Posts Tagged ‘tamil green literature’
தமிழில் சூழலியல் படைப்புகளின் நிலை
சூழலியலைப் புரியவைக்க மொழி மேம்பட வேண்டும்! எனும் தலைப்பில் தி இந்து தினசரியில் (19 Feb, 2022) வெளியான எனது நேர்காணலின் முழு வடிவம்.
பேட்டி கண்டவர்: ஆதி வள்ளியப்பன். தி இந்து வலைதளத்தில் படிக்க இங்கே காண்க:
தமிழில் சூழலியல்-பசுமை எழுத்து வளர்ந்திருப்பதாக நினைக்கிறீர்களா? கடந்த 10 ஆண்டுகளில் சூழலியல் எழுத்தில் ஏற்பட்டுள்ள முக்கியமான மாற்றங்கள் என்று எவற்றைக் கருதுவீர்கள்.
ஓரளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. எனினும், குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறதா எனத் தெரியவில்லை. இன்னும் தரமான பல உயிரினங்கள் குறித்த களக் கையேடுகள் வரவேண்டும். களப்பணி முறைகள், ஆராய்ச்சி அறிக்கைகள், காட்டுயிர், சுற்றுச்சூழல் சட்டங்கள் யாவும் தமிழில் எழுதப்பட வேண்டும். இவற்றையெல்லாம் எழுதவும், எழுதுவதை ஊக்குவிக்கவும் துறைசார் சொற்களை உருவாக்கவும், அவற்றை புழக்கத்திலும் கொண்டு வரவேண்டும். இயற்கை பாதுகாப்பு சார்ந்து ஆராய்ச்சி செய்பவர்கள் குறிப்பாக பெண்கள் பலர் தமிழில் எழுத முன் வரவேண்டும். சோ. தர்மன் எழுதிய ‘சூல்’ போல இன்னும் பல புதினங்களும், இயற்கை சார்ந்த புனைவு இலக்கியங்களும் நிறைய வரவேண்டும். செல்வமணி, அவை நாயகம், ஆசை இவர்களது படைப்புகளைத் தவிர இயற்கை சார்ந்த கவிதைகள் பெரிதாக வந்ததாகத் தெரியவில்லை. (பெருமாள்முருகனின் பறவை, இயற்கை கீர்த்தனைகள் நீங்கலாக). Green Humor போன்ற காட்டூன்களும் தமிழில் வரவேண்டும். இயற்கை சார்ந்த சிறார் இலக்கியங்கள் பல தமிழில் வரவேண்டும்.
மூன்று நிமிடங்களுக்கு மேல் கவனம் செலுத்தி பார்க்கவோ, படிக்கவோ முடியாத தற்போது உள்ள சில இளைய தலைமுறையினரையும் கவரும் வகையில் இயற்கை பாதுகாப்பு சார்ந்த செய்திகளை பல வகைகளில், பல தளங்களில் (காணொளி, infographics) வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சூழலியல் பிரச்சினைகள் அறிவியல்பூர்வமாக முன்வைக்கவும், விவாதிக்கவும் படுகின்றன என்று நினைக்கிறீர்களா? குறிப்பாக தொலைக்காட்சி, சமூகஊடக விவாதங்களில் ஆரோக்கியமான போக்கு தென்படுகிறதா?
தொலைக்காட்சி பார்ப்பதில்லை, ஒரு சில வாட்ஸ்அப் குழுக்களைத் தவிர வேறு எந்த சமூக ஊடகத்திலும் இல்லை. அந்தக் குழுக்களிலும் கூட விவாதிப்பதோ, தேவையில்லாமல் எதிர்வினையாற்றுவதோ இல்லை. ஆகவே நிம்மதியாக இருக்கிறேன்.
எனினும், சமகால பிரச்சனைகளை பொதுமக்களுக்கு புரியும்படி எளிய வகையில் உடனுக்குடன் சொல்ல வேண்டிய அவசியம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது தேவையாக இருக்கிறது. ஆனால் அப்படி நடப்பதாகத் தெரியவில்லை. ஊரடங்கு காலத்தில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து நிறைய பேசினோம். ஆனால், ஊரடங்கு விளக்கிக் கொள்ளப்பட்டவுடன், நாமும் ‘இயல்பு நிலைக்குத்’ திரும்பிவிட்டோம். அண்மையில் இந்தியாவில் காடுகள் அதிகரித்துவிட்டதாக ஒரு அறிக்கை வெளியானது. உள்ளே படித்துப் பார்த்தால், தேயிலைத் தோட்டங்களையும், தென்னந்தோப்புகளையும் காடுகள் என ‘கணக்கு’ காண்பித்திருக்கிறார்கள். இது குறித்து பெரிதாகப் பேசப்படவில்லை. இந்திய காட்டுயிர் பாதுகாப்பு சட்டம் (1972) திருத்தம் குறித்து தமிழில் செய்திகள் கூட வந்ததாகத் தெரியவில்லை.
காலநிலை மாற்றம் பற்றி தமிழகத்தில் குறைந்தபட்சமாகவாவது விழிப்புணர்வு இருக்கிறதா, தமிழக சூழலியல் செயற்பாட்டாளர்களின் காலநிலை மாற்றம் குறித்த அணுகுமுறை எப்படியிருக்கிறது?
நிச்சயமாக காலநிலை மாற்றம் குறித்து பலரும் அறிந்தே இருக்கிறார்கள். குறிப்பாக நகரப்பகுதியில் உள்ளவர்கள் இதை உணர்ந்திருக்கிரார்கள். ஆனால் அவற்றின் விளைவுகளைப் பற்றி இன்னும் முழுமையாக நாம் அனைவரும் அறிந்திருக்கிறோமா எனத் தெரியவில்லை. இது குறித்துதான் தமிழில் இன்னும் அதிகமாக பேசப்பட வேண்டும். காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள ஒரு மாற்றாக பசுமை ஆற்றல் முன்வைக்கப்பட்டாலும், அதிலும் பல சிக்கல்கள் இருப்பதை நாம் உணர்ந்து செயல்படவேண்டும். The Guardian தினசரியைப் போல. காலநிலை அவரசநிலை குறித்த புரிதலும், அக்கறையும் கொண்ட பல செய்தியாளர்களை உருவாக்கி அவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். தினசரிகளில் இதற்கென தனியாக ஒரு பக்கத்தையே ஒதுக்க வேண்டும்.
தமிழ்ச் சூழலியல் எழுத்து என்று வரும்போது, காட்டுயிர்கள், இயற்கை குறித்து போதுமான கவனம் செலுத்தப்படுகிறதா? இல்லை, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய மேம்போக்கான ஆக்டிவிசம் ஆதிக்கம் செலுத்துவதாக நினைக்கிறீர்களா?
மேம்போக்காக இருப்பதாகத் தோன்றவில்லை. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் அளவு குறைக்கப்பட இருந்த போது சென்னையைச் சேர்ந்த பல இளம் இயற்கை ஆர்வலர்கள் பங்கு கொண்டார்கள். கொடைக்கானல் மெர்குரி கழிவினால் ஏற்படும் மாசு, எண்ணூர் கழிமுக மாசு குறித்து கலை வடிவிலும் (ராப், கர்நாடக இசைப் பாடல்) மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து பொதுமக்கள் வெகுண்டெழுந்ததைப் பார்த்தோம். கவுத்தி, வேடியப்பன் மலைப்பகுதிகள் பொதுமக்களின் உதவியாலேயே காப்பாற்றப் பட்டன. இப்பொது அப்பகுதியில் சிப்காட் வருவதை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். இவை அனைத்தும் முறையாக ஒரே இடத்தில் ஆவணப்படுத்தப்பட வேண்டும். இயற்கையை அழித்தால் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை சரியாக புரிய வைத்தால் அனைவரும் அதற்காகப் போராடுவார்கள். அந்தப் புரிதலை ஏற்படுத்துவது ஒவ்வொரு இயற்கை ஆர்வலர்களின், அதுசார்ந்து படைப்புகளை உருவாக்கும் ஒவ்வொருவரின் கடமை.
சமீபத்திய ஆண்டுகளில் நீங்கள் வாசித்தவற்றில் குறிப்பிடத்தக்க தமிழ் சூழலியல் புத்தகங்களைக் குறிப்பிட முடியுமா?
நூல்களை விட கட்டுரைகள் வாசித்தது தான் அதிகம். நாராயணி சுப்ரமணியன், சுபகுணம், மா, ராமேஸ்வரன், தங்க ஜெயராமன் ஆகியோரது சூழலியல், இயற்கையியல் சார்ந்த கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. பரிதியின் ‘பட்டினிப் புரட்சி, நக்கீரனின் ‘நீர்எழுத்து, ஜா. செழியனின் ‘பறவைகளுக்கு ஊரடங்கு, சு. பாரதிதாசனின் ‘பாறு கழுகுகளைத் தேடி’, வறீதையா கான்ஸ்தந்தின் ‘கடலம்மா பேசுறங் கண்ணு’ போன்ற நூல்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
தமிழ்ச் சூழலியல் படைப்புகளில் மொழிநடை, எடிட்டிங் போன்றவை மேம்பட்டிருப்பதாகக் கருதுகிறீர்களா?
