பாறைகளில் பல்லுயிரியம் – அரிட்டாப்பட்டி பல்லுயிர் அருமரபுக் களம்
அது ஒரு ஜனவரி மாதக் காலை நேரம். அகலப்படுத்தப்படாத அந்த அருமையான கிராமத்து தார் சாலையின் வழியே வண்டி ஆடி அசைந்து அரிட்டாப்பட்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இருபுறமும் புதர்க்காடுகள், எதிரே ஒரு மலைத்தொடர். ஆனால், அந்த மலையில் மரங்கள் இல்லை. பாறைகள் மட்டுமே காணப்பட்டன. அங்கு என்னைப் போக வைத்தது ஒரு பறவை. லகுடு என்றழைக்கப்படும் Laggar Falcon (Falco jugger).

கிராமத்தை அடைந்தவுடன், அந்தப் பகுதியில் உள்ள பறவை ஆர்வலர் ரவிச்சந்திரனும், ஒரு வயதான பூசாரி வீரணனும் சேர்ந்துகொண்டனர். அந்த இடத்தைப் பற்றியும், அங்குள்ள பறவைகள் பற்றியும் விவரித்துக்கொண்டே வந்தனர். சூரச் செடியிலிருந்த சூரப்பழங்களைக் காட்டி, சூரமாரிகள் (Rosy Starling) இவற்றை விரும்பிச் சாப்பிடும் என்று குறிப்பிட்டனர். இதனால்தான் இப்பறவைகளுக்கு இந்தப் பெயர் வந்திருக்குமோ? என்று ஆச்சரியத்துடன் இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாலும் எனது கேள்விகள் எல்லாம் நான் தேடிவந்த பறவையைப் பற்றி மட்டுமே இருந்தன. அந்தப் பறவையை எங்கே பார்க்கலாம்? எந்த நேரத்தில் எளிதில் பார்க்கலாம்? உங்கள் ஊரில் அதன் பெயர் என்ன? போன்ற கேள்விகளை அந்தப் பெரியவரிடம் கேட்டேன். லகுடு என்று சிலர் சொன்னாலும், இதை நாங்கள் வலசாரை என்றுதான் சொல்லுவோம் என்றார். பேசிக்கொண்டே வெட்டவெளியை அடைந்தோம். எங்களுக்கு எதிரே கம்பீரமாக உயர்ந்தோங்கி நின்றுகொண்டிருந்த மரங்களற்ற மலையை அவர்கள் கூர்ந்து நோக்கிவிட்டு, அதோ வலசாரை அங்க உக்காந்துகிட்டு இருக்கு என்றனர். என் கண்ணுக்கு எதுவும் புலப்படவில்லை. இருகண்நோக்கியை வைத்துத் துழாவியும் பயனில்லை. பிறகு அது அமர்ந்திருக்குந்த இடத்திற்கு அருகில் உள்ள கரிய திட்டுகளையும், வெள்ளையான எச்சத் திட்டுகளையும் சுட்டிக்காட்டி அடையாளம் காட்டிய பிறகுதான் அது இருக்குமிடம் எனக்குத் தெரிந்தது. எதோ ஒரு சிறு புள்ளியாக இருந்ததை இருகண்நோக்கியால் கண்டோம். கண்டும் என் மனம் நிறையவில்லை. சரி, பறக்கும்வரை அங்கேயே இருப்போம் என தரையில் அமர்ந்துவிட்டோம். பூசாரி வீரணன், அவர்கள் வயலில் நாற்று நடும்போது பாடும் ஒரு பாட்டை பாடிக் காண்பித்தார்.
“உள்ளான் உழுது வர,
ஊர்க்குருவி நாத்து அரிக்க,
நாரை பரம்படிக்க,
நட்டு வாம்மா குட்டப்புள்ள….”
அதாவது, ஓர் உழவன் உள்ளான் தனது அலகால் சேற்றைக் குத்துவதுபோல உழ வேண்டும், ஊர்க்குருவிபோல சுறுசுறுப்பாக நாற்றுகளைப் பிரித்து நட வேண்டும், நாரை பொறுமையாக நடப்பதுபோல பரம்பு அடிக்க வேண்டும் என்பதுதான் அதன் அர்த்தம் என்று விளக்கினார். அந்த அருமையான பாட்டையும், விளக்கத்தையும் கேட்டுக்கொண்டிருக்கும் போதே, வலசாரை பறக்குது என்றார் ரவி.

