Archive for the ‘Birds’ Category
அருங்காட்சியகங்கள் ஏன் நமக்கு அவசியம்?
அருங்காட்சியகங்களில் பல துறைகள் கொண்ட காட்சிக்கூடங்கள் இருந்தாலும் ஓர் இயற்கை ஆர்வலனாக நான் விரும்பும் பகுதி விலங்கியல் கூடங்கள்தான். காட்டுயிர்களை உயிருடன் அவற்றின் இயற்கையான வாழிடங்களில் மட்டுமே பார்த்துப் பழகியவர்களுக்கு, பாடம்செய்துவைக்கப்பட்டுள்ள விலங்குகளின் உடல்களைப் பார்ப்பது ஒருவேளை மகிழ்ச்சியைத் தராமல் போகலாம். ஆயினும், கண்ணாடிக் கூண்டில் உள்ள, போலியான பளிங்குக் கண்கள் பொருத்தப்பட்ட, கண்ணாடிக் குடுவையில் ஃபார்மால்டிஹைடு திரவத்தில் பதப்படுத்தப்பட்ட, நிறங்களை இழந்த, சில வேளைகளில் கோரமாகத் தோற்றமளிக்கும் இறந்துபோன உயிரினங்களின், அவற்றின் எலும்புக்கூடுகளின் முக்கியத்துவத்தை அறிந்தால் நிச்சயமாக நாம் ஆச்சரியமடைவோம்.
அருங்காட்சியகங்களில் பொதுமக்களுக்காகப் பாடம்செய்த உடல்களை வைத்திருந்தாலும், அந்த உயிரினங்களின் உபரியான சேகரிப்புகளைப் பதப்படுத்தி பத்திரமாகப் பெட்டிகளுக்குள் அடைத்து வைத்திருப்பார்கள். இவற்றுக்குக் காப்பு சேகரிப்புகள் (Reserve collection) என்று பெயர். இவை யாவும் ஆராய்ச்சியாளர்களுக்குப் பல அறிவியல் கேள்விகளுக்கு விடையளிக்க பெரிதும் உதவும். எடுத்துக்காட்டாக சரியான விவரங்களைக் கொண்ட (அந்த உயிரினம் சேகரிக்கப்பட்ட நாள், இடம், சேகரித்தவரின் பெயர் முதலான), பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சேகரித்து முறையாகப் பாடம்செய்யப்பட்ட, உயிரின சேகரிப்புகளில் இருந்து அவற்றின் டி.என்.ஏ.வைகூட ஆராய்ச்சியாளர்கள் பிரித்துள்ளனர். இது அந்த உயிரினங்களின் வகைப்பாட்டியலுக்கும், அவை பரவியிருந்த நிலப்பகுதி குறித்த புரிதலுக்கும், அவற்றின் எண்ணிக்கை சார்ந்த விளக்கங்களுக்கும், பரிணாமவியல் கோட்பாடுகளுக்கும் விடையளிக்கும். உயிரினங்கள் குறித்த களக் கையேடுகள் எழுதும் போது அவற்றுக்கான விளக்கப்படங்களை (illustrations) வரைவதற்குப் பாடம்செய்யப்பட்ட உடல்களே (இன்றுவரையில்) பேருதவி புரிகின்றன.

அண்மையில் தமிழ்நாட்டில் உள்ள பறவை வகைகளின் பட்டியலைத் தயாரிக்கும்போது சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பறவைகள், விலங்கியல் கூடத்தின் பழையக் குறிப்பேடுகளையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாட்டில் சுமார் 530 வகையான பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒளிப்படக் கருவிகள் இல்லாத அந்தக் காலத்தில் பறவைகள் சுடப்பட்டு அல்லது பிடிக்கப்பட்டு பாடம்செய்து வைக்கப்பட்டன. இதுபோல பல பறவையியலாளர்கள் சேகரித்த பறவைகள் பாடம்செய்யப்பட நிலையில் உலகின் பல அருங்காட்சியகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரங்களை (சில சமயம் படங்களுடன்) அந்தந்த அருங்காட்சியகங்கள் அவற்றின் வலைதளங்களில் அனைவரும் காணும்படியாகப் பதிவேற்றம் செய்துள்ளன. இப்படி தமிழ்நாட்டில் இருந்து சேகரிக்கப்பட்ட இந்தப் பறவைகளின் பாடம்செய்யப்பட்ட உடல்களின் (bird skins) விவரங்கள் Vertnet (www.vertnet.org) போன்ற இணையத் தளங்களில் கிடைக்கின்றன. ஆனால், சுமார் 30 வகையான பறவைகளின் விவரங்கள் (அதாவது இங்கிருந்து சேகரிக்கப்பட்ட பறவைகளின் பாடம்செய்யப்பட்ட உடல்கள்) சென்னை அருங்காட்சியகத்தின் குறிப்புகளிலும், சேகரிப்பிலும் மட்டுமே உள்ளன. இவற்றின் விவரங்கள் உடனடியாக இணையத்தில் கிடைப்பதில்லை. இங்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள பல அருங்காட்சியகங்களிலும் இதே நிலைதான் உள்ளது.
அருங்காட்சியகங்களில் உள்ள பாடம்செய்யப்பட உயிரினங்களின் விவரங்களைப் பொது வெளியில் அனைவருக்கும் பயன்படும் வகையில் பொதுவளப் புத்தாக்க உரிமத்தின் கீழ் (creative commons license) வெளியிட வேண்டும். உலகில் பல அருங்காட்சியகங்கள் இந்த வழியைப் பின்பற்றி அவர்களது தரவுகளை (டிஜிடல்) எண்ணியல் வடிவில் தயார்செய்து விக்கிபீடியா போன்ற பொதுவகங்களில் பதிவேற்றியுள்ளனர். எடுத்துக்காட்டாக நெதர்லாந்தில் உள்ள தேசிய இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தில் (Naturalis Biodiversity Center) உள்ள எல்லா உயிரினங்களின் படங்களும், விவரங்களும் GLAM Wiki (“Galleries, Libraries, Archives, and Museums” with Wikipedia) எனும் திட்டத்தின் மூலம் பதிவேற்றப்பட்டுள்ளது. இவற்றில் இந்தியாவில் உள்ள முற்றிலும் அழிந்துவிட்டதாகக் கருதப்படும் இமயமலைக் காடையின் (Himalayan Quail) பாடம்செய்யப்பட்ட உடலினை 360o கோணத்தில் தெளிவாகக் காட்டும் காணொலியும் (video) அடக்கம்.
ஆர்வமுள்ள தன்னார்வலர்கள், அருங்காட்சியக அதிகாரிகளின் கூட்டு முயற்சியில் புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம், திருவனந்தபுரத்தில் உள்ள இயற்கை வரலாறு அருங்காட்சியகம் ஆகிய இடங்களில் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற முன்னெடுப்புகளை இந்தியாவில் உள்ள எல்லா அருங்காட்சியகங்களிலும் தொடங்க வேண்டும். இதற்கான போதுமான நிதி உதவியை அரசு வழங்க வேண்டும்.

இயற்கை கல்வியையும், உயிரியலையும் கள அனுபவத்தின் வாயிலாகவும், பரிசோதனைக் கூடங்களிலும் சொல்லிக்கொடுப்பது நல்லது. அருங்காட்சியகங்களில் நேரத்தைச் செலவிடுவதாலும் பல அறிவியல் சார்ந்த கருத்துகளையும் நாம் நேரிடையாகப் பார்த்து அறிந்துகொள்ள முடியும். எடுத்துக்காட்டாக நாம் நூலில் படிக்கும், படத்தில் பார்க்கும் பல உயிரினங்களை, அவற்றின் சரியான உருவ அளவினை அறியவும், அருகில் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும். அருங்காட்சியக அதிகாரிகளும், பொதுமக்களையும், பள்ளி, கல்லூரி மாணவர்களையும் ஈர்க்கும் வகையில் காட்சியமைப்புகளைச் சிறந்த முறையில் அமைக்க வேண்டும். காட்சிப்படுத்தப்பட்டுள்ள உயிரினத்தின் மேலதிக விவரங்களைப் பொதுமக்கள் அறிந்துகொள்ள சிறந்த ஒலி-ஒளி காட்சிஅமைப்புகளைக் கொண்டிருக்க வேண்டும். அரதப்பழசான பாடம் செய்யப்பட்ட உடல்களை அகற்றி புதியனவற்றை வைக்க வேண்டும். இந்தியக் காட்டுயிர் சட்டம் 1972இன் படி எந்த ஓர் உயிரினத்தையும் கொல்லக் கூடாது ஆகவே, இதற்கு முன்பு இருந்ததுபோல் உயிரினங்களைக் கொன்று அவற்றின் உடல்களைச் சேகரிக்க முடியாது. ஆயினும் உயிரியல் பூங்காக்களில் இயற்கையாக மரணமடையும் உயிரினங்களையும், சாலையில் வாகனங்களில் அடிபட்டு இறக்கும் உயிரினங்களையும் தகுந்த முன்அனுமதி பெற்று பாடம் செய்து காட்சியமைப்புகளை மேம்படுத்தலாம். இதற்கு வனத்துறையின் ஒத்துழைப்பும் அவசியம். அருங்காட்சியகங்களில் உள்ள காட்சியமைப்புகளில் உயிரினங்களின் சரியான விவரங்களை அளிப்பது அவசியம். குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள அருங்காட்சியகங்களில் உயிரினங்களின் சரியான தமிழ்ப் பெயர்களைக் கொடுக்க வேண்டும். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து போகும் அருங்காட்சியகங்களில் சரியான தகவல்களைக் கொடுப்பது மிகவும் அவசியம். அருங்காட்சியகங்கள் நம் அறிவினை விசாலமாக்கும் இடம். அதைத் தொடர்ந்து சரியான வகையில் பராமரிப்பதும், மேம்படுத்துவதும் அரசின் கடமை. அதுபோலவே அங்கு எளிதில் கிடைக்கும் அரிய தகவல்களையும், அறிவினையும் பயன்படுத்திக்கொள்ளுதல் நம் அனைவரின் கடமை.
——-
தி இந்து தமிழ் 18 May 2022 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம். அக்கட்டுரைக்கான உரலி இங்கே.
மக்கள் அறிவியலின் சிறப்பு
பறவைகளின் நண்பர்கள்
அது மே மாதத்தில் ஒரு நாள். பள்ளிகளுக்கெல்லாம் ஆண்டுத் தேர்வுகள் முடிந்து விடுமுறை நாள்கள். ஆனால் வால்பாறையின் அருகே உள்ள சின்கோனா அரசு மேனிலைப் பள்ளியை நோக்கி அந்த மாணவன் நடந்து சென்று கொண்டிருக்கிறான். பள்ளி வளாகத்தை அடைந்த அவன் தனது கால்சட்டைப் பையிலிருந்து ஒரு பேனாவையும் சிறிய கையேட்டையும் எடுத்துச் சுற்றுமுற்றும் பார்த்து எதையோ எழுதிக் கொண்டிருந்தான். சுமார் பதினைந்து நிமிடங்களுக்குப் பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.
வீட்டை அடைந்தவுடன் அவனது தந்தையின் கைப்பேசியிலிருந்து அவனுடைய ஆசிரியரை அழைத்தான். “சார் நான் ஹரி பேசுறேன், இன்னிக்கிப் பள்ளிக்கூடத்தில பார்த்த பறவைகளின் பெயர்களைச் சொல்றேன் குறிச்சிக்கோங்க” என்றான்.
மணிப்புறா – 3, சின்ன மரங்கொத்தி – 2, கொண்டை வளர்த்தான் – 2, சீகாரப்பூங்குருவி – 2, காட்டு மைனா – 2.

மறுமுனையில் இருந்தது அவனது ஆங்கில ஆசிரியரான செல்வகணேஷ் இந்தத் தகவல்களை குறித்துக் கொண்டு அந்த மாணவனுக்கு நன்றியைத் தெரிவித்தார். இவர் ஆங்கிலப் பாடம் எடுக்கும் ஆசிரியர் மட்டுமல்ல. ஒரு பறவை ஆர்வலரும் கூட. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில், தேயிலைத்தோட்டங்களும், அதைச்சுற்றி வனப்பகுதியையும் கொண்டுள்ள வால்பாறையில் பல வகையான அழகான பறவைகளை பார்க்க முடியும். அவர் அந்தப் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்த பின் 2015-இல் இருந்து அவரது பள்ளிவளாகத்தில் இருக்கும் பறவைகளைப் பார்த்து அடையாளங் கண்டு அவற்றைக் குறித்து வைத்துக் கொண்டிருக்கிறார். தான் மட்டுமே அவற்றைப் பார்த்து ரசிக்காமல், உடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பறவைகளை அடையாளம் காணக் கற்றுக் கொடுத்துள்ளார். இதன் விளைவாகவே அப்பள்ளி மாணவ மாணவியர் பலரும் பறவைகளைப் பார்த்து ரசிப்பதிலும், அவற்றை அடையாளங் காண்பதிலும், பறவைகளின் குணங்களை உற்று நோக்குவதிலும் ஆர்வத்துடன் பங்கு பெறுகின்றனர்.