இன்னும் வெளிநாட்டுப் பறவைகள் இங்கே வந்து கூடு வைக்கின்றன, கூகை ஒரு வெளிநாட்டுப் பறவை, யானைகள் அட்டகாசம் செய்கின்றன, சிறுத்தைகள் ஊருக்குள் ஊடுருவின என்றே எழுதிக் கொண்டிருக்கிறோம். செஞ்சந்தனம் அல்லது சந்தன வேங்கை என்கிற மரபான பெயர்கள் எப்படியோ உருமாறி செம்மரம் ஆகி விட்டது. வைரசை தமிழில் நச்சுயிரி என்று காலங்காலமாக படித்துவந்திருக்கிறோம். ஆனால் இப்போது அது தீநுண்மியாக திடீர் மாற்றம் அடைந்துவிட்டது. இது குறித்தெல்லாம் யாரும் கவலைப்படுவதாகவோ, கவனம் செலுத்துவதாகவோ தெரியவில்லை.
இயற்கை பாதுகாப்பு குறித்த சொல்லாடலில் மொழி ஒரு முக்கியப் பண்பு வகிக்கிறது. வார்த்தைகளை சரியாகக் கையாளுதல் (மனித-விலங்கு மோதல் அல்ல – மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல்), சரியான பதங்களை, பாரம்பரியப் பெயர்களை உபயோகித்தல், வழக்கொழிந்த பெயர்களை மீட்டெடுத்தல், சரியான துறைச்சொற்களை உருவாக்குதல் யாவும் அவசியம்.
——–
மரங்கள்-நினைவிலும் புனைவிலும்:வணக்கத்துக்குரிய நூல்!
பல்லாண்டு காலமாக வைத்து வளர்த்த, நம்மோடு சேர்ந்து வளர்ந்த, தினமும் பார்த்து வந்த மரங்கள் திடீரென ஒருநாள் இல்லாமல் போனால் நமக்கு எப்படி இருக்கும்? சாலையோரம் நின்று கொண்டிருந்த மரங்கள் சாலை விரிவாக்கப் பணிக்காக வெட்டப்பட்டு வீழ்ந்து கிடப்பதை பார்த்துக் கொண்டிருக்கும் வேளையிலும், புயல் வீசி எத்தனையோ மரங்கள் கண் முன்னே வீழ்ந்து கிடந்ததைக் கண்ட வேளையிலும் நம் மனதில் ஏற்படும் துயரத்தின் வலியை அவ்வளவு எளிதில் வார்த்தைகளால் விவரித்து விட முடியுமா? இல்லாமல் போன அந்த மரத்தால் ஏற்படும் வெற்றிடம் நம் மனதிலும் குடிகொள்ளும் அல்லவா? மரத்துடன் உணர்வு பூர்வமாக தொடர்பே இல்லாத மனிதர்கள் இருக்க முடியுமா? ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதோ ஒரு கட்டத்தில் தொடர்புகொண்ட ஒரு மரம் இருக்கத்தான் செய்கிறது. அது அவர்களின் நினைவுகளின் வாசலில் எப்போதும் வராமல் போனாலும் ஏதோ ஒரு மூலையில் அது அசையாமல் நின்று கொண்டிருக்கும். இது போன்ற நினைவுகள்தான் “மரங்கள்- நினைவிலும் புனைவிலும்”, எனும் நூலின் ஒவ்வொரு கட்டுரையிலும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
மரங்களை ஒருபுறம் நாம் நேசித்தாலும், அவற்றின் மகத்துவங்களை அறிந்திருந்தாலும் சில நேரங்களில் அவற்றை இடையூறாகத்தான் பார்க்கிறோம், நாமே வெட்டிச்சாய்க்கிறோம், அல்லது வெட்டத் துணை போகிறோம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ. சில நேரங்களில் மரங்களை நம்மில் ஒருவராகவே பாவிக்கிறோம், அவற்றுடன் பேசுகிறோம், தொந்தரவாகவே இருந்தாலும் சகித்துக் கொள்கிறோம், வெட்ட வந்தால் வெகுண்டெழுந்து போராடி வெட்டப்படாமல் பாதுகாக்கிறோம், தோல்வியும் அடைகிறோம். இப்படி மனிதனுக்கும் மரத்திற்கும் இருக்கும் உணர்வு பூர்வமான பிணைப்புகளை இந்த நூலின் கட்டுரைகளின் பல வரிகளில் காணலாம். படிக்கும் போது அது போன்ற நிகழ்வுகள் நம் வாழ்விலும் நடந்திருப்பதை உணர முடியும். இலையில்லா மரமாய், பசுந்தளிர்களை ஏந்தி, கொத்துக் கொத்தாய்ப் பூ பூத்து, கனிகள் நிறைந்த மரமாய் அதை ஒவ்வொரு நிலையிலும் காணும் போதும் நமக்குள் தோன்றும் வெவ்வேறு உணர்வுகளைப் போலவே இந்த நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையைப் படிக்கும் போதும் வித வித மான உணர்வுகள் நம்மை ஆட்கொள்ளும்.
இந்த நூலில் மொத்தம் 29 கட்டுரைகளை மதுமிதா தொகுத்தளித்துள்ளார் அவரது மனோரஞ்சிதத்தையும் சேர்த்து. சா. கந்தசாமி, பிரபஞ்சன், வண்ணதாசன், பாவண்ணன், நாஞ்சில் நாடன், அ. முத்துலிங்கம், தோப்பில் முஹம்மது மீரான் என இன்னும் பல மூத்த எழுத்தாளர்களின் கட்டுரைகளையும் உள்ளடக்கியது இத்தொகுப்பு. நூலின் இறுதியில் கட்டுரையாளர்கள் பற்றிய குறிப்புகளைத் தந்துள்ளனர். எனினும் இந்த தொகுப்பில் இடம்பெற்ற கட்டுரைகள் எங்கே, எப்போது வெளி வந்தவை எனும் தகவலைத் தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இந்நூலில் எனக்குப் பிடித்த கட்டுரைகள் பல. அவற்றில் மிகவும் பிடித்தவை நாஞ்சில் நாடனின் ‘சிறு மீன் சினையினும் நுண்ணிது’, ச. விசயலட்சுமியின் ‘மெளனத் தவமிருக்கும் உயிர்முடிச்சு’, வண்ணதாசனின் ‘ஒரு மரம், ஒரு பறவை, ஒரு மனிதன்‘, சா. கந்தசாமியின் “தெங்கு முதல் மயில் கொன்றை வரை”, கல்யாண்குமாரின் ‘மரங்களின் மகாத்மா’, தமிழ்நதியின் ‘வேம்பின் குயில்களும் மேப்பிள் மரங்களும்’.
அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது. உங்கள் ஊரில் உள்ள சாலையோரமாக உள்ள மரங்களில் பெருக்கல் குறி போடப்பட்டிருந்தால் உங்களுக்கு அந்த மரங்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அங்குள்ள நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் இந்த நூலை கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள். ஒன்று அல்ல 3, 4 படிகளை வாங்கிக் கொடுங்கள். அவர்கள் பல உயர் அதிகாரிகளிடம் இந்நூலை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். ஒருவேளை இந்த நூலைப் படித்தபின் அவர்கள் மனம் மாறி மரங்களை வெட்டாமலும் போகலாம்.
ஔவையார் இப்போது இருந்தால் இப்படியும் பாடியிருப்பார்
“சாலையோர மரமும், அரசு அறிய
வீற்றிருந்த வாழ்வும், வீழும் அன்றே”
ஒரு இயற்கையியல் ஆராய்ச்சியாளனாக இந்த நூலைப் படிக்கும் போது ஒரு சில கட்டுரைகளில் சொல்லப்பட்ட அறிவியல் துல்லியமற்ற கருத்துக்களை கவனிக்காமல் இருக்க முடியவில்லை.
மூன்று கட்டுரைகளில் குல்மோகர் மரம் என்றே குறிப்பிட்டுள்ளார்கள் (சா. கந்தசாமியின் கட்டுரையைத் தவிர). இதன் தமிழ் பெயர் மயில் கொன்றை என்கிறது கே. எம். மேத்யூவின் The Flora of the Palni Hills. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி மயிற்கொன்றை எனவும், விக்கிபிடியா இதை செம்மயிற்கொன்றை அல்லது மயிற்கொன்றை எனவும் அழைக்கிறது. அறிவியலாளர்களால் Delonix regia என்றழைக்கப்படும் இதன் பூர்விகம் மடகாஸ்கர் தீவு.
மயில் கொன்னை என்பது வேறு அது Caesalpinia pulcherrima எனும் சிறு மரம் இது மேற்கிந்தியத்தீவுகளில் இருந்து கொண்டு வரப்பட்டது. இதன் மலரும் குல்மோகர் மலரை கிட்டத்தட்ட ஒத்து இருப்பதாலும், இவை அயல் தாவரங்களாதலாலுமே இந்தப் பெயர்க் குழப்பம்.

