UYIRI

Nature writing in Tamil

Posts Tagged ‘tiger

கருகப்போகும் காடுகள் – Fire of Sumatra நூல் அறிமுகம்

with 2 comments

காட்டுயிர் பாதுகாப்பு அதில் உள்ள சிக்கல்கள், இயற்கை வரலாறு குறித்து பலரும் பல கட்டுரைகள் வழியாகப் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர். தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி. எனினும் கற்பனைக் கதைகள், புதினங்கள் வழியாக (non-fiction) இந்தத் தகவல்களையும் கருத்துகளையும் சொல்வதென்பதும் ஒரு சிறந்த வழியே. அதுவும் அந்தக் கதை உயிரோட்டமாகவும், விறுவிறுப்பாகவும், படிப்பவரின் உணர்வுகளைத் தூண்டும் வகையிலும் இருக்கும்போது சொல்லவரும் கருத்துகள் எளிதில் மனதில் பதியும். புள்ளிவிவரங்களையும், அறிவியல் முறைகளையும், கோட்பாடுகளையும், விளக்கங்களையும், மட்டுமே கொண்ட கட்டுரைகளைவிட இதையெல்லாம் கொண்ட கதை படிப்பவரின் கவனத்தை எளிதில் ஈர்க்கும். இயற்கை, சுற்றுச்சூழல், காட்டுயிர் குறித்துப் பேசும், குழந்தைகளுக்கான படைப்புகள் இந்த வகையில் அதிகமாக இருக்கும். ஆனால், முழுநீள நாவல்கள் குறைவே. மேலை நாடுகளில் இது போன்ற படைப்புகளைக் காணலாம். ஆனால், இந்தியாவில் அதுவும் ஆங்கிலத்தில் இவ்வகையான படைப்புகள் அரிதே. அண்மையில் (2021) வெளியான C.R. ரமண கைலாஷ் எழுதிய “Fire of Sumatra” புலிகள், அவற்றின் வாழ்க்கை முறை, மனிதர்களால் அவை எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஆகியவற்றைப் பற்றிப் பேசும் ஓர் ஆங்கில நாவல்.

இந்த நாவலின் பெயரில் உள்ளது போல் இந்த நாவலின் காட்சிக்களம் சுமத்ரா தீவாக இருந்தாலும், புலிகள், அவற்றின் வாழிடங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உலக அளவில் பொதுவானதே. கதைக்களமும், கதாபாத்திரங்களும் கற்பனையாக இருந்தாலும், சொல்லப்படும் கருத்துகளும், நிகழ்வுகளும் அறிவியல் துல்லியம் கொண்டவை. இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரங்கள் ஒரு புலியின் குடும்பமும், அவற்றைக் காப்பாற்ற முயலும் காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களும், அவர்களுக்கு உதவும் உள்ளூர் ஆர்வலர்கள் சிலருமே. புலிக் குடும்பத்தில் ஐந்து பேர் – அம்மா, அப்பா, மூன்று குட்டிகள். புலிகளில் பெரும்பாலும் பெண் புலிகளே குட்டியைப் பேணுகின்றன. அரிதாகவே ஆண் புலி குட்டிகளைப் பராமரிக்கின்றன, இந்தக் கதையில் வருவதுபோல.
அம்மா புலியான சத்ரா குட்டிகளுக்காக இரை தேட அவற்றை விட்டுச் செல்லும்போது காட்டுத்தீயில் சிக்கி மயங்கிவிடுகிறாள். கண்விழித்துப் பார்க்கும்போது, சில காட்டுயிர் ஆர்வலர்களால் காப்பாற்றப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டுக் கிடக்கிறாள். அங்கு ஏற்கனவே பொறியில் சிக்கி காலை இழந்த வாலி எனும் மற்றொரு புலியைச் சந்திக்கிறாள். அவர்கள் தங்களது நிலைமைகளைப் பற்றி ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்கின்றனர். சத்ரா, தனது குட்டிகளைப் பிரிந்து வாடுகிறாள். அவள் மீண்டும் காட்டுக்குள் சென்றாளா? குட்டிகளோடு சேர்ந்தாளா? என்பதைத்தான் மிக அழகாகவும், சுவாரசியமாகவும் சொல்கிறது இந்த நாவல்.

அதே வேளையில் புலிகளில் வாழ்க்கை முறையையும், அவற்றைக் குறித்த பல இயற்கை வரலாற்றுக் குறிப்புகளும், அவற்றுக்கு மனிதர்களால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் புலிகளே சொல்வதுபோல அமைத்திருப்பது நிச்சயம் வாசகர்களைக் கவரும். சொல்லப்படும் சில கருத்துகள் நம்மை ஆழமாகச் சிந்திக்கவும் வைக்கும். எடுத்துக்காட்டாக, புலிக்குட்டிகளில் ஒன்று தன் தந்தையிடம், “மனிதர்கள் புத்திசாலிகளா?” எனக் கேட்கிறாள் (பக்கம் 86). அதற்குத் தந்தைப் புலி சொல்லும் பதில், “நம்மை திறமையாகக் கொல்வதாலும், நமது வாழிடத்தையும் அழிப்பதாலும் அவர்களைப் புத்திசாலிகள் என்று சொல்வதா? அல்லது இவற்றையெல்லாம் செய்வதால் அவர்களுக்குப் பின்னாளில் ஏற்படப் போகும் விளைவுகளை அறியாமல் இருப்பதால், அவர்களை மனப்பக்குவம் இல்லாத மூடர்கள் என்று சொல்வதா எனத் தெரியவில்லை”.

