UYIRI

Nature writing in Tamil

Posts Tagged ‘Tamil Film Songs

பொன் எனக் கொன்றை மலர*

with one comment

கோடைகாலத்தில் நம் கண்களுக்கு குளிர்ச்சியூட்டுபவை  பூத்துக்குலுங்கும் கொன்றை மரங்கள்.  இதனை சரக்கொன்றை என்றும் அழைப்பார்கள். சரக்கொன்றை சங்க இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கட்டுரையின் தலைப்பு நற்றிணை பாடல் வரிகளில் இருந்து எடுத்தாளப்பட்டது*. சங்க இலக்கியங்களில் கொன்றையை குறிப்பிடப்பட்ட பாடல்களை இந்த வலைப்பூவில் காணலாம். சரக்கொன்றையானது இதழி, கடுக்கை, கொன்னை, தாமம் என்ற பெயர்களாலும் வழங்கப்படுகிறது. இம்மரம் அச்சிருப்பாக்கம், கோவிலூர் (திருக்கோவிலூர்), திரு அஞ்சைக்களம் (திருவஞ்சிக்குளம்), தினைநகர், திருமாணிக்குழி, திருத்துறையூர் (திருத்தளூர்), பந்தநல்லூர், புத்தூர், வெண்காடு (திரு வெண்காடு), திருக்கண்ணார் கோவில் (குரு மாணக்குடி), திருக்கோலக்கா, திருஆக்கூர் (ஆக்கூர்), திருமணஞ்சேரி, ஆவூர், திருஆப்பனூர் (செல்லூர்), திருப்புத்தூர் (திருப்பத்தூர்), திரு அதிகை வீரட்டானம் (திரு அதிகை), திருச்சாத்தமங்கை (சீயாத்தமங்கை), திருவலிதாயம் (பாடி), திருச்சோபுரம், திருத்துறையூர் (திருத்தர்) ஆகிய ஊர்களில் காணப்படும் சிவன் கோவில்களில் தலமரமாக விளங்குகின்றது. (கிருஷ்ணமூர்த்தி 2007).

இலையுதிகாடுகளில் தென்படும் மரமிது. ஊர்ப்புறங்களிலும் சாலையோரங்களிலும் அழகிற்காக நட்டு வைத்து வளர்பதும் உண்டு. கோடையில் (ஏப்ரல்-மே மாதங்களில்) பூ பூக்கத்தொடங்கும். அதற்கு சற்று முன்னதாக இலைகளை உதிர்க்கவும் ஆரம்பிக்கும். சில நேரங்களில் இலையில்லாமல் மரம் முழுவதும் மஞ்சள் பூக்களை மட்டுமே கொண்டிருக்கும். அழகு என்றால் அதுதான் அழகு. சில ஆண்டுகளுக்கு முன் திருவாரூருக்கு பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிந்தேன். போகிற வழியில் அப்படி ஒரு மரத்தைப் பார்த்தேன். ஊர் சென்றதும் முதல் வேளையாக பைக்கை எடுத்துக்கொண்டு வந்த வழியே திரும்பச் சென்று அந்த மரத்தின் அருகில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டேன். கூட வந்த சொந்தக்கார பையன்கள் இந்த மரத்தை பார்க்கவா எங்களை இவ்வளவு தூரம் கூட்டி வந்தான் என்று ஏளனம் செய்தார்கள். எனினும் கொன்றை மரத்துடன் எனக்கு ஏற்பட்ட இந்த நிகழ்வு மறக்க முடியாதது. திருச்சி BHEL Townshipல் இருந்த போது வீட்டிலிருந்து எனது பள்ளிக்குச் (Boiler Plant Higher Secondary School) செல்லும் வழியில் Boiler Plant Girls Higher Secondary School அருகில் சாலையோரத்தில் கொன்றை மரங்கள் பூத்து அந்த இடத்தின் அழகிற்கு அழகு சேர்க்கும்.

சரக்கொன்றை Golden Showers Cassia fistula

சரக்கொன்றை Golden Showers Cassia fistula (Photo: P. Jeganathan)

கேரளப் பண்டிகையான “விஷு” அன்று கொன்றை மலர்களை வைத்து பூசை செய்வார்கள் கேரள நாட்டினர். கேரள மாநிலத்தின் மலரும் அதுதான் (நமக்கு செங்காந்தள் Gloriosa superba). சில சங்கத்தமிழ் பாடல்களில் குறிப்பிடப்பட்டதைத் தவிர கொன்றை மலர்களை போற்றியோ, வர்ணித்தோ தமிழ் பாடல்கள், கவிதைகள் இருப்பதாகத் தெரியவில்லை. “அலைபாயுதே” படத்தில் வரும் “பச்சை நிறமே.. பச்சை நிறமே…” பாடலின் “……கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்…” எனும் வரி மட்டும் எனக்கு உடனடியாக ஞாபகத்திற்கு வருகிறது.

கொன்றை மரத்தை ஆங்கிலத்தில் Indian laburnum அல்லது Golden Showers என்பர். ஹிந்தியில் அமல்தாஸ் (Amaltas) என்று அறியப்படுகிறது. இம்மரத்தின் அறிவியல் பெயர் Cassia fistula. இலத்தீன் மொழியில் fistula எனில் நீண்ட குழலைக் குறிக்கும். இதன் நீண்ட குழல் போன்ற கனியை வைத்தே இப்பெயர். இந்தக் கனி முதலில் பச்சை நிறத்திலும், முதிர்ந்தவுடன் கருப்பு நிறத்திலும் இருக்கும். அதை ஆட்டும் போது உள்ளிருக்கும் விதைகள் அசைந்து கல கல வென ஓசையெழும். இக்கனியின் வெளியுறை மிகவும் கடினமாகவும், உள்ளே சிறு சிறு அறைகளாக பிரிக்கப்பட்டு அதனுள் ஒரு விதையும் இருக்கும். இந்த நீண்ட கனியை உடைத்தால் ஒவ்வொரு அறையிலும் கருப்பு நிறத்தில் பிசின் போன்று ஒட்டக்கூடிய பழச்சதை (Pulp) இருக்கும்.

கொன்றை மலர்களின் அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவது தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள், இன்னும் பல வகையான பூச்சிகள். அதில் முக்கியமானது Carpenter Bees Xylocopa sp. எனும் பெருந்தேனீ வகைகள் என அறியப்படுகிறது (Murali 1993). இம்மர இலைகளை ஒரு வகையான பழந்தின்னி வவ்வாள்கள் ருசிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது (Elangovan et al 2001). சரி கடினமான வெளியுறையைக் கொண்ட கொன்றைக் கனிகளில் இருந்து விதைகள் எப்படி வெளியேறுகின்றன? அவை எப்படி விதைகளைப் பரப்புகின்றன?

