UYIRI

Nature writing in Tamil

Archive for October 2014

நட்சத்திர ஆமைகளைக் காப்பாற்றிய நட்சத்திரங்கள்

leave a comment »

அங்கிள்..தாபேலு..தாபேலு.. என கத்திக் கொண்டே வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே ஓடி வந்தார்கள் பக்கத்து வீட்டு வாண்டுகள். என்னவென்று கேட்டபோது கூப்பியிருந்த கையை திறந்து காண்பித்தார்கள். இருவர் உள்ளங்கைகளிலும் இருந்தது ஒரு சின்னஞ்சிறிய நட்சத்திர ஆமைக்குட்டி! தாபேலு என்றால் தெலுகில் ஆமை.

கடப்பா மாநிலத்தில் சில ஆண்டுகளுக்கு முன் களப்பணியில் ஈடுபட்டிருந்த காலம். நாங்கள் காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள் என்பதை அறிந்த அக்கம்பக்கத்திலுள்ள சிறுவ சிறுமியர் வந்து என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என கேள்விகளால் எங்களைத் துளைத்தெடுப்பார்கள். அவ்வப்போது கீழே விழுந்த குயில் குஞ்சு, கிளிக்குஞ்சு முதலியவற்றையும் எடுத்துக் கொண்டு எங்களிடம் என்ன செய்யலாம் எனக் கேட்டு உதவிக்கு வருவார்கள். ஆனால் ஆமைக்குட்டியை எடுத்து வந்தது அதுதான் முதல் முறை.

recovering-tortoises copy-color_400

Illustration: Boopathy Srinivasan

அந்த சின்னஞ்சிறிய பிஞ்சுக் கைகளில் அடைக்கலமாகியிருந்த அந்த ஆமைக்குட்டியைப் பார்த்த எனக்கு ஆச்சர்யமாகவும், கூடவே கவலையாகவும் இருந்தது. எனது கவலைக்குக் காரணம் இந்த வகை ஆமைகளை திருட்டுத்தனமாக காட்டிலிருந்து பிடித்து இவற்றின் அழகிய ஓடுகளுக்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கென ஒரு கும்பலே இயங்கி வருகிறது. இவ்வாறு கடத்தப்படும் போது சென்னையில் பல வேளைகளில் இவை பெட்டி பெட்டியாக பிடிக்கப்படுவதும் உண்டு. உடனே அந்த சிறுவர்களிடம் எப்படி, எங்கிருந்து கிடைத்தது என தெலுகில் அடுகினேன். அவர்களும் தங்களது சுந்தரத் தெலுகில் செப்பினார்கள்.

நடந்தது இதுதான்: இவர்கள் இன்னும் பல குழந்தைகளுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது ஒருவன் சிக்ஸர் அடித்ததில் அருகில் இருந்த, புதர் மண்டிக்கிடந்த காலி மனையில் பந்து சென்று விழுந்திருக்கிறது. பந்தை தேடும் முயற்சியில் இருந்தவர்களுக்குக் கிடைத்தது அழகான நட்சத்திர ஆமைக் குட்டிகள். கிரிக்கெட்டை விட அந்த அழகிய ஆமைகள் அவர்களது கவனத்தை ஈர்த்ததால் உடனே விளையாடுவதை நிறுத்திவிட்டு குழந்தைகள் அனைவரும் ஆமைக்குட்டியை சேகரிக்கும் வேலையில் இறங்கிவிட்டார்கள். பல குழந்தைகள் அவற்றை தங்கள் வீட்டில் வைத்து வளர்ப்பதற்காக எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

ஊருக்கு நடுவில் குடியிருப்புப் பகுதியில் எப்படி இந்த ஆமை வந்திருக்க முடியும்? அருகில் வனப்பகுதி கூட கிடையாது. ஒன்றிரண்டானாலும் பரவாயில்லை, ஆளுக்கு ஒரு ஆமைக்குட்டியை எடுத்துச் சென்றதாகச் சொல்கிறார்கள். குழப்பத்துடனேயே, அக்குழந்தைகளை அங்கே கூட்டிச் செல்லுமாறு கேட்டேன். சுற்றிலும் வீடுகளும் இடையே, கருவேல மரங்கள் அடர்ந்த ஒரு காலி மனையில் பாதி கட்டப்பட்டு முடிக்கப்படாத ஒரு குட்டிச்சுவரும் இருந்தது. அக்கம் பக்கத்தினர் தங்கள் வீடுகளில் இருந்து காய்கறி மீதங்களையும், குப்பைகளையும் அந்த இடத்தில் கொட்டி வைத்திருந்தனர்.

ஓரிரு குழந்தைகள் முட்செடிகள் நிறைந்த இடத்திலும் போய் ஆமைக்குட்டிகளை தேடும் முயற்சியில் இருந்தனர். இரண்டு குட்டிகளைத் தேடி எடுத்தும் விட்டனர். அக்குழந்தைகளிடம் ஆமைகளை வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது, வனத்துறையினர் வந்து பிடித்துக் கொள்வார்கள் எனச் சொல்லிப் பார்த்தேன். அவர்கள் அதற்கெல்லாம் பயப்படுவதாகத் தெரியவில்லை. சரி என்ன கொடுத்தால் அவர்கள் அதை எண்ணிடம் திரும்பித் தருவார்கள் எனக் கேட்டேன். புது ஆண்டு பிறக்க இன்னும் சில நாட்களே இருந்தன. அவர்கள் அனைவரும் புத்தாண்டு வாழ்த்து அட்டைகள் வாங்குவதில் ஆர்வம் கொண்டிருந்தனர். ஒவ்வொரு குட்டி ஆமைக்கும் ஐந்து வாழ்த்து அட்டைகளும், மற்ற குழந்தைகள் எடுத்துச் சென்ற ஆமைகளை மீட்டுத் தந்தால் பத்து வாழ்த்து அட்டைகள் தருவதாகச் சொன்னவுடன் அவர்களுக்கு மகிழ்ச்சி தாளவில்லை.

முதலில் குழந்தைகளால் எடுத்துச் செல்லப்பட்ட ஆமைகளை மீட்கும் பணியைத் தொடங்கினோம். ஐந்து குழந்தைகள் எங்களுடன் சேர்ந்து வீடு வீடாகச் சென்று அங்குள்ள குழந்தைகளிடம் விஷயத்தைச் சொல்லி எடுத்துச் சென்ற ஆமைக்குட்டியை மீட்டு ஒரு அட்டைப் பெட்டியில் பத்திரமாக சேர்த்து வைத்துக் கொண்டனர். இதற்குள் விஷயம் பரவி எங்களோடு இன்னும் பல குழந்தைகள் ஆமை மீட்புப் பணியில் இறங்கினர். சில குழந்தைகள் அவர்களது செல்ல ஆமைக்குட்டிகளை தரமாட்டேன் என அடம் பிடிக்க அவர்களது பெற்றோர்களிடம் இந்த ஆமைகள் இந்திய வனப்பாதுகாப்புச் சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டவை என்றும், இவற்றை வனத்துறையினரிடம் ஒப்படைப்பதுதான் முறை என்றும் எடுத்துச் சொன்னோம். அவர்களும் அதை உணர்ந்து அக்குழந்தைகளுக்கு விளையாட வேறு பொம்மைகள் வாங்கித்தருவதாகச் சொல்லிச் சமாதானப்படுத்தி ஆமைக்குட்டியை எங்களிடம் ஒப்படைத்தனர்.

சில குழந்தைகளிடமிருந்து மீட்கப்பட்ட ஆமைக்குட்டிகள் ஈரமாக இருந்தது. ஆமையென்றால் நீருக்குள் இருக்க வேண்டும் என தவறாக எண்ணிய சில குழந்தைகள் அவற்றை வாளியில் நீரை நிறப்பி உள்ளே விட்டிருக்கிறார்கள். நல்ல வேளையாக சரியான நேரத்தில் சென்று மீட்டதால் ஒன்றும் ஆகவில்லை. நட்சத்திர ஆமைகள் தரையில் வாழ்பவை, நீருக்குள் அல்ல. அவை சமவெளியில் உள்ள வறண்ட புதர்காடுகளிலும், இலையுதிர் காடுகளிலும் பொதுவாகத் தென்படும், என அவர்களுக்கு விளக்கினோம்.

ஒரு வழியாக எடுத்துச் செல்லப்பட்ட 15 ஆமைக்குட்டிகள் அனைத்தும் மீட்கப்பட்டன. அடுத்த நடவடிக்கையாக புதருக்குள் மேலும் பல ஆமைக்குட்டிகள் உள்ளனவா என தேட வேண்டும். அதற்குள் இருட்ட ஆரம்பித்தது. சரி மறுநாள் அந்த வேளையைத் தொடங்கலாம் என மீட்கப்பட்ட ஆமைக்குட்டிகளை எங்களது ஆராய்ச்சி நிலையத்திற்கு கொண்டு சென்றோம். வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்திருந்ததால் அவர்களும் வந்து ஆமைக்குட்டிகளைப் பார்வையிட்டனர். குழந்தைகள் ஆர்வத்துடன் அவர்களுக்கு நடந்ததை விளக்க ஆரம்பித்தனர். பத்திரிக்கையாளர்களுக்கும் இந்தச் செய்தி எட்டி அவர்களும் வந்து குழந்தைகளை பேட்டி எடுத்துச் சென்றனர்.

மறுநாள் காலை நான் விழிக்கும் முன்பே என் வீட்டு வாசலில் குழந்தைகள் கூடிவிட்டனர். வனத்துறையினரும் வந்து சேர்ந்தனர். எல்லோருமாக சேர்ந்து ஆமை தேடுதல் வேட்டையில் இறங்கினோம். புதர்கள் அகற்றப்பட்டன. பள்ளிக்குச் செல்லாமல் அன்று பகல் முழுவதும் குழந்தைகள் ஆர்வத்துடன் அவர்கள் கண்களில் அகப்பட்ட ஆமைக்குட்டிகளையும், ஒரு சில முதிர்ந்த ஆமைகளையும், சேகரிக்க ஆரம்பித்தனர். அந்த சிறிய இடத்திலிருந்து சிறியதும் பெரியதுமாக மொத்தம் 55 நட்சத்திர ஆமைகளை கண்டெடுத்தோம்.