கதைக்களம் இந்தோனேசியாவைச் சேர்ந்த சுமத்ரா தீவில் நடைபெறுகிறது. ஆகவே அங்குள்ள சில காட்டுயிர்கள் குறித்தும், வனப்பகுதிகளுக்கு ஏற்படும் பேராபத்துகள் குறித்தும் நாம் இந்த நாவலின் வழியே அறிய முடிகிறது. குறிப்பாக, பாமாயில் (எண்ணெய்ப்பனை) சாகுபடிக்காகக் காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து. பாமாயில் தோட்டமிடுவதற்காக, மழைக்காடுகளை வெட்டிச் சாய்த்து அந்த இடத்தை தீ வைத்துக் கொளுத்தும் கொடுமை நடக்கிறது (இது கதையில் மட்டுமல்ல இன்றும் நடந்துகொண்டிருக்கும் ஒரு நிகழ்வுதான்). அந்தக் காடுகளில் தென்படும் ஒரு அரிய வகை வாலில்லாக் குரங்கினம் ‘ஒராங்ஊத்தன்’ (Orangutan). மரவாழ் உயிரினங்களான இவை காடழிப்புக் காரணமாக அழிவின் விளிம்பில் உள்ளன. இந்த நாவலின் ஒரு பகுதியில் (பக்கம் 161) தீ வைத்துக் கொளுத்தப்பட்ட ஒரு காட்டுப் பகுதிக்குச் செல்லும் ஒரு காட்டுயிர் ஆராய்ச்சியாளர் அந்த இடத்தில், தப்பிச் செல்ல முடியாமல் கருகிப்போன ஒரு ஒராங்ஊத்தனின் சடலத்தைக் காண்கிறார். அது தனது இரு கைகளாலும் எதையே கட்டிப்பிடித்துக்கொண்டே எரிந்துபோயிருக்கிறது. கொஞ்சம் கவனித்துப்பார்க்கும்போது அதன் கரங்களுக்குள் இருப்பது கருகிப்போன குட்டி ஒராங்ஊத்தன் என்பதை அறிகிறார். இதைப் படிக்கும்போதே இந்தக் கொடூரமான காட்சி நம் கண்முன்னே வந்து நெஞ்சை உருக வைக்கிறது. அதே வேளையில் இதுபோன்ற நிலை இந்தியக் காடுகளுக்கும், அதில் வாழும் உயிரினங்களுக்கும் நிகழப்போகிறது என்பதை நினைக்கும்போது மனம் கலங்காமல் இருக்க முடியவில்லை.

சமையல் எண்ணெய்களில் மலிவான பாமாயிலை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவில் 13 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பாமாயில் பயிரிடுவதற்கான ஒப்புதலைச் சென்ற ஆண்டு (ஆகஸ்டு 2021) இந்திய அரசு அளித்துள்ளது. இது இந்தியாவில் உள்ள இயற்கை ஆர்வலர்களைப் பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. அதனால், சுமார் 100க்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள், இயற்கை ஆர்வலர்கள் அனைவரும் சேர்ந்து இந்தியப் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். இதில் மலேசியாவும், இந்தோனேசியாவும் செய்த பெரும் தவறை இந்தியாவும் செய்யாமல் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். பாமாயில் சாகுபடிக்காக அந்த நாடுகளில் இருந்த பல்லுயிர்ப்பன்மை வாய்ந்த மழைக்காடுகளைத் திருத்தி அழித்துவிட்டனர், அதுபோல இங்கும் நடக்கவிடக் கூடாது என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

