சூழல் தொகுப்புகளை ஆங்கிலத்தில் Open Natural Ecosystems (ONEs) என்பர். இவ்வகையான வாழிடங்கள் பல்லூழிகாலங்களாக அப்படியே இருப்பவை. இப்பகுதிகளில் மட்டுமே உயிர்வாழ பரிணமித்த உயிரினங்கள் பல உள்ளன. இவற்றைப் பாழ்நிலங்கள் (wasteland) என்று வகைப்படுத்துவது முறையல்ல.
எனவே, ஒரு இடத்தை மீளமைக்கத் திட்டமிடும் முன் மூன்று முக்கியக் கேள்விகளை நாம் கேட்க வேண்டும்.
- அந்த இடம் அழிக்கப்படுவதற்கும், சீரழிக்கப்படுவதற்கும் முன்பு என்னவாக இருந்தது?
- அந்த இடத்தின் தற்போதைய நிலை என்ன?
- அந்த இடத்தை எப்படிப்பட்ட இடமாக மீளமைக்க வேண்டும்?
முதல் கேள்வி, அப்பகுதியில் எந்த விதமான உயிரியல் பன்மையம் (biodiversity) இருந்தது? இந்தக் கேள்வி அது எந்தச் சூழல் மண்டலத்தைச் சார்ந்தது என்பதை அறிந்துகொள்ள வைக்கும். இரண்டாம் கேள்வி, அந்த இடம் எந்த அளவிற்குச் சீரழிந்துள்ளது என்பதையும், மூன்றாம் கேள்வி, அப்பகுதியில் உள்ள சீரழிக்கப்படாத அல்லது அழிக்கப்படாத இடத்தை (ஏற்புடை மீளமைப்புப் பகுதி – Benchmark site) கண்டறிவதற்கும், அந்த இடத்தை ஒத்து நாம் மீளமைக்கத் தேர்வு செய்யும் இடத்தையும் காலப்போக்கில் கொண்டுவர வேண்டும் என்பதையும் அறிய வைக்கும்.
எப்படி மீளமைக்க வேண்டும்?
சூழல்சார் கானக மீளமைத்தலின் கோட்பாடுகளை (பார்க்க கீழே*) அறிந்து அதன்படிச் செயல்படுதல் அவசியம். முற்றிலும் அழிக்கப்பட்ட அல்லது பல்வேறு மனிதச் செயல்பாடுகளால் சீரழிக்கப்பட்ட (எ-கா: காடுபடு பொருட்களை அளவுக்கு அதிகமாகச் சூறையாடுதல், அதிகப்படியான கால்நடைகளை மேய்த்தல், கள்ள வேட்டை போன்ற) கானகப் பகுதியை மீளமைக்கும் முன் அங்கே நாம் எந்த வகையில் முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அங்கே தாவரங்களை (மரம், புதர், புற்கள் என அந்த வாழிடத்திற்கு ஏற்ப) நட வேண்டுமா? அல்லது அப்பகுதிக்குப் பாதுகாப்பு அளிப்பதன் மூலம் அங்கிருந்த இயற்கையான வாழிடத்தை மீளமைக்க முடியுமா என்பது குறித்த ஆராய்ச்சிகளைச் செய்ய வேண்டும். சில பகுதிகளில் தாவரங்கள் ஏதும் நடாமல் அந்த வாழிடத்தைச் சீரழிக்கும் காரணிகளைக் கண்டறிந்து அவற்றைக் கட்டுப்படுத்துதல், அல்லது அப்புறப்படுத்துதல் மூலமும் அப்பகுதிகளை மீளமைக்க முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு வாழிடத்தில் இருக்கும் மாசுக்களை அகற்றுதல் அல்லது களைச் செடிகளைக் அழித்தல் போன்ற செயல்பாடுகளால் அந்தப் பகுதியைச் சீரமைக்க முடியும்.
பெயருக்கு மரநடு விழா எடுத்து, எந்த வகையான மரங்களை நடுகிறோம், அவை அப்பகுதியைச் சேர்ந்தவையா? இல்லையா? அவற்றை நடுவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்கிற புரிதல் இல்லாமல் இலட்சக்கணக்கில் மரங்களை நடுவதால் எந்தப் பயனும் இல்லை. விதைப் பந்துகளைக் கண்ட இடங்களில் வீசி எறிவதால் காடு வளர்ந்து விடாது, ஆற்றோரத்தில் மரத்தை நட்டால் நதிகளை மீட்டெடுக்க முடியாது, வெட்டவெளிகளில் யூக்கலிப்டஸ் மரங்களையும், கடலோர மணற்பகுதிகளில் சவுக்கு மரங்களையும் நட்டால் அது காடாகிவிடாது, அயல் மரங்களை ஆயிரக்கணக்கில் நட்டால் வனத்துக்குள் நகரங்களைக் கொண்டுவர முடியாது. இவை எதுவுமே சரியான மீளமைப்புகள் அல்ல.