எனக்குத் தெரிந்து குரங்குகள் கொன்றைக் கனியைச் சுவைக்கும். அவை கனியை உடைத்து விதைகளை வெளியே கொண்டு வர உதவுகின்றன. வேறு யார் யார் இப்பணியை செய்கிறார்கள் என்பதை அறிய நூல்களை தேடிய போது சுவாரசியமான சில தகவல்கள் தெரிந்தது. குரங்கைத் தவிர கரடியும், முள்ளம் பன்றியும், காட்டுப்பன்றியும் கொன்றைக் கனியை சாப்பிடுகின்றன. எனினும் மிகவும் ஆச்சர்யப்பட வைக்கும் செய்தியை Trees of Delhi எனும் நூலில் இருந்து அறிந்து கொண்டேன்.

தானாகவே வெடித்து விதைகளை பரப்பும் தன்மையில்லாத கொன்றை கனி அதன் விதை பரவலுக்கு மேற்சொன்ன சில விலங்குகளின் உதவியை நம்பியிருக்கின்றது. எனினும் அவற்றின் விதையை யார் பரப்புகிறார்கள் எனும் கேள்வி 1911ல் ராபர்ட் ஸ்காட் ட்ரூப் (Robert Scott Troup) எனும் வனவியல் ஆராய்ச்சியாளருக்கு ஏற்பட்டது. அப்போது அவர் இருந்தது தெஹராதூனில். கொன்றை கனிய ஆரம்பிப்பது டிசம்பர்-ஜனவரி மாதங்களில். ஏப்ரல்-மே மாதத்திலிருந்து அவை கீழே விழ ஆரம்பிக்கின்றன, செப்டம்பர் மாதம் வரை. கீழே விழுந்தாலும் உள்ளிருக்கும் விதைகள் முளைப்பதில்லை. எப்படித்தான் இவை முளைக்கின்றன என்பதை அறிய ட்ரூப் இரண்டு பாத்திகளை கட்டி அவற்றில் கொன்றைக் கனிகளை பரப்பி வைத்தார். ஆனால் ஒரு பாத்தியை திறந்தும் மற்றொன்றை ஒரு கம்பி வலையால் மேலே மூடியும் வைத்து விட்டார். ஒரு வாரத்துக்குள்ளாகவே, திறந்து வைக்கப்பட்ட பாத்தியில் உள்ள கொன்றைக் கனிகளை நரிகள் (Golden Jackal) கண்டுபிடித்துவிட்டன. அவை அக்கனிகளைக் கடித்து உள்ளிருக்கும் பழச்சதையை சாப்பிடும் போது விதைகள் வெளியே தெரித்து விழுந்தன. இந்தப் பாத்திகளை ட்ரூப் 2-3 ஆண்டுகள் தொடர்ந்து கண்கானித்து வந்தார். திறந்து வைக்கப்பட்ட பாத்தியிலிருந்து பல விதைகள் முளைத்து வந்தன. ஆனால் மூடப்பட்டிருந்த பாத்தியில் வைக்கப்பட்டிருந்த கனிகளை பல பூச்சிகளும், கரையான்களும் தாக்கின. விதைகள் கனியிலிருந்து வெளியே வரவேயில்லை.

ட்ரூப் இந்த சோதனையை தமது (3 தொகுதிகள் கொண்ட) “Silviculture of Indian Trees” எனும் நூலில் (2ம் தொகுதியில்) விளக்குகிறார். இந்த எளிமையான எனினும் அருமையான சோதனையிலிருந்து கொன்றை தனது விதைபரவலுக்கு எந்த அளவிற்கு நரி, கரடி முதலிய விலங்குகளை சார்ந்திருக்கிறது என்பது புலனாகிறது.

குறிப்பெடுக்க உதவிய ஆதாரங்கள்:

  • *நற்றிணை 242
  • கிருஷ்ணமூர்த்தி, கு. வி. (2007) தமிழரும் தாவரமும். பாரதிதாசன் பல்கலைக்கழம். திருச்சிராப்பள்ளி. (K.V. Krishnamurthy.2007. The Tamils and Plants (in Tamil), Bharathidasan University, Tiruchirappalli.)
  • Elangovan, V. ; Marimuthu, G. ; Kunz, Thomas H. (2001) Temporal patterns of resource use by the short-nosed fruit bat, Cynopterus sphinx (Megachiroptera: Pteropodidae) Journal of Mammalogy, 82 (1). pp. 161-165. ISSN 0022-2372
  • Krishen, P (2006). Trees of Delhi-A field guide. Dorling Kindersley (India) Pvt. Ltd.
  • Murali, KS (1993) Differential reproductive success in Cassia fistula in different habitants-A case of pollinator limitations? In: Current Science (Bangalore), 65 (3). pp. 270-272.
  • Troup, R.S. (1911). Silviculture of Indian Trees. Published under the authority of His Majesty’s Secretary of State for India in Council. Oxford Clarendon Press.

சொல்வனம் இணைய இதழில் (இதழ் 88) 29-6-2013 அன்று வெளியான எனது கட்டுரையின் மறுபதிப்பு. அதற்கான உரலி இதோ http://solvanam.com/?p=26881

Written by P Jeganathan

July 1, 2013 at 3:55 pm

சிட்டுக்குருவி: சில பதிவுகள்

with 6 comments

சிட்டுக்குருவிகள் தற்போது பரவியிருக்கும் நிலையை அறிய சமீபத்தில் ஒரு இணையத்தள கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதைப்பற்றிய விவரங்களை இங்கே காணலாம் – Citizen Sparrow (1). சிட்டுக்குருவிகள் சில நகரப்பகுதிகளிலிருந்து காணாமல் போவதென்வோ உண்மைதான். அதற்காக அந்த இனமே அபாயத்திற்குள்ளாகியிருக்கிறது என கூப்பாடு போடுபவர்கள், செல்போன் டவர்களிலிருந்து வெளிவரும் மின்காந்த அலைகள்தான் அவை அழிந்துபொவதற்கான காரணம் எனும் தீர்கதரிசிகள் தயவு செய்து இந்த கட்டுரைகளைப் படிக்கவும்:

Sparrows, science and species conservation in India (2), சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு (3) 

இந்த கணக்கெடுப்பில் பணிபுரிந்து கொண்டிருந்த போது பொது மக்களை இந்த கணக்கெடுப்பில் பங்குபெறச் செய்யும் ஒரு முயற்சியாக சிட்டுக்குருவி எனும் வார்த்தை வரும் தமிழ் சினிமாப்பாடல்களை FM ரேடியோக்களில் ஒலிபரப்பச் செய்யலாமே என்ற எண்ணம் உதித்தது. அதற்காக அத்தகையப் பாடல்களை யோசித்து பட்டியலிட்டேன். பத்துப் பாடல்கள் உடனடியாக ஞாபத்திற்கு வந்தது. மேலும் பலரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்களுக்குத் தெரிந்த பாடல்களை கேட்டறிந்து, இணையத்தில் தேடியதில் மொத்தம் 20 பாடல்கள் இருப்பதை அறிந்து கொண்டேன். அவ்வேளையில் ஆர்வம் மேலோங்க சினிமாப் பாடல்கள் மட்டுமின்றி, சிட்டுக்குருவிகளைப் பற்றிய இலக்கியக் குறிப்புகளையும் சேகரிக்கலானேன். இந்தத் தகவல்களின் தொகுப்புத்தான் இக்கட்டுரை.