Photo: Naveen Joseph

Photo: Naveen Joseph

இந்த நட்சத்திர ஆமைகள் பொதுவாக தாவர உண்ணிகள். அந்த காலி மனையின் ஒரு மூலையில் அப்பகுதி மக்கள் காய்கறிக் கழிவுகளையும், குப்பைகளையும் வீசி வந்திருக்கின்றனர். இவற்றையும் அங்கு வளர்ந்திருந்த புற்களையுமே உண்டு வாழ்ந்து கொண்டு இருந்திருக்க வேண்டும். யாராவது காட்டிலிருந்து பிடித்து கொண்டு வந்து வளர்த்துக் கொண்டிருந்த போது அங்கிருந்து தப்பித்து இங்கே வந்திருக்கலாம். கொண்டு வந்தது பெண் ஆமையாக இருந்திருக்கக் கூடும். இவை மண்ணில் குழி தோண்டி முட்டையிடுபவை. இந்த இடத்திற்கு வந்தபின் முட்டையிட்டு ஆமைக்குஞ்சுகள் வெளியேறி இங்கேயே வாழ ஆரம்பித்திருக்கலாம். பலவாறு யூகிக்க முடிந்ததே தவிர இவை எப்படி இங்கே வந்தன? எத்தனை காலமாக இங்கே வசிக்கின்றன? என்பதெல்லாம் புரியாத புதிராகவே இருந்தது எங்களுக்கு.

அடுத்த நாள், நட்சத்திர ஆமைகள் அனைத்தையும் திருப்பதியில் உள்ள விலங்குகாட்சி சாலைக்கு எடுத்துச் செல்வதாக முடிவு செய்யப்பட்டது. குழந்தைகளுக்கு சோகம் தாளவில்லை. இங்கேயே வைத்துக் கொள்ளலாம் என்றார்கள். அவர்கள் சேகரித்த பல ஆமைக்குட்டிகளின் கால்களிலும், கழுத்துப் பகுதிகளிலும் புண்ணும் அதில் புழுக்களும் நெளிந்து கொண்டிருந்தன. சுகாதாரமற்ற சூழலில் இருந்ததனால் இவை ஏற்பட்டிருக்கக் கூடும். ஆகவே இவற்றை காட்டுப்பகுதியில் கொண்டு விடுவது நல்லதல்ல. அங்குள்ள இயற்கையாகத் திரியும் ஆமைகளுக்கும், பிற காட்டுயிர்களுக்கும் இவற்றின் மூலம் இந்த நோய் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே இவற்றை குணப்படுத்தவும், நோய் மேலும் மற்ற ஆமைகளுக்கு பரவாமல் இருக்கவும் இவற்றை அடைத்து வைத்துப் பராமரிப்பதே சிறந்தது. இதையெல்லாம் விளக்கிய பின்னும் குழந்தைகள் சமாதானமடையவில்லை.

Photo: Shreeram

Photo: Shreeram

ஆமைக்குட்டிகள் இங்கேயே இருந்தால் ஒவ்வொன்றாக உயிரிழக்க நேரிடும் என்றும், இதனால், அவர்கள் இவ்வளவு முயன்று காப்பாற்றியது எல்லாம் வீணாக போய்விடும் என்றும், விலங்குகாட்சி சாலைக்கு எப்பொழுது வேண்டுமானாலும் சென்று அவர்களது ஆமைக்குட்டிகளை பார்த்து வரமுடியும் என்றும் நம்பிக்கையூட்டிய பின்னரே கொஞ்சம் முகம் மலர்ந்து, அவர்களது செல்ல ஆமைக்குட்டிகளுக்கு பிரியா விடையளித்தார்கள்.

பெட்டிச் செய்தி

இந்தியாவில் தென்படும் ஆமைகளை பொதுவாக மூன்று வகையாகப் பிரிக்கலாம். நட்சத்திர ஆமை போன்ற தரை ஆமைகள் (tortoise), குளங்களிலும், ஏரிகளிலும், ஆறுகளிலும் தென்படுபவை நன்னீர்நீர்வாழ் ஆமைகள் (terrapins), கடலில் இருப்பவை கடலாமைகள் (sea turtles). இந்தியாவில் ஐந்து வகை கடலாமைகளும், சுமார் 34 வகையான ஆமைகளும் தென்படுகின்றன. கடலாமைகள் பொதுவாக உருவில் பெரியவை. அந்தமான் – நிக்கோபார், இலட்சத்தீவு கடற்கரைகளில் முட்டையிட வரும் தோணி ஆமை (Leatherback sea turtle) சுமார் 200 செ.மீ நீளமும் 650 கிலோ எடையும் இருக்கும். நீர்வாழ் ஆமைகள் நீருக்குள் இருந்தாலும் முட்டையிட அவை நிலப்பகுதிக்கே வருகின்றன. மண்ணின் வெப்பநிலையைப் பொருத்து ஆமை முட்டைகள் பொறியும். மண்ணின் வெப்பநிலை குறைவாக இருப்பின் ஆண் ஆமைக்குஞ்சுகளும், அதிகமாக இருப்பின் பெண் ஆமைக்குஞ்சுகளும் வெளிவரும்.

ஆமைகளின் உடல் உறுதியான ஓடால் மூடப்பட்டிருக்கும். மேல் ஓடும் (Carapace) கீழ் ஓடும் (Plastron) பக்கவாட்டில் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ஓடுகள் தரை ஆமைகளில் கடினமாகவும், சில வகை நீர் ஆமைகளில் சற்று மென்மையாகவும் இருக்கும். இந்த ஆமைகள் தம்மை எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள தலையையும், வாலையும், கால்களையும் கவசம் போன்ற தங்களது ஓடுகளுக்குள் இழுத்துக் கொள்கின்றன. கடலாமைகளால் இவ்வாறு செய்ய முடியாது.

ஆமைகள் அவற்றின் கடினமான ஓடுகளுக்காகவும், இறைச்சிக்காகவும் பெருமளவில் வேட்டையாடப்படுகின்றன. கடலாமைகளின் முட்டைகளும் அவற்றின் கூட்டிலிருந்து மனிதர்களால் உணவுக்காக திருடப்படுகின்றன. மீன்பிடி வலைகளில் சிக்கியும் பல கடலாமைகள் உயிரிழக்கின்றன.

******

தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 28th October 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF  ஐ இங்கே பெறலாம்.

Written by P Jeganathan

October 29, 2014 at 7:46 pm

இலைகள் தான் எல்லாமே..

with one comment

இலைகள் தான் இந்த உலகிற்கு எவ்வளவு முக்கியமானவையாக இருக்கின்றன? தாவரங்களுக்கும், மரங்களுக்கும் மட்டுமல்ல நமக்கும் கூட. சூரிய ஒளியிலிருந்து உணவு தாயரித்து தாவரத்தை வளர்க்கிறது, கூடவே நாம் சுவாசிக்கும் உயிர்மூச்சினையும் தருகிறது. இந்த வேலையைச் செய்வது மரம் தான் என நாம் பொதுவாகச் சொன்னாலும் உண்மையில் அதைச் செய்வது இலைகள் தானே?

_JEG0309_

பெரும்பாலும் மரங்களை அடையாளம் காண்பதே அவற்றின் இலைகளை வைத்துத் தானே? இலைகளை மரங்களின் முகங்கள் எனலாமா? மலர்கள் பூப்பது பருவ காலங்களில். ஆனால், மரத்தின் கூடவே எப்போதும் இருப்பது இலைகள் தானே? எனினும் சில மரங்கள் சில வேளைகளில் இலைகளின்றி இருக்கின்றனவே? இலைகளுக்கும் கிளைகளுக்கும் யார் உயர்ந்தவர் என வாக்குவாதம் வந்ததால் கோபித்துக் கொண்டு இலைகள் உதிர்கின்றனவா? பிறகு அவை இரண்டும் சமாதானமாகி மீண்டும் தளிராகப் பிறந்து இலைகளாக வளர்கின்றனவா? இலையில்லா மரத்தைப் பார்க்கும் போது அது தன் ஆடையை இழந்தது போல் தோற்றமளிக்கிறதல்லவா? ஆக, இலையை மரத்தின் ஆடை எனலாமா? பனை, தென்னை போன்ற கிளையில்லா மரங்களில் இலைகள் உச்சியில் இருப்பதால்தான் அவற்றை அம்மரங்களின் தலை என்கிறோமா?

மரத்திற்கு அழகையும், வடிவத்தையும் தருபவை இலைகளே. மரநிழல் எனும் சொல் இலைகள் இல்லாமல் உருவாகியிருக்குமா? மரத்தண்டின் உள்ளே இருக்கும் ஆண்டு வளையங்களினால் அதன் வயதை அறிய முடியும். ஆனால் ஒரு மரத்தின் மனநிலையை அவற்றின் இலைகளைக் கொண்டே அறிந்து கொள்ளமுடியும் எனத் தோன்றுகிறது. இளந்தளிர், கொழுந்து, முதிர்ந்த இலை, பழுத்த இலை, இப்படி இலையின் பல நிலைகளைக் கொண்ட ஒரு மரத்தின் ஒவ்வொரு நிலையிலும் அதன் ஒவ்வொரு மனநிலையைப் பிரிதிபலிப்பது போலத்தான் தோன்றுகிறது. மரத்திற்கு மனம் உண்டா? மரமும் உயிர்தானே இருக்காதா என்ன? பருவகால மாற்றத்தினை உணர்ந்து தானே, அதற்கேற்ப அவை தமது இலைகளைக் களைந்து புதிதாக தளிர்களை பிரசவிக்கின்றன. ஆக தாவரங்களுக்கும் உணரும் திறன் உண்டென்பது புலனாகிறதல்லவா?

Photo: Radha Rangarajan

Photo: Radha Rangarajan

இலையானது ஒரு தாவரத்தின் எல்லா நிலைகளிலும் கூடவே இருக்கிறது. உயர்ந்தோங்கி வானைமுட்டும் மரங்கள் விதைகளிலிருந்து தானே உருவாகின்றன. அந்த விதை எனும் கருவறையிலும் இலைகள் இருக்கின்றன. விதையின் உள்ளிருக்கும் இலையின் எண்ணிக்கையை வைத்துத் தானே தாவரங்களைத் தாவரவியளாலர்கள் ஒரு வித்திலைத்தாவரங்கள், இரு வித்திலைத் தாவரங்கள் என வகைப்படுத்துகிறார்கள்?

மண்ணை முட்டி மேலே வரும் விதையைப் பிளந்து, சூரிய ஒளியில் சுவாசிக்க ஆரம்பிக்கும் அந்த சிறிய இளந்தளிர்கள் வளர்ந்து கொழுந்தாகி, பின் முதிர்ந்த இலையாகி கடைசியில் பழுத்த இலை கீழே விழுந்து சருகாகிறது. சருகுகளை இறந்து போன இலைகள் எனச்சொல்வதில் எனக்கு விருப்பமில்லை. பசுங்கணிகங்களில் ஏற்படும் வேதியியல் மாற்றத்தால் இலை தனது இயல்பான பச்சைநிறத்தை இழந்து பழுத்த இலையாகிறது. அதற்கு முன் இலையிலுள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் மரக்கிளையானது உறிஞ்சிக்கொண்டு தற்காலிகமாக இலையுடனான தொடர்பை துண்டித்துக் கொள்கிறது. எனினும் இலைச்சருகு மரத்தின் ஒரு அங்கம் தான். கீழே விழுந்தாலும் அது மரத்துடனான உறவை துண்டித்துக் கொள்வதில்லை. விழுந்த இலை மட்கி உரமாகிறது. மண்ணிலுள்ள அவ்வுரத்தையே மரத்தின் வேர்கள் ஈர்த்துக் கொண்டு வளர்கின்றன.