- இந்தியாவில் முன்னெடுக்கப்பட்ட சூழல்சார் கானக மீளமைப்பு திட்டங்களை பற்றி கிழ்க்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் – https://era-india.org/
சூழல்சார் கானக மீளமைத்தலின் கோட்பாடுகள்*

நிலவமைப்பின் வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும்
ஒவ்வொரு நிலவமைப்பும் அதற்கே உண்டான தனித்துவமான தாவரங்களையும், காட்டுயிர்களையும், காலநிலை, மண் வளம் முதலியவற்றைக் கொண்டிருக்கும். அவை இருக்கும் சுற்றுச்சூழலுடனும், அங்கு வாழும் மனிதர்களுடனும் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருக்கின்றன என்கிற வரலாற்றை அறிந்திருத்தல் அவசியம். ஒரு நிலவமைப்பின் அங்கமாக இருக்கும் பூர்வகுடிகளின் பாரம்பரியம் மற்றும் பட்டறிவு வாயிலாகவும் அந்தப் பகுதியின் வரலாற்றை அறியலாம். நிலவமைப்பின் சீரழிந்த பகுதியை மீளமைக்கும் முன்பு எப்படி அந்தப் பகுதி பாழ்நிலைக்குத் தள்ளப்பட்டது?, அதை எப்படி மீளமைக்கலாம் என்கிற கேள்விகளுக்கு அந்த இடத்தின் வரலாற்றை அறிந்திருத்தல் அவசியம்.
மீளமைக்கும் பணியைத் தற்போதைய மற்றும் எதிர்காலச் சந்ததியினருடன் சேர்ந்து திட்டமிடவும், கற்பனை செய்யவும் வேண்டும்.
கானக மீளமைப்பு என்பது பல்லாண்டுகளாகத் தொடர்ந்துகொண்டே இருக்கும் ஒரு பணி. ஆகவே, மீளமைக்கும் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்கள், பல்வேறு அரசுத் துறையைச் சேர்ந்தவர்கள், அரசு சாரா நிறுவனங்கள், தனியார் நிலங்களின் சொந்தக்காரர்கள் என பலதரப்பட்ட பங்குதாரர்களையும் (stakeholders) ஒருங்கிணைத்து இப்பணிகளில் ஏதோ ஒரு வகையிலேனும் அவர்களை ஈடுபடச் செய்வது அவசியம். மீளமைக்கும் பணி என்பது ஒருவர் அல்லது ஒரு நிறுவனத்தின் பணி அல்ல, அங்குள்ள அனைவரின் கடமை எனும் மனநிலையையும், பொறுப்புணர்வையும் அனைவருக்கும் கொண்டுவருவது அவசியம். அப்போதுதான் மீளமைக்கும் பணி காலத்திற்கும் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
எல்லா இடத்திலும் மீளமைப்புப் பணியைச் செய்யவேண்டிய அவசியம் இல்லை
ஒரு இடத்தை மீளமைக்கும் முன்பு, என்ன மாதிரியான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பரிசீலிக்க வேண்டும். இயல்பாகவே தாவரப் பெருக்கம் நடக்கும் வாய்ப்புகள் இருப்பின் அந்த இடத்திற்குத் தகுந்த பாதுகாப்பு அளிப்பதன் மூலம் மட்டுமே மீளமைக்க முடியும். செடிகளை நட்டு வளர்க்கவேண்டிய அவசியமில்லை. சில நேரங்களில் மீளமைப்புச் செய்யவேண்டிய இடங்களில், அந்த இடம் சீரழிந்ததற்கான காரணிகளைக் கண்டறிந்து அவற்றைத் தடுத்து அல்லது அகற்றினாலே காலப்போக்கில் அந்த இடம் மீண்டும் தன் பழைய நிலைக்குத் திரும்பும் வாய்ப்புகள் அதிகம்.
மீளமைப்பின் முன்னேற்றத்தைச் சரியான இடத்துடன் ஒப்பிடுதல்
மீளமைக்கவேண்டிய பகுதியின் அருகாமையில் உள்ள சீரழிக்கப்படாத அல்லது அழிக்கப்படாத நல்ல நிலையில் உள்ள இடத்தை (ஏற்புடை மீளமைப்புப் பகுதி – Benchmark site) கண்டறிவது அவசியம். மீளமைக்கவேண்டிய இடம் எதிர்காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஏற்புடை மீட்புப் பகுதியுடன் அவ்வப்போது ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுதல் அவசியம்.
