UYIRI

Nature writing in Tamil

Posts Tagged ‘point calimere

அஞ்சல் தலையும் பறவைகளும்-29

leave a comment »

அஞ்சல் பொருட்கள் சேகரிப்பில் Permanent Pictorial Cancellations (நிரந்தர வரைபட முத்திரை) என்று ஒன்று உண்டு. நாம் அனுப்பும் அஞ்சலில் தேதியும், இடமும் கொண்ட வட்ட வடிவ முத்திரையைத்தான் பொதுவாக இடுவார்கள். ஆனால் ஒரு சில சிறப்புமிக்க ஊர்களில் அவ்வூரில் புகழ்பெற்றவையாக விளங்கும் வழிபாட்டுத் தளங்கள், தொலைநோக்கி மையங்கள், காட்டுயிர்கள் போன்றவற்றை வரைபடமாக முத்திரையில் அச்சு செய்து, நாம் கேட்டுக்கொண்டால் அந்த முத்திரையை நமது கடிதங்களில் வைத்து அனுப்புவார்கள்.

எடுத்துக்காட்டாக, கோடியக்கரை அஞ்சலகத்தில் அங்குள்ள கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் வலசை வரும் அழகிய பூநாரையின் வரைபடம் உள்ள முத்திரை இருக்கும்.

கோடியக்கரை அஞ்சல் அலுவலகத்தில் இருக்கும் Permanent Pictorial Cancellation குறித்த அறிவிப்புப் பலகை.

அதுபோலவே களக்காடு அஞ்சல் அலுவலகத்தில், சிங்கவால் குரங்கு (சோலைமந்தி) உள்ள முத்திரை இருக்கும்.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்ஸ்லிபில் வரையாடு தலை கொண்ட முத்திரை இருக்கும். தமிழ்நாட்டில் மட்டும் 31 அஞ்சலகங்களில் இது போன்ற நிரந்தர வரைபட முத்திரைகள் இடப்படுகின்றன.

அண்மையில் அகமதாபாத் சென்றிருந்த போது சபர்மதி ஆசிரமம் சென்றிருந்தேன். அதனருகில் உள்ள அஞ்சலகத்திலிருந்து என் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் கடிதம் எழுதி அதில் சபர்மதி ஆசிரமம் கொண்ட முத்திரையை வைத்து அனுப்பினேன்.

காந்தி ஆசிரமம் வரைபடம் கொண்ட வரைபட முத்திரை

Written by P Jeganathan

November 29, 2023 at 9:00 am

கோடியக்கரை காட்டுயிர்ச் சரணாலயம்

leave a comment »

கோடியக்கரை காட்டுயிர்ச் சரணாலயம் (Point Calimere Wildlife Sanctuary)