Left: மயில் கொன்னை Caesalpinia pulcherrima. Photo: Wikimedia commons
Right: மயில் கொன்றை Delonix regia Photo: Wikimedia Commons
சா. கந்தசாமியின் கட்டுரையில் மருதமரம் எனக் குறிப்பிட்டிருப்பது Terminalia arjuna அதாவது வெள்ளை மருது, ஆனால் கு. வி. கிருஷ்ணமூர்த்தி “தமிழரும் தாவரமும்” நூலில் சங்க இலக்கியப் பாடல்களில் குறிப்பிடப்படும் மருத மரம் இதுவல்ல என்றும் செம்மருதம் என குறிப்பிடப்பட்டிருப்பதால் Lagerstroemia reginae தான் என்கிறார். தோப்பில் முஹம்மது மீரானின் ‘ஒரு மரமும் கொஞ்சம் பறவைகளும்’ கட்டுரையில் வெளிநாட்டுப் பறவைகள் மாமரத்தில் கூடு கட்டுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வலசை வரும் பறவைகள் இங்கே கூடுகட்டுவதில்லை. சரி இதையெல்லாம் இவ்வளவு நுணுக்கமாக பார்க்க வேண்டுமா என்றால் என்னைப் பொறுத்தவரை ஆமாம் பார்க்க வேண்டும் என்றுதான் சொல்வேன்.
எனினும் ஒரு ஆராய்ச்சியாளனாக இந்த நூலில் இருந்து நான் கற்றுக் கொண்டது பல. தாவரவியல் படித்த ஒருவன் ஒரு மரத்தைப் பற்றி விவரிப்பதற்கும், மொழி வளமும் கற்பனைத்திறனும் கொண்ட படைப்பாளன் ஒருவன் விவரிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். உதாரணமாக இந்நூலில் மரங்கள் குறித்து, எளிமையாகப் புரியும் வகையில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு சில சொற்களை, வாக்கியங்களை தாவரவியல் நூல்களில் பார்க்க முடிவதில்லை.
இந்த நூலை படித்துக் கொண்டிருந்தபோது எனக்குள் இருக்கும் ஆராய்ச்சியாளனின் புத்தி சில கேள்விகளுக்கான விடைகளைத் தேடியது. இந்த நூலில் எத்தனை வகையான மரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன? எந்தக் கட்டுரையில் அதிகமான மரங்கள் இடம்பெற்றிருக்கின்றன? அந்த மரங்கள் யாவை? பல எழுத்தாளர்களால் குறிப்பிடப்பட்ட மரம் எது? என் அப்பாவும் நானுமாகச் சேர்ந்து வேலைமெனக்கெட்டு இதையெல்லாம் பட்டியலிட்டோம். நூலைப் படித்துவிட்டு முடிந்தால் நீங்களே பட்டியலிட்டுப் பாருங்கள். பொறுமை இல்லையெனில் எழுதுங்கள் சொல்கிறேன்.
புறவுலகை போற்ற, பாதுகாக்க முதலில் அவற்றை பார்த்து ரசிக்க வேண்டும். நாம் எதை விரும்புகிறோமோ அதைத்தான் காப்பாற்றவும் செய்வோம். இயற்கையின் ஒரு அங்கமான மரங்களை போற்றிப் பாதுகாக்க மரத்தின் பயனை மட்டுமே சொல்லிப் புரிய வைப்பதைவிட மரங்களை மரங்களாகப் பார்க்கக் கற்றுத் தரவேண்டும். தாவரங்களையும் மரங்களையும் இனங்கான கையேடுகள் உதவும். ஆனால் மரங்களின் மேல் பரிவு காட்டவும், கரிசனம் கொள்ளவும் அதன் நீட்சியாக அவற்றைப் பாதுகாக்கவும் இது போன்ற உணர்வுபூர்வமான அனுபவப் பகிர்வுகளே பேருதவி புரியும்.
கி. ராஜநாராயணன் கரிசல் காட்டுக் கடுதாசியில் ஆல், அரசு போன்ற மரங்களை அடுப்பெரிக்க பயன்படுத்துவதில்லை ஏனெனில் அவை வணக்கத்துக்குரிய மரங்கள் என்று குறிப்பிடுவார் (இந்நூலில் உள்ள நாஞ்சில் நாடனின் கட்டுரையைப் படித்தால் ஏன் அவற்றை அடுப்பெரிக்க பயன்படுத்துவதில்லை என்பது விளங்கும்). அதுபோல மரங்கள் குறித்த இந்த நூலும் வணக்கத்துக்குரியது !
—
தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 29th April 2017 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDFஐ இங்கே பெறலாம்.
உயிரெழுத்து இதழுக்கான நேர்காணல்
உயிரெழுத்து மாத இதழில் (அக்டோபர் 2013 மலர் 7, இதழ் 4) வெளியான நேர்காணல். பத்திரிக்கையாளர்/பசுமை எழுத்தாளர் திரு ஆதி. வள்ளியப்பன் அவர்களின் கேள்விகளும் எனது பதில்களும்.
மனித – விலங்கு மோதல்
மனித விலங்கு மோதல் சார்ந்து உங்களுடைய அனுபவங்கள். குறிப்பாக, யானை, சிறுத்தை போன்றவற்றுடன் மோதல் நிகழும் பகுதியில் இருக்கிறீர்கள். இதன் பின்னணி என்ன. இதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்?
முதலில் மனித-விலங்கு மோதல் என்ற பதத்தை மாற்றி மனிதர்-காட்டுயிர் எதிர்கொள்ளல் எனக்கொள்ளவேண்டும். எனது வீட்டை புலியோ, சிறுத்தையோ, யானையோ கடந்து சென்றால் அவை என்னை தாக்க வருகின்றன என்று அர்த்தம் இல்லை. எதிர்பாராவிதமாக நான் இக்காட்டுயிர்களை நேருக்கு நேர் சந்திக்க நேரிட்டால், அவற்றின் வெகு அருகில் சென்று விட்டால், அவை பயத்தினாலோ, தம்மை தற்காத்துக்கொள்ளவோ என்னைத் தாக்கினால் அது எதிர்பாரா விதமாக நடக்கும் ஒரு விபத்திற்கு சமமானதே. அது திட்டமிட்ட தாக்குதல் அல்ல. எந்த ஒரு காட்டுயிரும் தானாக (சினிமாவில் காட்டுவதுபோல்) எந்த ஒரு மனிதரையும் துரத்தித் துரத்தி கடிப்பதோ, மிதிப்பதோ இல்லை, பழிவாங்குவதும் இல்லை. ஆகவே இது மோதல் அல்ல. நீங்கள் ஆட்கொல்லிகளைப் பற்றி (man-eaters) கேட்கலாம். இந்த ஓரிரு தனிப்பட்ட புலியோ, சிறுத்தையோ தொடர்ந்து மனிதர்களை குறிவைத்து தாக்கினால் அங்குள்ள அனைத்து இரைக்கொல்லிகளும் (Predators) அப்பண்பு உள்ளவையே எனக் கூறவே முடியாது. அப்படித் தாக்கும் அந்தத் தனிப்பட்ட விலங்கினை அந்த இடத்திலிருந்து விலக்கத்தான் வேண்டும். எனினும் அப்படி அடையாளம் காண்பது என்பதும் சிரமம். இது போன்ற சம்பவங்கள் நடக்கும் இடம், நேரம், சூழல் அனைத்தையும் ஆராய்ந்து, மேன்மேலும் மனித உயிரிழப்பு ஏற்படாத வண்ணம் ஆவன செய்ய வேண்டும்.
நான் தற்போது பணி புரிவது வால்பாறையில். சுமார் 220 சதுர கி.மீ. பரப்பளவவில் அமைந்துள்ள இங்கு பெரும்பகுதி தேயிலைத் தோட்டங்களால் நிரம்பியது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் இப்பகுதிக்கு வந்து தேயிலை பயிரிட ஏதுவான உயரமும், சூழலும் இருந்ததால் இங்குள்ள மழைக்காட்டை திருத்தி தேயிலைத் தோட்டங்களை அமைத்தனர். பயிரிடத் தகுதியில்லாத சில இடங்களில் காடுகளை அப்படியே விட்டு வைத்து விட்டனர். பச்சைப் பாலைவனம் என சூழியலாளர்களால் அழைக்கப்படும் தேயிலைத் தோட்டத்தில் இன்று இந்தத் துண்டுச்சோலைகள் ஆங்காங்கே சிறு சிறு தீவுகளாகக் காட்சியளிக்கின்றன. வால்பாறையைச் சுற்றிலும் இருப்பது ஆனைமலை புலிகள் காப்பகம் (இந்திரா காந்தி தேசிய பூங்கா), பரம்பிகுளம் புலிகள் காப்பகம், சின்னார் வனவிலங்கு சரணாலயம் முதலிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள். இந்த வனப்பகுதிகளில் உள்ள (யானை, சிறுத்தை முதலிய) விலங்குகள் பல்லாயிரம் ஆண்டுகளாக காலத்திற்கேற்ப உணவு, நீர், உறைவிடம் தேடி வனத்தின் ஒரு பகுதியிலிருந்து வேறோர் பகுதிக்கு இடம்பெயர்கின்றன. சுமார் 100 ஆண்டுகளுக்க்கு முன் இப்பகுதியில் நாம் குடியேறி இவ்வுயிரினங்களின் உறைவிடங்களை அழித்து விட்டு, இன்று அவை நாமிருக்கும் இடங்களுக்கு வரக்கூடாது என்று சொல்கிறோம்.
