Posts Tagged ‘road ecology’
சாலையோரக் காட்டுக்காசித்தும்பைகள்
சாலையோரச் சோலை: இளஞ்சிவப்பு நிற காட்டுக்காசித்தும்பைகள் (Impatiens sp.) மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே தென்படும் ஓர் அழகிய சிறு தாவரம். மலைப்பகுதியில் செல்லும் சாலையோரங்களில் இதுபோன்ற காட்டுக்காசித்தும்பைச் செடிகளும், தகரைகளும், பாசிகளும் வளர்ந்திருப்பதைக் காணலாம். இவை அவ்வழியே செல்வோரின் கண்களை குளிர்ச்சியடையச் செய்வது மட்டுமல்லாது, தமது வேரினால் மண்ணை இறுக்கப் பிடித்து மண்சரிவையும் தடுக்கின்றன.
தொடர்புள்ள கட்டுரை: இயற்கையை அழித்தா வளர்ச்சி?
இயற்கையை அழித்தா வளர்ச்சி?
கடந்த ஆகஸ்டு 2014 மற்றும் ஜனவரி 2015 நடந்த இரண்டே தேசிய காட்டுயிர் வாரியக் (National Board for Wildlife – NBWL) கலந்தாய்வுக் கூட்டங்களில், காட்டுயிர் சரணாலயங்களிலும் தேசிய பூங்கா பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் உள்ள சுமார் 2,300 ஹெக்டேர்கள் இயற்கையான வாழிடப் பகுதிகள், வளர்ச்சிப் பணிகளுக்காக எடுத்துக் கொள்வதற்காக ஆலோசனை செய்யப்பட்டது. சென்ற ஆண்டு செப்டம்பரிலிருந்து டிசம்பர் வரை நடந்த வன ஆலோசனை செயற்குழு (Forest Advisory Committee) கூட்டங்களில், சுமார் 3,300 ஹெக்டேர்கள் பரப்பு வனப்பகுதியை 28 வளர்ச்சித் திட்டங்களுக்காக எடுத்துக் கொள்ளவும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கோரிக்கைகள்யாவும் சாலை, இரயில் பாதை மற்றும் மின் தொடர் கம்பிகள் அமைக்கும் திட்டங்களுக்காகவே. இத்திட்டங்களில் பல பெரும்பாலும் ஒப்புதலும் பெற்றுவிடும்.
சுரங்கப் பணிகளுக்காகவும், விவசாயத்திற்காகவும் திருத்தப்பட்டு, நீர்த்தேக்கங்களின் கீழ் அமிழ்ந்து வனப்பகுதிகள் காணாமல் போகும் இவ்வேளையில், பல்லாயிரம் கி.மீ நீளங்களில் இயற்கையான வாழிடங்களை ஊடுருவி அமைக்கப்படும் , நெடிய சாலை, கால்வாய், இரயில் பாதை, மின்கம்பித் தொடர் போன்ற நீள் கட்டமைப்புத் திட்டங்கள் (Linear infrastructure Projects) நமது வனங்களை அபாயத்திற்குள்ளாக்குகின்றன.
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமும் (Ministry of Environment, Forest and Climate Change), இது போன்ற திட்டங்களுக்கு ஆதரவாக அதன் வரைமுறைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்திக் கொண்டே கொண்டே இருக்கிறது. உதாரணமாக, இந்த அமைச்சகம், இது போன்ற திட்டங்களை செயல்படுத்தும் மத்திய நிறுவனத்திற்கு மரங்களை வெட்ட கொள்கையளவில் அனுமதி அளித்துள்ளது, அதாவது வனப்பாதுகாப்புச் சட்டம் 1980ன் கீழ் முதல் கட்ட ஒப்புதலை அளித்துள்ளது. இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமானால் இது போன்ற திட்டங்களுக்கு கோட்ட வன அலுவலரின் (Divisional Forest Officer) அனுமதி மட்டுமே போதும். இதனால் வளர்ச்சிப் பணிகளுக்காக வனப்பகுதிகளை கையகப்படுத்தும் வேளையில், எடுத்துக் கொள்ளப்படும் வனப்பரப்பப்பிற்கு சரிசமமான இடத்தை வேறெங்கிலும் கொடுத்து ஈடுகட்டி, காடு வளர்ப்புத் திட்டங்கள் தொடர்பான இரண்டாம் கட்ட ஒப்புதல்கள் எதையும் பெறத்தேவையில்லை.
இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார மேம்பாட்டிற்கும், துரிதமாக இடம்விட்டு இடம் செல்லவும், சரியான நேரத்தில் செய்ய வேண்டிய சேவைகளுக்கும் சாலைகளும், மின் தொடர் கம்பிகளும் துணைபுரியும் என்பதென்னவோ உண்மைதான். ஆனால், அதே வேளையில் அவை இயற்கையான வாழிடங்களுக்கும், கிராமப்புறத்தில் வாழும் பொதுமக்களுக்கும், பழங்குடியினருக்கும் பல்வேறு வகையில் ஊறு விளைவிக்கின்றன. வாழிடங்களை துண்டாடுகின்றன. வனப்பகுதியின் வழியே செல்லும் சாலைகள் அகலமாகிக் கொண்டே போவதும் வாகனப் பெருக்கமும் காட்டுயிர்கள் இடம்பெயர்விற்கு தடையாக உள்ளன. இதனால் பெரும்பாலான காட்டுயிர்கள் சாலைகளைக் கடந்து செல்வதை தவிர்க்கின்றன. பல காட்டுயிர்களுக்கு சாலைகள் கிட்டத்தட்ட வனப்பகுதியின் குறுக்கே கட்டப்பட்ட மிக உயரமான சுவரைப் போலவோ அல்லது வெட்டப்பட்ட ஆழமான அகழியைப் போலவோதான். சாலை விரிவாக்கத் திட்டங்களும், நான்கு வழிச்சாலைகளும் பல காட்டுயிர்களின் இயற்கையான வழித்தடங்களை வெகுவாக பாதிக்கின்றன. உதாரணமாக, மத்திய இந்தியாவில் உள்ள பெஞ்ச் மற்றும் கான்ஹா புலிகள் காப்பத்தின் குறுக்கே போடப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை 7 அங்குள்ள மிக முக்கியமான காட்டுயிர் வழித்தடத்தை ஊடுருவி செல்கிறது செல்கிறது.
சாலைகள், மலைப்பாங்கான பகுதிகளில் வனப்பகுதியின் சீரழிவிற்கும், நிலச்சரிவிற்கும், மண் அரிப்பிற்கும் காரணமாகின்றன. இதை இமயமலைப் பகுதிகளிலும், மேற்குத் தொடர்சி மலைப்பகுதிகளிலும் தினம் தோறும் காணலாம். சிதைக்கப்படாத வனப்பகுதியைக் காட்டிலும், செங்குத்தான மலைச்சரிவில் போடப்பட்டுள்ள சாலையினால் பல நூறு மடங்கு நிலச்சரிவும், மண் அரிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது என 2006ல் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலைப்பாதையின் வழியே செல்லும் சாலையோரங்களில் உள்ள இயற்கையாக வளர்ந்திருக்கும் தாவரங்கள் சரிவில் இருக்கும் மண்ணை இறுக்கிப் பிடித்துக் கொள்ளவும், நிலச்சரிவினை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. ஆனால், சாலை இடும் பணிகள், ஓரிடத்தில் சுரண்டப்பட்ட மண், கப்பி முதலிய தேவையற்ற பொருட்களை சாலையோரங்களில் கொட்டிக் குவித்தல், இயற்கையாக வளர்ந்திருக்கும் சாலையோரத் தாவரங்களை வெட்டிச் சாய்த்தல், போன்ற அந்த நிலப்பகுதிக்கும், சூழலுக்கும் ஒவ்வாத வகையில் செய்யப்படும் போது, இயற்கையான சூழல் சீரழியவும், மண் அரிப்பு மென்மேலும் ஏற்படவும், களைச்செடிகள் பெருகவும் ஏதுவாகிறது.

சாலையோரங்களில் வாழும் இயற்கையான தகரை/பெரணி (Fern) தாவரங்களை (இடது) வெட்டி அகற்றுவதால் அங்கே உண்ணிச் செடி (Lantana camera) போன்ற களைச்செடிகள் மண்டும்.
இது மட்டுமல்ல, இலட்சக்கணக்கான காட்டுயிர்கள் சீறி வரும் வாகனங்களின் சக்கரங்களில் நசுங்கி உயிரிழக்கின்றன. சின்னஞ்சிறு பூச்சிகள், பல அரிய, உலகில் வேறெங்கிலும் தென்படாத தவளை மற்றும் ஊர்வன இனங்கள், பறவைகள், பெரிய காட்டுயிர்களான மான், சிறுத்தை, புலி ஏன் யானைகள் கூட சாலையில் அடிபட்டு உயிரிழந்து கொண்டிருப்பதை இந்தியாவில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் மூலமாக அறியமுடிகிறது. இந்த சில ஆய்வு முடிவுகளின் படி இந்தியாவில் நாள் ஒன்றிற்கு, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், சுமார் 10 உயிரினங்கள் மடிந்து போவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகை இன்னும் கூடுதலாகவே இருக்கக் கூடும். ஏனெனில், பதிவு செய்யப்படாமல் போன, சாலையில் உயிரிழந்த உயிரினங்களையும், வாகனத்தில் அடிபட்டு அதே இடத்தில் உயிரிழக்காமல் ஊனமாகவோ, சிறிது நாள் கழித்தோ, வேறிடத்திலோ இறந்து போனவற்றை நாம் அறிய முடியாத காரணத்தினால் அவை கணக்கில் வராது.
தினமும் எண்ணிலடங்கா காட்டுயிர்கள் மின்னோட்டமுள்ள கம்பிகளால் கொல்லப்படுகின்றன. திருட்டு வேட்டையர்கள் மின் கம்பிகளிலிருந்து திருட்டுத்தனமாக மின்சாரத்தை இழுத்து காண்டாமிருகம், மான்கள் என பல வகையான உயிரினங்களைக் கொல்கின்றனர். மின் கம்பிகளினூடே பறந்து செல்லும் போது எதிர்பாராவிதமாக பூநாரை (Flamingo), சாரஸ் பெருங்கொக்கு (Sarus Crane), பாறு கழுகுகள் (Vultures), கானல் மயில் (Great Indian Bustard) போன்ற பல வித பெரிய பறவையினங்கள் உயிரிழக்கின்றன. மின் வேலிகளால் யானைகளும் காட்டெருதுகளும் (Gaur) கூட மடிகின்றன. இரயில் தடங்களில் அரைபட்டும் பல உயிரினங்கள் தினமும் உயிரிழிக்கின்றன. எனினும் யானை முதலான பெரிய உயிரினங்கள் இவ்வாறு அடிபட்டுச் சாகும் போதுதான், இவை நமது கவனத்திற்கு வருகின்றன. இவ்வாறு தினமும் நடக்கும் காட்டுயிர் உயிரிழப்பு, நீள் கட்டமைப்புத் திட்டங்கள், காட்டுயிர்ப் பாதுகாப்பினை கவனத்தில் கொள்ளாமல் செயல்படுத்தப்படுவதையே காட்டுகிறது.
இந்த நீள் கட்டமைப்புத் திட்டங்களினால் ஏற்படும் பாதிப்பு அவற்றிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தைவிடவும் பன்மடங்கு அதிகம் என்பதே சோகமான உண்மை. சாலை, இரயில் தடம், மின் கம்பித் தொடர் இவற்றிற்காக அகற்றப்படும் பகுதியினால் இயற்கையான வாழிடத்திற்கு ஏற்படுத்தப்படும் பாதிப்பு அங்கு மட்டுமே இல்லாமல், அவ்வாழிடம் சிதைந்திருப்பதை அதன் ஓரங்களிலும், அதையும் தாண்டி அவ்வாழிடத்தினுள்ளே பல தூரம் வரையும் காண முடியும். இயற்கையான வாழிடத்தின் குறுக்கே செல்லும் ஒவ்வொரு கிலோ மீட்டர் சாலையும் குறைந்தது அதைச் சுற்றியுள்ள 10 ஹெக்டேர்கள் பரப்பிற்கு பாதிப்பினை ஏற்படுத்தும். கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் 2009ல் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாகக வனத்தின் உட்பகுதியினை விட சாலையோரங்களில் மரங்கள் சாவது இரண்டரை மடங்கு அதிகம் என கண்டுபிடிக்கப்பட்டது. இது போலவே, காட்டுயிர்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் நடத்தைக்கு ஏற்படும் பாதிப்பு சாலையிலிருந்து வனத்தினுள் சுமார் 1 கீமீ துரத்திற்கு இருந்தது. சாலைகள் சூழியல் பொறியாகவும் (Ecological traps) விளங்குகிறது. அதாவது வனப்பகுதியில் உள்ள பாம்பு, ஓணான் முதலிய ஊர்வன இனங்கள் வெயில் காய (Basking) இயற்கையான பாறை, கட்டாந்தரையை விட்டு விட்டு சாலைக்கு வருகின்றன. (குளிர் இரத்தப் பிராணிகளான அவை உயிர்வாழ அவற்றின் உடலின் வெப்பநிலையை, சுற்றுப்புறத்துடன் சமநிலை செய்து கொள்ள வெயில் காய்வது இன்றியமையாதது). இந்தியாவில் சாலைகளினாலும், போக்குவரத்தினாலும் காட்டுயிர்களுக்கு ஏற்படும் விளைவுகளைப் பற்றி 2009ல் ஒரு விரிவான திறனாய்வு செய்யப்பட்டது. இதில் காட்டுயிர்களுக்கும், இயற்கையான வாழிடங்களுக்கும் ஏற்படும் நன்மைகளைவிட பாதகமான விளைவுகள் ஐந்து மடங்காக இருப்பது அறியப்பட்டது.
சாலைகளுக்காகவும், அவற்றை விரிவு படுத்தவும் மரங்கள் அகற்றப்படுவதால், மரவாழ் உயிரினங்களான மலையணில், குரங்குகள் யாவும் மரம் விட்டு மரம் தாவ முடியாமல் தரையின் கீழிறங்கி சாலையைக் கடக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இதனால் இவை அவ்வழியே சீறி வரும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் ஆபத்து அதிகமாகிறது. அதுபோலவே மின் தொடர் கம்பிகளுக்காக மரங்களை அகற்றும் போதும் மரவிதானப்பகுதியில் இடைவெளி ஏற்படுகிறது. இதனால் இவ்வுயிரினங்கள் மின்கம்பிகளை தவறுதலாக பற்றிக்கொண்டு இடம்பெயற முயற்சிக்கும் போது மின்சாரம் தாக்கியும் உயிரிழக்கின்றன.
சாலைகள், மின் தொடர் கம்பிகள், அகலமான கால்வாய்கள், இரயில் தடங்கள் போன்ற நீள் குறுக்கீடுகள் (linear intrusions) ஒன்றோ அதற்கு மேலோ ஒரு இயற்கையான நிலவமைப்பில் அமைக்கப்பட்டால் அவ்வாழிடத்திற்கும் அதில் வாழும் உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் பன்மடங்காகிறது.
ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு எந்த அளவு நீள் கட்டமைப்புத் திட்டங்கள் அவசியமோ அது போலவே இன்றியமையாதது ஒரு நாட்டின் வனங்கள். அழித்துவிட்டால் மீண்டும் உருவாக்க அவை ஒன்றும் இயந்திரங்கள் அல்ல. தாவரங்கள், உயிரினங்கள், பழங்குடியினர்கள் என பல உயிர்கள் பொதிந்திருக்கும் ஓர் உயிர்ச்சூழல் அது.
நாட்டை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்லவும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும் ஒரு அறிவார்ந்த சமூகம், வளர்ச்சித் திட்டங்களை சிறந்த தொழில்நுட்ப உதவியுடன் தான் எதிர்கொள்ளும். அவ்வேளையில், அத்திட்டங்களை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் விசாலப்பார்வையுடன் அத்திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். தற்போதைய அமைச்சகத்தின் ஆணையைப் போல் இது போன்ற திட்டங்களின் செயல்பாடுகளை கோட்ட வன அலுவலர் மட்டுமே நிர்ணயிக்கும் நிலை இருக்கக்கூடாது.
பொருளாதார ஆதாயத்திற்கு மட்டுமே ஆதரவளிக்காமல், நீள் கட்டமைப்புத் திட்டங்களால் ஏற்படும் சூழியல் பாதிப்புகளையும் நம்பத்தக்க, வெளிப்படையான விதத்திலும் அளவிடவும் அதன் நீண்ட கால பாதிப்புகளைச் சமாளிக்கவும் வேண்டும். இது போன்ற திட்டங்கள் பெரும்பாலும் பணம் கொழிக்கும் கான்ட்டிராக்ட்களையும், ஊழலையும் தான் உள்ளடக்கியிருக்கும்.
இதனால் திட்டத்தின் அளவிற்கே (சாலையாக இருப்பின் அதிக நீளமான, அகலமான சாலையே அதிக ஆதாயம் தரும்) முக்கியத்துவமளிக்கப்படுமே தவிர வேலையின் தரம், பயன் மற்றும் பாதுகாப்பு போன்றவை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும்.
உலகின் பல நாடுகளில் சாலை போன்ற நீள் கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்குவதற்கு முன் பொறியியலாளர்கள், சூழியலாளார்கள், பொருளாதார வல்லுனர்கள் என பல துறைகளைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்களும், வல்லுனர்களும் கலந்தாலோசித்த பின்னரே செயல்படுத்தப்படுகிறது. சாலைச்சூழியல் (Road Ecology) எனும் வளர்ந்து வரும் இத்துறையில் பல்துறை வல்லுனர்கள் பயன்முறை ஆய்வுகளை (applied research) மேற்கொண்டு இத்திட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளை ஆவணப்படுத்தியும், இயற்கையான சூழல் பெருமளவவில் பாதிப்படையா வண்ணம் தகுந்த மாற்று வழிகளையும், சரியான வடிவமைப்பையும், பரிந்துரைத்து வருகின்றனர்.
இந்தியாவில் 2011ல் அமைக்கப்பட்டிருந்த தேசிய காட்டுயிர் வாரியத்தின் நிலைக் குழு (Standing Committee) நீள் குறுக்கீடுகள் தொடர்பாக பின்பற்றவேண்டிய வரைவு நெறிமுறைகளையும், பின்னணித் தகவல்களையும் தயாரித்து அதன் முதல் பதிப்பை வெளியிட்டது (இங்கே காண்க). இந்தப் பதிப்பிலிருந்து ஒரு பகுதி டிசம்பர் 2014ல் துணை நிலைக்குழு (subcommittee) வெளியிட்ட பாதுகாக்கப்பட்ட இயற்கையான வாழிடங்களின் வழியே செல்லும் சாலைகளுக்கான நெறிமுறையாக ஆக்கப்பட்டது (இங்கே காண்க). இந்த ஆவணத்தின் முதன்மைக் கொள்கை இயற்கையான வாழிடங்களைப் தவிர்த்தலே. அதாவது, காட்டுயிர் பாதுகாப்புப் பகுதிகளையும், ஆபாயத்திற்குள்ளான இயற்கையான சூழலமைப்புகளையும், தேவையில்லாமல் நீள் குறுக்கீடுகளால் சீரழியாமல் பாதுகாப்பதோடு, காட்டுயிர் வழித்தடங்களை பாதிக்காமல் சாலைகளை சுற்று வழியில் அமைத்து, இயற்கையான வாழிடங்களின் விளிம்பில் இருக்கும் கிராமங்கள், சிற்றூர்களிடையே இணைப்பினை மேம்படுத்த மேம்படுத்துவதேயாகும்.

இயற்கையான வாழிடங்களின் வழியே அமைக்கப்படும் அகலமான சாலைகள் பல உயிரினங்களுக்கு பல வகையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இது போன்ற, முக்கியமான சூழலில் குறுக்கே சாலைகள் அமைக்கப்படும் முன் காட்டுயிர்களின் நடமாட்டத்தில் ஏற்படும் இடர்பாடுகளை குறைக்க எங்கெங்கே மேம்பாலங்கள் (overpass), தரையடிப்பாதைகள், மதகுப்பாலங்கள் (underpass and culvert) அமைக்கலாம் என்பதற்கான ஆலோசனைகளை காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து பெறவேண்டும். அது போலவே சாலைகளில் ஏற்படும் காட்டுயிர்களின் உயிரிழப்பைக் குறைக்க தேவையான இடங்களில் வேகத்தடைகளும், போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதும் அவசியம்.
யானைகள் கடக்கும் பகுதிகளில் அகச்சிவப்புக் கதிர்களை வீசும் கருவிகளைப் பொருத்தி அவை வருவதை அறிந்து, இத்தகவலை இரயில் ஓட்டுனரின் கைபேசியில் குறுஞ்செய்தியாக அனுப்பும் தொழில்நுட்ப அமைப்பினை இரயில் தடங்களில் வைப்பதன் மூலம், அவை இரயிலில் அடிபட்டுச் சாவதைத் தடுக்க முடியும்.
மின்கம்பித் தொடர்களின் கட்டமைப்பில் சிறு மாறுதல் ஏற்படுத்துவதன் மூலம் அதாவது யானை போன்ற பெரிய உயிரினங்கள் கடக்கும் பகுதியில் உயரமாக வைப்பதனாலும், கானல் மயில், பாறு கழுகுகள் போன்ற பெரிய பறவைகளின் பார்வைக்குத் தெரியும் வகையில் அமைப்பதனாலும் அவை மின் கம்பிகளில் அடிபட்டு இறப்பதைத் தவிர்க்க முடியும். சாலையோரங்களில் வளர்ந்திருக்கும் இயல் தாவரங்களையும், மரங்களையும் வெட்டாமல் வைப்பதன் மூலம் உயிரினங்களின் இடம்பெயர்வுக்கு உதவுவது மட்டுமல்லாமல், அந்தத் தடத்தையும் அழகாக்கும்.
நீள் கட்டமைப்புகள் இயற்கையான சூழலின் மேல் கரிசனம் கொண்டு, அறிவியல் பூர்வமாகவும், சரியான வடிவமைப்புகளைக் கொண்டும் இருந்தால் பொருளாதார மேம்பாட்டிற்கும் உதவும், இயற்கையான வாழிடத்தையும் பாதுகாக்கும்.
———-
மார்ச் 19, 2015 தி ஹிந்து ஆங்கிலம் தினசரியில் வெளியான T. R. Shankar Raman எழுதிய “The long road to growth” கட்டுரையின் தமிழாக்கம். இக்கட்டுரையின் சுருக்கமான பதிப்பு “தி இந்து” தமிழ் தினசரியில் 18-04-2015அன்று வெளியானது. அதை இங்கே காணலாம்.
தவளைகள் பாடிய தாலாட்டு
மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் ஒரு காட்டுப் பாதை வழியே வேலை நிமித்தம் ஒரு மழைக்கால மாலை வேளையில் தனியே பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது. சுமார் 50 கி.மீ காட்டுப்பகுதி, ஏற்றமும், இறக்கமும், வளைவுகளும், நெளிவுகளும் நிறைந்த பாதை அது. பலவகையான வாழிடங்களைத் தாண்டிப் போகவேண்டும். இதன் பெரும்பகுதி மழைக்காட்டின் வழியாகவும், பின்னர் மூங்கில் காடு, தேக்கு மரக்காடு இலையுதிர் காடுகளைத் தாண்டி விளைநிலங்களைக் கடந்து நகரத்தை அடையும் அந்த பாதை. போகும் வழியில் காட்டின் உள்ளே ஓரிரு சிறிய குடியிருப்புப் பகுதிகளையும் தாண்டிச் செல்லவேண்டும்.
பகலில் சில முறை அவ்வழியே சென்றிருந்தாலும் இரவு நேரத்தில் போனதில்லை. வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக் கொண்டு 6 மணியளவில் புறப்பட்டேன். பொதுவாக காட்டுப்பாதையில் ஜீப்பில் சென்றால் வேகமாகச் செல்வதில்லை. ஏதாவது காட்டுயிர்கள் சாலையைக் கடக்கலாம். மாலையிலும் இரவிலும் சற்று கவனமாகவே வண்டியை ஓட்ட வேண்டும்.
அந்திமாலைப் பொழுது. அடையும் வேளையாதலால், பலவித பறவைகளின் குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தது. காட்டின் நடுவே இருந்த ஒரு வெட்ட வெளியில் சென்ற தந்திக்கம்பிகளில் செந்தலைப் பஞ்சுருட்டான் கூட்டம் ஒன்று அமர்ந்து கத்திக் கொண்டிருந்தன. அவ்வப்போது காற்றில் மேலெழும்பி பறந்து கொண்டிருந்த பூச்சிகளைப் பிடித்து மீண்டும் கம்பியில் அமர்ந்தன. தலையை இப்படியும் அப்படியும் ஆட்டி, ஆட்டி பிடித்த பூச்சியை உயிரிழக்க வைத்து, அவை திங்கமுடியாத பாகங்களையும் விலக்கிக் கொண்டிருந்தன. துடுப்புவால் கரிச்சான் இரண்டு அங்குமிங்கும் பறந்து அப்பூச்சிகளைப் பிடித்துக் கொண்டிருந்தன. பறக்கும் போது கூடவே அவற்றின் குஞ்சம் போன்ற வால் சிறகும் அவற்றை பின் தொடர்ந்ததைப் பார்க்கும் போது வேடிக்கையாக இருந்தது. அருகிலிருந்த மரக்கிளையில் அமர்ந்து வாலை வெடுக் வெடுக்கென ஆட்டிக் கொண்டு பிடித்த பூச்சியை விழுங்கிக் கொண்டிருந்தன. இருநோக்கியில் பார்த்தபோது மேல் நோக்கிப் பறந்து கொண்டிருந்த அப்பூச்சிகள் ஈசல்கள் எனத்தெரிந்தது.
கரிய மேகங்கள் வானில் சூழ ஆரம்பித்தது. நேரமின்மையால் வண்டியைக் மெல்ல மெல்ல நகர்த்தினேன். மரக்கிளைகளால் வேயப்பட்ட கூரையைக் கொண்ட காட்டுப் பாதையாதலால் விளக்கை போட்டுக் கொண்டு செல்லவேண்டியிருந்தது. பலவகையான தகரைச் செடிகள் (பெரணிகள் Ferns) சாலையோரத்தை அலங்கரித்திருந்தன. இயற்கையாக வளர்ந்த இந்த காட்டுத் தாவரங்களை எந்த கோணத்தில் பார்த்தாலும் அழகுதான். குண்டும் குழியுமாக இருந்தது அந்தச் சாலை. காட்டுச் சாலை இப்படித்தான் இருக்க வேண்டும். காட்டில் சாலைகள் இருப்பதே காட்டுயிர்களுக்கும், வாழிடங்களுக்கும் கேடுதான். நமக்கு சாலைகள் அவசியம் தான், ஆனால் இயற்கையான வாழிடத்தின் வழியே செல்லும் சாலைகள் அங்குள்ள காட்டுயிர்களுக்கு மென்மேலும் தொந்தரவு கொடுக்காத வகையில் இருக்க வேண்டும். செப்பனிடப்படாத, அகலப்படுத்தப்படாத சாலையும் பல வகையில் காட்டுயிர்களுக்கு நன்மை பயக்கும்.
இதையெல்லாம் யோசித்தவாரே ஒன்று அல்லது இரண்டாம் கியரில் வண்டியை ஓட்டிக் கொண்டே சென்றேன். மதிய வேளையில் மழை பெய்திருக்க வேண்டும். சாலையெங்கும் ஈரமாகவும், ஓரங்கள் சகதிகள் நிறைந்தும் இருந்தது. முற்றிலுமாக இருட்டிவிட்டிருந்தது. அப்போதுதான் உணர்ந்தேன். பறவைகளின் ஒலி முற்றிலுமாக நின்றுபோய் தவளைகளின் ஒலி கேட்க ஆரம்பித்ததை. அவற்றின் குரலும் பல விதங்களில் இருந்தது. சில தவளைகளின் குரலை வைத்தே தவளை ஆராய்ச்சியாளர்கள் அது இன்ன தவளை வகை எனச் சொல்லி விடுவார்கள். வழி நெடுக தவளைகளின் பாட்டைக் கேட்டுக் கொண்டே, இரவில் தனியாக, வேறு வாகனங்கள் ஏதும் அதிகம் வராத காட்டுப் பாதையில் பயணம் செய்வது ஒரு புது வித அனுபவமாக இருந்தது.
சட்டென ஒரு எண்ணம் உதித்தது. கொஞ்ச நேரம் தவளைகளின் குரல்களை கேட்டு விட்டுச் சென்றால் என்ன எனத் தோன்றியது. வண்டியை ஓரமாக நிறுத்தி கேட்க ஆரம்பித்தேன்.
இடைவெளியில்லாத டிக்.. டிக்.. டிக்..
சற்று நிதானமான இடைவெளியுடைய டக்..டக்..டக்..
மெல்ல ஆரம்பித்து பின் இடைவிடாமல் உச்சஸ்தாயியை அடையும்…டொக்…..டொக்…..டொக்…..டொக்…..டொக்….டொக்..
ஒரே ஒரு முறை குரலெழுப்பி பின் சில நிமிடங்கள் அமைதியடையும்..க்ராக்கக்கக்.
இன்னுமொரு குரலொலி கேட்டது.
சரியாக மூடாத குழாயிலிருந்து, நிறம்பிய வாளியில் மெல்லச் சொட்டும் நீரின் ஒலி ஒத்த தகுந்த இடைவெளியுடனான டப்………டப்………டப்………
இதை இதற்கு முன் கேட்டதுண்டு. மரத்தின் உச்சியிலிருந்து வரும் இந்த குரல் மழைத்துளித் தவளைக்குச் (Raorchestes nerostagona) சொந்தமானது.