சங்க இலக்கியங்களிலும் சிட்டுக்குருவிகளைப் பற்றிய குறிப்புகள் இருப்பதாக அறியப்படுகிறது (4). மகாகவி பாரதியும் அவரது கட்டுரையில் சிட்டுக்குருவியின் அழகை வர்ணித்துள்ளார். கப்பலோட்டிய தமிழனில் மகாகவி பாரதியார் (நடிகர்: எஸ் வி சுப்பையா) சமைக்க வைத்திருந்த அரிசியை சிட்டுக்குருவிகளுக்கு (கூர்ந்து கவனித்தபோது அந்தப்படத்தில் காட்டப்பட்டவை சிட்டுக்குருவிகளைப்போலத் தெரியவில்லை, சில்லை என்றழைக்கப்படும் Munia போல இருந்தது.) இரைத்துவிடுவார். அதைப்பார்த்து கோபிக்கும் செல்லம்மாவிடம்,”…விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக்குருவியினைப் போலே…” எனப்பாடுவார் (5).

சிட்டுக்குருவிகளைப் பற்றிய மற்றுமொறு சுவாரசியமான குறிப்பு இந்திய விடுதலைப்போராட்டத் தலைவர்களில் ஒருவரான மெளலானா அபுல் கலாம் ஆசாத் எழுதியது. அவர் அஹமதாபாத் சிறையில் இருந்தபோது அவரது அறையில் பல சிட்டுக்குருவிகள் கூடுகட்டி வாழ்ந்து வந்தன. அந்த குருவிகள் கூடுகட்ட எடுத்து வரும் வைக்கோல்கள், நார்கள் முதலியனவற்றின் மிச்ச மீதி அவரது அறை முழுவதும் விழுந்து குப்பை சேருவதையும், அதனால் தினமும் பல முறை அவரது அறையை அவரே கூட்டி சுத்தம் செய்ததையும், இதனால் அந்த சிட்டுக்குருவிகளை அவரது அறையை விட்டு விரட்ட அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளையும், அதில் தோல்வியடைந்து, பின்னர் அந்த சிட்டுக்குருவிகளையே நேசித்து அவற்றிற்கு தானியங்களையும், அரிசியையும் உணவாக அளித்ததையும் மிக அழகாக விவரித்து, தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட கடிதங்களை Ghubar-e-khatir எனும் புத்தகத்தில் காணலாம். இந்த உருது மொழிப் புத்தகத்தின் ஆங்கில மொழியாக்கம் Sallies of Mind. இந்தப் புத்தகத்திலிருந்து சிட்டுக்குருவியினைப் பற்றிய குறிப்பினை மட்டும் Birds of India – A Literaty Anthology எனும் தொகுப்பில் காணலாம் (6).

சிட்டுக்குருவி சினிமாப் பாடல்களை சேகரிக்கும் வேளையில் எனது பெற்றோர்களிடம் இதைப்பற்றி கேட்டுக்கொண்டிருந்த போது எனது தங்கை மகன் என்னிடம் வந்து அவனுக்கு சிட்டுக்குருவிகளைப் பற்றிய பாடல் ஒன்று தெரியும் என்றான். மூன்றாம் வகுப்பில் அவன் படித்த அந்தப் பாடலை அவனது குரலிலேயே பாடியும் காண்பித்தான் அதை இங்கு கேட்கலாம்:

தமிழ் சினிமா பாடலில் புகழ் பெற்ற சிட்டுக்குருவி பாட்டு, எம். எஸ். ராஜேஸ்வரி அவர்கள் பாடிய (அஞ்சலிதேவி அவர்கள் நடித்த) சிட்டுகுருவி சிட்டுகுருவி சேதி தெரியுமா?..எனும் அருமையான பாடல். முதலில் சிட்டுக்குருவி எனத் தொடங்கும் பாடல்களை மட்டுமே சேகரித்து வந்தேன். பிறகு பாடலின் நடுவிலும் சிட்டுக்குருவி என வரும் பாடல்களையும் சேர்த்துக்கொண்டேன். சில பாடல்களில் சிட்டுக்குருவி எனும் வார்த்தை முழுவதும் வராது. சிட்டு என்றே வரும். அவற்றையும் சிட்டுக்குருவியான எண்ணியே இந்தப் பட்டியலில் சேர்த்துள்ளேன். இவ்வகையில் மொத்தம் 20 பாடல்களில் பல மிக மிக இனிமையானவை, புகழ்பெற்றவை, சிலவற்றை கேட்க சகிக்கவில்லை. இந்தப் பட்டியலில் உள்ள ஒரு சுவாரசியமான பாட்டு, “தென்னங்கீற்று ஊஞ்சலிலே..”. பாடலைப் பாடியவர்கள் P.B. சீனிவாஸ், S. ஜானகி. இவர்கள் இருவரும் சேர்ந்து பாடிய ஒரே பாடல் இது எனப் படித்ததாக ஞாபகம். இது உண்மையா? மற்றுமொறு விசேசம் இப்பாடலுக்கு உண்டு. பாடலை இயற்றியவர் எழுத்தாளர் ஜெயகாந்தன்!

இந்தப் பாடல்கள் அனைத்திற்கும் என்னால் முடிந்தவரை அப்படம் வெளியான ஆண்டு, இசையமைத்தவர், பாடியவர்கள், பாடலாசிரியர் முதலிய தகவல்களைத் தந்துள்ளேன்.  ஒரு சில பாடல்களுக்கு இவை கிடைக்கவில்லை. தெரிந்தால் வாசகர்கள் தெரிவிக்கவும். சில சமீபத்தியப் பாடல்களில் எதுகை மோனையாக அமைய வேண்டும் என்பதற்காகவே சிட்டு எனும் சொல்லை உபயோகித்தது போல இருக்கிறது. சிட்டு எனும் வார்த்தையைத் தொடர்ந்து அடுத்த வரிகளில் தொட்டு, மெட்டு, பட்டு போன்ற வார்த்தைகளைல காணலாம். அதேபோல குருவி…அருவி. இந்தச் சாயலை பழைய பாடல்களில் காணமுடிவதில்லை.