இவ்வளவு காலம் இல்லாமல், ஏன் இப்போது மனித – விலங்கு மோதல் எதிர்கொள்ளல் உச்சத்தை நோக்கி சென்று வருகிறது?
மனித-விலங்கு எதிர்கொள்ளல் இன்று நேற்றல்ல ஆதிகாலத்திலிருந்தே இருந்து வரும் ஒன்று. பெருகி வரும் மக்கள் தொகையினால் காட்டுயிர்களின் உறைவிடங்கள் நாளுக்கு நாள் அருகி வருகிறது. காடழிப்பு, காட்டுயிர்களின் வழித்தடங்களை ஆக்கிரமித்தல், சரியான (அறிவியல் பூர்வமான) மேலாண்மையின்மை, நீண்டகால தீர்வு காணும் எண்ணத்துடன் செயல்படாமை முதலியவையே இவ்வகையான நிகழ்வுகளுக்குக் காரணம். மேலும் காட்டுயிர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்தப் பிரச்சனையை வனத்துறையினர் மட்டும் தான் சமாளிக்க வேண்டும் என்று நினைப்பதும் தவறு. பல அரசுத் துறைகளும், ஊடகங்களும், தன்னார்வ நிறுவனங்களும், ஆராய்ச்சியாளர்களும், பொதுமக்களும் சேர்ந்து சமாளிக்க வேண்டிய பிரச்சனை இது. இன்னும் ஒன்றையும் சொல்லவேண்டும் – ஊடகங்கள் காட்டுயிர்களை ஏதோ பயங்கரவாதிகளைப் போல சித்தரிப்பதும், இந்தப் பிரச்சனையை ஊதிப் பெரிது படுத்துவதும் செய்தித்தாள்களிலும், செய்திகளிலும் பார்க்கலாம். ஏற்பட்ட சம்பவத்தின் தீவிரத்தையும், இப்பிரச்சனையை தீர்க்க/சமாளிக்க/தணிக்க செய்ய வேண்டியவைகளை நன்கு உணர்ந்து செயல் பட வேண்டியது ஊடகங்களில் கடமை. அண்மையில் வெளியான ஒரு திரைப்படத்தில் யானையை ஏதோ ஒரு வில்லனைப் போல சித்தரித்திருந்தார்கள். இந்த நிலை மாற வேண்டும்.
விலங்குகளுக்கு இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
யானை, சிறுத்தை போன்ற காட்டுயிர்கள் நம் வீட்டின் வெகு அருகில் இருந்தால் நாம் எப்படிப்பட்ட மனவுளைச்சலுக்கும், மனஅழுத்தத்திற்கும் ஆளாகிறோம். அதே போலத்தான் ஓரிடத்திலிருந்து யானைகளை பட்டாசு வெடித்து, டயரை எரியவிட்டு மேலே விட்டெறிந்து துரத்தும் போது அவையும் குழப்பத்திற்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றன. அச்சமயத்தில் குட்டியுடன் இருக்கும் போது இந்த அழுத்தம் பன்மடங்காகிறது. பகலில் இப்படி ஓட ஓட விரட்டுவதால் அவை ஓரிடத்தில் நிம்மதியாக இருந்து சாப்பிட முடியாமல் (யானைகளுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 150-200 கி.லோ எடை உணவும், சுமார் 200 லிட்டர் நீரும் அவசியம்) போகிறது. விளைவு, இரவு நேரங்களில் ரேஷன் கடைகளுக்கும், சத்துணவுக்கூடங்களுக்கும், அவற்றின் அருகாமையில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கும் புகுந்து அங்கிருக்கும் அரிசி, பருப்பு முதலியவற்றை சாப்பிடுகின்றன.
இது போலவே சிறுத்தை போன்ற இரைக்கொல்லிகளை நம் வீட்டினருகே பார்த்த உடனேயே அவற்றை அங்கிருந்து அகற்ற வேண்டும் என வனத்துறையிடம் முறையிடுவதால் அவர்களும் பல நிர்பந்தங்களுக்கு ஆளாகி கூண்டு வைத்து அவற்றை பிடித்துவிடுகின்றனர். அதைக் கொண்டு போய் வேறு இடங்களில் விட்டு விடுகின்றனர். இதனால் பிரச்சனை தீர்ந்து விடாது. இது ஒரு நீண்ட காலத் தீர்வு அல்ல. அவற்றை பிடித்து கூண்டுக்குள் அடைக்கும் போதும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும் போதும் ஏற்படும் மன அழுத்தம், குழப்பம், மன உளைச்சல் காரணமாக அவை எரிச்சலைடைகின்றன. அவை கூண்டுக்குள்ளிருந்து தப்பிக்க நினைக்கும் போது காயங்களும் ஏற்படுகின்றது. அந்த குறிப்பிட்ட விலங்கை வேறு இடங்களில் கொண்டு விடும் போது காயம் காரணமாக அவை வேட்டையாட முடியாமல் அங்குள்ள கால்நடைகளைத் தாக்குகின்றன. இது கிட்டத்தட்ட சில இந்திய சினிமாக்களில் காண்பிப்பது போல் ஒரு நல்லவனை/நிரபராதியை ஜெயிலில் போட்டு குற்றவாளி ஆக்கி அவன் விடுதலையாகும் போது கெட்டவனாக மாறி வருவது போலத்தான்.
இதனால் தமிழகத்தில் இறந்துள்ள உயிரினங்களின் எண்ணிக்கை என்ன?
இவ்வகையான புள்ளிவிபரங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மேலும் மனித-விலங்கு எதிர்கொள்ளலால் தான் ஒரு விலங்கு மரணமடைந்தது என அறுதியிட்டுக் கூறுவது எல்லா சமயங்களிலும் சாத்தியமில்லை. எனது சக ஊழியர் ஆனந்தகுமாரின் கூற்றுப்படி வால்பாறை பகுதியில் 4 யானைகள் (2 – தவறுதலாக பூச்சிமருந்தை உட்கொண்டு, 2 – மின்வேலி மின்சாரத்தினால் தாக்கப்பட்டு) மரணமடைந்துள்ளன. சிறுத்தைகளைப் பொறுத்தவரை 2007-2012 வரை வால்பாறை அதனை அடுத்தப் பகுதிகளில் 12 சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பலவற்றிற்கு உடலில் (பெரும்பாலும் முகத்தில்) காயம் ஏற்பட்டது. வேறு இடங்களில் கொண்டுசெல்லப்பட்டவை உயிருடன் இருக்கின்றனவா இல்லையா என்பதை செல்லுவது கடினம்.
இதைத் தடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகளை விளக்க முடியுமா?. மனிதர்கள்-யானை மோதலைத் தடுக்க என்.சி.எஃப் அமைப்பு (Nature Conservation Foundation – NCF) மேற்கொண்டுள்ள முயற்சியின் அறிவியல் பின்னணி ?
நான் மேற்சொன்ன தகவல்கள் அனைத்தும் வால்பாறையை மையமாக வைத்தே. மேலும் நான் மனித-விலங்கு எதிர்கொள்ளலைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை. எனது நண்பர்களும், சக ஊழியர்களும் இப்பணியில் பல ஆண்டுகளாக இப்பகுதியில் ஈடுபட்டு வருகின்றனர். எனது பணி, அவர்களது நீண்ட கால ஆராய்ச்சி முடிவுகளை கட்டுரைகள், பொதுக்கூட்டங்கள் வாயிலாக பொதுமக்களிடன் கொண்டு போய் சேர்ப்பது.
எனது சக ஊழியர் ஆனந்தகுமார் வால்பாறைப் பகுதியில் யானைகளின் இடம்பெயர்வையும், அவற்றின் பண்புகளையும், யானைகளால் மனிதர்களுக்கு எந்த விதத்தில், எங்கெங்கே பாதிப்பு ஏற்படுகின்றது, அந்த பாதிப்புகளை தணிக்க செய்ய வேண்டியவை பற்றிய ஆராய்ச்சியில் கடந்த 12 வருடங்களாக ஈடுபட்டு வருகிறார்.
வால்பாறையைச் சுற்றிலும் வனப்பகுதியாதலால் காலகாலமாக யானைகள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயர்வது வழக்கமான ஒன்றாகும். இவ்வேளையில் அவை மனிதர்களையும், குடியிருப்புகளையும் எதிர்கொள்வதை சில நேரங்களில் தவிர்க்க முடியாது. யானை-மனிதர்கள் எதிர்கொள்ளலை சரியான முறையில் சமாளிப்பதற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தணிப்பதற்கும், அவற்றின் இடம்பெயறும் பண்பை அறிந்திருத்தல் அவசியம். யானைகளின் நடமாட்டத்தைப் பற்றிய அறிவு இங்கு வாழும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது.
