Posts Tagged ‘river tern’
கருவயிற்று ஆலாவின் வாழ்க்கை
ஓய்வின்றி சதா சுற்றித் திரிந்து கொண்டு இருப்பவர்களையும், பறக்காவட்டிகளையும் குறிக்கும் விதமாக கிராமங்களில் அவர்களை ‘ஏண்டா இப்படி ஆலாப் பறக்குற?’ என்பார்கள். ஆலாக்கள் பொதுவாக அதிகம் உட்காராமல் நீர்நிலைகளின் மேல் பறந்து கொண்டே இருக்கும். ஒரு வேளை இந்தப் பறவையைப் பார்த்துத்தான் அந்த சொலவடை வந்திருக்குமோ என்னவோ.
ஆலாக்கள் மிகவும் அழகான பறவைகள். கடலோரங்களில் பல வகையான ஆலாக்களைக் காணலாம் இவை அனைத்தும் வலசை வருபவை. உள்நாட்டு நன்நீர்நிலைகளில் குறிப்பாக ஆறுகளிலும், பெரிய ஏரி, நீர்த்தேக்கங்கள் போன்ற இடங்களில் பொதுவாக ஆற்று ஆலாவையும் (River Tern), வலசை வரும் மீசை ஆலாவையும் – Whiskered tern – (ஜுன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் நீங்கலாக) காணலாம். மூன்றாவதான கருவயிற்று ஆலா (Black-bellied tern) சற்றே சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இவை பெரும்பாலும் ஆறுகளில் மட்டுமே தென்படுகின்றன.
கருவயிற்று ஆலாக்கள் இந்தியத் துணைக்கண்டத்திலும் (இலங்கையைத் தவிர), தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பரவியுள்ளன. எனினும் இந்தியாவைத் தவிர ஏனைய நாடுகளில் அவற்றின் நிலை மிகவும் மோசமாகவே உள்ளது. வியட்நாமிலும், கம்போடியாவிலும் இவை முற்றிலுமாக அழிந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. மியன்மாரிலும், தாய்லாந்திலும் அண்மைக் காலங்களில் பார்த்ததாக ஏதும் தகவல்கள் இல்லை. இந்தியாவில் கூட ஒரு சில பகுதிகளில் உள்ள பெரிய ஆறுகளில் மட்டுமே ஆங்காங்கே இவை தென்படுகின்றன. வட இந்தியாவில் ஒரு சில நதிகளின் சில பகுதிகளில் இவற்றை ஓரளவிற்கு அடிக்கடி பார்க்க முடியும். இந்தியாவில் ஆற்றுப் பகுதி காட்டுயிர்களுக்கென பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டது உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ‘தேசிய சம்பல் காட்டுயிர் சரணாலயம்’ மட்டுமே. அதுபோலவே காவிரி ஆறு கர்நாடகாவில் உள்ள காவிரி காட்டுயிர் சரணாலயம், அதன் தொடர்ச்சியான தமிழகத்தில் உள்ள காவேரி வடக்கு காட்டுயிர் சரணாலயம் வழியே பாய்வதால் அங்குள்ள இடங்களும் ஓரளவிற்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு பகுதியிலும் இவ்வகை ஆலாக்களின் வாழிடம் ஓரளவிற்கு பாதுகாப்பாக இருக்கிறது. எனினும் இவற்றின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதால் பன்னாட்டு இயற்கை வள பாதுகாப்பு நிறுவனம் (International Union for Conservation of Nature – IUCN) இவற்றை சிவப்புப் பட்டியலில் (Red list) சேர்த்து, அதிக அபாயத்தில் (Endangered) உள்ள பறவை இனங்களின் பிரிவில் வைத்துள்ளது.
இவை ஆற்றின் இடையே உள்ள சிறு மணல் திட்டுகளிலும், ஆற்றுத் தீவுகளிலும் தரையில் கூடமைக்கின்றன. ஆற்றுப் படுகையில் விவசாயம் செய்தல், ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டுவதால் இவற்றின் வாழிடம் சிதைதல், அழிதல், இவை முட்டை வைக்கும் காலங்களில் தடுப்பனைகளில் இருந்து திடீரென தண்ணீரைத் திறந்து விடுவதால் எல்லாக் கூடுகளும் நீருக்குள் மூழ்கிப் போதல், ஆற்று மணல் சூறையாடல், ஆலைக் கழிவுகளும், பூச்சிகொல்லிகளும் ஆற்றில் கலந்து நீரை மாசடையச் செய்தல், இவற்றின் முட்டைகளை தெரு நாய்கள், பூனைகள், மனிதர்கள் தின்பதற்காக எடுத்துச் செல்லுதல் முதலிய பல காரணங்களால் எண்ணிக்கையில் வெகுவாகக் குறைந்தும், பல இடங்களில் இவை அற்றும் போய்விட்டன.