வகுப்பு நேரம் முடிந்தவுடன் ஆசிரியர்களும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணாக்கர்கள் பலரும் சேர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள பறவைகளைப் பார்க்கச் சென்றுவிடுகின்றனர். சில பறவைகளின் குரலொலியை வைத்தே அடையாளங் கண்டு கொள்கின்றனர். இத்தனைக்கும் இவர்களிடம் இருப்பது ஒரே ஒரு இருகண்ணோக்கி மட்டுமே. அது இல்லாமல் கூட அப்பள்ளியில் வழக்கமாகத் தென்படும் பல பறவைகளைப் பார்த்த மாத்திரத்தில் அல்லது அவற்றின் குரலைக் கேட்டவுடன் அடையாளங் காணுமளவிற்குத் தேர்ந்த பறவை ஆர்வலர்களாகியுள்ளனர்.
பள்ளி நாள்களில் அங்குள்ள பறவைகளைப் பார்த்து குறித்துக் கொண்டாலும், விடுமுறை நாள்களில் பள்ளியில் எந்தெந்தப் பறவைகள் தென்படுகின்றன என்கிற விவரங்கள் இல்லாதிருந்தன. ஆகவே ஓரிரு மாணவர்கள் விடுமுறை என்று கூடப் பார்க்காமல், வாரத்தில் ஒரு முறை அங்கு வந்து தங்கள் பள்ளிப் பகுதியின் பறவைகளைப் பதிவு செய்து வந்துள்ளனர்.
இப்போது இவர்கள் பள்ளிவளாகத்தில் தென்படும் பறவை வகைகள், அவற்றின் எண்ணிக்கை, அவற்றில் உள்ளூர்ப் பறவைகள் யாவை, ஆண்டு தோறும் அங்கே தென்படும் பறவைகள் யாவை, வலசை வருபவை யாவை, அவை எப்போது வலசை வருகின்றன, அங்கிருந்து எப்போது திரும்பிச் செல்கின்றன முதலிய விவரங்கள் அவர்களிடையே இருக்கின்றன.
இது எப்படிச் சாத்தியமாயிற்று? இரண்டு ஆண்டுகளாக (2015 முதல் 2017 வரை) ஒவ்வொரு நாளும் ஆசிரியர்களும் மாணவர்களும் தம் பள்ளியில் இருக்கும் பறவைகளைப் பார்த்துப் பட்டியலிடுவார்கள். அதை அவர்களது சிறிய கையேட்டில் எழுதி வைத்துக் கொள்வார்கள். புதிதாக அடையாளம் காண இயலாத பறவைகளின் உருவ அமைப்பு, நிறம், அதன் பண்பு முதலிய விவரங்களை எழுதிக் கொண்டு ஆசிரியர்களின் உதவியுடன் பள்ளி நூலகத்தில் உள்ள பறவைகளுக்கான களக் கையேட்டில் பார்த்து அடையாளம் காண்பர்.
இதையெல்லாம் அவர்களது ஆசிரியர்கள் eBird எனும் இணையத் தளத்தில் உள்ளிடுவார்கள். இவர்களது பள்ளிக்கு என்று தனியாக ஒரு கணக்கை ஏற்படுத்திக் கொண்டு, அவர்கள் பார்க்கும் பறவைகளைப் பற்றிய அவதானிப்புகளை இந்த இணையத் தளத்தில் சேர்த்து வைத்தனர்.
****
மரங்களின் நண்பர்கள்
சயானா சாபு, கேரள மாநிலத்தில், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குத்தூர் எனும் ஊரில் இருக்கு சந்திரா நினைவு அரசு மேனிலைப் பள்ளியில் படிக்கும் பெண் மாணவர். அவர் அங்கே பாடம் படிக்க மட்டும் வரவில்லை. ஒவ்வொரு வாரமும், தனது சிறிய குறிப்பேட்டை எடுத்துக் கொண்டு பள்ளி வளாகத்தில் உள்ள சரக்கொன்றையை (Cassia fistula மலையாளத்தில் கனிக்கொன்னா) பார்க்கக் கிளம்பி விடுவார். அது அவரது மரம். சயானா சாபு வாரா வாராம் அவரது மரத்தோடு சுமார் ஐந்து நிமிடங்கள் செலவழிக்கிறார். அவர் செய்வதெல்லாம் இது தான்: அந்த மரத்தில் இளந்தளிர்கள் இருக்கின்றனவா, மலர்கள் இருக்கின்றனவா, காய்கள், கனிகள் இருக்கின்றனவா, அப்படி இருந்தால் கொஞ்சமா, அல்லது நிறையவா என்கிற எளிய சில தரவுகளைக் குறித்துக் கொள்கிறார்.
இந்த அவதானிப்புகளை அவரது ஆசிரியர் சுமங்களாவிடம் தந்து சீசன் வாச் (Seasonwatch) எனும் இணையத் தளத்தில் சேர்க்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக விடாமல் இதைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

இப்போது அவருக்குத் தனது மரத்தினைப் பற்றிய புரிதல் ஓரளவுக்கு உண்டு. அவரது மரம் எந்த மாதத்தில் இலையை உதிர்க்கும், எப்போதெல்லாம் பூப் பூக்கும் என்பதை அவர் அறிவார்.
இவர் மட்டுமல்ல இப்பள்ளியில் படிக்கும் பல மாணவர்கள் தங்களுக்கென சில மரங்களைத் தேர்ந்தெடுத்து அம்மரங்களைப் பற்றிய விவரங்களைச் தொகுத்து இணையத்தில் சேர்த்து வருகின்றனர். இந்தத் செயல்திட்டத்தை ஒருங்கிணைப்பவரான ஆசிரியை சுமங்களா மட்டும் அவர்கள் பள்ளி வளாகத்திலும் அதனை அடுத்த பகுதிகளிலும் உள்ள சுமார் எழுபது மரங்களைப் பார்த்து அவை பூக்கும், எப்போது காய்க்கும் போன்ற விவரங்களைச் தொகுத்து வருகிறார்.
*****
மக்கள் அறிவியலாளர்கள்
கானுயிர்களையும் அவற்றின் வாழிடங்களையும் பாதுகாக்க நடத்தப்படும் அறிவியல் ஆராய்ச்சிகளில் பொதுமக்களும், மாணவர்களும் பங்களிக்க முடியும். இவ்வாறு பொதுமக்கள் பங்குபெறும் அறிவியல் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு மக்கள் அறிவியல் (citizen science) என்று பெயர்.
தமிழகத்தில் உள்ள சின்கோனா பள்ளி மாணவரான விஜி அவரது ஆசிரியர் செல்வகணேஷ், கேரளாவில் உள்ள குத்தூர் சந்திரா நினைவு அரசு மேனிலைப் பள்ளி மாணவர் சயானா சாபு, அவரது ஆசிரியர் சுமங்களா இவர்கள் அனைவருக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. இவர்கள் அனைவருமே மக்கள் அறிவியலாளர்கள் (citizen scientists) ஆவர்.
பள்ளி மாணவர்கள் பறவைகளைப் பார்ப்பதாலும் பறவைகளைப் பற்றிய விவரங்களைத் தொகுப்பதாலும் யாருக்கு என்ன பயன்?
பறவைகளுக்குப் பயன்படும். ஆம், இப்படித் தொகுக்கும் தகவல்கள் பறவைகளின் பாதுகாப்புக்கு உதவுகின்றன. பறவைகளை ஓரிடத்திலிருந்து அல்லது பல இடங்களில் இருந்து பலர், பல காலமாகப் பார்த்துப் பதிவு செய்வதன் மூலம் பறவைகளின் பரவல், அடர்வு, வலசை வரும், போகும் பருவம், எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றம் போன்ற விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இதை வைத்துப் பறவைகளின் நிலையையும் அவற்றின் வாழிடங்களின் நிலையையும் அறிந்து கொள்ளலாம். இந்த விவரங்கள் பறவைகளின் பாதுகாப்புக்குப் பேருதவி புரியும். எடுத்துக்காட்டாக, வலசை வரும் பறவைகள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேரும் நாளையும் அவை அந்த இடத்தை விட்டு மீண்டும் திரும்பிப் போகும் நாளையும் பல ஆண்டுகளாகக் கண்காணித்து வருவதன் மூலம் புறச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களைக் (climate change) கணிக்க முடியும்.
பார்த்த பறவைகளின் விவரங்களைத் தம்மிடமே வைத்துக் கொள்ளாமல் அனைவரும் பார்த்து அறியக்கூடிய இணையத் தளங்களில் சேர்த்தால் அது அனைவருக்கும் உதவும். இதைத்தான் சின்கோனா பள்ளியின் ஆசிரியர் செல்வகணேஷ் செய்து வருகிறார்.
பறவைகள் சிறந்த சூழலியல் சுட்டிக்காட்டிகள் (Ecological Indicators). ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து குறிப்பிட்ட வகைப் பறவைகள் குறைந்து போனால் அல்லது முற்றிலுமாக இல்லாமற் போனால் அந்தச் சூழல் அவ்வகைப் பறவைகளுக்கு உகந்ததாக இல்லை என்பதைக் காட்டுகிறது. அந்தச் சூழல் விரைவில் மனிதர்களும் வாழத் தகுந்ததாக இல்லாமற் போகலாம். நாம் வாழும் சூழல் நல்ல நிலையில் உள்ளதா இல்லையா என்பதைச் சுட்டிக்காட்டுவதில் பறவைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதனால் பறவைகளை தொடர்ந்து கண்காணிப்பதன் முலம் நாம் வாழும் சூழலில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்ள முடியும்.
ஒரு மரம் எப்போது பூக்கிறது, எப்போது காய்க்கிறது ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணிப்பதனால் என்ன பயன்?
இது போன்ற தாவரங்களின் வாழ்வியல் விவரங்களைத் தொடர்ந்து பல ஆண்டுகள் கண்காணித்து ஆவணப்படுத்தி வருவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பகுதியிலும், உலக அளவிலும் ஏற்படும் கால நிலை மாற்றத்தைப் (Climate change) பற்றி அறிந்து கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, வேப்பம்பூ சித்திரையில் பூக்கும் என்பதை அறிவோம். ஆனால் ஒவ்வோர் ஆண்டும் வேப்பமரம் சரியாகச் சித்திரையில் தான் பூக்கிறதா, அல்லது சற்று முன்போ அல்லது தாமதமாகவோ பூக்கிறதா என்பதை அறிய, அது பூக்கும் நாளை/வாரத்தைத் தொடர்ந்து பல ஆண்டுகள் ஆவணப்படுத்தப்படவேண்டும். ஒரு வேளை தாமதமாகப் பூத்தால் தட்பவெப்ப நிலை, மழையளவு போன்ற காரணிகளுக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என ஆராய்ந்து அறிய முடியும். பருவங்கள் மாறுவதை அறிவியல் அடிப்படையில் அறிந்து கொள்வதற்கு சீசன் வாச் (seasonwatch.in) போன்ற மக்கள் அறிவியல் திட்டங்கள் உதவும்.
இந்தத் திட்டங்களில் பங்கு பெறுவதால் மாணவர்களுக்கு என்ன பயன்?
புறவுலகினைப் போற்றுதல், சுற்றுச்சூழல் மேன்மேலும் சீரழியாமல் பாதுகாத்தல், கானுயிர்களைப் பேணுதல், வாழிடங்களை மதித்தல், இயற்கையை நேர்மையான, பொறுப்பான முறையில் நுகர்தல் ஆகியன குறித்த புரிதல்களைப் பொதுமக்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் சுற்றுச்சூழல் கல்வி (Environmental Education) அல்லது இயற்கைக் கல்வியின் (Nature Education) மூலம் விளக்க முடியும். எனினும், வகுப்பில் பாடமாக படிப்பதைக் காட்டிலும் தாமாகவே இவற்றுக்கான தேவையை உணர்ந்தால் ஒருவருடைய மனத்தில் இவற்றைப் பற்றிய புரிதல்கள் எளிதில் பதியும். ஒரு முறை இப்படி உணர்ந்தால் இயற்கைப் பாதுகாப்பிலும் சுற்றுச்சூழலைப் பேணுவதிலும் பற்றுதல் ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும் அதற்கான நற்செயல்களையும் நற்பண்புகளையும் கடைப்பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
மக்கள் அறிவியல் திட்டங்கள் வழியாகப் பொதுமக்கள், மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள் ஆகிய அனைவரையும் அறிவியல் ஆராய்ச்சியில் பங்கு பெற வைத்தால் அவர்களுக்குப் புறவுலகின் மேல் ஆர்வமும் கரிசனமும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அவர்களிடையே புறவுலகினைப் பற்றிய புரிதல் கூடும். இயற்கையின் விந்தைகளை அவர்கள் நேரடியாகப் பார்த்து மகிழும் வாய்ப்பும் அதிகமாகும். அதே வேளையில் இது தொடர்பாக நடக்கும் ஆராய்ச்சிகளுக்கு நேடியாயாகப் பங்களிக்கும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைக்கும்.
சரி, அறிவியல் ஆராய்ச்சியில் பங்கு பெற்று விவரங்களை (தரவுகளைத்) தரும் வேலையைச் செய்வது மட்டுந் தான் பொதுமக்கள், மாணவர்கள் ஆகியோரது வேலையா? இல்லை. இத்திட்டங்களில் பங்கு பெறுவோர் வெறும் தகவல் தொகுக்கும் வேலையைச் செய்பவர்களாக மட்டும் இல்லாமல் அதை ஏன் செய்கிறோம் எனும் அறிவியல் பின்னனியைத் தெரிந்து கொள்ள உதவுதல், அதைப் பற்றிய அறிவை மேன்மேலும் பெருக்கிக் கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டுதல், ஒரு பொறுப்பான இயற்கைவாதிக்கான பண்பை வளர்த்தல் ஆகியன இது போன்ற மக்கள் அறிவியல் திட்டங்களின் தலையாய நோக்கங்கள்.