வால்பாறைப் பகுதியில் உள்ள யானைத் திரள்களை பின் தொடர்ந்து அவை போகும் இடத்திற்கெல்லாம் சென்று ஜி.பி.எஸ் கருவி மூலம் அவை இருக்குமிடத்தை குறித்துக்கொள்ளப்பட்டது. யானைகளால் ஏற்படும் சேதங்கள் யாவும் நேரில் சென்று மதிப்பிடப்பட்டது. மனித உயிரிழப்பும் பதிவு செய்யப்பட்டது. வால்பாறைப் பகுதியில் ஒர் ஆண்டில் சுமார் 80-100 யானைகள் நடமாடுகின்றன. எனினும் மூன்று யானைக்கூட்டங்களைச் சேர்ந்த சுமார் 45 யானைகள் 8-10 மாதங்கள் இப்பகுதியில் நடமாடுகின்றன. இங்குள்ள காலங்களில் யானைகள் பகலில் பெரும்பாலும் மழைக்காட்டு துண்டுச்சோலைகளிலும், ஆற்றோரக்காடுகளிலும்தான் தென்பட்டன. காபி, சூடக்காடு (யூகலிப்டஸ்), தேயிலை தோட்டப் பகுதிகளை அவை அதிகம் விரும்புவதில்லை. எனினும் இரவு நேரங்களில் ஒரு துண்டுச்சோலையிலிருந்து மற்றொன்றிற்கு கடக்கும்போது மட்டுமே தோட்டப்பகுதிகளின் வழியாக சென்றன.
இந்த ஆராய்ச்சி முடிவின் படி நடு ஆறு – சோலையார் ஆற்றோரக் காடுகள் யானைகள் நடமாட்டத்திற்கான முக்கியமான பகுதிகள் என்பது அறியப்பட்டது. ஆற்றங்கரையின் இருபுறமும் சுமார் 20 மீ அகலத்தில் இயற்கையாக வளரும் இம்மண்ணுக்குச் சொந்தமான மரங்களையும், தாவரங்களையும் நட்டு வளர்த்தால் யானைகளின் நடமாட்டத்திற்கு ஏதுவாகவும், அவை மனிதர்களை எதிர்கொள்வதை வெகுவாகக் குறைக்கவும் முடியும். ரேஷன் கடைகளிலும், பள்ளிகளில் உள்ள மதிய உணவுக்கூடங்களிலும் வைக்கப்பட்டிருக்கும், அரிசி, பருப்பு, சர்க்கரை முதலிய உணவுப்பொருட்களை யானைகள் உட்கொள்ள வருவதால் அவற்றை எடுக்கும் வேளையில் இந்தக் கட்டிடங்களின் கதவு, சுவர்கள் சேதமடைகின்றன. இந்த உணவு சேமிப்பு கட்டிடங்கள் குடியிருப்புப் பகுதிகளிலோ அல்லது அருகாமையிலோ இருப்பதால் அங்கும் சில வீடுகளிலும் சேதங்கள் ஏற்படுகின்றன. உணவுப்பொருட்களை சேமித்து வைக்கும் கட்டிடங்களை, குடியிருப்புப் பகுதியிலிருந்து தூரமாக அமைப்பது, உணவுப் பொருட்களை ஓரிடத்தில் வைத்திடாமல் நடமாடும் விநியோகமாக மாற்றுவதால் இவற்றிற்கு யானைகளால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க முடியும்.
மனித-யானை எதிர்கொள்ளல் வால்பாறையின் பெரும்பாலான பகுதிகளில் இருந்தாலும், அதிகமாக இருப்பது துண்டுச்சோலைகள் இல்லாத அல்லது மிகக் குறைவான வனப்பகுதிகளைக் கொண்ட இடங்களில் தான். மனிதர்களின் உடமைகளுக்கு சேதம் ஏற்படுவது பெரும்பாலும் அக்டோபர் மாதத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரைதான்.
மனித-யானை எதிர்கொள்ளலின் மற்றொரு விளைவு மனித உயிரிழப்பு. இதை மட்டுப்படுத்த, முற்றிலுமாக தவிர்க்க, பல்வேறு அரசுத் துறைகள் இணைந்து பொதுமக்களை கலந்தாலோசித்து திட்டங்களை வகுக்க வேண்டும். இதுவே, எடுக்கப்படும் நடவடிக்கைகள் நீண்ட காலம் நீடித்து நிலைக்கவும், யானைகளின் நடமாட்டத்தை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ளவும், சமரச மனப்பான்மையை வளர்க்கவும் உதவும். மனித அடர்த்தி மிகுந்த குடியிருப்புகள் இருக்கும் பகுதிகளில், ஆண்டில் 10 மாதங்கள் யானைகள் நடமாட்டம் இருப்பின், பல வேளைகளில் யானையும் மனிதனும் எதிர்பாரா விதமாக ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள நேரிடும். இதனால் மனித உயிரிழிப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். 1994 முதல் 2012 வரை 39 பேர் யானையால் எதிர்பாராவிதமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதில் 72 விழுக்காடு உயிரிழப்பு ஏற்பட்டது தேயிலை எஸ்டேட்டிலும் சாலையிலுமே. யானைகள் இருப்பதை அறியாமலேயே அவை நடமாடும் பகுதிகளுக்கு சென்றதுதான் இதற்கான முக்கிய காரணம். அதிக உயிரிழப்பு ஏற்பட்டது டிசம்பர், பிப்ரவரி மாதங்களில் தான். ஆகவே, தமிழக வனத்துறையினரின் ஆதரவுடன், வால்பாறைப் பகுதியில் யானைகள் இருப்பிடத்தை அறிந்து அந்தச் செய்தியை பொதுமக்களிடம் தெரிவிக்கும் பணியை மேற்கொள்ளும் குழுவை ஏற்படுத்தினோம்.
யானைகள் இருக்குமிடத்தைப் பற்றிய செய்தியை முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்க மூன்று முறைகள் பின்பற்றப்பட்டது.
1. யானைகள் நடமாட்டம், இருக்குமிடம் முதலிய தகவல்கள் மாலை வேளைகளில் கேபிள் டி.வி. மூலம் ஒளிபரப்பப்பட்டது.
2. யானைகள் இருக்குமிடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் (2 கி.மீ.சுற்றளவில்) உள்ள பொதுமக்களுக்கு மாலை வேளைகளில் அவர்களுடைய கைபேசியில் யானைகள் இருக்குமிடம் பற்றிய குறுஞ்செய்தியை (SMS) ஆங்கிலத்திலும் தமிழிலும் அனுப்பப்பட்டது.
3. மின்னும் சிகப்பு LED விளக்குகள் வெகுதூரத்திலிருந்து பார்த்து அறியக்கூடிய உயரமான பகுதியில் பொறுத்தப்பட்டது. யானைகள் அச்சுற்றுப்புறங்களில் (2 கி.மீ. தூரத்துக்குள்ளாக) இருந்தால் இவ்விளக்கு எரிய வைக்கப்படும். இந்த விளக்கினை ஒரு பிரத்தியோக கைபேசியினால் எரிய வைக்கவும், அணைக்கவும் முடியும். இதை அப்பகுதி மக்களே செயல்படுத்தவும் ஊக்கமளிக்கப்பட்டது. நாளடைவில் பொதுமக்களே இவ்விளக்கை செயல்படுத்தவும் ஆரம்பித்தனர்.
வால்பாறைப்பகுதியில்மனித-யானைஎதிர்கொள்ளலால்ஏற்படும்விளைவுகளைசமாளிக்க, சரியான (அறிவியல்பூர்வமான) முறையில்கையாள, பாதிப்பினைதணிக்கஎடுக்கப்படும்நடவடிக்கைகள், நீண்டகாலம்நீடித்துநிலைக்கபொதுமக்களைஈடுபடுத்துதல்எந்தஅளவிற்குஅவசியம்என்பதைஇந்த ஆராய்ச்சியின்வாயிலாகஅறியமுடிகிறது.
சாலைபலி (Roadkill)
காடுகளைப் பிளந்து செல்லும் சாலைகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றிய உங்களுடைய ஆராய்ச்சி பற்றி. இந்தச் சாலைகள் உயிரினங்களிடையே ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன?
ஒரு தீண்டப்படாத, தொன்னலம் வாய்ந்த வனப்பகுதியை வெகு விரைவில் சீர்குலைக்க வேண்டுமெனில், செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் – அதன் குறுக்கே ஒரு சாலையை அமைத்தால் போதும். கொஞ்சம் கொஞ்சமாக அவ்வனப்பகுதி அதன் இயற்கைக் தன்மையை இழந்துவிடும். சாலைகள் மட்டுமல்ல காட்டில் தீ பரவாமல் இருக்க நீளவாக்கில் மரங்களையும் தாவரங்களையும் அகற்றி ஏற்படுத்தும் தீத்தடுப்பு வெளிகள் (Fire lines), மின் கம்பிகளின் கீழேயும், கால்வாய்கள், இரயில் பாதைகள், பிரம்மாண்டமான தண்ணீர் குழாய்கள் முதலியவை உயிரினங்களின் வாழிடங்களை இரண்டு துண்டாக்கும் இயல்புடையவை. இவற்றை ஆங்கிலத்தில் Linear intrusion என்பர்.