Photo: Kalyan Varma

Photo: Kalyan Varma

இலைகளில் தான் எத்தனை வடிவங்கள். இதய வடிவ பூவரசு, சிறுநீரக வடிவ வல்லாரை, முட்டை வடிவ ஆலிலை, நுரையீரல் வடிவ மந்தாரை, உள்ளங்கையையும் விரலையும் ஒத்த இலவம்பஞ்சு இலை, நட்சத்திர வடிவ ஆமணக்கு இலை. இந்திய வனங்களில் எருமைநாக்கு எனும் மரம் உண்டு. இம்மரத்தின் இலை நீளமான நாக்கைப் போலிருப்பதாலேயே இப்பெயர். மயிலின் காலடித்தடத்தைப் போன்ற இலையைக் கொண்டதால் ஒரு மரத்தின் பெயர் மயிலடி. இது போல் இலையின் வடிவத்தை வைத்தே பெயர் பெற்ற தாவரங்கள் ஏராளம்.

ஒரு மரத்தில் இருக்கும் அனைத்து இலைகளும் சூரிய ஒளிக்காகத் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொள்ளாமலிருக்க எதிரெதிரே, பக்கவாட்டில், வட்ட வடிவில் தனியிலை மற்றும் கூட்டிலை என பல வித வடிவங்களில் அமைந்துள்ளன. கடுங்குளிரைத் தாங்க ஊசி போன்ற இலைகளையும், வறண்ட பிரதேசங்களில் வளரும் தாவரங்களில் பல கருவேலம், குடைசீத்த மரங்களில் உள்ளது போல் சின்னஞ்சிறு இலைகளையும், பாலைவனங்களில் நீரை சேமித்து வைத்துக் கொண்டு தடித்த இலையாகவும், நீரில் மிதக்கும் போது நீர் வந்து ஒட்டாமல் மெழுகு போன்ற பூச்சு கொண்ட மேற்புறத்துடனும், நிழலான பகுதியில் சூரிய ஒளியைப் பெற்று வளர அகன்ற இலையையும், எப்போதும் மழை பெய்யும் மழைக்காட்டுப் பகுதியில் இலைகளில் நீர் தங்காமல் வடிந்து கொண்டே இருக்க கூரிய முனையைக் கொண்டும் (drip tip) தாம் வளரும் இடத்திற்கு தகுந்தவாறு இலைகள் தம்மை தகவமைத்துக் கொள்கின்றன.

Photo: Radha Rangarajan

Photo: Radha Rangarajan

சில வகை இலைகள் உணவு உற்பத்தி மட்டுமே செய்யாமல் தனது தாவரத்திற்கு வேறு பல வகைகளிலும் உதவி புரிகின்றன. செங்காந்தள் மலரின் அழகை மட்டுமே பார்த்து ரசிக்கும் நமக்கு அக்கொடியின் இலை செய்யும் சேவை தெரிவதில்லை. செங்காந்தள் இலையின் நுனி அக்கொடி பற்றிக் கொண்டு செல்ல ஒரு பற்றுக்கம்பியாக மாறியுள்ளது. தொட்டாற்சுருங்கி தொட்டால் சுருங்குவதேன்? அதன் இலைகளை திங்க வரும் பூச்சிகள் கடிக்க முடியாத படி தம்மை மடக்கிக் கொண்டு அத்தாவரத்தையே பாதுகாக்கிறது. பூச்சிகளை உணவாகக் கொள்ளும் சிறு தாவரம் கொசு ஒட்டி (sundew). அதன் இலைகளின் விளிம்பில் சிறிய நீட்சிகளின் முனையில் பனித்துளி போல் பசை போன்ற பொருள் இருக்கும். இதில் வந்து சிறு பூச்சிகள் ஒட்டிக் கொண்டால், அந்நீட்சிகள் மெல்ல மடங்கி அப்பூச்சிகளிலிருந்து ஊட்டச்சத்துகளை மெல்ல உறிஞ்சிவிடும்.

Photo: Kalyan Varma

Sundew (Drosera sp). Photo: Kalyan Varma

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் மழைக்காடுகளில் யானை விரட்டி (elephant nettle) எனும் சிறு மரம் உண்டு. இது நம் தோலின் மேல் பட்டால் உடனே அந்த இடம் எரிச்சலெடுக்கும். பின்னர் காய்ச்சல் கூட வரும். காரணம் இந்த இலைகளில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத தூவிகள் போன்ற கூரிய முட்களும், அதிலுள்ள நஞ்சும் தான். இதனால் தான் எந்தத் தாவர உண்ணியும் யானைவிரட்டியை நெருங்குவதில்லை.

Elephant Nettle. Photo: Kalyan Varma

Elephant Nettle. Photo: Kalyan Varma

இலைகள் அது இருக்கும் தாவரத்திற்கு மட்டுமே உதவி புரிவதில்லை. பல உயிரினங்களுக்கு உணவாகவும், வேறு பல விதத்திலும் உதவி புரிகின்றன. பல வண்ணத்துப் பூச்சிகள் குறிப்பிட்ட இலைகளில் தான் முட்டையிடுகின்றன. ஏனெனில் அவற்றின் புழுக்கள் வளர்ந்து அந்த இலைகளைத் தான் உணவாகக் கொள்ள முடியும். இலைகள் இரண்டு இலைகளை சேர்த்து தைத்தே தையால்காரக் குருவி (Common Tailorbird) கூட்டை உருவாக்குகிறது. எதிரி உயிரிகளிடமிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள இலையைப் போலவே தேற்றம் கொண்டு உருமறைந்து வாழும் இலைப்பூச்சி (leaf insect), இலை வெட்டுக்கிளி (katydid). இலைச் சருகைப் போலவே தோற்றம் கொண்டது சருகு வண்ணத்துப் பூச்சி (Oak leaf butterfly). உலகியேலே கூடு கட்டி முட்டையிடும் ஒரே பாம்பு, இந்திய வனப்பகுதிகளில் தென்படும் கருநாகம். பெண் கருநாகம், தனது நீண்ட உடலால், காட்டின் தரைப்பகுதியில் இருக்கும் இலைச் சருகுகளை ஓரிடத்தில் குவித்து, மழைநீர் புகா வண்ணம் அழுத்தி இலைகளால் ஆன அதனுள் முட்டையிடுகிறது.

_JEG7180_

இலை வெட்டுக்கிளி (katydid)

Oak Leaf Butterfly

Oak Leaf Butterfly

இலைகள் நம் வாழ்விலும் இரண்டரக்கலந்தவை. இலைகள் இல்லாத வாழ்வை நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. மனித குலத்தின் முதல் ஆடை இலைகள் தானே! தோரணம், தொன்னை, கீற்று, விசிறி என இலைகளால் நாம் செய்யும் பொருட்கள் ஏராளம். வாழை இலையில், ஈர்க்குச்சிகளால் தைக்கப்பட்ட மந்தார இலைகளில், தேக்கு இலையில் சாப்பாடு, மாவிலையில், இளம் தென்னங்கீற்றில் தோரணம், பனை ஓலையில், தாழை மற்றும் மூங்கில் இலைகளால் வேயப்பட்ட குடை, மரிக்கொழுந்து, துளசியில் மாலை, தீக்காயம் பட்டவர்களை கிடத்த வாழை இலை, வெண்ணெயை உருக்கும் போது வாசனைக்குப் போட முருங்கைக் கொழுந்து, நம் கைகளை சிவக்க வைக்க மருதாணி, தலைமுடி வளர கையாந்தகரை, நாம் உண்ணும் எண்ணிலடங்கா கீரை வகைகள், குழந்தைகள் பீப்பீ செய்து விளையாட பூவரச இலை, திதி கொடுக்கும் போது தர்ப்பைப் புல்லில் மோதிரம் என நம் வாழ்வில் பல நிலைகளில் ஏதோ ஒரு வகையில் நம் கூடவே பயணிக்கின்றன இலைகள்.

எத்தனை இலைகள் இருந்தாலும் மூன்று வகை இலைகள் இல்லாமல் நம்மில் பலருக்கு எதுவுமே ஓடாது. தேயிலை, வெற்றிலை, புகையிலை தான் அவை. புகையிலையை சிறு துகள்களாக்கி அதை சுற்றி வைத்துக் கொடுக்கும் பீடியும் ஒரு வகை இலை தான். அம்மரத்தினை பீடி இலை மரம் எனபர்.

மரங்களைப் பற்றியும் பூக்களைப் பற்றியும் பல மொழிகளில் கவிதைகள் எழுதிய புலவர்கள் இலையை பற்றி மட்டுமே ஏதேனும் கவிதைகள் எழுதியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. “இலைகள் தான் எல்லாமே” என்றார் ஜெர்மானிய அறிஞர் யோஹான் வொல்ப்கெங் வான் கோதே (Johann Wolfgang vonGoethe). ஒரு நாளில் நாம் உபயோகிக்கும் இலைகளைப் பட்டியலிட்டுப் பாருங்கள், அவர் சொன்னது போல் இலைகள் இல்லாமல் எதுவுமே இல்லை என்பது புரியும்.

பெட்டிச் செய்தி

சில இளந்தளிர்கள் சிவப்பாக இருப்பதேன்?

Photo: Kalyan Varma

Photo: Kalyan Varma

Photo: Ganesh Raghunathan

Photo: Ganesh Raghunathan

கிளையில் துளிர்க்கும் சிறிய இலை சில மரங்களில் சிவப்பாக இருப்பதை நாம் கண்டிருக்கக்கூடும். மாவிலை ஓர் உதாரணம். மழைக்காட்டில் இதுபோல பல மரங்களைக் காணலாம். இலைக்கு பச்சை நிறத்தை அளிப்பது பசுங்கணிகங்கள் (குளோரோபிளாஸ்ட்  – chloroplast எனும் நிறமி). சிவப்பாக இருப்பதற்கான காரணம் ஆந்தோசயனின் (Anthocyanin) எனும் நிறமியால். இளந்தளிர்களில் இவை அதிகம். இதற்கு மூன்று காரணங்கள் இருக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்:

  1. பூஞ்சைகள் இளந்தளிர்களை தாக்காமல் இருக்க,
  2. புற ஊதாக்கதிர்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க,
  3. சில தாவர உண்ணிகளிடமிருந்து இளந்தளிர்களை பாதுகாக்க.