நிச்சயமாக ஒவ்வொன்றும் ஒவ்வொறு வகை. இவையனைத்தும் புதர் தவளைகள் (Bush frogs) இனத்தைச் சேர்ந்தவை. நான் கேட்டுக்கொண்டிருந்தது அனைத்துமே ஆண் தவளைகள். ஆம், தனது இணையக் கவரவே அவை அப்படிக் குரலெழுப்புகின்றன. இந்த ஆண் புதர் தவளைகளை எளிதில் பார்ப்பது சிரமம். ஆனால் பார்த்து விட்டால் அதுவும் அவை குரலெழுப்பும் போது பார்த்தால் அவை நம்மை வியப்பில் ஆழ்த்தும். இத்தவளைகளின் மெல்லிய தோலுள்ள கீழ்த்தாடை அவை ஒலியெழுப்ப்பும் போது பலூன் போல உப்பி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும். எழுப்பும் ஒலியை வெகுதொலைவு கொண்டு செல்லவே இவற்றின் கீழ்த்தாடை ஒரு ஒலிபெருக்கியைப் போல செயல்படுகிறது.
கையில் டார்ச் இருந்தாலும், இவை இருக்குமிடத்தை கண்டறிவதில் ஆர்வமின்றி சிறிது நேரம் கண்களை மூடி அவற்றின் குரலொலியில் லயித்திருந்தேன்.
டிக்..டிக்..டிக்….டப்….டக்..டக்..டக்….டப்….டொக்…டொக்…டொக்…டொக்…டப்….க்ராக்கக்கக்…டிக்..டிக்..டிக்….டப்….டக்..டக்..டக்….டப்….டொக்…டொக்…டொக்……..டொக்……க்ராக்கக்கக்….டிக்..டிக்..டிக்….டப்….டக்..டக்..டக்….டப்….டொக்…….டொக்… டொக்….க்ராக்கக்கக்……
மழைக்காடு என்றுமே தூங்குவதில்லை. மழைக்காட்டுப் பகல் பறவைகளின் இசையாலும், சிள் வண்டுகளின் இரைச்சலாலும் நிரம்பியிருக்கும். மாலை வேளையில் சிறிய ஓய்விற்குப் பின் இரவில் மீண்டும் மழைக்காடு உயிர்த்தெழுவது இந்த தவளைப்பாட்டுக் கச்சேரியால் தான். மழைக்காட்டுக்குள் குறிப்பாக மழைக்காலங்களில் இந்த ஜுகல்பந்தியை நிச்சயமாகக் கேட்கலாம்.
இரவில் தவளைகள் பாடிய அந்த தாலாட்டை கண் மூடி கேட்டுக் கொண்டிருக்கும் போதே ட்டப்… என்று ஒரு மழைத்துளி எனது நெற்றியில் விழுந்து தெரித்து அந்த கணநேர இன்பத்தைக் கலைத்தது. சற்று நேரத்தில் இலேசான தூரல் போட ஆரம்பித்தது. இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருந்ததால் அங்கிருந்து கிளம்பினேன். வண்டியின் முன் சில அடிகள் மட்டுமே தெரியும் அளவிற்கு சாலை முழுவதுமாக பனிபடர்ந்தது. இருளில் விளக்கு வெளிச்சத்தில் மெல்ல வண்டியை ஓட்டிக் கொண்டு வந்து சிறிய குடியிருப்புப் பகுதியை கடந்து சென்றேன். அந்தப் பகுதியில் சாலை ஒரே சீராக இருந்தது. மழை நின்றிருந்தது சாலை தெளிவாகத் தெரிந்தது. திடீரென சாலையின் ஒரு பக்கத்திலிருந்து தவளை ஒன்று குதித்து வண்டியை நோக்கி வருவது தெரிந்தது. வண்டியின் விளக்கினால் கவரபட்டு வரும் பூச்சிகளைப் பிடிப்பதற்காகவோ, என்னவோ பல வேளைகளில் இப்படி இந்தத் தவளைகள் வண்டியை நோக்கி வருவதுண்டு. பல சக்கரங்களில் அரைபட்டும் சாவதுண்டு. வண்டியை வளைத்து நெளித்து ஓட்டி வழியில் வந்த பல தவளைகளை அரைத்துவிடாமல் கடந்து சென்று கொண்டிருந்தேன்.
மலைப்பாதை கீழிறங்கி காட்டுச் சாலை முடிந்து விளை நிலங்களை நோக்கிப் பயணமானேன். இங்கே பாதை சீராகவும், இருவழிச்சாலையாகவும் இருந்தது. தவளைகளின் ஒலி இங்கே அவ்வளவாக இல்லை. சாலையிலிருந்து சற்று தொலைவிலிருந்து க்ரோக்… க்ரோக்… க்ரோக்…எனும் ஒலி வந்தது. இது சமவெளிகளில் தென்படும் வேறு வகையான தவளை. சாலை அகலமாக அகலமாக தவளைகளின் ஒலியற்ற நகரப்பகுதி மெல்ல வர ஆரம்பித்தது.
இப்பயணத்தின் முடிவில் மனதில் ஒரு கேள்வி எழுந்தது. சாலையில் பனிபடர்ந்து, மழை பொழியும் நேரத்தில் எனது வண்டிச் சக்கரங்களில் அரைபட்டு எவ்வளவு தவளைகள் உயிரிழந்திருக்கும்? அப்போது முடிவு செய்தேன், அவ்வழியே இனி எப்போதும் இரவில் குறிப்பாக மழைக்காலங்களில் பயணம் செய்வதே இல்லை என.
பெட்டிச் செய்தி
சிலருக்கு தவளைகளைக் கண்டால் அருவருப்பும், பயமும் கொள்வார்கள். ஆனால் அவை பல பூச்சிகளையும், கொசுக்களையும் சாப்பிட்டு நமக்கு நன்மை செய்பவை. தவளைகள் அழகானவை, குறிப்பாக இந்த மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளின் மழைக்காடுகளில் தென்படும் புதர் தவளைகள். பார்த்தவுடன் நம்மை ஈர்க்கக்கூடிய பச்சை, இளம்பச்சை, மஞ்சள் கலந்த பச்சை, சிவப்பு, செங்கல் நிறம், ஆரஞ்சு நிறம், மிட்டய் நிறம் என பல வண்ணங்களிலும், அழகிய புள்ளிகளையுடைய, வரிகளுடைய வடிவங்களில் உள்ள தவளைகள் பல இங்கு தென்படுகின்றன. இவை சுமார் 3 செ.மீ நீளமே இருக்கும்.
சில தவளைக் குஞ்சுகள் நம் விரல் நகத்தின் அளவை விட சிறியவை. இத்தவளைகள் பெரும்பாலும், மர இலைகளின் மேலோ, கீழோ, கிளைகளிலோ அமர்ந்திருக்கும். மழைக்காட்டின் விதானம், மத்தியப் பகுதி, தரைப்பகுதி என பல அடுக்குகளில் இவை வாழ்கின்றன.
பம்பாய் புதர் தவளை கத்துவது தட்டச்சு செய்வது போலிருப்பதால் இதற்கு தட்டச்சுத் தவளை என்றே பெயர். இதை கீழ்க்கண்ட இந்த வீடியோவில் காணலாம்:
காட்டு நீரோடைகளில், இலைச்சருகுகளில், நமக்கு எட்டாத உயரத்தில் மரத்தின் மேல் வாழும் தவளையிங்களும் உண்டு. இவை உருவில் சற்று பெரியவை.
******
தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 7th October 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF ஐ இங்கே பெறலாம்.
உண்டி கொடுத்தோம், உயிர் கொடுத்தோமா?
காரில் பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். மேற்குத் தொடர்ச்சி மலை அல்லது தமிழகத்தின் ஏதோ ஒரு காட்டுப் பாதையில் கார் வளைந்து நெளிந்து சென்றுகொண்டிருக்கிறது. மரத்தின் மேலும், சாலையின் ஓரத்திலும் நின்று கொண்டிருக்கும் குரங்குக் கூட்டம் சட்டென்று நம் கவனத்தை ஈர்க்கிறது. மரத்தில் இருக்கும் பூக்களையும், கனிகளையும் அவை அமைதியாகத் தின்று கொண்டிருக்கின்றன. அதை கண்டதும் நம்மையும் அறியாமல் முகத்தில் புன்னகை படர்கிறது.
சட்டென்று காரை நிறுத்தி கையில் இருக்கும் பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்து, குரங்குக் கூட்டத்தை நோக்கி வீசி எறிகிறோம். அதுவரை மரத்தில் இருந்த பூக்களையும், கனிகளையும், பூச்சிகளையும் அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்த குரங்குகள், விட்டெறியப்பட்ட பிஸ்கெட்டுகளை எடுத்துத் தின்ன ஆரம்பிக்கின்றன.
பிஸ்கெட்டை எடுத்துத் தின்பதில் அவற்றுக்கிடையே போட்டி ஏற்பட்டு, கோபத்தில் ஒன்றையொன்று கடித்துத் துரத்துகின்றன. அந்த இடத்தின் அமைதியும், மரத்தில் இயற்கையான உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அக்குரங்கு கூட்டத்தினிடையே நிலவிய அமைதியும் ஒரே நேரத்தில் குலைந்து போகின்றன. அவை அடித்துக்கொள்வதைப் பார்த்து நம் மனதில் குதூகலம். மற்றொருபுறம் பல குரங்குகளின் பசியைப் போக்கிய நிம்மதியுடன், அந்த இடத்தைவிட்டு அகல்கிறோம்.
நேர் முரண்கள்
போகும் வழியில் சாலையோரத்தில் “குரங்குகளுக்கு உணவு தர வேண்டாம்” எனக் கொட்டை எழுத்தில் வனத்துறை ஒரு போர்டை வைத்திருக்கிறது. அதை நாம் கவனிக்கவில்லை. உடன் வந்தவர் அதைப் பார்க்கிறார். ஆனால் அவருக்கு அது புரியவில்லை, ஏன் இப்படிச் சம்பந்தமில்லாமல் அறிவித்திருக்கிறார்கள் என்று.
நாம் இதுவரை உணராத விஷயம் ஒன்று இருக்கிறது. அவ்வப்போது சாலையில் வேகமாகச் சீறிச்செல்லும் வாகனங்களின் சக்கரங்களில் அரைபட்டு இதே குரங்குக் கூட்டத்தின் சில உறுப்பினர்கள் செத்து போனதும், நம்மைப் போன்ற மனிதர்களால்தான். இப்படி அந்தக் குரங்குகளின் இயல்பு வாழ்க்கை பல வகைகளில், மனிதர்களால் சீர்குலைக்கப்படுகிறது.
குழப்பமும் நோய்களும்
மற்றொரு புறம் குரங்குகளுக்கு உணவளிப்பது அவற்றின் உடல்நிலையைப் பாதிக்கும், அவற்றின் குடும்பத்தினுள் (குரங்குகள் கூட்டமாக, அதாவது குடும்பமாக வாழும் தன்மை கொண்டவை) குழப்பத்தையும், சண்டையையும் விளைவிக்கும். அவற்றின் சமூக வாழ்வு பாதிக்கப்படும். நாம் கொடுக்கும் உணவால் அவற்றுக்குப் பல நோய்கள் வரலாம். இயற்கையான சூழலில், இயற்கையான உணவைச் சாப்பிடுவதே குரங்குகளுக்கு நல்லது, அதைப் பார்த்து மகிழும் நமக்கும் நல்லது. குரங்குகளுக்கு உணவளிப்பதாலும், தின்பண்டங்களைக் கண்ட இடத்தில் வீசி எறிவதாலும், மூடி வைக்கப்படாத குப்பைத் தொட்டிகளாலும் தான் குரங்குகளால் நமக்குத் தொந்தரவு ஏற்படுகிறது.
யார் மீது தவறு?
குரங்குகளுக்கு ஒரு முறை நாம் சாப்பிடும் உணவைக் கொடுத்துப் பழகிவிட்டால், பல்வேறு சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட அதே வகை உணவையே அவை மீண்டும் உண்ண விரும்புகின்றன. இதனால் காட்டுக்குள் சென்று உணவு தேடாமல் மனிதர்கள் வாழும் பகுதிகளிலும், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடங்களிலுமே தங்கிவிடுகின்றன. ஊருக்குள் புகுந்து கோயில்களிலும், வீட்டிலும், கடைகளிலும் உள்ள தின்பண்டங்களை நமக்குத் தெரியாமலோ, நம் கைகளிலிருந்து பிடுங்கியோ எடுத்துச் செல்கின்றன. தெரிந்தோ, தெரியாமலோ நாம் செய்த தவறுகளால் குரங்குகளும் பாதிக்கப்பட்டு, சுற்றுலாத் தலங்களிலும் ஊருக்குள்ளும் நமக்குத் தொந்தரவு ஏற்படுத்தும் உயிரினங்களாக மாறுகின்றன. இப்படித் தொந்தரவு தரும் குரங்குகள் உருவாகக் காரணமாக இருப்பதே நாம்தான். ஆனால், தொந்தரவு அதிகரிக்க ஆரம்பித்தவுடன், அவற்றைக் கட்டுப்படுத்தும் பணியில் இறங்குகிறோம்.
கட்டுப்படுத்த வேண்டியது குரங்குகளை அல்ல, குரங்குகளுக்கு நன்மை செய்கிறோம் என்று தவறாக நம்பி அவற்றுக்கு உணவளிப்பவர்களையும், பொறுப்பற்ற சில சுற்றுலாப் பயணிகளின் நடவடிக்கைகளையும்தான்.
என்ன பிரச்சினை?
சில இடங்களில் தொந்தரவு செய்வதாகக் கருதப்படும் குரங்குக் கூட்டங்களைப் பிடித்து வேறு இடங்களுக்குச் சென்று விட்டுவிடும் பழக்கம், நம் நாட்டில் இருந்து வருகிறது. இதனால் பிரச்சினை தீர்வதில்லை. கொண்டு சென்று விடப்பட்ட புதிய இடத்துக்கு அருகிலுள்ள மனிதக் குடியிருப்புகளுக்கு மீண்டும் வந்து, அவை தொந்தரவு தரும். இதில் பிரச்சினைக்குக் காரணமாக இருக்கும் விஷயத்துக்கு முடிவு கட்டாமல், பிரச்சினையை ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்துக்கு மாற்ற மட்டுமே செய்கிறோம்.
இடமாற்றம் செய்வதற்காகக் குரங்குகளைப் பிடிக்கும்போது பலத்த காயம் ஏற்படவும், சில இறந்துபோகவும் நேரிடுகின்றது. ஒரு குரங்குக் கூட்டத்தை ஓரிடத்திலிருந்து பிடித்துச் சென்றுவிட்டால் அவை இருந்த இடத்தில், வேறோர் குரங்குக் கூட்டம், இடத்தைப் பிடித்துக்கொள்ளும். நகரத்தில் வெகுநாட்களாக வாழ்ந்து வரும் குரங்குக் கூட்டத்தைப் பிடித்து அருகிலுள்ள காட்டு பகுதியில் விடுவதால், அந்தக் குரங்குக் கூட்டத்தில் உள்ள நோய்கள் காட்டில் உள்ள உயிரினங்களுக்கும் பரவும் ஆபத்து உள்ளது. மேலும், காட்டுப்பகுதியில் ஏற்கெனவே வசித்துவரும் குரங்குகளுடன் இடத்தைப் பெறுவதற்காகச் சண்டை ஏற்பட்டுப் பல உயிரிழக்கவும் நேர்கிறது.