எங்களுக்குப் பின்னாலிருந்து வந்த காலை நேரச் சூரியக் கதிர்கள் அந்த மலையைப் பிரகாசமாக்கிக்கொண்டிருந்தது. இதற்கு முன் அந்தப் பறவை இருந்த இடத்தின் அருகில் பார்த்தபோது வலசாரை தெரியவில்லை. ஆனால், அந்தப் பறவையின் வில் போன்ற வடிவிலான நிழல் செந்நிறப் பாறையில் தெரிந்தது. அந்த நிழல் மெல்லப் பறந்து சென்றுகொண்டிருந்தது. Falcon வகைப் பறவைகளுக்கு வல்லூறு, ராஜாளி என்று சொன்னாலும் வில்லேந்திரம் என்றும் அவற்றை அழைப்பதுண்டு. இறக்கைகளை ஒரு கோணத்தில் மடக்கிப் பறக்கும்போது அவற்றின் வடிவம் வில்போலத் தோன்றும். அந்த வலசாரையின் நிழலைப் பார்த்தபோது எனக்கு அந்த வார்த்தைதான் நினைவுக்கு வந்தது. பறக்கும் திசையை மாற்றியவுடன் பாறையின் பின்னணியில் வலசாரையின் உடலில் உள்ள நிறங்களும், அடையாளங்களும் தெரிந்தன. பாறையின் மேலே மெல்ல வட்டமிட்டுப் பறந்து செல்லச்செல்ல நீல வானத்தின் பின்னணியில் வலசாரை அழகாகக் காட்சியளித்தது.



இது ஓர் இரைக்கொல்லிப் பறவை வகை (Raptor). பல்லி, ஓணான், வெட்டுக்கிளி, வண்டு போன்ற பெரிய பூச்சிகள், சிறு பறவைகள், புறாக்கள், எலிகள் முதலியவற்றை வேட்டையாடி உண்ணும். வறண்ட வெட்டவெளிப் பகுதிகளில் பொதுவாகத் தென்படும். விவசாய நிலங்கள், கிராமப்புறங்கள், சில வேளைகளில் நகர்ப்புறங்களில் மின் கம்பிகளின் உச்சியிலும், கட்டடங்களின் மேலும் கூடத் தென்படும். இவற்றின் வாழிடங்கள் குறைந்து போவதாலும், இரை உயிரினங்கள் இல்லாமல் போவதாலும், குறைந்து போவதாலும், இந்தப் பறவை அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் (Near Threatened) சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள நாடுகளில் (இலங்கை நீங்கலாக), ஆப்கானிஸ்தான், மியன்மார் ஆகிய நாடுகளில் இவை தென்படுகிறது. இந்தியாவின் வட பகுதிகளில் (குறிப்பாக ராஜஸ்தான், குஜராத்) பல இடங்களில் பரவியும், தென்னிந்தியாவில் ஆங்காங்கே சிதறியும் தென்படுகின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டில் இதுவரை சுமார் ஐந்து இடங்களில் மட்டுமே இவை இருப்பதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவை ஆண்டு முழுவதும் தென்படுவது அரிட்டாப்பட்டி மலைப்பகுதியில்மட்டும்தான். ஆகவே, இந்தப் பகுதி முக்கியத்துவம் பெறுகிறது. இது மட்டுமல்ல கருங்கழுகு, வெள்ளைக்கண் வைரி, பெரிய ராஜாளி, வல்லூறு, சிவப்பு வல்லூறு, தேன் பருந்து, பெரிய புள்ளிக் கழுகு, இந்தியப் புள்ளிக் கழுகு, வெண் தோள் கழுகு, விராலடிப்பான், பாறைக் கழுகு, செந்தலை வல்லூறு, இரண்டு வகையான பூனைப் பருந்துகள், கருந்தோள் பருந்து, கரும்பருந்து, செம்பருந்து, பாம்புக் கழுகு, காட்டுப் பாம்புக் கழுகு, சிறிய புள்ளி ஆந்தை, பூமன் ஆந்தை என சுமார் இருபது வகையான இரைக்கொல்லிப் பறவைகள் இங்கு பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவற்றில் சில வலசை வருபவை, சில அப்பகுதியிலேயே கூடமைத்து ஆண்டு முழுவதும் தென்படுபவை.
எதிர்பார்ப்புடன் பார்க்க வந்த பறவையைப் பார்க்க முடிந்தால் ஏற்படும் ஒரு பரவசத்திற்கு ஈடு இணையே இல்லை. அந்த மகிழ்ச்சியான மனநிலையுடனேயே அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பறவைகளையும் பார்த்துக்கொண்டிருந்தோம். அந்தப் பறவையைப் போலவே அது வாழுமிடத்தில் அமைந்துள்ள பாறைகளும் அழகாக இருந்தன. செங்குத்தாக உலக்கைப்போல இருக்கும் பாறை, கிண்ணம்போல வளைந்த பாறை, உருண்டையான பாறை, மனித முகம் போன்ற பாறை என விதவிதமான வடிவங்களில் பல பறைகளும், குன்றுகளும் இருந்தன. பல ஆண்டுகளுக்கு முன் ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் பயணம் செய்தபோது இது போன்ற பல அழகிய பாறைக் குன்றுகளைக் கண்டதுண்டு.