பட்டியல் இதோ:

சிட்டுக்குருவி ..சிட்டுக்குருவி ..சேதிதெரியுமா?.. 
படம்: டவுன் பஸ் 1955, பாடியது: எம். எஸ் ராஜேஸ்வரி, கெ. எம். ஷெரீப்,  இசை: கே. வி. மஹாதேவன்.

சின்னஞ் சிறு சிட்டே எந்தன் சீனா கல்கண்டே
படம்:  அலிபாபாவும் 40 திருடர்களும், 1956, பாடியது: எஸ். சி.கிருஷ்ணன் & ஜிக்கி,
பாடலாசிரியர் மருதகாசி, இசை: எஸ். தக்ஷிணாமூர்த்தி.

தென்னங்கீற்று ஊஞ்சலிலேசிட்டுக்குருவி பாடுதுதன் பெட்டைத் துணையைத்தேடுது
படம்: பாதை தெரியுது பார் 1960, பாடியது: பி. பி.ஸ்ரீநிவாஸ் & எஸ். ஜானகி,
பாடலாசிரியர்: ஜெயகாந்தன், இசை: எம். பி. சீனிவாசன்.
 
பட்டுவண்ணச்சிட்டு படகுதுறைவிட்டு
படம்: பரிசு 1963, பாடியது: டி. எம். செளந்தர் ராஜன், பாடலாசிரியர்: கண்ணதாசன்,
இசை: கே. வி. மஹாதேவன்.

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே..
படம்: புதிய பறவை 1964 பாடியது: பி. சுசீலா, பாடலாசிரியர்: கண்ணதாசன்,
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி.

சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு?…
படம்: சவாலே சமாளி, 1971, பாடியது:  பி. சுசீலா, இசை: எம். எஸ் . விஸ்வநாதன்.

சிட்டுக்கு செல்லசிட்டுக்கு ஒருசிறகு முளைத்தது
படம்: நல்லவனுக்கு நல்லவன், 1984 பாடியது: கே.ஜே. ஏசுதாஸ், பாடலாசிரியர்: நா. காமராசன்,
இசை: இளையராஜா.

ஏ குருவிசிட்டுக்குருவி
படம்: முதல் மரியாதை, 1985,பாடியது:மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி,
பாடலாசிரியர்: வைரமுத்து, இசை: இளையராஜா.

சிட்டுக்குருவி வெக்கப்படுது..
படம்: சின்னவீடு, 1985, பாடியது: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி, இசை:இளையராஜா.

சிட்டுகுருவி..தொட்டுதழுவி..
படம்: வீரபாண்டியன் 1987, பாடியது: மலேசியா வாசுதேவன், சித்ரா, இசை: ஷங்கர்-கணேஷ்.

பூஞ்சிட்டுக் குருவிகளா? புதுமெட்டுத் தருவிகளா?
படம்: ஒரு தொட்டில் சபதம் 1989. பாடியது &இசை: சந்திரபோஸ்.

சிட்டாஞ்சிட்டாங்குருவி உனக்குதானே
படம்: புது நெல்லு புது நாத்து, 1991, பாடியது: எஸ். ஜானகி, பாடலாசிரியர்: வைரமுத்து,
இசை:இளையராஜா.

பாலக்காட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசிருசிட்டுக்குருவி சிட்டுக்குருவி சிரிக்கட்டுமே பெட்டைக்குருவி
படம்: மே மாதம், 1994, பாடியது: ஜி.வி. ப்ரகாஷ் & நோயல் ஜேம்ஸ், பாடலாசிரியர்: வைரமுத்து,
இசை ஏ. ஆர். ரஹ்மான்.

புல்வெளி புல்வெளி எங்கும் பனித்துளி பனித்துளிசிட்சிட்சிட்சிட்சிட்டுக்குருவி
படம்: ஆசை, 1995, பாடியது: கே. எஸ். சித்ரா, இசை:தேவா

சிட்டு சிட்டு குருவிக்கு கூடுஎதுக்கு
படம்: உள்ளத்தை அள்ளித்தா, 1996, பாடியது:  மனோ, சுஜாதா, பாடலாசிரியர்: பழனிபாரதி, இசை: சிற்பி,

சிக்கிலெட்டு சிக்கிலெட்டு சிட்டுக்குருவி
படம்: பூவே உனக்காக, 1996, இசை:எஸ். ஏ. ராஜ்குமார்,

சிட்டுக்குருவி குருவி குருவி தனது இருசிறகை விரிக்குதே
படம்: நானும் ஒரு இந்தியன், 1997, பாடியது: எஸ். ஜானகி, மனோ, இசை: இளையராஜா

என்னைத்தொட்டுவிட்டுதொட்டுவிட்டுஓடுதுஒருசிட்டுக்குருவி
படம்: பூ மனமே வா 1999, பாடியது: எஸ்.பி. பாலசுப்ரமணியம், சித்ரா,
பாடலாசிரியர்: பழனிபாரதி, இசை: சிற்பி.

சிட்டு சிட்டு குருவிக்கந்த வானத்துல பட்டுரெக்க விரிக்க சொல்லித்தரனுமா?..
படம்: அழகி, 2002, பாடியது: பவதாரனி, பாடலாசிரியர்: பழனிபாரதி, இசை: இளையராஜா.

சிட்டுக்குருவி அருவியக் குடிக்கப்பாக்குது
படம்: பரசுராம், 2003, பாடியது: ஸ்வர்ணலதா, அர்ஜுன், ஸ்ரீராம் பார்த்தசாரதி,
பாடலாசிரியர்: பழனிபாரதி, இசை: ஏ.ஆர். ரஹ்மான்.

 

இந்தப் பட்டியலை சேகரிக்க பலர் உதவிபுரிந்தனர். குறிப்பாக எனது பெற்றோர்கள், மோகன் மாமா, அறம் ஆகியோருக்கும், சிறுவர் பாடலை பாடிய கபிலனுக்கும் எனது நன்றிகள்.

குறிப்பெடுக்க உதவிய நூல்கள், கட்டுரைகள், வலைதளங்கள் :

1. Citizen Sparrow: http://www.citizensparrow.in/

2. Sundar, KSG. 2010. The New Indian Express, (Zeitgeist Suppl.), 10 Jul 2010, pg. 6

3. ப. ஜெகநாதன். 2012. சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு. தினமணி (கொண்டாட்டம்), 22 ஏப்ரல் 2012.