சாலை விபத்தில் காலையும் கையும் இழந்த ஒரு நாட்டுக் குரங்கு (Bonnet Macaque)
உணவளிக்காமல் இருப்பதே தீர்வு
நகரத்தில் வாழும் பெண் குரங்குகளுக்குக் கருத்தடை அறுவைசிகிச்சை செய்து அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைக்கும் முயற்சிகள் சில இடங்களில் நடந்துள்ளன. ஆனால் அதைச் செய்வதற்கு அதிகச் செலவும், தகுந்த பயிற்சி பெற்ற நிபுணர்களும் அவசியம். என்றாலும்கூட, இது நீண்ட காலத் தீர்வாகாது.
உங்களுக்குக் குரங்குகளைப் பார்க்கப் பிடிக்கும் என்றால், அவற்றைப் பார்த்து ரசியுங்கள். அவற்றுக்கு உணவளிக்க வேண்டாம். ஒருவேளை யாரேனும் அப்படி உணவளிப்பதைப் பார்த்தாலும் அதனால் ஏற்படும் தீமைகளை அவர்களிடம் பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள். குரங்குகளைப் பொறுத்தவரை உண்டி கொடுப்பது, அவற்றுக்கு உயிர் கொடுப்பது ஆகாது.
*********
தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 16th September 2014 அன்று வெளியான கட்டுரை. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF ஐ இங்கே பெறலாம்.
உயிரெழுத்து இதழுக்கான நேர்காணல்
உயிரெழுத்து மாத இதழில் (அக்டோபர் 2013 மலர் 7, இதழ் 4) வெளியான நேர்காணல். பத்திரிக்கையாளர்/பசுமை எழுத்தாளர் திரு ஆதி. வள்ளியப்பன் அவர்களின் கேள்விகளும் எனது பதில்களும்.
மனித – விலங்கு மோதல்
மனித விலங்கு மோதல் சார்ந்து உங்களுடைய அனுபவங்கள். குறிப்பாக, யானை, சிறுத்தை போன்றவற்றுடன் மோதல் நிகழும் பகுதியில் இருக்கிறீர்கள். இதன் பின்னணி என்ன. இதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்?
முதலில் மனித-விலங்கு மோதல் என்ற பதத்தை மாற்றி மனிதர்-காட்டுயிர் எதிர்கொள்ளல் எனக்கொள்ளவேண்டும். எனது வீட்டை புலியோ, சிறுத்தையோ, யானையோ கடந்து சென்றால் அவை என்னை தாக்க வருகின்றன என்று அர்த்தம் இல்லை. எதிர்பாராவிதமாக நான் இக்காட்டுயிர்களை நேருக்கு நேர் சந்திக்க நேரிட்டால், அவற்றின் வெகு அருகில் சென்று விட்டால், அவை பயத்தினாலோ, தம்மை தற்காத்துக்கொள்ளவோ என்னைத் தாக்கினால் அது எதிர்பாரா விதமாக நடக்கும் ஒரு விபத்திற்கு சமமானதே. அது திட்டமிட்ட தாக்குதல் அல்ல. எந்த ஒரு காட்டுயிரும் தானாக (சினிமாவில் காட்டுவதுபோல்) எந்த ஒரு மனிதரையும் துரத்தித் துரத்தி கடிப்பதோ, மிதிப்பதோ இல்லை, பழிவாங்குவதும் இல்லை. ஆகவே இது மோதல் அல்ல. நீங்கள் ஆட்கொல்லிகளைப் பற்றி (man-eaters) கேட்கலாம். இந்த ஓரிரு தனிப்பட்ட புலியோ, சிறுத்தையோ தொடர்ந்து மனிதர்களை குறிவைத்து தாக்கினால் அங்குள்ள அனைத்து இரைக்கொல்லிகளும் (Predators) அப்பண்பு உள்ளவையே எனக் கூறவே முடியாது. அப்படித் தாக்கும் அந்தத் தனிப்பட்ட விலங்கினை அந்த இடத்திலிருந்து விலக்கத்தான் வேண்டும். எனினும் அப்படி அடையாளம் காண்பது என்பதும் சிரமம். இது போன்ற சம்பவங்கள் நடக்கும் இடம், நேரம், சூழல் அனைத்தையும் ஆராய்ந்து, மேன்மேலும் மனித உயிரிழப்பு ஏற்படாத வண்ணம் ஆவன செய்ய வேண்டும்.
நான் தற்போது பணி புரிவது வால்பாறையில். சுமார் 220 சதுர கி.மீ. பரப்பளவவில் அமைந்துள்ள இங்கு பெரும்பகுதி தேயிலைத் தோட்டங்களால் நிரம்பியது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் இப்பகுதிக்கு வந்து தேயிலை பயிரிட ஏதுவான உயரமும், சூழலும் இருந்ததால் இங்குள்ள மழைக்காட்டை திருத்தி தேயிலைத் தோட்டங்களை அமைத்தனர். பயிரிடத் தகுதியில்லாத சில இடங்களில் காடுகளை அப்படியே விட்டு வைத்து விட்டனர். பச்சைப் பாலைவனம் என சூழியலாளர்களால் அழைக்கப்படும் தேயிலைத் தோட்டத்தில் இன்று இந்தத் துண்டுச்சோலைகள் ஆங்காங்கே சிறு சிறு தீவுகளாகக் காட்சியளிக்கின்றன. வால்பாறையைச் சுற்றிலும் இருப்பது ஆனைமலை புலிகள் காப்பகம் (இந்திரா காந்தி தேசிய பூங்கா), பரம்பிகுளம் புலிகள் காப்பகம், சின்னார் வனவிலங்கு சரணாலயம் முதலிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள். இந்த வனப்பகுதிகளில் உள்ள (யானை, சிறுத்தை முதலிய) விலங்குகள் பல்லாயிரம் ஆண்டுகளாக காலத்திற்கேற்ப உணவு, நீர், உறைவிடம் தேடி வனத்தின் ஒரு பகுதியிலிருந்து வேறோர் பகுதிக்கு இடம்பெயர்கின்றன. சுமார் 100 ஆண்டுகளுக்க்கு முன் இப்பகுதியில் நாம் குடியேறி இவ்வுயிரினங்களின் உறைவிடங்களை அழித்து விட்டு, இன்று அவை நாமிருக்கும் இடங்களுக்கு வரக்கூடாது என்று சொல்கிறோம்.
இவ்வளவு காலம் இல்லாமல், ஏன் இப்போது மனித – விலங்கு மோதல் எதிர்கொள்ளல் உச்சத்தை நோக்கி சென்று வருகிறது?
மனித-விலங்கு எதிர்கொள்ளல் இன்று நேற்றல்ல ஆதிகாலத்திலிருந்தே இருந்து வரும் ஒன்று. பெருகி வரும் மக்கள் தொகையினால் காட்டுயிர்களின் உறைவிடங்கள் நாளுக்கு நாள் அருகி வருகிறது. காடழிப்பு, காட்டுயிர்களின் வழித்தடங்களை ஆக்கிரமித்தல், சரியான (அறிவியல் பூர்வமான) மேலாண்மையின்மை, நீண்டகால தீர்வு காணும் எண்ணத்துடன் செயல்படாமை முதலியவையே இவ்வகையான நிகழ்வுகளுக்குக் காரணம். மேலும் காட்டுயிர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்தப் பிரச்சனையை வனத்துறையினர் மட்டும் தான் சமாளிக்க வேண்டும் என்று நினைப்பதும் தவறு. பல அரசுத் துறைகளும், ஊடகங்களும், தன்னார்வ நிறுவனங்களும், ஆராய்ச்சியாளர்களும், பொதுமக்களும் சேர்ந்து சமாளிக்க வேண்டிய பிரச்சனை இது. இன்னும் ஒன்றையும் சொல்லவேண்டும் – ஊடகங்கள் காட்டுயிர்களை ஏதோ பயங்கரவாதிகளைப் போல சித்தரிப்பதும், இந்தப் பிரச்சனையை ஊதிப் பெரிது படுத்துவதும் செய்தித்தாள்களிலும், செய்திகளிலும் பார்க்கலாம். ஏற்பட்ட சம்பவத்தின் தீவிரத்தையும், இப்பிரச்சனையை தீர்க்க/சமாளிக்க/தணிக்க செய்ய வேண்டியவைகளை நன்கு உணர்ந்து செயல் பட வேண்டியது ஊடகங்களில் கடமை. அண்மையில் வெளியான ஒரு திரைப்படத்தில் யானையை ஏதோ ஒரு வில்லனைப் போல சித்தரித்திருந்தார்கள். இந்த நிலை மாற வேண்டும்.
விலங்குகளுக்கு இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
யானை, சிறுத்தை போன்ற காட்டுயிர்கள் நம் வீட்டின் வெகு அருகில் இருந்தால் நாம் எப்படிப்பட்ட மனவுளைச்சலுக்கும், மனஅழுத்தத்திற்கும் ஆளாகிறோம். அதே போலத்தான் ஓரிடத்திலிருந்து யானைகளை பட்டாசு வெடித்து, டயரை எரியவிட்டு மேலே விட்டெறிந்து துரத்தும் போது அவையும் குழப்பத்திற்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றன. அச்சமயத்தில் குட்டியுடன் இருக்கும் போது இந்த அழுத்தம் பன்மடங்காகிறது. பகலில் இப்படி ஓட ஓட விரட்டுவதால் அவை ஓரிடத்தில் நிம்மதியாக இருந்து சாப்பிட முடியாமல் (யானைகளுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 150-200 கி.லோ எடை உணவும், சுமார் 200 லிட்டர் நீரும் அவசியம்) போகிறது. விளைவு, இரவு நேரங்களில் ரேஷன் கடைகளுக்கும், சத்துணவுக்கூடங்களுக்கும், அவற்றின் அருகாமையில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கும் புகுந்து அங்கிருக்கும் அரிசி, பருப்பு முதலியவற்றை சாப்பிடுகின்றன.
இது போலவே சிறுத்தை போன்ற இரைக்கொல்லிகளை நம் வீட்டினருகே பார்த்த உடனேயே அவற்றை அங்கிருந்து அகற்ற வேண்டும் என வனத்துறையிடம் முறையிடுவதால் அவர்களும் பல நிர்பந்தங்களுக்கு ஆளாகி கூண்டு வைத்து அவற்றை பிடித்துவிடுகின்றனர். அதைக் கொண்டு போய் வேறு இடங்களில் விட்டு விடுகின்றனர். இதனால் பிரச்சனை தீர்ந்து விடாது. இது ஒரு நீண்ட காலத் தீர்வு அல்ல. அவற்றை பிடித்து கூண்டுக்குள் அடைக்கும் போதும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும் போதும் ஏற்படும் மன அழுத்தம், குழப்பம், மன உளைச்சல் காரணமாக அவை எரிச்சலைடைகின்றன. அவை கூண்டுக்குள்ளிருந்து தப்பிக்க நினைக்கும் போது காயங்களும் ஏற்படுகின்றது. அந்த குறிப்பிட்ட விலங்கை வேறு இடங்களில் கொண்டு விடும் போது காயம் காரணமாக அவை வேட்டையாட முடியாமல் அங்குள்ள கால்நடைகளைத் தாக்குகின்றன. இது கிட்டத்தட்ட சில இந்திய சினிமாக்களில் காண்பிப்பது போல் ஒரு நல்லவனை/நிரபராதியை ஜெயிலில் போட்டு குற்றவாளி ஆக்கி அவன் விடுதலையாகும் போது கெட்டவனாக மாறி வருவது போலத்தான்.
இதனால் தமிழகத்தில் இறந்துள்ள உயிரினங்களின் எண்ணிக்கை என்ன?
இவ்வகையான புள்ளிவிபரங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மேலும் மனித-விலங்கு எதிர்கொள்ளலால் தான் ஒரு விலங்கு மரணமடைந்தது என அறுதியிட்டுக் கூறுவது எல்லா சமயங்களிலும் சாத்தியமில்லை. எனது சக ஊழியர் ஆனந்தகுமாரின் கூற்றுப்படி வால்பாறை பகுதியில் 4 யானைகள் (2 – தவறுதலாக பூச்சிமருந்தை உட்கொண்டு, 2 – மின்வேலி மின்சாரத்தினால் தாக்கப்பட்டு) மரணமடைந்துள்ளன. சிறுத்தைகளைப் பொறுத்தவரை 2007-2012 வரை வால்பாறை அதனை அடுத்தப் பகுதிகளில் 12 சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பலவற்றிற்கு உடலில் (பெரும்பாலும் முகத்தில்) காயம் ஏற்பட்டது. வேறு இடங்களில் கொண்டுசெல்லப்பட்டவை உயிருடன் இருக்கின்றனவா இல்லையா என்பதை செல்லுவது கடினம்.
இதைத் தடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகளை விளக்க முடியுமா?. மனிதர்கள்-யானை மோதலைத் தடுக்க என்.சி.எஃப் அமைப்பு (Nature Conservation Foundation – NCF) மேற்கொண்டுள்ள முயற்சியின் அறிவியல் பின்னணி ?
நான் மேற்சொன்ன தகவல்கள் அனைத்தும் வால்பாறையை மையமாக வைத்தே. மேலும் நான் மனித-விலங்கு எதிர்கொள்ளலைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை. எனது நண்பர்களும், சக ஊழியர்களும் இப்பணியில் பல ஆண்டுகளாக இப்பகுதியில் ஈடுபட்டு வருகின்றனர். எனது பணி, அவர்களது நீண்ட கால ஆராய்ச்சி முடிவுகளை கட்டுரைகள், பொதுக்கூட்டங்கள் வாயிலாக பொதுமக்களிடன் கொண்டு போய் சேர்ப்பது.
எனது சக ஊழியர் ஆனந்தகுமார் வால்பாறைப் பகுதியில் யானைகளின் இடம்பெயர்வையும், அவற்றின் பண்புகளையும், யானைகளால் மனிதர்களுக்கு எந்த விதத்தில், எங்கெங்கே பாதிப்பு ஏற்படுகின்றது, அந்த பாதிப்புகளை தணிக்க செய்ய வேண்டியவை பற்றிய ஆராய்ச்சியில் கடந்த 12 வருடங்களாக ஈடுபட்டு வருகிறார்.
வால்பாறையைச் சுற்றிலும் வனப்பகுதியாதலால் காலகாலமாக யானைகள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயர்வது வழக்கமான ஒன்றாகும். இவ்வேளையில் அவை மனிதர்களையும், குடியிருப்புகளையும் எதிர்கொள்வதை சில நேரங்களில் தவிர்க்க முடியாது. யானை-மனிதர்கள் எதிர்கொள்ளலை சரியான முறையில் சமாளிப்பதற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தணிப்பதற்கும், அவற்றின் இடம்பெயறும் பண்பை அறிந்திருத்தல் அவசியம். யானைகளின் நடமாட்டத்தைப் பற்றிய அறிவு இங்கு வாழும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது.