தேசிய சமையல் எண்ணெய் உற்பத்தித் திட்டத்தில் பாமாயிலின் (National Mission on Edible Oils – Oil Palm – NMEO-OP) உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கும் நோக்கத்தில், இந்தியாவில் குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களிலும், அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் சிறப்பு கவனம் செலுத்தப்போவதாகவும், இதைப் பயிரிடுவதற்கான மானியங்களும், உதவித்தொகைகளும் அளிக்கப்படும் எனவும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், முதலான வடகிழக்கு மாநிலங்களும், அந்தமான் நிக்கோபார் தீவுகளும் உலக அளவில் பல்லுயிர்ப்பன்மை மிகுந்த இடங்கள். இங்குள்ள இயற்கையான வாழிடங்களை எந்த வகையிலும் சீர்குலைப்பது அங்குள்ள காட்டுயிர்களுக்கும், அங்கு வாழும் மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எளிமையான ஆங்கிலத்தில் அனைவரும் புரிந்துகொள்ளும் நடையில் உள்ளது இந்த நாவல். எனினும் நடுவில் சற்றே விறுவிறுப்பு குறைந்து தொய்வு ஏற்படுவது போன்ற உணர்வு எழுகிறது. நாவலாசிரியர் ரமண கைலாஷ் அவர்கள் எட்டு வயதாக இருந்தபோது பாதி கருகிய நிலையில் இருந்த ஒராங்ஊத்தனின் படத்தைக் கண்டிருக்கிறார் (அந்தப் படங்களை இங்கே காணலாம்). அதன் பாதிப்பில் விளைந்ததுதான் இந்த நாவலும், அதில் அவர் விவரித்திருக்கும் கருகிய ஒராங்ஊத்தன் காட்சியும். அவரது பதினான்கு வயதில் இந்த நாவலை எழுதியிருக்கிறார். நாவலின் கதைக்கரு, அதில் விளக்கப்பட்டுள்ள காட்டுயிர்களின் இயற்கை வரலாறு, காட்டுயிர்ப் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள், கருத்தாக்கங்கள் போன்றவற்றை இந்தச் சிறு வயதில் உள்வாங்கி இப்படிப்பட்ட நாவலை எழுதிய அவரை வியந்து பாராட்டலாம். எனினும், எனது எண்ண ஓட்டங்கள் சற்றே வேறுபட்டிருந்தது. இவரைப் போன்ற இளைய தலைமுறை இயற்கை ஆர்வலர்களை நாம் எந்த அளவுக்கு எதிர்மறையான பாதிப்புகளுக்கு உள்ளாக்கியிருக்கிறோம் என்கிற கவலைதான் மேலோங்கியிருந்தது.

—-

தி இந்து தமிழ் 07 May 2022 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம். அக்கட்டுரைக்கான உரலி இங்கே.

Written by P Jeganathan

May 7, 2022 at 3:02 pm

Posted in Books, Mammals, Rainforest

Tagged with , ,

களக்காடு தந்த பரிசுகள்

with one comment

_JEG8098_700

இயற்கை ஆர்வலர்களுக்கும், காட்டுயிர் களப்பணியாளர்களுக்கும் அவசியம் இருக்க வேண்டிய பழக்கங்களில் ஒன்று அவர்கள் காண்பதை, அவதானிப்பதை களக்குறிப்பேட்டில் உடனுக்குடன் பதிவு செய்வது. எனது களக்காடு-முண்டந்துறை களக்குறிப்பேட்டை அன்மையில் திறந்து, பார்த்துக் கொண்டிருந்தேன். என் கண் முன்னே வந்தது: புலி, யானை, கரடி, கொம்பு புலி, செந்நாய், பழுப்பு மரநாய், அலங்கு, சிறுத்தைப் பூனை, வரையாடு, நீலகிரி கருமந்தி, சிங்கவால் குரங்கு, பறக்கும் அணில் மலபார் முள்வால் எலி, பெரிய இருவாசி, கருப்பு மரங்கொத்தி, காட்டுக்குருகு, கருநாகம், பறக்கும் பல்லி, பல வகையான பூச்சிகள் மற்றும் பல தாவரங்கள். குறிப்புகளைக் காணக்காண கண் முன்னே விரிந்தன பல காட்சிகள்.

****

சிலம்பனும் நானும் காட்டுப்பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தோம். வளைந்து செல்லும் அந்த தடத்தின் மறு முனையிலிருந்து ஏதோ உறுமும் ஒலி கேட்டது. இருநாட்களுக்கு முன் அப்பகுதியில் கரடிகள் இரண்டு கத்திக் கொண்டிருந்ததைக் கேட்டிருந்தோம். களப்பணி உதவியாளரான சிலம்பன், அவரிடமிருந்த அரிவாளால் வழியில் இருந்த மரங்களில் தட்டிக்கொண்டும், அவ்வப்போது கணைத்துக் கொண்டும் வந்தார். ஏதாவது ஒலி எழுப்பிக்கொண்டே நடந்தால் ஒரு வேளை ஏதெனும் பெரிய காட்டுயிர்கள் நாம் போகும் வழியில் இருந்தால், விலகிச் சென்றுவிடும். மெல்ல நடந்து முன்னேறிக் கொண்டிருந்த போது சட்டென சிலம்பன் நின்று, என்னிடம் சொன்னார், “அங்க ஏதோ நகர்ந்து போகுது, புலி மாதிரி இருக்கு” என்றார். நாங்கள் நின்று கொண்டிருந்த தடத்தின் சரிவான மேற்பகுதியில் காட்டு வாழைகள் நிறைந்த அந்த பகுதியில் சுமார் 20மீ தூரத்தில் ஒரு புலி இடமிருந்து வலமாக நடந்து சென்றது. புலியை இயற்கையான சூழலில் அப்போதுதான் நான் முதல் முறையாகப் பார்த்தேன்.

