UYIRI

Nature writing in Tamil

Posts Tagged ‘Fragmentation

இது ஒரு நல்ல வாய்ப்பு – ஒலி வடிவம்

with 2 comments

 

தி இந்து தமிழ் செய்த்தித்தாளின் உயிர்மூச்சு இணைப்பிதழில் 4-4-2020 அன்று வெளியான கட்டுரையின் முழுப்பதிப்பு ஒலி வடிவில்.

இந்தக் கட்டுரையை ஒலிவடிவில் பேசித் தந்த மேகலா சுப்பையாவுக்கும்,  காணொளி ஆக்கித் தந்த வெ. இராஜராஜனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

பின்னணி இசை உபயம்

Naoya Sakamata – Dissociation” is under a Creative Commos license (CC BY 3.0). Music promoted by BreakingCopyright: http://bit.ly/2PjvKm7

“Steffen Daum – Goodbye My Dear” is under a Creative Commons license (CC-BY 3.0) Music promoted by BreakingCopyright: https://youtu.be/X7evDQiP3yI

பறவைகளின் குரலோசை ஒலிப்பதிவு

குயில் (ஆண்) – Peter Boesman, XC426536. Accessible at www.xeno-canto.org/426536.

குயில் (பெண்) – Mandar Bhagat, XC203530. Accessible at www.xeno-canto.org/203530

காகம் – Vivek Puliyeri, XC191299. Accessible at www.xeno-canto.org/191299.

சிட்டுக்குருவி – Nelson Conceição, XC533271. Accessible at www.xeno-canto.org/533271

செண்பகம் – Peter Boesman, XC290517. Accessible at www.xeno-canto.org/290517

செம்மூக்கு ஆள்காட்டி – AUDEVARD Aurélien, XC446880. Accessible at www.xeno-canto.org/446880.

இது ஒரு நல்ல வாய்ப்பு

with one comment

இது ஒரு நல்ல வாய்ப்பு. நமக்காக, நாமே ஏற்படுத்திக் கொண்ட வாய்ப்பு.

உறவுகளைப் புதுப்பிக்க, மேம்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு. இயற்கையுடனான நமக்குள்ள உறவுகளைச் சொல்கிறேன். எவ்வளவு அமைதியாக இருக்கிறது? இதற்கு முன் அனுபவிக்காத அமைதி. எப்போதும் இப்படியே இருந்துவிடாதா என ஏங்க வைக்கும் அமைதி. இத்தனை காலமாக எவ்வளவு இரைச்சல்களை கேட்டுக்கொண்டிருந்தோம்? நாம் வகுத்து வைத்த எல்லைகளில் போரிட்ட இரைச்சல், தரையின் அடியிலும், கடலின் அடியிலும் அணுகுண்டை வெடிக்க வைத்த போது ஏற்பட்ட இரைச்சல், மலைகளை வெடி வைத்துத் தகர்த்ததனால் எழுப்பிய இரைச்சல், கனரக வாகனங்கள் காட்டை அழிக்கும் போது எழுந்த இரைச்சல், மதப் பண்டிகைகள், கேளிக்கைகள் என நாம் ஏற்படுத்திக் கொண்ட இரைச்சல் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

Atomic bombing Nagasaki (Photo: Wikimedia commons) | A 21 kiloton underwater nuclear weapons effects test (Photo: Wikimedia Commons)

இந்த இரைச்சலை எல்லாம் சகித்துக் கொண்டு, இவற்றிலிருந்து கொஞ்ச நாட்களாவது விலகி இருக்க வேண்டுமென, அமைதியான இடங்களுக்குச் சென்றதும், அங்கு சென்றும் இரைச்சலை ஏற்படுத்தியது இப்போது நினைவுக்கு வருகிறதா? தேடிச்சென்ற அமைதி இப்போது தேடாமலேயே வந்துவிட்டது. அதை அனுபவிக்க வேண்டாமா? இத்தனை நாட்களாக நமது காதுகளை நாமே செவிடாக்கிக் கொண்டும், நம்மைச் சுற்றியிருந்த பல உயிரினங்களின் குரல்வளைகளை நெரித்து, அவற்றை பேசவிடாமலும் செய்து கொண்டிருந்தோம். நம் உலகம் வாயை மூடிக்கொண்டிருக்கும் போது நாமிருக்கும் உலகின் குரலை கேட்க எவ்வளவு நன்றாக இருக்கிறது?

இன்று காலை வீட்டினருகில் ஒரு அணில் ஓயாமல் கத்திக் கொண்டே இருந்தது. ஆண் குயில் தூரத்தில் கூவியது. பெண் குயில் வீட்டின் அருகில் இருந்த வேப்ப மரத்தில் இருந்து கெக்… கெக்… கெக்… என கத்தியது. ஆண் குயில் கருப்பு. பெண் குயில் உடலில் பழுப்பும் வெள்ளைப் புள்ளிகளும் இருக்கும். இவற்றின் நிறம் மட்டுமல்ல எழுப்பும் குரலொலியும் வேறு. காகங்கள் கரைந்தன. தெருமுனையில் சிட்டுக்குருவிகள் கத்திக்கொண்டிருந்தன. பொதுவாக வீட்டின் முகப்பில் இருந்தோ, மொட்டை மாடியில் இருந்தோ அவை இருக்கும் திசை நோக்கி பார்த்தால் மட்டுமே தென்படும். இதுவரையில் வீட்டினுள் இருந்தபடி அவற்றின் குரலை கேட்டதில்லை. ஆனால் இன்று கேட்டது. தூரத்தில் செண்பகம் ஒன்று ஊப்..ஊப்..ஊப்..என தொடந்து கத்திக் கொண்டிருந்தது. இந்தப் பறவை இப்பகுதியில் இருப்பதை இன்றுதான் அறிய முடிந்தது. அந்தி சாயும் வேலையில் ஒரு செம்மூக்கு ஆள்காட்டி வீட்டின் மேல் பறந்து கொண்டே கத்துவது கேட்டது. வீட்டுச் சன்னலில் இருந்து பார்த்த போது சப்போட்டா மரத்தில் இருந்து வௌவால்கள் இரண்டு பறந்து சென்றன. இவர்கள் யாவரும் என் தெருக்காரர்கள், அண்டை வீட்டுக்காரர்கள். இந்த அமைதியான தருணம், இவர்களையெல்லாம் அறிந்துகொள்ளும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.

தூய்மைப் பணியாளர்

சில உறவுகைளை களைவதற்கும் கூட இது ஒரு நல்ல வாய்ப்பு. நமக்கும் குப்பைகளுக்கும் இடையேயான உறவைச் சொல்கிறேன். ஒவ்வொரு நாள் காலையிலும், தெருவில் அந்த வயதான பெண்மணி நான்கு பெரிய ட்ரம்களைக் கொண்ட வண்டியை தள்ளிக்கொண்டு வருவார். ஒவ்வொரு நாளும் வீட்டு குப்பை டப்பாவும் நிரம்பி வழியும். அதில் பிளாஸ்டிக் குப்பை, காய்கறி கழிவு எல்லாம் சேர்ந்தே இருக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக குப்பை டப்பா நிரம்புவதே இல்லை. நொறுக்குத்தீனி இல்லை, ஆகவே பிளாஸ்டிக் குப்பையும் இல்லை. அப்படியே இருந்தாலும், அதிகம் சாப்பிட்டால் பருமன் அதிகரிக்கும் எனும் கவலையால், வாயைக் கட்டவும் கற்றுக் கொண்டாகிவிட்டது. வெளியில் செல்வது சரியல்ல என்பதால் ரசத்தில் மூன்று தக்காளிக்கு பதிலாக ஒன்று மட்டுமே. அதிகம் ஆசைப்படாமல், மேலும் மேலும் வேண்டும் என எண்ணாமல், இருப்பதை வைத்து சமாளிக்க, சிறியதே அழகு, குறைவே நிறைவு என்பதை இந்த அமைதியான நேரம் கற்றுத் தந்திருக்கிறது.

மற்றவர்களின் துயரங்களை உற்று நோக்கவும், அவர்கள் நிலையில் நம்மை வைத்து நினைத்துப் பார்க்கவும் இது ஒரு நல்ல வாய்ப்பு. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பது எவ்வளவு கொடுமையாக இருக்கிறது. உயிரியல் பூங்காக்களில் சிறிய கூண்டில் புலி ஒன்று ஓயாமல் அங்குமிங்கும் திரும்பித் திரும்பி நடந்து கொண்டே இருந்ததும், கோயிலில் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்ட யானை இடைவிடாமல் தலையையும், தும்பிக்கையையும் மேலும் கீழும் ஆட்டி, கால்களை மாற்றி மாற்றி வைத்துக் கொண்டே இருந்ததும் நினைவுக்கு வந்தது. இது மன அழுத்தத்தால் ஏற்படும் விளைவு. என் வீட்டு சன்னல் வழியாகப் பார்த்தால் பக்கத்து வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் வளர்ப்புக் கிளிகளின் கூண்டு தெரியும். வெகுதொலைவில் இருந்து, அமேசான் காடுகளில் இருந்தோ, ஆஸ்திரேலியாவிலிருந்தோ நம்மால் கடத்திக் கொண்டுவரப்பட்டவை அவை. வளர்ப்பு உயிரிகளின் நேசம் காரணமாக ஏற்பட்ட கள்ள சந்தையின் விளைவு. ஒவ்வொரு முறை நாம் கடைக்குச் சென்று அழகாக இருக்கிறதென்று கிளிகளை வாங்கி வரும் போது, நாமும் அந்தக் கள்ளச் சந்தையை ஊக்குவிக்கிறோம்.

Photo: Wikimedia Commons

கூண்டுக்குள் மட்டும்தான் அடைத்து வைத்திருக்கிறோமா? நம்மைத் தவிர இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் சுதந்திரமாக உலவ விடாமல், ஒடுக்கியுமல்லவா வைத்திருக்கிறோம். காபி, தேயிலை, யூக்கலிப்டஸ் என ஓரினப்பயிர்களை வளர்க்க, அகலமான சாலைகளை, இரயில் பாதைகளை அமைக்க, உயர் அழுத்த மின் கம்பிகளை கொண்டுசெல்ல, இராட்சத நீர் குழாய்களையும், கால்வாய்களையும் கட்ட, நகரங்களை விரிவாக்கி கட்டடங்களை எழுப்ப, மலைகளை வெட்டி, காடுகளைத் திருத்தி இயற்கையான வாழிடங்களை துண்டு துண்டாக்கி, அங்கு வாழும் யானைகள், சிங்கவால் குரங்குகள், மலையணில்கள், பறவைகள், சின்னஞ்சிறிய தவளைகள் முதலான பல உயிரினங்களின் வழித்தடத்தை மறித்தும், அவற்றின் போக்கை மாற்றியும், அவற்றில் பலவற்றை பலியாக்கிக் கொண்டுமல்லவா இருக்கிறோம். வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் போது நம்மால் அடைத்து வைக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட உயிரினங்களின் நிலையையும் சற்றே உணர இது ஒரு நல்ல வாய்ப்பு.

இயற்கையான வாழிடங்களின் வழியே செல்லும் பல வகையான நீள் குறுக்கீடுகள்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, அனுசரித்து நடக்கவும், சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ளவும் இது ஒரு நல்ல வாய்ப்பு. நான் புரிந்து கொள்ளச் சொல்வது நாம் ஆக்கிரமித்த பகுதியில் ஏற்கனவே வசித்து வந்த உயிரினங்களை, அவற்றின் குணாதிசயங்களை. எத்தனை யானைகளை பிடித்து கட்டிவைத்திருப்போம், எத்தனை சிறுத்தைகளை ஓரிடத்தில் பிடித்து வேறு இடங்களில் விட்டு விட்டு வந்திருக்கிறோம்? எத்தனை மயில்களை நஞ்சிட்டுக் கொன்றிருப்போம்? எத்தனை பாம்புகளை அடித்தே சாகடித்திருப்போம்? சினிமாவில் நிகழ்வது போல் எந்த காட்டுயிரியும் நம்மை துரத்தித் துரத்தி வந்து கொல்வதில்லை. “துஷ்டரைக் கண்டால் தூர விலகு” என்பது போல அவை நம்மைக் காணும் போதெல்லாம் விலகியே செல்ல முற்படும் என்பதை நாம் அறியவேண்டும். எதிர்பாராவிதமாக நாம் அவற்றின் அருகில் செல்ல நேர்ந்தால் ஏற்படும் அந்த அசாதாரணமான சந்திப்பில், பயத்தில் அவை தாக்க நேரிட்டு மனிதர்கள் காயமுறவோ, இறக்கவோ செய்யலாம். ஆறறிவு கொண்ட நாம் கவனமாக இருக்க வேண்டாமா? எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டாமா? கண்ணுக்குத் தெரியாத ஒரு நுண்ணுயிரி அது நம் மேல் வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம், அதுபோல காட்டுயிர்கள் வாழும் பகுதியில் நாமும் வாழ நேர்ந்தால் நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நாம் வீட்டுக்குள்ளேயே இருக்கும் போது வீட்டில் இருப்பவர்களிடம் எவ்வளவு கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள். இருந்தாலும் அவர்களை எல்லாம் வீட்டை விட்டு விரட்டிவிடுகிறோமா? அல்லது கண்காணாத இடத்தில் விட்டுவிட்டு வருகிறோமா? எனவே, எல்லா உயிரினங்களுடனும் எச்சரிக்கையுடன், சரியான இடைவெளியில் சேர்ந்து வாழ பழகிக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு.

Coronavirus – Photo: Wikimedia Commons

யாரையும் குற்றம் சொல்லாமல் இருக்கக் கற்றுக்கொள்ள, இது ஒரு நல்ல வாய்ப்பு. வைரஸை தமிழில் தீநுண்மி என்கின்றனர். ஒரு உயிரினம் என்ன செய்ய வேண்டுமோ, அதாவது, நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதைத்தான் அதுவும் செய்கிறது. பல்கிப்பெருகிக்கொண்டுள்ளது, நாம் வளர எத்தனையோ வகையான உயிரினங்களை அழிக்கிறோம்? நமக்கு என்ன பெயர்? மனிதர்கள் என்பதை மாற்றி தீயவர்கள் என வைத்துக் கொள்ளலாமா?

இந்த அமைதியான நேரத்தில் இனிவரும் காலங்களில் இந்த உலகிற்கும், நமக்குமான உறவு எப்படி இருக்க வேண்டும் என எண்ணிப்பார்க்க, என்ன செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள, சிந்திக்க, அதை எப்போது, எப்படிச் செய்ய வேண்டும் எனத் திட்டமிட, இது ஒரு நல்ல வாய்ப்பு.

தி இந்து தமிழ் செய்த்தித்தாளின் இணைப்பிதழில் 4-4-2020 அன்று வெளியான கட்டுரையின் முழுப்பதிப்பு https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/547821-good-chance.html

இயற்கையை அழித்தா வளர்ச்சி?

with 2 comments

கடந்த ஆகஸ்டு 2014 மற்றும் ஜனவரி 2015 நடந்த இரண்டே தேசிய காட்டுயிர் வாரியக் (National Board for Wildlife – NBWL) கலந்தாய்வுக் கூட்டங்களில், காட்டுயிர் சரணாலயங்களிலும் தேசிய பூங்கா பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் உள்ள சுமார் 2,300 ஹெக்டேர்கள் இயற்கையான வாழிடப் பகுதிகள், வளர்ச்சிப் பணிகளுக்காக எடுத்துக் கொள்வதற்காக ஆலோசனை செய்யப்பட்டது. சென்ற ஆண்டு செப்டம்பரிலிருந்து டிசம்பர் வரை நடந்த வன ஆலோசனை செயற்குழு (Forest Advisory Committee) கூட்டங்களில், சுமார் 3,300 ஹெக்டேர்கள் பரப்பு வனப்பகுதியை 28 வளர்ச்சித் திட்டங்களுக்காக எடுத்துக் கொள்ளவும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கோரிக்கைகள்யாவும் சாலை, இரயில் பாதை மற்றும் மின் தொடர் கம்பிகள் அமைக்கும் திட்டங்களுக்காகவே. இத்திட்டங்களில் பல பெரும்பாலும் ஒப்புதலும் பெற்றுவிடும்.

சுரங்கப் பணிகளுக்காகவும், விவசாயத்திற்காகவும் திருத்தப்பட்டு, நீர்த்தேக்கங்களின் கீழ் அமிழ்ந்து வனப்பகுதிகள் காணாமல் போகும் இவ்வேளையில், பல்லாயிரம் கி.மீ நீளங்களில் இயற்கையான வாழிடங்களை ஊடுருவி அமைக்கப்படும் , நெடிய சாலை, கால்வாய், இரயில் பாதை, மின்கம்பித் தொடர் போன்ற நீள் கட்டமைப்புத் திட்டங்கள் (Linear infrastructure Projects) நமது வனங்களை அபாயத்திற்குள்ளாக்குகின்றன.

இயற்கையான வாழிடங்களின் வழியே செல்லும் பல வகையான நீள் குறுக்கீடுகள்.

இயற்கையான வாழிடங்களின் வழியே செல்லும் பல வகையான நீள் குறுக்கீடுகள்.

சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமும் (Ministry of Environment, Forest and Climate Change), இது போன்ற திட்டங்களுக்கு ஆதரவாக அதன் வரைமுறைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்திக் கொண்டே கொண்டே இருக்கிறது. உதாரணமாக, இந்த அமைச்சகம், இது போன்ற திட்டங்களை செயல்படுத்தும் மத்திய நிறுவனத்திற்கு மரங்களை வெட்ட கொள்கையளவில் அனுமதி அளித்துள்ளது, அதாவது வனப்பாதுகாப்புச் சட்டம் 1980ன் கீழ் முதல் கட்ட ஒப்புதலை அளித்துள்ளது. இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமானால் இது போன்ற திட்டங்களுக்கு கோட்ட வன அலுவலரின் (Divisional Forest Officer) அனுமதி மட்டுமே போதும். இதனால் வளர்ச்சிப் பணிகளுக்காக வனப்பகுதிகளை கையகப்படுத்தும் வேளையில், எடுத்துக் கொள்ளப்படும் வனப்பரப்பப்பிற்கு சரிசமமான இடத்தை வேறெங்கிலும் கொடுத்து ஈடுகட்டி, காடு வளர்ப்புத் திட்டங்கள் தொடர்பான இரண்டாம் கட்ட ஒப்புதல்கள் எதையும் பெறத்தேவையில்லை.

இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார மேம்பாட்டிற்கும், துரிதமாக இடம்விட்டு இடம் செல்லவும், சரியான நேரத்தில் செய்ய வேண்டிய சேவைகளுக்கும் சாலைகளும், மின் தொடர் கம்பிகளும் துணைபுரியும் என்பதென்னவோ உண்மைதான். ஆனால், அதே வேளையில் அவை இயற்கையான வாழிடங்களுக்கும், கிராமப்புறத்தில் வாழும் பொதுமக்களுக்கும், பழங்குடியினருக்கும் பல்வேறு வகையில் ஊறு விளைவிக்கின்றன. வாழிடங்களை துண்டாடுகின்றன. வனப்பகுதியின் வழியே செல்லும் சாலைகள் அகலமாகிக் கொண்டே போவதும் வாகனப் பெருக்கமும் காட்டுயிர்கள் இடம்பெயர்விற்கு தடையாக உள்ளன. இதனால் பெரும்பாலான காட்டுயிர்கள் சாலைகளைக் கடந்து செல்வதை தவிர்க்கின்றன. பல காட்டுயிர்களுக்கு சாலைகள் கிட்டத்தட்ட வனப்பகுதியின் குறுக்கே கட்டப்பட்ட மிக உயரமான சுவரைப் போலவோ அல்லது வெட்டப்பட்ட ஆழமான அகழியைப் போலவோதான். சாலை விரிவாக்கத் திட்டங்களும், நான்கு வழிச்சாலைகளும் பல காட்டுயிர்களின் இயற்கையான வழித்தடங்களை வெகுவாக பாதிக்கின்றன. உதாரணமாக, மத்திய இந்தியாவில் உள்ள பெஞ்ச் மற்றும் கான்ஹா புலிகள் காப்பத்தின் குறுக்கே போடப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை 7 அங்குள்ள மிக முக்கியமான காட்டுயிர் வழித்தடத்தை ஊடுருவி செல்கிறது செல்கிறது.

சாலைகள், மலைப்பாங்கான பகுதிகளில் வனப்பகுதியின் சீரழிவிற்கும், நிலச்சரிவிற்கும், மண் அரிப்பிற்கும் காரணமாகின்றன. இதை இமயமலைப் பகுதிகளிலும், மேற்குத் தொடர்சி மலைப்பகுதிகளிலும் தினம் தோறும் காணலாம். சிதைக்கப்படாத வனப்பகுதியைக் காட்டிலும், செங்குத்தான மலைச்சரிவில் போடப்பட்டுள்ள சாலையினால்  பல நூறு மடங்கு நிலச்சரிவும், மண் அரிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது என 2006ல் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாலையை அகலப்படுத்தி, சாலையோர தாவரங்களை வெட்டுவது, மண் சரிவை ஏற்படுத்தும்.

சாலையை அகலப்படுத்தி, சாலையோர தாவரங்களை வெட்டுவது, மண் சரிவை ஏற்படுத்தும்.

மலைப்பாதையின் வழியே செல்லும் சாலையோரங்களில் உள்ள இயற்கையாக வளர்ந்திருக்கும் தாவரங்கள் சரிவில் இருக்கும் மண்ணை இறுக்கிப் பிடித்துக் கொள்ளவும், நிலச்சரிவினை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. ஆனால், சாலை இடும் பணிகள், ஓரிடத்தில் சுரண்டப்பட்ட மண், கப்பி முதலிய தேவையற்ற பொருட்களை சாலையோரங்களில் கொட்டிக் குவித்தல், இயற்கையாக வளர்ந்திருக்கும் சாலையோரத் தாவரங்களை வெட்டிச் சாய்த்தல், போன்ற அந்த நிலப்பகுதிக்கும், சூழலுக்கும் ஒவ்வாத வகையில் செய்யப்படும் போது, இயற்கையான சூழல் சீரழியவும், மண் அரிப்பு மென்மேலும் ஏற்படவும், களைச்செடிகள் பெருகவும் ஏதுவாகிறது.

சாலையோரங்களில் வாழும் இயற்கையான தகரை/பெரணி (Fern) தாவரங்களை (இடது) வெட்டி அகற்றுவதால் அங்கே உண்ணிச் செடி (Lantana camera) போன்ற களைச்செடிகள் மண்டும்.

சாலையோரங்களில் வாழும் இயற்கையான தகரை/பெரணி (Fern) தாவரங்களை (இடது) வெட்டி அகற்றுவதால் அங்கே உண்ணிச் செடி (Lantana camera) போன்ற களைச்செடிகள் மண்டும்.

இது மட்டுமல்ல, இலட்சக்கணக்கான காட்டுயிர்கள் சீறி வரும் வாகனங்களின் சக்கரங்களில் நசுங்கி உயிரிழக்கின்றன. சின்னஞ்சிறு பூச்சிகள், பல அரிய, உலகில் வேறெங்கிலும் தென்படாத தவளை மற்றும் ஊர்வன இனங்கள், பறவைகள், பெரிய காட்டுயிர்களான மான், சிறுத்தை, புலி ஏன் யானைகள் கூட சாலையில் அடிபட்டு உயிரிழந்து கொண்டிருப்பதை இந்தியாவில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் மூலமாக அறியமுடிகிறது. இந்த சில ஆய்வு முடிவுகளின் படி இந்தியாவில் நாள் ஒன்றிற்கு, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், சுமார் 10 உயிரினங்கள் மடிந்து போவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகை இன்னும் கூடுதலாகவே இருக்கக் கூடும். ஏனெனில், பதிவு செய்யப்படாமல் போன, சாலையில் உயிரிழந்த உயிரினங்களையும், வாகனத்தில் அடிபட்டு அதே இடத்தில் உயிரிழக்காமல் ஊனமாகவோ, சிறிது நாள் கழித்தோ, வேறிடத்திலோ இறந்து போனவற்றை நாம் அறிய முடியாத காரணத்தினால் அவை கணக்கில் வராது.

சாலையில் சீறி வந்த வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்த சிங்க வால் குரங்கு. Photo: Kalyan Varma

சாலையில் சீறி வந்த வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்த சிங்க வால் குரங்கு. Photo: Kalyan Varma

தினமும் எண்ணிலடங்கா காட்டுயிர்கள் மின்னோட்டமுள்ள கம்பிகளால் கொல்லப்படுகின்றன. திருட்டு வேட்டையர்கள் மின் கம்பிகளிலிருந்து திருட்டுத்தனமாக மின்சாரத்தை இழுத்து காண்டாமிருகம், மான்கள் என பல வகையான உயிரினங்களைக் கொல்கின்றனர். மின் கம்பிகளினூடே பறந்து செல்லும் போது எதிர்பாராவிதமாக பூநாரை (Flamingo), சாரஸ் பெருங்கொக்கு (Sarus Crane), பாறு கழுகுகள் (Vultures), கானல் மயில் (Great Indian Bustard) போன்ற பல வித பெரிய பறவையினங்கள் உயிரிழக்கின்றன. மின் வேலிகளால் யானைகளும் காட்டெருதுகளும் (Gaur) கூட மடிகின்றன. இரயில் தடங்களில் அரைபட்டும் பல உயிரினங்கள் தினமும் உயிரிழிக்கின்றன. எனினும் யானை முதலான பெரிய உயிரினங்கள் இவ்வாறு அடிபட்டுச் சாகும் போதுதான், இவை நமது கவனத்திற்கு வருகின்றன. இவ்வாறு தினமும் நடக்கும் காட்டுயிர் உயிரிழப்பு, நீள் கட்டமைப்புத் திட்டங்கள், காட்டுயிர்ப் பாதுகாப்பினை கவனத்தில் கொள்ளாமல் செயல்படுத்தப்படுவதையே காட்டுகிறது.

இந்த நீள் கட்டமைப்புத் திட்டங்களினால் ஏற்படும் பாதிப்பு அவற்றிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தைவிடவும் பன்மடங்கு அதிகம் என்பதே சோகமான உண்மை. சாலை, இரயில் தடம், மின் கம்பித் தொடர் இவற்றிற்காக அகற்றப்படும் பகுதியினால் இயற்கையான வாழிடத்திற்கு ஏற்படுத்தப்படும் பாதிப்பு அங்கு மட்டுமே இல்லாமல், அவ்வாழிடம் சிதைந்திருப்பதை அதன் ஓரங்களிலும், அதையும் தாண்டி அவ்வாழிடத்தினுள்ளே பல தூரம் வரையும் காண முடியும். இயற்கையான வாழிடத்தின் குறுக்கே செல்லும் ஒவ்வொரு கிலோ மீட்டர் சாலையும் குறைந்தது அதைச் சுற்றியுள்ள 10 ஹெக்டேர்கள் பரப்பிற்கு பாதிப்பினை ஏற்படுத்தும். கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் 2009ல் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாகக வனத்தின் உட்பகுதியினை விட சாலையோரங்களில் மரங்கள் சாவது இரண்டரை மடங்கு அதிகம் என கண்டுபிடிக்கப்பட்டது. இது போலவே, காட்டுயிர்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் நடத்தைக்கு ஏற்படும் பாதிப்பு சாலையிலிருந்து வனத்தினுள் சுமார் 1 கீமீ துரத்திற்கு இருந்தது. சாலைகள் சூழியல் பொறியாகவும் (Ecological traps) விளங்குகிறது. அதாவது வனப்பகுதியில் உள்ள பாம்பு, ஓணான் முதலிய ஊர்வன இனங்கள் வெயில் காய (Basking) இயற்கையான பாறை, கட்டாந்தரையை விட்டு விட்டு சாலைக்கு வருகின்றன. (குளிர் இரத்தப் பிராணிகளான அவை உயிர்வாழ அவற்றின் உடலின் வெப்பநிலையை, சுற்றுப்புறத்துடன் சமநிலை செய்து கொள்ள வெயில் காய்வது இன்றியமையாதது). இந்தியாவில் சாலைகளினாலும், போக்குவரத்தினாலும் காட்டுயிர்களுக்கு ஏற்படும் விளைவுகளைப் பற்றி 2009ல் ஒரு விரிவான திறனாய்வு செய்யப்பட்டது. இதில் காட்டுயிர்களுக்கும், இயற்கையான வாழிடங்களுக்கும் ஏற்படும் நன்மைகளைவிட பாதகமான விளைவுகள் ஐந்து மடங்காக இருப்பது அறியப்பட்டது.

சாலைகளுக்காகவும், அவற்றை விரிவு படுத்தவும் மரங்கள் அகற்றப்படுவதால், மரவாழ் உயிரினங்களான மலையணில், குரங்குகள் யாவும் மரம் விட்டு மரம் தாவ முடியாமல் தரையின் கீழிறங்கி சாலையைக் கடக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இதனால் இவை அவ்வழியே சீறி வரும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் ஆபத்து அதிகமாகிறது. அதுபோலவே மின் தொடர் கம்பிகளுக்காக மரங்களை அகற்றும் போதும் மரவிதானப்பகுதியில் இடைவெளி ஏற்படுகிறது. இதனால் இவ்வுயிரினங்கள் மின்கம்பிகளை தவறுதலாக பற்றிக்கொண்டு இடம்பெயற முயற்சிக்கும் போது மின்சாரம் தாக்கியும் உயிரிழக்கின்றன.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தேவாங்கு . Photo: S.Bharathidasan

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தேவாங்கு . Photo: S.Bharathidasan

சாலைகள், மின் தொடர் கம்பிகள், அகலமான கால்வாய்கள், இரயில் தடங்கள் போன்ற நீள் குறுக்கீடுகள் (linear intrusions) ஒன்றோ அதற்கு மேலோ ஒரு இயற்கையான நிலவமைப்பில் அமைக்கப்பட்டால் அவ்வாழிடத்திற்கும் அதில் வாழும் உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் பன்மடங்காகிறது.

ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு எந்த அளவு நீள் கட்டமைப்புத் திட்டங்கள் அவசியமோ அது போலவே இன்றியமையாதது ஒரு நாட்டின் வனங்கள். அழித்துவிட்டால் மீண்டும் உருவாக்க அவை ஒன்றும் இயந்திரங்கள் அல்ல. தாவரங்கள், உயிரினங்கள், பழங்குடியினர்கள் என பல உயிர்கள் பொதிந்திருக்கும் ஓர் உயிர்ச்சூழல் அது.

நாட்டை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்லவும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும் ஒரு அறிவார்ந்த சமூகம், வளர்ச்சித் திட்டங்களை சிறந்த தொழில்நுட்ப உதவியுடன் தான் எதிர்கொள்ளும். அவ்வேளையில், அத்திட்டங்களை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் விசாலப்பார்வையுடன் அத்திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். தற்போதைய அமைச்சகத்தின் ஆணையைப் போல் இது போன்ற திட்டங்களின் செயல்பாடுகளை கோட்ட வன அலுவலர் மட்டுமே நிர்ணயிக்கும் நிலை இருக்கக்கூடாது.

பொருளாதார ஆதாயத்திற்கு மட்டுமே ஆதரவளிக்காமல், நீள் கட்டமைப்புத் திட்டங்களால் ஏற்படும் சூழியல் பாதிப்புகளையும் நம்பத்தக்க, வெளிப்படையான விதத்திலும் அளவிடவும் அதன் நீண்ட கால பாதிப்புகளைச் சமாளிக்கவும் வேண்டும். இது போன்ற திட்டங்கள் பெரும்பாலும் பணம் கொழிக்கும் கான்ட்டிராக்ட்களையும், ஊழலையும் தான் உள்ளடக்கியிருக்கும்.

இதனால் திட்டத்தின் அளவிற்கே (சாலையாக இருப்பின் அதிக நீளமான, அகலமான சாலையே அதிக ஆதாயம் தரும்) முக்கியத்துவமளிக்கப்படுமே தவிர வேலையின் தரம், பயன் மற்றும் பாதுகாப்பு போன்றவை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும்.

உலகின் பல நாடுகளில் சாலை போன்ற நீள் கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்குவதற்கு முன் பொறியியலாளர்கள், சூழியலாளார்கள், பொருளாதார வல்லுனர்கள் என பல துறைகளைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்களும், வல்லுனர்களும்  கலந்தாலோசித்த பின்னரே செயல்படுத்தப்படுகிறது. சாலைச்சூழியல் (Road Ecology) எனும் வளர்ந்து வரும்  இத்துறையில் பல்துறை வல்லுனர்கள் பயன்முறை ஆய்வுகளை (applied research) மேற்கொண்டு இத்திட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளை ஆவணப்படுத்தியும், இயற்கையான சூழல் பெருமளவவில் பாதிப்படையா வண்ணம் தகுந்த மாற்று வழிகளையும், சரியான வடிவமைப்பையும், பரிந்துரைத்து வருகின்றனர்.

இந்தியாவில் 2011ல் அமைக்கப்பட்டிருந்த தேசிய காட்டுயிர் வாரியத்தின் நிலைக் குழு (Standing Committee) நீள் குறுக்கீடுகள் தொடர்பாக பின்பற்றவேண்டிய வரைவு  நெறிமுறைகளையும், பின்னணித் தகவல்களையும் தயாரித்து அதன் முதல் பதிப்பை வெளியிட்டது (இங்கே காண்க). இந்தப் பதிப்பிலிருந்து ஒரு பகுதி டிசம்பர் 2014ல் துணை நிலைக்குழு (subcommittee) வெளியிட்ட பாதுகாக்கப்பட்ட இயற்கையான வாழிடங்களின் வழியே செல்லும் சாலைகளுக்கான நெறிமுறையாக ஆக்கப்பட்டது (இங்கே காண்க). இந்த ஆவணத்தின் முதன்மைக் கொள்கை இயற்கையான வாழிடங்களைப் தவிர்த்தலே. அதாவது, காட்டுயிர் பாதுகாப்புப் பகுதிகளையும், ஆபாயத்திற்குள்ளான இயற்கையான சூழலமைப்புகளையும், தேவையில்லாமல் நீள் குறுக்கீடுகளால் சீரழியாமல் பாதுகாப்பதோடு, காட்டுயிர் வழித்தடங்களை பாதிக்காமல் சாலைகளை சுற்று வழியில் அமைத்து, இயற்கையான வாழிடங்களின் விளிம்பில் இருக்கும் கிராமங்கள், சிற்றூர்களிடையே இணைப்பினை மேம்படுத்த மேம்படுத்துவதேயாகும்.

இயற்கையான வாழிடங்களின் வழியே அமைக்கப்படும் அகலமான சாலைகள் பல உயிரினங்களுக்கு பல வகையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இயற்கையான வாழிடங்களின் வழியே அமைக்கப்படும் அகலமான சாலைகள் பல உயிரினங்களுக்கு பல வகையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இது போன்ற, முக்கியமான சூழலில் குறுக்கே சாலைகள் அமைக்கப்படும் முன் காட்டுயிர்களின் நடமாட்டத்தில் ஏற்படும் இடர்பாடுகளை குறைக்க எங்கெங்கே மேம்பாலங்கள் (overpass), தரையடிப்பாதைகள், மதகுப்பாலங்கள் (underpass and culvert) அமைக்கலாம் என்பதற்கான ஆலோசனைகளை காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து பெறவேண்டும். அது போலவே சாலைகளில் ஏற்படும் காட்டுயிர்களின் உயிரிழப்பைக் குறைக்க தேவையான இடங்களில் வேகத்தடைகளும், போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதும் அவசியம்.

யானைகள் கடக்கும் பகுதிகளில் அகச்சிவப்புக் கதிர்களை வீசும் கருவிகளைப் பொருத்தி அவை வருவதை அறிந்து, இத்தகவலை இரயில் ஓட்டுனரின் கைபேசியில் குறுஞ்செய்தியாக அனுப்பும் தொழில்நுட்ப அமைப்பினை இரயில் தடங்களில் வைப்பதன் மூலம், அவை இரயிலில் அடிபட்டுச் சாவதைத் தடுக்க முடியும்.

Photo: Christy Williams

Photo: Christy Williams

மின்கம்பித் தொடர்களின் கட்டமைப்பில் சிறு மாறுதல் ஏற்படுத்துவதன் மூலம் அதாவது யானை போன்ற பெரிய உயிரினங்கள் கடக்கும் பகுதியில் உயரமாக வைப்பதனாலும், கானல் மயில், பாறு கழுகுகள் போன்ற பெரிய பறவைகளின் பார்வைக்குத் தெரியும் வகையில் அமைப்பதனாலும் அவை மின் கம்பிகளில் அடிபட்டு இறப்பதைத் தவிர்க்க முடியும். சாலையோரங்களில் வளர்ந்திருக்கும் இயல் தாவரங்களையும், மரங்களையும் வெட்டாமல் வைப்பதன் மூலம் உயிரினங்களின் இடம்பெயர்வுக்கு உதவுவது மட்டுமல்லாமல், அந்தத் தடத்தையும் அழகாக்கும்.

நீள் கட்டமைப்புகள் இயற்கையான சூழலின் மேல் கரிசனம் கொண்டு, அறிவியல் பூர்வமாகவும், சரியான வடிவமைப்புகளைக் கொண்டும் இருந்தால் பொருளாதார மேம்பாட்டிற்கும் உதவும், இயற்கையான வாழிடத்தையும் பாதுகாக்கும்.

———-

மார்ச் 19, 2015 தி ஹிந்து ஆங்கிலம் தினசரியில் வெளியான T. R. Shankar Raman எழுதிய “The long road to growth” கட்டுரையின் தமிழாக்கம். இக்கட்டுரையின் சுருக்கமான பதிப்பு “தி இந்து”  தமிழ் தினசரியில் 18-04-2015​​​அன்று வெளியானது. அதை இங்கே காணலாம்.

Written by P Jeganathan

April 19, 2015 at 7:27 pm

ஒரு மழைக்காட்டு விதையின் பயணம்

leave a comment »

காட்டுப்பாதையெங்கும் சிதறி கிடங்கின்றன விதைகள். கிருஷ்ணா மெல்லக் குனிந்து அவற்றை எடுத்து தான் கொண்டுவந்த பையில் சேகரித்துக்கொண்டிருக்கிறான். கிருஷ்ணாவிற்குத் தெரியும் இவை சாதாரண விதைகள் அல்ல என்று. இனி வரும் காலங்களில் வளர்ந்து பெரிய மரமாகி சிங்கவால் குரங்கிற்கும், பலவிதமான பழம் உண்ணும் பறவைகளுக்கு உணவளிக்கும், பெரிய இருவாசியும் (Great Hornbill),  பறக்கும் அணிலுக்கும்மலையணிலுக்கும் கூடமைக்க இடம் கொடுக்கும், யானைகூட்டத்திற்கு நிழலளிக்கும்…

விதைகள் சேகரிப்பு

விதைகள் சேகரிப்பு

சாலையோரத்தில் இருந்த ஒரு காட்டுக்கொடியில் பழம் பழுத்திருந்தது. அதன் கீழே அப்பழத்தின் விதையைக் கொண்ட எச்சம் சாய்ந்து கிடந்த மரத்தின் மீது கிருஷ்ணா பார்த்தான். அந்த எச்சத்தைப் பார்த்த உடனே அது பழுப்பு மரநாயினுடையது என்பதை அவன் கண்டுகொண்டான். அக்காட்டுக்கொடியின் (Liana) தண்டு மென்மையானது அல்ல, அது ஒரு சிறிய மரத்தின் அளவிலும், மிக உறுதியானதாகவும் இருந்தது. இவை காட்டுமரங்களின் மேல் பின்னிப்பினைந்து பழுப்பு மரநாயும், சிங்கவால் குரங்குகளும் தரையின் கீழ் இறங்காமலேயே இக்கொடிகளைப் பற்றி மரம் விட்டு மரம் செல்ல உதவிசெய்யும். அதற்கு கைமாறாக இவ்விலங்குகள் இக்காட்டுகொடியின் பழத்தை உண்டு தமது எச்சத்தின் வழியாக அவற்றின் விதையை வெவ்வேறு இடங்களுக்கு பரப்பும்.

கிருஷ்ணா அந்த காட்டுக்கொடியின் விதையையும், பலவிதமான மரவிதைகளையும் ஒரு பையின் சேகரித்து அருகில் இருந்த நாற்றுப்பண்ணைக்கு வந்தான். சேகரித்த விதைகளை ஒவ்வொன்றாக மண் நிரம்பிய பைகளில் நட்டு வைத்தான். ஏற்கனவே நட்டு வைத்த பலவிதமான மரவிதைகளில் சில முளைவிட ஆரம்பித்திருந்தன. மூன்று வருடத்திற்குமுன் நடப்பட்ட விதைகள் கிட்டத்தட்ட 2-3 அடி உயரத்திற்கு வளர்ந்திருந்தது. இம்மர நாற்றுகளெல்லாம் சாதாரணமானவை அல்ல. இவையனைத்தும் பல்லுயிர்த்தன்மைக்குப் பெயர்போன மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் இருப்பவை. நாற்றுப்பண்ணை இருக்குமிடம் வால்பாறை.

மழைக்காட்டுத் தாவரங்களைக் கொண்ட நாற்றுப்பண்ணை

மழைக்காட்டுத் தாவரங்களைக் கொண்ட நாற்றுப்பண்ணை Photo: NCF

பத்து வருடங்களுக்கு முன் செயலார்வம் மிக்க, காட்டுயிர் ஆராய்ச்சியாளர் குழு ஒன்று மழைகாட்டு மீளமைப்புத்திட்டத்தை இங்கு ஆரம்பித்தது. திவ்யா முத்தப்பாசங்கர் ராமன்ஆனந்த குமார் முதலியோர் அப்பகுதியின் பூர்வீகக் குடியினரான காடர்களில் உதவியுடன் 2000ம் ஆண்டு வால்பாறையில் இத்திட்டத்தைத் தொடங்கினர். இவர்களின் ஒரே குறிக்கோள் இப்பகுதியிலுள்ள சீரழிந்த நிலையிலுள்ள மழைக்காட்டுத்தீவுகளை அம்மண்ணுக்குச் சொந்தமான மரங்களை நட்டு மீளமைப்பதுதான் (Rainforest Restoration).

அது என்ன மழைக்காட்டுத்தீவு? அதற்கு முதலில் மழைக்காடுகளைப்பற்றியும் (Tropical rainforest)அவற்றின் முக்கியத்துவத்தையும் பற்றி அறிந்திருக்க வேண்டும்.

அதிக மழையும், சூடான தட்பவெப்பமும், உயரமான மரங்களும் கொண்ட பூமத்தியரேகைப்பகுதியில் காணப்படும் காட்டுப்பகுதியே மழைக்காடுகளாகும். மழைக்காடுகள் ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, மத்திய மற்றும் தென் அமெரிக்கப்பகுதிகளில் பரவியுள்ளது. மழைக்காடு பல்லுயிரியத்தில் மிகச்சிறந்தது. இப்பூமியின் பரப்பளவில் 2%கும் குறைவாகவே இருந்தாலும் இவ்வுலகின் 50%கும் மேற்பட்ட தாவரங்களையும் விலங்குகளையும் தனதே கொண்டுள்ளது. உலகில் வேறெங்கும் வசிக்காத உயிரினங்கள் பலவற்றை (ஓரிட வாழிவிகள் – Endemics) இம்மழைக்காடுகளில் காணலாம்.

பூமத்திய ரேகைக்கு அருகாமையில் அமைந்துள்ளதால் அதிக சூரிய ஒளியைப் பெற்று தாவரங்கள் ஒளிச்சேர்க்கையினால் இவ்வொளியைச் சக்தியாக மாற்றுகின்றன. தாவரங்களில் சேமிக்கப்பட்ட அபரிமிதமான இச்சக்தியே மழைக்காட்டிலுள்ள விலங்குகளுக்கு உணவாக அமைகிறது. அதிக உணவு இருப்பதால் அதிக விலங்குகளும் மழைக்காடுகளில் வாழ்கின்றன. இப்புவியின் உயிர்ச்சூழக்கு மழைக்காடுகளின் சேவை மிகவும் அத்தியாவசியமானது. ஏனெனில் மழைக்காடுகள் பலவிதமான தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் உறைவிடமாகிறது, உலகின் தட்பவெப்பநிலையை நிலைநிறுத்துகிறது, வெள்ளம், வறட்சி மற்றும் மண்ணரிப்பிலிருந்து பாதுகாக்கிறது, பலவித மூலிகைகள் மற்றும் உணவிற்கு மூலாதாரமாக இருக்கிறது.

உலகின் பல்லுயிர் செழுப்பிடங்களில் ஒன்றான மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் இருக்கும் மழைக்காடுகள் பல அரிய உயிரினங்களின் வீடாகவும், நதிகளின் மூலமாகவும் விளங்கின்றது

உலகின் பல்லுயிர் செழுப்பிடங்களில் ஒன்றான மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் இருக்கும் மழைக்காடுகள் பல அரிய உயிரினங்களின் வீடாகவும், நதிகளின் மூலமாகவும் விளங்குகின்றது

இப்புவிக்கும், மனிதகுலத்திற்கும் தேவையான இப்படிப்பட்ட மழைக்காடுகள் உலகில் எல்லா பகுதிகளிலும் சகட்டுமேனிக்கு அழிக்கப்பட்டன, தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இவ்விதமான மழைக்காடுகள் அடர்ந்து இருப்பது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், அஸ்ஸாம், அருனாசல பிரதேசம் போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும் தான். மழைக்காடுகளைப் பற்றி மேலும் கீழ்கண்ட உரலியில் அறியலாம்

http://hindi.mongabay.com/tamil/kids/

மழைக்காடுகள் மிகுந்திருந்த மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தேயிலை, காப்பி போன்ற ஓரினப்பயிர்த்தோட்டங்களுக்காகவும், நீர்மின் திட்டங்களுக்காகவும், வெட்டுமரத்தொழிலுக்காகவும் கடந்த சில நூற்றாண்டுகளாக வெகுவாக திருத்தப்பட்டன. இதனால் மழைக்காடுகள் பல இடங்களில் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, தொடர்பற்று துண்டுதுண்டாகிப்போனது. இப்படிப்பட்ட இடங்களில் ஒன்றுதான் மேற்குத்தொடர்ச்சிமலையிலுள்ள ஆனைமலைப் பகுதியில் இருக்கும்  வால்பாறை. இங்கு கண்ணுக்கெட்டும் தூரம் வரை பச்சைப்பசேலென தேயிலைத்தொட்டங்களைக் காணலாம். காப்பி, தேயிலை, ஏலம், யூக்கலிப்டஸ் போன்ற ஓரினத்தாவரத் தோட்டங்களின் நடுவே இவை பயிரிடத்தகுதியில்லாத இடங்களில் இன்னும் திருத்தி அமைக்கப்படாத மழைக்காடுகள் சிறியதும் பெரியதுமாக ஆங்காங்கே தீவுகளைப்போல காட்சியளிக்கும். இவையே மழைக்காட்டுத்தீவுகள் (Rainforest fragment), இங்குள்ள மக்கள் இவற்றை துண்டுச்சோலை என்றழைக்கின்றனர்.

அணை நீர்ப்பரப்பும், தேயிலைத் தோட்டமும் சூழ, மத்தியில் அமைந்திருக்கும் (இளம்பச்சை எல்லைக்கோட்டுக்குள்) மழைக்காட்டுத்தீவு. இதில் வாழும் பல உயிரினங்கள் வாழ்நாள் முழுதும் இத்துண்டுச்சோலையை விட்டு வேறெங்கும் இடம்பெயர முடியாது.

அணை நீர்ப்பரப்பும், தேயிலைத் தோட்டமும் சூழ, மத்தியில் அமைந்திருக்கும் (இளம்பச்சை எல்லைக்கோட்டுக்குள்) மழைக்காட்டுத்தீவு. இதில் வாழும் பல உயிரினங்கள் வாழ்நாள் முழுதும் இத்துண்டுச்சோலையை விட்டு வேறெங்கும் இடம்பெயர முடியாது.

இத்துண்டுச்சோலைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் வால்பாறையைச்சுற்றிலும் ஆனைமலை புலிகள் காப்பகம்பரம்பிகுளம் புலிகள் காப்பகம்வாழச்சால் வனப்பகுதிஎரவிகுளம் தேசிய பூங்காசின்னார் சரணாலயம் போன்ற தொடர்ந்த பரந்து விரிந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் அமைந்துள்ளன. இதனால் சுற்றிலும் வனத்தைக் கொண்ட வால்பாறை பகுதியிலும் பலவிதமான அரிய, அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகளையும், தாவரங்களையும் பார்க்க முடியும். இந்த உயிரினங்களுக்கெல்லாம் புகலிடமாக இத்துண்டுச்சோலைகள் உள்ளன. ஆகவே இந்தச் சிறிய வனப்பகுதிகளை பாதுகாப்பது இன்றியமையாதது. ஆனால் மக்கள்தொகை பெருக்கத்தால் வனச்செல்வங்கள் நாளுக்கு நாள் அருகிவரும் நிலையில் இந்த துண்டுச்சோலைகளும் அதிலிள்ள உயிரினங்களும் கூட அபாயநிலையில் உள்ளன. திருட்டு வேட்டை, வீட்டு உபயோகத்திற்காக மரங்களை வெட்டுதல், களைகள் பெருகி காட்டிலுள்ள தாவரங்களை வளரவிடாமல் தடுத்தல், ஓரினப்பயிர்களுக்காக இச்சிறிய காடுகளையும் கூடத் திருத்தி அமைத்தல், இத்துண்டுச்சோலைகளின் உள்ளேயும் ஓரமாகவும் செல்லும் சாலைகளை விரிவுபடுத்து போன்ற காரணங்களினால் இத்துண்டுச்சோலைகளும் இதில் வாழும் உயிரின்ங்களும் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து வருகின்றன.

வால்பாறை மனித-விலங்கு எதிர்கொள்ளலுக்கு பெயர் போன இடம். யானைத்திரள் மக்கள் குடியிருப்புகளின் அருகில் வருவதும், மதிய உணவுக்கூடங்களிலும், ரேஷன் கடைகளிலும் வைத்திருக்கும் அரிசி, பருப்பு மூட்டைகளை உட்கொள்வதும், சிறுத்தைகள் மனிதர்களைத் தாக்குவது போன்ற விபத்தும் அவ்வப்போது இங்கு நிகழும். வால்பாறைப் பகுதியிலுள்ள துண்டுச்சோலைகள் இல்லையெனில் இவ்வகையான மோதல்கள் பன்மடங்காகப் பெருகும் வாய்ப்புள்ளதால் இப்பகுதிகளைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆகவே அரசுசாரா நிறுவனமான இயற்கை காப்பு கழகத்தைச் (Nature Conservation Foundation)சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இப்பகுதியிலுள்ள தனியார் தேயிலை மற்றும் காப்பித் தோட்ட உறிமையாளர்களான பாரி அக்ரோடாடா காப்பிபாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன், ஹிந்துஸ்தான் லீவர் (தற்போதைய உரிமையாளர் – வுட் பிரையர் குரூப்) முதலிய நிறுவன அதிகாரிகளிடம் அவர்களுடைய இடங்களிலுள்ள துண்டுச்சோலைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து சிதைந்துவரும் இம்மழைக்காட்டுத்தீவுகளை மீளமைக்க அனுமதி பெற்றனர்.

இந்த மழைக்காட்டு மீளமைப்புத் திட்டம் தனித்தன்மை வாய்ந்தது. ஏனெனில் காட்டுயிர் பாதுகாப்பும், ஆராய்ச்சியும் பொதுவாக அரசுக்குச் சொந்தமான பாதுகாக்கப்பட்ட இடங்களில் தான் நடக்கும். ஆனால் வால்பாறை பகுதி தனியாருக்குச் செந்தமான மேலே குறிப்பிட்ட பல நிறுவனங்களுக்குச் சொந்தமானவை. இந்நிலங்களிலேயே இத்துண்டுச்சோலைகள் அமைந்துள்ளன. இந்த மீளமைப்புப் பணியில் உதவ காட்டுயிரியலாளர்கள், ஆனைமலைப்பகுதியின் பூர்வீகக்குடியினரான காடர்களை வேலைக்குச் சேர்த்துக்கொண்டுள்ளனர். பல தனியார் நிறுவனங்களும், காட்டுயிரியலாளர்களும், உள்ளூர் மக்களும் இணைந்து பல்லுயிர் பாதுகாப்பிற்காக கூட்டு முயற்சி செய்வதாலேயே இத்திட்டம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

அனுமதியும் இடமும் கிடைத்தாகிவிட்டது. அடுத்த கட்டமாக 800-1300 மீ உயரத்திலிருக்கும் மழைக்காட்டுப்பகுதியில் தென்படும் மரங்களின் பட்டியலை மீளமைப்புக் குழுவினர் தயார் செய்து, சாலையோரங்களில் விழுந்து கிடக்கும் அம்மரங்களின் விதைகளைச் சேகரித்து நாற்றுப்பண்ணையில் வைத்து வளர்க்க ஆரம்பித்தனர். விதைகள் முளைவிடுவதும் வேறு இடத்தில் கொண்டு சென்று நடுவதற்கான முதிர்ச்சியை அடைவது மரத்திற்கு மரம் மாறுபடும். சில மரவகைகள் முளைவிடுவதற்கே பல மாதங்கள் ஆகும். மழைக்காட்டு மர விதைகளை தினமும் தண்ணிர் ஊற்றி, இயற்கை உரமிட்டு பூச்சிகளிடமிருந்தும், கொறிக்கும் எலிகளிடமிருந்தும் காப்பாற்றி பிள்ளைகள் போல வளர்க்கப்படுகிறது. பாதுகாப்பாகவும், மிகுந்த கவனத்துடனும் வளர்க்கப்பட்ட இந்நாற்றுகள் 3-4 ஆண்டுகள் கழித்து தென்மேற்குப்பருவ மழைக்காலங்களில்தான் பண்ணையை விட்டு  துண்டுச்சோலைகளில் கொண்டு சென்று நடப்படுகின்றன. கொட்டும் மழையில், மலைச்சரிவுகளில், அட்டைகள் இரத்தம் உறிய குழி தோண்டி, அக்குழியில் சிறிது இயற்கை உரமிட்டு, உறைகளில் அடைபட்டிருந்த வேர்களைக்கொண்ட மழைக்காட்டு மர நாற்று அது இருக்க வேண்டிய இடத்திற்கு கொண்டு சேர்க்கிறார்கள் இம்மீளமைப்புக் குழுவினர்.

நாற்றுப்பண்ணையிலிருந்து மழைக்காட்டு மரக்கன்றுகள் வண்டியில் ஏற்றப்படுகின்றன.

நாற்றுப்பண்ணையிலிருந்து மழைக்காட்டு மரக்கன்றுகள் வண்டியில் ஏற்றப்படுகின்றன.

நடப்படவேண்டிய இடத்திற்கு நாற்றுகள் தலையில் சுமந்து செல்லப்படுகின்றன.

நடப்படவேண்டிய இடத்திற்கு நாற்றுகள் தலையில் சுமந்து செல்லப்படுகின்றன.

Stick_in_mud

மழைக்காட்டு நாற்று நடும் நடும் Dr. ஆனந்தகுமார்.

நம் ஊர்களில் நடக்கும் மரம் நடும் விழாக்களில் சம்பிரதாயத்திற்கு நினைத்த இடத்தில் ஒரு மரத்தை நட்டுவிட்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்துவிட்டு அதன்பின் அதை திரும்பிக்கூட பார்க்கமாட்டோம். ஆனால் இது அப்படியல்ல. எந்த இடத்தில் எவ்வகையான மரங்களை நடுவது என்பது முன்பே தீர்மானிக்கப்படுகிறது (மலையின் உயரத்திற்கு ஏற்றாற்போல் அவ்வுயரத்திலிருக்கும் தாவர வகையும் மாறுபடும்). நடுவதற்கு முன் அவ்விடங்களில் களைச்செடிகள் அகற்றப்படுகின்றன. துண்டுச்சோலை அதிகமாக சிதைக்கப்பட்டிருந்தால் அதற்குத் தகுந்தவாறு அதன் ஓரங்களில் வெட்டவெளியில் வளரும் மரவகைகளும், மூடிய விதானத்தினுள்ளே நிழலின் கீழ் வளரும் மரங்களும் நடப்படுகிறது. நட்டுவைக்கப்படும் ஒவ்வொரு நாற்றிலும் அடையாளத்திற்காக பளிச்சென்று தெரியும் நிறத்தில் சிறிய பிளாஸ்டிக் பட்டைகள் கட்டிவைக்கப்படுகின்றன. இதை வைத்து ஒவ்வொரு ஆண்டும் நடப்பட்ட மொத்த நாற்றுகளில் எத்தனை உயிர்பிழைக்கின்றன எப்பது கணக்கிடப்படுகிறது. நாற்றுகளை நட்டபின் அவ்வப்போது இடத்திற்குத் தகுந்தாற் போல் அப்பகுதியில் வளரும் களைகள் அப்புறப்படுத்தப்படுகின்றன. இது நட்டுவைக்கப்பட்ட மழைக்காட்டு நாற்று வளர ஏதுசெய்கிறது. ஓரளவிற்கு இந்நாற்றுகள் வளர்ந்தபின் அவற்றின் நிழலுக்கடியில் களைகள் வளராது.

கடந்த 12 ஆண்டுகளாக வால்பாறைப் பகுதியில் மொத்தம் சுமார் 50 ஹெக்டேர் பரப்பில் கிட்டத்தட்ட 50,000 ஆயிரம் நாற்றுகள் நடப்பட்டுள்ளன. இவையணைத்தும் ஒரே வகையானவை அல்ல. மழைக்காட்டில் வளரும் மரங்கள், பெருங்கொடிகள், பிரம்பு என சுமார் 150 வகையான தாவரங்களை சிதைந்துபோன மழைக்காட்டுத் துண்டுச்சோலையிலும், காப்பித்தோட்டங்களுக்கு நிழல் மரமாகவும் நடப்பட்டுள்ளன. வனத்திலுள்ள ஒரு மரத்தை வெட்டிச்சாய்க்க எத்தனை மணிநேரங்கள் ஆகும்? 50 ஹெக்டேர் பரப்புள்ள வனத்தை அழிக்க எவ்வளவு நாளாகும்?  ஆனால் ஒரு விதையை முளைக்க வைத்து வளர்த்து ஆளாக்கி அதனிடத்தில் கொண்டு சேர்த்து, கவனமாக பராமரித்து பாதுகாத்த பின் அம்மரம் அடைந்த உயரம் எவ்வளவு தெரியுமா? சுமார் 10 லிருந்து 15 மீட்டர். இதற்கு 12 ஆண்டுகள் பிடிக்கிறது!

Injipara_before_after

மீளமைக்கப்பட்ட ஒரு மழைக்காட்டுப் பகுதி.
மழைக்காட்டு நாற்றுகளை நடும் முன்னும் (இடது) மூன்று ஆண்டுகளுக்குப் பின்னும் (வலது).

ஒரு மழைக்காட்டு மர விதை முளைத்து, துளிர் விட்டு, நாற்றாகி, மரமாக உயர்ந்து வளர்வதற்குள் பல விதமான இன்னல்களை சந்திக்க நேரிடுகின்றது. வறட்சியிலிருந்தும், நாம் காட்டுக்குள் கொண்டு செல்லும் ஆடு, மாடுகளிடமிருந்தும், அங்கு வாழும் தாவர உண்ணிகளிடமிருந்தும், சூரிய ஒளிக்காக, நீருக்காக அதனைச்சுற்றியுள்ள தாவரங்களிடமிருந்தும், களைச்செடிகளிடமிருந்தும் எல்லாவற்றிற்கும் மேலாக மரவெட்டியின் கோடாலியிடமிருந்தும் தப்பிக்க வேண்டும்.

கிருஷ்ணாவும், இயற்கை காப்பு நிறுவனத்தின் மழைக்காட்டு மீளமைப்புத் திட்டக் குழுவினரும், இந்த மழைக்காட்டு மரங்களின் நெடுந்தூரப் பயணத்தை தொடங்கி மட்டுமே வைத்துக்கொண்டிருக்கின்றனர். எந்த ஒரு பயணத்திற்கும் முக்கியமானது நாம் எடுத்து வைக்கும் முதல் படிதானே. சேர வேண்டிய இடத்தை அடைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில்தானே பயணத்தைத் தொடங்குகிறோம். அதைப்போலவே இவர்களும், தாம் நட்டுவைக்கும் இம்மரங்கள் தழைத்து, பிற்காலத்தில் வானை முட்டும் அளவிற்கு நெடுந்துயர்ந்து, இங்கு திரியும் பெரிய இருவாசிகளுக்கும், பழுப்பு மரநாய்களுக்கும் பழங்களை அளித்து இவை இம்மரங்களின் விதைகளைப் பல்வேறு இடங்களுக்குப் பரப்பி காட்டினைச் செழிக்கச்செய்யும் என நம்புகிறார்கள். நம்பிக்கைத்தானே வாழ்க்கையே!

11th March 2012 அன்று தினமணி நாளிதழின் “கொண்டாட்டம்” ஞாயிறு இணைப்பில் வெளியான கட்டுரை இது. அக்கட்டுரைக்கான உரலி இதோ:

http://dinamani.com/weekly_supplements/sunday_kondattam/article888141.ece

மேற்குத்தொடர்ச்சி மலையின் மீளமைக்கும் வழிமுறைகளை விளக்கும் ஒரு சிறு நூலை  இங்கு காணலாம் (PDF)

மேலும் விவரங்களுக்கு, இயற்கை காப்புக் கழகத்தின் (NCF) மழைகாட்டு மீளமைப்புத் திட்டதினை விளக்கும் இணையத்தளத்தினைக் (http://www.ncf-india.org/restoration/) காணவும்.

மழைக்காட்டு மீளமைப்புத் திட்டத்தினைப் பற்றிய குறும்படத்தை இங்கே காணலாம்.

Written by P Jeganathan

March 11, 2013 at 3:17 pm