வால்பாறைப் பகுதியில் உள்ள யானைத் திரள்களை பின் தொடர்ந்து அவை போகும் இடத்திற்கெல்லாம் சென்று ஜி.பி.எஸ் கருவி மூலம் அவை இருக்குமிடத்தை குறித்துக்கொள்ளப்பட்டது. யானைகளால் ஏற்படும் சேதங்கள் யாவும் நேரில் சென்று மதிப்பிடப்பட்டது. மனித உயிரிழப்பும் பதிவு செய்யப்பட்டது. வால்பாறைப் பகுதியில் ஒர் ஆண்டில் சுமார் 80-100 யானைகள் நடமாடுகின்றன. எனினும் மூன்று யானைக்கூட்டங்களைச் சேர்ந்த சுமார் 45 யானைகள் 8-10 மாதங்கள் இப்பகுதியில் நடமாடுகின்றன. இங்குள்ள காலங்களில் யானைகள் பகலில் பெரும்பாலும் மழைக்காட்டு துண்டுச்சோலைகளிலும், ஆற்றோரக்காடுகளிலும்தான் தென்பட்டன. காபி, சூடக்காடு (யூகலிப்டஸ்), தேயிலை தோட்டப் பகுதிகளை அவை அதிகம் விரும்புவதில்லை. எனினும் இரவு நேரங்களில் ஒரு துண்டுச்சோலையிலிருந்து மற்றொன்றிற்கு கடக்கும்போது மட்டுமே தோட்டப்பகுதிகளின் வழியாக சென்றன.
இந்த ஆராய்ச்சி முடிவின் படி நடு ஆறு – சோலையார் ஆற்றோரக் காடுகள் யானைகள் நடமாட்டத்திற்கான முக்கியமான பகுதிகள் என்பது அறியப்பட்டது. ஆற்றங்கரையின் இருபுறமும் சுமார் 20 மீ அகலத்தில் இயற்கையாக வளரும் இம்மண்ணுக்குச் சொந்தமான மரங்களையும், தாவரங்களையும் நட்டு வளர்த்தால் யானைகளின் நடமாட்டத்திற்கு ஏதுவாகவும், அவை மனிதர்களை எதிர்கொள்வதை வெகுவாகக் குறைக்கவும் முடியும். ரேஷன் கடைகளிலும், பள்ளிகளில் உள்ள மதிய உணவுக்கூடங்களிலும் வைக்கப்பட்டிருக்கும், அரிசி, பருப்பு, சர்க்கரை முதலிய உணவுப்பொருட்களை யானைகள் உட்கொள்ள வருவதால் அவற்றை எடுக்கும் வேளையில் இந்தக் கட்டிடங்களின் கதவு, சுவர்கள் சேதமடைகின்றன. இந்த உணவு சேமிப்பு கட்டிடங்கள் குடியிருப்புப் பகுதிகளிலோ அல்லது அருகாமையிலோ இருப்பதால் அங்கும் சில வீடுகளிலும் சேதங்கள் ஏற்படுகின்றன. உணவுப்பொருட்களை சேமித்து வைக்கும் கட்டிடங்களை, குடியிருப்புப் பகுதியிலிருந்து தூரமாக அமைப்பது, உணவுப் பொருட்களை ஓரிடத்தில் வைத்திடாமல் நடமாடும் விநியோகமாக மாற்றுவதால் இவற்றிற்கு யானைகளால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க முடியும்.
மனித-யானை எதிர்கொள்ளல் வால்பாறையின் பெரும்பாலான பகுதிகளில் இருந்தாலும், அதிகமாக இருப்பது துண்டுச்சோலைகள் இல்லாத அல்லது மிகக் குறைவான வனப்பகுதிகளைக் கொண்ட இடங்களில் தான். மனிதர்களின் உடமைகளுக்கு சேதம் ஏற்படுவது பெரும்பாலும் அக்டோபர் மாதத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரைதான்.
மனித-யானை எதிர்கொள்ளலின் மற்றொரு விளைவு மனித உயிரிழப்பு. இதை மட்டுப்படுத்த, முற்றிலுமாக தவிர்க்க, பல்வேறு அரசுத் துறைகள் இணைந்து பொதுமக்களை கலந்தாலோசித்து திட்டங்களை வகுக்க வேண்டும். இதுவே, எடுக்கப்படும் நடவடிக்கைகள் நீண்ட காலம் நீடித்து நிலைக்கவும், யானைகளின் நடமாட்டத்தை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ளவும், சமரச மனப்பான்மையை வளர்க்கவும் உதவும். மனித அடர்த்தி மிகுந்த குடியிருப்புகள் இருக்கும் பகுதிகளில், ஆண்டில் 10 மாதங்கள் யானைகள் நடமாட்டம் இருப்பின், பல வேளைகளில் யானையும் மனிதனும் எதிர்பாரா விதமாக ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள நேரிடும். இதனால் மனித உயிரிழிப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். 1994 முதல் 2012 வரை 39 பேர் யானையால் எதிர்பாராவிதமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதில் 72 விழுக்காடு உயிரிழப்பு ஏற்பட்டது தேயிலை எஸ்டேட்டிலும் சாலையிலுமே. யானைகள் இருப்பதை அறியாமலேயே அவை நடமாடும் பகுதிகளுக்கு சென்றதுதான் இதற்கான முக்கிய காரணம். அதிக உயிரிழப்பு ஏற்பட்டது டிசம்பர், பிப்ரவரி மாதங்களில் தான். ஆகவே, தமிழக வனத்துறையினரின் ஆதரவுடன், வால்பாறைப் பகுதியில் யானைகள் இருப்பிடத்தை அறிந்து அந்தச் செய்தியை பொதுமக்களிடம் தெரிவிக்கும் பணியை மேற்கொள்ளும் குழுவை ஏற்படுத்தினோம்.
யானைகள் இருக்குமிடத்தைப் பற்றிய செய்தியை முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்க மூன்று முறைகள் பின்பற்றப்பட்டது.
1. யானைகள் நடமாட்டம், இருக்குமிடம் முதலிய தகவல்கள் மாலை வேளைகளில் கேபிள் டி.வி. மூலம் ஒளிபரப்பப்பட்டது.
2. யானைகள் இருக்குமிடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் (2 கி.மீ.சுற்றளவில்) உள்ள பொதுமக்களுக்கு மாலை வேளைகளில் அவர்களுடைய கைபேசியில் யானைகள் இருக்குமிடம் பற்றிய குறுஞ்செய்தியை (SMS) ஆங்கிலத்திலும் தமிழிலும் அனுப்பப்பட்டது.
3. மின்னும் சிகப்பு LED விளக்குகள் வெகுதூரத்திலிருந்து பார்த்து அறியக்கூடிய உயரமான பகுதியில் பொறுத்தப்பட்டது. யானைகள் அச்சுற்றுப்புறங்களில் (2 கி.மீ. தூரத்துக்குள்ளாக) இருந்தால் இவ்விளக்கு எரிய வைக்கப்படும். இந்த விளக்கினை ஒரு பிரத்தியோக கைபேசியினால் எரிய வைக்கவும், அணைக்கவும் முடியும். இதை அப்பகுதி மக்களே செயல்படுத்தவும் ஊக்கமளிக்கப்பட்டது. நாளடைவில் பொதுமக்களே இவ்விளக்கை செயல்படுத்தவும் ஆரம்பித்தனர்.
வால்பாறைப்பகுதியில்மனித-யானைஎதிர்கொள்ளலால்ஏற்படும்விளைவுகளைசமாளிக்க, சரியான (அறிவியல்பூர்வமான) முறையில்கையாள, பாதிப்பினைதணிக்கஎடுக்கப்படும்நடவடிக்கைகள், நீண்டகாலம்நீடித்துநிலைக்கபொதுமக்களைஈடுபடுத்துதல்எந்தஅளவிற்குஅவசியம்என்பதைஇந்த ஆராய்ச்சியின்வாயிலாகஅறியமுடிகிறது.
சாலைபலி (Roadkill)
காடுகளைப் பிளந்து செல்லும் சாலைகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றிய உங்களுடைய ஆராய்ச்சி பற்றி. இந்தச் சாலைகள் உயிரினங்களிடையே ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன?
ஒரு தீண்டப்படாத, தொன்னலம் வாய்ந்த வனப்பகுதியை வெகு விரைவில் சீர்குலைக்க வேண்டுமெனில், செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் – அதன் குறுக்கே ஒரு சாலையை அமைத்தால் போதும். கொஞ்சம் கொஞ்சமாக அவ்வனப்பகுதி அதன் இயற்கைக் தன்மையை இழந்துவிடும். சாலைகள் மட்டுமல்ல காட்டில் தீ பரவாமல் இருக்க நீளவாக்கில் மரங்களையும் தாவரங்களையும் அகற்றி ஏற்படுத்தும் தீத்தடுப்பு வெளிகள் (Fire lines), மின் கம்பிகளின் கீழேயும், கால்வாய்கள், இரயில் பாதைகள், பிரம்மாண்டமான தண்ணீர் குழாய்கள் முதலியவை உயிரினங்களின் வாழிடங்களை இரண்டு துண்டாக்கும் இயல்புடையவை. இவற்றை ஆங்கிலத்தில் Linear intrusion என்பர்.
இந்த நீளவாக்கில் அமைந்த கட்டமைப்புகள் காட்டுயிர்களின் வழித்தடங்களில் (animal corridors) குறுக்கீடுகளாகவும் சில உயிரினங்களுக்கு நீளவாக்கில் அமைந்த தடைகளாகவும் (barrier) அமைகிறது. காட்டின் குறுக்கே செல்லும் சாலைகளிலும், இரயில் பாதைகளிலும் அடிபட்டு சின்னஞ் சிறிய பூச்சி, தவளையிலிருந்து உருவில் பெரிய யானை, புலி என பல உயிரினங்கள் அடிபட்டு பரிதாபமாக உயிரிழக்கின்றன. அது மட்டுமல்ல, சாலையோரங்களில் களைகள் மண்டி காட்டுத்தீ பரவுவதற்கும், இக்களைச்செடிகள் அங்குள்ள மண்ணுக்குச் சொந்தமான தாவரங்களை வளரவிடாமலும் தடுக்கின்றன.
ஆனைமலை புலிகள் காப்பகம், வால்பாறை பகுதியில் வாகனப் போக்குவரத்தினால், உயிரினங்களுக்கும், அவற்றின் வாழிடத்திற்கும் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய ஆராய்ச்சியை 2011 தொடங்கியுள்ளோம்.
இது மனஅழுத்தத்தை (ஸ்டிரெஸ்) தரும் அனுபவமாக இருந்தது என்று ஒரு முறை குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அது பற்றி கொஞ்சம் விளக்க முடியுமா?
தினமும் காலை வேளையில் சாலையில் நடந்து சென்று இப்படி உயிரிழந்த காட்டுயிர்களை எண்ணுவதும், பட்டியலிடுவதும் மகிழ்ச்சியான அனுபவத்தை கொடுப்பதில்லை. எனினும் மென்மேலும் இவ்விதத்தில் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் இது போன்ற வேலைகளில் ஈடுபடுவது ஒரு காட்டுயிர் ஆராய்ச்சியாளனின் கடமை.
குறிப்பிட்ட ஒரு கால இடைவெளியில் இந்தச் சாலைகளில் அடிபட்டு இறக்கும் உயிரினங்கள் தொடர்பாக ஏதாவது கணக்கெடுப்பு இருக்கிறதா?
இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் இவ்வகையான ஆராய்ச்சி அதிகம் இல்லை. அப்படியே இருந்தாலும் ஆராய்ச்சி முடிந்தவுடன் பரிந்துரைகளைக் கொண்ட கட்டுரையையும், ரிப்போட்டையும் எழுதி பதிப்பித்த பின் அந்த வேலை முடிந்து விடும். அது மட்டுமே போதாது. ஆராய்ச்சியின் முடிவில் கொடுக்கப்பட்ட பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டனவா? அப்படியே செயல் படுத்தப்பட்டாலும் அவை எதிர்பார்த்த விளைவுகளை கொடுத்ததா? எந்த அளவிற்கு அவை பயனுள்ளதாக இருக்கிறது என்பதை எல்லாம் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். எங்களது ஆராய்ச்சி இன்னும் முழுமையாக முடிவு பெறவில்லை. எனினும் இது வரை செய்த களப்பணியின் தரவுகள் சில – கோடைகாலத்தை விட மழைக்காலங்களில் சாலையில் பல உயிரினங்கள் அதிலும் குறிப்பாக தவளைகளும், பாம்புகளும் அரைபட்டுச் சாகின்றன. பாலூட்டிகளைப் பொறுத்தவரை கடம்பை மான், கேளையாடு, சிங்கவால் குரங்கு, மலபார் மலையணில், மரநாய், புனுகுப் பூனை, முள்ளம்பன்றி, சருகு மான் முதலியன சாலையில் அரைபட்டு உயிரிழந்துள்ளன.
இதைத் தடுப்பதற்குச் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன?
ஒரு வனப்பகுதிகளின் வழியே செல்லும் சாலைகளில் பயணிக்கும் போது நம்மை அறியாமலேயே நாம் செல்லும் வண்டிச் சக்கரத்தால் அரைத்து, அடித்து பல உயிர்களை சாகடிக்கின்றோம். காடுகளின் வழியாகச் செல்லும் சாலைகள் மனிதர்களுக்கு மட்டுமே இல்லை அங்கு வாழும் உயிரினங்களுக்கும் சேர்த்து தான் என்பது அவ்வழியே பயணிக்கும் பொதுமக்களும், சுற்றுலாவினரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வகையான உயிரிழப்பை தடுக்க பொதுமக்களின், சுற்றுலாவினரின் உதவியும், ஒத்துழைப்பும் பெருமளவில் தேவைப்படுகிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்
1. காட்டுப்பகுதியில் வேகத்தைக் கட்டுப்படுத்தி மெதுவாகச் செல்வது,
2. வழியில் தென்படும் குரங்குகளுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் தின்பண்டங்களை கொடுக்காமல் இருப்பது,
3. உணவுப் பண்டங்களை, பிளாஸ்டிக் குப்பைகளை சாலையோரத்தில் தூக்கி எறியாமல் இருப்பது.
காடுகளின் வழியாகச் செல்லும் சாலைகளை அளவிற்கு அதிகமாக அகலப்படுத்தக் கூடாது. சாலையின் இருபுறமும் மரங்கள் இருத்தல் குரங்கு, அணில் முதலிய மரவாழ் (arboreal) உயிரினங்களின் இடம்பெயர்வுக்கு இன்றியமையாதது. சாலைகளில் உயிரினங்களின் நடமாட்டத்திற்கு ஏற்ப தகுந்த இடைவெளியில் வேகத்தடைகள் இருப்பதும் அவசியம். இவ்வகையான இடங்களில் நெடுஞ்சாலைத் துறையினரும், வனத்துறையினரும், ஆராய்ச்சியாளர்களும் சேர்ந்து கருத்துகளைப் பரிமாரி செயல்படுதல் அவசியம்.