4. Birds in Sangam Tamil: http://birdsinsangamtamil.wordpress.com/2011/05/01/birds-in-sangam-tamil/

5. Mahakavi Bharatiyar Katturaigal (Anthology of Bharat’s Essays) Compiled by D. Jayakantan and ‘Sirpi’ Balasubramaniam, Sahitya Akademi, New Delhi, Reprint 2008.

6. Birds of India – A literary Anthology. Edited by Abdul Jamal Urfi. (2008). Oxford University Press, New Delhi.

Written by P Jeganathan

November 19, 2012 at 1:57 pm

Posted in Birds

Tagged with ,

சினிமாவும், காட்டுயிரும் அவற்றின் வாழிடங்களும்

leave a comment »

எந்தத் தமிழ் சினிமாவைப் பார்க்கும் போதும் அதில் வரும் கதாநாயகியையும், காமெடியையும் ரசிப்பதைத் தவிர எனக்கு வேறு ஒரு பொழுதுபோக்கும் உண்டு. அவுட் டோர் லொக்கேஷனில் எடுக்கப்பட்டிருந்தால் அது இந்தியாவா இல்லை உலகில் எந்தப்பகுதி, எவ்வகையான வனப்பகுதி, படத்தில் வரும் காட்சியைப் பொறுத்து எந்த அளவுக்கு அவ்வகையான வாழிடத்திற்கு அந்த ஷூட்டிங்கினால் பாதிப்பு ஏற்பட்டிருக்கும், என்பதையெல்லாம் பற்றியே எனது யோசனை இருக்கும். ஒரு வேளை ஏதேனும் பறவையையோ, பூச்சியையோ, மரத்தையோ காண்பிக்கும்போது அது எனக்குத் பரிச்சயமான ஒன்றாக இருந்தால் அருகில் இருப்பவர்களிடம் அதைப்பற்றிச் சொல்லுவேன். பெரும்பாலும் அவர்களிடமிருந்து வரும் பதில், “பேசாமல் படத்தைப் பார்”.

தமிழ்ப் படங்களில் பல காட்சிகளில் காட்டுயிர்களையும் அவற்றின் வாழிடங்களையும் காணலாம். நான் குறிப்பிடுவது பழைய படங்களில் வருவதுபோல் கதாநாயகர்கள் சண்டையிட்டு அடக்கும் (?) சிங்கத்தையே, புலியையோ, அல்லது டைரக்டர் இராமநாராயணனின் படத்தில் காட்டப்படும் பழக்கப்படுத்தப்பட்ட சர்க்கஸ் விலங்குகளையோ இல்லை, இயற்கையான சூழலில் தென்படும் உயிரினங்களை. பாரதிராஜா, ராஜ்கிரண் போன்றவர்களின் படங்களில் அழகிய வயல்வெளியையும், நீர்நிலைகளையும் கொண்ட கிராமங்களைக் காணலாம். வெள்ளைகொக்குகள், மீன்கொத்திகள் பறப்பதையும், பூச்சிகளையும், மீன்கள் துள்ளித்திரிவதையும் அவ்வப்போது காண்பிப்பார்கள். மணிரத்னத்தின் பல படங்களில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளின் பல இடங்களைக் காணலாம்.

இதுபோல, தமிழ் சினிமாவில் ஏதாவது பறவையோ, வண்ணத்துப்பூச்சியோ சில நொடிகள் தான் வந்து போகும். ஆனால், சமீபத்தில் பார்த்த “வாகை சூட வா” எனும் அருமையான படத்தில் சர சர சாரக்காத்து வீசும் போது…என்ற பாடலில் கிராமப்புறங்களில் பார்க்கக்கூடிய சில அழகான உயிரினங்களைக் கொண்ட இயற்கைக் காட்சிகளை படம்பிடித்து இப்பாடலின் பல இடங்களில் காண்பித்திருப்பார்கள். தொலைக்காட்சியில் அடுத்த முறை இந்தப்பாடலை பார்க்கும் போது கீழே பட்டியலிடப்பட்டிருக்கும் விளக்கங்களை (பாடலின் ஆரம்பத்திலிருந்து வரும் காட்சிகளுடன்) ஒப்பிட்டுப் பார்த்து மகிழுங்கள்:

1. கதாநாயகன் மின்மினிப்பூச்சியைப் பிடித்து நாயகியின் நெற்றியில் அதைப் பொட்டாக வைப்பான். மின்மினிப் பூச்சி மின்னுவதேன் தெரியுமா? தனது இரையையும், துணையையும் கவர்வதற்காக. எப்படி மின்னுகிறது தெரியுமா? அதனுடலில் இருக்கும் லூசிபெரின் (Luciferin) எனும் ஒரு வித வேதிப் பொருள் ஆக்ஸிஜனுடன் கலப்பதால் பளிச்சிடும் பச்சை நிற ஒளி இப்பூச்சியின் பின் பக்கத்திலிருந்து உமிழுகிறது.

2. ஒரு மஞ்சள் நிறத் தட்டான் தனது வயிற்றுப்பகுதியின் கீழ் நுனிப்பகுதியை (நாம் வால் என பிடித்து விளையாடும் பகுதி) தண்ணீரின் மேல் தொட்டுத் தொட்டுப் பறக்கும். அதன் மேலேயே சிகப்பு நிறத்தில் இன்னொரு தட்டானும் பறந்து கொண்டிருக்கும். மஞ்சள் நிறத்தில் இருப்பது பெண் தட்டான். அது தனது முட்டையை தண்ணீரில் இட்டுக்கொண்டிருக்கிறது. அதன் மேலே பறக்கும் சிகப்பு நிறத்தட்டானே அதன் ஆண் துணை. அது பறந்து கொண்டே தனது பெண் துணையை மற்ற ஆண் தட்டான்களிடமிருந்து பாதுகாக்கிறது.

3. கவுதாரி ஓடுவதை (அல்லது ஓடவிட்டுப்) படமெடுத்திருப்பார்கள்.

4. அடுத்து வருவது எலி. வயல் எலியாக இருக்கக்கூடும்.

5. ஒரு பறவை நீர்க் கரையின் ஓரத்தில் அமர்ந்திருப்பதைப்போன்ற காட்சி. இது Chestnut-bellied Sandgrouse எனும் பறவை. வறண்ட வெட்ட வெளிகளிலும், புதர் காடுகளிலும் இதைப் பார்க்கலாம். தமிழிலில் கல்கவுதாரி எனப்படும் (எனினும் இது கவுதாரி இனத்தைச் சார்ந்தது இல்லை). தரையில் இருக்கும் தானியங்கள், புற்களின் விதைகள் முதலியவற்றை சாப்பிடும். உச்சி வெயில் நேரத்தில் காட்டிலுள்ள நீர்க்குட்டைகளின் ஓரத்தில் தாகத்தைத் தனிக்க கூட்டமாக வந்திறங்குவதைக் காணலாம். ஆனால் இந்தப்பாடலில் காண்பிக்கப்படும் கல்கவுதாரியை இயற்கையான சூழலில் படம்பிடித்த மாதிரி தெரியவில்லை.

