Posts Tagged ‘Tamil Birds Yahoo Group’
பொங்கல் பறவைகள்
சக்கரைப் பொங்கல் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் என் அம்மா செய்யும் சக்கரைப் பொங்கலென்றால் கேட்கவே வேண்டாம். பச்சை அரிசியும், வெல்லமும், பாசிப்பயறும், முந்திரிப்பருப்பும், காய்ந்த திராட்சையும், ஏலக்காயும் சேர்த்து பொங்கல் செய்து, அதில் நெய்யை ஊற்றி கம கமவென மணக்கும் அந்த சக்கரைப் பொங்கலை கையில் எடுத்து, வாயில் வைக்கும் முன்பே நாக்கில் எச்சில் ஊறும். நெய் மணக்கும் அந்த சக்கரைப் பொங்கலை விழுங்கும் போது, நாக்கில் தங்கும் அதன் அளவான இனிப்பும், இளஞ்சூட்டில் தொண்டையில் இறங்கும் போது உள்ள இதமான அந்த உணர்வும் மனதில் என்றென்றும் தங்கியிருக்கும். அம்மா அவளது அன்பைக் கலந்து செய்ததாயிற்றே!
பல ஆண்டுகளாக வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதனால் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகளுக்கு போவது முடியாத காரியம். அப்போதெல்லாம் அம்மா குறைபட்டுக் கொள்வாள். “நீ வராம இந்த வருசம் பொங்கலே நல்லா இல்லாடா, சக்கரை பொங்கல் செஞ்சி உன்னை நெனச்சிகிட்டே சாப்பிட்டேண்டா” என்பாள். வாய்ப்பு கிடைக்கும் வேளையில் வீட்டுக்குப் போகும் போதெல்லாம் தவறாமல் சக்கரைப் பொங்கல் செய்து தருவாள்.
ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை எங்கள் வீட்டில் சிறப்பாக நடந்தது. பல ஆண்டுகள் கழித்து பொங்கலுக்கு வீட்டிற்குச் சென்றிருந்தேன். அதில் பெற்றோருக்கும் மகிழ்ச்சி. எனக்கும் மகிழ்ச்சி. ஆனால் எனது மகிழ்ச்சிக்கு காரணம் சக்கரப் பொங்கல் மட்டுமல்ல. எனது அப்பாவுடன் சேர்ந்து பறவைகளைப் பார்க்கச் சென்றதனாலும் தான்.
ஆம், இந்த ஆண்டு (2015) பொங்கல் தின பறவைகள் கணக்கெடுப்பு (Pongal Bird Count) முதன் முதலாக தொடங்கப்பட்டது. சென்ற நவம்பர் மாதம், தமிழக பறவை ஆர்வலர்கள் குழுவினர் சந்திப்பு, திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அதில் பொங்கல் தின பறவைகள் கணக்கெடுப்பு நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. மேலும் விவரங்களுக்கு இந்த வலைப்பதிவைக் காணவும்.
தஞ்சை, கரந்தையிலிருந்து வயல் வெளிகள் சூழ்ந்த சுற்றுச்சாலை வழியாக மாரியம்மன் கோயிலுக்கு அருகில் இருக்கும் சமுத்திரம் ஏரிக்குச் சென்றோம். அப்பா பைக் ஓட்ட நான் பின்னே அமர்ந்து வேண்டிய இடங்களிலெல்லாம் நிறுத்தச் சொல்லி பறவைகளைப் பார்த்து வந்தேன். சமுத்திரம் ஏரி மிகப் பழமையானது. அதைப் பற்றிய சுவாரசியமான செவிவழிக் கதையை அப்பா சொன்னார். மராத்திய காலத்தில் ஏற்படுத்தப்பட்டது இந்த ஏரி. அப்போதிருந்த அரசி சமுத்திரத்தையே பார்த்தது கிடையாதாம். ஆகவே அரண்மனையில் கிழக்கு நோக்கி இருக்கும் ஷார்ஜா மாடி அல்லது தொள்ளக்காது மண்டபத்தின் மேலேறிப் பார்த்தால் தெரியும் படி இந்தப் பரந்த ஏரியை வெட்டினார்களாம். சமுத்திரம் இது போலத்தான் இருக்கும் என அரசிக்கு காண்பிப்பதற்காக வெட்டப்பட்ட ஏரியாம் இது. ஆனால் இப்பொது இந்த பழைய மாளிகைகளின் மேலே ஏற முடியுமா எனத் தெரியவில்லை. அப்படியே ஏறிப் பார்த்தாலும், காங்கிரீட் கட்டிடங்களின் வழியாக சமுத்திரம் ஏரி தெரியுமா என்பதும் சந்தேகமே.