பல்லுயிர்ப் பாதுகாப்புக்கும், சுற்றுச்சூழல் பேணலுக்கும் சூழலியலாளர்களும், கானுயிர் ஆராய்ச்சியாளர்களும் மட்டுமே பங்களிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கைப் பாதுகாப்பு, புறவுலகின்பால் கரிசனம் முதலியவை இந்த பூமியில் வாழும் ஓவ்வொருவருக்கும் அவசியம் இருக்க வேண்டிய பண்புகள். அவற்றை உருவாக்கி வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பை மக்கள் அறிவியல் திட்டங்கள் அனைவருக்கும் அளிக்கின்றன.
—
துளிர் – சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழில் (ஜூன் 2021 Vol 34, No. 3, பக்கங்கள் 13-15) வெளியான கட்டுரையின் முழுவடிவம். அக்கட்டுரையை PDFல் காண இங்கே சொடுக்கவும்.
பறவைக் கீர்த்தனைகள்
பறவைகள் மனித குலத்தை ஆதியில் இருந்தே வியக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. பறவைகளின் வாழ்வியலில் நம் அனைவரையுsம் பெரிதும் கவர்வது அவற்றின் பறக்கும் திறனும், இனிமையான குரலொலியுமே! பறவைகளின் கண்கவர் நிறங்களும், கூடுகட்டுதல், வலசை போதல் போன்ற சில வித்தியாசமான பண்புகளும் நம்மை வியக்க வைத்ததாலும், பறவைகளை சரியாக அவதானிக்கும் பழக்கமும், ஆர்வமும் இல்லாதவர்களையும் கூட ஈர்ப்பது அவற்றின் குரலொலி. மனித குலம் முதன்முதலில் இரசித்த இசை பறவைகளுடையதாகத்தான் இருக்க வேண்டும். அப்பொழுதிலிருந்தே பறவைகள், மனிதர்களின் எண்ணங்களையும், கற்பனைகளையும் ஆட்கொண்டு அவற்றைப் பற்றி இலங்கியங்களில், இசையில், நாட்டியங்களில், ஓவியங்களில், கவிதைகளில் என பல்வேறு கலை வடிவங்களில் பதிவு செய்ய தூண்டுகோலாய் இருந்திருக்கின்றன.
தமிழ் செவ்விலக்கியங்களில் குறிப்பாக, பாடல்களிலும் கவிதைகளிலும் செங்கால் நாரை, கானமயில், சிட்டுக்குருவி என பல பறவைகள் இடம் பெற்றிருக்கும். நாட்டுப்புறப் பாடல்களிலும், சிறுவர் பாடல்களிலும்கூட பல பறவைகள் இடம் பெற்றிருக்கும். ஆயினும் இவை யாவும் உவமைகளாகவோ, உருவகங்களாகவோ, சிறு குறிப்புகளாகவோ அல்லது மிஞ்சிப் போனால் ஓரிரு முழுப் பாடல்களாகவோ மட்டுமே இருக்கும். பறவைகளைப் பற்றி மட்டும், அல்லது ஒரு குறிப்பிட்ட வகைப் பறவையைப் பற்றி மட்டும் புகழ்பாடும் கவிதைகளும், பாடல்களும் அரிதே.
மாறாக ஆங்கிலத்தில் பறவைகளுக்காகவே எழுதப்பட்ட கவிதைகளைக் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாக, ஜான் கீட்ஸ் (John Keats) எழுதிய நைட்டிங்கேல் எனும் அழகாகப் பாடும் பறவையைப் பற்றிய “Ode to a Nightingale” எனும் கவிதை, வானம்பாடி குறித்த “To a Skylark” எனும் ஷெல்லியின் (P B Shelly) கவிதை. இன்னும் பல பறவைகளைப் பற்றிய கவிதைகளை Billy Collins தொகுத்த “Bright Wings” நூலிலும், Simon Armitage & Tim Dee தொகுத்த “The Poetry of Birds” நூலில் காணலாம்.
ஆங்கிலத்தில் இருக்கும் அளவிற்கு இல்லை என்றாலும், அண்மைய காலங்களில் தமிழிலும், செல்வமணி அரங்கநாதனின் “மாட்டுவண்டியும், மகிழுந்தும்…”, (பொன்னுலகம் பதிப்பகம்), அவைநாயகனின் “காடுறை உலகம்” (ஓசை வெளியீடு), ம. இலெனின் தங்கப்பாவின் “உயிர்ப்பின் அதிர்வுகள்” (தமிழினி பதிப்பகம்) முதலிய நூல்களில் இயற்கை குறித்தும், பறவைகள் குறித்தும் பல கவிதைகளைக் காணலாம். பறவைகளை மட்டுமே கொண்ட கவிதைத் தொகுப்பு ஆசையின் “கொண்டலாத்தி” (க்ரியா வெளியீடு). இவை எனது கண்களில் பட்டவை, எனக்குத் தெரியாமல் வேறு சில நூல்களும் இருக்கக்கூடும்.
தமிழ் சினிமாப் பாடல்களில் சில இடங்களில் சில பறவைகளைப் பற்றிய குறிப்புகளும் வரும். சில காலத்திற்கு முன் சிட்டுக்குருவி எத்தனை சினிமாப் பாடல் வரிகளில் வருகிறது என கணக்கிட்டதில் சுமார் 20 பாடல்களை பட்டியலிடமுடிந்தது. ஆனாலும், முழுப்பாட்டும் அந்தப் பறவைக்காக இருக்கவில்லை. எதோ எதுகை மோனையாக அமைய வேண்டும் என்பதற்காகவே சிட்டு எனும் வார்த்தையை பயன்படுத்தி இருப்பார்கள். சிட்டுக்குப் பிறகு தொட்டு, பட்டு, மெட்டு போன்ற வார்த்தைகளையும், குருவிக்கு அடுத்ததாக அருவியும் இருக்கும்.
பறவைகள் பற்றிய கவிதைகள் இருந்தாலும் அவற்றை இசையமைத்துப் பாடலாகப் பாடியது தமிழில் இதுவரை இருந்ததாகத் தெரியவில்லை. அந்தப் பெரும் குறையை எழுத்தாளர் பெருமாள்முருகனும், கர்நாடக சங்கீதப் பாடகர்கள் சங்கீதா சிவக்குமாரும், T.M.கிருஷ்ணாவும், போக்கியிருக்கிறார்கள். எந்த ஒரு முன் உதாரணமும் இல்லாத இந்த அருமையான முன்னெடுப்பில் பாடல் பெற்ற பறவைகள், சிட்டுக்குருவி, ஆந்தை, காகம், பனங்காடை, குயில் ஆகிய பறவைகள். இந்தப் பாடல்கள் அனைத்தையும் T.M.கிருஷ்ணாவின் யூடியுப் சேனலில் கேட்டு மகிழலாம்.
பெருமாள் முருகனின் படைப்புகளில் இயற்கையை நுட்பமாக அவதானித்து எழுதப்பட்ட பல செய்திகளையும், குறிப்புகளையும், உயிரினங்களின் வட்டாரப் பெயர்களையும் காணலாம். தமிழில் பசுமை எழுத்தின் முன்னோடியான மா. கிருஷ்ணன், கலைக்களஞ்சியத்தில் எழுதிய பறவைகளைப் பற்றிய விளக்கங்களையும், வேடந்தாங்கல் பற்றிய குறுநூலையும் “பறவைகளும் வேடந்தாங்கலும்” எனும் நூலாகத் தொகுத்தவர். இப்போது பறவைக் கீர்த்தனைகள், என இயற்கையைப் பற்றிய விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்துவதை தொடர்ந்து செய்து வருகிறார். பறவைகளின் பண்புகளை உற்று நோக்கியும் அவற்றின் சரியான பெயரையும் தெரிந்த ஒருவர் இது போன்ற கீர்த்தனைகளை எழுதியது மகிழ்ச்சி அளிக்கிறது.
கீர்த்தனை என்றாலே கடவுள் சார்ந்தது எனும் எண்ணத்தை மாற்றி இயற்கைக்கும் எனதாக்கிய கர்நாடக சங்கீத பாடகர் தம்பதியரான சங்கீதா சிவக்குமார், T.M.கிருஷ்ணா, அவரது குழுவினரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். இசையைப் பற்றி குறிப்பாக கர்நாடக இசையைப் பற்றிய ஞானம் ஏதும் எனக்கு இல்லை. இருப்பினும் பறவைகளையும், இயற்கையின் கூறுகளையும் கொண்ட எந்த ஒரு கலைப்படைப்பும் இயற்கை ஆர்வலர்களை மிகவும் மகிழ்வுறச் செய்யும். குறிப்பாக இயற்கையின் விந்தைகளைப் பற்றியும், இயற்கையின் ஒரு அங்கமான பறவைகளின் பாதுகாப்பு குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் முனைந்திருக்கும் இயற்கை கல்வியாளர்களுக்கு இது போன்ற கலைப்படைப்புகள் உதவியாக இருக்கும்.
இயற்கையையும் பறவைகளையும் போற்றி, வர்ணித்து மட்டும் எழுதாமல் அவற்றிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவற்றைப் பாதுகாக்க நாம் அனைவரும் செய்யவேண்டியவை குறித்தும் பாடல்கள் அதிகம் வரவேண்டும். எண்ணூர் கழிமுகம் குறித்து T.M. கிருஷ்ணா பாடிய “புறம்போக்கு” பாடலைப் போல பறவைகளுக்கும் அவற்றின் வாழிடங்களுக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புகள் குறித்தும் பாடல்கள் வரவேண்டும். பறவைகளோடு இல்லாமல், இயற்கையின் அங்கமான வண்ணத்துப்பூச்சி, தட்டான்கள், மரங்கள் என பல்வேறு உயிரினங்கள் குறித்தும் இது போன்ற பாடல்கள் வர வேண்டும். பெருமாள்முருகன் – T.M. கிருஷ்ணா தொகுப்பில் நீர், நிலம், காற்று, தீ, ஆகாயம் ஆகிய இயற்கையின் அங்கங்களைப் பற்றியும், பனை மரத்தைப் பற்றியும் கூட கீர்த்தனைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படைப்புகளை முன்னுதாரணமாகக் கொண்டு, கலைத்துறையில் இயற்கையின் பால், இயற்கை பாதுகாப்பின் பால் ஆர்வம் உள்ள அனைவரும் இது போன்ற பல முயற்சிகளில் ஈடுபடவேண்டும். இந்த வகையில் தீட்சிதா வெங்கடேசனும், அரிவரசும் பாடிய, அண்மையில் நாம் அனைவரையும் கவர்ந்த, மற்றுமொரு பாடல் “எஞ்சாயி, எஞ்சாமி”. இது போல இயற்கை சார்ந்த ராப் பாடல்கள், கானா பாடல்கள் எல்லாம் வர வேண்டும்.
இயற்கையின் விந்தைகளைக் குறித்தும், பாதுகாப்பு குறித்தும் ஆங்கிலத்தில் பதிப்பிக்கப்படும், புள்ளிவிவரங்களைக் கொண்ட ஆராய்ச்சி கட்டுரைகளைக் காட்டிலும், அவற்றைத் தழுவி தாய் மொழிகளில் எழுதப்படும் கட்டுரைகள் தான் பொதுமக்களை எளிதில் சென்றடையும். இது குறித்த விளக்கக் காணொளிகளும், ஆவணப்படங்களும், ஓவியங்களும், சிற்பங்களும், கேலிச்சித்திரங்களும் உதவும். இவற்றின் வரிசையில் இயற்கை பாதுகாப்பிற்கு இசையும் பேருதவி புரியும்.
கலையின் எல்லா வகைகளிலும், வடிவங்களிலும் இயற்கையைப் போற்றவும், பாதுகாக்கவும் படைப்புகள் பல வர படைக்கப்பட வேண்டும். அந்தந்த துறைசார் வல்லுனர்களின் கூட்டணிகள் பல உருவாக வேண்டும். இதற்கு பறவைக் கீர்த்தனைகள் ஒரு முன்னோடியாகத் திகழும் என நம்புவோம்.
—–
தி இந்து தமிழ் 30 May 2021 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம். அக்கட்டுரைக்கான உரலி இங்கே.
என்ன வேண்டும் தமிழ்நாட்டுக்கு?
இந்து தமிழ் திசை நாளிதழில் 18/03/2021 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம். தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி கடல் சூழலியல்-வள அரசியல் குறித்து பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின், பழங்குடியினர் நலன் குறித்து திரு. எஸ். சி. நடராஜ், பொது சுகாதாரம், மருத்துவம் குறித்து திரு. ஜி. ஆர். இரவீந்திரநாத், பொதுக்கல்வி குறித்து பேராசிரியர் வீ. அரசு என பல துறைசார் வல்லுனர்களின் கட்டுரைகள் இதே தலைப்பில் வெளியானது.
இயற்கை, காட்டுயிர் பாதுகாப்பு தொடர்பான சில கருத்துக்களை இந்தக் கட்டுரை மூலம் தெரிவிக்க வாய்ப்பு கிடைத்தது. இது ஒரு முழுப்பட்டியல் அல்ல.