இந்த நீளவாக்கில் அமைந்த கட்டமைப்புகள் காட்டுயிர்களின் வழித்தடங்களில் (animal corridors) குறுக்கீடுகளாகவும் சில உயிரினங்களுக்கு நீளவாக்கில் அமைந்த தடைகளாகவும் (barrier) அமைகிறது. காட்டின் குறுக்கே செல்லும் சாலைகளிலும், இரயில் பாதைகளிலும் அடிபட்டு சின்னஞ் சிறிய பூச்சி, தவளையிலிருந்து உருவில் பெரிய யானை, புலி என பல உயிரினங்கள் அடிபட்டு பரிதாபமாக உயிரிழக்கின்றன. அது மட்டுமல்ல, சாலையோரங்களில் களைகள் மண்டி காட்டுத்தீ பரவுவதற்கும், இக்களைச்செடிகள் அங்குள்ள மண்ணுக்குச் சொந்தமான தாவரங்களை வளரவிடாமலும் தடுக்கின்றன.
ஆனைமலை புலிகள் காப்பகம், வால்பாறை பகுதியில் வாகனப் போக்குவரத்தினால், உயிரினங்களுக்கும், அவற்றின் வாழிடத்திற்கும் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய ஆராய்ச்சியை 2011 தொடங்கியுள்ளோம்.
இது மனஅழுத்தத்தை (ஸ்டிரெஸ்) தரும் அனுபவமாக இருந்தது என்று ஒரு முறை குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அது பற்றி கொஞ்சம் விளக்க முடியுமா?
தினமும் காலை வேளையில் சாலையில் நடந்து சென்று இப்படி உயிரிழந்த காட்டுயிர்களை எண்ணுவதும், பட்டியலிடுவதும் மகிழ்ச்சியான அனுபவத்தை கொடுப்பதில்லை. எனினும் மென்மேலும் இவ்விதத்தில் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் இது போன்ற வேலைகளில் ஈடுபடுவது ஒரு காட்டுயிர் ஆராய்ச்சியாளனின் கடமை.
குறிப்பிட்ட ஒரு கால இடைவெளியில் இந்தச் சாலைகளில் அடிபட்டு இறக்கும் உயிரினங்கள் தொடர்பாக ஏதாவது கணக்கெடுப்பு இருக்கிறதா?
இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் இவ்வகையான ஆராய்ச்சி அதிகம் இல்லை. அப்படியே இருந்தாலும் ஆராய்ச்சி முடிந்தவுடன் பரிந்துரைகளைக் கொண்ட கட்டுரையையும், ரிப்போட்டையும் எழுதி பதிப்பித்த பின் அந்த வேலை முடிந்து விடும். அது மட்டுமே போதாது. ஆராய்ச்சியின் முடிவில் கொடுக்கப்பட்ட பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டனவா? அப்படியே செயல் படுத்தப்பட்டாலும் அவை எதிர்பார்த்த விளைவுகளை கொடுத்ததா? எந்த அளவிற்கு அவை பயனுள்ளதாக இருக்கிறது என்பதை எல்லாம் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். எங்களது ஆராய்ச்சி இன்னும் முழுமையாக முடிவு பெறவில்லை. எனினும் இது வரை செய்த களப்பணியின் தரவுகள் சில – கோடைகாலத்தை விட மழைக்காலங்களில் சாலையில் பல உயிரினங்கள் அதிலும் குறிப்பாக தவளைகளும், பாம்புகளும் அரைபட்டுச் சாகின்றன. பாலூட்டிகளைப் பொறுத்தவரை கடம்பை மான், கேளையாடு, சிங்கவால் குரங்கு, மலபார் மலையணில், மரநாய், புனுகுப் பூனை, முள்ளம்பன்றி, சருகு மான் முதலியன சாலையில் அரைபட்டு உயிரிழந்துள்ளன.
இதைத் தடுப்பதற்குச் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன?
ஒரு வனப்பகுதிகளின் வழியே செல்லும் சாலைகளில் பயணிக்கும் போது நம்மை அறியாமலேயே நாம் செல்லும் வண்டிச் சக்கரத்தால் அரைத்து, அடித்து பல உயிர்களை சாகடிக்கின்றோம். காடுகளின் வழியாகச் செல்லும் சாலைகள் மனிதர்களுக்கு மட்டுமே இல்லை அங்கு வாழும் உயிரினங்களுக்கும் சேர்த்து தான் என்பது அவ்வழியே பயணிக்கும் பொதுமக்களும், சுற்றுலாவினரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வகையான உயிரிழப்பை தடுக்க பொதுமக்களின், சுற்றுலாவினரின் உதவியும், ஒத்துழைப்பும் பெருமளவில் தேவைப்படுகிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்
1. காட்டுப்பகுதியில் வேகத்தைக் கட்டுப்படுத்தி மெதுவாகச் செல்வது,
2. வழியில் தென்படும் குரங்குகளுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் தின்பண்டங்களை கொடுக்காமல் இருப்பது,
3. உணவுப் பண்டங்களை, பிளாஸ்டிக் குப்பைகளை சாலையோரத்தில் தூக்கி எறியாமல் இருப்பது.
காடுகளின் வழியாகச் செல்லும் சாலைகளை அளவிற்கு அதிகமாக அகலப்படுத்தக் கூடாது. சாலையின் இருபுறமும் மரங்கள் இருத்தல் குரங்கு, அணில் முதலிய மரவாழ் (arboreal) உயிரினங்களின் இடம்பெயர்வுக்கு இன்றியமையாதது. சாலைகளில் உயிரினங்களின் நடமாட்டத்திற்கு ஏற்ப தகுந்த இடைவெளியில் வேகத்தடைகள் இருப்பதும் அவசியம். இவ்வகையான இடங்களில் நெடுஞ்சாலைத் துறையினரும், வனத்துறையினரும், ஆராய்ச்சியாளர்களும் சேர்ந்து கருத்துகளைப் பரிமாரி செயல்படுதல் அவசியம்.
பசுமை இலக்கியம்
தமிழில் பசுமை எழுத்தின் இன்றைய நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இது என்னைவிட இத்துறையில் மூத்தவர்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி. எனினும்நான் பார்த்த வரையில் இயற்கை வரலாறு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எழுதப்படும் கட்டுரைகள் தான் அதிகம். இவையும் அவசியம் தான். அதே வேளையில் பல வித உயிரினங்களின் கையேடுகள் (Field guides), இத்துறை சார்ந்த தரமான நூல்கள், மொழிபெயர்ப்புகள் இன்னும் வரவேண்டும். வேங்கைப்புலிகளைப் பற்றிய கானுறை வேங்கை (கே. உல்லாஸ் கரந்த் – தமிழில் தியடோர் பாஸ்கரன்), பறவையியலைப் பற்றிய நூலான “அதோ அந்த பறவை போல (எழுதியவர் ச. முகமது அலி) போன்ற சில நூல்களைத் தவிர இத்துறை சார்ந்த நூல்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இதோடு களப்பணி முறைகள், விளக்கக் கையேடுகள், ஆராய்ச்சி அறிக்கைகள், காட்டுயிர், சுற்றுச்சூழல் சட்டங்கள் யாவும் தமிழில் எழுதப்பட வேண்டும். இவற்றையெல்லாம் எழுதவும், எழுதுவதை ஊக்குவிக்கவும் துறைசார் சொற்களை உருவாக்கவும், அவற்றை புழக்கத்திலும் கொண்டு வரவேண்டும். பாலுட்டிகள், பறவைகள், சில பாம்புகள் தவிர பல உயிரினங்களுக்கு தமிழில் பெயரே கிடையாது. அவற்றிற்கெல்லாம் பெயரிட வேண்டும்.
துறைசார்ந்த நூல்களும் (technical, reference books) கையேடுகளும், கட்டுரைகளும் மட்டுமே பசுமை இலக்கியம் இல்லை. சுற்றுச்சூழல், பல்லுயிர் பாதுகாப்பு, புறவுலகு சார்ந்த தத்துவார்த்தமான சொல்லாடல்களும், புதினங்களும், கவிதைகளும், குழந்தைகளுக்கான கதைகளும் என மென்மேலும் பதிப்புகள் வெளிவரவேண்டும். இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
தமிழ் ஊடகச் சூழல் இயற்கை பாதுகாப்புக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கிறதா. அந்த வகையில் உங்களுக்கு நம்பிக்கை தரும் முயற்சிகள் நடக்கின்றனவா?