மூன்றாவது காரணம் சற்று சுவாரசியமானது, பரவலாக பலரால் ஒத்துக்கொள்ளப்பட்டது. ஒரு தாவரத்தின் முக்கியமான அங்கம் இலை. தாவரங்களின் உணவு உற்பத்திக்கு இன்றியமையாதவை இலைகள். அதை பாதுகாக்க ஒரு தாவரமானது பல வழிகளை கையாள வேண்டியிருக்கிறது. எனினும் இயற்கையில், இலைகளுக்கு பல வழிகளில் சோதனை வந்துகொண்டே தான் இருக்கும். இலைகளையே பிரதானமாக உணவாகக் கொண்ட உயிரினங்கள் ஏராளம். சின்னஞ்சிறு வண்ணத்துப் பூச்சியின் புழுக்கள், உருவில் பெரிய யானை, மந்திகள் (Langurs), மான்கள் முதலான உயிரினங்கள் இலைகளையே உண்டு வாழ்கின்றன. முதிர்ந்த இலைகளில் சிலவற்றை அவற்றிற்கு ஒதுக்கி வைத்தாலும், புதிதாகத் தோற்றுவிக்கும் இளந்தளிர்களை அவை தாக்கினால் முழுத் தாவரமே பாதிப்படையக்கூடும். ஆகவே இளந்தளிர்களை அவற்றிடமிருந்து பாதுகாக்க அவற்றை செந்நிறமாக்குகின்றன. ஏனெனில் சில தாவர உண்ணிகளின் கண்கள் சிவப்பு நிறத்தைக் காணும் திறனற்றவை.

******

தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 21st October 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF  ஐ இங்கே பெறலாம்.

Written by P Jeganathan

October 23, 2014 at 7:12 pm

Posted in Environment, Plants

Tagged with

கடற்கரைக் கோலங்கள்

with one comment

அதிகாலையில் எழுந்து பலோலம் கடற்கரையோரம் நடக்க ஆரம்பித்தேன். ஒரு மீனவர் கடலில் இருந்து மீன் பிடித்துவிட்டுத் திரும்பி, அலையோரப் பகுதியிலிருந்து கரைக்கு படகை தன்னந்தனியாக தள்ளிக்கொண்டிருந்தார். அலைவாய்க் கரையிலிருந்து சுமார் 50மீ தூரத்தில் பல படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன. தூரம் சிறிதாகத் தெரிந்தாலும் சுமார் 5மீ நீளமுள்ள படகை தனியாகத் தள்ளிக்கொண்டு வந்து கரைசேர்ப்பதென்பது சுலபமான காரியமல்ல. மணலில் சிக்கிக் கொள்ளாமலிருக்க நான்கு நீளமான மரக்கட்டைகளை படகின் அடியில் வைத்து படகின் பின்னாலிருந்து தள்ளிக் கொண்டு வந்தார். சிறிது தூரம் நகர்த்திய பின் இரண்டிரண்டு உருளைகளை பின்னாலிருந்து படகின் முன்னே வைத்துத் தள்ளிக் கொண்டு போனார்.

_JEG2324_700

அவரைத் தாண்டி பார்வையை செலுத்தினேன். அலை ஆரவாரமில்லாமல் அடித்துக் கொண்டிருந்தது. அதிக ஆள் நடமாட்டம் இல்லை. இன்னும் சில மணி நேரத்தில் மனிதக்கூட்டம் அங்கே மொய்க்க ஆரம்பித்துவிடும். ஆங்காங்கே சிலர் ஜாக்கிங், யோகா செய்து கொண்டும் சிலர் நடை பழகிக் கொண்டும் இருந்தனர்.

கடல் உள்வாங்கியிருந்தது. கடற்கரையில் அலையின் தடம் அழகாக இருந்தது. காற்றும், அலையும், கடல்நீரும், மணலும் சேர்ந்து அக்கடற்கரையில் அழகான, விதவிதமான கோலங்களை ஏற்படுத்தியிருந்தன. அவற்றில் ஒரு ஒழுங்கு இருந்தது. படிபடியாக, வரிவரியாக, வளைந்து நெளிந்து, கிளைகிளையாக மணல் கோலங்கள்.

_JEG2530_700

_JEG2401_700

_JEG2406_700

_JEG2295_700

_JEG2297_700

இவற்றைப் பார்த்துப் படம்பிடித்துக் கொண்டே வந்தபோது கண்ணில் தட்டுப்பட்டன நண்டுகள். என்னைக் கண்டவுடன் கண்ணிமைக்கும் நேரத்தில் குடுகுடுவென பக்கவாட்டில் ஓடி தோண்டி வைத்திருந்த வளைக்குள் ஓடி மறைந்தன.

_JEG2404_700

அந்த நண்டுகள் இட்ட கோலங்களும் மிக அழகாக இருந்தது. ஆம் நண்டுக் கோலங்கள்.

மேலோட்டமாக பார்க்கும் போது அவற்றின் வளையைச் சுற்றிக் கிடந்த நண்டுக் குமிழ்கள் அங்குமிங்கும் சிதறிக்கிடப்பதைப் போலிருந்தாலும், கூர்ந்து கவனித்தபோது அதிலும் ஓர் ஒழுங்கு (pattern) காணப்பட்டது. எனினும் அவற்றிலும் பல வடிவங்கள் இருப்பது தெரிந்தது. நண்டு வளையைச் சுற்றி கிடந்த குமிழ்களின் உருவ அளவும், நண்டின் உருவத்திற்கேற்ப இருந்தது. சின்னஞ்சிறிய (குண்டுமணியின் அளவேயுள்ள) நண்டுக் குஞ்சுகளின் கூட்டின் வெளியே மணிமணியாக கடுகின் அளவேயுள்ள குமிழ்கள். சற்று பெரிய (சுமார் 2 செமீ நீளமுள்ள) நண்டுகளின் வளையைச் சுற்றி குண்டுமணியின் அளவு குமிழ்கள். நீள் உருளை வடிவிலும் சில குமிழ்கள். வளையை மையமாக வைத்து அதைச் சுற்றிலும் எல்லாத் திசைகளிலும் சூரியக் கதிர்கள் போல குமிழ்கள் பரவிக் கிடந்தன. அந்தக்குமிழ்கள் எப்படி உருவாகின்ற எனப் பார்க்கும் ஆர்வத்தில் அங்கேயே அசையாமல் நின்று கொண்டிருந்தேன்.

_JEG2526_700

_JEG2582_700

_JEG2636_700

_JEG2375_700

தரையில் இருந்த வளைக்குள் இருந்து மெல்ல எட்டிப்பார்த்தது ஒரு நண்டு. உருவில் அப்படியொன்றும் பெரியது இல்லை சுமார் 1 செ.மீ நீளமே இருக்கும். பின்பு பக்கவாட்டில் நகர்ந்து முழுவதுமாக வெளியே வந்தது. அதன் வளையைச் சுற்றிலும் சில குமிழ்கள் இருந்தன. நூல் பிடித்தது போல் ஒரே நேர்க்கோட்டில் வரிசையாக இருந்த குமிழ்களின் பக்கமாக இருந்த அந்த நண்டு சில நொடிகள் கழித்து மெல்ல பக்கவாட்டில் நகர ஆரம்பித்தது. நகர்ந்து கொண்டிருந்த போதே கிடுக்கி போன்ற இரண்டு கைகளாலும் மணலை அள்ளி எடுத்து தனது வாயில் திணித்துக் கொண்டே சென்றது. திணிக்கப்பட்ட வேகத்திலேயே அந்த மணல் அதன் வாயின் மேற்புறம் சேர ஆரம்பித்தது. ஒரு குமிழ் போன்ற தோற்றத்தை அடையும் தருவாயில், வரிசையின் கடையில் இருந்த குமிழுக்கு அருகில் வந்து விட்டது அந்த நண்டு. இப்போது அது தனது ஒரு கையால் வாயிலிருந்த அந்த மணல் குமிழை வெட்டி எடுப்பது போல எடுத்து இலாவகமாக தனது நான்கு கால்களின் உதவியால் கடைசியாக இருந்த குமிழிற்கு அடுத்தாற்போல வைத்தது. கண நேரம் கூட தாமதிக்காமல் உடனே பக்கவாட்டில் நகர்ந்து வளைக்கு அருகே சென்று மறுபடியும் மணலை அள்ளித் திங்க ஆரம்பித்தது. இடமிருந்து வலமாக மெல்ல நகர்ந்து ஒரு குறிப்பிட்ட தூரம் செல்வதும், வலமிருந்து விருட்டென இடப்பக்கமுள்ள வளைக்கு வந்தடைவதுமாக இருந்த அந்தக் காட்சி எனக்கு டைப்ரைட்ரை நினைவு படுத்தியது. தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போது அதிலுள்ள உருளை (cylinder) இடமிருந்து வலமாகத் தானாக நகரும், பிறகு தாளின் ஓரத்திற்கு வந்தவுடன் அதிலுள்ள கைப்பிடியை வலமிருந்து இடமாக நாம் நகர்ந்த வேண்டும். இதைப் பார்த்திராதவர்கள் டாட் மெட்ரிக்ஸ் அச்சு இயந்திரம் இயங்குவதை நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

_JEG2467_a_700_a

அந்த நண்டு சுமார் 5-6 குமிழ்களை உருவாக்கி வைக்கும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். கடல் நண்டுகளில் சில வகைகள் இவ்வகையான அழகான மணி மணியான நண்டுக் கோலங்களை கடற்கரையில் வரைகின்றன. ஆங்கிலத்தில் இவற்றை Sunburst அல்லது Sand beads என்பர். நான் பார்த்துக் கொண்டிருந்தது சோல்ஜர் நண்டுகள் (Soldier Crab Dotilla myctiroides) நண்டுகளை. ஏன் இப்படிச் செய்கின்றன என்பதை ஆராய்ந்ததில் பல சுவையான தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.

_JEG2619_700

இந்த நண்டுகள் மணலை வாயில் அள்ளித் தினித்துக் கொள்வது அதிலுள்ள கரிமப் பொருட்களையும் (organic matters) உட்கொள்வதற்கே. தமது கைகளால் மணலை அள்ளி, வாயுறுப்புகளால் அதற்குத் தேவையான உணவினை உட்கொண்டு, வாயிலிருந்து சுரக்கும் எச்சில் போன்ற திரவத்தால் எடுத்த மணலை உருளையாக்கி, கூர் நகங்களைப் போன்ற முனைகள் கொண்ட கால்களால் எடுத்து கீழே வைக்கின்றன. மேலும் நான் கண்ட நீள் உருளை வடிவ மணல் குமிழ்கள் அவை வளை தோண்டி வெளியே எடுத்துப் போடும் போது உருவாக்கப்பட்டவை. இவை ஏற்படுத்தும் அழகான நண்டுக்கோலங்கள் இவற்றின் வாழிட எல்லையை குறிப்பிடுவதற்காகவும் கூட இருக்கலாம். இது போன்ற சில நண்டு வகைகள் இடும் கோலம் அல்லது உருவாக்கும் வளைகள் அவற்றின் இணையை கவர்வதற்காகவும் தான்.