ஊசிவால் சிரவிக் கூட்டம்

நாகப்படினம் மாவட்டத்தில் அமைந்துள்ள கோடியக்கரை காட்டுயிர் சரணாலயம் 1967ல் வெளிமான்களின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டது. இதன் மொத்தப் பரப்பு 17.26 சதுர கி.மீ. வெளிமான்களைத் தவிர, புள்ளிமான் (Spotted Deer), காட்டுப்பூனை, நரி, கீரி (Indian Grey Mongoose) முதலிய பாலுட்டிகளையும் இச்சரணாலயத்தில் காணலாம். இப்பகுதியின் கடலோர மணற்பாங்கான இடங்களில் பங்குனி ஆமைகளின் (Olive Ridley Turtle) முட்டையிடுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடற்பகுதியில் ஓங்கில்களையும் (Dolphins) அவ்வப்போது காணமுடியும். இச்சரணாலயத்தின் ஒரு பகுதியான வேதாரண்யம் சதுப்புநிலப்பகுதி சுமார் 48 கி.மீ. நீண்டு பரவியிருக்கிறது. முத்துப்பேட்டை-அதிராம்பட்டினம் பகுதியில் கடலோரமாக அலையாத்திக் காடுகள் பரவியுள்ளது. கோடியக்கரை சரணாலயமாக ஏற்படுத்தப்பட்ட இப்பகுதி 1988ம் ஆண்டு வேதாரண்யம் சதுப்புநிலப்பகுதியையும், தலைஞாயர் வனப்பகுதியையும் இணைத்து கோடியக்கரை காட்டுயிர் மற்றும் பறவைகள் சரணாலயமாக அறிவிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கோடியக்கரை ஆண்டுதோரும் வலசை வரும் பல இலட்சக்கணக்கான பறவைகளுக்கு புகலிடமளிக்கும் மிக முக்கியமான ஒரு பகுதியாகும். உப்பங்கழிகள் (Salt pans), சதுப்பு நிலங்கள் (Swamp), அலையாத்திக் காடுகள் (Mangrove Forest), புதர்க் காடுகள் (Dry thorn forest), கடலோரம், கழிமுகம் (Estuary), உவர்நீர்நிலைகள் (Brackish waterbodies), நன்னீர்நிலைகள் (Fresh water source) என பல விதமான வாழிடங்கள் இருப்பதால் பலதரப்பட்ட பறவை வகைகளைக் காணமுடிகிறது. சதுப்புநிலப்பகுதி, உப்பங்கழிகள் பகுதிகளில் மட்டுமே 110 வகையான நீர்ப்பறவைகள் இருப்பது பதிவாகியுள்ளது. இவற்றில் 34 வகை பறவைகள் உலகின் வட துருவத்திலிருந்து வலசை வருபவை. இதுவரை இந்தச் சரணாலயத்தில் 274 வகைப் பறவைகள் இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரிய பூநாரை (Greater Flamingo), சிறிய பூநாரை (Lesser Flamingo), கூழக்கடா (Spot-billed Pelican), சங்குவளை நாரை (Painted Stork), பலவகையான உள்ளான்கள் (Waders), ஆலாக்கள் (Terns), கடற்காகங்கள் (Gulls), ஆகிய சில பறவையினங்களை இங்கே பொதுவாகக் காணலாம். அருகி வரும் பறவையினமான கரண்டிவாய் உள்ளான் (Spoon-billed Sandpiper) இங்கே 1996 வரை பார்க்கப்பட்டுள்ளது. இப்பகுதி பறவை பாதுகாப்பில் மிக முக்கியமான இடமாகவும் (Important Bird Area) அறிவிக்கப்பட்டுள்ளது. பண்ணாட்டளவில் முக்கியத்துவம் வாய்ந்த நீர்நிலைகளை குறிப்பாக நீர்வாழ் பறவைகளின் வாழிடங்களை அடையாளம் கண்டு அங்கீகரிப்பது ராம்சார் அமைப்பு (Ramsar Convention). இந்த அமைப்பில் அங்கத்தினராக உள்ள 157 நாடுகளில் இந்தியாவும் ஓன்று. இதுவரை இந்தியாவில் 25 இடங்களை இந்த அமைப்பு பாதுகாக்கப்பட வேண்டிய ராம்சார் ஒப்பந்தத்திற்குட்பட்ட இடமாக (Ramsar Site) அறிவித்திருக்கிறது. (ராம்சார் ஈரானில் உள்ள இடத்தைக் குறிக்கும், இங்குதான் முதன் முதலில் இந்த அமைப்பின் ஒப்பந்தக் கூட்டம் நடை பெற்றது) அவற்றில் ஒன்று கோடியக்கரை சரணாலயம். இது தமிழகத்தில் உள்ள ஒரே ராம்சார் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

மனோரமா இயர்புக் 2015 ல் “தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள்” எனும் தலைப்பில் (பக்கங்கள் 178-195) வெளியான நெடுங்கட்டுரையின்  ஒரு பகுதி.