மேகங்களைப் போலவே, பாறைகளைப் பார்த்து, நம் கற்பனைக்கு ஏற்ப அவற்றின் உருவத்தை அனுமானிப்பது ஒரு அலாதியான பொழுதுபோக்கு. நம்மில் பலர் இதைச் செய்திருக்கலாம். மேகங்கள் கலைந்து போகும், ஆனால், பாறைகள் அப்படியல்ல. ஒரு பாறையை ஒரு கோணத்தில் பார்த்தால் ஒருவிதமாகவும், அதைச் சுற்றிவந்தால் அதே பாறை, வெவ்வேறு வடிவங்களில் வேறு உருவமாகவும் இருப்பதைக் காணலாம். காலையிலும், மாலையிலும் சூரிய ஒளியின் வீச்சு மாறுவதால் அவற்றின் மேலே படும் ஒளியின் விளைவால் ஒரு பாறை பலவித அழகிய தோற்றங்களைக் கொடுக்கும். இதுபோன்ற பாறைகள் சூழ்ந்த இடங்கள், பல உயிரினங்களுக்கு வாழிடமாகிறது, நம்மில் பலருக்கு இயற்கை அழகை அள்ளித்தரும் இடமாகத் தெரிகிறது. ஆனால், சிலருக்கோ இவை வெறும் தேவையற்ற கல்லாகவும், பணம் கொட்டும் கிரானைட் குவாரிக்கான இடமாகவுமே தெரிகிறது.




பாதுகாக்கப்படவேண்டிய இடங்கள் மரங்கள் அடர்ந்த காடுகள் மட்டுமே அல்ல. வெட்டவெளிகளும், புதர்க்காடுகளும், புல்வெளிகளும், பாறைகள் சூழ்ந்த பகுதிகளும்தான். இதுபோன்ற வாழிடங்களை மட்டுமே சார்ந்திருக்கும் உயிரினங்கள் பல இங்குள்ளன. பரந்த புல்வெளிகளில் மட்டுமே தென்பட்டவை கானமயில்கள் (Great Indian Bustard), ஆனால் தற்போது அவை, இது போன்ற வாழிடங்கள் இல்லாமல் போனதால் தமிழ் நாட்டில் முற்றிலுமாக அற்றுப்போய்விட்டன. ஆகவே, எஞ்சியிருக்கும் இதுபோன்ற கண்டுகொள்ளப்படாத வாழிடங்களைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். அதற்கு, அரிட்டாப்பட்டி பாறைசூழ் பகுதிகளும், அதனைச் சார்ந்த உயிரினங்களும் அவ்வூர் மக்களால் காப்பாற்றப்பட்டு, தமிழக அரசால் (உயிரியப் பன்முகச் சட்டம் 2002இன் கீழ்) தமிழகத்தின் முதல் பல்லுயிர் அருமரபுக் களமாக (Biodiversity Heritage Site) அறிவிக்கப்பட்டது ஒரு நல்ல முன்னுதாரணமாகும்.
அரிட்டாப்பட்டி எனும் பல்லுயிர்க் களம்! எனும் தலைப்பில் 2-12-2022 தி இந்து தமிழ் திசை நாளிதழில்
வெளியான கட்டுரையின் மறு பதிப்பு. (இங்கே காண்க)
இக்கட்டுரையை ஒலி வடிவில் கேக்க இங்கே கிழ்க்கண்ட உரலியை சொடுக்கவும்
https://open.spotify.com/embed/episode/2q1hA22bQgerMthTao7WZp?utm_source=generator
திருவண்ணாமலை மாவட்டப் பறவைகள்
திருவண்ணாமலைக்கு நான் முதன்முதலில் சென்றது 4 டிசம்பர் 2009இல். இயற்கை பாதுகாப்பு, இயற்கைக் கல்வி, மாற்றுக் கல்வி முதலிய செயல்பாடுகளில் ஈடுபட்டுவரும் ‘தி பாரஸ்ட் வே ட்ரஸ்ட் (The Forest Way Trust)’ அமைப்பின் கோவிந்தா, லீலா, சிவக்குமார், அருண் மற்றும் அவர்களது குழுவினரைச் சந்திக்கும் வாய்ப்பு அப்போதுதான் வாய்த்தது. அருணகிரி பூங்காவில், அவர்கள் பராமரிக்கும் அந்தப் பகுதியில் இயற்கையாக வளரும் மரக்கன்றுகளின் நாற்றுப்பண்ணையைக் கண்டேன். திருவண்ணாமலை ‘சீசன்’ நேரத்தில் குறிப்பாக அங்கு வருவோர்களால் செயற்கையாகவும், விபத்தாகவும் ஏற்படும் தீயை அணைக்கும் தன்னார்வலர்களையும் அங்கு சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பூங்காவில் திருவண்ணாமலைப் பகுதியில் பொதுவாகத் தென்படும் பல பாலூட்டிகள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், தாவரங்கள், மேலும் பல இயற்கையின் விந்தைகளை (அத்திப்பழத்தின் உள்ளே வாழும் அத்திக் குளவியின் வாழ்வியல் விளக்கும் ஓவியங்கள் போன்ற) கடப்பா கல்லில் வரையப்பட்டிருந்ததை வியப்புடன் பார்த்து ரசித்தேன். இவை அனைத்தும் இந்தக் குழுவில் ஒருவரான ஓவியரும், பறவை ஆர்வலருமான சிவக்குமார் தீட்டியவை. பின்னர், மாற்றுக் கல்வியை (Alternative Education) அடிப்படையாக வைத்து நடத்தப்பட்டு வரும் “மருதம் பண்ணைப் பள்ளிக்குச் (Marudam Farm School)” சென்றேன். அங்கு மரத்தின் மீது ஏறும், மண்ணில் விளையாடும், தான் சாப்பிட்ட தட்டை அரப்புத்தூள் கொண்டு தானே கழுவி வைக்கும் மாணவர்களையும் கண்டேன். அன்று கோவிந்தா, சிவக்குமாருடன் அப்பகுதியில் உள்ள பறவைகளைப் பார்த்ததும், ஒரு சிறிய குளத்தில் பல வகையான தட்டான்களையும், ஊசித்தட்டான்களையும் பார்த்து ரசித்ததும் இன்றும் நினைவில் உள்ளன.