_JEG2693_700

_JEG2650_700

கடற்கரையில் மெல்ல வெயில் ஏற ஆரம்பித்தது. இன்னும் சற்று நேரத்தில் கடல் நீர் மேலேறி நண்டுகளின் கோலங்களையும், பல அழகான மணல் கோலங்களையும் நனைத்து, அழித்து விடும். நண்டுகளும் கடல் கரையிலிருந்து உள்வாங்கும் வரை மணலுக்குள் சென்று பதுங்கி விடும். அப்படிப் பதுங்கும் போது தமது வளையில் காற்றுக் குமிழியை ஏற்படுத்தி அதனுள் வசிக்கும். அதன் பின் வெளியே வந்து மீண்டும் சளைக்காமல் கோலமிடும் வேளையை தொடர ஆரம்பிக்கும்.

நண்டுக் குமிழ் உருவாகும் வீடியோவைக் காண கீழ்க்கண்ட உரலியை சொடுக்கவும்.

******

தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 14th October 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF  ஐ இங்கே பெறலாம்.

Written by P Jeganathan

October 15, 2014 at 7:04 pm

Posted in Marine

Tagged with ,

தவளைகள் பாடிய தாலாட்டு

with 4 comments

மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் ஒரு காட்டுப் பாதை வழியே வேலை நிமித்தம் ஒரு மழைக்கால மாலை வேளையில் தனியே பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது. சுமார் 50 கி.மீ காட்டுப்பகுதி, ஏற்றமும், இறக்கமும், வளைவுகளும், நெளிவுகளும் நிறைந்த பாதை அது. பலவகையான வாழிடங்களைத் தாண்டிப் போகவேண்டும். இதன் பெரும்பகுதி மழைக்காட்டின் வழியாகவும், பின்னர் மூங்கில் காடு, தேக்கு மரக்காடு இலையுதிர் காடுகளைத் தாண்டி விளைநிலங்களைக் கடந்து நகரத்தை அடையும் அந்த பாதை. போகும் வழியில் காட்டின் உள்ளே ஓரிரு சிறிய குடியிருப்புப் பகுதிகளையும் தாண்டிச் செல்லவேண்டும்.

பகலில் சில முறை அவ்வழியே சென்றிருந்தாலும் இரவு நேரத்தில் போனதில்லை. வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக் கொண்டு 6 மணியளவில் புறப்பட்டேன். பொதுவாக காட்டுப்பாதையில் ஜீப்பில் சென்றால் வேகமாகச் செல்வதில்லை. ஏதாவது காட்டுயிர்கள் சாலையைக் கடக்கலாம். மாலையிலும் இரவிலும் சற்று கவனமாகவே வண்டியை ஓட்ட வேண்டும்.

அந்திமாலைப் பொழுது. அடையும் வேளையாதலால், பலவித பறவைகளின் குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தது. காட்டின் நடுவே இருந்த ஒரு வெட்ட வெளியில் சென்ற தந்திக்கம்பிகளில் செந்தலைப் பஞ்சுருட்டான் கூட்டம் ஒன்று அமர்ந்து கத்திக் கொண்டிருந்தன. அவ்வப்போது காற்றில் மேலெழும்பி பறந்து கொண்டிருந்த பூச்சிகளைப் பிடித்து மீண்டும் கம்பியில் அமர்ந்தன. தலையை இப்படியும் அப்படியும் ஆட்டி, ஆட்டி பிடித்த பூச்சியை உயிரிழக்க வைத்து, அவை திங்கமுடியாத பாகங்களையும் விலக்கிக் கொண்டிருந்தன. துடுப்புவால் கரிச்சான் இரண்டு அங்குமிங்கும் பறந்து அப்பூச்சிகளைப் பிடித்துக் கொண்டிருந்தன. பறக்கும் போது கூடவே அவற்றின் குஞ்சம் போன்ற வால் சிறகும் அவற்றை பின் தொடர்ந்ததைப் பார்க்கும் போது வேடிக்கையாக இருந்தது. அருகிலிருந்த மரக்கிளையில் அமர்ந்து வாலை வெடுக் வெடுக்கென ஆட்டிக் கொண்டு பிடித்த பூச்சியை விழுங்கிக் கொண்டிருந்தன. இருநோக்கியில் பார்த்தபோது மேல் நோக்கிப் பறந்து கொண்டிருந்த அப்பூச்சிகள் ஈசல்கள் எனத்தெரிந்தது.

கரிய மேகங்கள் வானில் சூழ ஆரம்பித்தது. நேரமின்மையால் வண்டியைக் மெல்ல மெல்ல நகர்த்தினேன். மரக்கிளைகளால் வேயப்பட்ட கூரையைக் கொண்ட காட்டுப் பாதையாதலால் விளக்கை போட்டுக் கொண்டு செல்லவேண்டியிருந்தது. பலவகையான தகரைச் செடிகள் (பெரணிகள் Ferns) சாலையோரத்தை அலங்கரித்திருந்தன. இயற்கையாக வளர்ந்த இந்த காட்டுத் தாவரங்களை எந்த கோணத்தில் பார்த்தாலும் அழகுதான். குண்டும் குழியுமாக இருந்தது அந்தச் சாலை. காட்டுச் சாலை இப்படித்தான் இருக்க வேண்டும். காட்டில் சாலைகள் இருப்பதே காட்டுயிர்களுக்கும், வாழிடங்களுக்கும் கேடுதான். நமக்கு சாலைகள் அவசியம் தான், ஆனால் இயற்கையான வாழிடத்தின் வழியே செல்லும் சாலைகள் அங்குள்ள காட்டுயிர்களுக்கு மென்மேலும் தொந்தரவு கொடுக்காத வகையில் இருக்க வேண்டும். செப்பனிடப்படாத, அகலப்படுத்தப்படாத சாலையும் பல வகையில் காட்டுயிர்களுக்கு நன்மை பயக்கும்.

IMG_1260_700

இதையெல்லாம் யோசித்தவாரே ஒன்று அல்லது இரண்டாம் கியரில் வண்டியை ஓட்டிக் கொண்டே சென்றேன். மதிய வேளையில் மழை பெய்திருக்க வேண்டும். சாலையெங்கும் ஈரமாகவும், ஓரங்கள் சகதிகள் நிறைந்தும் இருந்தது. முற்றிலுமாக இருட்டிவிட்டிருந்தது. அப்போதுதான் உணர்ந்தேன். பறவைகளின் ஒலி முற்றிலுமாக நின்றுபோய் தவளைகளின் ஒலி கேட்க ஆரம்பித்ததை. அவற்றின் குரலும் பல விதங்களில் இருந்தது. சில தவளைகளின் குரலை வைத்தே தவளை ஆராய்ச்சியாளர்கள் அது இன்ன தவளை வகை எனச் சொல்லி விடுவார்கள். வழி நெடுக தவளைகளின் பாட்டைக் கேட்டுக் கொண்டே, இரவில் தனியாக, வேறு வாகனங்கள் ஏதும் அதிகம் வராத காட்டுப் பாதையில் பயணம் செய்வது ஒரு புது வித அனுபவமாக இருந்தது.

சட்டென ஒரு எண்ணம் உதித்தது. கொஞ்ச நேரம் தவளைகளின் குரல்களை கேட்டு விட்டுச் சென்றால் என்ன எனத் தோன்றியது. வண்டியை ஓரமாக நிறுத்தி கேட்க ஆரம்பித்தேன்.

இடைவெளியில்லாத டிக்.. டிக்.. டிக்..

சற்று நிதானமான இடைவெளியுடைய டக்..டக்..டக்..

மெல்ல ஆரம்பித்து பின் இடைவிடாமல் உச்சஸ்தாயியை அடையும்…டொக்…..டொக்…..டொக்…..டொக்…..டொக்….டொக்..

ஒரே ஒரு முறை குரலெழுப்பி பின் சில நிமிடங்கள் அமைதியடையும்..க்ராக்கக்கக்.

இன்னுமொரு குரலொலி கேட்டது.

சரியாக மூடாத குழாயிலிருந்து, நிறம்பிய வாளியில் மெல்லச் சொட்டும் நீரின் ஒலி ஒத்த தகுந்த இடைவெளியுடனான டப்………டப்………டப்………

இதை இதற்கு முன் கேட்டதுண்டு. மரத்தின் உச்சியிலிருந்து வரும் இந்த குரல் மழைத்துளித் தவளைக்குச் (Raorchestes nerostagona) சொந்தமானது.

மழைத்துளித் தவளை(Raorchestes nerostagona) Photo: David Raju

மழைத்துளித் தவளை (Raorchestes nerostagona) Photo: David Raju

நிச்சயமாக ஒவ்வொன்றும் ஒவ்வொறு வகை. இவையனைத்தும் புதர் தவளைகள் (Bush frogs) இனத்தைச் சேர்ந்தவை. நான் கேட்டுக்கொண்டிருந்தது அனைத்துமே ஆண் தவளைகள். ஆம், தனது இணையக் கவரவே அவை அப்படிக் குரலெழுப்புகின்றன. இந்த ஆண் புதர் தவளைகளை எளிதில் பார்ப்பது சிரமம். ஆனால் பார்த்து விட்டால் அதுவும் அவை குரலெழுப்பும் போது பார்த்தால் அவை நம்மை வியப்பில் ஆழ்த்தும். இத்தவளைகளின் மெல்லிய தோலுள்ள கீழ்த்தாடை அவை ஒலியெழுப்ப்பும் போது பலூன் போல உப்பி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும். எழுப்பும் ஒலியை வெகுதொலைவு கொண்டு செல்லவே இவற்றின் கீழ்த்தாடை ஒரு ஒலிபெருக்கியைப் போல செயல்படுகிறது.

Raorchestes akroparallagi. Photo: David Raju

Raorchestes akroparallagi. Photo: David Raju

கையில் டார்ச் இருந்தாலும், இவை இருக்குமிடத்தை கண்டறிவதில் ஆர்வமின்றி சிறிது நேரம் கண்களை மூடி அவற்றின் குரலொலியில் லயித்திருந்தேன்.

டிக்..டிக்..டிக்….டப்….டக்..டக்..டக்….டப்….டொக்…டொக்…டொக்…டொக்…டப்….க்ராக்கக்கக்…டிக்..டிக்..டிக்….டப்….டக்..டக்..டக்….டப்….டொக்…டொக்…டொக்……..டொக்……க்ராக்கக்கக்….டிக்..டிக்..டிக்….டப்….டக்..டக்..டக்….டப்….டொக்…….டொக்… டொக்….க்ராக்கக்கக்……

மழைக்காடு என்றுமே தூங்குவதில்லை. மழைக்காட்டுப் பகல் பறவைகளின் இசையாலும், சிள் வண்டுகளின் இரைச்சலாலும் நிரம்பியிருக்கும். மாலை வேளையில் சிறிய ஓய்விற்குப் பின் இரவில் மீண்டும் மழைக்காடு உயிர்த்தெழுவது இந்த தவளைப்பாட்டுக் கச்சேரியால் தான். மழைக்காட்டுக்குள் குறிப்பாக மழைக்காலங்களில் இந்த ஜுகல்பந்தியை நிச்சயமாகக் கேட்கலாம்.