Written by P Jeganathan

January 14, 2018 at 9:00 am

Posted in Protected areas

Tagged with ,

கோடியக்கரை – விருந்தாளிப் பறவைகளின் தாப்பு

leave a comment »

கரிசல் காட்டு எழுத்தாளர் கி. ராஜநாரயணன் எழுதிய “பிஞ்சுகள்”  குறுநாவல் பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. குழந்தைகள் படித்துக் கொண்டாட வேண்டிய இந்த நாவல், சூழியல் ரீதியிலும் மிகவும் முக்கியமானது. ஆண்டுதோறும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் பூமியின் வடக்குப் பகுதியில் கடும் குளிர் நிலவும் காலங்களில் பறவைகள் இரைதேடி தெற்கு நோக்கி வருகின்றன. இவற்றை நாம் வலைசை போதல் அல்லது வலசை வருதல் என்போம். இப்படி வலசை வரும் பறவைகளை இந்நூலில் அவர் விருந்தாளிப் பறவைகள்  (Migratory birds) என்கிறார். விருந்தாளிப் பறவைகள் வெகுதூரம் பயணித்து அவை சென்றடையும் இடத்தை அடையும் முன் வழியில் சில இடங்களில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்து இளைப்பாறும். இந்த இடங்களையும், பறவைகள் வலசை வந்து தங்கும் இடங்களையும் அவர் “தாப்பு” என்றழைக்கிறார். பறவையியலாளர்கள் இதை stop-over sites or wintering grounds என்பர். ஒடிஷா மாநிலத்தில் உள்ள சிலிகா ஏரி (Chilika Lake), ஆந்திர-தமிழக எல்லையில் பரவியிருக்கும் பழவேற்காடு ஏரி (Pulicat Lake), கூந்தங்குளம் (Koothankulam Bird Sanctuary), பள்ளிக்கரணை (Pallikaranai Marsh), இன்னும் பல உள்நாட்டு நீர்நிலைகள் என இந்தியாவில் இது போல பல தாப்புகள் உள்ளன. அப்படிப்பட்ட ‘தாப்பு’களில் ஒன்று கோடியக்கரை (Point Calimere). அண்மையில் அங்குச் சென்று வந்தேன்.

பறக்கும்  பூநாரைகள்  Photo: Ramki Sreenivasan

பறக்கும் பூநாரைகள் Photo: Ramki Sreenivasan

அங்கு பாம்பே இயற்கை வரலாறு கழகத்தின் (Bombay Natural History Society – BNHS) இணை இயக்குனரும், பறவையியலாளருமான முனைவர். பாலச்சந்திரனை முன்பே தொடர்பு கொண்டிருந்தேன். பறவைகளின் வலசையைப் பற்றி 1980களிலிருந்து ஆராய்ச்சி செய்து வருபவர் இவர். அவருடன் சேர்ந்து பறவைகளைப் பார்க்கக் கிளம்பினேன் பறவைகளையும், கோடியக்கரையின் முக்கியத்துவம் பற்றியும் வழியெங்கும் விளக்கிக் கொண்டே வந்தார்.

பறவைகளின் வலசைப் பண்பை ஆராய்வதில் முக்கிய அங்கம், பறவைகளுக்கு வளையமிடுவது (Bird ringing). முதலில் பறவைகளை பாதுகாப்பாக பிடிப்பதற்காகவே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட மெல்லிய வலைகளைக் (Mist net) கொண்டு அவற்றைப் பிடிப்பார்கள். பின்னர் அவற்றின் காலில் அலுமினியத்தால் ஆன தகட்டு வளையத்தை பூட்டுவார்கள். பறவையின் காலின் அளவிற்கேற்ப வளையத்தின் அளவும் இருக்கும். அந்த வளையத்தில் வரிசை எண்ணும், அந்த வளையத்தை இடும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும். ஒரு வேளை இதே பறவை உலகில் வேறெந்த பகுதியிலாவது ஆராய்ச்சியாளர்களால் பிடிக்கப்பட்டால் இந்தத் தகவல்களை வைத்து இப்பறவை எங்கிருந்து வருகிறது என்பதை அறிய முடியும்.