அடிக்கடி இவர்களையெல்லாம் சந்திக்கவோ, அப்பகுதிக்குச் செல்லவோ வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் எங்களை அவ்வப்போது மின்னஞ்சல் மூலமும், கைபேசியின் மூலமும் தொடர்பில் இருக்கச் செய்பவை பறவைகளே! பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு, ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு, தமிழகப் பறவை ஆர்வலர்கள் சந்திப்பு போன்ற நிகழ்வுகளில் திருவண்ணாமலை பகுதிகளில் பார்க்கப்பட்ட பறவைகள் குறித்த கருத்துப் பரிமாற்றங்கள், அவற்றின் அடையாளம் காணும் முயற்சி போன்ற பறவைகள் சார்ந்த செயல்கள் எங்களை மீண்டும் ஒன்றுசேர்த்தன. ஒரு பொறுப்பான பறவை ஆர்வலர் தங்கள் பகுதிகளில் தென்படும் பறவைகளைப் பார்ப்பதோ, படமெடுப்பதோ, ரசிப்பதோடு மட்டுமல்லாமல், பறவைகள் குறித்த (வகை, எண்ணிக்கை போன்ற) தகவல்களை eBird போன்ற மக்கள் அறிவியல் திட்டங்களுக்கும் பங்களிப்பார்கள். இதையேதான் ‘தி பாரஸ்ட் வே’ அமைப்பைச் சேர்ந்தவர்களும், மருதம் பண்ணைப் பள்ளி மாணவர்களும் செய்கின்றனர். இப்படிப் பதிவு செய்யப்படும் பறவைகளின் தகவல்கள் அனைவருக்கும், குறிப்பாக அந்தப் பறவைகளுக்கும், அவற்றின் வாழிடத்தைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.
இந்தக் குழுவினர் பறவைகளைப் பார்த்து, அவற்றைப் பதிவு செய்வதை மட்டுமே செய்யவில்லை. மேலும் இவர்கள் திருவண்ணாமலையில் உள்ள பல இயற்கை ஆர்வலர்கள், நிறுவனங்கள், வனத்துறையினர், பொதுமக்கள் என பலருடன் சேர்ந்து அப்பகுதிக்குச் சொந்தமான மரங்களை மட்டுமே வளர்த்து, சீரழிந்த காட்டுப்பகுதிகளை மீளமைத்து வருகின்றனர்.ர். இதனால், பல வகையான உயிரினங்களுக்கான வாழிடங்களை மீண்டும் உருவாக்கித் தந்திருக்கின்றனர். இதன் விளைவாகப் பலவிதமான பறவைகளும் இப்பகுதிக்கு மீண்டும் வர ஆரம்பித்திருக்கின்றன. இந்த நல்ல மாற்றங்கள் அனைத்தையும் நுணுக்கமாகப் பதிவும் செய்திருக்கிறார்கள். இதை அருண், ‘தி இந்து தமிழ் – உயிர்மூச்சு’ இணைப்பிதழில், 8 ஜனவரி 2022இல் வெளியான “இயற்கை தந்த தனித்துவப் பரிசு” எனும் கட்டுரையில் விரிவாக விளக்கியிருக்கிறார்.
