UYIRI

Nature writing in Tamil

Archive for June 2015

எனது பறவைகள் ஆண்டு 2014

with 4 comments

தி இந்து சித்திரை மலர் 2015 ல் “வானில் பறக்கும் புள்களைத் தேடி” எனும் தலைப்பில் வெளியான படக்கட்டுரையின் முழு வடிவம்.

—–

சில ஆண்டுகளுக்கு முன் The Big Year எனும் ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்த்தேன். அமெரிக்காவில் ஆண்டுதோறும் பறவை பார்ப்போரிடையே ஒரு போட்டி நடக்கும். ஓர் ஆண்டில் யார் அதிகமான பறவைகள் வகைகளைப் பார்த்து பதிவு செய்கிறார்கள் என்பதே அது. இந்தப் படமும் ஓர் ஆண்டில் அதிக பறவைகள் பார்க்க அமெரிக்காவின் பல மூலைகளுக்குச் செல்லும் மூவரைப் பற்றியது. இப்படிச் செய்யும் போது இவர்களுக்குள் நடக்கும் போட்டி, அவர்கள் தங்களது குடும்பத்தில், வேலை செய்யுமிடத்தில் சந்திக்கும் எதிர்கொள்ளும் இடையூறுகள் ஆகியவை பற்றி மிகவும் சுவாரசியமாக செல்லப்பட்ட படம் இது.

இப்படத்தைப் பார்க்கும் எந்த பறவை பார்ப்போருக்கும் இது போல நாமும் செய்ய வேண்டும் எனும் உந்துதல் ஏற்படும். எனினும் இதற்காக முன்பே பல வகையில் திட்டமிட வேண்டும். பயணித்திற்காக சேமிக்க வேண்டும், எங்கெங்கு சென்றால் எந்தெந்த வகைப் பறவைகளைக் காணலாம், எத்தனை வகைப் பறவைகளைக் காணலாம் என்பதையெல்லாம் ஒழுங்காகத் திட்டமிட வேண்டும். மிகுந்த பொருட்செலவும் ஆகும். இந்தியாவில் சுமார் 1300 வகையான பறவைகள் உள்ளன. இவற்றில் பாதியைக் காண வேண்டுமென்றால் கூட இந்தியாவின் பல மூலைகளுக்குச் செல்ல வேண்டி வரும். அதற்கெல்லாம் என்னிடம் நேரமும் இல்லை, பணமும் இல்லை. ஆகவே எத்தனை வகை பறவைகளைப் பார்ப்பது என்றில்லாமல் எவ்வளவு நேரம் பறவைகளுக்காக செலவழிக்கிறோம் எனப்பார்க்கலாம் என 2014 மார்ச் மாதம் முடிவு செய்தேன். தினமும் குறைந்தது 15 நிமிடங்கள், நான் எங்கே இருந்தாலும், பறவை பார்ப்பதென முடிவு செய்தேன். அப்படிப் பார்க்கப்பட்ட பறவைகளை eBird (www.ebird.org) எனும் இணையத்தில் உள்ளிட ஆரம்பித்தேன். மாதங்கள் சில கடந்தவுடன் இந்தியாவில் அதிக பறவைப் பட்டியல் உள்ளிட்டவர்களில் முதல் 10 இடத்தில் எனது பெயரைக் கண்டவுடன் இந்த ஆண்டு எப்படியாவது முதலிடத்திற்கு வர முயற்சிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டேன்.