தமிழகத்தில் இந்தப் பறவையின் பரவல், பாதுகாப்பு நிலை குறித்த தரவுகளும், புரிதலும் மிகக் குறைவு. இச்சூழலில் அண்மையில் கொள்ளிடம் ஆற்றில், தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள வாழ்க்கை, திருமானூர், அணைக்கரை பகுதிகளில், இப்பறவை பதிவு செய்யப்பட்டது. ஒரு நாள் மாலை இப்பறவையைக் பார்க்க அங்கு சென்றேன். அகண்ட ஆற்றில், நூலிழை போல நீர் ஓடிக்கொண்டிருந்தது. சென்ற சிறிது நேரத்திலேயே கரு வாயிற்று ஆலாவைக் கண்டுவிட்டேன். அங்கு இருந்த ஒரு மணி நேரத்தில் 4 ஆலாக்களை தனித்தனியே கண்டேன். சிறிய ஓடையைப் போல ஓடிக்கொண்டும், அங்காங்கே தேங்கியும் கிடந்த நீரின் மேல் தாழப் பறந்துச் சென்றன அவை. மாலை ஆகஆக நூற்றுக்கணக்கான சின்ன தோல்குருவிகள் (Small Pratincole) பறந்து சென்றன. இவையும் ஆலாக்கள் போல மணலில் இலேசாக குழிதோண்டி அதில் ஓரிரு முட்டைகள் இடும். அந்தி சாயும் நேரம் வரை இருந்து சிவந்த வானத்தின் பின்னணியில் ஆலாக்களும், தோல்குருவிகளும் பறந்து சென்ற அழகான காட்சியைக் கண்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். திரும்பி வரும்போது சில பகுதிகளில் ஆற்றின் நடுவே சிவப்புக் கொடிகள் நட்டுவைக்கப்பட்டிருப்பதைக் பார்த்தவுடன் ஆலாவைக் கண்ட மகிழ்ச்சியெல்லாம் போய் விட்டது. மணல் எடுக்கப் போவதற்கான அறிகுறி அது.
இதற்கு முன் திருமானூர் பகுதியில் மணல் எடுக்க கனரக வாகனங்களை எடுத்து வந்தபோது அருகில் உள்ள ஊர் மக்களே திரண்டு அதைத் தடுத்திருக்கிறார்கள். ஆற்றில் தண்ணீரும் சரியாக வருவதில்லை, ஆகவே ஆழ்குழாய் அமைத்து அந்த நீரையே பாசனத்திற்கு விடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருகிரார்கள் இப்பகுதி விவசாயிகள். ஒரு காலத்தில் 20-30 அடியில் கிடைத்த நீர், மணல் தோண்டுவதால் இப்போது 100 அடிக்கும் மேல் தோண்டிய பின்னர்தான் கிடைக்கிறது என்கிறார்கள் இப்பகுதி மக்கள். இதனாலேயே இங்கு மணல் தோண்டுவதை எதிர்க்கிறார்கள். அது மட்டுமல்ல, அருகில் உள்ள தஞ்சை, கும்பகோணம், திருச்சி போன்ற நகரங்களுக்கான குடிநீர் இந்த ஆற்றுக்குள் போடப்பட்டுள்ள ஆழ்குழாய்களில் இருந்துதான் எடுத்துச் செல்லப்படுகிறது.
ஆறு என்பது ஒரு இயற்கையான வாழிடம். ஒரு நுகர்வோரின் பார்வையிலேயே நாம் அதை அணுகுவதால் ஆற்றுக்கு நாம் இழைக்கும் அநீதிகள் நம் கண்களை மறைத்துவிடுகிறது. ஆற்று நீர், ஆற்றங்கரை, ஆற்றோரக்காடுகள், நாணல் புதர்கள், மணல் படுகை, மணல் திட்டுக்கள், பாறைகள், யாவும் ஆற்றின் அங்கம். அவை அனைத்தும் ஆற்றில் உயிர்வாழும் பல வகையான பூச்சிகள், மீன்கள், தவளைகள், முதலைகள், ஆமைகள், பறவைகள், நீர்நாய்கள் யாவற்றிற்கும் வாழிடமாகிறது. இந்த ஒட்டுமொத்த சூழலையும் பாதுகாக்க வேண்டியது நம் கடமை.

கரூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் மணல் அள்ளப்பட்டத்தை செவ்வக வடிவில்
இருக்கும் வடிவங்கள் மூலம் பார்க்கலாம். நிலவரைபடம்: கூகுள் (Image Courtesy: Google Earth)

கரூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் மணல் அள்ளப்பட்டத்தை செவ்வக வடிவில்
இருக்கும் வடிவங்கள் மூலம் பார்க்கலாம். நிலவரைபடம்: கூகுள் (Image Courtesy: Google Earth)
கரூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களின் வழியே ஓடும் காவிரி ஆற்றின் நில வரைபடத்தை GoogleEarth அல்லது Google Mapல் பார்த்தால் காவிரி ஆறு, மணலுக்காக எந்த அளவிற்கு சூரையாடப்பட்டிருகிறது என்பதைக் கண்கூடாகக் காணலாம். அழியும் அபாயத்தில் உள்ள கருவயிற்று ஆலாவின் வாழ்விற்கு மென்மேலும் துன்பங்கள் வந்தால் அந்தத் துன்பங்களை நாமும் விரைவில் அனுபவிக்க வேண்டி வரும். ஆற்று மணலுக்கு ஆசைப்பட்டு சிவப்புக் கொடியை நடுவதற்கு முன் இதையெல்லாம் நாம் யோசிக்க வேண்டும்.
கருவயிற்று ஆலாவின் வாழ்க்கை: சூறையாடப்படும் காவிரியின் பேசப்படாத வலி – இயற்கை அழிவும் பறவைகளும் https://tamil.thehindu.com/general/environment/article25971239.ece
எனும் தலைப்பில் தி இந்து உயிர்மூச்சு இணைப்பில் 12 ஜனவரி ஆண்டு வெளியான கட்டுரையின் முழு வடிவம்.
நீர்நிலைகளின் தூதுவர்கள் – நீர்நாய்கள்
சலசலவென ஒடிக்கொண்டிருந்தது ஆறு. ஆற்றின் நடுவில் பாறைகள் ஆங்கங்கே துருத்திக்கொண்டுடிருந்தன. அதைச் சுற்றி நீர் அல்லிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஆற்றின் கரையை வரிசையாக வளர்ந்திருந்த நீர் மத்தி (நீர் மருது) மரங்கள் அலங்கரித்திருந்தன. எனக்கு விருப்பமான மரங்களில் நீர் மத்தியும் ஒன்று. வழவழப்பான, வெண்ணிற மரத்தண்டு, ஆங்கங்கே உரியும் மரப்பட்டை, சிலவேளைகளில் ஓடும் நீரின் மத்தியில் வளர்வதாலேயே நீர்மத்தி எனப்பெயர் பெற்றது. இம்மரத்தை எங்கு கண்டாலும் அருகில் சென்று மரத்தண்டில் உள்ளங்கை பதிய தடவிக் கொடுத்துவிட்டு வருவது வழக்கம். முடியாத போது கண்ணாலாவது தடவிச் செல்வதுண்டு.
மாலை வேளை சூரிய ஒளி ஓடிக் கொண்டிருந்த நீரில்பட்டு தங்க நிறத்தில் தகதகத்தது. மீன் திண்ணிக் கழுகு ஒன்று தனது குழந்தைக் குரலில் கத்திக் கொண்டிருந்தது. இருநோக்கியில் ஆற்றின் ஒட்டத்தைக் கண்களால் துழாவிக் கொண்டிருந்த போது ஆற்று ஆலா ஒன்று தனது வெண்ணிற கத்தி போன்ற இறக்கைகளை மேலும் கிழும் அசைத்து பறந்து வந்தது தெரிந்தது. பறந்து கொண்டே தலையை அங்குமிங்கும் திருப்பி நிரின் மேற் பரப்பை நோட்டமிட்ட அந்த ஆலா சட்டென் நீரில் முழ்கி ஒரு மீனை தனது அலகால் பிடித்து வெளி வந்து தனது வசிகரமான சிறகசப்பைத் தொடர்ந்தது.

