Posts Tagged ‘tourism’
ஓர் இன்பச் சுற்றுலாவும், அதற்குப் பிறகும்
பைக்கில் சில காலேஜில் படிக்கும் மாணவர்கள், காரில் (துணைவியாரை வீட்டில் விட்டு விட்டு வந்த) நண்பர்கள்/சக ஊழியர்கள் கூட்டம், பேருந்தில் ஓர் ஊரிலிருந்து பல குடும்பத்தினர் – இவர்கள் யாவரும் வார விடுமுறையை இனிதே கழிக்க, உல்லாசமாக இருக்க, நகரத்தின் நெருக்கத்திலிந்து தப்பிக்க, தூய காற்றினை சுவாசிக்க, புதிய இடத்தைப் பார்த்து ரசிக்க மலை மேல் இருக்கும் ஒர் அழகிய இடத்திற்கு சுற்றுலா சென்றனர். அந்த இடத்திற்குப் போகும் வழியெல்லாம் வனமும் சில இடங்களில் நீர் நிலைகளும் இருந்தது.
பைக்கில் வந்த இளைஞர்களில் சிலரே தலைக்கவசம் அணிந்திருந்தனர். வளைந்து நெளிந்து செல்லும் மலைப் பாதையில் வண்டியில் வேகமாகப் போவது த்ரில்லிங்கான அனுபவமாக இருந்தது அவர்களுக்கு. பாதி தூரம் போன பின்பு ஒரு வ்யூ பாயிண்ட்டில் வண்டியை நிறுத்தி கடந்து வந்த பாதையையும், விசாலமாகப் பரந்து விரிந்து கிடந்த நிலப்பரப்பையும் பார்த்து லயித்திருந்தனர். அடிவாரத்திலுள்ள கானகத்தின் மரங்களின் விதானம் (மர உச்சிப்பகுதி) பல வித பச்சை நிறத்தில் இருந்தது. ஒரு பக்கம் அடர்ந்த காடு, புதர்க்காடாகி பின்பு சிறு சிறு கிராமங்களும், தென்னந்தோப்புகளும், வயல் வெளியும் பரந்திருந்தது. மறுபக்கம் கானகத்தை அடுத்து அகன்ற நீர்த்தேக்கமும் அணையும் இருந்தது. குளிர்காற்று சில்லென வீசியது. அவர்களில் சிலர் புகைத்தனர். சிலர் போட்டோ எடுத்துக்கொண்டனர். சிலர் பின்பக்கம் மாட்டியிருந்த பையிலிருந்து பீர் பாட்டில்களை எடுத்தனர். பல்லால் கடித்து மூடியை தூர வீசியெறிந்து “சியர்ஸ்” சொல்லி குடிக்க ஆரம்பித்தனர். சிப்ஸ் பாக்கெட்டை பிரித்து ஒவ்வொன்றாக எடுத்துச் சாப்பிட்டார்கள். நாட்டுக் குரங்குக் கூட்டமொன்று அவர்கள் அருகில் வர ஆரம்பித்தது. சிலர் அவற்றை போட்டோ எடுத்தனர். சிலர் தாராள மனதுடன் சிப்ஸ் பாக்கெட்டை பிரித்து அப்படியே கொடுத்தனர். சாலையோரத்தில் நின்று குடித்துக் கொண்டிருந்தாலும் வளைவில் சில வண்டிகளை நிறுத்தியிருந்ததால் அவ்வழியே மேலே ஏறி வந்த பேருந்து தொடர்ச்சியாக ஹார்ன் அடித்ததும் பைக்கை கொஞ்சம் தள்ளி வைத்தார்கள். பேருந்து ஓட்டுனர் இளைஞர்களைப் பார்த்து முறைத்துக் கொண்டே வண்டியை ஒடித்துத் திருப்பினார். பேருந்தில் சன்னலோரத்தில் அமர்ந்திருந்த ஒரு குமரிப்பெண்ணைப் பார்த்து கீழிருந்த இளைஞர் ஒருவர் விசிலடித்தார், அவரது நண்பர்களும் சேர்ந்து ஓ..வன சப்தமிட்டனர். அவர்கள் செய்வதைப் பார்த்து பேருந்தில் அமர்ந்திருந்த சிலர் முகம் சுழித்தனர். சிலருடைய முகத்தில் கோபம் தெரிந்தது. சிலர் புன்னகைத்தனர். குடித்து முடித்ததும் பாட்டில்களை சாலையோரமாக வீசி எறிந்தனர். கண்ணாடி உடைந்து சாலையோரமெங்கும் சிதறிது. பின்னர் பைக்கைக் கிளப்பிக்கொண்டு மேலே ஏற ஆரம்பித்தார்கள்.
