Posts Tagged ‘western ghats’
கன்னியாகுமரி காட்டுயிர்ச் சரணாலயம்
கன்னியாகுமரி காட்டுயிர்ச் சரணாலயம்
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் தென் கோடியில் அமைந்துள்ளது கன்னியாகுமரி காட்டுயிர்ச் சரணாலயம். சுமார் 457 சதுர கி.மீ பரப்பில் அமைந்த கன்னியாகுமரி வனக்கோட்டப் பகுதி 2002 ம் ஆண்டில் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. எனினும் இந்த வனப்பகுதியின் மத்தியில் இருந்த கானி பழங்குடியினரின் குடியிருப்புப் பகுதி, அங்கு செல்லும் சாலை மற்றும் அரசு இரப்பர் நிறுவனத்திற்கு (Arasu Rubber Corporation) குத்தகை விடப்பட்ட பகுதி யாவற்றையும் சரணாலயப் பகுதியிலிருந்து நீக்கிவிட்டு 402.39 சதுர கி.மீ பரப்பை கன்னியாகுமரி காட்டுயிர் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகமும் கேரளாவில் உள்ள நெய்யார் காட்டுயிர் சரணாலயமும் இதைச் சுற்றிலும் அமைந்துள்ளன. வறண்ட இலையுதிர் காடு, ஈர இலையுதிர் காடு, புதர் காடு, தேக்குமரக் காடு, மழைக்காடு, சோலைக்காடு, மூங்கில் அடர்ந்த காடு, மலையுச்சிப் புல்வெளி என பல வகையான வாழிடங்களைக் கொண்டுள்ளது இச்சரணாலயம். பல காட்டோடைகளும், ஆறுகளும் உருவாகும் இந்த வனப்பகுதி பல அரிய உயிரினங்களுக்கு வாழிடமாக அமைந்துள்ளது. யானை, வேங்கைப்புலி, சிறுத்தை, வரையாடு, பல விதமான பறவைகள், வரை கமுகு (Hill Areca nut Bentinckia condapanna) போன்ற மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே தென்படக்கூடிய பல அரிய தாவரங்கள் யாவையும் தன்னகத்தே கொண்டுள்ளது இச்சரணாலயம்.

வரை கமுகு (Hill Areca nut| With fruits). Photo: P. Jeganathan/Wikimedia Commons
—
மனோரமா இயர்புக் 2015 ல் “தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள்” எனும் தலைப்பில் (பக்கங்கள் 178-195) வெளியான நெடுங்கட்டுரையின் ஒரு பகுதி.
கொடைக்கானல் காட்டுயிர்ச் சரணாலயம்
கொடைக்கானல் காட்டுயிர்ச் சரணாலயம்
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தின் கொடைகானல், பழனி மற்றும் பெரியகுளம் தாலுக்காவிலுள்ள 608.95 சதுர கி.மீ பரப்பில் அமைந்த வனப்பகுதி 2013ம் ஆண்டு கொடைக்கானல் காட்டுயிர்ச் சரணலயமாக அறிவிக்கப்பட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் ஒரு பகுதியான பழனி மலைப்பகுதியை உள்ளடக்கிய இந்த சரணாலயத்தில் முட்புதர் காடு, இலையுதிர் காடு, பசுமை மாறா காடு, ஈர இலையுதிர் காடு, மழைக்காடு, சோலைக்காடு, மலையுச்சிப் புல்வெளி என பலவகையான வாழிடங்கள் உள்ளன. யானை, வேங்கைப்புலி, சிறுத்தை, செந்நாய், கரடி, வரையாடு, நரை அணில், மலபார் மலையணில், கடம்பை மான், கேளையாடு, காட்டெருது முதலிய பாலூட்டிகளும், பல அரிய தாவர வகைகளும், சுமார் 100 வகைப் பறவையினங்களும் இங்கு தென்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஓரிடவாழ் பறவைகளான நீலகிரி காட்டுப்புறா (Nilgiri wood pigeon), நீலகிரி நெட்டைக்காலி (Nilgiri Pipit), குட்டை இறக்கையன் (White-bellied blue robin) முதலிய அரிய பறவைகளும் இப்பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஸ்ரீவில்லிபுத்தூர் நரை அணில் சரணாலயம்
ஸ்ரீவில்லிபுத்தூர் நரை அணில் சரணாலயம்
விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் நரை அணில் சரணாலயம் 1989ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. சுமார் 480 சதுர கி.மீ பரப்பில் அமைந்த இச்சரணாலயத்தின் கீழ்மேற்குப் பகுதியில் கேரளாவில் உள்ள பெரியாறு புலிகள் காப்பகமும், வட மேற்குப் பகுதியில் தமிழகத்தில் உள்ள மேகமலை காப்புக்காடும், கிழக்கில் திருநெல்வேலி வனக்கோட்டத்திலுள்ள சிவகிரி காப்புக்காடும் உள்ளது. இந்தச் சரணாலயத்தின் பெரும்பகுதி விருதுநகர் மாவட்டத்திலும், மீதி மதுரை மாவட்டத்திலும் பரவியுள்ளது. தாழ்வான பகுதி, மிதமான உயரத்தில் அமைந்த மத்திய கட்டப் பகுதி (mid elevation), மலையுச்சி என பல நிலைகளைக் கொண்ட புவியமைப்பினைக் கொண்டதால், உயரத்திற்கேற்ற பல வன வகைகளும் இந்தச் சரணாயலத்தில் உள்ளது. மலையுச்சிகளில் இருக்கும் புல்வெளிகளும், சோலைக்காடுகளும், மழைக்காடுகளும், ஈர இலையுதிர்காடுகளும், தரைக்காடுகளும் இந்தச் சரணாலயத்தின் முக்கிய வாழிடங்களில் சில.

நரை அணில் Grizzled giant squirrel. Photo: Aparna K / Wikimedia Commons
யானை, வேங்கைப்புலி, சிறுத்தை, வரையாடு, கடம்பை மான் அல்லது மிளா (Sambar Deer), புள்ளிமான், கேளையாடு, முள்ளம்பன்றி, சோலைமந்தி, நீலகிரி கருமந்தி, வெள்ளை மந்தி, தேவாங்கு என பல வகையான பாலுட்டிகள் இருந்தாலும், இங்கு தென்படும் நரை அணிலே (Grizzled Giant Squirrel) இந்த சரணாலத்தின் சிறப்பு. இந்த மலையணில் வகை தென்னிந்தியாவிலும், இலங்கையில் மட்டுமே தென்படும் ஒர் அரிய உயிரினம். சுமார் 220 வகையான பறவையினங்கள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 14 வகை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் ஓரிடவாழ்விகளாகும் (Western Ghats Endemics).
—
மனோரமா இயர்புக் 2015 ல் “தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள்” எனும் தலைப்பில் (பக்கங்கள் 178-195) வெளியான நெடுங்கட்டுரையின் ஒரு பகுதி.