பசுமை இலக்கியம்
தமிழில் பசுமை எழுத்தின் இன்றைய நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இது என்னைவிட இத்துறையில் மூத்தவர்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி. எனினும்நான் பார்த்த வரையில் இயற்கை வரலாறு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எழுதப்படும் கட்டுரைகள் தான் அதிகம். இவையும் அவசியம் தான். அதே வேளையில் பல வித உயிரினங்களின் கையேடுகள் (Field guides), இத்துறை சார்ந்த தரமான நூல்கள், மொழிபெயர்ப்புகள் இன்னும் வரவேண்டும். வேங்கைப்புலிகளைப் பற்றிய கானுறை வேங்கை (கே. உல்லாஸ் கரந்த் – தமிழில் தியடோர் பாஸ்கரன்), பறவையியலைப் பற்றிய நூலான “அதோ அந்த பறவை போல (எழுதியவர் ச. முகமது அலி) போன்ற சில நூல்களைத் தவிர இத்துறை சார்ந்த நூல்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இதோடு களப்பணி முறைகள், விளக்கக் கையேடுகள், ஆராய்ச்சி அறிக்கைகள், காட்டுயிர், சுற்றுச்சூழல் சட்டங்கள் யாவும் தமிழில் எழுதப்பட வேண்டும். இவற்றையெல்லாம் எழுதவும், எழுதுவதை ஊக்குவிக்கவும் துறைசார் சொற்களை உருவாக்கவும், அவற்றை புழக்கத்திலும் கொண்டு வரவேண்டும். பாலுட்டிகள், பறவைகள், சில பாம்புகள் தவிர பல உயிரினங்களுக்கு தமிழில் பெயரே கிடையாது. அவற்றிற்கெல்லாம் பெயரிட வேண்டும்.
துறைசார்ந்த நூல்களும் (technical, reference books) கையேடுகளும், கட்டுரைகளும் மட்டுமே பசுமை இலக்கியம் இல்லை. சுற்றுச்சூழல், பல்லுயிர் பாதுகாப்பு, புறவுலகு சார்ந்த தத்துவார்த்தமான சொல்லாடல்களும், புதினங்களும், கவிதைகளும், குழந்தைகளுக்கான கதைகளும் என மென்மேலும் பதிப்புகள் வெளிவரவேண்டும். இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
தமிழ் ஊடகச் சூழல் இயற்கை பாதுகாப்புக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கிறதா. அந்த வகையில் உங்களுக்கு நம்பிக்கை தரும் முயற்சிகள் நடக்கின்றனவா?
சுற்றுச்சூழல், காட்டுயிர் பாதுகாப்பு முதலியவை பெரும்பாலான மாத, வார இதழ்களிலும், தினசரிகளிலும் கிட்டத்தட்ட பக்கத்தை நிரப்பும் ஒரு அம்சமாகவே இருக்கும். சில பத்திரிக்கைகளில் இவ்வகையான பகுதிகள் இருக்கவே இருக்காது. சினிமாவும், அரசியலும் தான் மேலோங்கி இருக்கும். ஆன்மீகத்திற்கு, சிறுவர்களுக்கு, சினிமாவிற்கு, சமையலுக்கு என தினமும் ஒரு இணைப்பை தினசரிகள் வழங்கும் போது சுற்றுச்சூழலுக்கு, இயற்கை வரலாறு சங்கதிகளுக்கு என ஏன் வரக்கூடாது? காட்டுயிர், புதிய கல்வி, துளிர், பூவுலகு, கலைக்கதிர் முதலிய பத்திரிக்கைகளைத் தவிர. இது போன்ற பத்திரிக்கைகள் இருப்பது கூட எத்தனை பேருக்கு தெரியும்?
அதுபோல சில பத்திரிக்கைகளும், நாளிதழ்களும் காட்டுயிர்களை பயங்கரமானவை, கொடியவை என்பது போல சித்தரிப்பதையும் அடிக்கடி காணலாம். காட்டுயிர் இதழின் ஆசிரியர் ச. முகமது அலி எழுதிய “நெருப்பு குழியில் குருவி” நூலை எத்தனை பத்திரிக்கையாளர்கள் படித்திருப்பார்கள்? அண்மையில் வால்பாறையில் ஒரு புலி குடியிருப்புப் பகுதியில் புகுந்து விட்டது. அங்கிருந்த மாடு ஒன்று புலியை முட்டி விட்டது. மறுநாள் அப்புலி உயிரிழந்தது. உடனே தினசரிகள் என்ன எழுதின தெரியுமா? மாடு முட்டி புலி உயிரிழந்தது எனவும், அப்புலி 10 மாடுகளை அடித்து சாப்பிட்டுவிட்டது எனவும். இறந்த அப்புலியின் உடலை கிழித்து பரிசோதனை செய்த போது தான் தெரிந்தது அதன் இருதயத்தில் முள்ளம்பன்றியின் உடலில் உள்ள கூரிய முள் குத்தியிருந்தது. அதன் வயிற்றில் கூட எதுவுமே இல்லை. படிப்பவரை ஈர்க்கும் வண்ணம் எழுதுவதற்காக அந்த கம்பீரமான வேங்கையை, அதுவும் இறந்து போன வேங்கையை அவமானப்படுத்துதல், அவமதித்தல் சரியா? இப்போதெல்லாம் மிருகம், விலங்கு எனும் வார்த்தைகளையே நான் அதிகம் உபயோகிக்காமல் எனது கட்டுரைகளில் உயிரினம் என்றே குறிப்பிடுகிறேன். இவ்வார்த்தைகள் கிட்டத்தட்ட கெட்ட மனிதர்களைக் குறிக்கும் கெட்ட வார்த்தைகள் ஆகிவிட்டன.
எனினும் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் எனும் எண்ணமுடையவர்கள், ஊடகங்களை மட்டுமே குறை கூறாமல், முயற்சி எடுத்து மீண்டும் மீண்டும் அணுகி அவர்களுக்கு விளக்கமளித்தும், பத்திரிக்கையாளர்களுக்கு பட்டறைகள், கருத்தரங்குகள் நடத்துவதன் மூலம் இந்நிலையை மாற்ற முடியும் என்றே தோன்றுகிறது. இது போன்ற கருத்தரங்குகளை நாங்கள் இப்பகுதியில் நடத்தியும், பங்கு கொண்டும் இருக்கிறோம். ஒரு சில ரிப்போட்டர்களிடம் மாற்றத்தைக் காணவும் முடிகிறது.
புத்தகம், இதழ்களில் எழுதுவதன் மூலம் இயற்கை பாதுகாப்பு பரவலாகும் என்று நம்புகிறீர்களா?
அதுவும் உதவும். சுற்றுச்சூழல் மாசு இப்பூமிப்பந்தினை விழுங்கிக் கொண்டும், இயற்கையான வாழிடங்கள் அருகியும் வரும் இச்சூழலில் இவற்றைப் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஏற்படுத்த புறவுலகின் பால் கரிசனம் கொண்டுள்ளவர்கள் எல்லா வகையான ஊடகச் சூழலையும் பயன்படுத்திக் கொள்வது இன்றியமையாதது.
——————————————————————————
இக்கட்டுரையின் PDF ஐ இங்கே பெறலாம்.
காணாமல் போகும் சாலையோர உலகம்
சமீபத்தில் திருச்சியிலிருந்து தஞ்சாவூருக்கு பயணம் மேற்கொள்ள நேரிட்டது. பல ஆண்டுகளாக இவ்வழியில் போய் வந்து கொண்டிருந்தாலும் கடைசியாக பயணித்த அனுபவம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. திருவெறும்பூரிலிருந்து ஒரு காலை வேளையில் காரில் புறப்பட்டோம். பாய்லர் தொழிற்சாலை, துவாகுடி வழியாகச் சென்று சுங்கச்சாவடியில் அந்த அகலமான சாலையில் போய் வர 59 ரூபாய் கட்டணம் செலுத்தி விட்டு கார் தஞ்சாவூரை நோக்கி வேகமெடுத்தது. ஸ்பீடோமீட்டர் 80க்குக் குறையாமல் காரோட்டி பார்த்துக்கொண்டார். அரைமணி நேரத்தில் ஊரின் எல்லைக்குள் நுழைந்து விட்டோம். பலகாலமாக அந்த வழியாகப் போகாமல் இருந்த எனக்கு இம்முறை இங்கு நான் கண்ட பல மாற்றங்கள் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. நான் போகவேண்டிய இடத்தை சீக்கிரமாக அடைந்ததில் ஒரு விதத்தில் மகிழ்ச்சி என்றாலும் பயணித்த அத்தருணத்தில் பலவற்றை இழந்ததைப் போன்ற ஒரு உணர்வே மேலோங்கி இருந்தது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் எனது மாமா ஒருவருடன் இவ்வழியில் பயணித்த போது இந்த இரண்டு ஊர்களுக்கிடையே வழிநெடுக சாலையிலிருந்தபடியே பார்க்கக்கூடிய பல ஏரிகளை பேருந்திலிருந்து காண்பித்துக்கொண்டே வந்தார். பல இடங்களில் அவை இருந்த சுவடே தெரியாமல் போனதைச் சுட்டிக்காட்டி கவலைப்பட்டுக்கொண்டார். அப்போது அவரது வார்த்தைகளின் அர்த்தம் அவ்வளவாகப் புரியவில்லை. அப்போழுதெல்லாம் வழிநெடுக ஆங்காங்கே சாலையோரமாக பனை, ஆல், புளியன் மரங்களைக் காணலாம். இப்பொது இவ்வழியே போகும்போது ஏரியும் இல்லை, மரங்களும் இல்லை. இப்போது சில ஊர்கள் கூட பார்வையிலிருந்து மறைந்ததும், தூரமாகவும் போய்விட்டன.
முன்பெல்லாம் பேருந்தில் தஞ்சாவூருக்குப் பயணித்தால் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். துவாகுடி தாண்டியதும் புதுக்குடி, தேவராயனேரி, செங்கிப்பட்டி வழியாக வல்லம் வந்தடைந்து பின் சுமார் இருபது நிமிடங்களில் தஞ்சாவூரைச் சென்றடையலாம். அப்போதிருந்த ஒரு சில சோழன் போக்குவரத்துக்கழக பேருந்துகளே எல்லா ஊர்களிலும் நிற்கும். பல தனியார் வண்டிகள் துவாகுடி, செங்கிப்பட்டி விட்டால் வல்லம் அதன் பின் தஞ்சாவூர்தான். இப்போதும் இந்த ஊருக்குள் போய்வரமுடியும். அதற்கென்று தனி பஸ் சர்வீஸ் இருக்கிறது. விரைவு வண்டிகள், காரில் பயணிப்போர் இங்கெல்லாம் போக வேண்டிய அவசியம் இல்லை. தொலை தூரத்திலிருந்து பயணிக்கும் வண்டிகளில் வருபவர்களுக்கு காலப்போக்கில் இந்தமாதிரியான ஊர்கள் இருப்பதே தெரியாமல் போய்விடும். இவ்வூர்களையெல்லாம் இருப்பதை தெரிந்து வைத்திருப்பதும், அவ்வழியே கடந்து செல்வதும் அவர்களுக்கு வேண்டுமானால் அவசியமில்லாமலிருக்கலாம். ஆனால் நான் உணர்ந்ததை பலகாலமாக அடிக்கடி இவ்வழியே பயணித்துக்கொண்டிருப்பவர்கள் ஒருவேளை உணரக்கூடும். நான் சொன்ன இந்த ஊர்களெல்லாம் மிகப்பிரபலமானவையோ, சுற்றுலாவிற்கான இடமோ அல்லது இவ்வூர்களிலெல்லாம் எனக்கு சொந்தக்காரர்களோ, தெரிந்தவர்களோ இல்லை. பிறகு ஏன் இந்த அங்கலாய்ப்பு என்கிறீர்களா? பயணம் மேற்கொள்வது சென்றடையும் இடத்தை அடைவதற்கு மட்டும் தானா? எவ்வழியே பயணிக்கிறோம், வழியில் என்ன செய்கிறோம், எதைப் பார்க்கிறோம் என்பது முக்கியம் இல்லையா?
நல்ல சாலையால் பல நன்மைகள் இருக்கத்தான் செய்கிறது. அகலமான சாலையில் வேகமாகப் பயணிப்பது ஒரு பரவசமூட்டும் அனுபவமாகவும், வேலையை முடிக்க ஒரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு துரிதமாகச் சென்றடையவும் முடிகிறது. ஆயினும் பலகாலமாக பார்த்துப் பழகிய மரங்களையும், ஊர்களையும் காணாமல் போகச்செய்கிறது இந்த நால்வழிச்சாலைகள். சிற்றூர்களை பார்க்கமுடியாமல் போனால் போகிறது. பெயர்ப்பலகைகளிலாவது அவற்றைப் பார்க்க முடிந்தது. ஆனால் ஓங்கி உயர்ந்த, நிழலளிக்கும் அழகான சாலையோர மரங்கள்?
நால்வழிச்சாலையின் நடுவில் இருந்த திட்டில் அரளிச்செடிகள் வளர்க்கப்பட்டிருந்தன. ஆட்கள் அவற்றிற்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தார்கள். பல்லாண்டு காலமாக வாழ்ந்து வந்த, எந்த பராமரிப்பும் செய்யத்தேவையில்லாத சாலையோர மரங்களை வெட்டிச்சாய்த்துவிட்டு வெறிச்சோடியிருக்கும் அந்த நான்குவழிச்சாலையின் நடுவில் பூச்செடிகளை வைத்து தண்ணீரையும் விரயம் செய்து கொண்டிருக்கிறோம். சாலையோர மரங்களை வெட்டாமல் சாலையே அமைக்க முடியாதா? நாம் நாட்டு தேசிய நெடுஞ்சாலைத்துறையில் சாலையோர மரங்களை விரும்பும் ஓர் அதிகாரி கூட இல்லையா? மிகச்சிறப்பாக சாலைகளை அமைக்கும் பொறியியல் வல்லுனர்களுக்கு சாலையின் ஒரு அங்கம் அதனோரத்தில் இருக்கும் மரங்கள் என்பது தெரியாதா?