Tiger

****

ஒரு நான் களப்பணி உதவியாளரான ராஜாமணியும் நானும் செங்குத்தான காட்டுப்பாதையின் மேலேறிக் கொண்டிருந்தோம். அடிபருத்த ஒரு பெரிய மரம் ஒன்று தடத்தின் நடுவில் இருந்தது. அதைச் சுற்றிலும் பழங்கள் கீழே சிதறிக் கிடந்தன. அம்மரத்தைச் சுற்றிக் கொண்டு சென்றபோது மரத்தின் பின்னால் இருந்து ஏதோ ஒரு கருப்பான காட்டுயிர் உர்ர்..என உறுமிக்கொண்டு எங்களை நோக்கி வந்தது. சட்டெனத் திரும்பி இருவரும் ஓட ஆரம்பித்தோம். உருண்டு, புரண்டு சரிவான அந்தப் பாதையின் கீழ்ப்பகுதியை வந்தடைந்தோம். பின்பு தான் உணர்ந்தோம் அது ஒரு கரடி என. கரடிகளுக்கு நுகரும் சக்தி அதிகம், எனினும் கண் பார்வையும், கேட்கும் திறனும் சற்று கம்மி. மரத்தின் கீழிருக்கும் பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நாங்கள் அங்கு சென்று அதை திடுக்கிடச் செய்ததால்தான் எங்களைக் கண்டு உறுமி விரட்டியிருக்கிறது.

Sloth Bear with cubs

****

காட்டுக்குள் இருந்த ஒரு கட்டிடத்தில் தங்கியிருந்து களப்பணியில் ஈடுபட்டிருந்த சமயம் அது. ஒரு நாள் மாலை யானைகளின் பிளிறல் வீட்டின் அருகில் கேட்டது. இரவானதும் வீட்டின் பின்னால் இருந்த புற்கள் நிறைந்த பகுதியில் சலசலக்கும் ஒலி கேட்டு அங்கிருந்த சன்னலைத் திறந்த போது யானைக் குட்டியொன்று நின்று கொண்டிருந்ததைக் கண்டேன். உடனே அதை மூடிவிட்டு வீட்டுக்குள் வந்துவிட்டேன். சற்று நேரத்திற்கெல்லாம் 5-6 யானைகள் வீட்டின் முன்னே வெகு அருகில் வந்து நின்றுகொண்டிருந்தன. எரிந்து கொண்டிருந்த பெட்ரோமாக்ஸ் விளக்கை (அங்கு மின்வசதிகள் கிடையாது) அணைத்துவிட்டு கண்ணாடி சன்னல்கள் வழியாக யானைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவை அனைத்தையும் தெளிவானக் காண வீட்டுக்குள் அங்குமிங்கும் நடந்ததை அக்கூட்டத்திலிருந்த ஒரு யானை கேட்டிருக்க வேண்டும். உடனே நான் இருக்கும் திசையை நோக்கி தனது தும்பிக்கையை வைத்து நுகர்ந்தது. பின்னர் யானைகள் அனைத்தும் திரும்பி எதிர்த் திசையில் செல்ல ஆரம்பித்தன. அன்று முழு நிலவு. இரவுநேரத்திலும், நிலவின் ஒளியில் ஒரு யானைத்திரளை வெகு அருகில் கண்டது ஒரு மறக்க முடியாத நிகழ்வு.

Elephant family

****

களப்பணிக்காக ஒரு நாள் காட்டுப்பாதையில் சென்று கொண்டிருந்த போது தரையிலிருந்து சரசரவென ஏதோ ஒரு காட்டுயிர் அருகிலிருந்த ஒரு பெரிய ஆத்துவாரி மரத்தினைப் பற்றிக் கொண்டு மேலேறியது. நான்கு கால்களாலும் மரத்தண்டினைப் பற்றி மேலேறி ஒரு கிளையை அடைந்தது. பின்பு இலாவகமாக மரக்கிளைகளினூடே ஏதோ தரையில் நடந்து செல்வது போல அனாயாசமாக மரம் விட்டு மரம் தாவி சென்றது. நீலகிரி மார்டென் (Nilgiri Marten) என ஆங்கிலத்திலும் கொம்பு புலி என பொதுவாக அழைக்கப்படும் இது, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலேயே மிக அரிதான உயிரினங்களில் ஒன்று. மரநாய், கீரி, நீர்நாய் முதலிய சிறு ஊனுண்ணி (smaller carnivore) வகையைச் சேர்ந்தது. மரநாயைப் போன்ற உடலும், நீண்ட அடர்ந்த வாலும், அழகான வெளிர் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற கழுத்தும் கொண்ட ஒரு அழகான உயிரினம் இது.