ஆற்று ஆலா Photo: Wikimedia Commons
இதுபோன்ற சுழலில்தான் முதன்முதலில் அங்கு ஒர் நீர்நாய் கூட்டத்தைக் கண்டேன். கரையோரத்தில் திடீரென நீரிலிருந்து தலையை மேலே தூக்கி அங்கும் இங்கும் பார்த்தது ஓர் நீர்நாய் அதை தொடர்ந்து மற்றொரு நீர்நாய் தலையை நீரிலிருந்து தலையை வெளியே நீட்டியது. நீர்முழ்கி கப்பலில் உள்ள பெரிஸ்கொப்பினை போல நீரிலிருந்து தலையை வெளியே நீட்டி சுற்றும் முற்றும் பார்த்து மீண்டும் ‘டபக்’ என தலையை உள்ளே இழுத்துக் கொண்டது. இதை கண்ட குதூகலத்தில் இருந்த போதே இவை இருந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் மணற்ப்பாங்கான் கரையில் அவை ஏறி அமர்ந்துக் கொண்டன. அதனைத் தொடர்ந்து இன்னும் இரு நீர்நாய்கள் வெளிவந்து அவற்றுடன் சேர்ந்து அமர்ந்துக் கொண்டன. சற்று நேரம் கூட சும்மா இல்லாமல் துருதுருவென ஒன்றின் மேல் விழுந்து விளையாடிக் கொண்டிருந்தன.
நான் இருந்தது காவேரியாற்றின் கரையோரம். ஹோக்கனெக்கல் சரகத்தில் உள்ள பிலிகுண்டு எனும் சிறிய ஊருக்கு காவேரி ஆற்றோரமாக நடந்து சென்ற போது கண்ட காட்சியிது. இது நடந்ததது சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு. அண்மையில் அங்கு மீண்டும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இந்த முறை நடந்து செல்ல நேரமில்லை. ஹோக்கனெக்கலில் இருந்து பிலிகுண்டுக்கு அந்த காட்டின் குறுக்கே தார் சாலை போடப்பட்டிருந்தது. சாலை வந்தால் போதும் ஓர் இடத்தின் தன்மையே மாறிவிடும். பிலிகுண்டு பகுதிக்கு செல்ல வனத்துறையிடம் அனுமதி பெற்று ஒரு குழுவாக அங்கு சென்றிருந்தோம். ஆனால் அப்படியெல்லாம் செய்யாமல் நான்கு, ஐந்து கார்களில் வந்த சுற்றுலாவினர் கூட்டம் ஒன்று, ஆற்றோரத்தில் காரை நிறுத்தி குடித்துக் கொண்டிருந்தார்கள். பல ஆண்டுகளுக்கு முன் நான் நடந்து சென்ற ஆற்றோரப் பகுதி முழுவதிலும் பிளாஸ்டிக் குப்பைகள் சேர்ந்து கிடந்தன. அந்த குடிமக்களை எல்லாம் கடந்து சென்று ஆற்றோரமாக நடந்து சென்றோம். சுமார் 50 நிமிட ஆற்றோர நடை பயணத்தில் பல வகையான பறவைகளையும் அழகிய மரங்களையும் கண்டோம். சட்டென எங்களில் ஒருவர் நீர்நாய் என கத்தினார். எதிர்கரையில் இரண்டு நீர்நாய்கள் துள்ளி குதித்து நீரில் நீந்திக் கொண்டிருந்தன. நீர்நாய்களை அங்கே மீண்டும் பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி.