…
காரில் வந்த அந்த “ஒரு நாள் பேச்சுலர்ஸ்” மலையின் மேலுள்ள வனப்பகுதி வழியே செல்லும் சாலையோரமாக வண்டியை நிறுத்தினர். குளிர்ந்த காற்று அவர்கள் முகத்தில் பட்டதை ரசித்துக்கொண்டே காரிலிருந்து மது பாட்டில்களையும், பிளாஸ்டிக் தம்ளர்களையும், வாங்கி வந்திருந்த சிக்கன், மட்டன் பார்சலையும் சாலையோர சிமெண்டு கட்டையின் மேல் பரப்பி வைத்தனர். ஒருவர் அனைவருக்கும் மதுவை சரிசமமாக பகிர்ந்தளித்துக் கொண்டிருந்தார். காருக்குள் இருந்த சவுண்ட் சிஸ்டத்திலிருந்து இசை கும்..கும்..என அலறிக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் பாட்டில் காலியானது. கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு அருகில் வனப்பகுதிக்குள் செல்லும் ஒரு ஒற்றையடிப் பாதை இருந்தது. ஓரிருவர் அந்த பாதையில் நடக்கத் தொடங்கினர். “இது வனப்பகுதி, வனவிலங்குகள் நடமாடுமிடம், இங்கு அத்துமீறி நுழைபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்ற வனத்துறையின் அறிவிப்புப் பலகையைப் பார்த்த பின்பும் அதை பொருட்படுத்தாமல் சிறிது தூரம் சென்று திரும்பி வந்தனர். பின்பு மலை மேலுள்ள ஊருக்கு வண்டியை மெல்ல கிளப்பிக்கொண்டு சென்றனர். அவர்கள் அங்கு இருந்ததற்கு அடையாளமாக காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் தம்ளர்கள், பிளாஸ்டிக் கேரி பேக்குகள், சிகரெட்டுத் துண்டுகள், சாப்பிடாமல் விட்டுப்போன உணவுப்பொருட்கள் எல்லாம் சிதறிக் கிடந்தன. இதை அவ்வழியே நடந்து சென்ற சில உள்ளூர்க்காரர்கள் பார்த்து முகம் சுழித்தனர்.
…
சுற்றுலாப் பேருந்து மெல்ல மெல்ல மலை மேல் ஏறிக்கொண்டிருந்தது. கொண்டை ஊசி வளைவுகளில் பெரிய வட்டமிட்டுத் திருப்புகையில் கியர் மாற்றும் போதும், பிரேக் போடும் போதும் பல வித ஒலிகளை அந்த பஸ் எழுப்பியது. இது வெளியில் இருப்பவர்களுக்குத் தான் தெளிவாகக் கேட்கும். பஸ்ஸின் உள்ளே பயணியர்களில் பலர் வெளியில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் திருட்டு டி.வி.டியில் ஏதோ ஒரு புதிய சினிமாவை பார்த்து லயித்துக் கொண்டிருந்தார்கள். சன்னலோரத்தில் அமர்ந்திருந்த சிலர் வெளியே தெரியும் மலைகளையும் அதன் மேல் தவழ்ந்து வரும் மேகங்களையும் பார்த்து ரசித்தனர், சிலர் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டே படம் பார்த்து, பாக்கெட் காலியானதும் பஸ்ஸிலிருந்தே தூக்கி வெளியே எறிந்தார்கள், ஓரிரு காலி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களையும் தான். முதன்முதலில் உயரமான மலைப்பகுதிகளுக்கு வருபவர்கள் சிலருக்கு தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. கொஞ்ச நேரத்தில் வாந்தியும் வந்தது. மேலேறும் போது வளைவுகளில் நிறுத்தமுடியாததால் ஜன்னல் கண்ணாடியை முன்னுக்குத் தள்ளி, தலையை வெளியே நீட்டி உவ்வே..என வாந்தி எடுத்தனர். பின்னால் உட்கார்ந்திருந்தவர்கள் எல்லாம் அவசர அவசரமாக ஜன்னல் கண்ணாடியையும், இரு விரல்களால் மூக்கையும் மூடினர்.