சூழலில் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதும், அவற்றை முறையாகப் பதிவுசெய்வதும் பல்லுயிர்ப் பாதுகாப்பில் ஒரு முக்கியமான அங்கமாகும். நாம் வாழும் இடத்தைச் சுற்றி என்ன வகையான தாவரங்கள், உயிரினங்கள் உள்ளன என்பதை நாம் அனைவரும் அறிந்து வைத்திருப்பது அவசியம். இந்த அமைப்பினர், திருவண்ணாமலை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் (மலைப்பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீ. சுற்றளவில் உள்ள பகுதிகளில்) தென்படும் பல வகையான பறவைகளைத் தொடர்ந்து கண்காணித்து அதை ஒரு சிறந்த ஆவணமாக Birds of Tiruvannamalai என்னும் ஒரு அருமையான கையேடாக 2018இல் வெளியிட்டனர். அழகிய படங்களுடனும், ஓவியங்களுடனும் மறுசுழற்சி செய்யப்பட தாளில் அச்சிடப்பட்டிருந்தது இந்தப் பறவைக் கையேடு.

ஆங்கிலக் களக் கையேட்டில் 208 வகையான பறவைகளைப் பற்றிய விவரங்கள் உள்ளன. ஆனால், அந்த நூல் வெளிவந்த பின் மேலும் சில பறவை வகைகளை திருவண்ணாமலை மாவட்டத்தில் முதன்முதலில் முறையாகப் பார்த்து பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பறவைகளில் சிலவற்றைப் பற்றிய விவரங்களும் இந்தத் தமிழ் கையேட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆகவே இது திருவண்ணாமலை அதன் சுற்றுப் பகுதியில் உள்ள பறவைகள் மட்டுமல்லாமல் அந்த மாவட்ட அளவில் தென்படும் 254 வகையான பறவைகளைப் பற்றிய விரிவான குறிப்புகள் அடங்கிய ஒரு களக் கையேடு ஆகும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரையில் கிட்டத்தட்ட 284 பறவை வகைகள் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முறையாக எனில் ஒரு குறிப்பிட்ட வகையான பறவை எந்த ஒரு சந்தேகமும் இன்றி அடையாளம் காணப்பட்டு, அந்தப் பறவை வகைகளின் ஒளிப்படம், குரலொலி யாவும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த இரண்டு வகையான ஆதாரங்களும் இல்லாத நிலையில், அந்த வகைப் பறவையை, அனுபவமுள்ள பல பறவை ஆர்வலர்களால் பதிவு செய்யப்பட்டு, அவற்றின் அடையாளங்களை விரிவாக விவரித்த பதிவுகள் உள்ள நிலையில், அவற்றின் இருப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகிறது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்டவை 284 வகையான பறவைகள். இந்த எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். அதற்கு இந்தக் கையேடு உதவும்.
இந்தக் கையேட்டின் ஆசிரியர்களில் ஒருவரான ஓவியர் சிவக்குமார் திருவண்ணாமலையின் பல இடங்களுக்குச் சென்று பறவைகளை மட்டும் பார்த்து பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் என் மனதிற்குப் பிடித்த ஒரு அருமையான வேலையையும் செய்துகொண்டிருக்கிறார். அது, திருவண்ணாமலை மாவட்டப் பகுதிகளில் உள்ள பறவைகளின் வட்டாரப் பெயர்களையும் ஆவணப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார். இந்தப் பரந்த தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு குறிப்பிட்ட பறவைக்கு ஒவ்வொரு பெயர் இருக்கும். இது நம் மொழி வளத்தையும், உள்ளூர் மக்களின் கற்பனை வளத்தையும் காட்டுகிறது. Indian Pitta என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பறவைக்கு, தமிழ்நாட்டில் பொதுவாக ஆறுமணிக் குருவி என்ற பெயர் உள்ளது. எனினும் தமிழ்நாட்டில் இதற்கு தோட்டக் கள்ளன், காச்சுள், காசிக்கட்டி குருவி, பொன்னுத் தொட்டான், பொன்னுக் குருவி, காசு கருப்பட்டி என இடத்திற்கு இடம் ஒவ்வொரு பெயர் உண்டு. முறையாக ஆய்வு செய்தால் இந்தப் பறவைக்கே இன்னும் பல இடங்களில் பல பெயர்கள் இருப்பதைக் கண்டுபிடிக்கவும் முடியும். திருவண்ணாமலைப் பகுதியில் வழங்கப்படும் பறவைகளின் சில பெயர்களையும் (கடா நாரை – pelican, தித்தித்தான் குருவி – lapwing, கப்புகாடை – nightjar) இந்தக் கைகேட்டில் காணலாம். இது போல பறவைகளின் பல்வேறு வட்டாரப் பெயர்களை ஆவணப்படுத்துவது பறவை ஆர்வலர்களின் மிக முக்கியமான கடமையாகும்.