இந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா
இந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா

வரையாடு (Nilgiri Tahr). Photo: Kalyan Varma/Wikimedia Commons
கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இச்சரணாலயம் 1976ல் ஏற்படுத்தப்பட்டது. இதன் பரப்பு 850 சதுர கி.மீ. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமான இப்பகுதி பல்லுயிரியத்திற்கு பெயர் போனது. இந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதி. குடைசீத்த மரங்கள் கொண்ட தரைக்காடுகள், புல்வெளிகளையும் புதர்களையும் கொண்ட வெட்ட வெளிப் பகுதிகள், மழைக்காடுகள், இலையுதிர்காடுகள், ஆற்றோரக்காடுகள், மலையுச்சிப் புல்வெளிகள், சோலைக்காடுகள் என பல வகையான வாழிடங்களைக் கொண்டது. இதனாலேயே பலவித தாவர மற்றும் விலங்குகளின் பன்மயத்தைக் கொண்டுள்ளது. வேங்கைப்புலி, சிறுத்தை, செந்நாய், நரி, சிறுத்தைப்பூனை, கரடி, யானை, மிளா, கேளையாடு (Barking Deer), புள்ளி மான், சருகுமான், காட்டெருது (Gaur), மற்றும் ஓரிடவாழ்விகளான (Endemic species) வரையாடு (Nilgiri Tahr), நீலகிரி கருமந்தி (Nilgiri Langur), சோலைமந்தி (சிங்கவால் குரங்கு), பழுப்பு மரநாய் (Brown Palm Civet), சின்ன பறக்கும் அணில் (Travancore Flying Squirrel) முதலிய பாலுட்டிகளும், ஆனைமலை சாலியா ஓணான் (Anaimalai Spiny Lizard), மலபார் குழிவிரியன் (Malabar pit viper) முதலிய ஊர்வன இனங்களும், பல வகையான காலில்லாத் தவளைகள் (Caecilians), கொட்டான் எனும் கேழல்மூக்கன் தவளை (Purple frog), என பல அரிய உயிரினங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது இப்பகுதி. பெரிய இருவாசி (Great Hornbill), கருங்கழுகு (Black Eagle) என சுமார் 218 வகைப் பறவைகள் இப்பகுதியில் தென்படுகின்றன. அவற்றில் நீலகிரி நெட்டைக்காலி (Nilgiri Pipit), மலபார் இருவாசி (Malabar Grey Hornbill), நீலகிரி ஈப்பிடிப்பான் (Nilgiri Flycatcher) போன்ற 12 வகை பறவைகள் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் மட்டுமே தென்படும் ஓரிடவாழ்விகள் ஆகும்.

கொட்டான் எனும் கேழல்மூக்கன் தவளை (Purple frog). Photo by David Raju/Wikimedia Commons
இது தவிர இங்கு மட்டுமே தென்படக்கூடிய காட்டு காசித்தும்பைச் செடிகளும், ஆர்கிடுகளும் (Orchids), ஏனைய பிற அரிய தாவரங்களும் இங்குண்டு. மேலும் காடர்கள், மலை மலசர்கள். மலசர்கள், முதுவர்கள், புலையர்கள், எரவலர்கள் என பல வித பழங்குடியினரும் வாழும் பகுதி இது. இந்திரா காந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசிய பூங்காவைச் சுற்றி கேரளா பகுதியில் பரம்பிகுளம் புலிகள் காப்பகம், சின்னார் காட்டுயிர் சரணாலயம், வாழச்சால் காப்புக்காடு, எரவிகுளம் தேசியபூங்கா என தொடர்ச்சியான வனப்பகுதிகளைக் கொண்டுள்ளதால், பலவித காட்டுயிர்களுக்கும், யானைகளுக்குமான மிக முக்கியமான வழித்தடமாக இப்பகுதி அறியப்படுகிறது.

தேன் இழிஞ்சான் (Nilgiri Marten Martes gwatkinsii) சாலையைக் கடக்கும் காட்சி. (இணைக்கப்பட்ட படங்கள்). Photo: P. Jeganathan/ Wikimedia Commons
இந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயத்துடன் 108 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கரியன் சோலை, அக்காமலை புல்வெளி, மஞ்சம்பட்டி ஆகிய பகுதிகள் 1989ல் சேர்க்கப்பட்டு தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது. தேக்குமரக்காடு, சோலைக்காடு, மழைக்காடு, மலையுச்சிப் புல்வெளிகள் என பல பல்லுயிரியம் செழிக்கும் மிக முக்கியமான வாழிடங்களைக் கொண்டது இப்பகுதி. யானை, வேங்கைப்புலி, சிறுத்தை, தேன் இழிஞ்சான் (Nilgiri Marten), சிறுத்தைப் பூனை, வரையாடு முதலிய பாலுட்டிகளும், பெரிய இருவாசி, மலபார் இருவாசி, தவளைவாயன், நீலகிரி நெட்டைக்காலி, குட்டை இறக்கையன் முதலிய பறவைகளும், பல வகையான வண்ணத்துப்பூச்சிகளும், தட்டான்களும், காட்டு காசித்தும்மை, ஆர்கிட் முதலிய பல அரிய தாவரங்களும் இப்பகுதியில் தென்படுகின்றன.
—
மனோரமா இயர்புக் 2015 ல் “தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள்” எனும் தலைப்பில் (பக்கங்கள் 178-195) வெளியான நெடுங்கட்டுரையின் ஒரு பகுதி.
களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம்
களக்காடு காட்டுயிர்ச் சரணாலயம்

சோலைமந்தி (சிங்கவால் குரங்கு) Lion-tailed Macaque. Photo by T. R. Shankar Raman, via Wikimedia Commons
களக்காடு காட்டுயிர் சரணாலயம் ஏற்படுத்தப்பட்டது 1977ல். திருக்கரங்குடி மற்றும் களக்காடு சரகங்களை உள்ளடக்கிய இப்பகுதி (253 சதுர கி.மீ) சோலைமந்திகளின் (சிங்கவால் குரங்கு) Lion-tailed Macaque பாதுகாப்பிற்காகவே இப்பகுதி சரணாலமாக அறிவிக்கப்பட்டது. பம்பாய் இயற்கை வரலாறு கழகத்தின் (Bombay Natural History Society) முன்னால் இயக்குநரான காலஞ்சென்ற முனைவர் ஜே.சி. டேனியல் 1971ல் இப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட தரவுகளைக் கொண்டு தமிழக அரசிற்கு விடுத்த வேண்டுகோளுக்கினங்க அப்போதைய அரசு இப்பகுதியை சரணாலயமாக அறிவித்தது.

களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் பாயும் சேர்வலாறு. Photo: AJT Johnsingh / Wikimedia commons
முண்டந்துறை காட்டுயிர்ச் சரணாலயம்
முண்டந்துறை காட்டுயிர் சரணாலயம் (567 சதுர கி.மீ.) அம்பாசமுத்திரம், முண்டந்துறை சரகங்கள் மற்றும் சிங்கம்பட்டி ஜமீன் பகுதிகளை உள்ளடக்கியது. இப்பகுதி 1962ல் புலிகளுக்கான சரணாலயமாக அறிவிக்கப்பட்டு பின்னர் 1977ல் காட்டுயிர் சரணாலயமாக ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவின் மூத்த காட்டுயிரியளாலரான A.J.T. ஜான்சிங் 1983-84 களில் இப்பகுதிகளில் களப்பணிகள் மேற்கொண்டு இந்த இடத்தை புலிகள் காப்பகமாக அறிவிக்க பரிந்துரை செய்தார். இதன் விளைவாக ஏப்ரல் 1988ல் இப்பகுதியும், களக்காடு காட்டுயிர் சரணாலயமும் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.