மலையின் மேல் சமமான நிலப்பகுதியில் இருந்த அந்த ஊரில் இருந்த ஒர் சிறிய ஹோட்டலின் அருகில் பஸ் நின்றது. ஆண்கள் முதலில் இறங்கினர். சிலர் சிகரெட்டு பற்ற வைத்தார்கள், சிலர் பஸ் வந்த வழியே பின்னோக்கி நடந்து ரோட்டோரத்தில் சிறுநீர் கழித்தனர். பெண்கள் அருகிலிருந்த ஒர் சரியாக பராமரிக்கப்படாத கழிப்பிடத்திற்குச் சென்றனர். ஓரிரு பெண்கள் தமது குழந்தைகளை ரோட்டோரமாகவே உட்கார வைத்து மலம் கழிக்கச் செய்து அங்கேயே கால் கழுவி விட்டனர். அதற்குள் பஸ்ஸில் இருந்து சாப்பாட்டுப் பாத்திரங்கள் ஒவ்வொன்றாக இறக்கப்பட்டன. பஸ் வந்து நின்றதும் ஆவலுடன் கடைக்குள் இருந்து வெளியில் தலையை நீட்டி வந்தவர்களை எண்ண ஆரம்பித்த சிறிய ஹோட்டல் கடைக்கார முதலாளி இதைப் பார்த்ததும் ஏமாற்றத்தில் முகம் சுழித்தார். பேப்பரின் மேல் பிளாஸ்டிக் இடப்பட்ட தட்டுகளும், பிளாஸ்டிக் தம்ளர்களும் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டது. சாப்பிட ஆரம்பித்ததும் நாட்டுக்குரங்குகள் அவர்களைச் சூழ்ந்து கொண்டன. ஒருவர் சாப்பிடுவதை விட்டுவிட்டு அவற்றை விரட்டிவிட்டுக்கொண்டிருந்தார். சாப்பாடு முடிந்ததும், மிச்சமீதி உணவையும், பிளாஸ்டிக் தட்டையும், தம்ளர்களையும் அருகில் நிரம்பி வழிந்து கொண்டிருந்த குப்பைத்தொட்டியின் அருகில் வீசி எறிந்தனர். நாட்டுக் குரங்குகளும், காட்டுப் பன்றிகளும் வந்து வீசப்பட்ட உணவினை சாப்பிட ஆரம்பித்தன.
…
மலை மேலேறி வந்தவர்கள் அவ்வூரில் இருந்த பூங்காவிற்குச் சென்றனர். அருகில் இருந்த செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட ஏரியில் படகு சவாரி செய்தனர். அவ்வூரில் உள்ள கடைகளில் விற்கும் பொருட்களை வாங்கிக்கொண்டனர். மாலை ஆனதும் தத்தம் வண்டிகளில் ஏறி நள்ளிரவில் அவரவர் ஊர்களுக்குத் திரும்பினர். இரவில் படுக்கப்போகும் முன் சற்று நேரம் தாம் போய் வந்த ஒரு நாள் சுற்றுலாவைப் பற்றியும், அந்த அழகான இடத்தையும் நினைத்துக் கொண்டனர். தங்களது கவலைகளையெல்லாம் அந்த அழகான, தூய்மையான இடத்தில் இறக்கி வைத்து விட்டு வந்தது போல் மனது இலேசாகவும், சுகமாகவும் இருப்பதைப் போல் உணர்ந்தனர். அப்படியே களைப்பில் நிம்மதியாக உறங்கிப்போயினர்.
********
யார் சிறந்த சுற்றுலா பயணி?