பருவநிலை அவசரநிலை – முதலில் பருவநிலை மாற்றம் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள், அதற்கான காரணங்கள் யாவற்றையும் பற்றி எல்லா அரசியல் கட்சிகளுக்கும் புரிதல் ஏற்பட வேண்டும். அதன் பிறகு வளர்ச்சி எனும் பெயரில் எடுக்கப்படும் எல்லா செயல் திட்டங்களிலும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகளையும், அவை எந்த வகையில் இயற்கைச் சீரழிவுக்கும், புவிவெப்பமயமாதலுக்கு காரணமாகிறது என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப செயல்படவேண்டும். பருவநிலை அவசரநிலையை பிரகடனம் (Climate Emergency Declaration) செய்யவேண்டும். பொருளாதார வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல், இயற்கைக்கு இணக்கமான வளங்குன்றாத வளர்ச்சி முறைகளைப் பின்பற்ற வேண்டும். நிலையான, உறுதியான பொருளாதார வளர்ச்சிக்கு சீரழிக்கப்படாத சுற்றுச்சூழல் தான் முக்கிய முதலீடு என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
நில, நீர், காற்று மாசு – இயற்கை அன்னை இலவசமாக நம் அனைவருக்கும் தந்த பரிசு. நாம் வாழும் இந்த நிலம், பருகும் நீர், சுவாசிக்கும் காற்று. நிலத்தை பாழ் படுத்தும் எந்த வகையான செயல் திட்டங்களையும் ஊக்கப்படுத்தக் கூடாது. இயற்கை விவசாயத்திற்கு மானியங்களும், கடனுதவிகளும் தாராளமாகத் தந்துதவி ஊக்குவிக்க வேண்டும். திடப்பொருள் கழிவு மேலாண்மையை (குறிப்பாக மருத்துவ, பிளாஸ்டிக் கழிவு) சரிவரச் செய்ய வேண்டும். இரசாயன, தொழிற்சாலை, சாயக் கழிவுகளை ஆறு, குளங்கள், கடல் முதலான நீர்நிலைகளில் வெளியேற்றுவதை முற்றிலும் தடுக்க வேண்டும். காற்று மாசினை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் (குறிப்பாக நகரங்களிலும், தொழிற்சாலைகள் நிரம்பிய பகுதிகளிலும்) வழி வகை செய்ய வேண்டும். தூய்மையான நீரையும், காற்றையும் பொதுமக்கள் இலவசமாகப் பெற வழி செய்ய வேண்டும்.
நீர்வளங்கள் பாதுகாப்பும் மேலாண்மையும் – குளம், ஏரி, ஆறு, சதுப்பு நிலங்கள், கடல் பகுதி முதலான நீர்நிலைகளை மேன்மேலும் மாசுபடாமலும், ஆக்கிரமிக்கப்படாமலும், சீரழியாமலும் சரிவரப் பாதுகாக்க வேண்டும். குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க குழாய் மூலமாகவும், நதிகளை இணைப்பதன் மூலமாகவும் நிரத்தரத் தீர்வு காணமுடியாது என்பதையும், இது இயற்கையை மேன்மேலும் சீர்குலைக்கும் என்பதையும் அறிய வேண்டும். தூய்மை செய்கிறோம் எனும் பெயரில் ஆறுகளின், ஏரிகளின் கரைகளை சிமெண்டு (வைத்துப்) பூசி அவற்றை மூச்சடைக்க வைக்காமல் கழிவுகளை அகற்றி, மாசை நீரில் கலக்கும் தொழிற்சாலைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவும் வேண்டும்.
இயற்கையான வாழிடங்களின் பாதுகாப்பு – இயற்கையான வாழிடங்கள் (காடு, வெட்டவெளிப் புல்வெளிகள், நீர் நிலைகள்) மேன்மேலும் ஆக்கிரமிக்கப்படாமலும், அயல் தாவரங்களால் பாதிப்படையாமலும் பாதுகாக்கப்பட வேண்டும். வெட்டவெளிகள் பாழ் நிலங்கள் (Waste lands) அல்ல அதுவும் ஒரு வகையான இயற்கையான வாழிடம் என்பதை அறிய வேண்டும். இந்த வாழிடங்களை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் அவ்வாழிடங்களில் சீரழிந்த பகுதிகளை அங்குள்ள தாவரங்களை மட்டும் வைத்து வளர்த்து அறிவியல் பூர்வமாக மீளமைத்தலும் (Ecological restoration) முக்கியம் என்பதை அறிய வேண்டும். அதற்காக திறந்த வெளி புதர் காடுகளிலும், வெட்டவெளிப் புல்வெளிகளிலும் யூக்கலிப்டஸ் முதலான அயல் தாவரங்களை நட்டு வைத்து வளர்ப்பது மீளமைத்தல் ஆகாது என்பதையும் அறிய வேண்டும். இது போல வளர்த்து வைத்த ஓரினத்தாவரங்கள், காடுகள் ஆகிவிடாது என்பதையும், இவற்றால் வனப்பரப்பு அதிகரித்து விட்டதாகச் சொல்வதையும் ஏற்க முடியாது.
வனத்துறை மேம்பாடு – வனத்துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். குறிப்பாக பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் (சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள்) வேட்டைத் தடுப்புக் காவலர்களின் (Anti-poaching watchers) எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட பகுதிகள் அல்லாத வனத்துறையின் கீழ் உள்ள இடங்களிலும் இது போன்ற வேட்டைத் தடுப்புக் காவலர்களை பணியில் அமர்த்தி அவர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியத்தை அளிப்பதோடு, ஆயுள், விபத்து காப்பீடுகளையும் அளிக்க வேண்டும். வனத்துறை அதிகாரிகளுக்குத் தேவையான உபகரணங்களையும் (காமிரா, ஜி.பி.எஸ்), நவீன ஆயுதங்களையும் வழங்க வேண்டும். வனப் பாதுகாப்பு, காட்டுயிர் பாதுகாப்புச் சட்டங்களை தளர்த்தவோ, நீர்த்துப்போகவோ செய்யாமல் கடுமையாக்கவும், தேவையான இடங்களில் விரிவாக்கவும் வேண்டும். திருட்டு வேட்டையை தடுக்கவும், கண்காணிக்கவும் ஒவ்வொரு சரகத்திற்கும் பறக்கும் படையை அமைக்கவேண்டும். காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களையும் (Wildlife Biologist) காட்டுயிர் மருத்துவர்களையும் (Wildlife Veterinarians) எல்லா பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலும் நிரந்தரப் பணியில் அமர்த்தி அவர்களின் ஊதியத்தையும் சீரமைக்க வேண்டும்.
மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் – மாறிவரும் பொருளாதாரச் சூழலை சமாளிக்க, இயற்கை வளங்களைக் குன்ற வைக்கும் பல வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் காரணங்களால் (யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமிக்கும் கட்டமைப்புகள், விவசாயப் பெருக்கத்திற்காக வனப்பகுதிகளின் ஓரங்களை ஆக்கிரமித்தல், இயற்கையான வாழிடங்களின் ஊடே செல்லும் சாலை, இரயில் தடம், மின் கம்பிகள் முதலான நீள் கட்டமைப்புத் திட்டங்கள்) மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் மேன்மேலும் அதிகரிக்கின்றது. இதனால் மனித உயிர் இழப்பும், காட்டுயிர் உயிர் இழப்பும், வாழிட இழப்பும் ஏற்படுகிறது. மனித-காட்டுயிர் எதிர்கொள்ளலை சமாளிக்க வனத்துறையுடன், வருவாய்த் துறை, காவல் துறை போன்ற துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட வைக்க வேண்டும். பாதுகாக்கப்பட்டப் பகுதிகளுக்கு (Protected areas) வெளியேயும் தென்படும் காட்டுயிர்களால் (குறிப்பாக மயில்) சேதம் அதிக அளவில் இருப்பின் அதை உறுதி செய்த பிறகு, அங்கும் அரசு இழப்பீடு அளிக்கும் திட்டத்தை ஏற்படுத்துதல் அவசியம். விவசாயிகளுக்கும் பயிர்களை காப்பீடு செய்யும் திட்டங்களை தொடங்குவதும் அவசியம். காட்டுயிர்களின் உயிருக்கு ஆபத்தில்லாத பயிர்களைப் பாதுகாக்கும் முறைகளை கண்டறிந்து அந்த முயற்சிகளை அதிகப்படுத்த வேண்டும்.
விலங்குவழி நோய்த்தொற்றுப் பரவல் கண்காணிப்பும் மேலாண்மையும் – எதிர்காலத்தில் விலங்குவழி பெருந்தொற்றின் தீமைகளைக் குறைக்க ஒரே நலவாழ்வு கோட்பாட்டை (One Health Concept) முதன்மைப்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும். அதாவது, நல்வாழ்வு என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, அவர்களைச் சுற்றியிருக்கும் நிலவமைப்பு, சுற்றுச்சூழல், அதிலுள்ள காட்டுயிர்கள் ஆகிய எல்லாவற்றின் நலனையும் கருத்தில் கொண்டது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். விலங்குவழித் தொற்றுக்குக் காரணமான காட்டுயிர் கள்ளச் சந்தை, காட்டுயிர் வேட்டை போன்றவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். விலங்குவழி நோய்த்தொற்று பரவல், மேலாண்மை குறித்த ஆராய்ச்சிக் கூடங்களை உருவாக்க வேண்டும்.
இயற்கைக் கல்வி – இயற்கை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறிந்த கருத்தாக்கங்கள் கொண்ட பாடத்திட்டத்தினை பள்ளிகள், கல்லூரிகள் என எல்லா தளத்திலும் ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கும் இந்த கருத்தாக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக மனித காட்டுயிர் எதிர்கொள்ளல் அதிகமாக உள்ள பகுதியில் உள்ளவர்களுக்கு காட்டுயிர்களின் பால் இயல்பாகவே இருக்கும் நல்உணர்வுகளையும், உணர்வுபூர்மவான ஈர்ப்பையும், பிடிப்பையும் போற்றியும், அவை குன்றாமல் இருக்கவும் ஆவன செய்ய வேண்டும். விலங்குவழித் தொற்றுக்குக்கான காரணங்களையும், அவை பரவாவண்ணம், தனிமனிதராக செய்ய வேண்டிவற்றையும், பொது சுகாதாரத்தை வலியுறுத்தியும், இயற்கை சீரழிவுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ துணைபோகாமல் இருப்பதையும் பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும்.
அழிவின் விளிம்பில் இருக்கும் வாழிடங்கள், காட்டுயிர்கள் பாதுகாப்பு – யானை, புலி முதலான பேருயிர்கள் மட்டுமல்லாது, அதிகம் அறியப்படாத உயிரினங்களின் (உதாரணமாக அலங்கு, வௌவால் வகைகள் போன்றவை) பாதுகாப்பையும் மேம்படுத்த வேண்டும். பாறு கழுகுகள் போன்ற அழிவில் விளிம்பில் இருக்கும் பறவைகளைப் பாதுகாக்க நெடுங்காலத் திட்டங்களை தொடங்க வேண்டும். வனத்துறையால் பாதுகாக்கப்படாத பகுதிகளில் உள்ள புதர்காடுகள், வெட்டவெளிப் புல்வெளிகள், கடலோரப் பகுதிகள் முதலான வெகுவாக அழிக்கப்பட்டுவரும் வாழிடங்களையும், அங்குள்ள உயிரினங்களையும் பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும்.
நகரச் சூழல் மேம்பாடு – நகர்ப்புறங்களில் உள்ள உயிர்ப் பன்மையம் குறித்த விழிப்புணர்வையும், அவற்றின் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும். நகர்ப்புறங்களிலும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் உள்ள (பூங்கா, ஏரி, குளம் முதலான) இயற்கையான பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்யாமல், சாலை விரிவாக்கப் பணிகளுக்காக சாலையோர மரங்களை வெட்டாமல், மேன்மேலும் இயல் வகை தாவரங்களையும், மரங்களையும் நட்டு வளர்க்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மையில் பொதுமக்களின் பங்கை வலியுறுத்தி அவர்களையும் அதில் ஈடுபட வைக்க வேண்டும். கார்பனை அதிகமாக வெளியிடும் செயல்பாடுகளை வெகுவாகக் குறைக்க பொதுப் போக்குவரத்து வசதிகளை பெருக்க வேண்டும்.
——
உலக அளவில் தேர்தல் அறிக்கைகளில் பொதுவாக இயற்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த திட்டங்கள் மிகக் குறைவாகவே உள்ளது. இதனால் துறைசார் வல்லுனர்கள், ஆர்வலர்கள் அரசியல் கட்சிகள் இதற்காக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பல கட்டுரைகளையும், அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளனர். அவற்றில் சில கட்டுரைகளை இங்கே காணலாம்.
- சுற்றுச்சூழல் குறித்த விரிவான தேர்தல் அறிக்கையை “பூவுலகின் நண்பர்கள்” குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. காண்க செய்தி.
- Neha Sinha (2019). How Environment-friendly are election manifestos? Economic and Political Weekly. Vol. 54, Issue No. 20, 18 May, 2019.
- Guha, Asi & Joe, Elphin. (2019). ‘Environment’ in the election manifestos. Economic and Political Weekly. 54. 13-16.
- Mayank Aggarwal (2019). Environment gets voted into party manifestos. Mongabay India. 12th April 2019)
——
பெயர் பாடும் பறவைகள்
பறவைகளுக்கு எப்படி பெயர் வைக்கிறாங்க தெரியுமா? பறவைகளோட நிறம், உருவம், அவை சாப்பிடும் இரை இதையெல்லாம் வைத்து பெயர் குடுப்பாங்க. சில பறவைகளுக்கு அதோட குரலையும் பாடுற விதத்தையும் வைத்தும் பெயர் குடுப்பாங்க. வாங்க அந்த மாதிரி தன்னோட பெயரையே சொல்லிப் பாடுகிற சில பறவைகளை சந்திக்கலாம்.