Nilgiri Marten_Photo: N A Naseer_Wikipedia

Nilgiri Marten_Photo: N A Naseer_Wikipedia

****

இந்நிகழ்வுகள் எல்லாம் நடந்தது 1999ல். நான் இருந்தது களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பத்தில். இது 1988ல் தோற்றுவிக்கப்பட்ட தமிழகத்தின் முதல் புலிகள் காப்பகம். இப்போது இந்த புலிகள் காப்பத்திற்கு வயது 25. ஒரு ஆரம்ப நிலை காட்டுயிர் ஆராய்ச்சியாளனாக எனது 25 வது வயதில் அங்கு சென்ற எனக்கு, களப்பணியின் போது பல வித அனுபவங்களையும், பல மறக்க முடியாத தருணங்களையும் எனக்களித்தது களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் தான். படங்களில் மட்டுமே பார்த்து ரசித்துக் கொண்டிருந்த, பார்பேன் என கனவிலும் நினைத்திராத பல உயிரிங்களை முதன்முதலில் கண்டதும் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் தான்.

மழைக்காட்டில் தென்படும் சிறு ஊனுண்ணிகளில் ஒன்றான பழுப்பு மரநாய் (Brown palm Civet) பற்றிய ஆராய்ச்சியில் களப்பணி உதவியாளனாக இங்கு பதினோரு மாதங்கள் தங்கியிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பழுப்பு மரநாய் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டுமே தென்படும் ஓரிடவாழ்வியாகும் (Western Ghats Endemic). இந்த அரிய வகை மரநாய் ஒரு இரவாடி (Nocturnal) ஆகும். இரவிலும் பகலிலும் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் மழைகாட்டுப் பகுதிகளில் திரிந்து களப்பணி மேற்கொள்ளும் வேளையில் இக்கானகத்தின் செல்வங்கள் பலவற்றை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.

Brown Palm Civet

Brown palm civet

உலகில் உள்ள பல்லுயிர் செழுப்பிடங்களில் ஒன்று (biodiversity hotspot) மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதி. இந்த மலைத்தொடரில் தீண்டப்படாத, தொன்னலம் வாய்ந்த வனப்பகுதிகளைக் கொண்ட வெகு சில இடங்களில் ஒன்று களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம். இதன் மொத்த பரப்பு 895 சதுர கி.மீ. அகஸ்தியமலை உயிர்கோள மண்டலத்தின் ஒரு பகுதியான இது பல்லுயிரியத்தில் சிறந்து விளங்கும் பகுதிகளில் மிகவும் முக்கியமான இடங்களில் ஒன்று. சுமார் 150 ஓரிடவாழ் தாவர வகைகளும், 33 வகை மீன்களும், 37 வகை நீர்நில வாழ்விகளும், 81 வகை ஊர்வனங்களும், 273 வகை பறவையினங்களும், 77 வகையான பாலுட்டிகளும் இதுவரை இப்பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல அரிய உயிரினங்களின் வாழ்விடமாகத் திகழ்கிறது. தென்னிந்தியாவிலேயே ஐந்து வகை குரங்கினங்களைக் (சோலைமந்தி (சிங்கவால் குரங்கு), நீலகிரி கருமந்தி, வெள்ளை மந்தி, நாட்டுக்குரங்கு மற்றும் தேவாங்கு) கொண்ட வெகு சில பகுதிகளில் ஒன்றாகவும் இப்பகுதி அறியப்படுகிறது. இப்பகுதியில் எண்ணற்ற பல காட்டோடைகளும், கொடமாடியாறு, நம்பியாறு, பச்சையாறு, கீழ் மணிமுத்தாறு, தமிரபரணி, சேர்வலாறு, கடனாநதி, ராமநதி போன்ற ஆறுகளும் உற்பத்தியாவதால் நதிகளின் சரணாலயமாகவும் கருதப்படுகிறது.

Rainforest Canopy

புலிகள் காப்பகங்கள் புலிகளை மட்டும் பாதுகாப்பதில்லை. புலிகளையும் சேர்த்து பல வித வாழிடங்களையும், உயிரினங்களையும், நிலவமைப்புகளையும் பாதுகாக்கிறது. புலிகள் பாதுகாப்பு இன்றியமையாதது. ஏனெனில் அது காட்டுயிர்களுக்கு மட்டுமல்ல மனிதகுலத்திற்கும் நன்மை புரிவது.

*******

தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 3oth September 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF  ஐ இங்கே பெறலாம்.