சமுத்திரம் ஏரியில் ஆகாயத்தாமரைகள் அடர்ந்திருந்தது. ஆகவே பறவைகள் மிக அதிகமாக இல்லை, எனினும் சுமார் 20 வகைப் பறவைகளைப் பார்த்து பட்டியலிட்டோம் (பட்டியலை இங்கே காணலாம்). மோகன் மாமாவும் பறவை பார்ப்பதில் எங்களுடன் சேர்ந்து கொண்டார். வெயில் ஏற ஆரம்பித்ததும் வீடு திரும்பி சக்கரைப் பொங்கலைச் சுவைத்தேன். வீட்டில் பெற்றோர்களுடன் இருந்தது, பறவைகளைப் பார்த்தது, பொங்கல் தின பறவைகள் கணக்கெடுப்பிற்கு பங்களித்தது என இனிமையாகக் கழிந்தது பொங்கல்.
பண்டிகை நாட்களில் பறவைகள் பார்ப்பது இந்தியாவில் இப்போது பெருகி வருகிறது. மேலை நாடுகளில் கிருஸ்துமஸ் தினத்தன்று பொதுமக்கள் தங்களது வீட்டினருகிலோ, வீட்டினை அடுத்த சுற்றுப்புறங்களிலோ அங்கு தென்படும் பறவைகளைப் பார்த்து பட்டியல் தயார் செய்து eBird எனும் இணையத்தில் உள்ளிடுவார்கள். Christmas Bird Count எனும் இக்கணக்கெடுப்பு பல்லாண்டு காலமாக தொடர்ந்து நடந்து வரும் செயல்பாடு. இதன் மூலம் பல பொதுப்பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளையும், பரவலையும் அறிந்து கொள்ள முடியும். இது போலவே கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு (GBBC – Great Backyard Bird Count) நடைபெற்று வருகிறது. அண்மையில் கேரளாவில் ஓணம் பண்டிகையின் போது பறவைகள் கணக்கெடுப்பு (Onam Bird Count) நடத்தப்பட்டது.
பறவைகள் சூழியல் சுட்டிக்காட்டிகள் (Ecological Indicators). நாம் வசிக்கும் பகுதியில், அல்லது ஓர் இயற்கையான வாழிடத்தில் இருக்கும் பறவைகளின் வகைகள், அவற்றின் எண்ணிக்கை முதலியவற்றை, தொடர்ந்து நெடுங்காலத்திற்கு கண்காணித்து வருவதன் மூலம், அந்த இடத்தின் தன்மை எவ்வாறு மாறுபடுகிறது என்பதை அறியலாம். அதாவது, அங்கு வாழும் உயிரினங்களுக்கு (ஊர்ப்புறமாகவோ, நகரமாகவோ இருப்பின் அங்கு வசிக்கும் மனிதர்களாகிய நம்மையும் சேர்த்து) அந்த இடம் வாழத் தகுந்ததாக இருக்கிறதா? அல்லது சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருகிறதா? என்பதை பறவைகளின் எண்ணிக்கையையும், வகையையும் வைத்து அறிவியலாளார்கள் கணக்கிடுவார்கள். அது போலவே வலசை வரும் பறவைகளின் நாளையும், நேரத்தையும் தொடர்ந்து பல ஆண்டுகள் பதிவு செய்து வருவதன் மூலம் புறச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை (Climate Change) கணிக்க முடியும்.