பெயர் பாடும் பறவைகள் கதையைப் படிக்க இங்கே சொடுக்கவும்

Pratam Booksன் StoryWeaver எனும் குழந்தைகள் நூல்களை பதிப்பிக்கும் இணைய தளத்தில் வெளியான ஒரு மின் நூல். இது 2016ல் The Hindu In Schoolல் எழுதிய Birds that call their names எனும் சிறு கட்டுரையின் நூல் வடிவம். இந்த நூலின் ஆங்கில பதிப்பினை இங்கே காணலாம்.
ஈச்சங்கள் கனவு
சென்னையிலிருந்து நெல்லூருக்கு இரயிலில் காலை 10 மணியளவில் வந்தடைந்தேன். இரயில் நிலையம் ஊரை விட்டு ஒதுக்குப் புறமாக இருந்ததால் பைபாஸ் வழியாக கடப்பாவை நோக்கிப் பயணமானோம். இதற்கு முன் இவ்வழியே அவசர கதியில் ஏதேனும் வேலையாக ஓரிரு முறை பயணித்திருந்தேன். ஆதலால் அவ்வப்போது நிறுத்தி பறவைகளைப் பார்த்துக்கொண்டும், வழியில் தென்படுவதை படமெடுத்துக் கொண்டும் செல்ல வாய்ப்பு கிடைத்ததில்லை. இம்முறை அப்படி ஏதும் நிர்பந்தங்கள் இல்லாததால், கொஞ்சம் மெதுவாகவே வண்டியை ஓட்டிக் கொண்டு சென்றோம். வழியெங்கிலும் இருபுறமும் மீன்வளர்ப்புக் குட்டைகள் (ஒரு காலத்தில் விளைநிலங்களாக இருந்திருக்கும்) இருந்தன. ஆங்காங்கே ஓரிரு இடங்களில் நெல்லும் சாகுபடி செய்து வந்தனர். மீன் குட்டைகளை கடக்கும் போதெல்லாம் கவுச்சி வாடை அடித்தது. இதற்கு முன் பயணித்த போதும் கவனித்திருக்கிறேன், சாலையோரமெங்கும் பனைமரங்கள் இருக்கும். கள் இறக்குவார்கள். இம்முறையும் கண்டேன். சாலையோரத்தில் ஒரு பெரிய பிளாஸ்டிக் கேனில் வைத்து ஒரு பெண்மணி கள் விற்றுக் கொண்டிருந்தார். ஒருவர் அதை பிளாஸ்டிக் குவளையில் வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தார்.
இளம் பிராயத்தில் குடித்தது (சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்), அதன் பின் பனங்கள்ளின் வாசனையைக் கூட நுகரும் வாய்ப்பு கிட்டவில்லை. அப்போது எங்கள் ஊரில் பனங்கள்ளும், தென்னங்கள்ளும் கிடைக்கும். என் மாமாவின் தோப்பிலேயே கள் இறக்குவார்கள். கலப்படமில்லாத ஒரு மரத்துக்கள்ளை குடித்திருக்கிறேன். வீட்டில் உள்ள சிறுவர்களுக்குக் கூட ஒரு டம்ளரில் கொஞ்சமாகக் கொடுப்பார்கள். வீட்டுப் பெண்களும் அடுப்பங்கரையில் ஒரு லோட்டாவில் வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகக் குடிப்பார்கள். ஐயாக்குட்டி மாமா காலை எழுந்தவுடன் ஒரு லிட்டர் பாட்டிலை முழுவதுமாக மடக் மடக் என்று குடிப்பதைக் கண்டு வியந்திருக்கிறேன். கள் குடிப்பது (அளவோடுதான்) என்பது அப்போதைய சமூகத்திற்கு சர்வ சாதாரணமான ஒரு செயல். பனங்கள்ளை வயிறு முட்டக் குடிக்கலாம், ஓரளவிற்குத்தான் போதையேறும். தென்னங்கள் அப்படியல்ல. அளவோடு குடிக்க வேண்டும். இல்லையெனில் எங்காவது விழுந்தோ அல்லது வாந்தியெடுத்துக் கொண்டோ கிடக்க வேண்டும். அன்று நெல்லூரில் கள் விற்பனை செய்வதைப் பார்த்தவுடன் பழைய ஞாபகங்கள் எல்லாம் வந்தது. ஆனாலும், தெரியாத இடத்தில் அதுவும் குறிப்பாக பரிச்சயம் இல்லாத மனிதர்களிடம் கள் வாங்கிக் குடிக்க ஏனோ மனம் வரவில்லை.
சுமார் 25 கி.மீ. பயணித்த பின் கனிகிரி நீர்த்தேக்கம் வந்தது. கரைமேல் ஏறி பார்த்த போது கண்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீர். மடையானையும், ஓரிரு வெள்ளைக் கொக்குகளையும் தவிர பறவைகள் ஏதும் அங்கு இல்லை. தூரத்தில் ஏதோ ஒரு பறவைக் கூட்டம் (வாத்து?) தூரத்தில் நீந்திக்கொண்டிருந்து. கொஞ்சம் தூரம் பயணித்த பின் சாலையோரத்தில் இருந்த ஈச்ச மரத்தில் ஒருவர் ஏறிக்கொண்டிருந்தார். அதைக் கண்டவுடனேயே வண்டியை நிறுத்தச் சொன்னேன். கள் இறக்கிக் கொண்டிருந்தார். அருகில் சென்று மரத்தின் மேல் இருந்தவரிடம், அவர் கள் இறக்குவதை போட்டோ எடுக்கலாமா என்று கேட்டேன். புன்னகைத்தவாரே, “தீஸ்கோ” என்றார். அந்த ஈச்சமரம் அப்படி ஒன்றும் உயரமில்லை. அதில் அவர் ஏணி வைத்துத்தான் ஏறி இருந்தார். பாதுகாப்பிற்காக, ஒரு வடத்தால் தன்னைச் மரத்தோடு சேர்த்து சுற்றிக்கொண்டு, உச்சிப்படியில் நின்று கொண்டிருந்தார். மரத்தில் இருந்த பானையின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு நீளமானது. அதைப் பிடித்து மெல்ல பத்திரமாக பானையை கீழே தரையில் இறக்கி வைத்தார்.
பனை, தென்னை போலல்லாமல், ஈச்ச மட்டையின் அடிப்புறம் தண்டோடு ஒட்டியிருக்கும். செதில் செதிலாக அம்மட்டைகள் மரத்தின் அடிப்பகுதியிலிருந்து உச்சி வரை அமைந்திருப்பதால், மரத்தை மார்போடு சேர்த்து அணைத்து ஏற முடியாது. ஆகவே தான் ஈச்ச மரத்தில் கள் எடுக்க ஏணி வைத்து ஏற வேண்டியிருந்தது. பனை, தென்னையில் கள் எடுப்போர் மரமேறும் விதமே அலாதியானது. சிறு வயதில் அக்காட்சியை வாய் பிளந்து பார்த்ததுண்டு. வட்டமான கயிற்றை (தலவடை) கால்களைச் சுற்றி இறுக்கிக் கொண்டு மரமேறுவார்கள். இடுப்பில் தென்னம்பாலையால் ஆன ஒரு கூடை இருக்கும். அதில் அரிவாள், உளி முதலியவற்றை போட்டு எடுத்துக் கொண்டு மேலே ஏறுவார்கள்.
இக்கூடையின் வடிவம் வித்தியாசமானது. அடிப்பாகத்தில் இரண்டு கூரிய முனைகளையும் (தென்னம்பாலையின் கூர்மையான முனைப்பகுதி) மேலே வட்ட வடிவிலும் இருக்கும். இதை நம் தலையில் கவிழ்த்துக் கொண்டால் “Batman”ன் தலைக் கவசம் போல இருக்கும். சிறு வயதில் அதைத் தொட்டுப் பார்க்கவும், எனக்கே சொந்தமாக ஒன்றை வைத்துக் கொள்ளவும் என ஆசைப்பட்டதுண்டு. ஆனால் கேலி செய்வார்களோ என கூச்சப்பட்டு யாரிடமும் சொன்னதில்லை. ஆனால் இதன் பெயர் தெரியவில்லை. உடனே கிராமத்தில் வளர்ந்த அம்மாவிடமும், பெரியம்மாவிடமும் கேட்டேன். அவர்களுக்குத் தெரியவில்லை. பின்னர், கிராமத்தில் உள்ள ஐயாப்பிள்ளை மாமாவிற்கு போன் செய்து கேட்டேன். யோசித்து விட்டு உடனே ஞாபகத்திற்கு வரவில்லை என்றும் நாளை சொல்கிறேன் என்றும் உறுதியளித்தார். தெரிந்தவர்களிடமெல்லாம் கேட்டு விட்டு விடை தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் பெருமாள் முருகன் எழுதிய “ஆளண்டாப் பட்சி” நினைவுக்கு வந்தது. அந்த நாவலில் ஒரு அத்தியாயம் முழுக்க கள் பற்றியும் அதை இறக்குவதைப் பற்றியும் விவரிக்கப்பட்டிருக்கும். புரட்டிப் பார்த்த போது அதிலும் விடை கிடைக்கவில்லை. மறுநாள் அம்மாவிடமிருந்து போன் வந்தது. அதன் பெயர் அருவா பெட்டி. மாமாவுக்கு இருப்பு கொள்ளவில்லையாம் நான் போன் செய்ததிலிருந்து. மறுநாள் காலை சைக்கிளை எடுத்துக் கொண்டு இலுப்பூருக்குச் சென்று, அங்கிருந்த நாடாரிடம் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அம்மாவுக்கு போன் பேசி என்னிடம் தெரிவிக்குமாறு சொல்லியிருக்கிறார். அண்மையில் ஆ. சிவசுப்பிரமணியன் எழுதிய “பனை மரமே! பனை மரமே! எனும் நூலில் இந்த அரிவாள் பெட்டியின் படமும் விளக்கமும் இருந்தது. இது ஆவணப்படுத்தப்பட்டதைப் பார்த்து மனநிம்மதி அடைந்தேன். அண்மையில் இதைப் பற்றி காட்சன் சாமுவேல் எழுதிய விரிவான கட்டுரைகளில் (1, 2) கண்டேன்.
பனை, தென்னை போல ஈச்ச மரங்களை கூட்டமாகப் பார்க்க முடியாது. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் இருக்கும். திருநெல்லிக்காவலில் இருந்து திருத்தங்கூருக்கு போகும் வழியில் ஒரு ஈச்ச மரம் வயல் வரப்பில் வளர்ந்திருக்கும். சிறு வயதில் இருந்து நான் பார்த்துக் கொண்டிருக்கும் மரம் அது. ஒரு முறை பல தூக்கணாங்குருவிகள் அதில் கூடு கட்டியிருந்தன. வயலோரம் இருந்த வாய்க்காலில் நீர் வற்றிப் போன பின் அந்தக் கூடுகளும் காணாமல் போய் விட்டன.
சித்திரை மாதத்தில் தெருவில் தேர் வரும் போது வீட்டின் நிலையில் இரு மூலையிலும் ஈச்சங்குலைகளை தோரணம் போல தொங்க விடுவார்கள். துவர்ப்பாக இருக்கும் அந்த செங்காய்களை சிறு வயதில் சுவைத்து முகம் சுழித்ததுண்டு. பள்ளிக்கூட வாசலில் கூடையில் வைத்து வீசம்படியில் அளந்து ஐந்து, பத்து பைசாவுக்கு விற்கும் வயதான பாட்டியிடம் கருப்பு நிற ஈச்சப்பழங்களை வாங்கித் தின்றதும் நினைவில் இன்றும் இருக்கிறது. ஈச்சப்பழம் சுவையானது. எனக்குப் பிடித்த பழங்களில் ஒன்று. எங்கு பார்த்தாலும் வாங்கி சாப்பிடுவேன். ஆனால் வெகு அரிதாகவே கிடைக்கும்.
பனங்கள்ளையும், தென்னங்கள்ளையும் ருசித்திருந்தாலும் ஈச்சங்கள்ளை இதுவரை குடித்ததில்லை. தமிழ்நாட்டில் இனிமேல் எந்தக் கள்ளையும் குடிப்பதற்கான வாய்ப்பு வருமா எனத்தெரியாது. எனவே ஈச்சங்கள் இறக்கப்படுவதைப் பார்த்ததும் நெடுநாளைய கனவு அன்று ஆந்திராவில் நனவாகப் போகிறது என எண்ணிக் கொண்டேன்.
பானைக்குள் கள் நுரைத்துக்கொண்டிருந்தது. பல வகைப் பூச்சிகளையும் பார்க்க முடிந்தது. தேனீக்கள், ஈ வகைகள், பட்டுப் பூச்சிகள் யாவும் கள்ளின் மணத்தால் ஈர்க்கப்பட்டு உள்ளே விழுந்து செத்துக் கிடந்தன. கீழிரங்கி வந்தவர், இடுப்பில் சொருகி வைத்திருந்த உளியை எடுத்து ஒரு நீளமான கட்டையில் தீட்டிக் கூர்மையாக்கிக் கொண்டிருந்தார். மெதுவாகப் பேச்சு கொடுத்தேன். பெயரைக் கேட்டேன். கிருஷ்ணா என்றார். எதற்காக போட்டோ எடுக்கிறேன் எனக் கேட்டார். பத்திரிக்கைக்கா என வினவினார். சும்மா பொழுது போக்கிற்காக என்றேன். கள் கொஞ்சம் கிடைக்குமா என்றேன். இப்போது நன்றாக இருக்காது சாயங்காலம் வா இருந்தால் தருகிறேன் என்றார். உளியை தேய்த்து முடித்த பின் ஏணியை எடுத்து அடுத்த மரத்தில் வைத்து மரமேற ஆயத்தமானார். நான் செய்வதறியாமல் ஏமாற்றத்துடன் கிழே கலயத்தில் இருந்த ஈச்சங்கள்ளை நாக்கில் எச்சில் ஊற பார்த்துக் கொண்டேயிருந்தேன். இன்னொரு முறை சாயங்காலமாக அங்கெ போக வேண்டும் என எண்ணிக்கொண்டேன்.
உயிர் மூச்சு – தி இந்து தமிழ் இணைப்பிதழில் 15 Jun 2019 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம். அக்கட்டுரைக்கான உரலி இங்கே.
இது ஒரு நல்ல வாய்ப்பு – ஒலி வடிவம்
தி இந்து தமிழ் செய்த்தித்தாளின் உயிர்மூச்சு இணைப்பிதழில் 4-4-2020 அன்று வெளியான கட்டுரையின் முழுப்பதிப்பு ஒலி வடிவில்.
இந்தக் கட்டுரையை ஒலிவடிவில் பேசித் தந்த மேகலா சுப்பையாவுக்கும், காணொளி ஆக்கித் தந்த வெ. இராஜராஜனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
பின்னணி இசை உபயம்
Naoya Sakamata – Dissociation” is under a Creative Commos license (CC BY 3.0). Music promoted by BreakingCopyright: http://bit.ly/2PjvKm7
“Steffen Daum – Goodbye My Dear” is under a Creative Commons license (CC-BY 3.0) Music promoted by BreakingCopyright: https://youtu.be/X7evDQiP3yI
பறவைகளின் குரலோசை ஒலிப்பதிவு
குயில் (ஆண்) – Peter Boesman, XC426536. Accessible at www.xeno-canto.org/426536.
குயில் (பெண்) – Mandar Bhagat, XC203530. Accessible at www.xeno-canto.org/203530
காகம் – Vivek Puliyeri, XC191299. Accessible at www.xeno-canto.org/191299.
சிட்டுக்குருவி – Nelson Conceição, XC533271. Accessible at www.xeno-canto.org/533271
செண்பகம் – Peter Boesman, XC290517. Accessible at www.xeno-canto.org/290517
செம்மூக்கு ஆள்காட்டி – AUDEVARD Aurélien, XC446880. Accessible at www.xeno-canto.org/446880.
இது ஒரு நல்ல வாய்ப்பு
இது ஒரு நல்ல வாய்ப்பு. நமக்காக, நாமே ஏற்படுத்திக் கொண்ட வாய்ப்பு.
உறவுகளைப் புதுப்பிக்க, மேம்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு. இயற்கையுடனான நமக்குள்ள உறவுகளைச் சொல்கிறேன். எவ்வளவு அமைதியாக இருக்கிறது? இதற்கு முன் அனுபவிக்காத அமைதி. எப்போதும் இப்படியே இருந்துவிடாதா என ஏங்க வைக்கும் அமைதி. இத்தனை காலமாக எவ்வளவு இரைச்சல்களை கேட்டுக்கொண்டிருந்தோம்? நாம் வகுத்து வைத்த எல்லைகளில் போரிட்ட இரைச்சல், தரையின் அடியிலும், கடலின் அடியிலும் அணுகுண்டை வெடிக்க வைத்த போது ஏற்பட்ட இரைச்சல், மலைகளை வெடி வைத்துத் தகர்த்ததனால் எழுப்பிய இரைச்சல், கனரக வாகனங்கள் காட்டை அழிக்கும் போது எழுந்த இரைச்சல், மதப் பண்டிகைகள், கேளிக்கைகள் என நாம் ஏற்படுத்திக் கொண்ட இரைச்சல் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

Atomic bombing Nagasaki (Photo: Wikimedia commons) | A 21 kiloton underwater nuclear weapons effects test (Photo: Wikimedia Commons)
இந்த இரைச்சலை எல்லாம் சகித்துக் கொண்டு, இவற்றிலிருந்து கொஞ்ச நாட்களாவது விலகி இருக்க வேண்டுமென, அமைதியான இடங்களுக்குச் சென்றதும், அங்கு சென்றும் இரைச்சலை ஏற்படுத்தியது இப்போது நினைவுக்கு வருகிறதா? தேடிச்சென்ற அமைதி இப்போது தேடாமலேயே வந்துவிட்டது. அதை அனுபவிக்க வேண்டாமா? இத்தனை நாட்களாக நமது காதுகளை நாமே செவிடாக்கிக் கொண்டும், நம்மைச் சுற்றியிருந்த பல உயிரினங்களின் குரல்வளைகளை நெரித்து, அவற்றை பேசவிடாமலும் செய்து கொண்டிருந்தோம். நம் உலகம் வாயை மூடிக்கொண்டிருக்கும் போது நாமிருக்கும் உலகின் குரலை கேட்க எவ்வளவு நன்றாக இருக்கிறது?
இன்று காலை வீட்டினருகில் ஒரு அணில் ஓயாமல் கத்திக் கொண்டே இருந்தது. ஆண் குயில் தூரத்தில் கூவியது. பெண் குயில் வீட்டின் அருகில் இருந்த வேப்ப மரத்தில் இருந்து கெக்… கெக்… கெக்… என கத்தியது. ஆண் குயில் கருப்பு. பெண் குயில் உடலில் பழுப்பும் வெள்ளைப் புள்ளிகளும் இருக்கும். இவற்றின் நிறம் மட்டுமல்ல எழுப்பும் குரலொலியும் வேறு. காகங்கள் கரைந்தன. தெருமுனையில் சிட்டுக்குருவிகள் கத்திக்கொண்டிருந்தன. பொதுவாக வீட்டின் முகப்பில் இருந்தோ, மொட்டை மாடியில் இருந்தோ அவை இருக்கும் திசை நோக்கி பார்த்தால் மட்டுமே தென்படும். இதுவரையில் வீட்டினுள் இருந்தபடி அவற்றின் குரலை கேட்டதில்லை. ஆனால் இன்று கேட்டது. தூரத்தில் செண்பகம் ஒன்று ஊப்..ஊப்..ஊப்..என தொடந்து கத்திக் கொண்டிருந்தது. இந்தப் பறவை இப்பகுதியில் இருப்பதை இன்றுதான் அறிய முடிந்தது. அந்தி சாயும் வேலையில் ஒரு செம்மூக்கு ஆள்காட்டி வீட்டின் மேல் பறந்து கொண்டே கத்துவது கேட்டது. வீட்டுச் சன்னலில் இருந்து பார்த்த போது சப்போட்டா மரத்தில் இருந்து வௌவால்கள் இரண்டு பறந்து சென்றன. இவர்கள் யாவரும் என் தெருக்காரர்கள், அண்டை வீட்டுக்காரர்கள். இந்த அமைதியான தருணம், இவர்களையெல்லாம் அறிந்துகொள்ளும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.
சில உறவுகைளை களைவதற்கும் கூட இது ஒரு நல்ல வாய்ப்பு. நமக்கும் குப்பைகளுக்கும் இடையேயான உறவைச் சொல்கிறேன். ஒவ்வொரு நாள் காலையிலும், தெருவில் அந்த வயதான பெண்மணி நான்கு பெரிய ட்ரம்களைக் கொண்ட வண்டியை தள்ளிக்கொண்டு வருவார். ஒவ்வொரு நாளும் வீட்டு குப்பை டப்பாவும் நிரம்பி வழியும். அதில் பிளாஸ்டிக் குப்பை, காய்கறி கழிவு எல்லாம் சேர்ந்தே இருக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக குப்பை டப்பா நிரம்புவதே இல்லை. நொறுக்குத்தீனி இல்லை, ஆகவே பிளாஸ்டிக் குப்பையும் இல்லை. அப்படியே இருந்தாலும், அதிகம் சாப்பிட்டால் பருமன் அதிகரிக்கும் எனும் கவலையால், வாயைக் கட்டவும் கற்றுக் கொண்டாகிவிட்டது. வெளியில் செல்வது சரியல்ல என்பதால் ரசத்தில் மூன்று தக்காளிக்கு பதிலாக ஒன்று மட்டுமே. அதிகம் ஆசைப்படாமல், மேலும் மேலும் வேண்டும் என எண்ணாமல், இருப்பதை வைத்து சமாளிக்க, சிறியதே அழகு, குறைவே நிறைவு என்பதை இந்த அமைதியான நேரம் கற்றுத் தந்திருக்கிறது.
மற்றவர்களின் துயரங்களை உற்று நோக்கவும், அவர்கள் நிலையில் நம்மை வைத்து நினைத்துப் பார்க்கவும் இது ஒரு நல்ல வாய்ப்பு. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பது எவ்வளவு கொடுமையாக இருக்கிறது. உயிரியல் பூங்காக்களில் சிறிய கூண்டில் புலி ஒன்று ஓயாமல் அங்குமிங்கும் திரும்பித் திரும்பி நடந்து கொண்டே இருந்ததும், கோயிலில் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்ட யானை இடைவிடாமல் தலையையும், தும்பிக்கையையும் மேலும் கீழும் ஆட்டி, கால்களை மாற்றி மாற்றி வைத்துக் கொண்டே இருந்ததும் நினைவுக்கு வந்தது. இது மன அழுத்தத்தால் ஏற்படும் விளைவு. என் வீட்டு சன்னல் வழியாகப் பார்த்தால் பக்கத்து வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் வளர்ப்புக் கிளிகளின் கூண்டு தெரியும். வெகுதொலைவில் இருந்து, அமேசான் காடுகளில் இருந்தோ, ஆஸ்திரேலியாவிலிருந்தோ நம்மால் கடத்திக் கொண்டுவரப்பட்டவை அவை. வளர்ப்பு உயிரிகளின் நேசம் காரணமாக ஏற்பட்ட கள்ள சந்தையின் விளைவு. ஒவ்வொரு முறை நாம் கடைக்குச் சென்று அழகாக இருக்கிறதென்று கிளிகளை வாங்கி வரும் போது, நாமும் அந்தக் கள்ளச் சந்தையை ஊக்குவிக்கிறோம்.
கூண்டுக்குள் மட்டும்தான் அடைத்து வைத்திருக்கிறோமா? நம்மைத் தவிர இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் சுதந்திரமாக உலவ விடாமல், ஒடுக்கியுமல்லவா வைத்திருக்கிறோம். காபி, தேயிலை, யூக்கலிப்டஸ் என ஓரினப்பயிர்களை வளர்க்க, அகலமான சாலைகளை, இரயில் பாதைகளை அமைக்க, உயர் அழுத்த மின் கம்பிகளை கொண்டுசெல்ல, இராட்சத நீர் குழாய்களையும், கால்வாய்களையும் கட்ட, நகரங்களை விரிவாக்கி கட்டடங்களை எழுப்ப, மலைகளை வெட்டி, காடுகளைத் திருத்தி இயற்கையான வாழிடங்களை துண்டு துண்டாக்கி, அங்கு வாழும் யானைகள், சிங்கவால் குரங்குகள், மலையணில்கள், பறவைகள், சின்னஞ்சிறிய தவளைகள் முதலான பல உயிரினங்களின் வழித்தடத்தை மறித்தும், அவற்றின் போக்கை மாற்றியும், அவற்றில் பலவற்றை பலியாக்கிக் கொண்டுமல்லவா இருக்கிறோம். வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் போது நம்மால் அடைத்து வைக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட உயிரினங்களின் நிலையையும் சற்றே உணர இது ஒரு நல்ல வாய்ப்பு.
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, அனுசரித்து நடக்கவும், சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ளவும் இது ஒரு நல்ல வாய்ப்பு. நான் புரிந்து கொள்ளச் சொல்வது நாம் ஆக்கிரமித்த பகுதியில் ஏற்கனவே வசித்து வந்த உயிரினங்களை, அவற்றின் குணாதிசயங்களை. எத்தனை யானைகளை பிடித்து கட்டிவைத்திருப்போம், எத்தனை சிறுத்தைகளை ஓரிடத்தில் பிடித்து வேறு இடங்களில் விட்டு விட்டு வந்திருக்கிறோம்? எத்தனை மயில்களை நஞ்சிட்டுக் கொன்றிருப்போம்? எத்தனை பாம்புகளை அடித்தே சாகடித்திருப்போம்? சினிமாவில் நிகழ்வது போல் எந்த காட்டுயிரியும் நம்மை துரத்தித் துரத்தி வந்து கொல்வதில்லை. “துஷ்டரைக் கண்டால் தூர விலகு” என்பது போல அவை நம்மைக் காணும் போதெல்லாம் விலகியே செல்ல முற்படும் என்பதை நாம் அறியவேண்டும். எதிர்பாராவிதமாக நாம் அவற்றின் அருகில் செல்ல நேர்ந்தால் ஏற்படும் அந்த அசாதாரணமான சந்திப்பில், பயத்தில் அவை தாக்க நேரிட்டு மனிதர்கள் காயமுறவோ, இறக்கவோ செய்யலாம். ஆறறிவு கொண்ட நாம் கவனமாக இருக்க வேண்டாமா? எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டாமா? கண்ணுக்குத் தெரியாத ஒரு நுண்ணுயிரி அது நம் மேல் வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம், அதுபோல காட்டுயிர்கள் வாழும் பகுதியில் நாமும் வாழ நேர்ந்தால் நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நாம் வீட்டுக்குள்ளேயே இருக்கும் போது வீட்டில் இருப்பவர்களிடம் எவ்வளவு கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள். இருந்தாலும் அவர்களை எல்லாம் வீட்டை விட்டு விரட்டிவிடுகிறோமா? அல்லது கண்காணாத இடத்தில் விட்டுவிட்டு வருகிறோமா? எனவே, எல்லா உயிரினங்களுடனும் எச்சரிக்கையுடன், சரியான இடைவெளியில் சேர்ந்து வாழ பழகிக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு.

Coronavirus – Photo: Wikimedia Commons
யாரையும் குற்றம் சொல்லாமல் இருக்கக் கற்றுக்கொள்ள, இது ஒரு நல்ல வாய்ப்பு. வைரஸை தமிழில் தீநுண்மி என்கின்றனர். ஒரு உயிரினம் என்ன செய்ய வேண்டுமோ, அதாவது, நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதைத்தான் அதுவும் செய்கிறது. பல்கிப்பெருகிக்கொண்டுள்ளது, நாம் வளர எத்தனையோ வகையான உயிரினங்களை அழிக்கிறோம்? நமக்கு என்ன பெயர்? மனிதர்கள் என்பதை மாற்றி தீயவர்கள் என வைத்துக் கொள்ளலாமா?
இந்த அமைதியான நேரத்தில் இனிவரும் காலங்களில் இந்த உலகிற்கும், நமக்குமான உறவு எப்படி இருக்க வேண்டும் என எண்ணிப்பார்க்க, என்ன செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள, சிந்திக்க, அதை எப்போது, எப்படிச் செய்ய வேண்டும் எனத் திட்டமிட, இது ஒரு நல்ல வாய்ப்பு.
—
தி இந்து தமிழ் செய்த்தித்தாளின் இணைப்பிதழில் 4-4-2020 அன்று வெளியான கட்டுரையின் முழுப்பதிப்பு https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/547821-good-chance.html
“2.0 – படம் அறிவியலுக்கு எதிரான படம்!” – ஆனந்த விகடன் நேர்காணல்
“2.0 – படம் அறிவியலுக்கு எதிரான படம்!” – ஆனந்த விகடன் இதழுக்காக (01-05-2019/25-௦4-2019-Online) பத்திரிக்கையாளர் திரு. க. சுபகுணம் அவர்களிடம் பகிர்ந்தவை..
நேர்காணலின் முழு வடிவம் கீழே:
பறவைகள். பூவுலகில் வாழும் உயிரினங்களில் மனித இனத்தின் ஈர்ப்பையும் அன்பையும் சற்றுக் கூடுதலாகப் பெற்ற உயிரினம். மனிதனால் இவ்வுலகில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களால் வெகுவாக பாதிக்கப்படுவதும் பறவைகளே. சூழலியல் பாதுகாப்பில் ஒருவரை ஈடுபடுத்த வேண்டுமென்றால் முதலில் அவரைப் பறவை நோக்குதலுக்குப் பழக்கவேண்டும். அதுவே தானாக அவரை அடுத்தகட்டத்திற்கு இட்டுச்சென்றுவிடும். அத்தகைய பறவை நோக்குதலைத் தமிழகத்தில் பரவலாக்கியதில் பல பறவை ஆய்வாளர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் முக்கியப் பங்குண்டு. அத்தகைய பறவை ஆய்வாளர்களில் முக்கியமானவர் ப.ஜெகநாதன். மக்கள் அறிவியல் (Citizen Science) தமிழ்ச் சமுதாயத்தில் பரவலானதிலும் இவருடைய பங்கு மிக முக்கியமானது. ஆய்வாளர்கள் மக்களிடமிருந்து பிரிந்து நிற்கக்கூடாது, அவர்கள் மக்களுடன் நிற்க வேண்டும். அதை நடைமுறையில் செய்துகொண்டிருப்பவர். இயற்கை பாதுகாப்பு நிறுவனம் (Nature Conservation Foundation) சார்பாக காட்டுயிரியலாளராக வால்பாறையில் ஆய்வுகளைச் செய்துவரும் அவருடனான நேர்காணல் இனி…
ஆய்வுத்துறையில் குறிப்பாகப் பறவைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற உந்துதல் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?
1996-ம் ஆண்டு மாயவரத்தில் உள்ள ஏ.வி.சி கல்லூரியில் முதுகலையில் காட்டுயிரியல் படித்துக் கொண்டிருந்தேன். மக்கள் மத்தியில் காட்டுயிர் ஒளிப்படக்கலை மீதான ஆர்வம் வளர்ந்துகொண்டிருந்த சமயம். என் களஆய்வுக்காக தவளைகள், பாம்புகள், முதலைகள் போன்ற உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்துகொண்டிருந்தேன். ஒகேனக்கல், பிலிகூண்டு, ராசிமணல் போன்ற பகுதிகளின் நதியோரங்களில் தான் களப்பணி. அப்போது பறவைகள் மீது அதீத ஆர்வம் இல்லையென்றாலும், ஓரளவுக்குப் பறவைகளைப் பார்க்கும் பழக்கமிருந்தது. அந்தச் சமயத்தில் என் பெற்றோர்கள் ஒரு இருநோக்கியை பரிசளித்தார்கள். அது மிகவும் பயனுடையதாக இருந்தது. காவிரிக் கரையில் நடந்து செல்லும் போது பல விதமான பறவைகளை முதன் முதலாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆக, பறவைகள்மீது உங்களுக்கு அளப்பரிய ஆர்வம் வந்ததற்கு அந்த இருநோக்கியை காரணமாகச் சொல்லலாமா?
அதுவும் ஒரு காரணம் என்று சொல்லலாம். நான் பறவைகளைப் பார்க்கத்தொடங்கியது நூல்களில் தான்! சாலிம் அலி எழுதிய இந்தியப் பறவைகள் (The Book of Indian Birds) எனும் நூலை ஆர்வத்துடன் தினமும் புரட்டிக்கொண்டிருப்பேன். அதில் உள்ள பலவகையான பறவைகளின் ஓவியங்களை பார்க்கையில் அவற்றை நேரில் பார்க்கும் ஆசை எழும். பறவை பார்த்தல் எப்போதும் அங்கிருந்துதான் தொடங்கும். நூலில் நாம் பார்க்கும் படங்கள் மனதில் பதியும்போது அவற்றை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் இயல்பாகவே குழந்தையைப்போல் துள்ளிக் குதிப்போம். படத்தில் பார்த்த ஒன்றை நேரில் பார்த்தால் யாருக்குத்தான் ஆனந்தமாக இருக்காது.
அப்படிப் பார்த்ததில் எந்தப் பறவை முதலிடத்தில் உள்ளது?
முதலிடம் என்று ஒன்றை மட்டும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. எனினும் இன்னும் நீங்காமல் நினைவில் நிற்பது ஒகேனக்கல் வனப்பகுதிகளில் முதன்முதலில் கண்ட மஞ்சள் தொண்டை சிட்டு (Yellow-throated Sparrow), மாயவரம் கல்லூரி விடுதியில் இருந்து பார்த்த கொண்டைக் குயில் (Red-winged Crested Cuckoo), களக்காட்டில் பார்த்த பெரிய இருவாச்சி (Great Pied Hornbill) போன்றவற்றைச் சொல்லலாம். இன்னும் பார்க்க வேண்டிய பறவைகள் எத்தனையோ உள்ளன. ஆக இந்தப் பட்டியல் என்றுமே முடியாது.
இந்தப் பறவைகளை எல்லாம் புத்தகத்தில் பார்த்துப் பழகியபின் நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்ததும் மகிழ்ச்சியடைந்தேன். அப்படித் தொடங்கிய ஆர்வம்தான் இதுவரை இழுத்து வந்துள்ளது. பறவைகளைப் பார்க்க இருநோக்கி வேண்டுமென்றில்லை, ஆர்வம் இருந்தால் போதும். முதலில் பறவைகளின் படங்களை நாம் பார்க்கவேண்டும். அதை நேரில் பார்க்கையில் நாமே தானாக இனம் காண முயல்வோம். அதுதான் ஆர்வத்தின் முதல்படி. அவற்றின் குரலைக் கேட்டு அறிந்து கொள்வோம். அதன்பிறகு அவற்றைக் கூர்ந்து கவனிக்க இருநோக்கிகள் நமக்குப் பயன்படும்.
பறவை நோக்குதல் பொதுமக்களிடத்தில் பரவுவது அவசியமானதா?
பறவை நோக்குதல் என்பதொரு அருமையான பொழுதுபோக்கு. குழந்தைகள் முன்பெல்லாம் தெருவில் விளையாடுவார்கள், குளத்தில் குளிக்கப்போவார்கள். அவை தற்காலத்தில் மிகவும் குறைந்துவிட்டது. குளம், ஏரி, காடு மேடுகள் எல்லாம் சுற்றும்போது அங்கிருக்கும் மரங்கள் உயிரினங்களின் பெயர்களைத் தெரிந்து வைத்திருப்போம். அதெல்லாம் தற்போது இல்லாமலே போய்க்கொண்டிருக்கிறது. தொலைக்காட்சி, செல்போன்கள் அவர்களை ஓரிடத்தில் முடக்கி வைக்கிறது. அதனால், தம்மைச் சுற்றியுள்ள இயற்கையைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. அவற்றிலிருந்து அவர்களைத் திசை திருப்ப, இயற்கைமீது பற்றுதல் ஏற்படுத்த, அதைப் பாதுகாக்க வேண்டுமென்ற சிந்தனை உதிக்கப் பறவை நோக்குதல் பயன்படும். பறவை என்றில்லை, வண்ணத்துப்பூச்சிகள், தட்டான்கள், பூச்சிகள், என இயற்கையில் உள்ள எந்த உயிரினாமாக வேண்டுமானாலும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும், நமக்குப் பிடித்தால்தானே பாதுகாக்க நினைப்போம். ஆதலால், இயற்கையைப் பிடிக்க வைக்கவேண்டும். அதற்குப் பறவை நோக்குதல் முதல் படி. அதன்மூலம் பறவைகளை மட்டுமில்லாமல் அவற்றின் வாழிடங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களைத் தூண்டும். ஒரு சதுப்புநிலம் ஆக்கிரமிக்கப் படுகிறதென்றால் அதை எதிர்த்து மக்களைப் போராட வைக்கும்.
அதையும் தாண்டி, பறவை நோக்குதலில் ஈடுபடும் ஒருவர் பொறியாளராக மாறினால் அணை கட்டுவதாக இருந்தாலும், காட்டின் குறுக்கே சாலை போட நேர்ந்தாலும் அங்கு சூழலியல் தாக்க மதிப்பீடு முறையாகச் செய்யவேண்டுமென்று நினைப்பார். அங்கிருக்கும் உயிரினங்களின் வாழிடம் அழியக்கூடாதென்ற கரிசனத்தோடு நடந்து கொள்வார் என எதிர்பார்க்கலாம். இதெல்லாமே பறவை நோக்குதல் தரும் பலன்களாகக் கருதலாம். ஒரு பொறுப்புள்ள சூழலியல்வாதியாக மக்களை உருவாக்குதில் இது மிகப்பெரிய பங்காற்றும்.
மக்கள் அறிவியல், தமிழகத்தில் தற்போது அதிகமாகப் பேசப்படுகிறது, நடைமுறையிலும் செயல்பட்டு வருகிறது. மக்களை இதுமாதிரியான அறிவியல்பூர்வ முயற்சிகளில் பங்கெடுக்க வைப்பது எப்படி சாத்தியமானது? இதுபற்றிக் கொஞ்சம் விளக்கமாகக் கூறமுடியுமா!
நீங்களும்தான் இதைச் செய்கிறீர்கள். விகடன் மாணவப் பத்திரிகையாளர்கள் திட்டத்தை நடத்துகிறீர்களே, அது எதற்காக?
மாணவர்களுக்கு சமுதாயப் பிரச்னைகளைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். அதை எப்படி அணுகவேண்டுமென்ற புரிதல் அவர்களுக்குக் கிடைக்கவேண்டும். எதிர்காலத்தில் அவர்கள் பத்திரிகையாளராக வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி, சமூக மற்றும் அரசியல் பிரச்னைகளைப் பற்றிய புரிதல் அவர்களுக்குக் கிடைக்கவேண்டும் என்பதற்காக நடத்துகிறோம். அதுதானே சமுதாயத்தின் சிறந்த மனிதராக அவர்களுக்குத் துணைபுரியும்.
இதுவும் கிட்டத்தட்ட அதேபோலத்தான். இதழியல் என்பது ஒரு துறை என்பதையும் தாண்டி அதை பொது மக்களும் செய்யமுடியுமென்ற (Citizen Journalism) நம்பிக்கையை எப்படி நீங்கள் விதைத்தீர்களோ அதையேதான் மக்கள் அறிவியல் (Citizen Science) மூலம் சூழலியல் துறையிலும் செய்யமுடிகிறது. அப்போதுதானே சிறந்த சூழலியல் பாதுகாவலனாக மக்கள் வாழமுடியும்.