சுற்றுச்சூழல், காட்டுயிர் பாதுகாப்பு முதலியவை பெரும்பாலான மாத, வார இதழ்களிலும், தினசரிகளிலும் கிட்டத்தட்ட பக்கத்தை நிரப்பும் ஒரு அம்சமாகவே இருக்கும். சில பத்திரிக்கைகளில் இவ்வகையான பகுதிகள் இருக்கவே இருக்காது. சினிமாவும், அரசியலும் தான் மேலோங்கி இருக்கும். ஆன்மீகத்திற்கு, சிறுவர்களுக்கு, சினிமாவிற்கு, சமையலுக்கு என தினமும் ஒரு இணைப்பை தினசரிகள் வழங்கும் போது சுற்றுச்சூழலுக்கு, இயற்கை வரலாறு சங்கதிகளுக்கு என ஏன் வரக்கூடாது? காட்டுயிர், புதிய கல்வி, துளிர், பூவுலகு, கலைக்கதிர் முதலிய பத்திரிக்கைகளைத் தவிர. இது போன்ற பத்திரிக்கைகள் இருப்பது கூட எத்தனை பேருக்கு தெரியும்?
அதுபோல சில பத்திரிக்கைகளும், நாளிதழ்களும் காட்டுயிர்களை பயங்கரமானவை, கொடியவை என்பது போல சித்தரிப்பதையும் அடிக்கடி காணலாம். காட்டுயிர் இதழின் ஆசிரியர் ச. முகமது அலி எழுதிய “நெருப்பு குழியில் குருவி” நூலை எத்தனை பத்திரிக்கையாளர்கள் படித்திருப்பார்கள்? அண்மையில் வால்பாறையில் ஒரு புலி குடியிருப்புப் பகுதியில் புகுந்து விட்டது. அங்கிருந்த மாடு ஒன்று புலியை முட்டி விட்டது. மறுநாள் அப்புலி உயிரிழந்தது. உடனே தினசரிகள் என்ன எழுதின தெரியுமா? மாடு முட்டி புலி உயிரிழந்தது எனவும், அப்புலி 10 மாடுகளை அடித்து சாப்பிட்டுவிட்டது எனவும். இறந்த அப்புலியின் உடலை கிழித்து பரிசோதனை செய்த போது தான் தெரிந்தது அதன் இருதயத்தில் முள்ளம்பன்றியின் உடலில் உள்ள கூரிய முள் குத்தியிருந்தது. அதன் வயிற்றில் கூட எதுவுமே இல்லை. படிப்பவரை ஈர்க்கும் வண்ணம் எழுதுவதற்காக அந்த கம்பீரமான வேங்கையை, அதுவும் இறந்து போன வேங்கையை அவமானப்படுத்துதல், அவமதித்தல் சரியா? இப்போதெல்லாம் மிருகம், விலங்கு எனும் வார்த்தைகளையே நான் அதிகம் உபயோகிக்காமல் எனது கட்டுரைகளில் உயிரினம் என்றே குறிப்பிடுகிறேன். இவ்வார்த்தைகள் கிட்டத்தட்ட கெட்ட மனிதர்களைக் குறிக்கும் கெட்ட வார்த்தைகள் ஆகிவிட்டன.
எனினும் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் எனும் எண்ணமுடையவர்கள், ஊடகங்களை மட்டுமே குறை கூறாமல், முயற்சி எடுத்து மீண்டும் மீண்டும் அணுகி அவர்களுக்கு விளக்கமளித்தும், பத்திரிக்கையாளர்களுக்கு பட்டறைகள், கருத்தரங்குகள் நடத்துவதன் மூலம் இந்நிலையை மாற்ற முடியும் என்றே தோன்றுகிறது. இது போன்ற கருத்தரங்குகளை நாங்கள் இப்பகுதியில் நடத்தியும், பங்கு கொண்டும் இருக்கிறோம். ஒரு சில ரிப்போட்டர்களிடம் மாற்றத்தைக் காணவும் முடிகிறது.
புத்தகம், இதழ்களில் எழுதுவதன் மூலம் இயற்கை பாதுகாப்பு பரவலாகும் என்று நம்புகிறீர்களா?
அதுவும் உதவும். சுற்றுச்சூழல் மாசு இப்பூமிப்பந்தினை விழுங்கிக் கொண்டும், இயற்கையான வாழிடங்கள் அருகியும் வரும் இச்சூழலில் இவற்றைப் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஏற்படுத்த புறவுலகின் பால் கரிசனம் கொண்டுள்ளவர்கள் எல்லா வகையான ஊடகச் சூழலையும் பயன்படுத்திக் கொள்வது இன்றியமையாதது.
——————————————————————————
இக்கட்டுரையின் PDF ஐ இங்கே பெறலாம்.
பல்லுயிர் பாதுகாப்பிற்கு நாம் என்ன செய்யலாம்?
இப்பூமிப்பந்தினை சீரழிவிலிருந்து பாதுகாக்க நாம் என்ன செய்யலாம் என யோசிக்கும் முன் ஏன் பாதுகாக்க வேண்டும் என்ற கேள்வியை முதலில் கேட்க வேண்டும்.
இதைப் நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் வேளையில் பல்லாயிரக்கணக்கான சதுர அடி வனப்பகுதிகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதிலுள்ள எண்ணிலடங்கா உயிரினங்கள் தங்கள் வாழிடங்களை இழந்து தவிக்கின்றன, பல உயிரினங்கள் இந்த உலகிலிருந்து முற்றிலுமாக அழிந்து போகின்றன. இவற்றையெல்லாம் பாதுகாக்கத் தான் வேண்டுமா? இதனால் என்ன பயன்? நான் இருப்பது நகரத்தில், காட்டைக் காப்பாற்றுவதால் எனக்கு என்ன கிடைக்கும்?
மிக எளிதான அனைவரும் அறிந்த பதில்கள் இதுதான். காடு செழித்தால் நாடு செழிக்கும், மரமிருந்தால் தான் மழை பொழியும். மற்ற எல்லாக் கேள்விகளுக்கும் முழுமையாக விடையளிப்பதோ, இதையெல்லாம் செய்யலாம் என்பதை பட்டியலிடுவதோ இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. ஆனால் அந்த விடையைத் தேடிக் கண்டுபிடிக்கும் ஆர்வத்தை ஊட்டுவதும், வழியையும் காட்டுவதும் தான்.
முதலில் நாம் அனைவரும் செய்யக்கூடியது இயற்கைப் பேணல், காட்டுயிர் பாதுகாப்பு சார்ந்த புத்தகங்களை படிப்பது. தமிழில் இவற்றைப் பற்றிய புத்தகங்கள் குறைவு, எனினும் சு. தியடோர் பாஸ்கரன் (உயிர்மை மாத இதழில் எழுதி வருபவர்), ச. முகமது அலி (காட்டுயிர் எனும் இதழின் ஆசிரியர்) ஆதி. வள்ளியப்பன் (துளிர், பூவுலகு முதலிய அறிவியல் இதழ்களில் எழுதி வருபவர்) போன்ற சில சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை வாங்கிப் படிக்கலாம். பல்லுயிர்ப்பாதுகாப்பின் (Biodiversity Conservation) அவசியத்தைப் பற்றி, ”இன்னும் பிறக்காத தலைமுறைக்காக” எனும் புத்தகத்தில் (உயிர்மை பதிப்பகம்) சு. தியடோர் பாஸ்கரன் அவர்களின் வார்த்தைகளை இங்கே மேற்கோள் காட்டுகிறேன்:
“…சில தீரா நோய்களுக்கு மருந்து, உணவுப் பற்றாக்குறைக்கு நிவாரணம் என பல தீர்வுகள் இப்பல்லுயிரியத்தில் மறைந்திருக்கலாம். சகல உயிர்களுக்கும் ஆதாரமான சூழலியல் செயலாக்கங்களுக்கு இந்த உயிரின வளம்தான் அடிப்படை என்பதையும், மக்களின் நல்வாழ்விற்குப் பல்லுயிரியமே மூல சுருதி என்பதையும் நம் முன்னோர்கள் உணர்ந்திருந்தார்கள் என்பதற்குப் பல ஆதாரங்கள் உண்டு. பல்லுயிர் ஓம்புதல் (322) என்று வள்ளுவர் குறிப்பிடுவதும் இந்த அக்கறையையே. இந்த உயிர்வளம் நமது வம்சாவளிச் சொத்து. இழந்துபோனால் மீட்க முடியாத ஐசுவரியம்….”
இந்த வார்த்தைகளே போதுமானவை, மேலும் தெரிந்து கொள்ள புறவுலகு சார்ந்த கட்டுரைகளையும், புத்தகங்களையும் படிக்கலாம். படித்தால் மட்டும் போதாது அதன் வழி நடத்தல் வேண்டும். இயற்கையின் பால் நாட்டம் ஏற்பட்டு அவற்றைக் காணவும், மகிழவும் செய்தால் மட்டுமே அவற்றைக் காப்பாற்ற முடியாது. அது ஒரு அக்கறையாக வளர வேண்டும்.