Raorchestes ponmudi. Photo: David Raju

Raorchestes ponmudi. Photo: David Raju

இரவில் தவளைகள் பாடிய அந்த தாலாட்டை கண் மூடி கேட்டுக் கொண்டிருக்கும் போதே ட்டப்… என்று ஒரு மழைத்துளி எனது நெற்றியில் விழுந்து தெரித்து அந்த கணநேர இன்பத்தைக் கலைத்தது. சற்று நேரத்தில் இலேசான தூரல் போட ஆரம்பித்தது. இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருந்ததால் அங்கிருந்து கிளம்பினேன். வண்டியின் முன் சில அடிகள் மட்டுமே தெரியும் அளவிற்கு சாலை முழுவதுமாக பனிபடர்ந்தது. இருளில் விளக்கு வெளிச்சத்தில் மெல்ல வண்டியை ஓட்டிக் கொண்டு வந்து சிறிய குடியிருப்புப் பகுதியை கடந்து சென்றேன். அந்தப் பகுதியில் சாலை ஒரே சீராக இருந்தது. மழை நின்றிருந்தது சாலை தெளிவாகத் தெரிந்தது. திடீரென சாலையின் ஒரு பக்கத்திலிருந்து தவளை ஒன்று குதித்து வண்டியை நோக்கி வருவது தெரிந்தது. வண்டியின் விளக்கினால் கவரபட்டு வரும் பூச்சிகளைப் பிடிப்பதற்காகவோ, என்னவோ பல வேளைகளில் இப்படி இந்தத் தவளைகள் வண்டியை நோக்கி வருவதுண்டு. பல சக்கரங்களில் அரைபட்டும் சாவதுண்டு. வண்டியை வளைத்து நெளித்து ஓட்டி வழியில் வந்த பல தவளைகளை அரைத்துவிடாமல் கடந்து சென்று கொண்டிருந்தேன்.

மலைப்பாதை கீழிறங்கி காட்டுச் சாலை முடிந்து விளை நிலங்களை நோக்கிப் பயணமானேன். இங்கே பாதை சீராகவும், இருவழிச்சாலையாகவும் இருந்தது. தவளைகளின் ஒலி இங்கே அவ்வளவாக இல்லை. சாலையிலிருந்து சற்று தொலைவிலிருந்து க்ரோக்… க்ரோக்… க்ரோக்…எனும் ஒலி வந்தது. இது சமவெளிகளில் தென்படும் வேறு வகையான தவளை. சாலை அகலமாக அகலமாக தவளைகளின் ஒலியற்ற நகரப்பகுதி மெல்ல வர ஆரம்பித்தது.

இப்பயணத்தின் முடிவில் மனதில் ஒரு கேள்வி எழுந்தது. சாலையில் பனிபடர்ந்து, மழை பொழியும் நேரத்தில் எனது வண்டிச் சக்கரங்களில் அரைபட்டு எவ்வளவு தவளைகள் உயிரிழந்திருக்கும்? அப்போது முடிவு செய்தேன், அவ்வழியே இனி எப்போதும் இரவில் குறிப்பாக மழைக்காலங்களில் பயணம் செய்வதே இல்லை என.

பெட்டிச் செய்தி

சிலருக்கு தவளைகளைக் கண்டால் அருவருப்பும், பயமும் கொள்வார்கள். ஆனால் அவை பல பூச்சிகளையும், கொசுக்களையும் சாப்பிட்டு நமக்கு நன்மை செய்பவை. தவளைகள் அழகானவை, குறிப்பாக இந்த மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளின் மழைக்காடுகளில் தென்படும் புதர் தவளைகள். பார்த்தவுடன் நம்மை ஈர்க்கக்கூடிய பச்சை, இளம்பச்சை, மஞ்சள் கலந்த பச்சை, சிவப்பு, செங்கல் நிறம், ஆரஞ்சு நிறம், மிட்டய் நிறம் என பல வண்ணங்களிலும், அழகிய புள்ளிகளையுடைய, வரிகளுடைய வடிவங்களில் உள்ள தவளைகள் பல இங்கு தென்படுகின்றன. இவை சுமார் 3 செ.மீ நீளமே இருக்கும்.

Raorchestes chalazodes. Photo: David Raju

Raorchestes chalazodes. Photo: David Raju

Raorchestes manohari. Photo: David Raju

Raorchestes manohari. Photo: David Raju

சில தவளைக் குஞ்சுகள் நம் விரல் நகத்தின் அளவை விட சிறியவை. இத்தவளைகள் பெரும்பாலும், மர இலைகளின் மேலோ, கீழோ, கிளைகளிலோ அமர்ந்திருக்கும். மழைக்காட்டின் விதானம், மத்தியப் பகுதி, தரைப்பகுதி என பல அடுக்குகளில் இவை வாழ்கின்றன.

IMG_1409_700

பம்பாய் புதர் தவளை கத்துவது தட்டச்சு செய்வது போலிருப்பதால் இதற்கு தட்டச்சுத் தவளை என்றே பெயர். இதை கீழ்க்கண்ட இந்த வீடியோவில் காணலாம்:

காட்டு நீரோடைகளில், இலைச்சருகுகளில், நமக்கு எட்டாத உயரத்தில் மரத்தின் மேல் வாழும் தவளையிங்களும் உண்டு. இவை உருவில் சற்று பெரியவை.

******

தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 7th October 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF  ஐ இங்கே பெறலாம்.

Written by P Jeganathan

October 8, 2014 at 5:31 pm

களக்காடு தந்த பரிசுகள்

with one comment

_JEG8098_700

இயற்கை ஆர்வலர்களுக்கும், காட்டுயிர் களப்பணியாளர்களுக்கும் அவசியம் இருக்க வேண்டிய பழக்கங்களில் ஒன்று அவர்கள் காண்பதை, அவதானிப்பதை களக்குறிப்பேட்டில் உடனுக்குடன் பதிவு செய்வது. எனது களக்காடு-முண்டந்துறை களக்குறிப்பேட்டை அன்மையில் திறந்து, பார்த்துக் கொண்டிருந்தேன். என் கண் முன்னே வந்தது: புலி, யானை, கரடி, கொம்பு புலி, செந்நாய், பழுப்பு மரநாய், அலங்கு, சிறுத்தைப் பூனை, வரையாடு, நீலகிரி கருமந்தி, சிங்கவால் குரங்கு, பறக்கும் அணில் மலபார் முள்வால் எலி, பெரிய இருவாசி, கருப்பு மரங்கொத்தி, காட்டுக்குருகு, கருநாகம், பறக்கும் பல்லி, பல வகையான பூச்சிகள் மற்றும் பல தாவரங்கள். குறிப்புகளைக் காணக்காண கண் முன்னே விரிந்தன பல காட்சிகள்.

****

சிலம்பனும் நானும் காட்டுப்பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தோம். வளைந்து செல்லும் அந்த தடத்தின் மறு முனையிலிருந்து ஏதோ உறுமும் ஒலி கேட்டது. இருநாட்களுக்கு முன் அப்பகுதியில் கரடிகள் இரண்டு கத்திக் கொண்டிருந்ததைக் கேட்டிருந்தோம். களப்பணி உதவியாளரான சிலம்பன், அவரிடமிருந்த அரிவாளால் வழியில் இருந்த மரங்களில் தட்டிக்கொண்டும், அவ்வப்போது கணைத்துக் கொண்டும் வந்தார். ஏதாவது ஒலி எழுப்பிக்கொண்டே நடந்தால் ஒரு வேளை ஏதெனும் பெரிய காட்டுயிர்கள் நாம் போகும் வழியில் இருந்தால், விலகிச் சென்றுவிடும். மெல்ல நடந்து முன்னேறிக் கொண்டிருந்த போது சட்டென சிலம்பன் நின்று, என்னிடம் சொன்னார், “அங்க ஏதோ நகர்ந்து போகுது, புலி மாதிரி இருக்கு” என்றார். நாங்கள் நின்று கொண்டிருந்த தடத்தின் சரிவான மேற்பகுதியில் காட்டு வாழைகள் நிறைந்த அந்த பகுதியில் சுமார் 20மீ தூரத்தில் ஒரு புலி இடமிருந்து வலமாக நடந்து சென்றது. புலியை இயற்கையான சூழலில் அப்போதுதான் நான் முதல் முறையாகப் பார்த்தேன்.

Tiger

****

ஒரு நான் களப்பணி உதவியாளரான ராஜாமணியும் நானும் செங்குத்தான காட்டுப்பாதையின் மேலேறிக் கொண்டிருந்தோம். அடிபருத்த ஒரு பெரிய மரம் ஒன்று தடத்தின் நடுவில் இருந்தது. அதைச் சுற்றிலும் பழங்கள் கீழே சிதறிக் கிடந்தன. அம்மரத்தைச் சுற்றிக் கொண்டு சென்றபோது மரத்தின் பின்னால் இருந்து ஏதோ ஒரு கருப்பான காட்டுயிர் உர்ர்..என உறுமிக்கொண்டு எங்களை நோக்கி வந்தது. சட்டெனத் திரும்பி இருவரும் ஓட ஆரம்பித்தோம். உருண்டு, புரண்டு சரிவான அந்தப் பாதையின் கீழ்ப்பகுதியை வந்தடைந்தோம். பின்பு தான் உணர்ந்தோம் அது ஒரு கரடி என. கரடிகளுக்கு நுகரும் சக்தி அதிகம், எனினும் கண் பார்வையும், கேட்கும் திறனும் சற்று கம்மி. மரத்தின் கீழிருக்கும் பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நாங்கள் அங்கு சென்று அதை திடுக்கிடச் செய்ததால்தான் எங்களைக் கண்டு உறுமி விரட்டியிருக்கிறது.