மக்கள் அறிவியல் பற்றி இன்னும் விரிவாகக் கூறமுடியுமா… அது எப்படி அறிவியல் வளர்ச்சியில் பங்கு வகிக்கின்றது? இது எப்படி பறவைகள் அல்லது இயற்கை பாதுகாப்பில் உதவும்?
ஒருவர் ஒரு பறவையைப் பார்க்கிறார். அதன் பெயர், பார்த்த இடம், நேரம் அனைத்தையும் குறிப்பேட்டில் எழுதி வைத்துக்கொள்கிறார். இதுவொரு முக்கியமான தரவு (Data). உதாரணத்திற்கு, 1980-களில் தஞ்சாவூரில் ஒருவரிடம் பாறு கழுகின் படமும் பார்த்த நேரம், இடம் போன்ற தகவல்களும் இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அதை அவரே வைத்திருந்தால், அவர் இறந்தபின் அது பயனில்லாமல் போய்விடும். பொதுவெளியில் அதாவது eBird, Wikipedia, Wikimedia Commons போன்ற Portal களில் அதை உள்ளிட்டால் அதே தரவுகள் ஆவணமாகும். இங்கெல்லாம் முன்பு பாறுகள் இருந்திருக்கிறது, இப்போது இல்லாமல் போய்விட்டது என்ற தகவல் ஆய்வுகளில் பயன்படும். அதுவும், அழிவின் விளிம்பிலிருக்கும் பாறு போன்ற பறவைகளின் தரவுகள் பொக்கிஷங்களைப் போல. அது பல முடிச்சுகளை அவிழ்க்கவும், ஆய்வுகளை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தவும்கூடப் பயன்படும்.
சிட்டுக்குருவியால் அழியும் தருவாயில் இல்லை என்பதை நிரூபிக்கவும் இது போன்ற திட்டங்கள் உதவும். (பார்க்க Citizen Sparrow ).
உதாரணமாக ஒரு ஏரி அல்லது குறிப்பிட்ட வனப்பகுதியில் இருந்து இருந்து பலரும் அங்கிருக்கும் பறவைகளை பல்லாண்டு காலமாக தொடர்ந்து கண்காணிப்பதன் மூலமாகவும் அவற்றை eBirdல் உள்ளிடுவதன் மூலமும் அங்குள்ள பொதுப்பறவைகளையும், அரிய பறவைகளையும், வலசை வரும் பறவைகளையும், அவற்றின் அடர்வையும் (density) அறிய முடியும். சில ஆண்டுகளுக்கு முன் அதிகமாக இருந்த ஒரு வகைப் பறவை இந்த ஆண்டு கணக்கெடுப்பில் குறைந்து போனதென்றால் அதை அறிந்து கொண்டு அதற்கான காரணம் என்னவென்பதை ஆராய்ந்து அவற்றை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடலாம்.
ஒரு வேளை யாரோனும் அந்த ஏரியில் மண்கொட்டி நிரப்பி கட்டடம் கட்ட வந்தாலோ அல்லது குறிப்பிட்ட வனப்பகுதியின் குறுக்கே பெரிய அகலமான சாலையை போட வந்தாலோ அதனால் ஏற்படப்போகும் பாதிப்புகளை பொதுவெளியில் உள்ள மக்களால் சேகரிக்கப்பட்ட தரவுகளை வைத்தே அந்தத் திட்டம் வேண்டுமா வேண்டாமா என்பதை அறிவியல் பூர்வமாக நிர்ணயிக்க முடியும்.
ஆக தரவுகள் சேகரிப்பதுதான் இதன் நோக்கமா?
இல்லை. இதுபோன்ற தரவுகளை மக்கள் அறிவியல் மூலமாகச் சேகரிக்க வைப்பது மக்களுக்கும் அதன்மூலம் அறிவியல் சார்பான புரிதலை ஏற்படுத்தவும் தான். அவர்கள் சேகரிக்கும் தரவுகளைப் பொதுத்தளத்தில் பதிவிட ஊக்குவிக்கும் போது, அதன்மூலம் மிகப்பெரிய ஒரு கடலில் நாம் போட்ட துளியும் இருக்கிறதென்று அவர்கள் உணர்வார்கள். அது அறிவியல் மனப்பான்மையோடு அனைத்தையும் அணுகவேண்டுமென்ற சிந்தனையை அவர்களிடம் மேன்மேலும் அதிகரிக்கும்.
மக்கள் அறிவியல் தரவு சேகரிப்பதற்கான கருவி மட்டுமல்ல. நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது போன்றவற்றை மக்கள் புரிந்துகொள்ள உதவும் ஒரு செயல்முறை.
மக்கள் அறிவியல், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை புரிந்துகொள்ளவும் அதைக் கணிக்கவும்கூடப் பயன்படுமாமே! உண்மையாகவா?
சூழியல் சுட்டிக்காட்டிகளான பறவைகளுக்கு காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை வைத்து அவைகளோடு இவ்வுலகில் இருக்கும் நமக்கும் எந்த விதத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதை அறியலாம். பூமி சூடாதல், காலந்தவறி பெய்யும் மழை, பனி, உயரும் கடல் மட்டம் போன்றவை பறவைகளையும் அவற்றின் வாழிடங்களையும் வெகுவாக பாதிக்கிறது.
வெப்பநிலை உயர்வால் உலகில் உள்ள வனப்பகுதிகளில் வசிக்கும் பல பறவைகள் பாதிப்படைந்துள்ளன. வெகுதூரத்தில் இருந்து வலசை வரும் பறவைகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள. உதாரணமாக ஒரு பழவுண்ணிப் பறவை வகை அது அது வலசை சென்ற இடத்தில் இருந்து கிளம்பி கூடமைக்கும் இடத்திற்கு செல்கிறது. அவ்வேளையில் அங்கே அவை உண்ணும் ஒரு பழ மரம் காலந்தவறி முன்னமே பூத்து காய்த்து பழுத்து ஓய்ந்து விடுகிறது. அப்போது அங்கு வரும் அப்பறவைகளுக்கு போதுமான உணவு கிடைக்காமல் போகலாம். அவை அங்கே செல்வது கூடமைத்து தம் இனத்தைப் பெருக்க. ஆனால் போதிய உணவு இல்லாததால் சில பறவைகள் கூடமைகாமல் போகலாம், அப்படியே கூடமைத்தாலும் குஞ்சுகளுக்கு சரிவர உணவு கிடைக்காமல் அவை இறந்து போகலாம்.
ஒரு பகுதிக்கு ஒரு வகையான பறவை வலசை வரும் நாள் அல்லது வாரம் அதே போல அவை அந்த இடத்தை விட்டு கிளம்பும் நாள் அல்லது வாரம் என்பது மிகவும் முக்கியமான தரவு. இதை பல பறவையாளர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக பதிவு செய்து பொதுவெளியில் உள்ளிடும் போது இது ஒரு முக்கியமானத் தரவாகும். இந்தத் தரவுகள் மூலமாக ஒரு பறவை ஓரிடத்தில் எத்தனை நாட்கள் தங்குகின்றன என்பது தெரியும். அதேபோல் இதற்குமுன் எத்தனை நாட்கள் தங்கியிருந்தன என்பதும் தெரியும். இந்தக் காலகட்டம் தற்போது மாறுபடுகிறது. அதற்குக் காரணம் அந்த இடத்திலிருக்கும் தட்பவெப்ப நிலையில் நடக்கும் மாற்றங்கள். அந்த மாற்றங்களுக்குக் காரணம் காலநிலை மாற்றமா என்பதை ஆராய முடியும். மக்கள் தரவுகளாகப் பதிவேற்றும்போது அதைவைத்து ஆய்வு மாதிரி ஒன்றை உருவாக்கி அந்தப் பகுதிகளில் காலநிலை மாற்றத்தால் என்னென்ன விளைவுகள் எதிர்காலத்தில் ஏற்படுமென்றுகூடக் கணிக்கமுடியும். அதற்கு மக்கள் அறிவியல் உதவும்.
இதுமாதிரியான தரவுகளை மக்கள் பதிவிட்டதன் மூலமாகக் கார்னெல் பல்கலைக்கழக (Cornell University) ஆய்வாளர்கள் தற்போது காலநிலை மாற்றத் தால் ஏற்படும் பாதிப்பை கணிக்கின்றனர். வலசைகள் முன்பு எப்படியிருந்தன, இப்போது எப்படி மாறியிருக்கின்றன, காலப்போக்கில் அது எப்படி மாறுபடும் என்பதையும் அவர்கள் இதன்மூலம் சொல்கிறார்கள். மக்கள் அறிவியல் குடிமக்களிடம் அறிவியல்சார்ந்த புரிதலை ஏற்படுத்துவதோடு நின்றுவிடாமல் ஆய்வுகளில் அவர்களையும் பங்கெடுக்க வைக்கின்றது. ஆம், அறிவியல் ஆய்வுகளில் மக்களும் பங்கெடுக்க முடியும். மக்கள் அறிவியலைக் கையிலெடுப்பதன் மூலம் ஆய்வாளர்கள் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை கணிப்பதற்கு மக்கள் உதவவேண்டும்.
சமீப காலங்களில் போலி அறிவியல் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அறிவியற்பூர்வமாக ஆதாரமற்றவைகளை அறிவியல் சாயம் பூசிப் பிரசாரம் செய்கிறார்களே! அதை எப்படி அணுகுவது?
இப்போதில்லை, இந்த மாதிரியான பிரச்னைகள் ஆரம்ப காலத்திலிருந்தே இருந்துவருகிறது. இன்னமும் பூமி தட்டை என்று சொல்லக்கூடியவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். இவை இருந்துகொண்டேயிருக்கும். இவற்றைக் கண்டு சினங்கொண்டு, மிரண்டு, மன அழுத்தத்தில் அமர்ந்துவிடக்கூடாது. சொல்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். காலநிலை மாற்றமே பொய்யென்று சொல்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். அமெரிக்காவின் ஆகப்பெரிய இரண்டு கட்சிகளும் தற்போது சண்டையிட்டுக் கொள்வதே இதுகுறித்துத்தானே. தெரியாமல் பேசுபவர்களுக்குச் சொல்லிப் புரியவைக்கலாம். தெரிந்தே அரசியல் ஆதாயத்திற்காகப் பேசுபவர்களைக் கண்டுகொள்ளாமல் கடந்துசென்றுவிட வேண்டும். காலப்போக்கில் அவையெல்லாம் நீர்த்துப்போகும். அதைக்கண்டு பயப்பட வேண்டியதில்லை.
ஆனால், ஒரு விஞ்ஞானி அமைதியாக இருந்துவிடக் கூடாது. அவர்கள் சொல்வதிலிருக்கும் உண்மைத்தன்மையை ஆராயவேண்டும். காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள் மட்டுமில்லை, அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவரகளுமே இதில் வாய்திறந்து பேசவேண்டும். அதுமாதிரியான போலி அறிவியல்களைத் தக்க ஆதாரங்களோடு போட்டுடைக்க வேண்டும். ஆராய்ச்சியாளர்களாக அது அவர்களுடைய கடமை.
இந்தப் போலி அறிவியல் சூழலியல் பாதுகாப்பையும் பாதிக்கிறதா! மக்களிடம் பரவிக் கொண்டிருக்கும் இதுமாதிரியான விஷயங்களைக் கலைந்து உண்மைகளை எப்படிக் கொண்டுசெல்வது?
அறிவியல்பூர்வ மனப்பான்மை என்பது ஒரு சமுதாயத்திற்கு மிக முக்கியமானது. எதையும் பகுத்தறியும் திறன் சமுதாயத்தில் வளரவேண்டும். அது நம்மிடம் மிகக் குறைவாகவே இருந்தது. தற்போதும் அப்படித்தான் இருக்கிறதென்றாலும் ஓரளவுக்கு அது மாறிவருகிறது. ஒருவர் அறிவியலுக்குப் புறம்பான கருத்தைச் சொல்லும்போது பெரும்பாலானவர்கள் அவரைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். மக்கள் மத்தியில் அறிவியல் பார்வை வளர்ந்து வருகிறது. முன்பே சொன்னது போல் மக்கள் அறிவியல் மூலமாகவும் அறிவியல்பூர்வ மனப்பாங்கை வளர்த்தெடுக்க முடியும். அறிந்தவர்கள் அனைவரும் இதற்காக உழைத்துக் கொண்டே இருந்தால் போதும் அவை தானாக நீர்த்துப்போய்விடும்.
2.0 படம் பற்றிய உங்கள் கருத்து…
நான் அந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை. பலர் சொல்வதை வைத்தும் அப்படத்தைப் பற்றிய கட்டுரைகளை படித்ததை வைத்தும் தான் சொல்கிறேன்.
ஆய்வாளர்கள் ஆண்டுக்கணக்கில் உழைத்துக் கண்டுபிடிக்கும் விஷயங்களை இதுபோன்ற அறிவியல் அடிப்படையற்ற திரைப்படங்கள் ஒரு நொடியில் தகர்த்துவிடுகின்றன. கைப்பேசி கோபுரங்களால் பறவைகள் அழிவதாக அந்தப் படத்தில் பேசியிருப்பது ஏற்கனவே பலமுறை பொய்ச் செய்தியென்று நிரூபிக்கப்பட்டு புதைக்கப்பட்ட விஷயம். அடிப்படைத் தேடுதல்கூட இல்லாமல், அதை மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வது அறிவியலுக்குப் புறம்பானது.