இது தமிழகத்தின் முதல் (இந்தியாவின் 17ஆவது) புலிகள் காப்பகமாகும். இதன் மொத்த பரப்பு 895 சதுர கி.மீ. புலிகள் பாதுகாப்பிற்கான மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புத் தொகுதியின் (Tiger Conservation Unit – TCU) மிக முக்கியமான நிலப்பகுதியாக அறியப்படுகிறது.
இப்புலிகள் காப்பகம் அகஸ்தியமலை உயிர்கோள மண்டலத்தின் ஒரு பகுதி. இது பல்லுயிரியத்தில் சிறந்து விளங்கும் பகுதிகளில் மிகவும் முக்கியமான இடங்களில் ஒன்று. சுமார் 150 ஓரிடவாழ் தாவர வகைகளும், 33 வகை மீன்களும், 37 வகை நீர்நில வாழ்விகளும், 81 வகை ஊர்வனங்களும், 273 வகை பறவையினங்களும், 77 வகையான பாலுட்டிகளும் இதுவரை இப்பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் எண்ணற்ற பல காட்டோடைகளும், ஆறுகளும் உற்பத்தியாவதால் நதிகளின் சரணாலயமாகவும் கருதப்படுகிறது. வேங்கைப்புலி, வரையாடு, யானை முதலிய பல அரிய உயிரினங்களின் வாழ்விடமாகத் திகழ்கிறது. தென்னிந்தியாவிலேயே ஐந்து வகை குரங்கினங்களைக் (சோலைமந்தி (சிங்கவால் குரங்கு), நீலகிரி கருமந்தி, வெள்ளை மந்தி, நாட்டுக்குரங்கு மற்றும் தேவாங்கு) கொண்ட வெகு சில பகுதிகளில் ஒன்றாகவும் இப்பகுதி அறியப்படுகிறது. இப்பகுதி மற்றும் இதனை அடுத்து கேரளாவிலுள்ள பெரியாறு புலிகள் காப்பகம், பெப்பாரா, செந்துர்னி மற்றும் நெய்யார் காட்டுயிர் சரணாலயப் பகுதியிலும் (சுமார் 3812 சதுர கி.மீ பரப்பளவில்) 36-40 புலிகள் குடிகொண்டிருக்கலாம் (Occupancy) என மதிப்பிடப்பட்டுள்ளது.
—
மனோரமா இயர்புக் 2015 ல் “தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள்” எனும் தலைப்பில் (பக்கங்கள் 178-195) வெளியான நெடுங்கட்டுரையின் ஒரு பகுதி.
வன உயிரின வார துவக்க விழா-2015, திருப்பூர் – சில பதிவுகள்
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரம் இந்தியாவில் வன உயிரின வார விழாவாக கொண்டாடப்படுவது நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். இந்த ஆண்டு திருப்பூரில் 02-09-2015 அன்று, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நடந்த அதற்கான துவக்க விழாவிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
வன உயிரின வார விழா கொண்டாட்டம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு பெரிய அறையில் காட்டுயிர் பேணலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அரசு சாரா இயக்கங்களின் செயல் திட்டங்களை விவரிப்பதற்காகவும், ஆனைமலை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்களுக்காகவும் தனித்தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. கோவையைச் சேர்ந்த ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் விளாக்கவுரைகளுடன் கூடிய காட்டுயிர் படக் கண்காட்சியும் அதே அறையில் வைக்கப்பட்டிருந்தது. மற்றொரு பெரிய கலையரங்கத்தின் மேடையில் கலை நிகழ்ச்சிகளும், சிறப்பாக பணிபுரியும் வனத்துறை அதிகாரிகளுக்கும், வன உயிரின வார போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதலும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
காலையில் அரங்கின் உள்ளே நுழைந்தவுடனே ஒரு வேதனையான நிகழ்வைப் பார்க்க நேர்ந்தது. வாசலில் ஒரு கூட்டம் எதையோ சூழ்ந்து, வேடிக்கைப் பார்த்துக்கொண்டும், போட்டோ எடுத்துக்கொண்டும் இருந்தது. உள்ளே எட்டிப் பார்த்தேன்; பெரிய கூண்டு தென்பட்டது. புலி வேடமணிந்த ஒருவர் அதனுள்ளே மண்டியிட்டு நடந்து சென்றவுடன் கூண்டின் கதவு பலத்த ஓசையுடன் மூடிக்கொண்டது. சுற்றி நின்றவர்கள் சிரித்தும், கைகொட்டியும் ஆர்ப்பரித்தனர். இத்தகைய செயல்பாடுகள், வனத்துறையினர் இது போன்ற வேலைகளை மட்டுமே செய்வார்கள் என்கிற ஒரு தவறான எண்ணத்தைத் தந்துவிடும்.
காட்டுயிர்களுக்கு மனிதனால் வரையறுக்கப்பட்ட எல்லைகள் கிடையாது, பல உயிரினங்கள் மனிதனின் செயல்களால் அழிந்தும், அற்றும் போய்க்கொண்டிருக்கின்றன, காட்டுயிர்களையும், அவற்றின் வாழிடங்களையும் பாதுகாப்பது நாம் அனைவரின் கடமை, இதற்காக பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன? திருட்டு வேட்டையில் ஈடுபடுவோரை பிடிக்க எப்படி பொதுமக்கள் வனத்துறைக்கு உதவி செய்யலாம் என்பதைப் பற்றியெல்லாம் படங்கள், திரைப்படங்கள், நாடகம் மூலமாக பார்வையாளர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இவை யாவும் புலி எப்படி கூண்டு வைத்து பிடிக்கப்படுகிறது என்று விளக்கிச் சொல்வதைக் காட்டிலும் மிகவும் அவசியமானதும், முக்கியமானதும் ஆகும்.
கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த அரங்கிற்குள் சென்று பார்த்தேன். ஒலிபெருக்கியின் ஓசை காதைக் கிழித்தது, சற்று நேரத்திலேயே வெளியே வந்து விட்டேன். அரங்கின் பின் பக்கத்திற்குச் சென்ற போது பள்ளி மாணவ மாணவியர் புலி, மயில், மரம் என பலவித வேடங்களில் அவர்களது நிகழ்ச்சிகளுக்காக தயாராகிக் கொண்டிருந்தனர். மயில் வேடமனிந்தவர்கள் உண்மையான மயில் தோகையை அணிந்திருந்தனர். இவை எப்படி, எங்கிருந்து வந்தது என்பதை அவர்கள் அறிந்திருப்பார்களா?
அரங்குகள் நிறைந்த அறைக்குள் நுழைந்து பார்வையிட்டேன். வனத்துறை மற்றும் இயற்கை பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் நண்பர்கள் பலரை ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அறையின் நடுவிலும் ஒரு சிறிய கூண்டையும், அதன் மேலே ஒரு பெரிய புலி பொம்மையையும் பார்வைக்கு வைத்திருந்தனர். என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரியவில்லை. அந்தப் பொம்மைப் புலியைச் சுற்றிக் கூட்டம் கூடுவதும் கலைவதுமாக இருந்தது. பெரும்பாலானோர் அந்த பொம்மைப் புலியை தொட்டுப் பார்த்துக் கொண்டும், அதனருகில் நின்று கைபேசியில் படமெடுத்துக் கொண்டும் இருந்தனர்.