6. அதற்கு அடுத்து வருவது காட்டு முயல். Rabbit என நாம் பொதுவாகச் சொல்லுவது. ஆனால் இந்தியாவில் Rabbit இனம் கிடையாது. உணவிற்காகவும், செல்லப்பிராணியாகவும் மட்டுமே வளர்க்கப்படுகிறது. இந்தப்பாடலில் வருவது Black naped Hare – கதாநாயகி காதைப்பிடித்து தூக்கும் போது இம்முயலின் கரிய பிடரியைத் தெளிவாகக் காணலாம். இக்காட்டு முயல் இந்தியாவின் பல பகுதிகளில் இது திருட்டு வேட்டையாடப்படுகிறது. இந்திய வனவிலங்குச் சட்டத்தின் படி இது தண்டிக்கத் தகுந்த குற்றம்.

7. அடுத்து குளத்தில் மீன் அல்லது பாம்பு நீந்துவதைக் காண்பிப்பார்கள். ஒரு சில வினாடிகள் மட்டுமே வருவதால் தெளிவாகச் சொல்ல முடியவில்லை.

8. நத்தையைச் சமைப்பதற்காக கதாநாயகி தயார் செய்வாள்.

9. சிகப்பு நிற உடலில் கரும்புள்ளிகளையுடைய Blister Beetle-ஐ போன்ற வண்டுகள் புல்லின் மேலும் கீழுமாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கும்.

10. மழைபெய்து கொண்டிருக்கும் போது ஒரு மீன் பனைமரத்தின் மேலேறுவது போல ஒரு காட்சி. இதற்கு மரமேறி கெண்டை என்று பெயர். இதன் சிறப்பு என்னவென்றால் சுமார் 6 மணிநேரம் கூட நீருக்கு வெளியிலும் வந்து சுவாசிக்கக் கூடிய திறன் படைத்தது. ஆனால் இந்த படத்தில் காண்பித்திருப்பது போல செங்குத்தாக ஏற முடியுமா எனத்தெரியவில்லை. இக்காட்சியைக் காணும் போதும், இதற்கு அடுத்து வரும் பறவையும் நிச்சயமாக graphics தான் என்பது புலப்படுகிறது.

அடுத்து நான் பார்த்து வியந்த காட்சி “3” (மூன்று) எனும் படத்திலிருந்து. இப்படத்தில் கதாநாயகன், நாயகியின் வீட்டின் முன் நின்று கொண்டு அவளிடன் தனது காதலைச் சொல்லுவான். அக்காட்சியின் போது நாயகியின் கண்களில் தெரியும் பயம் கலந்த பிரமிப்பையும், பூரிப்பையும் பலர் ரசித்திருக்கலாம். ஆனால் நான் பூரிப்படைந்ததும், ரசித்ததும், அந்தக் காட்சியின் பின்னனியில் ஒரு பறவையின் இனிமையான குரலைக் கேட்டுத்தான். விசிலடிப்பது போன்ற அந்தக்குரல் குயிலினத்தைச் சேர்ந்த Indian Cuckoo எனும் பறவையினுடையது. இதன் குரல் நான்கு சுரங்களைக் (notes) கொண்டது. பறவைகள் பாடும் விதத்தையும், குரலையும் வைத்து அதற்கு செல்லப்பெயரிடுவது வழக்கம். ஆங்கிலத்தில் இப்பறவையின் குரல் கேட்பதற்கு, “One more bottle” என்று ஒலிப்பதைப் போலிருப்பதாக குறிப்பிடுகின்றனர். அடுத்த முறை இந்தக் காட்சியைக் காணும் போது இந்தத் தகவலை நினைத்துப் பாருங்கள். காட்சியை விட இந்தப் பறவையின் இனிமையான குரல் உங்களுக்கு நிச்சயமாகப் பிடித்துப் போகும்.

பழைய தமிழ்ப்படங்களில் புலி, சிறுத்தை, சிங்கம் முதலிய விலங்குகளுடன் கதாநாயகன் கட்டிப்பிடித்து சண்டையிட்டு அவற்றை கொல்லுவது போன்ற காட்சியைக் காணலாம். பல வேளைகளில் இந்த விலங்குகளுக்கெல்லாம் வாயைத் தைத்த பின்னரே படத்தில் நடிக்க விடுவார்கள். அதேபோல படத்திலும், சர்க்கஸிலும் வரும் யானைகளை அவை குட்டியாக இருக்கும் போதே பிடித்து வந்து, அடித்து, அங்குசத்தால் குத்திக் கொடுமைப்படுத்தியே அவர்கள் சொல்லுவதையெல்லாம் கேட்க வைப்பார்கள். இந்த உண்மையெல்லாம் தெரிந்ததனால் படங்களில் இவ்வுயிர்கள் வரும் காட்சிகளை என்னால் ரசிக்க முடிவதில்லை.

பெரிய விலங்குகள் மட்டுமல்ல, சின்னஞ்சிறு உயிரினங்களையும் வதைத்து எடுக்கப்பட்ட காட்சிகளையும் நான் ரசிப்பதில்லை. “மீரா” எனும் படத்தில் ஒரு பாடல் காட்சியில் பல வண்ணத்துப்பூச்சிகளை கதாநாயகி கையில் வைத்து விளையாடுவாள். அவற்றில் சில போலிகள் என்றாலும் நிச்சயமாக சில உயிருள்ள வண்ணத்துப்பூச்சிகள் என்பது உற்று நோக்கினால் தெரியும். “சத்யா” எனும் படத்தில் வரும் ஒரு பாடலில் கதாநாயகன் தட்டானைப் பிடித்து நாயகியின் மேல் விடுவது போன்ற காட்சி வரும். சமீபத்தில் வெளியான “இராவணன்” படத்தின் ஆரம்பக் காட்சிகளில் ஒரு தட்டானைக் காண்பிப்பார்கள். பிடித்து வைத்து படமெடுத்திருக்கிறார்கள் என்பது பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது.