தமிழ்நாட்டிலேயே அதிகப் பரப்பளவைக் கொண்ட மாவட்டங்களில் திருவண்ணாமலையும் ஒன்று (6188 சதுர கி.மீ.). புதர்க்காடுகள், சமவெளிகள், நீர்நிலைகள், அடர்ந்த வனப்பகுதிகள், மலைப்பாங்கான பகுதிகள், விளைநிலப் பகுதிகள் என பல வகையான வாழிடங்களைக் கொண்டது இம்மாவட்டம். கிழக்கு மலைத்தொடர்ச்சியின் ஒரு பகுதியான கவுத்தி-வேடியப்பன் மலை, ஜவ்வாது மலை, திருவண்ணாமலை ஆகிய முக்கியமான வாழிடங்களைக் கொண்டுள்ளது. இப்பகுதிகளின் பல்லுயிர்ப் பன்மையம் அதிகம் அறியப்படாதது. ஆகவே, இன்னும் பல பறவை வகைகளை இந்த மாவட்டத்தில் இருந்து பதிவு செய்வதற்கு இந்தக் களக் கையேடு நிச்சயமாக உதவும். இந்திய அளவில், மாநில அளவில் பல பறவைக் கையேடுகள் இருந்தாலும் ஒவ்வொரு வட்டாரப் பகுதிகளுக்கும் பறவைகளின் பட்டியலும், அவை அப்பகுதிகளில் எங்கெங்கு, எவ்விதமான வாழிடங்களில் தென்படுகின்றன போன்ற விவரங்கள் அடங்கிய கையேடுகள், பட்டியல்கள் மிகவும் அவசியம். அதுவும் வட்டார மொழிகளிலேயே இருப்பது அப்பகுதி மக்களிடையே பறவைகளைப் பற்றியும், அவற்றின் வாழிடம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த உதவும். இந்த விழிப்புணர்வால்தான், பறவைகளின் வாயிலாக இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்கிற எண்ணமும், கரிசனமும் மேலோங்கும். இதனாலேயே தி பாரஸ்ட் வே அமைப்பினரின் இந்த “திருவண்ணாமலை மாவட்டப் பறவைகள் – அறிமுகக் களக் கையேடு” ஒரு முக்கியமான ஆவணமாகிறது. இந்தக் களக் கையேடு, இந்த மாவட்டத்தில் மேலும் பல பறவை ஆர்வலர்களையும். இயற்கையைப் பாதுகாக்கும் போராளிகளையும் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
—
இந்த நூலை வாங்க அணுகவும்: திரு. வினோத் ஷங்கர் (Vinod Shankar – 9840812557), The Forest Way.
—
திருவண்ணாமலை மாவட்டப் பறவைகள் நூலுக்கு எழுத்திய அணிந்துரை. இதன் சுருக்கமான வடிவம் தி இந்து உயிர்மூச்சு இணைப்பிதழில் 05 Nov, 2022 அன்று “சாலிம் அலி பிறந்த மாதம்: வட்டார மொழிக் கையேடுகளின் அவசியம்” எனும் தலைப்பில் வெளியானது (உரலி இங்கே).
நீலகிரி நெட்டைக்காலி Nilgiri Pipit
தமிழ்நாட்டின் அற்றுப்போகும் அபாயத்தில் உள்ள பறவைகள்
நீலகிரி நெட்டைக்காலி Nilgiri Pipit Anthus nilghiriensis – Vulnerable

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளின் உச்சியில் (சுமார் 1500- 2000மீ உயரம் வரை) உள்ள புல்வெளிகளில் மட்டுமே தென்படும் ஓரிடவாழ்வி. வெளிர் மஞ்சள் நிற உடலில் பழுப்பு வரிகளைக் கொண்டிருக்கும் சிறிய பறவை. புற்களினுடே நடந்து அல்லது ஓடிச் சென்று இரைதேடும்.
மலையுச்சிப் புல்வெளிகளில் சாலை அமைத்தல், அதிக அளவில் தீத்தடுப்பு வெளிகள் (Fire lines) அமைத்தல், பரவும் வந்தேறித் தாவரங்களின் (Invasive Alien Plants) பெருக்கம், வாழிடம் துண்டாதல், சீரழித்தல் காரணமாக இவை ஒரு காலத்தில் காணப்பட்ட இடங்களில் இருந்து மறைந்தும், இப்போது இருக்கும் இடங்களிலும் மேற்சொன்ன காரணங்களால் எண்ணிக்கையில் குறைந்தும் வருகின்றன. மலையுச்சிகளில் நிலவும் காலநிலை மாற்றத்தினால் (Climate Change) ஏற்படும் பாதிப்புகளுக்கு ஆளாகக்கூடும்.
காஷ்மீர் பூச்சிபிடிப்பான் Kashmir Flycatcher
தமிழ்நாட்டின் அற்றுப்போகும் அபாயத்தில் உள்ள பறவைகள்
காஷ்மீர் பூச்சிபிடிப்பான் Kashmir Flycatcher Ficedula subrubra – Vulnerable

இமயமலைத் தொடரில் குறிப்பாக ஜம்மு காஷ்மிர் மற்றும் அதை ஒட்டிய பாகிஸ்தான் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யும் (சுமார் 1800-2300 மீ உயரத்தில்) இவை குளிர் காலத்தில் அங்கிருந்து தெற்கு நோக்கி வலசை வருகின்றன. தமிழ்நாட்டில் ஊட்டியை அடுத்த பகுதிகளில் இவை வலசை வரும் காலங்களில் பொதுவாகக் காணலாம். இவை மேலும் தெற்கு நோக்கி இலங்கைக்கு வலசை போகின்றன. இனப்பெருக்கம் செய்யும் இடங்களில் காடழிப்பு, வாழிடம் சீரழித்தல் மலையுச்சிகளில் நிலவும் காலநிலை மாற்றத்தினால் (Climate Change) ஏற்படும் பாதிப்புகளுக்குக் ஆளாகக்கூடும்.