தஞ்சாவூரில் வேலையை முடித்துக்கொண்டு நீடாமங்கலத்திற்குப் பயணித்தோம். புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வழியாகச் சென்ற சாலையில் அதிக மாற்றம் ஏதுமில்லை. ஆங்காங்கே இருந்த பள்ளங்களை தாரிட்டு நிரப்பி முன்பு வந்த சாலையைபோல் ஒரே சீராக இல்லாமலும், சில இடங்களில் வேகத்தடைகளும், வழியெங்கிலும் மரங்களும் இருந்தது. காகங்களும், தவிட்டுக்குருவிகளும், நாகணவாய்களும் சாலையின் ஓரத்தில் அமர்ந்து எதையோ கொத்திக்கொத்தி சாப்பிட்டுக் கொண்டிருந்தன. வாகனங்கள் சீறி வரும் வேளையில் பறந்து சென்று, அவை கடந்து சென்றபின் மீண்டும் இருந்த இடத்திற்கே வந்தமர்ந்தன. சற்று தொலைவில் கத்திக்கொண்டிருந்த கெளதாரியின் குரலை தெளிவாகக் கேட்க முடிந்தது. தந்திக்கம்பிகள் சாலையின் அருகிலேயே நம்மைத்தொடர்ந்து பயணித்தன. அவற்றில் அமர்ந்திருக்கும் பறவைகளும் தான். பச்சைப்பசேலென வயல் கண்ணுக்கெட்டும் தூரம் வரையில் பரவியிருந்தது. ஆட்கள் ஆடுகளை சாலையின் ஓரமாக ஓட்டிக்கொண்டு போனார்கள். அவ்வப்போது அவைகளும் வண்டி ஓட்டுனர்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தின. காலை நேரமாதலால் சிறுவர்கள் பள்ளிக்கு சைக்கிளில் ஒருவர் பின் ஒருவராக போய்க்கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே ஊர்களும், கடைகளும் அவற்றின் வண்ண வண்ணப் பெயர்ப் பலகைகளும் தென்பட்டன. மக்கள் பேருந்துக்காக காத்துகொண்டிருந்தார்கள். சாலையை விட்டு சற்றுத் தள்ளியிருந்த அரசமரத்தடியில் சிலர் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தார்கள். லாரி ஒன்று நடு ரோட்டில் நிறுத்தப்பட்டு அதன் ஓட்டுனர் தலையை வெளியில் நீட்டி எதிரில் வந்த மற்ற லாரி ஓட்டுனரிடம் ஏதோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். இரண்டுமே ஹரியானா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டவை. நட்ட நடு ரோட்டில் இப்படி நிறுத்தி பேசிக்கொண்டிருப்பது மற்ற வாகனங்களின் போக்குவரத்திற்கு இடையூராக இருப்பதென்னவோ உண்மைதான். எங்கு பரிச்சயமானார்களோ எவ்வளவு நாள் கழித்து சந்தித்துக்கொள்கிறார்களோ! வண்டியை ஓரமாக நிறுத்தி பேச அவர்களுக்கெல்லாம் நேரமிருக்குமோ என்னவோ? இன்னும் பல கி.மீ தூரம் போகவேண்டியிருக்கலாம். பின் வரும் வாகனங்கள் திட்டிக்கொண்டே ஒலியெழுப்புவது அவர்களுக்குத் தெரியாமலில்லை. வண்டியை நகர்த்திக்கொண்டே கையசைத்து விடைபெற்றனர் இருவரும்.
காரோட்டி சொன்னார்,” இந்த ரோட்ட எப்ப அகலப்படுத்தப் போறாங்களோ, பைபாஸ் ரோடு ரெடி பண்ணிட்டா இந்த ஊருக்குள்ள வரவேண்டியதே இல்ல..”. எனக்கு ஏதும் பேசத் தோன்றவில்லை.புன்னகைத்துக் கொண்டே முகத்தைத் திருப்பி சாலையோர உலகை வேடிக்கை பார்ப்பதை தொடரலானேன்.
******
காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 8. புதிய தலைமுறை 30 ஆகஸ்ட் 2012
தேசாந்திரியின் கானல் நீர்
கர்நாடக மாநிலத்திலுள்ள தார்வாரிலிருந்து பெங்களூருக்கு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தேன். ஹிரியூர் எனும் ஊரில் பேருந்து நிலையத்தில் மதிய உணவிற்காக கொஞ்ச நேரம் வண்டி நின்றது. ஒரே விதமாக நெடுநேரம் அமர்ந்திருக்க முடியாமல் கொஞ்சநேரம் நிற்கலாம் என வண்டியை விட்டு கீழிறங்கி வெளியே வந்தேன். பேருந்து நிலையம் அப்படி ஒன்றும் பெரியது இல்லை. சுமார் பத்து வண்டிகள் வரிசையாக வந்து நிறுத்தக்கூடிய அளவிற்கு இருந்தது. ஆனால் சுத்தமாகவே இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக காகிதங்களும், சிகரெட்டுத்துண்டுகளும், துப்பி வைத்த வெற்றிலை பாக்கு எச்சிலும் இருந்ததே தவிர பிளாஸ்டிக் குப்பைகளை காணமுடியவில்லை. பேருந்து நிலையத்தைச்சுற்றி மதில் சுவர் இருந்தது. சுத்தமாக இருந்ததற்குக் காரணம் தரை முழுவதும் சிமெண்டினால் பூசி மொழுகிப்பட்டிருந்தது கூட காரணமாக இருக்கலாம். குண்டும் குழியுமாக இருந்திருந்தால் சேரும் குப்பைகளைக் கூட்டிச் சுத்தம் செய்வது கடினமான காரியம். ஒரே சீரான சிமெண்டுத் தளத்தை சுத்தம் செய்வது எளிதாகவே இருக்கும்.
நாகணவாய்களும், காகங்களும், கரும்பருந்துகளும் வானில் பறந்தும், அருகிலுள்ள மரங்களில் அமர்ந்துமிருந்தன. எனினும் என்னைக் கவர்ந்தது நூற்றுக்கணக்கில் பறந்து கொண்டிருந்த தும்பிகளே. சமீப காலமாக எனக்கு தும்பிகளைப் பார்ப்பதும் அவற்றின் குணாதிசியங்களை பதிவு செய்வதிலும் ஆர்வம் மேலோங்கி செல்லுமிடங்களிலெல்லாம் அவற்றை உற்று நோக்குவதே வேலையாக இருக்கிறது. பூச்சியினத்தைச் சார்ந்த தும்பிகள் மிகச்சிறந்த பறக்கும் திறனைக் கொண்டவை. சிறு வயதில் தட்டானைப் பிடித்து விளையாடாதவர்கள் மிகச்சிலரே இருக்கமுடியும். தும்பி அல்லது தட்டான்களில் இரண்டு வகை உண்டு. கண்கள் இரண்டும் அருகருகில் அமைந்து, அமரும்போது இறக்கைகளை விரித்த வண்ணம் வைத்திருப்பவை தட்டான்கள். இவை பரந்த வெளிகளிலும் நீர்நிலைகளுக்கு அருகிலும் பறந்து திரிவதை காணலாம். உருவில் தட்டான்களை விடச் சற்று சிறியதாகவும், மிக மெல்லிய இறக்கைகளையும், கண்கள் சற்று இடைவெளிவிட்டு அமைந்தும், அமரும்போது இறக்கைகளை மடக்கி பின்புறம் வைத்திருப்பவை ஊசித்தட்டான்கள். இவை பெரும்பாலும் நீர்நிலைகளின் அருகில் பறந்து திரியும்.
ஹிரியூர் பேருந்து நிலையத்தில் பறந்து கொண்டிருந்தவை Wandering Glider or Globe Skimmer (Pantala flavescens) எனும் வகையைச்சேர்ந்த தட்டான்கள். ஐரோப்பா, ரஷ்யா, கனடா, மற்றும் தென் துருவப்பகுதியைத் தவிர உலகில் பல பகுதிகளில் இவை பரந்து காணப்படுகின்றன. தென்னிந்தியாவில் தென்மேற்குப்பருவ மழைக்காலத்திற்குச் சற்று முன்பு இவை ஆயிரக்கணக்கில் வானில் பறந்து திரிவதைக் காணலாம். சமீபத்தில் இவற்றைப்பற்றின ஆச்சர்யமான தகவல் ஒன்று கண்டறியப்பட்டது. பல்லாயிரம் தட்டான்கள் கூட்டம் கூட்டமாக அக்டோபர் மாத ஆரம்பத்தில் தென்னிந்தியாவிலிருந்து ஆப்பிரிக்காவிற்கு கடல் கடந்து (சுமார் 3500 கீ.மீ.) வலசை போவது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவில் சுமார் 500 க்கும் மேற்பட்ட தட்டான்கள் இருந்தாலும் தமிழில் ஒவ்வொன்றிற்கும் தனியாகப் பெயரில்லை. உலகில் பல இடங்களில் தென்படுவதாலும், கடல்கடந்து கண்டம் விட்டு கண்டம் வலசை போவதாலும் நான் ஹிரியூரில் பார்த்த அந்த தட்டானுக்கு தேசாந்திரி என பெயரிட்டுக்கொண்டேன். சற்று நேரம் அத்தட்டான்களை கவனித்தவுடன் அவை அங்கே என்ன செய்கின்றன என்பது தெரிந்தது. அவை முட்டையிட்டுக்கொண்டிருந்தன. ஆமாம், அந்த பளபளப்பான தரையில் தான்.
தட்டான்களின் வாழ்க்கைச் சுழற்சிமுறை நம்மை வியக்க வைக்கும். முதிர்ந்த ஆணும் பெண்ணும் கலவி கொள்ளும் விதமே அலாதியானது. ஆண் தனது வயிற்றுப்பகுதியின் (வால் என நாம் கருதுவது) கடைசியில் இருக்கும் கொக்கி போன்ற உருப்பினால் பெண்ணின் தலையின் பின்புறம் கோர்த்துக்கொள்ளும். பெண் தனது வயிற்றுப்பகுதியின் முனையை மடக்கி ஆணின் வயிற்றுப்பகுதியின் ஆரம்பத்திலுள்ள பை போன்ற அமைப்பில் கொண்டு சேர்க்கும். இப்பையில் தான் ஆணின் விந்தணுக்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இது முடிந்தவுடன் நீர்நிலைகள் இருக்குமிடம் தேடி பறந்து சென்று தட்டானின் வகைக்கேற்ப, நீரின் மேற்பரப்பில், நீரில் மிதக்கும் தாவரங்களில், நீரோரத்திலுள்ள மண்ணில் முட்டையிடும். சில தட்டான் இனத்தில் பெண் முட்டையிட்டு முடிக்கும் வரை ஆண் அதை பிடித்துக்கொண்டே இருக்கும். தேசாந்திரியும் அப்படித்தான்.
நீரிலிட்ட முட்டை பொரிந்து தட்டானின் இளம்பருவம் நீரில் பல காலம் வாழும். முதிர்ச்சியடைந்த பின் நீரிலிருந்து வெளியே நீட்டிகொண்டிருக்கும் தாவரங்களைப் பற்றி மேலே வந்து தனது கூட்டிலிருந்து உறையை பிய்த்துக்கொண்டு இறக்கைகளை விரித்து வானில் பறக்க ஆரம்பிக்கும். தட்டான்கள் மனிதர்களுக்கு நன்மை பயக்கும் பூச்சியனத்தைச் சார்ந்தவை. நீருக்கடியில் இருக்கும் போதும் கொசுவின் முட்டைகளையும் மற்ற பூச்சிகளையும் பிடித்துண்ணும். இறக்கையுள்ள தட்டானாக வானில் பறக்கும் போதும் கொசுக்களையும் மனிதர்களுக்கு தீங்கிழைக்கும் மற்ற பூச்சிகளையும் உண்ணும்.
சரி ஹிரியூருக்கு வருவோம். நீரில் முட்டையிடுவதற்கு பதிலாக தேசாந்திரிகள் ஏன் தரையில் முட்டையிட வேண்டும்? காரணம், அந்த பளபளப்பான தரையிலிருந்து வெளிப்படும் முனைவாக்க ஒளியினால் (polarized light). இது ஒருவகையான ஒளிசார் மாசு (Polarized light pollution). பளிங்குக்கற்களினால் ஆன சமாதி, பளபளப்பான சிமெண்ட்டுத்தரை, காரின் முன் கண்ணாடி முதலியவற்றிலிருந்தும், சாலைகள் அமைக்கப் பயன்படும் அஸ்பால்ட் (asphalt) எனும் ஒரு வகை ஒட்டிக்கொள்ளும் கருமையான கலவைப் பொருளிலிருந்தும் இவ்வகையான முனைவாக்க ஒளி வெளிப்படும். இதனால் இந்த இடங்களெல்லாம் பலவகையான பூச்சிகளுக்கு நீரைப்போன்றதொரு தோற்றத்தை அளிக்கும்.
எங்கோ பிறந்து, முதிர்ச்சியடைந்து, பல இடங்களில் பறந்து திரிந்து, தம்மை உணவாக்க வரும் பல வகையான பறவைகளிடமிருந்து தப்பித்து, தனது துணையைத்தேடி, கலவி கொண்டு, தனது இனத்தை தழைத்தோங்கச்செய்ய சரியான இடம்பார்த்து முட்டையிடும் வேளையில் நீரென்று நினைத்து தரையிலும், கற்களிலும், கண்ணாடிகளிலும் முட்டையிடும் இந்தத் தட்டான்களைப் பார்க்க வேதனையாக இருந்தது. முட்டையிடுவதில் மும்முரமாக இருந்த ஒரு சோடி வேகமாக வந்து திரும்பிய பேருந்தின் சக்கரத்தில் அடிபட்டு தரையோடு தரையாகிப் போனது. மற்ற சோடிகள் தமது முட்டையிடும் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தன.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு உயிருக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தான் இருக்கிறது. பேருந்து புறப்படத் தயாரானது. சன்னலோர இருக்கையில் அமர்ந்தபடியே தேசாந்திரிகள் முட்டையிடும் பரிதாபமான காட்சியை கண்டுகொண்டிருந்த போதே பேருந்து பெங்களூரை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது.
******
காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 7. புதிய தலைமுறை 23 ஆகஸ்ட் 2012
இடைவெளியும் இடையூறும்
அன்னார்ந்து பார்த்துக் கிடந்தது அந்த அணில். சாலையின் நடுவில். அது சாதாரண அணிலல்ல, மேற்குத்தொடர்ச்சி மலையில் வாழும் மலையணில். வண்டியை விட்டு இறங்கி அருகில் சென்று பார்த்த போது அதன் முகத்திலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது, வயிற்றின் உள்ளிருந்து குடல் பகுதி வெளியே வந்து கிடந்த்து. சாலையைக் கடக்கும் போது ஏதோ ஒரு வாகனத்தில் அடிபட்டு பரிதாபமாக இறந்து போய் அதன் வெண்மஞ்சளான அடிப்பாகம் தெரிய அன்னார்ந்து பார்த்துக் கிடந்தது அந்த மலையணில். விபத்து ஏற்பட்டு சில மணி நேரங்களே ஆகியிருக்க வேண்டும். ஒரு கண்ணிலிருந்து இரத்தம் வழிந்தோடிக்கொண்டிருந்தது. அதன் காலிலுள்ள கூரிய நகங்கள் தாரிடப்பட்ட சாலைக்குப் பழக்கமானதல்ல. மரத்தின் கிளைகளைப் பற்றி ஏறுவதற்கும், இறங்குவதற்குமே ஏதுவானது.