மீளமைக்கும் இடம் ஏற்புடை மீளமைப்புப் பகுதி போலவே இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருத்தல்
ஏற்புடை மீளமைப்புப் பகுதியில் (Benchmark site) இருக்கும் சூழல் அமைப்பைப் போலவே அதாவது, அங்குள்ள தாவரங்கள், காட்டுயிர்கள் போலவே மீளமைக்கும் இடத்திலும் கொண்டுவர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
இயற்கையான தாவரப் பெருக்கம் நடைபெறுவதை ஊக்குவிக்க வேண்டும்
மீளமைக்கப்படவேண்டிய இடத்தில் இயற்கையான தாவரப் பெருக்கம் (Natural regeneration) நடைபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அந்த இடத்தைப் பாதுகாப்பதும் மீளமைத்தலின் ஒரு முக்கியமான அங்கம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
மீளமைப்புப் பணிகளை நாம் கையாளும் விதம் நிலத்துடன் நாம் உரையாடுவது போலவே இருக்க வேண்டும்
கானக மீளமைப்பு என்பது அது நடைபெறும் நிலத்துடன் நாம் உணர்வுபூர்வமான ஓர் உரையாடலை மேற்கொள்வதுபோல இருக்க வேண்டும். சில இடங்கள், நாம் செய்யும் மீளமைப்புப் பணிகளால் நல்ல முறையில் மீண்டு வரும், சில இடங்கள் சற்றுத் தாமதமாகலாம். அது போன்ற நிலங்களுடன் சேர்ந்து அவற்றிற்கு என்ன உதவி தேவை என்பதை உணர்ந்து அதற்குத் தகுந்தவாறு செயல்பட வேண்டும். நிலம் சொல்வதை நாம் காது கொடுத்துக் கேட்க வேண்டும்.
மீளமைப்பில் ஏற்படும் முன்னேற்றங்களை ஆரம்பத்திலிருந்தே அவதானித்தல் அவசியம்
சூழல்சார் கானக மீளமைப்பு நெடுங்காலத்திற்குத் தொடரும் ஒரு செயல்முறை. மீளமைப்பு செய்யத் தொடங்கிய காலத்திலிருந்து நாம் செய்யும் மீளமைப்புப் பணிகள் எவ்வகையில் மேம்படுகின்றன என்பதை அவதானித்து, மாற்றங்களை ஆவணப்படுத்தி என்ன நடக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, மீளமைப்பு நடைபெறும் இடங்களில் அதுவரையில் இல்லாத இயல் தாவரங்கள், காட்டுயிர்கள் வர ஆரம்பித்தால் அது ஒரு நல்ல அறிகுறி. இவற்றைச் சூழலியல் சுட்டிக்காட்டிகள் (Ecological indicators) என்பர். இது போன்ற முக்கியமான அறிகுறிகளை முன்கூட்டியே அறிந்து வைத்திருத்தல் அவசியம்.
உள்ளூர் மக்களுக்கு நலம் பயக்கும் வகையில் மீளமைப்புப் பகுதிகள் இருத்தல் அவசியம்
மீளமைப்புப் பகுதிகள் பாதுகாப்பாகவும், நல்ல முறையில் மீண்டு வரவும், அங்கே செய்யப்படும் செயல்பாடுகள் காலத்திற்கும் தொடர்ந்து நடைபெறவும், உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாதது. ஆகவே, இந்த இடங்கள் அவர்களுக்கு நலம் பயக்கும் வகையிலும், பயனுள்ள வகையிலும் இருத்தல் அவசியம். ‘பயன்படுதல்’ என்பது பொருளாதாரம் சார்ந்த பயனாக மட்டுமே இருக்கவேண்டிய அவசியம் இல்லை. சூழல்சார் பயன்கள் (Ecological Benefits) (தூய்மையான நீர், காற்று போன்றவை), மனநலன் சார்ந்த பயன்கள் (Psychological benefits of nature) (இயற்கையான வாழிடங்களுக்கு அருகில் வாழ்ந்து அவற்றைக் கண்டு அனுபவித்தல்), இயற்கை மூலதன பயன்கள் (Natural Capital) (மனிதச் சமுதாயத்திற்கு உதவும் வளங்குன்றாத மண், காற்று, நீர் முதலியன), சமூக மூலதன (Social Capital) பயன்கள் (பொது நன்மைக்காகப் பாடுபடுதல் முதலானவை) இவை யாவுமே கானக மீளமைத்தலின் பயன்களே என்பதைப் பொதுமக்களுக்கு உணர வைக்க வேண்டும். மீளமைக்கப்பட்ட பகுதி நாம் அனைவரின் சொத்து எனும் எண்ணமும், அந்த இடம் அங்குள்ள அனைவரது மனதிற்கும் நெருக்கமானதாகவும் அமைய வேண்டும்.