சோலைச் சிட்டு White-bellied blue robin
தமிழ்நாட்டின் அற்றுப்போகும் அபாயத்தில் உள்ள பறவைகள்
சோலைச் சிட்டு White-bellied blue robin Sholicola albiventris – Vulnerable

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் மலையுச்சியில் உள்ள (1000மீ – 2200மீ) சோலைக் காடுகளிலும், பசுமை மாறாக் காடுகளிலும் மட்டுமே தென்படும் ஓரிடவாழ்வி. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் பாலக்காடு கனவாய்க்குக் தெற்கே உள்ள மலைப் பகுதிகளில் மட்டுமே தென்படும். நீலகிரி மலைப்பகுதியில் தென்படும் நீலகிரி சோலைச்சிட்டு (Nilgiri Blue Robin Sholicola major) ஒரு காலத்தில் இப்பறவையின் உள்ளினமாக (sub species) கருதப்பட்டது. ஆனால், மரபியல் சார்ந்த (Genetic) இனவரலாற்று (Phylogenic) ஆராய்ச்சியின் விளைவாக நீலகிரி சோலைச்சிட்டு தற்போது தனி இனமாக அறியப்படுகிறது.
இதன் உடல் முழுவதும் கரு நீல நிறத்திலும், வயிறும் வாலடியும் வெள்ளை நிறத்திலும், உடலின் பக்கவாட்டுப் பகுதி சாம்பல் நிறத்திலும் இருக்கும். கண்களில் சிவப்பு நிறம் இருக்கும். நெற்றியில் வெள்ளைக் கீற்று இருக்கும். சோலைச்சிட்டு பொதுவாக சோலைக்காடுகள் அதனை ஒட்டி அமைந்துள்ள காடுகளில் உள்ள ஓடையோரப் பகுதிகளில் தென்படும். இதன் குரல் இனிமையாக இருக்கும்.
இவற்றின் வாழ்விடங்களான சோலைக்காடுகள் மற்றும் அதனை அடுத்த பகுதிகள் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்காக (வனப்பகுதியில் சாலைகள் அமைத்தல், நீர்மின் திட்டங்கள், ஓரினத் தோட்டப் பயிர்களுக்காக வனப்பகுதிகள் திருத்தி அமைக்கப்படுதல் முதலான) திருத்தியமைக்கப்படுவதால் இவற்றின் வாழிடம் சீரழிவுக்குள்ளாகியும், ஆபத்துக்குள்ளாகியும் உள்ளது. ஆகவே இவற்றின் எண்ணிக்கை மெல்லக் குறைந்து வருகின்றது.
பொதிகைமலை சிரிப்பான் Ashambu Laughingthrush
தமிழ்நாட்டின் அற்றுப்போகும் அபாயத்தில் உள்ள பறவைகள்
பொதிகைமலை சிரிப்பான் Ashambu Laughingthrush Montecincla meridionalis – Vulnerable

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் தென் கோடியில் உள்ள பொதிகை மலைப் பகுதியின் உச்சிகளில் மட்டுமே தென்படும் அரிய ஓரிடவாழ்வி. இவை குரலெழுப்பும் விதம் சிரிப்பதைப் போலிருப்பதால் இப்பெயர் பெற்றன. இதற்கு முன் இவை Kerala Laughingthrushன் (கேரளா சிரிப்பான்) உள்ளினமாகக் கருதப்பட்டது. எனினும் மரபியல் சார்ந்த, இனவரலாற்று ஆராய்ச்சியின் விளைவாக இது தற்போது தனி இனமாக அறியப்படுகிறது.
இவை மலையுச்சிப் பகுதிகளில் உள்ள சோலைக்காடுகளில், மழைக்காடுகளில், அதனையடுத்த தேயிலை தோட்டங்கள் முதலிய பகுதிகளில் தென்படுகின்றன. குறுகிய பரவல், வாழிட இழப்பு மற்றும் சீரழித்தல், மலையுச்சிகளில் நிலவும் காலநிலை (Climate Change) மாற்றம் ஆகிய காரணங்களால் இவை அதிக பாதிப்புகளுக்கு ஆளாகக்கூடும்.