சின்னஞ்சிறு பறவை உசத்தியா? வேங்கைப்புலி உசத்தியா?

leave a comment »

Are warblers less important than tigers? என்ற அருமையான தலைப்பிலமைந்த கட்டுரையை மதுசூதன் கட்டி என்ற காட்டுயிர் ஆராய்ச்சியாளர் 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான In Danger என்ற புத்தகத்தில் எழுதியிருந்தார். அவர் ஆராய்ந்து கொண்டிருந்தது வார்ப்ளர் (Warbler) எனும் சிறிய பறவைகளை. தமிழில் இவை கதிர்குருவிகள் என்றழைக்கப்படுகின்றன. அவரது ஆராய்ச்சிக்கு களப்பணிக்காக தேர்ந்தெடுத்த இடம் தமிழகத்தின் தென்கோடியிலுள்ள களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம். இங்கு வந்து புலிகளைப்பற்றி படிக்காமல் இந்த சிறிய பறவையைப்பற்றி ஆராய்ச்சி செய்கிறீர்களே என அவரை யாரோ கிண்டலடித்திருக்கிறார்கள் போலும். அதனால் தான் அப்படி ஒரு தலைப்பைக்கொண்ட கட்டுரையில் மிக அழகாக விளக்கமளித்துள்ளார்.

tiger_curious_kanha_123

ஆராய்ச்சியில் உயர்ந்தது எது, புலி ஆராய்ச்சியா? பறவையைப் பற்றியதா? இல்லை வேறு உயிரினங்களைப் பற்றியதா? எவற்றைக் காப்பாற்றுவதற்கு முதலில் துரிதமாக செயல்பட வேண்டும், புலியையா? பறவைகளையா? அல்லது மற்ற உயிரினங்களையா? காட்டுயிர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்போரிடையே விளையாட்டாக விவாதிக்கப்படும் தலைப்புகளில் சில இவை. புலிகள் பாதுகாக்கப்படுவதால் காடும் அதில் வாழும் எல்லா உயிரினங்களும் பாதுகாக்கப்படுகின்றன. உணவுச்சங்கிலியின் மேலிடத்திலுள்ள இரைக்கொல்லியான புலியையும் அதன் இரைவிலங்குகளான மான், காட்டுப்பன்றி போன்றவற்றையும் அதன் வாழிடங்களையும் சரியாகப் பராமரித்தால் அக்காட்டிலுள்ள பறவைகளும் மற்ற சிறிய உயிரினங்களும் பராமரிக்கப்படுவதாகத் தான் அர்த்தம். ஆகவே காட்டு ஆராய்ச்சியும் பேணலும் இவைகளைப்பற்றியே அதிகம் இருக்க வேண்டுமே தவிர நமது உழைப்பையும், நேரத்தையும், செலவிடும் பணத்தையும் சிறிய பறவைகளைப் பற்றி அதுவும் பல இடங்களில் பரவலாகத் தென்படும் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வது சரிதானா? அழிவின் விளிம்பில் இருக்கும் புலிகளை காப்பாற்றுவதே நமது தலையாய திட்டமாகவும், அதைப் பற்றிய ஆராய்ச்சியுமே முதலிடம் வகிக்க வேண்டுமேயன்றி சிறிய பறவைகளையும், தவளைகளையும், பூச்சிகளையும் பற்றி ஆராய்ச்சி செய்வது அவரவர் சொந்த விருப்பத்தையும், பட்டங்களைப் பெறுவதற்குமே பயண்படுமேயன்றி, பல்லுயிர்ப்பாதுகாப்பிற்கு அவ்வளவாக உதவாது என்றெல்லாம் வாதிடுவார்கள்.

இலை கதிர்குருவி

இலை கதிர்குருவி

விளையாட்டாக வாதிட்டாலும் கேள்வியென்று எழுந்துவிட்டால் அதற்கு பதிலளிக்காமல் எப்படி விடுவது. பதிலைத் தெரிந்து கொண்டே விளையாட்டாகக் கேட்போரென்றால் பரவாயில்லை ஆனால் இந்தக் கேள்வியை இத்துறையைப் பற்றி அவ்வளவு பரிச்சயம் இல்லாத ஒருவர் கேட்டால் என்ன செய்வது. அவருக்கும் புரியுமாறு விளக்கியாக வேண்டுமல்லவா? அதைத்தான் மிகத்தெளிவாக தனது கட்டுரையில் விளக்கியுள்ளார் மதுசூதன் கட்டி. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர் Dehradun ல் உள்ள Wildlife Institute of India வின் முன்னாள் மாணவர். தனது பட்ட மேற்படிப்பிற்காக கதிர்குருவிகளை 5 வருடம் ஆராய்ச்சி செய்தவர்.

அவரது பதிலையும் செய்த ஆராய்ச்சியையும் பற்றி அறிந்துகொள்வதற்கு முன் கதிர்குருவிகளைப் பற்றி நமக்கும் கொஞ்சம் தெரிந்திருந்தால் அவர் சொல்லப்போவது எல்லாமே எளிதில் விளங்கும். இந்தியப்பகுதியில் சுமார் 68 வகையான கதிர்குருவிகள் தென்படுகின்றன. இவற்றில் பாதி சுமார் 34 வகைக் கதிர்குருவிகள் இந்தியாவின் பலபாகங்களுக்கு வலசை வருபவை. இவையனைத்தும் இமயமலை மற்றும் அதற்கும் வடக்கேயுள்ள சைபீரியா, ரஷ்யா, ஐரோப்பா போன்ற பகுதிகளில் கடுங்குளிர் நிலவும் காலங்களில் தெற்கு நோக்கி பயனிக்கின்றன. இந்த 34 லில் சுமார் 16-19 வகையான கதிர்குருவிகள் தென்னிந்தியாவிற்கு ஒவ்வொறு ஆண்டும் ஆகஸ்டு-செப்டம்பர் மாதங்களில் வலசை வருகின்றன.

மிகத் தேர்ந்த பறவைநோக்குவோரினால் கூட பெரும்பாலான கதிர்க்குருவிகளை ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்தரிந்து இனங்காணுவது இயலாத காரியம். ஒரே விதமான மந்த நிறமும் (பெரும்பாலும் வெளிரிய இளம் பச்சை அல்லது பழுப்பு), சிட்டுக்குருவியைவிடச் சிறியதாகவும், ஓரிடத்தில் நில்லாமல் மர இலைகளினூடே ஓயாமல் அங்குமிங்கும் தாவிப்பறந்து கொண்டே இருப்பவை கதிர்க்குருவிகள். தமிழகத்தில் பொதுவாகக் காணக்கூடியவை இரண்டு– இலைக்கதிர்க்குருவியும், பிளைத் நாணல் கதிர்க்குருவியும். முதலாவதை பற்றித்தான் மதுசூதன் தனது முனைவர் பட்டப்படிப்பில் விரிவாக ஆராய்ந்தார்.

பிளைத் நாணல் கதிர்குருவி

பிளைத் நாணல் கதிர்குருவி

எல்லாப் பறவை காண்போரும் சற்று எளிதில் இனங்கண்டு கொள்ளக்கூடிய கதிர்க்குருவிகள் இவை. பார்த்தவுடன் சொல்லிவிட முடியாதென்றாலும் இவற்றின் குரலை வைத்து அடையாளம் காண்டு கொள்ளலாம். ஆனால் இதற்கும் பலமுறை இவற்றைப் பார்த்தும் இவற்றின் குரலைக் கேட்டும் பழக்கப்பட்டிருக்க வேண்டும்.

மதுசூதன் இப்பறவைகளைப் பற்றி ஆராய்வதற்காக செய்த முக்கியமான களப்பணி, வலையை வைத்து இப்பறவைகளைப் பிடித்து அவற்றின் காலில் வளையங்களை மாட்டிவிட்டதுதான். ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொறு வண்ண வளையத்தை மாட்டியதால் பிறகு அவற்றை எளிதில் பிரித்தறிய முடிந்தது. 1993 முதல 1997 வரை ஐந்து ஆண்டுகள் நடைபெற்ற இந்த ஆராய்ச்சியில் மொத்தம் 24 கதிர்க்குருவிகளை பிடித்து அடையாளத்திற்காக வளையமிடப்பட்டது. அதன் பின் அவற்றை நாள் முழுதும் பின் தொடர்ந்து பைனாகுலர் மூலம் பார்த்து வனப்பகுதியில் எந்தெந்த இடத்தில் இவை சுற்றித்திரிகின்றன என்பதையும், என்ன செய்கின்றன என்பதையும் தொடர்ந்து அவதானித்தபடி இருந்தார்.

இந்த கதிர்க்குருவிகள் காலையிலிருந்து அந்தி சாயும் வரை செய்யும் வேலை என்ன தெரியுமா? மரங்களிலுள்ள இலைகளிலிருந்தும், பூக்களிலிருந்தும் பூச்சிகளைப் பிடித்து சாப்பிடுவதுதான். ஒரு நாளைக்கு இவை தமது நேரத்தை 75 % பூச்சிகளைத் தேடிப்பிடித்து உண்பதிலேயே கழிக்கின்றன. மீதி நேரத்தில் தமது வாழிட எல்லையைக் குறிக்கும் வகையில் வேறு பறவைகள் அதன் இடத்திற்குள் வந்து விடாமலிருக்க குரலெழுப்பி எச்சரிப்பதிலும், உண்ணிகள் ஏதும் தாக்கிவிடாமலிருக்க அலகாலும், கால் நகங்களாலும் உடலிலுள்ள சிறகுகளை வருடி சுத்தப்படுத்துவதிலுமே கழிக்கிறது. முண்டந்துறைப் பகுதியிலுள்ள இலையுதிர், பசுமை மாறாக்காடுகளில் உள்ள இவ்வகையான குருவிகளை கணக்கிட்ட போது ஒரு ஹெக்டேர் பரப்பளவில் 6 கதிர்க்குருவிகள் இருப்பதை மதுசூதன் அறிந்தார்.

இது என்ன பெரிய கண்டுபிடிப்பா? நாள் முழுவதும் பூச்சியைப் பிடித்துத் தின்னும் ஒரு சிறிய பறவையின் பின் அலைவதால் நாம் தெரிந்து கொள்ளப்போவதென்ன என்கிறீர்களா? மதுசூதன் அதற்கு இப்படித்தான் பதிலளிக்கிறார். ஒரு கதிர்க்குருவி ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 3 பூச்சிகளைப் பிடிக்கின்றது. அப்படியெனில், ஒரு மணிநேரத்திற்கு சுமார் 180, ஒரு நாளைக்கு சுமார் 11 மணி நேரம் பூச்சிகளை தேடிப்பிடித்துக் கொண்டேயிருக்கும் இச்சிறிய பறவை நாள் ஒன்றுக்கு சுமார் 1980 பூச்சிகளை உணவாகக் கொள்கிறது. அப்படியெனில் ஒரு ஹெக்டேர் பரப்பளவிலுள்ள 6 கதிர்க்குருவிகள் ஒரு நாளைக்கு சாப்பிடுவது சுமார் 12,000 பூச்சிகளை! இவை இங்கே இருக்கப்போவது 200-250 நாட்கள். அப்படியெனில் ஒரு பறவை இந்நாட்களுக்குள் எத்தனை பூச்சிகளை சாப்பிடும் என நீங்களே கணக்குபோட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்தப்பறவை தென்படுவது வனப்பகுதியில் மட்டுமல்ல. ஊர்ப்புறங்களிலும், வயல் வெளிகளிலும் தான். வலசை வரும் இவையும் இங்கேயே இருக்கும் பூச்சியுன்னும் பறவைகளும் இல்லையெனில் என்னவாகும் என்பதை எண்ணிப்பார்க்க முடிகிறதா? இலைகளையும் பூக்களையும் மற்ற தாவர பாகங்களைத் தாக்கும் பூச்சிகள் எண்ணிக்கையில் அபரிமிதமாகப் பெருகும், கொஞ்சம் கொஞ்சமாக இலைகளில்லாமல் மரம் மொட்டையாகும், தரை சூடாகும், வறண்டுபோகும், தாவர உண்ணிகளான மான்கள், மந்திகள் அனைத்தும் உணவில்லாமல் தவிக்கும், மடியும், முடிவில் மாமிச உண்ணிகளான வேங்கைப்புலி, சிறுத்தை முதலியன வேட்டையாடுவதற்கு எந்த விலங்கும் இருக்காது, ஊர்ப்புறங்களிலும், வயல்களிலும் பூச்சிகள் பெருகி தானியங்களை அழிக்கும் பிறகு என்னவாகும் என உங்களுக்கே தெரியும்.

மதுசூதனால் அடையாளத்திற்காக  வளையமிடப்பட்ட கதிர்குருவி. Photo: Madhusudan Katti

மதுசூதனால் அடையாளத்திற்காக வளையமிடப்பட்ட கதிர்குருவி. Photo: Madhusudan Katti

சின்னஞ்சிறு பறவைகள் செய்யும் மகத்தான இப்பணிக்கு மனிதர்களாகிய நாம் செய்யும் கைமாறு என்ன தெரியுமா? காட்டை அழிப்பதும், இப்பறவைகள் சாப்பிடும் பூச்சிகளையும், சில வேளைகளில் இதுபோன்ற பறவைகளையே கொல்லும் இரசாயன பூச்சிகொல்லிகளைத் தெளிப்பதும் தான். புலிகளின் எண்ணிக்கையை கணக்கிடுவதுபோல இதுபோன்ற பறவைகளின் கணக்கெடுப்பும், அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா? குறைந்துள்ளதா? அவற்றின் வாழிடங்கள் பாதுகாப்பாக உள்ளதா போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் நெடுங்கால ஆராய்ச்சிகள் அவசியம். மேலை நாடுகளில் உள்ள கதிர்க்குருவிகளைப் பற்றி நடத்தப்பட்ட இவ்வகையான ஆராய்ச்சிகளின் விளைவாக காடழிப்பும், அளவுக்கு அதிகமாக பூச்சிகொல்லிகளை உபயோகித்ததனால் அவை பல ஆண்டுகளாக வெகுவாக எண்ணிக்கையில் குறைந்து வருவது அறியப்பட்டது.

இயற்கையில் ஒவ்வொரு உயிரினமும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு பணியைச் செய்து கொண்டே இருக்கிறது. இவற்றின் பங்கை அறிந்து கொள்வதும், அது சரியாக நடக்கிறதா அப்படி இல்லையெனில் அதற்குத்தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது மனிதர்களின் கடமை. வேங்கையும் வேண்டும் சின்னஞ்சிறு கதிர்க்குருவியும் வேண்டும்.

மதுசூதன் தனது கட்டுரையின் முடிவில் கேட்கிறார். இப்போது சொல்லுங்கள் எது முக்கியம் சின்னஞ்சிறு பறவையா? வேங்கைப்புலியா? இந்தக் கேள்வியே அர்த்தமற்றதாகத் தெரியவில்லை?

******

காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 5. புதிய தலைமுறை 9 ஆகஸ்ட் 2012

Written by P Jeganathan

August 11, 2012 at 5:21 pm