மீளமைப்பின் பயணத்தையும், முறைகளையும், அனைவருடனும் பகிரவும் கொண்டாடவும் வேண்டும்
மீளமைப்பு பல சுவாரசியமான பணிகளையும், அனுபவங்களையும் உள்ளடக்கியது. விதைகளைச் சேகரித்தல், நாற்றுப் பண்ணையில் அவற்றை வைத்து வளர்த்தல், பத்திரமாக அவற்றைச் சரியான இடங்களில் நட்டு வைத்தல், அவை வளர்வதைக் கண்டு பூரித்தல், அங்கு வரும் பூச்சிகளையும், பறவைகளையும், மற்ற கானுயிர்களையும் பார்த்து மகிழ்தல் என பல அனுபவங்களைத் தரும். இவற்றையெல்லாம் அனைவரிடமும் பகிரவும், அந்த நிலவமைப்பில் பன்னெடுங்காலமாக வாழ்பவர்கள் இந்த அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை அளிக்கவும் வேண்டும். அவர்களே இதையெல்லாம் கொண்டாடுவதற்கான முன்னெடுப்புகளைச் செய்யவும் வேண்டும்.
மரக்கன்று நடுதல்: அறிவியல் பூர்வமாகத்தான் செயல்படுகிறோமா? எனும் தலைப்பில் 19-03-2023 தி இந்து தமிழ் திசை நாளிதழின் ‘களஞ்சியம்’ இணைப்பிதழில் வெளியான கட்டுரையின் முழு பதிப்பு
ஒரு மழைக்காட்டு விதையின் பயணம்
காட்டுப்பாதையெங்கும் சிதறி கிடங்கின்றன விதைகள். கிருஷ்ணா மெல்லக் குனிந்து அவற்றை எடுத்து தான் கொண்டுவந்த பையில் சேகரித்துக்கொண்டிருக்கிறான். கிருஷ்ணாவிற்குத் தெரியும் இவை சாதாரண விதைகள் அல்ல என்று. இனி வரும் காலங்களில் வளர்ந்து பெரிய மரமாகி சிங்கவால் குரங்கிற்கும், பலவிதமான பழம் உண்ணும் பறவைகளுக்கு உணவளிக்கும், பெரிய இருவாசியும் (Great Hornbill), பறக்கும் அணிலுக்கும், மலையணிலுக்கும் கூடமைக்க இடம் கொடுக்கும், யானைகூட்டத்திற்கு நிழலளிக்கும்…
சாலையோரத்தில் இருந்த ஒரு காட்டுக்கொடியில் பழம் பழுத்திருந்தது. அதன் கீழே அப்பழத்தின் விதையைக் கொண்ட எச்சம் சாய்ந்து கிடந்த மரத்தின் மீது கிருஷ்ணா பார்த்தான். அந்த எச்சத்தைப் பார்த்த உடனே அது பழுப்பு மரநாயினுடையது என்பதை அவன் கண்டுகொண்டான். அக்காட்டுக்கொடியின் (Liana) தண்டு மென்மையானது அல்ல, அது ஒரு சிறிய மரத்தின் அளவிலும், மிக உறுதியானதாகவும் இருந்தது. இவை காட்டுமரங்களின் மேல் பின்னிப்பினைந்து பழுப்பு மரநாயும், சிங்கவால் குரங்குகளும் தரையின் கீழ் இறங்காமலேயே இக்கொடிகளைப் பற்றி மரம் விட்டு மரம் செல்ல உதவிசெய்யும். அதற்கு கைமாறாக இவ்விலங்குகள் இக்காட்டுகொடியின் பழத்தை உண்டு தமது எச்சத்தின் வழியாக அவற்றின் விதையை வெவ்வேறு இடங்களுக்கு பரப்பும்.
கிருஷ்ணா அந்த காட்டுக்கொடியின் விதையையும், பலவிதமான மரவிதைகளையும் ஒரு பையின் சேகரித்து அருகில் இருந்த நாற்றுப்பண்ணைக்கு வந்தான். சேகரித்த விதைகளை ஒவ்வொன்றாக மண் நிரம்பிய பைகளில் நட்டு வைத்தான். ஏற்கனவே நட்டு வைத்த பலவிதமான மரவிதைகளில் சில முளைவிட ஆரம்பித்திருந்தன. மூன்று வருடத்திற்குமுன் நடப்பட்ட விதைகள் கிட்டத்தட்ட 2-3 அடி உயரத்திற்கு வளர்ந்திருந்தது. இம்மர நாற்றுகளெல்லாம் சாதாரணமானவை அல்ல. இவையனைத்தும் பல்லுயிர்த்தன்மைக்குப் பெயர்போன மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் இருப்பவை. நாற்றுப்பண்ணை இருக்குமிடம் வால்பாறை.
பத்து வருடங்களுக்கு முன் செயலார்வம் மிக்க, காட்டுயிர் ஆராய்ச்சியாளர் குழு ஒன்று மழைகாட்டு மீளமைப்புத்திட்டத்தை இங்கு ஆரம்பித்தது. திவ்யா முத்தப்பா, சங்கர் ராமன், ஆனந்த குமார் முதலியோர் அப்பகுதியின் பூர்வீகக் குடியினரான காடர்களில் உதவியுடன் 2000ம் ஆண்டு வால்பாறையில் இத்திட்டத்தைத் தொடங்கினர். இவர்களின் ஒரே குறிக்கோள் இப்பகுதியிலுள்ள சீரழிந்த நிலையிலுள்ள மழைக்காட்டுத்தீவுகளை அம்மண்ணுக்குச் சொந்தமான மரங்களை நட்டு மீளமைப்பதுதான் (Rainforest Restoration).