மஞ்சள்தொண்டை சின்னான் Yellow-throated Bulbul
தமிழ்நாட்டின் அற்றுப்போகும் அபாயத்தில் உள்ள பறவைகள்
மஞ்சள்தொண்டை சின்னான் Yellow-throated Bulbul Pycnonotus xantholaemus – Vulnerable

இந்தியாவில் மட்டுமே குறிப்பாக, தென்னிந்தியாவில் மட்டுமே தென்படும் ஓரிடவாழ்வி. புதர்களும், கரடு முரடான பாறைகளும் நிறைந்த இடங்களிலும் அதனையடுத்த வனப்பகுதிகளிலும் இவை அதிகம் தென்படும். அத்தி மரங்கள் பழுத்த நிலையில் அவற்றை உண்ண இப்பறவைகள் வருவதைக் காணலாம்.
தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் (பெரும்பாலும் அடிவாரப் பகுதிகளில்) கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் (செஞ்சிக் கோட்டையில்) இவற்றை எளிதில் காணலாம். புதர்க்காடுகளை அழித்தல், பாறைகளை வெடி வைத்துத் தகர்த்தல், வாழிடத்தைச் சீரழித்தல் முதலான காரணங்களால் இவை எண்ணிக்கையில் குறைந்துவருகின்றன.
கருமீசை புல்குருவி Bristled Grassbird
தமிழ்நாட்டின் அற்றுப்போகும் அபாயத்தில் உள்ள பறவைகள்
கருமீசை புல்குருவி Bristled Grassbird Chaetornis striata – Vulnerable

உயரமான புற்களும், புதர்களும் உள்ள இடங்களிலும், புற்கள் உள்ள ஏரிகள், குளங்கள், சதுப்பு நிலப்பகுதிகளிலும் இவை தென்படுகின்றன. வட இந்தியாவில் தெராய் நிலப்பகுதிகளில் உள்ள புல்வெளிகளில் (இமய மலை அடிவாரப் பகுதி) இவற்றைப் பொதுவாகக் காணலாம். இந்தியத் துணைக்கண்டத்தில் மட்டுமே தென்படும் இவை, தமிழ் நாட்டிற்கு வலசை வருகின்றன. இவை இங்கே இருந்ததற்கான வரலாற்றுக் குறிப்புகள் இருந்தாலும் சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகே சென்னையை அடுத்த பகுதிகளில் இவை பதிவு செய்யப்பட்டன (பிப்ரவரி-ஏப்ரல் முதல் வாரம் வரை). இவை வாழுமிடங்களை விவசாயத்திற்காகத் திருத்தி அமைத்தல், புல்வெளிகளைச் சீரழித்தல், அபரிமிதமாகக் கால்நடைகளை மேய்த்தல் போன்ற காரணங்களால் இவை எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன.
பட்டைவால் புல்குருவி Broad-tailed Grassbird
தமிழ்நாட்டின் அற்றுப் போகும் அபாயத்தில் உள்ள பறவைகள்
பட்டைவால் புல்குருவி Broad-tailed Grassbird Schoenicola platyurus – Vulnerable

கர்நாடகா, கேரளா, தமிழ்நாட்டு ஆகிய மாநிலங்களில் பரவியிருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மலையுச்சி புல்வெளிகளில் மட்டுமே தென்படும் ஓரிடவாழ்வி. இவை பரவியிருக்கும் பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதாலும், ஓரினப்பயிர்களுக்காக அழிக்கப்படுவதாலும், பரவும் வந்தேறித் தாவரங்களால் வாழிடம் கொஞ்சம்கொஞ்சமாகச் சீரழிந்தும், சுருங்கியும் போவதாலும், வாழிடங்கள் துண்டாகிப்போவதாலும், இவை ஆபத்துக்குள்ளான பறவையாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
வெண்பிடரி பட்டாணிக்குருவி White-naped Tit
தமிழ்நாட்டின் அற்றுப்போகும் அபாயத்தில் உள்ள பறவைகள்
வெண்பிடரி பட்டாணிக்குருவி White-naped Tit Machlolophus nuchalis – Vulnerable

இந்தியாவில் மட்டுமே தென்படும் சிட்டுக்குருவியைவிடச் சிறிய பறவை. இவை ராஜஸ்தான், குஜராத் மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகள், கடைசியாக தமிழ்நாட்டில், குறிப்பாக சத்தியமங்கலம், மசினகுடி ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியற்றுப் பரவியுள்ளன. இவை இருக்கும் இடங்களில் கூட அரிதாகவே தென்படுகின்றன. இவை பொதுவாக புதர்க் காடுகளில் (வட மாநிலங்களில்), ஆற்றோர இலையுதிர்க் காடுகளிலும், புதர்க் காடுகளிலும் வசிக்கின்றன (தமிழ்நாட்டில்). அண்மையில் இவை சேலம், தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் காணப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வாழிடம் அழிக்கப்படுவதாலும், சீர்கெட்டுப் போவதாலும், ஏற்கனவே தொடர்ச்சியற்று பரவியிருக்கும் இவற்றின் வாழிடம் மென்மேலும் பல வகையான மேம்பாட்டுத் திட்டங்களால் துண்டாகிப் போவதாலும் எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன.