UYIRI

Nature writing in Tamil

Archive for September 2011

வளங்குன்றா விவசாயமும் பல்லுயிர்ப் பாதுகாப்பும்

leave a comment »

தேசியப்பூங்காக்கள், சரணாலயங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளே இந்தியப் பல்லுயிரியத்தின் புகலிடமாக உள்ளது. அரிய தாவரங்களும் விலங்குகளும் இப்பாதுகாப்பட்ட பகுதிகளில் மட்டுமே தென்படுமா? இவை இப்பகுதிகளில் மட்டுமே குடிகொண்டிருக்க வேண்டுமா? எல்லைக்கோடு என்பது மனிதனுக்கு மட்டும்தானே, மற்ற உயிரினங்களுக்குக் கிடையாதல்லவா?

IMG_4213_gaur_coffee_700

காப்பிதோட்டத்தின் அருகில் மேயும் காட்டெருது

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பல இடங்களில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ஒட்டியே தேயிலை, காப்பி, ஏலம் போன்றவை விளைவிக்கப்படுகின்றன. இது போன்ற அரசுக்குச் சொந்தமில்லாத தனியார் விளைநிலங்களிலும் அரிய தாவரங்களும் விலங்குகளும் தென்படும். இவற்றின் பாதுகாப்பும் மிகவும் முக்கியமாகும். ஏனெனில் வனப்பகுதிகளிக்கிடையே உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டும், வனப்பகுதிகள் குறைந்தும், சிதைவுற்றும், அதில் வாழும் உயிரினங்கள் வேட்டையடப்பட்டும், வாழிட இழப்பால் அருகியும் வரும் இச்சூழலில் பல்லுயிர்பாதுகாப்பு என்பது பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமல்லாமல், வனச்செல்வங்கள் தென்படும் இடங்கள் அனைத்தையும் நல்ல முறையில் பாதுகாப்பது அவசியம்.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலைத்தோட்டமும் அதனையடுத்த, மழைக்காட்டுப் பகுதியும்.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலைத்தோட்டமும் அதனையடுத்த, மழைக்காட்டுப் பகுதியும்.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி பல ஆண்டுகளாக அதன் நிலப்பரப்பில் பலவிதமான மாற்றங்களை அடைந்திருக்கிறது. இப்பகுதியில் இருந்த அடர்ந்த வனப்பகுதியில் 40% திருத்தப்பட்டு   (1920லிருந்து 1990 வரை) காப்பி, தேயிலை போன்ற தோட்டங்களாகவும், நீர்மின் திட்டங்களுக்காகவும் மாற்றப்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களின் மொத்தப் பரப்பளவு சுமார் 119,000 ஹெக்டெர்கள், காப்பி சுமார் 340,000 ஹெக்டெர்கள் மற்றும் ஏலம் சுமார் 73,000 ஹெக்டெர்கள். இவை அனைத்தும் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகப் பகுதிகளில் பரவியுள்ளது. மிகப்பெரிய நிலப்பரப்பில் இத்தோட்டங்கள் இருந்தாலும், இவற்றில் பெரும்பான்மையான பகுதிகள் அரசால் பாதுகாக்கப்பட்ட, பல்லுயிரியம் மிகுந்த இடங்களின் அருகாமையிலேயே அமைந்துள்ளது. இதனாலேயே பலவிதமான வன உயிரினங்களும், அரிய தாவரங்களும் காப்பி மற்றும் தேயிலைத் தோட்டங்களில் தென்படுவதற்கான காரணம். ஆனால் இப்பகுதிகளில் வாழும் இவ்வுயிரினங்களை பாதுகாக்கவோ சரியான முறையில் பராமரிப்பதற்காகவோ எந்த ஒரு திட்டமோ, சரியான மேலான்மைக்கொள்கைகளோ இல்லை.

தேயிலை, காப்பி மற்றும் இதர தோட்டங்களில் அவற்றை பராமரிக்க, உற்பத்தியைப் பெருக்க கையாளும் சில முறைகள் பெரும்பாலும் அப்பகுதியில் உள்ள பல்லுயிரியத்தையும், சுற்றுப்புற சூழலையும் பாதிப்படைய செய்கிறது. இதற்கு பல உதாரணங்களை கூறலாம். உற்பத்தியைப் பெருக்க எஞ்சியுள்ள மழைக்காட்டுத்தீவுகள், மலை உச்சியிலமைந்த புல்வெளிகள் ஆகியவற்றை முழுவதுமாக திருத்தி அமைத்து ஓரினப்பயிர்களை பயிரிடுதல், எஞ்சியுள்ள வனப்பகுதிகளையும் சீரழித்தல், திருட்டு வேட்டை, தோட்டங்களில் தென்படும் உயிரினங்களுக்கு எவ்விதத்திலும் பயன்படாத வெளிநாட்டு மரங்களை நிழலுக்காகவும், விறகிற்காகவும் வளர்த்தல், நச்சுமிக்க, தடைசெய்யப்பட்ட இரசாயன உரங்களை கட்டுப்பாடில்லாமல் பரவலாக உபயோகித்தல், தொழிற்சாலை, குடியிருப்புக் கழிவுகளை ஓடையில் கலக்கச்செய்து நல்ல நீரை மாசுபடுத்துதல், தோட்டத்தில் அம்மண்ணுக்குச் செந்தமான இயற்கையாக வளரும் தாவரங்களை களைகளென களைக்கொல்லிகளை அடித்தும், வெட்டியும் அப்புறப்படுத்துதல், ஓடைகளின் கரைப்பகுதி வரை பயிரிட்டு அவற்றிற்கு இரசாயன உரங்களை தெளிக்கும் போது அவை தூய நீரோடு கலக்க ஏதுசெய்தல் போன்றவை உதாரணங்களில் சில.

தேயிலை, காப்பித் தோட்ட நிர்வாகிகளில் பெரும்பாலானோர் அவற்றின் உற்பத்தியை பெருக்குவதிலேயே வியாபார நோக்குடன் செயல்படுகின்றனர். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலுள்ள இத்தோட்டங்களினால் அங்குள்ள பல்லுயிரியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் எந்த விதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதைப்பற்றிய விழிப்புணர்வும், அப்பாதிப்புகளை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தோட்ட நிர்வாகத்தின் கடமையாகும். வியாபாரத்தையும், பயிர் உற்பத்தியையும் அதேசமயத்தில் சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்காவண்ணம் நடவடிக்கைள் எடுப்பது மிகவும் அவசியம். எனினும் இது போன்ற செயல்பாடுகள் இந்தியாவில் மிகச்சில இடங்களிலேயே, மிகச்சொற்பமான அளவிலேயே நிகழ்கிறது.

தோட்ட நிர்வாகம் சுற்றுச்சூழலுக்கும் பல்லுயிர்ப்பாதுகாப்பிற்கும் எவ்வாறு துணைபுரியலாம்?

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலை காப்பி மற்றும் பிற தோட்டங்களில் எஞ்சியுள்ள அங்குமிங்கும் சிதறிக்கிடக்கும் சிறுசிறு மழைக்காட்டுத்தீவுகளையும், சோலைப்புல்வெளிகளையும், ஓடைகளையும், ஓடையோரக்காடுகளையும் போற்றிப் பாதுகாக்கலாம். முக்கியமாக பல்லுயிரியம் மிகுந்துள்ள ஆனைமலை மற்றும் நீலகிரிப் பகுதிகளில் அமைந்துள்ள இவ்வகையான தீவுக்காடுகளை மேலும் சீரழிவிற்குள்ளாக்காமல் அங்கு தஞ்சமடைந்துள்ள அரிய உயிரினங்களான யானை, பெரிய இருவாசி மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே வாழும் ஓரிட வாசிகளான சிங்கவால் குரங்கு, நீலகிரி கருமந்தி, மலபார் இருவாசி போன்ற உயிரினங்களையும் பாதுகாக்கலாம். இத்தோட்டங்களில் நிழலுக்காக வளர்க்கப்படும் சில்வர் ஓக் (Silver Oak Grevillea robusta), அல்பீசியா (Albizia sp.), மீசோப்சிஸ் (Maesopsis eminii) போன்ற இம்மண்ணுக்குச்சொந்தமில்லாத மரங்களை வளர்ப்பதைத் தவிர்த்து தோட்டம் அமைந்துள்ள இடம், மழையளவு மற்றும் உயரத்திற்கு ஏற்றவாறு அப்பகுதிக்கு அருகாமையில் இயற்கையாக வளரும் மரங்களை வளர்க்கலாம். இது அப்பகுதியிலுள்ள உயிரினங்களுக்கு வாழ இடத்தையும், உணவளித்தும், இடம்பெயர்வதற்கு உதவியும், அம்மண்ணுக்கு இயற்கையான செழிப்பையும் தரும். மண்ணரிப்பைத் தடுக்கும் வகையில் தாவரங்களை சரிவுகளில் வளர்த்தல், ஒருங்கினைந்த பயிர் மேலான்மை, இரசாயன உரங்களின் உபயோகத்தைக் குறைத்தல் அல்லது முற்றிலுமாகத் தவிர்த்தல், தோட்டப்பண்ணைகளிலும் அது சார்ந்த தொழிற்சாலைகளிலும், வீட்டுக்குடியிருப்புப் பகுதிகளில் சரியான கழிவுக்கட்டுப்பாடு மற்றும் கழிவு மேலான்மையை கடைபிடித்தல் போன்றவை தோட்ட நிர்வாகம் கடைபிடிக்கவேண்டிய நல்ல செயல்பாடுகளில் சில.

பெரிய இருவாசியை  மழைக்காட்டுப் பகுதியை அடுத்த தேயிலை, காப்பி தோட்டங்களிலும் கூட காணலாம்.

பெரிய இருவாசியை மழைக்காட்டுப் பகுதியை அடுத்த தேயிலை, காப்பி தோட்டங்களிலும் கூட காணலாம்.

அதோடு தோட்டத்தொழிலாளர்களுக்கு முறையான வீடு, கல்வி, மருத்துவ வசதி, சரியான ஊதியம் போன்ற செயல்பாடுகள் தோட்ட நிர்வாகத்தின் சமுதான கடமையுணர்வை எடுத்துக்காட்டவும், சமூகத்தில் நற்பெயரையும், விளைபொருளின் தரத்தை உயர்த்தவும் உதவும்.

சரி இவ்வாறு ஒரு தோட்ட நிர்வாகம் நல்ல செயல்பாடுகள் அனைத்தையும் கடைபிடிப்பதனால் அவர்களுக்குக் கிடைக்கும் நற்பெயரைத்தவிர வேறு என்ன லாபம் கிடைக்கும்? இது எவ்வாறு அவர்களது தொழில் முன்னேற்றத்திற்கும், விளைபொருளின் தரத்தை உயர்த்தவும் ஏதுவாகும்?

நமக்கு பரிச்சயமான ISI, Agmark போன்ற ஒரு பொருளின் தரத்தைக் குறிக்கும் முத்திரைகளைப்போல் “வளங்குன்றா விவசாய கட்டமைப்பு” (Sustainable Agriculture Network – SAN) வகுத்துள்ள நியமங்களை பின்பற்றி அதன் வழி தேயிலை, காப்பித் தோட்டங்களில் நடவடிக்கை மேற்கொண்டால், “மழைக்காட்டு கூட்டமைப்பு” (Rainforest Alliance) தரும் சான்றிதழையும், அதன் முத்திரையை அந்நிர்வாகம் தமது விளைபொருட்களின் மீது பதித்துக்கொள்ளும் உரிமையையும் பெறும். இம்முத்திரையை கவனித்து அவர்களின் விளைபொருட்கள் சர்வதேச சந்தையில் சிறந்த அளவில் விலைபோகும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.

logos

சர்வதேச அளவில் இதுவரை பல நாடுகளில் சுமார் 350,00 ஹெக்டெர்கள் பரப்பிலான தேயிலை மற்றும் காப்பித்தோட்டங்கள் மழைக்காட்டு கூட்டமைப்பின் சான்றிதழைப் பெற்றுள்ளது. SAN தேயிலை மற்றும் காப்பி போன்ற தோட்டப்பண்ணைகள் பின்பற்ற வேண்டிய பத்து நியமங்களை வகுத்துள்ளது. அவை முறையே:

1.            சமூக மற்றும் சுற்றுச்சூழல் மேலான்மை (Social and Environmental management)

2.            இயற்கைச்சூழல் பாதுகாப்பு (Ecosystem Conservation)

3.            காட்டுயிர்ப் பாதுகாப்பு (Wildlife Protection)

4.            நீர்நிலைகள் பாதுகாப்பு (Water Conservation)

5.            தொழிலாளர்கள் உரிமை (Fair treatment and good working conditions for workers)

6.            தொழிலாளர்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு (Occupational health and safety)

7.            சமூக உறவு மேம்பாடு (Community relations)

8.            ஒருங்கிணைந்த பயிர் மேலான்மை (Integrated crop management)

9.            மண்வள மேலான்மை மற்றும் அதன் பாதுகாப்பு (Soil management and conservation)

10.          ஒருங்கிணைந்த கழிவு மேலான்மை (Integrated waste management)

இந்த நியமங்களை விளக்கும் படங்களுடன் கூடிய சுவரொட்டிகள் (ஆங்கிலம், தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில்) தோட்டத் தொழிலாளர்களுக்கும், மேலாளர்களுக்கும் விநியோகத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றைப் பெற அணுகவும் mail@ecoagriculture.in

Tamil_posters collage_700

இந்தியாவில் வளங்குன்றா விவசாயத்தின் அவசியம், பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் SAN நியமங்களை பின்பற்றுவதனால் ஏற்படும் நல்ல விளைவுகள் ஆகியவற்றைப்பற்றிய விழிப்புணர்வை தேயிலை, காப்பித் தோட்டப்பண்ணை நிர்வாகங்களுக்கு ஏற்படுத்துதல் அவசியம். அதற்கு மழைக்காட்டு கூட்டமைப்பும் SAN-ன் இந்தியக் கூட்டாளியான இயற்கை பாதுகாப்பு நிறுவனமும் (Nature Conservation Foundation – NCF) இணைந்து பல்லுயிரியத்திற்குப் பெயர்போன மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியிலுள்ள தேயிலை, காப்பி தோட்ட நிர்வாகங்களுக்காக SAN நியமங்களைப்பற்றிய கருத்தரங்குகள், களப்பயிற்சி (குறிப்பாக ஆனைமலை மற்றும் நீலகிரிப் பகுதிகளில்) மற்றும் இணையத்தளம் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் விவரங்களுக்கு www.ecoagriculture.in  இணையத்தளத்தை பார்க்கவும்.

Rainforest Alliance தரச்சான்றிதழ் பெற்ற (கொலம்பிய நாட்டில் விளைந்த) வாழைப்பழம் Fairtrade தரச்சான்றிதழ் பெற்ற (கானா நாட்டில் விளைந்த) அன்னாசிப்பழம்.

Rainforest Alliance தரச்சான்றிதழ் பெற்ற (கொலம்பிய நாட்டில் விளைந்த) வாழைப்பழம் Fairtrade தரச்சான்றிதழ் பெற்ற (கானா நாட்டில் விளைந்த) அன்னாசிப்பழம்.

பூவுலகு இதழில் (ஜூலை -ஆகஸ்ட் 2011) வெளியான கட்டுரையின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு. பூவுலகு இதழின் பதிப்பினைக் இங்கே (PDF) காணலாம்.

Written by P Jeganathan

September 1, 2011 at 3:00 pm