அது என்ன மழைக்காட்டுத்தீவு? அதற்கு முதலில் மழைக்காடுகளைப்பற்றியும் (Tropical rainforest)அவற்றின் முக்கியத்துவத்தையும் பற்றி அறிந்திருக்க வேண்டும்.
அதிக மழையும், சூடான தட்பவெப்பமும், உயரமான மரங்களும் கொண்ட பூமத்தியரேகைப்பகுதியில் காணப்படும் காட்டுப்பகுதியே மழைக்காடுகளாகும். மழைக்காடுகள் ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, மத்திய மற்றும் தென் அமெரிக்கப்பகுதிகளில் பரவியுள்ளது. மழைக்காடு பல்லுயிரியத்தில் மிகச்சிறந்தது. இப்பூமியின் பரப்பளவில் 2%கும் குறைவாகவே இருந்தாலும் இவ்வுலகின் 50%கும் மேற்பட்ட தாவரங்களையும் விலங்குகளையும் தனதே கொண்டுள்ளது. உலகில் வேறெங்கும் வசிக்காத உயிரினங்கள் பலவற்றை (ஓரிட வாழிவிகள் – Endemics) இம்மழைக்காடுகளில் காணலாம்.
பூமத்திய ரேகைக்கு அருகாமையில் அமைந்துள்ளதால் அதிக சூரிய ஒளியைப் பெற்று தாவரங்கள் ஒளிச்சேர்க்கையினால் இவ்வொளியைச் சக்தியாக மாற்றுகின்றன. தாவரங்களில் சேமிக்கப்பட்ட அபரிமிதமான இச்சக்தியே மழைக்காட்டிலுள்ள விலங்குகளுக்கு உணவாக அமைகிறது. அதிக உணவு இருப்பதால் அதிக விலங்குகளும் மழைக்காடுகளில் வாழ்கின்றன. இப்புவியின் உயிர்ச்சூழக்கு மழைக்காடுகளின் சேவை மிகவும் அத்தியாவசியமானது. ஏனெனில் மழைக்காடுகள் பலவிதமான தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் உறைவிடமாகிறது, உலகின் தட்பவெப்பநிலையை நிலைநிறுத்துகிறது, வெள்ளம், வறட்சி மற்றும் மண்ணரிப்பிலிருந்து பாதுகாக்கிறது, பலவித மூலிகைகள் மற்றும் உணவிற்கு மூலாதாரமாக இருக்கிறது.

உலகின் பல்லுயிர் செழுப்பிடங்களில் ஒன்றான மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் இருக்கும் மழைக்காடுகள் பல அரிய உயிரினங்களின் வீடாகவும், நதிகளின் மூலமாகவும் விளங்குகின்றது
இப்புவிக்கும், மனிதகுலத்திற்கும் தேவையான இப்படிப்பட்ட மழைக்காடுகள் உலகில் எல்லா பகுதிகளிலும் சகட்டுமேனிக்கு அழிக்கப்பட்டன, தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இவ்விதமான மழைக்காடுகள் அடர்ந்து இருப்பது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், அஸ்ஸாம், அருனாசல பிரதேசம் போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும் தான். மழைக்காடுகளைப் பற்றி மேலும் கீழ்கண்ட உரலியில் அறியலாம்
http://hindi.mongabay.com/tamil/kids/
மழைக்காடுகள் மிகுந்திருந்த மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தேயிலை, காப்பி போன்ற ஓரினப்பயிர்த்தோட்டங்களுக்காகவும், நீர்மின் திட்டங்களுக்காகவும், வெட்டுமரத்தொழிலுக்காகவும் கடந்த சில நூற்றாண்டுகளாக வெகுவாக திருத்தப்பட்டன. இதனால் மழைக்காடுகள் பல இடங்களில் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, தொடர்பற்று துண்டுதுண்டாகிப்போனது. இப்படிப்பட்ட இடங்களில் ஒன்றுதான் மேற்குத்தொடர்ச்சிமலையிலுள்ள ஆனைமலைப் பகுதியில் இருக்கும் வால்பாறை. இங்கு கண்ணுக்கெட்டும் தூரம் வரை பச்சைப்பசேலென தேயிலைத்தொட்டங்களைக் காணலாம். காப்பி, தேயிலை, ஏலம், யூக்கலிப்டஸ் போன்ற ஓரினத்தாவரத் தோட்டங்களின் நடுவே இவை பயிரிடத்தகுதியில்லாத இடங்களில் இன்னும் திருத்தி அமைக்கப்படாத மழைக்காடுகள் சிறியதும் பெரியதுமாக ஆங்காங்கே தீவுகளைப்போல காட்சியளிக்கும். இவையே மழைக்காட்டுத்தீவுகள் (Rainforest fragment), இங்குள்ள மக்கள் இவற்றை துண்டுச்சோலை என்றழைக்கின்றனர்.