சுற்றுலாத் தலங்களின் அழகும் வளமும் குறையாமல் இருக்கும் வகையில் சுற்றுலாப் பயணிகள் பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம். செல்லும் இடத்தை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். சுற்றுலா சென்று வந்த இடத்தில் அதற்கான சுவடே இல்லாமல், சென்ற இடத்தை எந்த வகையிலும் சீர்கெடுக்காமல், நமது நடவடிக்கைகளால் சென்ற இடத்தின் தன்மை மாறாமல், அந்த இடத்தின் கலாசாரத்தையும், சட்ட திட்டங்களையும் பின்பற்றி, உள்ளூர் மக்களிடம் கனிவுடன் நடப்பதுதான் ஒரு பொறுப்பான சுற்றுலா பயணிக்கான அடையாளம்.
கவனம் கொள்ள வேண்டியவை
- செல்லும் இடம் காட்டுப் பகுதியாகவோ, விலங்கு காட்சி சாலையாகவோ இருந்தால் அங்கு அமைதி காத்து, உயிரினங்களுக்கு உணவளிக்காமலும் சீண்டாமலும் இருப்போம்.
- பிளாஸ்டிக் பை, குவளை, பாட்டில் போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்போம். அப்படியே பயன்படுத்தினாலும் குப்பையையும், மீந்து போன உணவுப் பொருட்களையும் கண்ட இடத்தில் வீசி எறியாமல், குப்பை தொட்டியில் போடுவோம்.
- செல்லும் இடம் கோயிலாகவோ, புராதன முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவோ இருந்தால் அங்குள்ள கட்டிட அமைப்புகளுக்கு எந்தச் சேதமும் ஏற்படுத்தாமல், சுவர்களிலோ, மரங்களிலோ கிறுக்கி வைக்காமல் இருப்போம்.
- சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் வழியில் பொறுப்பான முறையில் வண்டிகளை ஓட்டி செல்வோம். அதிவேகமாக வண்டி ஓட்டுவதைத் தவிர்ப்போம்.
- சுற்றுலா செல்லுமிடத்தில் உள்ள உள்ளூர்வாசிகளை மதித்து நடப்போம். அவர்களுடைய கலாசாரம், உடைகள், வாழ்க்கை முறை வித்தியாசமாக இருப்பதை ஆவணப்படுத்துவதற்கு முன், அவர்களிடம் அனுமதி பெற்ற பின்னரே ஒளிப்படமோ, வீடியோவோ எடுப்போம்.
- பொது இடங்களில் செய்யக்கூடாத செயல்களைச் சுற்றுலாத் தலங்களில் செய்யாமல் இருப்போம்.
********
தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 23rd September 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF ஐ இங்கே பெறலாம்.
உண்டி கொடுத்தோம், உயிர் கொடுத்தோமா?
காரில் பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். மேற்குத் தொடர்ச்சி மலை அல்லது தமிழகத்தின் ஏதோ ஒரு காட்டுப் பாதையில் கார் வளைந்து நெளிந்து சென்றுகொண்டிருக்கிறது. மரத்தின் மேலும், சாலையின் ஓரத்திலும் நின்று கொண்டிருக்கும் குரங்குக் கூட்டம் சட்டென்று நம் கவனத்தை ஈர்க்கிறது. மரத்தில் இருக்கும் பூக்களையும், கனிகளையும் அவை அமைதியாகத் தின்று கொண்டிருக்கின்றன. அதை கண்டதும் நம்மையும் அறியாமல் முகத்தில் புன்னகை படர்கிறது.
சட்டென்று காரை நிறுத்தி கையில் இருக்கும் பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்து, குரங்குக் கூட்டத்தை நோக்கி வீசி எறிகிறோம். அதுவரை மரத்தில் இருந்த பூக்களையும், கனிகளையும், பூச்சிகளையும் அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்த குரங்குகள், விட்டெறியப்பட்ட பிஸ்கெட்டுகளை எடுத்துத் தின்ன ஆரம்பிக்கின்றன.