அது சாலையைக் கடக்கும் போது நிச்சயமாக வேகமாகத்தான் போயிருக்க வேண்டும். அது தரையில் நடந்து நான் இதுவரை பார்த்த்தில்லை. எந்த வகையான வாகனத்தில் அடிபட்டது என்று புரியவில்லை. இருசக்கர வண்டியா? பேருந்து போன்ற வாகனமா? யூகிக்க முடியவில்லை. நிச்சயமாக சக்கரத்தினடியில் போகவில்லை. போயிருந்தால் உடல் முழுவதும் சிதைந்து தரையோடு தரையாக ஆகியிருக்கும். ஒருவேளை சாலையின் ஒருபுறத்திலிருந்து மறுபுறமுள்ள மரத்திற்கு தாவும் போது எதிரேயுள்ள கிளையைப்பற்ற முடியாமல் கீழே விழும் வேளையில் எதிர்பாராவிதமாக கடந்து செல்லும் வாகனத்தில் மோதி இறந்திருக்குமோ? அப்படி இருக்கவே முடியாது என்றே தோன்றியது. மரத்திற்கு மரம் மலையணில் தாவுவதை பலமுறை கண்டிருக்கிறேன். அவற்றிற்கு தெரியும், எவ்வளவு தூரம் தம்மால் தாவமுடியும் என்று. கிளைக்குக் கிளை தூரம் அதிகமாக இருப்பின் ஒரு முனையில் இருந்து சற்று நேரம் தாவி இறங்கவேண்டிய கிளைப்பகுதியை உற்று நோக்கும். நம்மில் சிலரைப்போல் அவை என்றுமே அகலக்கால் வைப்பதில்லை. முடியாது எனத்தோன்றினால் தாவ முடிந்த வேறோர் கிளைக்குச்சென்றுவிடும்.
விபத்து எப்படி நடந்திருந்தால் என்ன? இந்த அழகான மலையணில் இப்போது உயிரில்லாமல் பரிதாபமாக சாலையில் கிடந்தது. அதனருகில் சென்று அன்னாந்து பார்த்தபோது சுமார் 7-8 மீட்டர் அகல நீல வானம் தெரிந்தது. நீளமான சாலையின் மேலே இருபுறமும் பார்த்தேன். சாலையின் இருபுறமுள்ள மரங்களுக்கு இடையில் நீளவாக்கில் சுமார் 500 மீட்டர் நீல வானம் பளிச்சிட்டது. இந்த இடைவெளி மட்டும் இல்லாமலிருந்தால் இந்த மலையணிலுக்கு இந்த கதி ஏற்பட்டிருக்காது.
நம் வீட்டினருகில் தென்படும் முதுகில் மூன்று வரியுள்ள சிறிய அணிலை பார்த்துப் பழக்கப்பட்டவர்கள் மலையணிலை முதன்முதலில் பார்க்கும்போது நிச்சயமாக மலைத்துப் போவார்கள். காட்டில் மலையணில் துள்ளித்திரியும் காட்சி பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும். உருவில் பெரிய இம்மலையணில்களின் உடலின் மொத்த நீளம் (தலையிலிருந்து வால்முனை வரை) சுமார் இரண்டு அடி. உரோமங்களடர்ந்த வால் மட்டுமே ஒரு அடிக்குக் குறையாமல் இருக்கும்.
இந்தியாவில் மூன்று வகையான மலையணில்கள் உள்ளன. இந்திய மலையணில், சாம்பல் நிற மலையணில் மற்றும் மலேய மலையணில். முதலிரண்டு மலையணில்களும் கங்கைநதிக்கு தெற்கேயுள்ள வனப்பகுதிகளில் தென்படுகின்றன. மலேய மலையணில் (Malayan Giant Squirrel Ratufa bicolor) இந்தியாவின் அஸ்ஸாம், சிக்கிம், அருனாசலப் பிரதேசம் முதலிய வடகிழக்கு மாநிலங்களில் பரவி காணப்படுகிறது. இதன் மேலுடல் கரும்பழுப்பாகவும் கீழே வெளிரிய நிறத்திலும் இருக்கும்.
இந்திய மலையணில் (Indian Giant Squirrel Ratufa indica) பசுமைமாறாக்காடுகளிலும், வறன்ட மற்றும் ஈர இலையுதிர்காடுகளிலும், இப்பகுதிகளை அடுத்த தோட்டங்களிலும் இம்மலையணில் தென்படும். தானியங்கி துப்பாக்கி முழக்கமிடும் ஓசையை ஒத்த இதன் உரத்த குரலின் மூலமும், இவை வசிக்கும் இடத்தைச்சுற்றிலும் மரத்தின் மேலுள்ள பெரிய கூடைபோன்ற கூடுகளை வைத்தும் இதனிருப்பிடத்தை அறியலாம். இவற்றின் மேல் பகுதி கருஞ்சிவப்பு நிRறaத்திலும், கீழ்ப்பகுதி வெளிறிய மஞ்சள் நிறத்திலும், வால் கரிய நிறமாகவும் இருக்கும். இம்மலையணிலை வெளில் என்று அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை மேற்கு மற்றும் கிழக்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், மத்திய இந்தியாவின் வனப்பகுதிகளிலும் தென்படுகிறன. இவற்றில் 7 உள்ளினங்கள் இடத்திற்கு இடம் உடல்நிறத்தில் சற்று மாறுபட்டு காணப்படும். உதாரணமாக நீலகிரிப் பகுதில் உள்ள இம்மலையணிலின் வால் முனை வெண்மையாகவும், ஆனமலைப் பகுதியிலுள்ளவவை கரிய நிற வாலுடனும் இருக்கும்.
சாம்பல் மலையணில் (Grizzled Giant Squirrel Ratufa macroura) அல்லது நரை மலையணில் அரிதானது. இம்மலையணிலை, வறண்ட இலையுதிர்காடுகள், ஆற்றோரக்காடுகள் மற்றும் பசுமைமாறா காடுகளில் காணலாம். இவை உருவில் இந்திய மலையணிலைப்போலிருந்தாலும் இதன் உடல் நிறம் சாம்பல் கலந்த பழுப்பாகும். கூச்சசுபாவம் உள்ள இவ்வணிலை இவற்றின் உரத்த குரலின் மூலம் கண்டுகொள்ளலாம். இந்தியாவில் இவை காணப்படும் இடங்கள் மிகக்குறைவே. மேற்குத்தொடர்ச்சிமலையின் கிழக்குப்பகுதியிலுள்ள சரிவில் சுமார் 10 இடங்களில் இவை காணப்படுகின்றன. இவற்றைப் பாதுகாப்பதற்கென்றே ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் சாம்பல் மலையணில் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக-கர்நாடக எல்லையிலுள்ள காவிரி சரணாலயம், பழனியை அடுத்த வனப்பகுதிகளிலும் இவை தென்படுகின்றன. இம்மலைணில்கள் மரத்திலுள்ள பழங்கள், விதைகள், பூக்கள், இலைகள், மரப்பட்டை, சிலவேளைகளில் பூச்சிகள், பறவைகளின் முட்டை போன்றவற்றை உணவாகக்கொள்கின்றன. பகலில் சஞ்சரிப்பவை இவை மரவாழ்விகள்.
காட்டில் அருகருகே உயர்ந்தோங்கி வளர்ந்துள்ள மரங்களின் உச்சியில், கிளைகளும் இலைகளும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக அமைந்து ஒர் தனி அடுக்கை ஏற்படுத்தியிருக்கும். இப்பகுதி மரஉச்சி அல்லது விதானம் எனப்படும். இவ்விதானப்பகுதியில் தான் பலவிதமான உயிரினங்கள் வாழும். விதானவாழ் உயிரிகள் மரக்கிளைப் பற்றியும், மரத்துக்கு மரம் தாவிக்குதித்தும் இடம்விட்டு இடம் செல்லும். மரக்கிளைகள் ஒன்றோடொன்று இணைந்து நெருக்கமாக அமைந்திருப்பதால் விதானப்பகுதியும் ஒரு முக்கியமான வாழிடமாகிறது. உண்ண உணவு, பாதுகாப்பான, மறைவான உறைவிடம் இருப்பதால் இப்பகுதியில் வசிக்கும் விலங்குகள் தரைக்கு வருவது மிக அரிதே.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்படும் இந்திய மலையணிலை மலபார் மலையணில் என்றும் அழைப்பர். இவற்றை இயற்கைச்சூழலில் கண்டு ரசிப்பதில் ஏற்படும் பரவசத்தை சொல்லிலடக்க முடியாது. இவை மரம் விட்டு மரம் தாவுவதே கண்கொள்ளாக்காட்சியாகும். பாம்புக்கழுகு அல்லது கருங்கழுகு விதானத்திற்குமேல் வட்டமிடும்போது அவற்றைக் கண்டவுடன் இவை உரத்த குரலெழுப்பி மற்ற விலங்குகளை எச்சரிக்கை செய்யும்.
மழைக்காடுகளில் உள்ள சில மரங்களில் மர உச்சியில் தான் கிளைத்து இருக்கும். அவ்வகையான நேடுந்துயர்ந்திருக்கும் மரங்களிலும் தமது கூரிய நகங்களின் உதவியால் செங்குத்தாக ஏறும் அதே லாவகத்துடன் தலைகீழாக இறங்கவும் செய்யும் (இதை கீழிருக்கும் youtube காட்சியைக் காணலாம்). இவை பொதுவாக குட்டி ஈனுவதற்கு இரண்டு கூடுகளைக் கட்டும். ஒருவேளை குட்டியிருக்கும் கூட்டினருகில் ஏதேனும் அபாயமேற்படின் தனது குட்டியை வாயில் கவ்விக்கொண்டு வேறோர் கூட்டிற்கு இடமாற்றம் செய்யும். மேற்குத்தொடர்ச்சி மலையில் மட்டுமெ தென்படும் அரிய பழுப்பு மரநாய் இரவில் சஞ்சரிக்கும் பண்புள்ளது. சில நேரங்களில் இவை பகலில் மலையணிலின் பழைய கூட்டில் உறங்குவதை கண்டிருக்கிறேன். மரஉச்சிப் பகுதியே மலையணில்களின் உலகம். அவை அங்குதான் பிறக்கின்றன, உணவு தேடுகின்றன, உறங்குகின்றன, தமது துணையைத்தேடி இனப்பெருக்கம் செய்கின்றன, வேறு விலங்குகளால் வேட்டையாடப்பட்டு இறக்கின்றன.
நான் பார்த்துக்கொண்டிருக்கிற இந்திய மலையணில் இறந்து போனது ஆழியாரிலிருந்து வால்பாறைக்குச் செல்லும் சாலையில். ஆனைமலை புலிகள் காப்பகத்தினூடே செல்லும் இச்சாலையில் பயனிக்கும் போதே பலவிதமான விலங்குகளைக் காணமுடியும். பல வேளைகளில் இதுபோன்ற வாகனத்தில் அடிபட்டு இறந்த விலங்குகளையும் காணமுடியும். பெருகி வரும் சுற்றுலாவினரினால் சமீபத்தில் இங்கு சீரான, அகலமான சாலைகள் அமைக்கப்பட்டது. நல்ல சாலைகள் அத்தியாவசியமானவைதான். ஆனால் தேசியப்பூங்காக்கள், வனவிலங்குச் சரணாலயங்களினூடே செல்லும் சாலைகள், மனிதர்களில் செளகர்யத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல், அக்காட்டுப்பகுதியின் தாவரங்கள், மரங்கள் மற்றும் அங்கு நடமாடும் விலங்குகளின் பாதுகாப்பை தலையாய கொள்கையாகக் கருத்தில் கொண்டு சாலைகளை அமைத்திட வேண்டும். காட்டுப்பகுதியில் செல்லும் சாலைகளை அகலப்படுத்துதல், கிட்டத்தட்ட ஒரு மதில் சுவரை காட்டின் குறுக்கே கட்டுவதற்குச் சமம். சாலையின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு இடம்பெயர வனவிலங்குகளுக்கு எந்த ஒரு வகையில் இடையூறு ஏற்படாதவண்ணம் சாலைகளை அமைக்கவேண்டும். தகுந்த இடைவெளியில் வேகத்தடைகள் அமைக்கப்பட வேண்டும்.

இருபுறமும் மரங்கள் அடர்ந்த காட்டு வழியே செல்லும் நல்ல சாலை(இடது).
சாலையோர மரங்களில்லாத மோசமான காட்டுச் சாலை (வலது).
சாலையோரத்திலுள்ள மரங்களை வெட்டிச்சாய்க்காமல் சாலையை அகலப்படுத்த முடியாது. இதனால் விதானத்தில் ஏற்படும் இடைவெளி மலையணில், சிங்கவால் குரங்கு, கருமந்தி, பழுப்பு மரநாய், தேவாங்கு போன்ற மரவாழ் விலங்குககளின் இடம்பெயர்விற்கு பேரிடராக அமையும். இதனாலேயே இவை தரையிலிரங்கும் நிர்பந்தத்திற்கு ஆளாகின்றன, பலவேளைகளில் சாலையைக்கடக்கும் போது வாகனங்களில் அடிபட்டு இறந்தும் போகின்றன. சாலைகளின் மேலே நீல வானம் முழுவதும் தெரியாமல் மரக்கிளைகள் இருபுறத்திலிருந்தும் ஒன்றோடொன்று உரசிகொண்டிருந்தால் அதுவே நல்ல சாலை. நிழலான சாலையில் பயனிக்க யாருக்குத்தான் பிடிக்காது. நிழலிருந்தால் சாலையோரங்களில் களைச்செடிகள் பெருகுவதும் வெகுவாகக் குறையும். இவ்வகையான சாலைகளைப்பெற சாலையோரத்தில் இருக்கும் காட்டுமரக்கன்றுகளையும் மற்ற சிறு செடிகளையும் அகற்றுதல் கூடாது. வாகனஓட்டுனர்கள் வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதைகளில் எதிரில் வாகனங்கள வருவதை அறிந்து கொள்ள, ஒரு சில இடங்களில் சாலையோரத் தாவரங்களை அகற்றுவது தவிர்க்க இயலாது. அங்கும் தேவையான அளவிற்கு மட்டுமே தாவரங்களை அகற்ற வேண்டும். தகரை (Ferns), காட்டுக்காசித்தும்பை (Impatiens) போன்ற அழகான சிறு செடிகளை அகற்றுவது தேவையில்லாதது. இவை தமது வேரினால் மண்ணை இறுகப்பிடித்து மண்ணரிப்பைத் தடுப்பதோடல்லாமல், சாலையோரங்களையும் அழகுபடுத்துகின்றன.
காட்டுப்பகுதியிலிருக்கும் சாலைகளை செப்பனிடும்போதோ, புதிதாகத் தயார் செய்யும் போதோ நெடுங்சாலைத்துறையுனரும், வனத்துறையினரும், காட்டுயிர் ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களும் இணைந்து ஆலோசனை செய்து செயல்படுதல் அவசியம். நம் வாகனத்தை காட்டுப்பகுதிக்குள் இட்டுச்செல்லும் முன், மனிதர்களாகிய நாம் அமைத்த சாலை நமக்கு மட்டும் இல்லை என்பதையும், அங்குள்ள வனவிலங்குகளுக்கும் தான் என்பதைkக் கருத்தில் கொண்டு கவனமாகச் சென்றால்தான் இதுபோன்ற உயிரிழப்பை வெகுவாகக் குறைக்க முடியும்.
29 ஜனவரி 2012 அன்று தினமணி (கொண்டாட்டம்) நாளிதழில் வெளியான கட்டுரை (PDF இங்கே). இக்கட்டுரைக்கான உரலி இதோ.