அணை நீர்ப்பரப்பும், தேயிலைத் தோட்டமும் சூழ, மத்தியில் அமைந்திருக்கும் (இளம்பச்சை எல்லைக்கோட்டுக்குள்) மழைக்காட்டுத்தீவு. இதில் வாழும் பல உயிரினங்கள் வாழ்நாள் முழுதும் இத்துண்டுச்சோலையை விட்டு வேறெங்கும் இடம்பெயர முடியாது.
இத்துண்டுச்சோலைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் வால்பாறையைச்சுற்றிலும் ஆனைமலை புலிகள் காப்பகம், பரம்பிகுளம் புலிகள் காப்பகம், வாழச்சால் வனப்பகுதி, எரவிகுளம் தேசிய பூங்கா, சின்னார் சரணாலயம் போன்ற தொடர்ந்த பரந்து விரிந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் அமைந்துள்ளன. இதனால் சுற்றிலும் வனத்தைக் கொண்ட வால்பாறை பகுதியிலும் பலவிதமான அரிய, அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகளையும், தாவரங்களையும் பார்க்க முடியும். இந்த உயிரினங்களுக்கெல்லாம் புகலிடமாக இத்துண்டுச்சோலைகள் உள்ளன. ஆகவே இந்தச் சிறிய வனப்பகுதிகளை பாதுகாப்பது இன்றியமையாதது. ஆனால் மக்கள்தொகை பெருக்கத்தால் வனச்செல்வங்கள் நாளுக்கு நாள் அருகிவரும் நிலையில் இந்த துண்டுச்சோலைகளும் அதிலிள்ள உயிரினங்களும் கூட அபாயநிலையில் உள்ளன. திருட்டு வேட்டை, வீட்டு உபயோகத்திற்காக மரங்களை வெட்டுதல், களைகள் பெருகி காட்டிலுள்ள தாவரங்களை வளரவிடாமல் தடுத்தல், ஓரினப்பயிர்களுக்காக இச்சிறிய காடுகளையும் கூடத் திருத்தி அமைத்தல், இத்துண்டுச்சோலைகளின் உள்ளேயும் ஓரமாகவும் செல்லும் சாலைகளை விரிவுபடுத்து போன்ற காரணங்களினால் இத்துண்டுச்சோலைகளும் இதில் வாழும் உயிரின்ங்களும் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து வருகின்றன.
வால்பாறை மனித-விலங்கு எதிர்கொள்ளலுக்கு பெயர் போன இடம். யானைத்திரள் மக்கள் குடியிருப்புகளின் அருகில் வருவதும், மதிய உணவுக்கூடங்களிலும், ரேஷன் கடைகளிலும் வைத்திருக்கும் அரிசி, பருப்பு மூட்டைகளை உட்கொள்வதும், சிறுத்தைகள் மனிதர்களைத் தாக்குவது போன்ற விபத்தும் அவ்வப்போது இங்கு நிகழும். வால்பாறைப் பகுதியிலுள்ள துண்டுச்சோலைகள் இல்லையெனில் இவ்வகையான மோதல்கள் பன்மடங்காகப் பெருகும் வாய்ப்புள்ளதால் இப்பகுதிகளைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆகவே அரசுசாரா நிறுவனமான இயற்கை காப்பு கழகத்தைச் (Nature Conservation Foundation)சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இப்பகுதியிலுள்ள தனியார் தேயிலை மற்றும் காப்பித் தோட்ட உறிமையாளர்களான பாரி அக்ரோ, டாடா காப்பி, பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன், ஹிந்துஸ்தான் லீவர் (தற்போதைய உரிமையாளர் – வுட் பிரையர் குரூப்) முதலிய நிறுவன அதிகாரிகளிடம் அவர்களுடைய இடங்களிலுள்ள துண்டுச்சோலைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து சிதைந்துவரும் இம்மழைக்காட்டுத்தீவுகளை மீளமைக்க அனுமதி பெற்றனர்.