ஆகவே, பறவைகளின், அவற்றின் வாழிடங்களின் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்கும், ஆதரவும் மிகவும் அவசியம். பறவைகளின் பால், புறவுலகின் பால் நாட்டமேற்பட, அவற்றின் மேல் கரிசனம் கொள்ள பொது மக்களிடையேயும், இளைய தலைமுறையினரிடையேயும் பறவைகள் அவதானித்தல் (Birdwatching) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் அவசியம். இதை ஒரு நல்ல பொழுது போக்காக அனைவரும் பழக வேண்டும். பறவைகள் பற்றிய விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் ஏற்படுத்த இது போன்ற பொங்கல் தின பறவைகள் மற்றும் ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு முதலியவற்றை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பறவைகளைக் கணக்கெடுப்பதும், அவற்றை குறித்துக் கொள்வதும், பின்பு eBirdல் உள்ளிடுவதும் முக்கியம் தான் என்றாலும், முதலில் பறவைகளைப் பார்த்து ரசிக்கும் எண்ணத்தை அனைவரிடமும் வளர்க்க வேண்டும். இது போன்ற நற்செயல்கள் தான், நமக்கு புறவுலகின் பால் நாட்டத்தை ஏற்படுத்தவும், இயற்கையை ரசிக்கவும், நாம் வாழும் சூழலைப் போற்றிப் பாதுகக்க வேண்டும் என்கிற அக்கறையை ஏற்படுத்தும்.
நம் பெற்றோர்கள் நம்மிடம் வைத்திருக்கும் பாசத்தையும், கரிசனத்தையும் போல், நாம் நம் குழந்தைகளிடம் காட்டும் அன்பைப் போல், நமது சுற்றுப்புறச்சூழலின் மேலும், அதில் வாழும் உயிரினங்களின் மேலும் நாம் அன்பு காட்ட வேண்டும்.
என் அம்மா எனக்கு சக்கரைப் பொங்கலைப் பாசத்துடன் தருவது போல் இந்த பூமித்தாய் எனக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் பறவைகளையும் இன்னும் எண்ணிலடங்கா உயிரினங்களையும் கொடுத்திருக்கிறாள். எனக்கு சக்கரைப் பொங்கல் எவ்வளவு பிடிக்குமோ அந்த அளவு இல்லையில்லை அதையும் விட அதிகமாகப் பிடித்தது பறவைகள் பார்ப்பது. உங்களுக்கு?
——
வண்ணத் தூதர்களைத் தேடி எனும் தலைப்பில் 14 பிப்ரவரி 2015 அன்று தி ஹிந்து தமிழ் தினசரியின் உயிர்மூச்சு இணைப்பில் வெளியான கட்டுரையின் முழு வடிவம். அக்கட்டுரையின் உரலி இதோ, PDF இதோ.
தமிழ் பறவைகள் (தமிழ்Birds) குழுவினர் சந்திப்பு
பறவைகள் கூட்டமாகப் பறந்து திரிவதையும், பல இடங்களிலிருந்து ஓரிடத்தில் வந்தமர்வதையும் கண்டிருப்போம். அது போலவே பறவை ஆர்வலர்கள் கூட்டம் ஒன்று 1 & 2 நவம்பர் 2014 அன்று, திண்டுக்கல், காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் ஒன்று கூடியது. பறவைகளின் பாதுகாப்பு, அவற்றின் வாழிடங்களின் பாதுகாப்பு, தமிழகத்தில் தென்படும் பறவைகளின் பரவல் முதலியவற்றைப் பகிர்ந்து கொள்ளும் தமிழ் பறவைகள் யாஹூ குழு (Tamil Birds Yahoo Group) இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்த இணைய குழு 2006ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இக்குழுவினை ஒருங்கிணைத்து நடத்துபவர் மரங்கொத்திகளைப் பற்றி ஆராய்ச்சி செய்த Dr. ஷாந்தாராம். இவர் இந்தியாவின் சிறந்த பறவையியலாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இக்குழுவில் சுமார் 630 பேர் அங்கத்தினராக இருக்கின்றனர்.