Sloth Bear with cubs

****

காட்டுக்குள் இருந்த ஒரு கட்டிடத்தில் தங்கியிருந்து களப்பணியில் ஈடுபட்டிருந்த சமயம் அது. ஒரு நாள் மாலை யானைகளின் பிளிறல் வீட்டின் அருகில் கேட்டது. இரவானதும் வீட்டின் பின்னால் இருந்த புற்கள் நிறைந்த பகுதியில் சலசலக்கும் ஒலி கேட்டு அங்கிருந்த சன்னலைத் திறந்த போது யானைக் குட்டியொன்று நின்று கொண்டிருந்ததைக் கண்டேன். உடனே அதை மூடிவிட்டு வீட்டுக்குள் வந்துவிட்டேன். சற்று நேரத்திற்கெல்லாம் 5-6 யானைகள் வீட்டின் முன்னே வெகு அருகில் வந்து நின்றுகொண்டிருந்தன. எரிந்து கொண்டிருந்த பெட்ரோமாக்ஸ் விளக்கை (அங்கு மின்வசதிகள் கிடையாது) அணைத்துவிட்டு கண்ணாடி சன்னல்கள் வழியாக யானைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவை அனைத்தையும் தெளிவானக் காண வீட்டுக்குள் அங்குமிங்கும் நடந்ததை அக்கூட்டத்திலிருந்த ஒரு யானை கேட்டிருக்க வேண்டும். உடனே நான் இருக்கும் திசையை நோக்கி தனது தும்பிக்கையை வைத்து நுகர்ந்தது. பின்னர் யானைகள் அனைத்தும் திரும்பி எதிர்த் திசையில் செல்ல ஆரம்பித்தன. அன்று முழு நிலவு. இரவுநேரத்திலும், நிலவின் ஒளியில் ஒரு யானைத்திரளை வெகு அருகில் கண்டது ஒரு மறக்க முடியாத நிகழ்வு.

Elephant family

****

களப்பணிக்காக ஒரு நாள் காட்டுப்பாதையில் சென்று கொண்டிருந்த போது தரையிலிருந்து சரசரவென ஏதோ ஒரு காட்டுயிர் அருகிலிருந்த ஒரு பெரிய ஆத்துவாரி மரத்தினைப் பற்றிக் கொண்டு மேலேறியது. நான்கு கால்களாலும் மரத்தண்டினைப் பற்றி மேலேறி ஒரு கிளையை அடைந்தது. பின்பு இலாவகமாக மரக்கிளைகளினூடே ஏதோ தரையில் நடந்து செல்வது போல அனாயாசமாக மரம் விட்டு மரம் தாவி சென்றது. நீலகிரி மார்டென் (Nilgiri Marten) என ஆங்கிலத்திலும் கொம்பு புலி என பொதுவாக அழைக்கப்படும் இது, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலேயே மிக அரிதான உயிரினங்களில் ஒன்று. மரநாய், கீரி, நீர்நாய் முதலிய சிறு ஊனுண்ணி (smaller carnivore) வகையைச் சேர்ந்தது. மரநாயைப் போன்ற உடலும், நீண்ட அடர்ந்த வாலும், அழகான வெளிர் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற கழுத்தும் கொண்ட ஒரு அழகான உயிரினம் இது.

Nilgiri Marten_Photo: N A Naseer_Wikipedia

Nilgiri Marten_Photo: N A Naseer_Wikipedia

****

இந்நிகழ்வுகள் எல்லாம் நடந்தது 1999ல். நான் இருந்தது களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பத்தில். இது 1988ல் தோற்றுவிக்கப்பட்ட தமிழகத்தின் முதல் புலிகள் காப்பகம். இப்போது இந்த புலிகள் காப்பத்திற்கு வயது 25. ஒரு ஆரம்ப நிலை காட்டுயிர் ஆராய்ச்சியாளனாக எனது 25 வது வயதில் அங்கு சென்ற எனக்கு, களப்பணியின் போது பல வித அனுபவங்களையும், பல மறக்க முடியாத தருணங்களையும் எனக்களித்தது களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் தான். படங்களில் மட்டுமே பார்த்து ரசித்துக் கொண்டிருந்த, பார்பேன் என கனவிலும் நினைத்திராத பல உயிரிங்களை முதன்முதலில் கண்டதும் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் தான்.

மழைக்காட்டில் தென்படும் சிறு ஊனுண்ணிகளில் ஒன்றான பழுப்பு மரநாய் (Brown palm Civet) பற்றிய ஆராய்ச்சியில் களப்பணி உதவியாளனாக இங்கு பதினோரு மாதங்கள் தங்கியிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பழுப்பு மரநாய் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டுமே தென்படும் ஓரிடவாழ்வியாகும் (Western Ghats Endemic). இந்த அரிய வகை மரநாய் ஒரு இரவாடி (Nocturnal) ஆகும். இரவிலும் பகலிலும் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் மழைகாட்டுப் பகுதிகளில் திரிந்து களப்பணி மேற்கொள்ளும் வேளையில் இக்கானகத்தின் செல்வங்கள் பலவற்றை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.

Brown Palm Civet

Brown palm civet

உலகில் உள்ள பல்லுயிர் செழுப்பிடங்களில் ஒன்று (biodiversity hotspot) மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதி. இந்த மலைத்தொடரில் தீண்டப்படாத, தொன்னலம் வாய்ந்த வனப்பகுதிகளைக் கொண்ட வெகு சில இடங்களில் ஒன்று களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம். இதன் மொத்த பரப்பு 895 சதுர கி.மீ. அகஸ்தியமலை உயிர்கோள மண்டலத்தின் ஒரு பகுதியான இது பல்லுயிரியத்தில் சிறந்து விளங்கும் பகுதிகளில் மிகவும் முக்கியமான இடங்களில் ஒன்று. சுமார் 150 ஓரிடவாழ் தாவர வகைகளும், 33 வகை மீன்களும், 37 வகை நீர்நில வாழ்விகளும், 81 வகை ஊர்வனங்களும், 273 வகை பறவையினங்களும், 77 வகையான பாலுட்டிகளும் இதுவரை இப்பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல அரிய உயிரினங்களின் வாழ்விடமாகத் திகழ்கிறது. தென்னிந்தியாவிலேயே ஐந்து வகை குரங்கினங்களைக் (சோலைமந்தி (சிங்கவால் குரங்கு), நீலகிரி கருமந்தி, வெள்ளை மந்தி, நாட்டுக்குரங்கு மற்றும் தேவாங்கு) கொண்ட வெகு சில பகுதிகளில் ஒன்றாகவும் இப்பகுதி அறியப்படுகிறது. இப்பகுதியில் எண்ணற்ற பல காட்டோடைகளும், கொடமாடியாறு, நம்பியாறு, பச்சையாறு, கீழ் மணிமுத்தாறு, தமிரபரணி, சேர்வலாறு, கடனாநதி, ராமநதி போன்ற ஆறுகளும் உற்பத்தியாவதால் நதிகளின் சரணாலயமாகவும் கருதப்படுகிறது.

Rainforest Canopy

புலிகள் காப்பகங்கள் புலிகளை மட்டும் பாதுகாப்பதில்லை. புலிகளையும் சேர்த்து பல வித வாழிடங்களையும், உயிரினங்களையும், நிலவமைப்புகளையும் பாதுகாக்கிறது. புலிகள் பாதுகாப்பு இன்றியமையாதது. ஏனெனில் அது காட்டுயிர்களுக்கு மட்டுமல்ல மனிதகுலத்திற்கும் நன்மை புரிவது.

*******

தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 3oth September 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF  ஐ இங்கே பெறலாம்.

ஓர் இன்பச் சுற்றுலாவும், அதற்குப் பிறகும்

leave a comment »

பைக்கில் சில காலேஜில் படிக்கும் மாணவர்கள், காரில் (துணைவியாரை வீட்டில் விட்டு விட்டு வந்த) நண்பர்கள்/சக ஊழியர்கள் கூட்டம், பேருந்தில் ஓர் ஊரிலிருந்து பல குடும்பத்தினர் – இவர்கள் யாவரும் வார விடுமுறையை இனிதே கழிக்க, உல்லாசமாக இருக்க, நகரத்தின் நெருக்கத்திலிந்து தப்பிக்க, தூய காற்றினை சுவாசிக்க, புதிய இடத்தைப் பார்த்து ரசிக்க மலை மேல் இருக்கும் ஒர் அழகிய இடத்திற்கு சுற்றுலா சென்றனர். அந்த இடத்திற்குப் போகும் வழியெல்லாம் வனமும் சில இடங்களில் நீர் நிலைகளும் இருந்தது.

_JEG3497_700

பைக்கில் வந்த இளைஞர்களில் சிலரே தலைக்கவசம் அணிந்திருந்தனர். வளைந்து நெளிந்து செல்லும் மலைப் பாதையில் வண்டியில் வேகமாகப் போவது த்ரில்லிங்கான அனுபவமாக இருந்தது அவர்களுக்கு. பாதி தூரம் போன பின்பு ஒரு வ்யூ பாயிண்ட்டில் வண்டியை நிறுத்தி கடந்து வந்த பாதையையும், விசாலமாகப் பரந்து விரிந்து கிடந்த நிலப்பரப்பையும் பார்த்து லயித்திருந்தனர். அடிவாரத்திலுள்ள கானகத்தின் மரங்களின் விதானம் (மர உச்சிப்பகுதி) பல வித பச்சை நிறத்தில் இருந்தது. ஒரு பக்கம் அடர்ந்த காடு, புதர்க்காடாகி பின்பு சிறு சிறு கிராமங்களும், தென்னந்தோப்புகளும், வயல் வெளியும் பரந்திருந்தது. மறுபக்கம் கானகத்தை அடுத்து அகன்ற நீர்த்தேக்கமும் அணையும் இருந்தது. குளிர்காற்று சில்லென வீசியது. அவர்களில் சிலர் புகைத்தனர். சிலர் போட்டோ எடுத்துக்கொண்டனர். சிலர் பின்பக்கம் மாட்டியிருந்த பையிலிருந்து பீர் பாட்டில்களை எடுத்தனர். பல்லால் கடித்து மூடியை தூர வீசியெறிந்து “சியர்ஸ்” சொல்லி குடிக்க ஆரம்பித்தனர். சிப்ஸ் பாக்கெட்டை பிரித்து ஒவ்வொன்றாக எடுத்துச் சாப்பிட்டார்கள். நாட்டுக் குரங்குக் கூட்டமொன்று அவர்கள் அருகில் வர ஆரம்பித்தது. சிலர் அவற்றை போட்டோ எடுத்தனர். சிலர் தாராள மனதுடன் சிப்ஸ் பாக்கெட்டை பிரித்து அப்படியே கொடுத்தனர். சாலையோரத்தில் நின்று குடித்துக் கொண்டிருந்தாலும் வளைவில் சில வண்டிகளை நிறுத்தியிருந்ததால் அவ்வழியே மேலே ஏறி வந்த பேருந்து தொடர்ச்சியாக ஹார்ன் அடித்ததும் பைக்கை கொஞ்சம் தள்ளி வைத்தார்கள். பேருந்து ஓட்டுனர் இளைஞர்களைப் பார்த்து முறைத்துக் கொண்டே வண்டியை ஒடித்துத் திருப்பினார். பேருந்தில் சன்னலோரத்தில் அமர்ந்திருந்த ஒரு குமரிப்பெண்ணைப் பார்த்து கீழிருந்த இளைஞர் ஒருவர் விசிலடித்தார், அவரது நண்பர்களும் சேர்ந்து ஓ..வன சப்தமிட்டனர். அவர்கள் செய்வதைப் பார்த்து பேருந்தில் அமர்ந்திருந்த சிலர் முகம் சுழித்தனர். சிலருடைய முகத்தில் கோபம் தெரிந்தது. சிலர் புன்னகைத்தனர். குடித்து முடித்ததும் பாட்டில்களை சாலையோரமாக வீசி எறிந்தனர். கண்ணாடி உடைந்து சாலையோரமெங்கும் சிதறிது. பின்னர் பைக்கைக் கிளப்பிக்கொண்டு மேலே ஏற ஆரம்பித்தார்கள்.