பிஸ்கெட்டை எடுத்துத் தின்பதில் அவற்றுக்கிடையே போட்டி ஏற்பட்டு, கோபத்தில் ஒன்றையொன்று கடித்துத் துரத்துகின்றன. அந்த இடத்தின் அமைதியும், மரத்தில் இயற்கையான உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அக்குரங்கு கூட்டத்தினிடையே நிலவிய அமைதியும் ஒரே நேரத்தில் குலைந்து போகின்றன. அவை அடித்துக்கொள்வதைப் பார்த்து நம் மனதில் குதூகலம். மற்றொருபுறம் பல குரங்குகளின் பசியைப் போக்கிய நிம்மதியுடன், அந்த இடத்தைவிட்டு அகல்கிறோம்.
நேர் முரண்கள்
போகும் வழியில் சாலையோரத்தில் “குரங்குகளுக்கு உணவு தர வேண்டாம்” எனக் கொட்டை எழுத்தில் வனத்துறை ஒரு போர்டை வைத்திருக்கிறது. அதை நாம் கவனிக்கவில்லை. உடன் வந்தவர் அதைப் பார்க்கிறார். ஆனால் அவருக்கு அது புரியவில்லை, ஏன் இப்படிச் சம்பந்தமில்லாமல் அறிவித்திருக்கிறார்கள் என்று.
நாம் இதுவரை உணராத விஷயம் ஒன்று இருக்கிறது. அவ்வப்போது சாலையில் வேகமாகச் சீறிச்செல்லும் வாகனங்களின் சக்கரங்களில் அரைபட்டு இதே குரங்குக் கூட்டத்தின் சில உறுப்பினர்கள் செத்து போனதும், நம்மைப் போன்ற மனிதர்களால்தான். இப்படி அந்தக் குரங்குகளின் இயல்பு வாழ்க்கை பல வகைகளில், மனிதர்களால் சீர்குலைக்கப்படுகிறது.
குழப்பமும் நோய்களும்
மற்றொரு புறம் குரங்குகளுக்கு உணவளிப்பது அவற்றின் உடல்நிலையைப் பாதிக்கும், அவற்றின் குடும்பத்தினுள் (குரங்குகள் கூட்டமாக, அதாவது குடும்பமாக வாழும் தன்மை கொண்டவை) குழப்பத்தையும், சண்டையையும் விளைவிக்கும். அவற்றின் சமூக வாழ்வு பாதிக்கப்படும். நாம் கொடுக்கும் உணவால் அவற்றுக்குப் பல நோய்கள் வரலாம். இயற்கையான சூழலில், இயற்கையான உணவைச் சாப்பிடுவதே குரங்குகளுக்கு நல்லது, அதைப் பார்த்து மகிழும் நமக்கும் நல்லது. குரங்குகளுக்கு உணவளிப்பதாலும், தின்பண்டங்களைக் கண்ட இடத்தில் வீசி எறிவதாலும், மூடி வைக்கப்படாத குப்பைத் தொட்டிகளாலும் தான் குரங்குகளால் நமக்குத் தொந்தரவு ஏற்படுகிறது.
யார் மீது தவறு?
குரங்குகளுக்கு ஒரு முறை நாம் சாப்பிடும் உணவைக் கொடுத்துப் பழகிவிட்டால், பல்வேறு சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட அதே வகை உணவையே அவை மீண்டும் உண்ண விரும்புகின்றன. இதனால் காட்டுக்குள் சென்று உணவு தேடாமல் மனிதர்கள் வாழும் பகுதிகளிலும், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடங்களிலுமே தங்கிவிடுகின்றன. ஊருக்குள் புகுந்து கோயில்களிலும், வீட்டிலும், கடைகளிலும் உள்ள தின்பண்டங்களை நமக்குத் தெரியாமலோ, நம் கைகளிலிருந்து பிடுங்கியோ எடுத்துச் செல்கின்றன. தெரிந்தோ, தெரியாமலோ நாம் செய்த தவறுகளால் குரங்குகளும் பாதிக்கப்பட்டு, சுற்றுலாத் தலங்களிலும் ஊருக்குள்ளும் நமக்குத் தொந்தரவு ஏற்படுத்தும் உயிரினங்களாக மாறுகின்றன. இப்படித் தொந்தரவு தரும் குரங்குகள் உருவாகக் காரணமாக இருப்பதே நாம்தான். ஆனால், தொந்தரவு அதிகரிக்க ஆரம்பித்தவுடன், அவற்றைக் கட்டுப்படுத்தும் பணியில் இறங்குகிறோம்.