பறவைகளுக்கு நாம் வகுத்த எல்லைகள் கிடையாது. அது போலவே தமிழ் பறவைகள் யாஹூ குழு என்பது தமிழர்களை மட்டுமே கொண்டதல்ல. தமிழகத்தில் தென்படும் பறவைகளைப் பற்றியும், அவற்றின் வாழிடங்கள் பற்றியும் கரிசனம் கொண்ட தமிழர்கள் அல்லாத, தமிழகத்தில் வசிக்காத பலரும் உறுப்பினர்களாக இருக்கின்றனர். குறிப்பாக இக்கூட்டத்தினை மிகவும் முனைப்புடனும், ஆர்வத்துடனும் ஏற்பாடு செய்தவர்களில் ஒருவர் இந்தியாவின் பறவையியலுக்கு பல வகையில் பங்களித்துக் கொண்டுள்ள J. ப்ரவீனும் ஒருவர். இவர் தமிழ் பறவை யாஹூ குழுவினைப் போலவே கேரளாவில் இயங்கிவரும் கேரளா பறவைகள் யாஹூ குழுவின் ஒருங்கிணைப்பாளர் (KeralaBirder Yahoo Group). கேரளப் பறவைகளைப் பற்றிய பல்லாண்டு கால ஆராய்ச்சியில் விளைந்த “Birds of Kerala – Status and Distribution” (2011) நூலின் ஆசிரியர்களில் ஒருவர். மேலும் கேரளாவில் பல பறவைகள் கணக்கெடுப்பினை நடத்தியவர்.

J . பிரவீன் (நின்று கொண்டிருப்பவர்) கேரள பறவைகள் கணக்கெடுப்பு குறித்து அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
திண்டுக்கல் கூட்டத்தில் பல இயற்கை ஆர்வலர்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள், தன்னார்வக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என சுமார் 55 பேர் பங்குபெற்றனர். இக்கூட்டத்தை இந்திய பறவை பாதுகாப்பு கூட்டமைப்பு (IBCN – Indian Bird Conservation Network), பம்பாய் இயற்கை வரலாறு சங்கம் (Bombay Natural History Society – BNHS)மெட்ராஸ் இயற்கையியல் சங்கம் (MNS – Madras Naturalist Society) மற்றும் இந்தியப் பறவைகள் கணக்கெடுப்புத் திட்டத்தை ஊக்குவிக்கும் குழுமமான BirdCount India, இயற்கை காப்புக் கழகம் (Nature Conservation Foundation – NCF) ஆகிய அமைப்புகளும், J. ப்ரவீன், Dr. T. பத்ரிநாராயணன் போன்ற தன்னார்வலர்களரும், காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறையின் பேராசிரியர்களும், மாணவர்களும் ஒருங்கிணைத்து நடத்தினர்.
பறவைகளின் பரவல், தற்போதைய பாதுகாப்பு நிலை, எண்ணிக்கை, தென்படும் காலம், அவை தென்படும் வாழிடத்தின் நிலை முதலிய தகவல்கள் அவற்றின் பாதுகாப்பிற்கு பெரிதும் உதவியாக இருக்கும். பறவை ஆராய்ச்சிக்கும், அவற்றின் பாதுகாப்பிற்கும் மேலே குறிப்பிட்ட தகவல்களும், ஒரிடத்தில் இருக்கும் பறவை வகைகளின் பட்டியலும் அடிப்படைத் தேவையாகிறது. தமிழகத்தில் பல இடங்களிலிருந்து பல்வேறு பறவைப் பட்டியல்கள் இருந்தாலும், அவை ஒருங்கிணைக்கப்படாமல் வெவ்வேறு நூல்களிலும், ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இது வரை தமிழகத்தில் செய்யப்பட்ட பல பறவைகள் ஆராய்ச்சியினாலும், பறவை ஆர்வலர்கள் பலர் பார்த்து/அவதானித்து பதிப்பித்த தரவுகளின் வாயிலாகவும் தமிழகத்தில் சுமார் 550 பறவை வகைகள் தென்படுகின்றன என்பதை அறிய முடியும். எனினும் இப்பகுதியில் அண்மைக் காலங்களில் பார்த்து/அவதானிக்கப்பட்ட பறவைகள் பற்றிய குறிப்புகள் அனைத்தும் வெவ்வேறு அறிவியல் இலக்கிய இதழ்களிலும், நூல்களிலும் பதிப்பிக்கப்பட்டும், பல பதிவு செய்யப்படாமலும் உள்ளன. ஆகவே இக்கூட்டத்தில் முதற்கட்டமாக தமிழகப் பகுதியிலிருந்து பதிவு செய்யப்பட்ட பறவை வகைகள் அனைத்தையும், பட்டியலிட்டு, ஏற்கனவே இருக்கும் பட்டியலை மேம்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

அருளகம் அமைப்பினைச் சேர்ந்த சு பாரதிதாசன் அவரது பாறு கழுகுகள் (பிணந்தின்னிக் கழுகுகள்) குறித்த ஆராய்ச்சியைப் பற்றி விளக்குகிறார்.