ஒரு அரங்கில் சிறுத்தையை வலையை வைத்துப் பிடிக்கும் காட்சியைத் தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். பார்க்கப் பாவமாக இருந்தது. உயிரினங்கள் பிடிக்கப்படுவது போன்ற காட்சிகளை மட்டுமே தொடர்ந்து ஒளிபரப்பாமல், மனித காட்டுயிர் எதிர்கொள்ளலை சமாளித்தல் பற்றிய படங்களையும், இது போன்ற நிகழ்வுகளுக்கான காரணங்களை விளக்கும் காட்சிகளையும் சேர்த்து திரையிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
வனப்பகுதியை ஒட்டிய சில இடங்களில் எதிர்பாரா விதமாக மனிதர்கள் வசிக்கும் பகுதியில் நுழைந்து விட்ட காட்டுயிர்களை யாருக்கும் (அந்த உயிரினத்திற்கும், அங்குள்ள மனிதர்களுக்கும்) தொந்தரவு ஏற்படாத வண்ணம் பிடிப்பதும், விரட்டிவிடுவதும் சில வேளைகளில் அவசியமாகிறது. ஆனால் அவற்றை பிடிப்பதும், விரட்டுவதும் மட்டுமே மனித-காட்டுயிர் எதிர்கொள்ளலை சமாளிக்க நிரந்தரத் தீர்வாகிவிடாது. வனப்பகுதிகளின் அருகாமையில் வாழ்பவர்களுக்கு காட்டுயிர்களின் குணங்களையும், அவை குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் அடிக்கடி நடமாடாமல் இருக்க நாம் செய்ய வேண்டியவைகளையும் எடுத்துச் சொல்வது அவசியம். மனிதர்-சிறுத்தை எதிர்கொள்ளலை சமாளிக்க எடுக்க வேண்டிய சில செயல் முறைகளை இந்த விளக்கச் சுவரொட்டிகளில் காணலாம்.
வால்பாறையில் பல வழிகளில் மனிதர்-யானை எதிர்கொள்ளலை குறைக்க/சமாளிக்க பாடுபட்டுக் கொண்டிருக்கும் எனது நண்பர் முனைவர் ஆனந்தகுமாரின் செயல் திட்டங்களை விளக்கும் குறும்படத்தை இந்த விழாவில் திரையிடவும், ஒரு விளக்கச் சுவரொட்டியை அங்கே காட்சிக்கு வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேர மாறுதல்களால் அக்குறும்படம் திரையிடப்படவில்லை. வால்பாறையில் யானைகளும் மனிதர்களும் ஒத்திசைந்து வாழ வழிசெய்யும் முன்னறிவிப்பு முறைகளை விளக்க வனத்துறை தனியாக ஒரு அரங்கையே அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

யானை ஆராய்ச்சியாளர் அஷ்வினும், திட்ட உதவியாளர் சதீஷும் மின்னும் சிவப்பு விளக்கினைப் பற்றி பார்வையாளார்களுக்கு விளக்குகின்றனர்.
யானை-மனிதர் எதிர்கொள்ளலை சமாளிக்கும் இந்த முக்கியமான திட்டத்தினைப் பற்றிய விளக்கச் சுவரொட்டியைக் கீழே காணலாம். திரையில் பெரிதாகப் பார்க்க அதன் மேலே சொடுக்கவும்.
புலிகள் காப்பக அரங்குகளில் பாடம்செய்யப்பட்ட சில காட்டுயிர்களை பார்வைக்கு வைத்திருந்தனர். முதுமலை புலிகள் காப்பகத்தின் அரங்கில் பார்த்த காட்சி என் மனதை கலக்கமடையச் செய்தது. பாடம்செய்யப்பட்ட சிறுத்தை, யானைக் குட்டி, அலங்கு இரண்டு கரடிக் குட்டி ஆகிய உயிரினங்களை வனச்சூழலில் இருக்குமாறு அமைத்திருந்தனர். தத்ரூபமாக காட்சியளிக்க இயற்கையான சூழலில் இருந்தே தாவரங்களை எடுத்து வந்து அங்கு அலங்காரப் படுத்தியிருந்தார்கள். அழகிய பெரணிச் செடிகள் (தகரை – Ferns), மரங்களில் படர்ந்திருக்கும் பாசிச் செடிகள் (Moss), மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் உயரமான பகுதிகளில் மட்டுமே தென்படும் மலைப்பூவரசு (Rhododendron), சேம்பு வகைச் செடி (Arisaema), தரையில் வளரும் ஆர்கிடு (Orchid) முதலிய தாவரங்களை பார்க்க முடிந்தது. இது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.
கோவையைச் சேர்ந்த ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் கானுயிர் படக்கண்காட்சி அருமையாக இருந்தது. வெறும் படங்களை மட்டுமே காட்சிக்கு வைக்காமல் விளாக்கவுரைகளையும் இடையிடையே வைத்திருந்தார்கள். வனப்பகுதியைப் பிளந்து அமைக்கப்படும் சாலைகளினால் காட்டுயிர்களுக்கு ஏற்படும் ஒரு முக்கியமான பாதிப்புகளில் ஒன்று அங்கே சீறி வரும் வாகனங்களில் அடிபட்டு சாலைப்பலியாதல் (Roadkill). அதைப்பற்றிய விளக்கப்படங்கள் வைக்கப்பட்டிருந்தது.
மேற்குத் தொடர்ச்சி மலை – நம் நதிகளின் தாய்மடி எனும் தலைப்பில் ஒரு நதி எப்படி உற்பத்தியாகும்? எனும் படங்களுடன் கூடிய விளக்கவுரை அருமை. தமிழகத்தில் தென்படும் வண்ணத்துப்பூச்சிகளின் படங்களும், குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே தென்படும் ஓரிடவாழ் வண்ணத்துப்பூச்சிகளின் (Endemic butterflies) படங்களையும் காட்சிக்கு வைத்திருந்தனர். படங்களில் ஆங்கிலப் பெயர் மட்டுமே இருந்தது. வண்ணத்துப்பூச்சிகளுக்கு இப்போது தமிழிலும் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது, அவற்றையும் இது போன்ற படங்களில் சேர்க்க வேண்டும். காண்க “வண்ணத்துப்பூச்சிகள் – அறிமுகக் கையேடு”.
தமிழகத்தில் காட்டு ஆராய்ச்சி, இயற்கைப் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட்டுக்கொண்டுள்ள பல அரசு சாரா நிறுவனங்களின் (WWF-India, Zoo Outreach Organization, Wildlife & Nature Conservation Trust, SACON, Kenneth Anderson Nature Society, Traffic India, Keystone Foundation, Arulagam Trust, Nature Society of Tirupur.) அரங்குகள் பல இருந்தன.