நான் நகரத்தில் இருக்கிறேன், நான் வறுமையில் வாடும் ஒரு இந்தியக் குடிமகன், என்னால் பல்லுயிர் பாதுகாப்பிற்கு என்ன செய்து விட முடியும் என்பகிறீர்களா? நகரத்திலுள்ளவர்கள் மட்டுமல்ல நாம் அனைவரும் செய்யக்கூடியவற்றை கீழே பட்டியலிட்டிருக்கிறேன். இது எனதல்ல. Andrew Balmford எனும் சூழியல் விஞ்ஞானி சமீபத்தில் எழுதிய Wild Hope எனும் நூலில் சொன்னது. நம் இந்தியச் சூழலுக்கேற்ப சிலவற்றை இணைத்துள்ளேன். அவர் கூறுவதாவது:
காட்டுயிர், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பாடுபடுவோருக்கு உதவுதல்:
நம்மால் நேரிடையாக இவற்றில் பங்குபெறமுடியாவிடின் இந்தக்காரியங்களைச் செய்வோருக்கு அல்லது அவர்களது அமைப்பு, சங்கம், நிறுவனங்களுக்கு பண உதவி செய்யலாம். எனினும், இந்த அமைப்புகள் உண்மையிலேயே இயங்குகின்றனவா? இதுவரை அவர்கள் சாதித்தது என்ன? செய்து கொண்டிருப்பது என்ன? எப்படிப்பட்ட நிபுணர்களை, அனுபவசாலிகளைக் கொண்டுள்ளன? போன்ற விவரங்களை பகுத்தறிந்து உதவுதல் நலம். அரசு சாரா நிறுவனங்கள் உள்நாட்டிலும், பண்ணாட்டளவிலும் பல உள்ளன. Greenpeace, World Wildlife Fund for Nature (WWF) போன்ற பண்ணாட்டு அரசு சாரா அமைப்புகளுக்கு இந்தியாவிலும் கிளைகள் உண்டு. இந்தியாவில் Bombay Natural History Society, Keystone Foundation தமிழகத்தில் கோவையிலுள்ள ஓசை, சிறுதுளி அமைப்புகள், அருளகம், பூவுலகின் நண்பர்கள், Madras Naturalist Society முதலியவற்றைச் சொல்லலாம்.
பங்களித்தல்:
வெறும் பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு (நன்கொடையோ, அன்பளிப்போ அல்லது அந்த அமைப்புகள் விற்கும் பொருட்களை வாங்கியோ) நான் பல்லுயிர்ப் பாதுகாப்பிற்குத் துணைபோகிறேன் என்று சொல்லாமல் அந்த அமைப்புகளின் வேலைகளில் பங்கு கொண்டு தொண்டூழியம் (Volunteering) செய்யலாம்.
கருத்துகளை அனைவருக்கும் தெரிவியுங்கள், போராடுங்கள்:
கடைக்குச் செல்லும் போது கூடவே பையை எடுத்துச் செல்வது, பிளாஸ்டிக் பைகளை வாங்காமல் இருப்பது, தேவையில்லாத நேரத்தில் மின் சாதனங்களை அனைத்தல், கூடியவரை நமது சொந்த பெட்ரோல், டீசல் வாகனங்களில் செல்லாமல் பேருந்து, இரயிலில் செல்லுதல், தண்ணீரை சிக்கனமாக செலவு செய்தல், வனப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் போது அங்கு குப்பைகளை போடாமல் இருத்தல் போன்ற, நாம் செய்யும் சிறு சிறு காரியங்கள் நிச்சயமாக உதவும். நாம் ஒருவர் இவற்றைப் பின்பற்றினால் போதாது. இயற்கைச் செல்வங்களை பாதுகாக்க நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லலாம். இயற்கைக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் கலந்து கொள்ளலாம், அவற்றிற்காக குரலெழுப்பலாம்.
பார்த்து வாங்க வேண்டும்:
நாம் அன்றாடம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஏதே ஒரு வகையில் இயற்கைச் சீரழிவிற்கு நம்மை அறியாமல் துணைபோகிறோம். காலையில் எழுந்து காபியோ, டீயோ குடிக்கிறோம். அது பயிரிடப்படுவது வனங்களை அழித்தே. இதனால் பல உயிரினங்கள் அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளன. சமைக்கப் பயன்படும் பாம் ஆயில் (Palm Oil) பயிரிடப்படுவது பல சதுர கிமீ பரப்புள்ள மழைக்காடுகளை அழித்தே. இதனால் இந்தோனிஷியாவில் உள்ள ஒராங்உடான் (Orangutan) எனும் அரிய வகை குரங்கினத்தின் வாழிடம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு வருகிறது. கோல்டன் (Coltan) நாம் பேசும் மொபைலில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான உலோகத் தாது. ஆப்பிரிக்காவில் இதைத் தோண்டி எடுக்க காடுகளை அழிப்பதால் அங்கு வாழும் கொரில்லாக்கள் (Gorilla) அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளன.
அதற்காக இவற்றை பயன்படுத்தாமல் உயிர்வாழ முடியுமா? மொபைல் இல்லாத வாழ்வை நினைத்துத்தான் பார்க்க முடியுமா? முடியாது ஆனால் நல்ல, தரமான, கலப்படமில்லாத பொருட்களை வாங்குவது போல இயற்கைக்குப் புறம்பாக, இயற்கை வளத்தைச் சீரழித்து தயாரிக்கப்பட்ட பொருட்களை அடையாளம் கண்டு அவற்றை வாங்காமல் தவிர்த்தல் வேண்டும். வளங்குன்றா விவசாயத்தின் மூலமும், இயற்கை விவசாயமுறையில் பயிர் செய்யப்பட்டு விளைவிக்கப்பட்ட பொருட்களை வாங்கலாம். நுகர்வோர் பொறுப்புடன் பொருட்களை பார்த்து வாங்க ஆரம்பித்தால் அதைத் தயாரிப்போரும் பொறுப்புள்ளவர்களாக மாறுவார்கள். மாறியாக வேண்டும்.
சிறந்த உதாரணம், கிட் கேட் (Kitkat) சாக்கலேட். இதன் தயாரிப்பாளார்களான நெஸ்லே கிட்கேட் மிட்டாய் தாயாரிப்பதற்காக பாம் ஆயில் வாங்கியது ஒராங்உடான் குரங்கினத்தின் வாழிடமான மழைக்காடுகளை அழித்து விவசாயம் செய்யும் ஒரு நிறுவனத்தாரிடமிருந்து. ஆகவே ஒவ்வொரு கிட்கேட் சாப்பிடும் போதும் நாம் அந்த அரிய குரங்கினத்தை சாகடிக்கிறோம் எனும் பொருள்படும்படியான ஒரு குறும்படத்தை கிரீன்பீஸ் (Greenpeace) இயக்கத்தார் தயாரித்து வெளியிட்டனர். அதை இங்கு காணலாம்
இதைப்பார்த்த பலர் கிட்கேட் மிட்டாயை வாங்குவதை தவிர்த்தனர். இதனால் விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டது. அதன் பின் தாம் செய்வதை அறிந்து நெஸ்லே அந்த நிறுவனத்திடமிருந்து பாம் ஆயில் வாங்குவதை உடனடியாக நிறுத்திவிட்டனர். ஆகவே மக்கள் சக்திக்கு இணையானது எதுவுமில்லை.
உடும்புக்கறி, சிட்டுக்குருவி, கருங்குரங்கு லேகியங்கள், ஆமை முட்டை போன்றவற்றை சாப்பிட்டால் ஆண்மைத்தன்மை அதிகரிக்கும் என்பது உண்மையல்ல. எதையாவது எளிதில் ஏமாற்றி விற்க வேண்டும் எனில் இப்படிச் சென்னால் மக்கள் எளிதில் நம்பிவிடுவார்கள். இதற்கெல்லாம் அறிவியல் பூர்வமான சான்றுகள் இல்லை. அதுபோக காட்டுயிர்களை வேட்டையாடுவதும், அவற்றை வாங்கி ஊக்குவிப்பதும் இந்திய காட்டுயிர்ச் சட்டத்தின் படி குற்றமாகும்.
Wild Hopeல் சொல்லப்பட்ட மற்றுமொரு முக்கியமான கருத்து – ஒரு போதும் தளர்ந்து விடாதீர்கள். பல்லுயிர் பாதுகாப்பிற்கு பல வகையில் இடர்கள் வந்து கொண்டே தானிருக்கும். அவற்றைக் கண்டு துவண்டுவடலாகாது. போராடிக்கொண்டே இருக்க வேண்டும்.
எத்தனை புத்தகங்கள் படித்தாலும், பல பேர் போதித்தாலும் நாமாக உணராவிட்டால் நாம் எதையும் செய்ய முற்படுவதில்லை. எதை நாம் விரும்புகிறோமோ, நேசிக்கிறோமோ அதைத்தான் பாதுகாக்க முற்படுவோம். இந்தியா பல்லுயிரியம் மிகுந்த நாடு. நம்மிடம் இருக்கும் இயற்கைச் செல்வங்களில் பல உலகில் வேறெங்கும் கிடையாது. இதை காப்பாற்ற வேண்டியது நம் கடமை.
******
காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 16. புதிய தலைமுறை 1 நவம்பர் 2012