இந்தியப் பறவையியலில் முன்னோடிகளில் ஒருவரான Dr. சலீம் அலியின் தலைமையில் பல BNHS ஆராய்ச்சியாளர்கள் 1970-74 மற்றும் 1980-1992ம் ஆண்டுகளில் சுமார் 2,00,000 பறவைகளுக்கு வளையமிட்டிருக்கின்றனர். இவற்றில் 16 வகையான சுமார் 250 பறவைகள் இந்தியாவிலும் பிற பாகங்களிலும், உலகின் பல பகுதிகளிலும் பிடிக்கப்பட்டிருக்கின்றன. இது போலவே உலகின் பல்வேறு இடங்களில் வளையமிடப்பட்ட பறவைகளும் கோடியக்கரையில் பிடிக்கப்பட்டுள்ளன. ரஷ்யா, உஸ்பெக்கிஸ்தான், கஸகிஸ்தான் முதலிய நாடுகளில் வளையமிடப்பட்ட உப்புக்கொத்திகளும், உள்ளான்களும், (waders) சவுதி அரேபியா, காஸ்பியன் கடல் பகுதி, போலந்து முதலிய நாடுகளில் வளையமிடப்பட்ட ஆலாக்களும் (Terns), ஈரானில் வளையமிடப்பட்ட பெரிய பூநாரைகளும் (Greater Flamingo), ஆஸ்திரேலியாவில் வளையமிடப்பட்ட வளைமூக்கு உள்ளான்களும் (Curlew Sandpiper) கோடியக்கரைக்கு வருவதைப் பார்த்து, பிடிக்கப்பட்டு அறியப்பட்டுள்ளது.

கோடியக்கரை புதர்க் காடு

கோடியக்கரை புதர்க் காடு

கோடியக்கரை ஆண்டுதோரும் வலசை வரும் பல இலட்சக்கணக்கான பறவைகளுக்கு புகலிடமளிக்கும் மிக முக்கியமான ஒரு பகுதியாகும். உப்பங்கழிகள், சதுப்பு நிலங்கள், அலையாத்திக் காடுகள், புதர்க் காடுகள், கடலோரம், கழிமுகம், உவர்நீர்நிலைகள், நன்னீர்நிலைகள் என பல விதமான வாழிடங்கள் இருப்பதால் பலதரப்பட்ட பறவை வகைகளைக் காணமுடிகிறது. இதுவரை இங்கு 274 வகைப் பறவைகள் இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனாலேயே இப்பகுதி பறவை பாதுகாப்பில் மிக முக்கியமான இடமாகவும் (Important Bird Area) சரணாலயமாகவும் (Point calimere Wildlife and Bird Sanctuary) பாதுகாக்கப்பட்டுள்ளது. பண்ணாட்டளவில் முக்கியத்துவம் வாய்ந்த நீர்நிலைகளை குறிப்பாக நீர்வாழ் பறவைகளின் வாழிடங்களை அடையாளம் கண்டு அங்கீகரிப்பது ராம்சார் அமைப்பு (Ramsar Convention) ஆகும். இந்த அமைப்பில் அங்கத்தினராக உள்ள 157 நாடுகளில் இந்தியாவும் ஓன்று. இதுவரை இந்தியாவில் 25 இடங்களை இந்த அமைப்பு பாதுகாக்கப்பட வேண்டிய ராம்சார் ஒப்பந்தத்திற்குட்பட்ட இடமாக (Ramsar site) அறிவித்திருக்கிறது. (ராம்சார் ஈரானில் உள்ள இடத்தைக் குறிக்கும், இங்குதான் முதன் முதலில் இந்த அமைப்பின் ஒப்பந்தக் கூட்டம் நடை பெற்றது) அவற்றில் ஒன்று கோடியக்கரை சரணாலயம். இது தமிழகத்தில் உள்ள ஒரே ராம்சார் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

_JEG7143_700

வலசை வரும் பறவைகளின் பாரம்பரிய இடமாக விளங்கும் கோடியக்கரை வாழிடம் கடந்த முப்பது ஆண்டுகளில் பல மாற்றங்களை அடைந்துள்ளது. கடல் நீரை உப்பளங்களுக்காக உள் நிலப்பகுதிகளுக்கு பாய்ச்சுவது, உப்பளங்களுக்காக நன்னீர் ஓடைகளின் வரத்தை தடுப்பணைகளினால் கட்டுப்படுத்துவதால் மண்ணின் தரமும், வளமும் நாளடைவில் குன்றிப்போனது. இதன் விளைவாக விளைநிலங்கள் உப்பளங்களாகவும், மீன் வளர்ப்புக் குட்டைகளாகவும் மாற்றப்பட்டுவிட்டன. 1980களில் சுமார் 5,00,000 க்கும் மேற்பட்ட வலசைப் பறவைகளுக்கு புகலிடமாகத் திகழ்ந்தது இப்பகுதி. ஆனால் நாளடைவில் ஏற்பட்ட வாழிடச் சீர்கேட்டினால் சுமார் 1,00,000 க்கும் குறைவான வரத்துப் பறவைகளே இப்பகுதிகளுக்கு வந்து செல்கின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்து சென்ற பல பறவை இனங்கள் தற்போது இங்கே வருவதில்லை. அதில் முக்கியமானது அழிவின் விளிம்பில் இருக்கும் கரண்டிமூக்கு உள்ளான் (Spoon-billed Sandpiper). அண்மைக் காலங்களில் இப்பறவைகள் இங்கே பதிவு செய்யப்படவில்லை.

கரண்டிமூக்கு உள்ளான் Photo: Ramki Sreenivasan

கரண்டிமூக்கு உள்ளான் Photo: Ramki Sreenivasan

கோடியக்கரை பறவைகளுக்கு மட்டுமல்ல, வெளிமான், புள்ளிமான், நரி முதலிய பாலுட்டிகளுக்கும், பலவித அரிய தாவரங்களுக்கும் மிக முக்கியமான இடமாகும். முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்கள் (Great Vedaranyam Swamp) அலையாத்திக்காடுகள் யாவற்றையும் கோடியக்கரை காட்டுயிர் சரணாலத்துடன் இணைத்து தேசியப்பூங்காவாக (National Park) அங்கீகரித்துப் பேணுவது அவசியம். இந்தப் பகுதிகளின் எல்லையிலிருந்து 10 கீ.மீ. சுற்றுப்பகுதியில் இந்த இடத்தின் சூழல் கெடாமல் இருக்க எந்த ஒரு பெரிய தொழிற்சாலைகள், பெரிய கட்டுமானங்கள் எதையும் ஏற்படுத்தாமல் சூழல் காப்பு மண்டலமாக (Eco-sensitive zone) அறிவிக்கப்படவும் வேண்டும். இப்பகுதிகளுக்கு வரும் நன்னீர் ஓடைகளின் இயல்பான நீர் வரத்தை மீட்டெடுத்தலும், இப்பகுதியினை மாசுறச் செய்யும்  தொழிற்சாலைகள் இங்கே மென் மேலும் பெருகாமலும், ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலைகளின் கழிவுகள் கோடியக்கரைப் பகுதியின் சூழலுக்கு பாதிப்படையாத வண்ணம், சரியான முறையில் அப்புறப்படுத்தவும், சிறந்த கழிவு மேலாண்மை திட்டங்களைக் கடைபிடித்தலும் அவசியம். மிக முக்கியமாக இப்பகுதிகளில் பறவைகளை கள்ள வேட்டையாடுவது தெரியவந்தால் அதை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

_JEG6978_700

விருந்தாளிப் பறவைகளுக்கு நாம் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று, அவற்றின் தாப்புகள் மேலும் சீரழியாமல் பார்த்துக்கொள்வது. நம்மைத் தேடி வரும் விருந்தினரை நல்ல முறையில் உபசரிப்பது நம் பண்பாடு அல்லவா?

*********

கோடியக்கரை பறவைகள் சரணாலயம் பற்றி மேலும் அறிய இந்த இணையதளத்தைக் காணவும்: http://www.pointcalimere.org/index.htm

*********

தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 22nd July 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF ஐ இங்கே பெறலாம்.

Written by P Jeganathan

July 23, 2014 at 8:12 pm

Posted in Birds, Migration

Tagged with