பாறு கழுகுகளின் (Vultures – பிணந்தின்னிக் கழுகுகள்) பாதுகாப்பிற்காக பாடுபட்டு வருபவர்கள் அருளகம் அமைப்பைச் (Arulagam Trust) சேர்ந்தவர்கள். பாறு இனப் பறவைகள் பல அழிவின் விளிம்பில் இருக்கின்றன. ஒரு காலத்தில் வானமெங்கும் கூட்டம் கூட்டமாக பறந்து திரிந்த அவை, எண்ணிக்கையில் 99% அழிந்து போய்விட்டது. குறிப்பாக Gyps வகை பாறுகள். காரணம் Diclofenac எனும் கால்நடைகளுக்கான வலிநீக்கி மருந்து. உடல் வலிக்காக செலுத்தப்படும் இம்மருந்து அக்கால்நடை இறந்த பின்னும் அதன் உடலின் உள்ளுறுப்புகளில் தங்கி விடுகிறது. அதை உண்ணும் பாறுகளுக்கு அம்மருந்து நஞ்சாகிறது. ஆகவே தான் பாறுகள் எண்ணிக்கையில் குறைந்து பல இடங்களிலிருந்து அற்றும் போய்விட்டன. தற்போது Diclofenac இந்திய அரசால் தடை செய்யப்பட்டு விட்டது. எனினும் இந்த மருந்து இன்னும் புழக்கத்தில் தான் இருக்கிறது.
பாறு கழுகுகள் இறப்பதற்கான காரணம், Diclofenac மருந்தின் விளைவு, இயற்கையாக இறந்த உயிரினங்களை புதைக்காமல் இருத்தலின் நன்மை இவற்றையெல்லாம் மையக்கருத்தாக வைத்து ஒரு அருமையான பரமபத விளையாட்டை உருவாக்கியிருந்தனர் அருளகம் அமைப்பினர். பள்ளி மாணவர்கள் தாயக்கட்டைகளை உருட்டி விளையாட, ஒவ்வொரு நகர்விலும் பாறு கழுகின் பாதுகாப்பினைப் பற்றி அறிந்து கொள்ள ஏதோ ஒரு தகவல் அச்சிடப்பட்டிருந்தது. அதை அருளகம் அமைப்பினர் விளையாடுவோருக்கு விளக்கிக் கொண்டிருந்தனர். பார்வையாளர்களை ஈடுபடுத்தி, அவர்களாகவே ஒரு தகவலை அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இது போன்ற விளையாட்டுகள் இவ்வகையான நிகழ்ச்சிகளில் பெருக வேண்டும்.
காட்டுயிர்களை திருட்டு வேட்டையாடி அவற்றின் பாகங்களை அல்லது அவற்றை உயிருடன் கடத்தப்படுவதைக் கண்கானித்து, அது பற்றிய தகவல்களை சேகரித்து இது போன்ற செயல்களை கட்டுப்படுத்த அரசுக்கு தகவல் அளித்து உதவும் ஒரு அரசு சாரா நிறுவனம் Traffic India. இவர்களது அரங்கில் அலங்கினைப் பற்றிய ஒரு விளக்கச் சுவரொட்டி வைத்திருந்தனர். அதைப் படிக்கப் படிக்க வேதனையாக இருந்தது. அலங்கின் செதில்களுக்காகவும், மாமிசத்திற்காகவும் 2008-2014 வரை குறைந்தபட்சம் 3000 வரை கொல்லப்பட்டு கடத்தப்பட்டிருக்கிறது. இது ஒரு தோராயமான மதிப்பீடு தான், உண்மையான எண்ணிக்கை இதை விட அதிகமாகத்தான் இருக்கும். மேலும் விவரங்களுக்கு இப்பக்கத்தை காண்க.
அரங்கின் வெளியே மதிய உணவிற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்தார்கள். உயர் அதிகாரிகளுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் அரங்கின் உள்ளே மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உள்ளேயிருந்த பிளாஸ்டிக் தண்ணீர் குப்பியும், வெளியே கிடந்த ஐஸ்கிரீம் சாப்பிடத் தந்த பிளாஸ்டிக் தட்டும், காலையில் மாணவர்களால் ஏந்தப்பட்டு மதிய வேளையில் தரையில் போடப்பட்டிருந்த வாசக அட்டைகளும், எனது கண்ணை உறுத்தியது. “Say Goodbye To plastic” என்றது ஒரு வாசக அட்டை. அரசு விழாக்களில் இது போன்ற பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்த்தால் நன்றாக இருக்கும்.
இதையெல்லாம் பார்த்துவிட்டு வெளியே வந்த போது எதிரே ஒருவர் பல பைகளை உடைய பச்சை உடையணிந்து, அச்சிறிய பைகளில் மரக்கன்றுகளை வைத்துக் கொண்டு வளாகத்தில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். அவரது உடையில் “மரம் நடுவீர்!”. “நட்ட மரத்தை பாதுகாத்திடுவீர்!” எனும் வாசகங்கள் அச்சடித்து ஒட்டப்பட்டிருந்தது. அவரது அருகில் சென்று அறிமுகம் செய்து கொண்டேன். என் பெயர் ‘மரம் அய்யப்பன்’ என்றார். மரத்தை தன் உடலில் மட்டுமல்ல பெயரிலும் தாங்கிக் கொண்டிருப்பவர். மரக்கன்றுகளின் பாரத்தைத் தாங்கிக் கொண்டு ஆடி அசைந்து நடந்து சென்றார். வேடிக்கையான தோற்றத்தில் இருந்த அவரை அனைவரும் திரும்பிப் பார்த்து புன்னகை புரிந்தனர். சிலர் அவரைத் தேடிச் சென்று பாராட்டினர்.
Wildlife Week Celebration என்பதைத்தான் வன உயிரின வாரவிழா என தமிழில் சொல்கிறோம். Wildlife எனும் ஆங்கிலச் சொல்லின் அர்த்தம் வனத்தில் இருக்கும் உயிரினங்களை மட்டுமே குறிப்பது அல்ல. நம் வீட்டின் உள்ளே இருக்கும் பல்லி, நாம் தெருவில் பார்க்கும் காகம், வீட்டுத் தோட்டத்தில் வளரும் புற்கள், அதில் இருக்கும் சிறிய பூச்சி இவையனைத்தும் கூட Wildlifeல் அடக்கம். வன உயிரின வாரவிழா எனும் பெயரை மாற்றி புறவுலகைப் போற்றும் வாரவிழா எனக் கொண்டாட வேண்டும். புறவுலகிற்கு ஏற்படும் பாதிப்புகளையும், அவற்றைத் தவிர்க்க நம்மால் செய்ய வேண்டியதையும், இயற்கை மற்றும் நமது பல்லுயிர் வளத்தினைப் பற்றி அறிந்து கொள்ளவும், அவற்றைப் போற்றவும் இது போன்ற நிகழ்ச்சிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஒரு வார காலத்தில் பெற்ற படிப்பினையை வாழ்நாள் முழுவதும் அனைவரின் ஞாபகத்திலும் வைத்துக் கடைபிடிக்குமாறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். கிடைக்கும் இந்த வாய்ப்பை அரசுத் துறைகளும், அரசு சாரா நிறுவனங்களும் சரியான முறையில் பயன்படுத்துதல் அவசியம்.
——–
9 அக்டோபர் அன்று தி ஹிந்து தமிழ், சிந்தனைக்களம், வலைஞர் பக்கத்தில் “சரியாக நடக்கின்றனவா வன உயிரின வார விழாக்கள்? எனும் தலைப்பில் வெளியான கட்டுரையின் முழுவடிவம். அதன் உரலி இங்கே. அதன் PDF இங்கே.
இயற்கையை அழித்தா வளர்ச்சி?