பறவைகளை அவதானித்து அவற்றை பட்டியலிட்டு நமது நாட்குறிப்புகளில் வைத்துக் கொள்வது நல்ல பழக்கமே. எனினும் அது நமக்கு மட்டுமே இல்லாமல் வெளியுலகிற்கும், குறிப்பாக மக்கள் அறிவியல் திட்டங்களுக்கும் பயனுள்ள வகையில் இருப்பின் நமது பறவைப் பட்டியல் (bird checklist) பறவைகள் பாதுகாப்பிற்கும், அவற்றின் வாழிடப் பாதுகாப்பிற்கும் உதவும். இவ்வகையில் பறவைப் பட்டியல்களின் களஞ்சியமான அனைவரும் பார்த்தறியும், பங்களிக்கும் வலைவாசலான eBird குறித்த காட்சிளிப்பும், விவாதங்களும் இக்கூட்டத்தில் நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள முக்கிய பறவைகள் வாழிடங்களைப் (Important Bird Areas – IBA’s) பற்றியும், அவற்றை தகுந்த கால இடைவெளியில் முறையாக கண்கானித்தல் பற்றியும், தமிழகத்தில் இருக்கும் மேலும் பல தகுதியான இடங்களை இனங்கண்டு அவற்றை முக்கிய பறவைகள் வாழிடமாக தீர்மானிக்கவும் இக்கூட்டத்தில் ஆலோசனைகளும், கருத்துக்களும் பரிமாரப்பட்டன. குறிப்பாக சென்னையில் உள்ள பள்ளிக்கரணை நீர்ச்சூழலை ஒரு முக்கிய பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.
பறவைகள், அவற்றின் வாழிடங்கள் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்கும் ஆதரவும் மிகவும் அவசியம். பறவைகளின் பால், புறவுலகின் பால் நாட்டமேற்பட, அவற்றின் மேல் கரிசனம் கொள்ள பொது மக்களிடையேயும், இளைய தலைமுறையினரிடையேயும் பறவைகள் அவதானித்தல் (Birdwatching) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பலர் ஆலோசனை வழங்கினர். இதை ஒரு நல்ல பொழுது போக்காக அனைவரும் எடுத்துக் கொள்ள மக்களிடையே எடுத்துச் சொல்வது அவசியம். ஆகவே, பறவைகள் பற்றிய விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தவும் பொங்கள் தினத்தன்று பறவைகளைப் பார்த்து கணக்கிட்டு, பட்டியலிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.
மேலை நாடுகளில் கிருஸ்துமஸ் தினத்தன்று பொதுமக்கள் தங்களது வீட்டினருகிலோ, வீட்டினை அடுத்த சுற்றுப்புறங்களிலோ அங்கு தென்படும் பறவைகளைப் பார்த்து பட்டியல் தயார் செய்து இணையத்தில் உள்ளீடு செய்வார்கள். Christmas Bird Count எனும் இக்கணக்கெடுப்பு பல்லாண்டு காலமாக தொடர்ந்து நடந்து வரும் செயல்பாடு. இதன் மூலம் பல பொதுப்பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளையும், பரவலையும் அறிந்து கொள்ள முடியும். இது போலவே கடந்த இரு ஆண்டுகளாக இந்தியாவில் ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு (GBBC – Great Backyard Bird Count) நடைபெற்று வருகிறது. அண்மையில் கேரளாவில் ஓணம் பண்டிகையின் போது பறவைகள் கணக்கெடுப்பினை KeralaBirders யாஹூ குழுவினர் நடத்தி வருகின்றனர். இவற்றைத் தொடர்ந்து 2015ம் ஆண்டிலிருந்து தமிழகத்திலும் பொங்கல் தின பறவைகள் கணக்கெடுப்பு ஜனவரி 15 முதல் 18 வரை நடத்தத் திட்டமிட இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.