இந்த மழைக்காட்டு மீளமைப்புத் திட்டம் தனித்தன்மை வாய்ந்தது. ஏனெனில் காட்டுயிர் பாதுகாப்பும், ஆராய்ச்சியும் பொதுவாக அரசுக்குச் சொந்தமான பாதுகாக்கப்பட்ட இடங்களில் தான் நடக்கும். ஆனால் வால்பாறை பகுதி தனியாருக்குச் செந்தமான மேலே குறிப்பிட்ட பல நிறுவனங்களுக்குச் சொந்தமானவை. இந்நிலங்களிலேயே இத்துண்டுச்சோலைகள் அமைந்துள்ளன. இந்த மீளமைப்புப் பணியில் உதவ காட்டுயிரியலாளர்கள், ஆனைமலைப்பகுதியின் பூர்வீகக்குடியினரான காடர்களை வேலைக்குச் சேர்த்துக்கொண்டுள்ளனர். பல தனியார் நிறுவனங்களும், காட்டுயிரியலாளர்களும், உள்ளூர் மக்களும் இணைந்து பல்லுயிர் பாதுகாப்பிற்காக கூட்டு முயற்சி செய்வதாலேயே இத்திட்டம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
அனுமதியும் இடமும் கிடைத்தாகிவிட்டது. அடுத்த கட்டமாக 800-1300 மீ உயரத்திலிருக்கும் மழைக்காட்டுப்பகுதியில் தென்படும் மரங்களின் பட்டியலை மீளமைப்புக் குழுவினர் தயார் செய்து, சாலையோரங்களில் விழுந்து கிடக்கும் அம்மரங்களின் விதைகளைச் சேகரித்து நாற்றுப்பண்ணையில் வைத்து வளர்க்க ஆரம்பித்தனர். விதைகள் முளைவிடுவதும் வேறு இடத்தில் கொண்டு சென்று நடுவதற்கான முதிர்ச்சியை அடைவது மரத்திற்கு மரம் மாறுபடும். சில மரவகைகள் முளைவிடுவதற்கே பல மாதங்கள் ஆகும். மழைக்காட்டு மர விதைகளை தினமும் தண்ணிர் ஊற்றி, இயற்கை உரமிட்டு பூச்சிகளிடமிருந்தும், கொறிக்கும் எலிகளிடமிருந்தும் காப்பாற்றி பிள்ளைகள் போல வளர்க்கப்படுகிறது. பாதுகாப்பாகவும், மிகுந்த கவனத்துடனும் வளர்க்கப்பட்ட இந்நாற்றுகள் 3-4 ஆண்டுகள் கழித்து தென்மேற்குப்பருவ மழைக்காலங்களில்தான் பண்ணையை விட்டு துண்டுச்சோலைகளில் கொண்டு சென்று நடப்படுகின்றன. கொட்டும் மழையில், மலைச்சரிவுகளில், அட்டைகள் இரத்தம் உறிய குழி தோண்டி, அக்குழியில் சிறிது இயற்கை உரமிட்டு, உறைகளில் அடைபட்டிருந்த வேர்களைக்கொண்ட மழைக்காட்டு மர நாற்று அது இருக்க வேண்டிய இடத்திற்கு கொண்டு சேர்க்கிறார்கள் இம்மீளமைப்புக் குழுவினர்.
நம் ஊர்களில் நடக்கும் மரம் நடும் விழாக்களில் சம்பிரதாயத்திற்கு நினைத்த இடத்தில் ஒரு மரத்தை நட்டுவிட்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்துவிட்டு அதன்பின் அதை திரும்பிக்கூட பார்க்கமாட்டோம். ஆனால் இது அப்படியல்ல. எந்த இடத்தில் எவ்வகையான மரங்களை நடுவது என்பது முன்பே தீர்மானிக்கப்படுகிறது (மலையின் உயரத்திற்கு ஏற்றாற்போல் அவ்வுயரத்திலிருக்கும் தாவர வகையும் மாறுபடும்). நடுவதற்கு முன் அவ்விடங்களில் களைச்செடிகள் அகற்றப்படுகின்றன. துண்டுச்சோலை அதிகமாக சிதைக்கப்பட்டிருந்தால் அதற்குத் தகுந்தவாறு அதன் ஓரங்களில் வெட்டவெளியில் வளரும் மரவகைகளும், மூடிய விதானத்தினுள்ளே நிழலின் கீழ் வளரும் மரங்களும் நடப்படுகிறது. நட்டுவைக்கப்படும் ஒவ்வொரு நாற்றிலும் அடையாளத்திற்காக பளிச்சென்று தெரியும் நிறத்தில் சிறிய பிளாஸ்டிக் பட்டைகள் கட்டிவைக்கப்படுகின்றன. இதை வைத்து ஒவ்வொரு ஆண்டும் நடப்பட்ட மொத்த நாற்றுகளில் எத்தனை உயிர்பிழைக்கின்றன எப்பது கணக்கிடப்படுகிறது. நாற்றுகளை நட்டபின் அவ்வப்போது இடத்திற்குத் தகுந்தாற் போல் அப்பகுதியில் வளரும் களைகள் அப்புறப்படுத்தப்படுகின்றன. இது நட்டுவைக்கப்பட்ட மழைக்காட்டு நாற்று வளர ஏதுசெய்கிறது. ஓரளவிற்கு இந்நாற்றுகள் வளர்ந்தபின் அவற்றின் நிழலுக்கடியில் களைகள் வளராது.