கடந்த ஆகஸ்டு 2014 மற்றும் ஜனவரி 2015 நடந்த இரண்டே தேசிய காட்டுயிர் வாரியக் (National Board for Wildlife – NBWL) கலந்தாய்வுக் கூட்டங்களில், காட்டுயிர் சரணாலயங்களிலும் தேசிய பூங்கா பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் உள்ள சுமார் 2,300 ஹெக்டேர்கள் இயற்கையான வாழிடப் பகுதிகள், வளர்ச்சிப் பணிகளுக்காக எடுத்துக் கொள்வதற்காக ஆலோசனை செய்யப்பட்டது. சென்ற ஆண்டு செப்டம்பரிலிருந்து டிசம்பர் வரை நடந்த வன ஆலோசனை செயற்குழு (Forest Advisory Committee) கூட்டங்களில், சுமார் 3,300 ஹெக்டேர்கள் பரப்பு வனப்பகுதியை 28 வளர்ச்சித் திட்டங்களுக்காக எடுத்துக் கொள்ளவும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கோரிக்கைகள்யாவும் சாலை, இரயில் பாதை மற்றும் மின் தொடர் கம்பிகள் அமைக்கும் திட்டங்களுக்காகவே. இத்திட்டங்களில் பல பெரும்பாலும் ஒப்புதலும் பெற்றுவிடும்.
சுரங்கப் பணிகளுக்காகவும், விவசாயத்திற்காகவும் திருத்தப்பட்டு, நீர்த்தேக்கங்களின் கீழ் அமிழ்ந்து வனப்பகுதிகள் காணாமல் போகும் இவ்வேளையில், பல்லாயிரம் கி.மீ நீளங்களில் இயற்கையான வாழிடங்களை ஊடுருவி அமைக்கப்படும் , நெடிய சாலை, கால்வாய், இரயில் பாதை, மின்கம்பித் தொடர் போன்ற நீள் கட்டமைப்புத் திட்டங்கள் (Linear infrastructure Projects) நமது வனங்களை அபாயத்திற்குள்ளாக்குகின்றன.
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமும் (Ministry of Environment, Forest and Climate Change), இது போன்ற திட்டங்களுக்கு ஆதரவாக அதன் வரைமுறைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்திக் கொண்டே கொண்டே இருக்கிறது. உதாரணமாக, இந்த அமைச்சகம், இது போன்ற திட்டங்களை செயல்படுத்தும் மத்திய நிறுவனத்திற்கு மரங்களை வெட்ட கொள்கையளவில் அனுமதி அளித்துள்ளது, அதாவது வனப்பாதுகாப்புச் சட்டம் 1980ன் கீழ் முதல் கட்ட ஒப்புதலை அளித்துள்ளது. இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமானால் இது போன்ற திட்டங்களுக்கு கோட்ட வன அலுவலரின் (Divisional Forest Officer) அனுமதி மட்டுமே போதும். இதனால் வளர்ச்சிப் பணிகளுக்காக வனப்பகுதிகளை கையகப்படுத்தும் வேளையில், எடுத்துக் கொள்ளப்படும் வனப்பரப்பப்பிற்கு சரிசமமான இடத்தை வேறெங்கிலும் கொடுத்து ஈடுகட்டி, காடு வளர்ப்புத் திட்டங்கள் தொடர்பான இரண்டாம் கட்ட ஒப்புதல்கள் எதையும் பெறத்தேவையில்லை.
இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார மேம்பாட்டிற்கும், துரிதமாக இடம்விட்டு இடம் செல்லவும், சரியான நேரத்தில் செய்ய வேண்டிய சேவைகளுக்கும் சாலைகளும், மின் தொடர் கம்பிகளும் துணைபுரியும் என்பதென்னவோ உண்மைதான். ஆனால், அதே வேளையில் அவை இயற்கையான வாழிடங்களுக்கும், கிராமப்புறத்தில் வாழும் பொதுமக்களுக்கும், பழங்குடியினருக்கும் பல்வேறு வகையில் ஊறு விளைவிக்கின்றன. வாழிடங்களை துண்டாடுகின்றன. வனப்பகுதியின் வழியே செல்லும் சாலைகள் அகலமாகிக் கொண்டே போவதும் வாகனப் பெருக்கமும் காட்டுயிர்கள் இடம்பெயர்விற்கு தடையாக உள்ளன. இதனால் பெரும்பாலான காட்டுயிர்கள் சாலைகளைக் கடந்து செல்வதை தவிர்க்கின்றன. பல காட்டுயிர்களுக்கு சாலைகள் கிட்டத்தட்ட வனப்பகுதியின் குறுக்கே கட்டப்பட்ட மிக உயரமான சுவரைப் போலவோ அல்லது வெட்டப்பட்ட ஆழமான அகழியைப் போலவோதான். சாலை விரிவாக்கத் திட்டங்களும், நான்கு வழிச்சாலைகளும் பல காட்டுயிர்களின் இயற்கையான வழித்தடங்களை வெகுவாக பாதிக்கின்றன. உதாரணமாக, மத்திய இந்தியாவில் உள்ள பெஞ்ச் மற்றும் கான்ஹா புலிகள் காப்பத்தின் குறுக்கே போடப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை 7 அங்குள்ள மிக முக்கியமான காட்டுயிர் வழித்தடத்தை ஊடுருவி செல்கிறது செல்கிறது.
சாலைகள், மலைப்பாங்கான பகுதிகளில் வனப்பகுதியின் சீரழிவிற்கும், நிலச்சரிவிற்கும், மண் அரிப்பிற்கும் காரணமாகின்றன. இதை இமயமலைப் பகுதிகளிலும், மேற்குத் தொடர்சி மலைப்பகுதிகளிலும் தினம் தோறும் காணலாம். சிதைக்கப்படாத வனப்பகுதியைக் காட்டிலும், செங்குத்தான மலைச்சரிவில் போடப்பட்டுள்ள சாலையினால் பல நூறு மடங்கு நிலச்சரிவும், மண் அரிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது என 2006ல் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலைப்பாதையின் வழியே செல்லும் சாலையோரங்களில் உள்ள இயற்கையாக வளர்ந்திருக்கும் தாவரங்கள் சரிவில் இருக்கும் மண்ணை இறுக்கிப் பிடித்துக் கொள்ளவும், நிலச்சரிவினை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. ஆனால், சாலை இடும் பணிகள், ஓரிடத்தில் சுரண்டப்பட்ட மண், கப்பி முதலிய தேவையற்ற பொருட்களை சாலையோரங்களில் கொட்டிக் குவித்தல், இயற்கையாக வளர்ந்திருக்கும் சாலையோரத் தாவரங்களை வெட்டிச் சாய்த்தல், போன்ற அந்த நிலப்பகுதிக்கும், சூழலுக்கும் ஒவ்வாத வகையில் செய்யப்படும் போது, இயற்கையான சூழல் சீரழியவும், மண் அரிப்பு மென்மேலும் ஏற்படவும், களைச்செடிகள் பெருகவும் ஏதுவாகிறது.

சாலையோரங்களில் வாழும் இயற்கையான தகரை/பெரணி (Fern) தாவரங்களை (இடது) வெட்டி அகற்றுவதால் அங்கே உண்ணிச் செடி (Lantana camera) போன்ற களைச்செடிகள் மண்டும்.