பணி நிமித்தம் கேதர்நாத் கஸ்தூரி மான் சரணாலயத்திற்கு 2 வாரங்களுக்கு செல்ல மே மாதத்திலும், மத்திய இந்தியாவின் சில வனப்பகுதிகளுக்கும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு நான் பார்த்த பறவைகள் வகையின் எண்ணிக்கையும் சற்று உயர ஆரம்பித்தது. அப்போது தான் முடிவு செய்தேன். குறைந்தது 500 வகைப் பறவைகளையாவது இந்த ஆண்டு பார்த்து விட வேண்டு மென. ஆண்டு இறுதியில் இதற்கான பயணங்களுக்காக திட்டமிட ஆரம்பித்தேன்.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, கிழக்குக் கடற்கரையோரம், இமயமலைக் காடுகள், மத்திய இந்தியக் காடுகள் ஆகிய பகுதிகளில் தென்படும் பறவைகளில் பலவற்றைப் பார்த்தாகி விட்டது. வட கிழக்கு இந்தியக் காடுகளும், தார் பாலைவனமும் தான் மிஞ்சி இருந்தது. அஸ்ஸாம், நாகாலாந்து, மேகாலா, ராஜஸ்தான், குஜராத் என டிசம்பர் மாதம் சுற்ற ஆரம்பித்தேன். படகிலும், பஸ்ஸிலும், இரயிலிலும், ஒட்டகத்திலும், நடந்து சென்றும், பல வகையான பறவைகளை கண்டு களித்தேன். ஆண்டு இறுதியில் நான் உள்ளிட்ட மொத்த பறவைப்பட்டியல்கள் 648 (eBird Checklists) பறவை வகைகளும் 500ம் மேல். இந்தியாவிலேயே 2014ம் ஆண்டு முதலிடத்தில் இருந்தேன்.

பறவைகளுக்கான எனது பயணத்தில் இதுவரையில் நான் பார்த்திராத, பல்வேறு வகையான, அழகிய, விசித்திரமான பறவைகளையும் கண்டுகளித்தேன். பார்த்த பல பறவைகளின் படங்களையும் அவ்வப்போது எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.  அவற்றில் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

நாராய்..நாராய்..

குஜராத்தில், அஹமதாபத்திற்கு அருகில் உள்ள நல்சரோவர் பறவைகள் சரணாலயத்திற்கு பறவைகளைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தோம். போகும் வழியில் வானில் பறந்து சென்ற பறவைப் பார்க்க சட்டென வண்டியை நிறுத்தினோம். அது ஒரு செங்கால் நாரை (White Stork Ciconia ciconia). சத்திமுத்தப் புலவர் பாடிய சங்கப்பாடலில் வரும் அதே பறவைதான். ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வலசை வரும் இந்த அழகிய நாரை.

செங்கால் நாரை (White Stork Ciconia ciconia)

செங்கால் நாரை (White Stork Ciconia ciconia)

வட்டமிடும் புல்வெளிக் கழுகு

பறவை வகைகளிலேயே மிகவும் கம்பீரமான தோற்றத்துடன் இருப்பவை கழுகுகள். அவற்றின் கூரிய அலகும், கொக்கி போன்ற கால் நகங்களும், பறக்கும் நிலையில் நீண்டு அகன்ற இறக்கைகளும், அவற்றில் விரல்கள் போன்ற முதன்மைச் சிறகுகளும் அவை அமர்ந்திருந்தாலும், பறந்து கொண்டிருந்தாலும் மிடுக்கான தோற்றத்தைக் கொடுக்கும். ஐரோப்பிய, ரஷ்யா முதலான பகுதிகளிலிருந்து ஆண்டு தோறும் இந்தியாவின் வட பகுதிக்கு வலசை வரும் கழுகு இது. அங்கே Steppe எனும் பரந்து விரிந்த, மரங்கள் இல்லா புல்வெளிகளிலும், வெட்டவெளிகளிலும் வசிப்பதனாலேயே Steppe Eagle Aquila nipalensis எனப் பெயர் பெற்றது. பாறுகளைப் போலவே இவையும் Diclofenac எனும் கால்நடை வலிநீக்கி மருந்தினால் பாதிப்படைந்து எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன.

புல்வெளிக் கழுகு Steppe Eagle Aquila nipalensis

புல்வெளிக் கழுகு Steppe Eagle Aquila nipalensis

அந்தரத்தில் சாகசம்

இப்பூமிப்பந்தின் வடக்கில் இருக்கும் நாடுகளில் இருந்து கூட்டம் கூட்டமாக தென்னிந்தியாவிற்கும், குஜராத்திற்கும் வலசை வருபவை யூரெசிய பெருங்கொக்குகள் (Common Crane Grus grus). மதிய வேளையில் கூட்டமாக பறந்து வந்த இப்பெருங்கொக்குக் கூட்டம் தரயிறங்கும் முன் நீர்நிலைகளின் மேல் வட்டமடிக்கும். நீரில் இறங்கும் முன் தமது நீண்ட இறக்கையை பக்கவாட்டில் விரித்து, தலையை நிமிர்த்தி, கால்கள் இரண்டையும் நேராக வைத்துக் கொண்டு காற்றில் தவழ ஆரம்பிக்கும். அந்தரத்தில் அவை நிற்பது போலவே தோற்றமளிக்கும் இக்காட்சி பார்ப்போரை வியப்பிலாழ்த்தும்.