கடந்த 12 ஆண்டுகளாக வால்பாறைப் பகுதியில் மொத்தம் சுமார் 50 ஹெக்டேர் பரப்பில் கிட்டத்தட்ட 50,000 ஆயிரம் நாற்றுகள் நடப்பட்டுள்ளன. இவையணைத்தும் ஒரே வகையானவை அல்ல. மழைக்காட்டில் வளரும் மரங்கள், பெருங்கொடிகள், பிரம்பு என சுமார் 150 வகையான தாவரங்களை சிதைந்துபோன மழைக்காட்டுத் துண்டுச்சோலையிலும், காப்பித்தோட்டங்களுக்கு நிழல் மரமாகவும் நடப்பட்டுள்ளன. வனத்திலுள்ள ஒரு மரத்தை வெட்டிச்சாய்க்க எத்தனை மணிநேரங்கள் ஆகும்? 50 ஹெக்டேர் பரப்புள்ள வனத்தை அழிக்க எவ்வளவு நாளாகும்? ஆனால் ஒரு விதையை முளைக்க வைத்து வளர்த்து ஆளாக்கி அதனிடத்தில் கொண்டு சேர்த்து, கவனமாக பராமரித்து பாதுகாத்த பின் அம்மரம் அடைந்த உயரம் எவ்வளவு தெரியுமா? சுமார் 10 லிருந்து 15 மீட்டர். இதற்கு 12 ஆண்டுகள் பிடிக்கிறது!

மீளமைக்கப்பட்ட ஒரு மழைக்காட்டுப் பகுதி.
மழைக்காட்டு நாற்றுகளை நடும் முன்னும் (இடது) மூன்று ஆண்டுகளுக்குப் பின்னும் (வலது).
ஒரு மழைக்காட்டு மர விதை முளைத்து, துளிர் விட்டு, நாற்றாகி, மரமாக உயர்ந்து வளர்வதற்குள் பல விதமான இன்னல்களை சந்திக்க நேரிடுகின்றது. வறட்சியிலிருந்தும், நாம் காட்டுக்குள் கொண்டு செல்லும் ஆடு, மாடுகளிடமிருந்தும், அங்கு வாழும் தாவர உண்ணிகளிடமிருந்தும், சூரிய ஒளிக்காக, நீருக்காக அதனைச்சுற்றியுள்ள தாவரங்களிடமிருந்தும், களைச்செடிகளிடமிருந்தும் எல்லாவற்றிற்கும் மேலாக மரவெட்டியின் கோடாலியிடமிருந்தும் தப்பிக்க வேண்டும்.
கிருஷ்ணாவும், இயற்கை காப்பு நிறுவனத்தின் மழைக்காட்டு மீளமைப்புத் திட்டக் குழுவினரும், இந்த மழைக்காட்டு மரங்களின் நெடுந்தூரப் பயணத்தை தொடங்கி மட்டுமே வைத்துக்கொண்டிருக்கின்றனர். எந்த ஒரு பயணத்திற்கும் முக்கியமானது நாம் எடுத்து வைக்கும் முதல் படிதானே. சேர வேண்டிய இடத்தை அடைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில்தானே பயணத்தைத் தொடங்குகிறோம். அதைப்போலவே இவர்களும், தாம் நட்டுவைக்கும் இம்மரங்கள் தழைத்து, பிற்காலத்தில் வானை முட்டும் அளவிற்கு நெடுந்துயர்ந்து, இங்கு திரியும் பெரிய இருவாசிகளுக்கும், பழுப்பு மரநாய்களுக்கும் பழங்களை அளித்து இவை இம்மரங்களின் விதைகளைப் பல்வேறு இடங்களுக்குப் பரப்பி காட்டினைச் செழிக்கச்செய்யும் என நம்புகிறார்கள். நம்பிக்கைத்தானே வாழ்க்கையே!
11th March 2012 அன்று தினமணி நாளிதழின் “கொண்டாட்டம்” ஞாயிறு இணைப்பில் வெளியான கட்டுரை இது. அக்கட்டுரைக்கான உரலி இதோ:
http://dinamani.com/weekly_supplements/sunday_kondattam/article888141.ece
மேற்குத்தொடர்ச்சி மலையின் மீளமைக்கும் வழிமுறைகளை விளக்கும் ஒரு சிறு நூலை இங்கு காணலாம் (PDF)
மேலும் விவரங்களுக்கு, இயற்கை காப்புக் கழகத்தின் (NCF) மழைகாட்டு மீளமைப்புத் திட்டதினை விளக்கும் இணையத்தளத்தினைக் (http://www.ncf-india.org/restoration/) காணவும்.
மழைக்காட்டு மீளமைப்புத் திட்டத்தினைப் பற்றிய குறும்படத்தை இங்கே காணலாம்.