கட்டுப்படுத்த வேண்டியது குரங்குகளை அல்ல, குரங்குகளுக்கு நன்மை செய்கிறோம் என்று தவறாக நம்பி அவற்றுக்கு உணவளிப்பவர்களையும், பொறுப்பற்ற சில சுற்றுலாப் பயணிகளின் நடவடிக்கைகளையும்தான்.
என்ன பிரச்சினை?
சில இடங்களில் தொந்தரவு செய்வதாகக் கருதப்படும் குரங்குக் கூட்டங்களைப் பிடித்து வேறு இடங்களுக்குச் சென்று விட்டுவிடும் பழக்கம், நம் நாட்டில் இருந்து வருகிறது. இதனால் பிரச்சினை தீர்வதில்லை. கொண்டு சென்று விடப்பட்ட புதிய இடத்துக்கு அருகிலுள்ள மனிதக் குடியிருப்புகளுக்கு மீண்டும் வந்து, அவை தொந்தரவு தரும். இதில் பிரச்சினைக்குக் காரணமாக இருக்கும் விஷயத்துக்கு முடிவு கட்டாமல், பிரச்சினையை ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்துக்கு மாற்ற மட்டுமே செய்கிறோம்.
இடமாற்றம் செய்வதற்காகக் குரங்குகளைப் பிடிக்கும்போது பலத்த காயம் ஏற்படவும், சில இறந்துபோகவும் நேரிடுகின்றது. ஒரு குரங்குக் கூட்டத்தை ஓரிடத்திலிருந்து பிடித்துச் சென்றுவிட்டால் அவை இருந்த இடத்தில், வேறோர் குரங்குக் கூட்டம், இடத்தைப் பிடித்துக்கொள்ளும். நகரத்தில் வெகுநாட்களாக வாழ்ந்து வரும் குரங்குக் கூட்டத்தைப் பிடித்து அருகிலுள்ள காட்டு பகுதியில் விடுவதால், அந்தக் குரங்குக் கூட்டத்தில் உள்ள நோய்கள் காட்டில் உள்ள உயிரினங்களுக்கும் பரவும் ஆபத்து உள்ளது. மேலும், காட்டுப்பகுதியில் ஏற்கெனவே வசித்துவரும் குரங்குகளுடன் இடத்தைப் பெறுவதற்காகச் சண்டை ஏற்பட்டுப் பல உயிரிழக்கவும் நேர்கிறது.

சாலை விபத்தில் காலையும் கையும் இழந்த ஒரு நாட்டுக் குரங்கு (Bonnet Macaque)
உணவளிக்காமல் இருப்பதே தீர்வு
நகரத்தில் வாழும் பெண் குரங்குகளுக்குக் கருத்தடை அறுவைசிகிச்சை செய்து அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைக்கும் முயற்சிகள் சில இடங்களில் நடந்துள்ளன. ஆனால் அதைச் செய்வதற்கு அதிகச் செலவும், தகுந்த பயிற்சி பெற்ற நிபுணர்களும் அவசியம். என்றாலும்கூட, இது நீண்ட காலத் தீர்வாகாது.
உங்களுக்குக் குரங்குகளைப் பார்க்கப் பிடிக்கும் என்றால், அவற்றைப் பார்த்து ரசியுங்கள். அவற்றுக்கு உணவளிக்க வேண்டாம். ஒருவேளை யாரேனும் அப்படி உணவளிப்பதைப் பார்த்தாலும் அதனால் ஏற்படும் தீமைகளை அவர்களிடம் பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள். குரங்குகளைப் பொறுத்தவரை உண்டி கொடுப்பது, அவற்றுக்கு உயிர் கொடுப்பது ஆகாது.
*********
தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 16th September 2014 அன்று வெளியான கட்டுரை. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF ஐ இங்கே பெறலாம்.