நான் பார்த்துக் கொண்டிருந்தவை ஆற்று நீர்நாய்கள் (Smooth-coated otter Lutrogale perspicillata). ஆற்று நீர்நாய்களைப் பார்த்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. அவை ஒன்றொடுஒன்று விளையாட்டாக சண்டையிட்டுக் கொண்டு நீரில் முழ்குவதையும் பின்பு எதிர்பாராதவிதமாக முழ்கிய இடத்திலிருந்து சற்றுத்தொலைவில் மேல் எழும்பி நம்மை வியப்பில் ஆழ்த்தச் செய்யும். நீர்நாய்கள் குறும்புத்தனமும், மிகுந்த தைரியமும் கொண்டவை. அண்மையில் ஜிம் கார்பெட் புலிகள் காப்பகத்திற்கு சென்றபோது, அங்குள்ள ராம்கங்கா நதியில் நீர்நாய் ஒன்று தெளிந்த நீரினடியில் ஒரு மீனைப் போல நீந்திவருவதை உயரமான ஒரு பகுதியிலிருந்து பார்க்க முடிந்தது. இரண்டு கரியால் (Gharial) எனும் ஆற்று முதலைகள் அந்த நதிக்கரையோரம் வெயில்காய்ந்து கொண்டிருந்தன. நீரிலிருந்து வெளிவந்த அந்த நீர்நாய் அந்த முதலைகளில் ஒன்றின் வாலைக் கடித்தது. அந்த முதலை முகத்தைத் திருப்பாமலேயே வாலை வேகமாக அப்படியும் இப்படியும் ஆட்டி அந்த நீர்நாயை நெருங்க விடாமல் செய்தது. அந்த நீர்நாயும் சற்று நேரத்தில் நீருக்குள் சென்று மறைந்தது. இது போல காவிரி ஆற்றில் உள்ள முதலையை கூட்டமாக வந்த நீர்நாய்கள் கரையிலிருந்து நீருக்குள் விரட்டியடித்த சம்பவத்தினைப் பற்றிய குறிப்பு ஒன்று உள்ளது.
இந்தியாவில் மூன்று வகையான நீர்நாய்கள் உள்ளன. நீர்நாய்களின் முக்கிய உணவு மீன்களே. இதனால் ஆறு, ஏரி, நீர்த்தேக்கங்களில் மீன்பிடிப்போர்களுக்கு இவை தொந்தரவு கொடுக்கும் பிரணிகளாக கருதப்படுகின்றன. இதனால் இவை அவ்வப்போது கொல்லப்படுகின்றன. ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டுவதாலும், ஆற்றின் இயற்கையான போக்கை மாற்றியமைப்பதாலும், ஆற்று மணலை சுரண்டுவதாலும், இரசாயன கழிவுகளையும், ஏனைய கழிவுகளையும் ஆற்றில் கொண்டு சேர்ப்பதாலும், வேட்டு வைத்து மீன் பிடிப்பதாலும் (Dynamite fishing), வியாபார நோக்கத்தில் நம் நாட்டிற்குச் சொந்தமில்லாத மீன் வகைகளை (Invasive fishes)ஆற்றில் விட்டு வளர்ப்பதாலும், ஆற்றின் தன்மை சீர்கெட்டுப் போகிறது. நிலப்பகுதிகளில் இருக்கும் வனத்தை அழித்தால் அதன் விளைவையும், ஏற்பட்டிருக்கும் பாதிப்பையும் நாம் கண்கூடாகக் காண முடியும். எனினும் ஆற்றுக்கு நாம் இழைக்கும் பல கொடுமைகளை ஆறு பலவேளைகளில் வெளிப்படையாகக் காட்டிக்கொள்வதில்லை. ஆறு பல உயிரினங்களின் வாழிடம். ஆறு சீரழிக்கப்பட்டால் நீர்நாய்கள், முதலைகள், மேலும் ஆற்றைச் சார்ந்துள்ள இன்னும் பல உயிரினங்கள் வெகுவளவில் பாதிக்கப்படுகின்றன.
வாழிடச்சிதைவினால் ஒரு பக்கம் நீர்நாய்கள் பாதிப்படைந்தாலும், அவற்றை அழிவின் விளிம்பிற்குத் தள்ளுவது கள்ளவேட்டையே. அவற்றின் தோலுக்காக (pelt) இவை பெருமளவில் கொல்லப்படுகின்றன. நவநாகரிக ஆடை வடிவமைப்போர், பல மேல்தட்டு மக்கள் மற்றும் சில பாப் பாடகிகள் (ஜெனிபர் லோபஸ்-Jenifer Lopez போன்றவர்கள்) நீர்நாய், மின்ங் (Mink) முதலிய பல உயிரினங்களில் தோலினால் ஆன உடைகளை விரும்பி அணிகின்றனர். இதனால் கள்ளச் சந்தையில் நீர்நாய்களின் தோலுக்கு மதிப்பு அதிகம். இந்தியாவில் கொல்லப்படும் நீர்நாய்களின் தோல் கான்பூர், லக்னோ, கோட்டா, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி முதலிய நகரங்களில் உள்ள கள்ளச் சந்தையில் விலை போகின்றன. இங்கிருந்து நேபாளம், வங்காளதேசம் முதலிய நாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்டு அங்கிருந்து உலகின் பல மூலைகளுக்கு கள்ளத்தனமாக கொண்டு செல்லப்படுகின்றன.
இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களின் சந்திப்பில் அமைந்துள்ள தேசிய சம்பல் நதி சரணாலயத்தில் ஒரு காலத்தில் ஆற்று நீர்நாய்களைப் பொதுவாகக் காணமுடியும். அங்கு அவற்றினைப் பற்றிய ஆராய்ச்சியும் நடைபெற்றது. ஆனால் இன்று அங்கு ஒரு நீர்நாய்கூட இல்லை. ஆறு, ஏரி முதலிய நீர்நிலைகளின் சீரழிவை சுட்டிக்காட்டும் தூதுவர்களாக (Ambassador of wetlands) நீர்நாய்கள் கருதப்படுகின்றன. ஏனெனில் நீர்நாய்கள் நீர்நிலைகளின் ஒரு முக்கிய இரைகொல்லி (predator). அவற்றை ஒரு இடத்தில் கண்டால் அந்த நீர்ச்சூழல் ஓரளவிற்கு சீர்கெடாமல் இருக்கிறது என அர்த்தம். நீர்நாய்கள் இல்லாத ஒரு நீர்நிலை, புலிகள் இல்லாத வனப்பகுதிக்குச் சமம்.
பெட்டிச் செய்தி
நீர்நாய்கள் நீரிலும் நிலத்திலும் வாழ்வதற்கான தகவமைப்பைப் பெற்றுள்ளன. நீண்ட, மெல்லிய, நீந்தும் போது குறைந்த எதிர்ப்பைத் தரும் உடலமைப்பையும், விரலிடைத்தோலுடன் கூடிய கால்களையும் பெற்றுள்ளன. அடர்த்தியான உரோமத்தால் உடல் போர்த்தப்பட்டிருக்கும். ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகாவைத் தவிர உலகெங்கும் பரவலாக காணப்படுகின்றன.

1. ஆற்று நீர்நாய் (Photo: Kalyan Varma) 2. காட்டு நீர்நாய் (Photo: Kalyan Varma) 3. யூரேசிய நீர்நாய் (Photo: Wikipedia)
இந்தியாவில் மூன்று வகையன நீர்நாய்கள் தென்படுகின்றன. ஆற்று நீர்நாய் (Smooth-coated otter Lutrogale perspicillata), காட்டு நீர்நாய் (Oriental small-clawed otter Aonyx cinerea), மற்றும் யூரேசிய நீர்நாய் (Common otter Lutra lutra). யூரேசிய நீர்நாய் உலகில் பல பகுதிகளில் பரவி காணப்படுகிறது. அதிகாலை அல்லது அந்திவேளையில் இந்நீர்நாய்களின் இயக்கம் உச்சநிலையை அடைகிறது. ஆற்று நீர்நாய் இந்தியாவின் பெரும்பாலான இடங்களிலும், பாலஸ்தீனம், மலேசியா, சுமத்ரா, ஜாவா மற்றும் போர்னியோ ஆகிய பகுதிகளிலும் பரவி காணப்படுகின்றன. ஈராக்கிலும் சிறு எண்ணிக்கையில் இவை உள்ளன. சமவெளிகளிலும், வறண்ட பிரதேசங்களிலும் தென்படும். இவற்றை கழிமுகப் பகுதிகள், நீர்த்தேக்கங்கள், பெரிய ஏரிகள், ஆறுகள் போன்ற பகுதிகளில் பல வேளைகளில் கூட்டம் கூட்டமாக பார்க்க முடியும். பெரும்பாலும் பகலிலோ, அந்திக் கருக்கலிலோ இவை வெளிவரும். யூரேசிய மற்றும் ஆற்று நீர்நாய்களின் பிரதானமான உணவு மீன்களே. காட்டு நீர்நாய் சிறியது. ஏனைய நீர்நாய்களின் அளவில் பாதி இருக்கும். ஆற்று நீர்நாய் பரவியுள்ள பகுதிகளிலும் இந்த நீர்நாய் தென்படும். இது ஒரு இரவாடி. இவை பொதுவாக மலைப்பாங்கான வனப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் வசிக்கின்றன. இவை ஏனைய நீர்நாய்களைப் போல் மீன்களை மட்டுமே உண்ணாமல், நீர்வாழ் பூச்சிகள், தவளைகள், நத்தைகள், இறால்கள், சிறிய மீன்கள் முதலியவற்றை உணவாகக் கொள்கின்றன.
******
தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 4th November 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF ஐ இங்கே பெறலாம்.