சினிமாக்காரர்களின் வசீகரத்தினாலோ, பெரிய இடத்திலிருந்து வரும் சிபாரிசினால் ஏற்படும் நிர்பந்தத்தினாலோ வனத்துறையினர் வேறு வழியின்றி அனுமதி வழங்கி விடுவதால், பொதுமக்கள் கூட செல்ல அனுமதிக்கப்படாத பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் (core area) கூட ஒரு சில படக்காட்சிகளில் வந்து போகும். இந்தப்படங்களில் சில காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும் விதத்தைப் பார்த்தவுடனேயே அந்தக்காட்சி எடுக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு எந்த அளவிற்கு பாதிப்பை உண்டாக்கும் என்பதை ஊகிக்க முடியும். என்னதான் நல்ல படமாகவும், பிடித்த நடிக, நடிகையர் இருந்தாலும், காட்டுயிர் வாழிடங்களின் சூழலை பாதிப்படையும் வண்ணம் இருப்பதைக் காணும் போது வேதனையாக இருக்கும். தூய்மையான காட்டுயிர் வாழிடங்களில் அதாவது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலோ, ஏரி, குளம் ஆறு போன்ற நீர்நிலைகளிலோ, பாலைவனங்களிலோ, பனிபடர்ந்த மலைப்பகுதிகளிலோ சினிமா ஷூட்டிங் நடத்தப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு நிச்சயமாக பாதிப்பு ஏற்படும். நாட்டுப்புறங்களிலும், கிராமங்களிலும், புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களான ஊட்டி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டால் அந்த இடங்களில் அப்படி ஒன்றும் பெரிய சுற்றுச்சூழல் பாதிப்படையாது என்றே தோன்றுகிறது. எனினும் இது எடுக்கப்படும் காட்சியைப் பொறுத்ததே. ஆனால் வனப்பகுதிகளிலும், நீர்நிலைகளிலும் எடுக்கப்படும் ஒரு சில காட்சிகளால் நிச்சயமாக அந்த இடங்களுக்கு பாதிப்பு இருக்கும். உதாரணமாக ஒரு பாடலில் 20 பேர் ஆடிப்பாடி, பளபளக்கும் (மட்கிப்போகாத) ஜிகினாத்தாளை தூக்கி விசிறி பறக்கவிட்டால் அது அந்த இடத்தை நிச்சயமாக மாசுறச்செய்யும். அதுபோலவே காட்டில் ஓடி ஒளிந்துகொள்ளும் வில்லனையோ, கதாநாயகனையோ பலபேர் தேடிச் செல்லுவது போல எடுக்கப்படும் காட்சிகள் அந்த இடத்தின் தூய்மையையும் அமைதியையும் நிலைகுலையச்செய்யும்.

சில படங்கள் ஆரம்பிக்கும் முன்பு, ”இந்த படத்தில் பறவைகளையோ, விலங்குகளையோ துன்புறுத்தப்படவில்லை” என்று அறிவிப்பார்கள். அதுபோலவே, “இந்தப்படம் எடுக்கப்பட்ட இடங்களில் அதன் சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை” என்று சொல்லும் காலம் வரவேண்டும். அப்போதுதான் என் போன்றவர்கள் பேசாமல் படம் பார்த்து ரசிக்க முடியும்.

******

காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 13. புதிய தலைமுறை 11 அக்டோபர் 2012

Written by P Jeganathan

October 13, 2012 at 5:57 pm

சிட்டுக்குருவி உங்கள் வீட்டுக்கு வருகிறதா?

leave a comment »

”சிறிய தானியம் போன்ற மூக்கு; சின்னக் கண்கள்; சின்னத் தலை; வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல் வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப் போர்த்த முதுகு; சிறிய தோகை; துளித் துளிக் கால்கள்”.

சிட்டுக்குருவியை வர்ணிக்கும் இந்த வரிகள் யாருடையது என்றுத் தெரிகிறதா? மகாகவி பாரதியாருடையவை! வெள்ளைக் கழுத்து என்று சொல்லியிருப்பதால் அவர் பெட்டைக்குருவியைக் குறிப்பிடுகிறார் என்று தெரிகிறது. ஆண் சிட்டின் கழுத்தில் கருப்புத்திட்டு இருக்கும். பாரதியார் மட்டுமல்ல சங்க இலக்கியங்களும் சிட்டுக்குருவியைப் பற்றிப் பாடுகின்றன. குறுந்தொகையில் குறிப்பிடப்படும் ‘மனையுறை குரீஇ’ என்பது சிட்டுக்குருவியாகத்தான் இருக்கக் கூடும். குருவி என இன்று நாம் வழங்கும் வார்த்தை குரீஇ எனும் சொல்லில் இருந்துதான் வந்திருக்க வேண்டும்.

சிட்டுக்குருவிகளைப் பற்றி தமிழ் சினிமாப் பாடல்கள் பல உள்ளன. நீங்கள் கொஞ்சம் வயதானவராக இருந்தால் சட்டென உங்கள் நினைவுக்கு வருவது எம். எஸ். ராஜேஸ்வரி அவர்கள் பாடிய, ”சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?..”, புதிய பறவையில் வரும், “சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே..” போன்ற பாடலாகத்தானிருக்கும். என்னைப்போல் 70வதுகளில் பிறந்தவராக இருந்தால், முதல் மரியாதையில் வரும், ”ஏ குருவி..சிட்டுக்குருவி..” நினைவுக்கு வரக்கூடும். நான் பட்டியலிட்ட வரை சிட்டுக்குருவி என தொடங்கும் பாடல்கள் மட்டும் பத்து. ஒரு நாள் முழுதும் யோசித்து, பலரிடம் தொலைபேசியில் கேட்டு, இணையதளங்களில் தேடி மொத்தம் பதினெட்டு தமிழ்ச் சினிமா பாடல்களின் வரிகளில் சிட்டுக்குருவி இருப்பதை அறிந்தேன். (அப்பதிவை இங்கே காண்க)

_JEG5817_700

சிட்டுக்குருவியைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. மனிதர்கள் வாழும் பகுதியிலேயே வாழ்ந்து வரும் பறவையினம் இது. இப்படி நம் இலக்கியங்களிலும் அன்றாட வாழ்விலும், கலந்திருப்பவை சிட்டுக்குருவிகள். சில வருடங்களாகவே பத்திரிக்கைகளிலும் ஊடகங்களிலும் சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன அவற்றை காப்பாற்ற வேண்டும் என்றெல்லாம் செய்திகள் வருவதைப் பார்த்திருக்கலாம். அவை குறைவதற்கான காரணங்கள் நகரமயமாதல், செல்போன் டவர்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு என்றெல்லாம் அச்செய்திகளில் சொல்லப்பட்டிருக்கும். இதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை? இந்தியாவில் சிட்டுக்குருவிகள் சில இடங்களிலிருந்து மறைந்து போயிருக்கலாம். சில இடங்களில் முன்பு இருந்ததைவிட எண்ணிக்கையில் தற்போது குறைந்தும் போயிருக்கலாம். ஆனால் அவற்றின் எண்ணிக்கையை துல்லியமாக அறியவும், ஏன் குறைந்து வருகிறது என்பதையும் அறிய பல வருட  களப்பணிகள் மேற்கொண்டும், தகுந்த அறிவியல் ஆராய்ச்சியின் முடிவிலும் தான் அறியமுடியும்.