P1180863_700

காரில் வந்த அந்த “ஒரு நாள் பேச்சுலர்ஸ்” மலையின் மேலுள்ள வனப்பகுதி வழியே செல்லும் சாலையோரமாக வண்டியை நிறுத்தினர். குளிர்ந்த காற்று அவர்கள் முகத்தில் பட்டதை ரசித்துக்கொண்டே காரிலிருந்து மது பாட்டில்களையும், பிளாஸ்டிக் தம்ளர்களையும், வாங்கி வந்திருந்த சிக்கன், மட்டன் பார்சலையும் சாலையோர சிமெண்டு கட்டையின் மேல் பரப்பி வைத்தனர். ஒருவர் அனைவருக்கும்  மதுவை சரிசமமாக பகிர்ந்தளித்துக் கொண்டிருந்தார். காருக்குள் இருந்த சவுண்ட் சிஸ்டத்திலிருந்து இசை கும்..கும்..என அலறிக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் பாட்டில் காலியானது. கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு அருகில் வனப்பகுதிக்குள் செல்லும் ஒரு ஒற்றையடிப் பாதை இருந்தது.  ஓரிருவர் அந்த பாதையில் நடக்கத் தொடங்கினர். “இது வனப்பகுதி, வனவிலங்குகள் நடமாடுமிடம், இங்கு அத்துமீறி நுழைபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்ற வனத்துறையின் அறிவிப்புப் பலகையைப் பார்த்த பின்பும் அதை பொருட்படுத்தாமல் சிறிது தூரம் சென்று திரும்பி வந்தனர். பின்பு மலை மேலுள்ள ஊருக்கு வண்டியை மெல்ல கிளப்பிக்கொண்டு சென்றனர். அவர்கள் அங்கு இருந்ததற்கு அடையாளமாக காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் தம்ளர்கள், பிளாஸ்டிக் கேரி பேக்குகள், சிகரெட்டுத் துண்டுகள், சாப்பிடாமல் விட்டுப்போன உணவுப்பொருட்கள் எல்லாம் சிதறிக் கிடந்தன. இதை அவ்வழியே நடந்து சென்ற சில உள்ளூர்க்காரர்கள் பார்த்து முகம் சுழித்தனர்.

P1180870_700

சுற்றுலாப் பேருந்து மெல்ல மெல்ல மலை மேல் ஏறிக்கொண்டிருந்தது. கொண்டை ஊசி வளைவுகளில் பெரிய வட்டமிட்டுத் திருப்புகையில் கியர் மாற்றும் போதும், பிரேக் போடும் போதும் பல வித ஒலிகளை அந்த பஸ் எழுப்பியது. இது வெளியில் இருப்பவர்களுக்குத் தான் தெளிவாகக் கேட்கும். பஸ்ஸின் உள்ளே பயணியர்களில் பலர் வெளியில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் திருட்டு டி.வி.டியில் ஏதோ ஒரு புதிய சினிமாவை பார்த்து லயித்துக் கொண்டிருந்தார்கள். சன்னலோரத்தில் அமர்ந்திருந்த சிலர் வெளியே தெரியும் மலைகளையும் அதன் மேல் தவழ்ந்து வரும் மேகங்களையும் பார்த்து ரசித்தனர், சிலர் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டே படம் பார்த்து, பாக்கெட் காலியானதும் பஸ்ஸிலிருந்தே தூக்கி வெளியே எறிந்தார்கள், ஓரிரு காலி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களையும் தான். முதன்முதலில் உயரமான மலைப்பகுதிகளுக்கு வருபவர்கள் சிலருக்கு தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. கொஞ்ச நேரத்தில் வாந்தியும் வந்தது. மேலேறும் போது வளைவுகளில் நிறுத்தமுடியாததால் ஜன்னல் கண்ணாடியை முன்னுக்குத் தள்ளி, தலையை வெளியே நீட்டி உவ்வே..என வாந்தி எடுத்தனர். பின்னால் உட்கார்ந்திருந்தவர்கள் எல்லாம் அவசர அவசரமாக ஜன்னல் கண்ணாடியையும், இரு விரல்களால் மூக்கையும் மூடினர்.

மலையின் மேல் சமமான நிலப்பகுதியில் இருந்த அந்த ஊரில் இருந்த ஒர் சிறிய ஹோட்டலின் அருகில் பஸ் நின்றது. ஆண்கள் முதலில் இறங்கினர். சிலர் சிகரெட்டு பற்ற வைத்தார்கள், சிலர் பஸ் வந்த வழியே பின்னோக்கி நடந்து ரோட்டோரத்தில் சிறுநீர் கழித்தனர். பெண்கள் அருகிலிருந்த ஒர் சரியாக பராமரிக்கப்படாத கழிப்பிடத்திற்குச் சென்றனர். ஓரிரு பெண்கள் தமது குழந்தைகளை ரோட்டோரமாகவே உட்கார வைத்து மலம் கழிக்கச் செய்து அங்கேயே கால் கழுவி விட்டனர். அதற்குள் பஸ்ஸில் இருந்து சாப்பாட்டுப் பாத்திரங்கள் ஒவ்வொன்றாக இறக்கப்பட்டன. பஸ் வந்து நின்றதும் ஆவலுடன் கடைக்குள் இருந்து வெளியில் தலையை நீட்டி வந்தவர்களை எண்ண ஆரம்பித்த சிறிய ஹோட்டல் கடைக்கார முதலாளி இதைப் பார்த்ததும் ஏமாற்றத்தில் முகம் சுழித்தார். பேப்பரின் மேல் பிளாஸ்டிக் இடப்பட்ட தட்டுகளும், பிளாஸ்டிக் தம்ளர்களும் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டது. சாப்பிட ஆரம்பித்ததும் நாட்டுக்குரங்குகள் அவர்களைச் சூழ்ந்து கொண்டன. ஒருவர் சாப்பிடுவதை விட்டுவிட்டு அவற்றை விரட்டிவிட்டுக்கொண்டிருந்தார். சாப்பாடு முடிந்ததும், மிச்சமீதி உணவையும், பிளாஸ்டிக் தட்டையும், தம்ளர்களையும் அருகில் நிரம்பி வழிந்து கொண்டிருந்த குப்பைத்தொட்டியின் அருகில் வீசி எறிந்தனர். நாட்டுக் குரங்குகளும், காட்டுப் பன்றிகளும் வந்து வீசப்பட்ட உணவினை சாப்பிட ஆரம்பித்தன.

20140511_115138_700

மலை மேலேறி வந்தவர்கள் அவ்வூரில் இருந்த பூங்காவிற்குச் சென்றனர். அருகில் இருந்த செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட ஏரியில் படகு சவாரி செய்தனர். அவ்வூரில் உள்ள கடைகளில் விற்கும் பொருட்களை வாங்கிக்கொண்டனர். மாலை ஆனதும் தத்தம் வண்டிகளில் ஏறி நள்ளிரவில் அவரவர் ஊர்களுக்குத் திரும்பினர். இரவில் படுக்கப்போகும் முன் சற்று நேரம் தாம் போய் வந்த ஒரு நாள் சுற்றுலாவைப் பற்றியும், அந்த அழகான இடத்தையும் நினைத்துக் கொண்டனர். தங்களது கவலைகளையெல்லாம் அந்த அழகான, தூய்மையான இடத்தில் இறக்கி வைத்து விட்டு வந்தது போல் மனது இலேசாகவும், சுகமாகவும் இருப்பதைப் போல் உணர்ந்தனர். அப்படியே களைப்பில் நிம்மதியாக உறங்கிப்போயினர்.

********

யார் சிறந்த சுற்றுலா பயணி?

சுற்றுலாத் தலங்களின் அழகும் வளமும் குறையாமல் இருக்கும் வகையில் சுற்றுலாப் பயணிகள் பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம். செல்லும் இடத்தை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். சுற்றுலா சென்று வந்த இடத்தில் அதற்கான சுவடே இல்லாமல், சென்ற இடத்தை எந்த வகையிலும் சீர்கெடுக்காமல், நமது நடவடிக்கைகளால் சென்ற இடத்தின் தன்மை மாறாமல், அந்த இடத்தின் கலாசாரத்தையும், சட்ட திட்டங்களையும் பின்பற்றி, உள்ளூர் மக்களிடம் கனிவுடன் நடப்பதுதான் ஒரு பொறுப்பான சுற்றுலா பயணிக்கான அடையாளம்.

கவனம் கொள்ள வேண்டியவை

  • செல்லும் இடம் காட்டுப் பகுதியாகவோ, விலங்கு காட்சி சாலையாகவோ இருந்தால் அங்கு அமைதி காத்து, உயிரினங்களுக்கு உணவளிக்காமலும் சீண்டாமலும் இருப்போம்.
  • பிளாஸ்டிக் பை, குவளை, பாட்டில் போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்போம். அப்படியே பயன்படுத்தினாலும் குப்பையையும், மீந்து போன உணவுப் பொருட்களையும் கண்ட இடத்தில் வீசி எறியாமல், குப்பை தொட்டியில் போடுவோம்.
  • செல்லும் இடம் கோயிலாகவோ, புராதன முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவோ இருந்தால் அங்குள்ள கட்டிட அமைப்புகளுக்கு எந்தச் சேதமும் ஏற்படுத்தாமல், சுவர்களிலோ, மரங்களிலோ கிறுக்கி வைக்காமல் இருப்போம்.
  • சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் வழியில் பொறுப்பான முறையில் வண்டிகளை ஓட்டி செல்வோம். அதிவேகமாக வண்டி ஓட்டுவதைத் தவிர்ப்போம்.
  • சுற்றுலா செல்லுமிடத்தில் உள்ள உள்ளூர்வாசிகளை மதித்து நடப்போம். அவர்களுடைய கலாசாரம், உடைகள், வாழ்க்கை முறை வித்தியாசமாக இருப்பதை ஆவணப்படுத்துவதற்கு முன், அவர்களிடம் அனுமதி பெற்ற பின்னரே ஒளிப்படமோ, வீடியோவோ எடுப்போம்.
  • பொது இடங்களில் செய்யக்கூடாத செயல்களைச் சுற்றுலாத் தலங்களில் செய்யாமல் இருப்போம்.

********

தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 23rd September 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF  ஐ இங்கே பெறலாம்.

Written by P Jeganathan

October 1, 2014 at 8:17 pm