இது மட்டுமல்ல, இலட்சக்கணக்கான காட்டுயிர்கள் சீறி வரும் வாகனங்களின் சக்கரங்களில் நசுங்கி உயிரிழக்கின்றன. சின்னஞ்சிறு பூச்சிகள், பல அரிய, உலகில் வேறெங்கிலும் தென்படாத தவளை மற்றும் ஊர்வன இனங்கள், பறவைகள், பெரிய காட்டுயிர்களான மான், சிறுத்தை, புலி ஏன் யானைகள் கூட சாலையில் அடிபட்டு உயிரிழந்து கொண்டிருப்பதை இந்தியாவில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் மூலமாக அறியமுடிகிறது. இந்த சில ஆய்வு முடிவுகளின் படி இந்தியாவில் நாள் ஒன்றிற்கு, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், சுமார் 10 உயிரினங்கள் மடிந்து போவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகை இன்னும் கூடுதலாகவே இருக்கக் கூடும். ஏனெனில், பதிவு செய்யப்படாமல் போன, சாலையில் உயிரிழந்த உயிரினங்களையும், வாகனத்தில் அடிபட்டு அதே இடத்தில் உயிரிழக்காமல் ஊனமாகவோ, சிறிது நாள் கழித்தோ, வேறிடத்திலோ இறந்து போனவற்றை நாம் அறிய முடியாத காரணத்தினால் அவை கணக்கில் வராது.
தினமும் எண்ணிலடங்கா காட்டுயிர்கள் மின்னோட்டமுள்ள கம்பிகளால் கொல்லப்படுகின்றன. திருட்டு வேட்டையர்கள் மின் கம்பிகளிலிருந்து திருட்டுத்தனமாக மின்சாரத்தை இழுத்து காண்டாமிருகம், மான்கள் என பல வகையான உயிரினங்களைக் கொல்கின்றனர். மின் கம்பிகளினூடே பறந்து செல்லும் போது எதிர்பாராவிதமாக பூநாரை (Flamingo), சாரஸ் பெருங்கொக்கு (Sarus Crane), பாறு கழுகுகள் (Vultures), கானல் மயில் (Great Indian Bustard) போன்ற பல வித பெரிய பறவையினங்கள் உயிரிழக்கின்றன. மின் வேலிகளால் யானைகளும் காட்டெருதுகளும் (Gaur) கூட மடிகின்றன. இரயில் தடங்களில் அரைபட்டும் பல உயிரினங்கள் தினமும் உயிரிழிக்கின்றன. எனினும் யானை முதலான பெரிய உயிரினங்கள் இவ்வாறு அடிபட்டுச் சாகும் போதுதான், இவை நமது கவனத்திற்கு வருகின்றன. இவ்வாறு தினமும் நடக்கும் காட்டுயிர் உயிரிழப்பு, நீள் கட்டமைப்புத் திட்டங்கள், காட்டுயிர்ப் பாதுகாப்பினை கவனத்தில் கொள்ளாமல் செயல்படுத்தப்படுவதையே காட்டுகிறது.
இந்த நீள் கட்டமைப்புத் திட்டங்களினால் ஏற்படும் பாதிப்பு அவற்றிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தைவிடவும் பன்மடங்கு அதிகம் என்பதே சோகமான உண்மை. சாலை, இரயில் தடம், மின் கம்பித் தொடர் இவற்றிற்காக அகற்றப்படும் பகுதியினால் இயற்கையான வாழிடத்திற்கு ஏற்படுத்தப்படும் பாதிப்பு அங்கு மட்டுமே இல்லாமல், அவ்வாழிடம் சிதைந்திருப்பதை அதன் ஓரங்களிலும், அதையும் தாண்டி அவ்வாழிடத்தினுள்ளே பல தூரம் வரையும் காண முடியும். இயற்கையான வாழிடத்தின் குறுக்கே செல்லும் ஒவ்வொரு கிலோ மீட்டர் சாலையும் குறைந்தது அதைச் சுற்றியுள்ள 10 ஹெக்டேர்கள் பரப்பிற்கு பாதிப்பினை ஏற்படுத்தும். கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் 2009ல் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாகக வனத்தின் உட்பகுதியினை விட சாலையோரங்களில் மரங்கள் சாவது இரண்டரை மடங்கு அதிகம் என கண்டுபிடிக்கப்பட்டது. இது போலவே, காட்டுயிர்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் நடத்தைக்கு ஏற்படும் பாதிப்பு சாலையிலிருந்து வனத்தினுள் சுமார் 1 கீமீ துரத்திற்கு இருந்தது. சாலைகள் சூழியல் பொறியாகவும் (Ecological traps) விளங்குகிறது. அதாவது வனப்பகுதியில் உள்ள பாம்பு, ஓணான் முதலிய ஊர்வன இனங்கள் வெயில் காய (Basking) இயற்கையான பாறை, கட்டாந்தரையை விட்டு விட்டு சாலைக்கு வருகின்றன. (குளிர் இரத்தப் பிராணிகளான அவை உயிர்வாழ அவற்றின் உடலின் வெப்பநிலையை, சுற்றுப்புறத்துடன் சமநிலை செய்து கொள்ள வெயில் காய்வது இன்றியமையாதது). இந்தியாவில் சாலைகளினாலும், போக்குவரத்தினாலும் காட்டுயிர்களுக்கு ஏற்படும் விளைவுகளைப் பற்றி 2009ல் ஒரு விரிவான திறனாய்வு செய்யப்பட்டது. இதில் காட்டுயிர்களுக்கும், இயற்கையான வாழிடங்களுக்கும் ஏற்படும் நன்மைகளைவிட பாதகமான விளைவுகள் ஐந்து மடங்காக இருப்பது அறியப்பட்டது.
சாலைகளுக்காகவும், அவற்றை விரிவு படுத்தவும் மரங்கள் அகற்றப்படுவதால், மரவாழ் உயிரினங்களான மலையணில், குரங்குகள் யாவும் மரம் விட்டு மரம் தாவ முடியாமல் தரையின் கீழிறங்கி சாலையைக் கடக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இதனால் இவை அவ்வழியே சீறி வரும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் ஆபத்து அதிகமாகிறது. அதுபோலவே மின் தொடர் கம்பிகளுக்காக மரங்களை அகற்றும் போதும் மரவிதானப்பகுதியில் இடைவெளி ஏற்படுகிறது. இதனால் இவ்வுயிரினங்கள் மின்கம்பிகளை தவறுதலாக பற்றிக்கொண்டு இடம்பெயற முயற்சிக்கும் போது மின்சாரம் தாக்கியும் உயிரிழக்கின்றன.
சாலைகள், மின் தொடர் கம்பிகள், அகலமான கால்வாய்கள், இரயில் தடங்கள் போன்ற நீள் குறுக்கீடுகள் (linear intrusions) ஒன்றோ அதற்கு மேலோ ஒரு இயற்கையான நிலவமைப்பில் அமைக்கப்பட்டால் அவ்வாழிடத்திற்கும் அதில் வாழும் உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் பன்மடங்காகிறது.
ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு எந்த அளவு நீள் கட்டமைப்புத் திட்டங்கள் அவசியமோ அது போலவே இன்றியமையாதது ஒரு நாட்டின் வனங்கள். அழித்துவிட்டால் மீண்டும் உருவாக்க அவை ஒன்றும் இயந்திரங்கள் அல்ல. தாவரங்கள், உயிரினங்கள், பழங்குடியினர்கள் என பல உயிர்கள் பொதிந்திருக்கும் ஓர் உயிர்ச்சூழல் அது.