பொதுவாக செய்திகளில் தெரிவிக்கப்படும் செல்போன் டவர் கதிர் வீச்சு போன்ற காரணங்களெல்லாம் ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்பட்ட பல வருட ஆராய்ச்சியின் முடிவு. அங்கும் கூட இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என யூகித்தார்களே ஒழிய இதுதான் முக்கிய காரணம் என திட்டவட்டமாகச் சொல்லவில்லை. இங்கிலாந்தில் சிட்டுக்குருவிகள் அழியும் நிலையில் உள்ளன. அதற்கான காரணங்கள் பல. நகரங்களில் இருந்த தோட்டங்கள், புதர்ச்செடிகள் வெகுவாகக் குறைந்து போனது, அவை கூடமைக்க ஏதுவான இடங்கள் இல்லாமல் போனது, முட்டை பொரிக்கும் காலங்களில் புழு, பூச்சிகளின் தட்டுப்பாட்டினால் குஞ்சுகளுக்கு சரியான இரையில்லாமல் போவது போன்றவையே காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்பட்டது. இவற்றில் எதாவது ஒன்று மட்டுமே இல்லாமல் இவையனைத்துமே காரணமாக இருக்கவும் கூடும் என்றறியப்பட்டது.

_JEG5894_700

மேலை நாடுகளில் ஓரு குறிப்பிட்ட இடத்திலிருந்து அவை மாயமாய் மறைந்து, எண்ணிக்கையில் குறைந்து விட்டன என்று சொன்ன போது அவர்களிடம் அதற்கு முன் அந்த இடத்தில் எத்தனை சிட்டுக்குருவிகள் இருந்தன என்ற தகவல் இருந்தது. அதாவது ஒவ்வொரு வருடமும் கணக்கெடுப்பு நடத்தியதால் முன்பிருந்ததை விட இப்போது குறைந்து விட்டன என துல்லியமாகச் சொல்ல முடிந்தது. அமெரிக்காவில் கிருஸ்துமஸ் தினத்தன்று அந்நாட்டின் நகரங்களின் பல பகுதிகளில் சுற்றித்திரியும் பறவைகளை கணக்கிடுவார்கள். இப்பணியில் பல தன்னார்வலர்கள் பங்குகொண்டு அவர்கள் பார்த்தவற்றை பதிவு செய்து விஞ்ஞானிகளிடம் அத்தகவலை பகிர்ந்து கொள்வார்கள். இதைப் போன்ற திட்டங்களை நம் நாட்டிலும் செயல்படுத்த வேண்டும். இத்திட்டங்கள் பறவைகளையும், அவற்றின் வாழிடங்களையும் பாதுகாக்கும் எண்ணத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த உதவும். பொதுமக்கள் அறிவியல் ஆராய்ச்சியில் பங்கு கொள்ளும் இத்திட்டங்களுக்கு மக்கள் அறிவியல் (Citizen Science) என்று பெயர்.

பறவைகள் நாம் வாழும் சூழலின் தன்மையை, நிலையை அறிய உதவும் ஒரு உயிரினம். அதாவது சூழியல் சுட்டிக்காட்டிகள். ஒரு சில வகைப் பறவைகள் ஓரிடத்திலிருந்து குறைந்தாலோ, அழிந்துவிட்டாலோ அவ்விடங்களின் நிலை சீரழிந்து வருகிறது என்பதற்கான அறிகுறியாகும். ஆகவே நம் வீட்டின் அருகிலுள்ள பறவைகளை அடையாளம் கண்டு அவ்வப்போது அவற்றின் எண்ணிக்கையைப் பற்றிய குறிப்புகளை சேகரித்து வைக்கலாம். பறவைகளின் மேல் மட்டுமல்லாமல் இயற்கையின் மீதான கரிசனத்தை இவ்வகையான செயல்கள் அதிகப்படுத்தும்.

 பெண் சிட்டுக்குருவியின் மண் குளியல் (Dust Bathing)

பெண் சிட்டுக்குருவியின் மண் குளியல் (Dust Bathing)

உங்கள் வீட்டினருகில் சிட்டுக்குருவிகள் வருகின்றனவா என கவனியுங்கள். வந்தால் கொஞ்ச நேரம் அவற்றை பார்த்து ரசித்துக் கொண்டேயிருங்கள். தினமும் அவற்றை உங்கள் வீட்டினருகில் வரவழைக்க வேண்டுமா? கப்பலோட்டிய தமிழன் சினிமா பாருங்கள். அதில் பாரதியார் ஒரு காட்சியில் செல்லம்மா கடன் வாங்கி வைத்திருந்த அரிசியை முற்றத்தில் சிட்டுக்குருவிகள் கொத்திச் சாப்பிடுவதற்காக இரைத்து விடுவார். இதைக்கண்டு கோபித்துக்கொள்ளும் செல்லம்மாவிடம் சிட்டுக்குருவிகளின் பசி தீர்த்ததை எண்ணிப் பெருமைப்பட்டு அப்பறவைகளைப் போல் கவலைப்படாமல் இருக்கச்சொல்லி, “விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக்குருவியினைப் போலே…” எனப் பாடுவர். அதைப்போல நீங்களும் சிட்டுக்குருவிகளுக்கு தினமும் கொஞ்சம் தானியங்களை வைக்கலாம். கூடவே ஒரு சிறிய பாத்திரத்தில் அவற்றின் தாகம் தீர்க்கத் தண்ணீரையும் வைக்கலாம்.

கூட்டில் பெண் சிட்டுக்குருவி. Photo: Tharangini Balasubramanian

கூட்டில் பெண் சிட்டுக்குருவி. Photo: Tharangini Balasubramanian

ஒரு சிறிய அட்டைப்பெட்டி இருந்தால் (ஷு வாங்கி வந்த பெட்டிகூட போதும்) அது பிரியாமலிருக்க இருபுறமும் பசையிட்டு ஒட்டி, சிட்டுக்குருவி நுழையும் அளவிற்கு ஓட்டை போட்டு வீட்டின் ஓரமாக உயரே தொங்கவிட்டால் சிட்டுக்குருவியின் குடும்பத்தையே உங்கள் வீட்டிற்கே கொண்டுவரலாம். அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தால் நம் கவலை மறந்து, விட்டு விடுதலையாகி நிற்கலாம்!

******

காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 2. புதிய தலைமுறை 19 ஜூன் 2012

Written by P Jeganathan

July 21, 2012 at 5:22 pm