நாட்டை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்லவும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும் ஒரு அறிவார்ந்த சமூகம், வளர்ச்சித் திட்டங்களை சிறந்த தொழில்நுட்ப உதவியுடன் தான் எதிர்கொள்ளும். அவ்வேளையில், அத்திட்டங்களை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் விசாலப்பார்வையுடன் அத்திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். தற்போதைய அமைச்சகத்தின் ஆணையைப் போல் இது போன்ற திட்டங்களின் செயல்பாடுகளை கோட்ட வன அலுவலர் மட்டுமே நிர்ணயிக்கும் நிலை இருக்கக்கூடாது.
பொருளாதார ஆதாயத்திற்கு மட்டுமே ஆதரவளிக்காமல், நீள் கட்டமைப்புத் திட்டங்களால் ஏற்படும் சூழியல் பாதிப்புகளையும் நம்பத்தக்க, வெளிப்படையான விதத்திலும் அளவிடவும் அதன் நீண்ட கால பாதிப்புகளைச் சமாளிக்கவும் வேண்டும். இது போன்ற திட்டங்கள் பெரும்பாலும் பணம் கொழிக்கும் கான்ட்டிராக்ட்களையும், ஊழலையும் தான் உள்ளடக்கியிருக்கும்.
இதனால் திட்டத்தின் அளவிற்கே (சாலையாக இருப்பின் அதிக நீளமான, அகலமான சாலையே அதிக ஆதாயம் தரும்) முக்கியத்துவமளிக்கப்படுமே தவிர வேலையின் தரம், பயன் மற்றும் பாதுகாப்பு போன்றவை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும்.
உலகின் பல நாடுகளில் சாலை போன்ற நீள் கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்குவதற்கு முன் பொறியியலாளர்கள், சூழியலாளார்கள், பொருளாதார வல்லுனர்கள் என பல துறைகளைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்களும், வல்லுனர்களும் கலந்தாலோசித்த பின்னரே செயல்படுத்தப்படுகிறது. சாலைச்சூழியல் (Road Ecology) எனும் வளர்ந்து வரும் இத்துறையில் பல்துறை வல்லுனர்கள் பயன்முறை ஆய்வுகளை (applied research) மேற்கொண்டு இத்திட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளை ஆவணப்படுத்தியும், இயற்கையான சூழல் பெருமளவவில் பாதிப்படையா வண்ணம் தகுந்த மாற்று வழிகளையும், சரியான வடிவமைப்பையும், பரிந்துரைத்து வருகின்றனர்.
இந்தியாவில் 2011ல் அமைக்கப்பட்டிருந்த தேசிய காட்டுயிர் வாரியத்தின் நிலைக் குழு (Standing Committee) நீள் குறுக்கீடுகள் தொடர்பாக பின்பற்றவேண்டிய வரைவு நெறிமுறைகளையும், பின்னணித் தகவல்களையும் தயாரித்து அதன் முதல் பதிப்பை வெளியிட்டது (இங்கே காண்க). இந்தப் பதிப்பிலிருந்து ஒரு பகுதி டிசம்பர் 2014ல் துணை நிலைக்குழு (subcommittee) வெளியிட்ட பாதுகாக்கப்பட்ட இயற்கையான வாழிடங்களின் வழியே செல்லும் சாலைகளுக்கான நெறிமுறையாக ஆக்கப்பட்டது (இங்கே காண்க). இந்த ஆவணத்தின் முதன்மைக் கொள்கை இயற்கையான வாழிடங்களைப் தவிர்த்தலே. அதாவது, காட்டுயிர் பாதுகாப்புப் பகுதிகளையும், ஆபாயத்திற்குள்ளான இயற்கையான சூழலமைப்புகளையும், தேவையில்லாமல் நீள் குறுக்கீடுகளால் சீரழியாமல் பாதுகாப்பதோடு, காட்டுயிர் வழித்தடங்களை பாதிக்காமல் சாலைகளை சுற்று வழியில் அமைத்து, இயற்கையான வாழிடங்களின் விளிம்பில் இருக்கும் கிராமங்கள், சிற்றூர்களிடையே இணைப்பினை மேம்படுத்த மேம்படுத்துவதேயாகும்.

இயற்கையான வாழிடங்களின் வழியே அமைக்கப்படும் அகலமான சாலைகள் பல உயிரினங்களுக்கு பல வகையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இது போன்ற, முக்கியமான சூழலில் குறுக்கே சாலைகள் அமைக்கப்படும் முன் காட்டுயிர்களின் நடமாட்டத்தில் ஏற்படும் இடர்பாடுகளை குறைக்க எங்கெங்கே மேம்பாலங்கள் (overpass), தரையடிப்பாதைகள், மதகுப்பாலங்கள் (underpass and culvert) அமைக்கலாம் என்பதற்கான ஆலோசனைகளை காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து பெறவேண்டும். அது போலவே சாலைகளில் ஏற்படும் காட்டுயிர்களின் உயிரிழப்பைக் குறைக்க தேவையான இடங்களில் வேகத்தடைகளும், போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதும் அவசியம்.
யானைகள் கடக்கும் பகுதிகளில் அகச்சிவப்புக் கதிர்களை வீசும் கருவிகளைப் பொருத்தி அவை வருவதை அறிந்து, இத்தகவலை இரயில் ஓட்டுனரின் கைபேசியில் குறுஞ்செய்தியாக அனுப்பும் தொழில்நுட்ப அமைப்பினை இரயில் தடங்களில் வைப்பதன் மூலம், அவை இரயிலில் அடிபட்டுச் சாவதைத் தடுக்க முடியும்.
மின்கம்பித் தொடர்களின் கட்டமைப்பில் சிறு மாறுதல் ஏற்படுத்துவதன் மூலம் அதாவது யானை போன்ற பெரிய உயிரினங்கள் கடக்கும் பகுதியில் உயரமாக வைப்பதனாலும், கானல் மயில், பாறு கழுகுகள் போன்ற பெரிய பறவைகளின் பார்வைக்குத் தெரியும் வகையில் அமைப்பதனாலும் அவை மின் கம்பிகளில் அடிபட்டு இறப்பதைத் தவிர்க்க முடியும். சாலையோரங்களில் வளர்ந்திருக்கும் இயல் தாவரங்களையும், மரங்களையும் வெட்டாமல் வைப்பதன் மூலம் உயிரினங்களின் இடம்பெயர்வுக்கு உதவுவது மட்டுமல்லாமல், அந்தத் தடத்தையும் அழகாக்கும்.
நீள் கட்டமைப்புகள் இயற்கையான சூழலின் மேல் கரிசனம் கொண்டு, அறிவியல் பூர்வமாகவும், சரியான வடிவமைப்புகளைக் கொண்டும் இருந்தால் பொருளாதார மேம்பாட்டிற்கும் உதவும், இயற்கையான வாழிடத்தையும் பாதுகாக்கும்.
———-
மார்ச் 19, 2015 தி ஹிந்து ஆங்கிலம் தினசரியில் வெளியான T. R. Shankar Raman எழுதிய “The long road to growth” கட்டுரையின் தமிழாக்கம். இக்கட்டுரையின் சுருக்கமான பதிப்பு “தி இந்து” தமிழ் தினசரியில் 18-04-2015அன்று வெளியானது. அதை இங்கே காணலாம்.