யூரெசிய பெருங்கொக்கு (Common Crane Grus grus)

யூரெசிய பெருங்கொக்கு (Common Crane Grus grus)

யூரெசிய பெருங்கொக்குகள் (Common Crane Grus grus)

யூரெசிய பெருங்கொக்குகள் (Common Crane Grus grus)

பெரிய அக்கா குயில்

இமயமலை அடிவாரக் காடுகளிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் தென்படும் இந்த பெரிய அக்கா குயில் (Large Hawk-Cuckoo Hierococcyx sparverioides). உத்தராஞ்சலில் ஓக் மரக்காடுகளில் திரிந்து கொண்டிருந்த போது இவற்றின் குரலை கேட்டுக் கொண்டே இருந்தேன். இதன் குரலை வைத்து அடையாளம் கண்டு கொள்ளலாம், ஆனால் பார்ப்பது கடினம். மரங்களினூடே அமர்ந்து ஓயாமல் கூவிக்கொண்டிருக்கும். எனினும் இப்பறவையை ஒரே ஒரு முறை சற்று அருகில் பார்க்கும் நல்வாய்ப்பு கிடைத்தது. இது வலசை வரும் குயிலினம். இந்தியாவின் வடபகுதியில் கடும் குளிர் காலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இப்பறவைகளைக் காணலாம். எனினும் இவை வலசை வரும் பகுதிகளில் குரலெழுப்பாமல் அமைதியாகவே இருக்கும்.

பெரிய அக்கா குயில் (Large Hawk-Cuckoo Hierococcyx sparverioides)

பெரிய அக்கா குயில் (Large Hawk-Cuckoo Hierococcyx sparverioides)

காட்டுச் சிறுஆந்தை

இந்த அழகான சிறிய ஆந்தை முற்றிலுமாக அற்றுப்போய் விட்டது பல காலம் பறவை ஆர்வலர்கள் எண்ணிக்கொண்டிருந்தனர். எனினும் 1997ல் இது மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்டது. உலகின் அரிய ஆந்தை வகைகளில் ஒன்று. மத்திய இந்தியாப் பகுதியில் உள்ள மேல்காட் புலிகள் காப்பகம் (Melghat Tiger Reserve) இப்பறவையைக் காண சிறந்த இடம். இந்த காட்டுச் சிறு ஆந்தை (Forest Owlet Heteroglaux blewitti) பகலில் தான் இரைதேடும். இலையுதிர் காடுகளிலும், தேக்குமரக் காடுகளிலும் தென்படும். ஆந்தைகளை பகலில் வெட்ட வெளியில் அமர்ந்திருப்பதைக் கண்டால் மற்ற பறவைகளுக்குப் பொறுக்காது. அவற்றைச் சூழ்ந்து கொண்டு கத்திக் குரலெழுப்பி விரட்டியடிக்க முயற்சிக்கும். சில வேளைகளில் ஆந்தைகள் எங்காவது இலை மறைவில் சென்று அமர்ந்துவிடும். எனினும் சில நேரங்களில் ஆந்தைகள் அதையெல்லாம் சட்டையே செய்யாது. நான் கண்ட இந்த காட்டுச் சிறுஆந்தையின் அருகில் வந்த சிறிய வெள்ளைக் கண்ணி கத்திக் கொண்டிருந்ததையும், அதைக் கண்டுகொள்ளாமல் அந்த ஆந்தை அப்படியே அசையாமல் அமர்ந்திருந்ததையும் பார்க்க வேடிக்கையாக இருந்தது.

காட்டுச் சிறு ஆந்தை (Forest Owlet Heteroglaux blewitti) ஐப்  பார்த்துக் கத்தும் வெள்ளைக் கண்ணி (Oriental white-eye Zosterops palpebrosus)

காட்டுச் சிறு ஆந்தையைப் (Forest Owlet Heteroglaux blewitti) பார்த்துக் கத்தும் வெள்ளைக்கண்ணி (Oriental white-eye Zosterops palpebrosus)

பாலை சிலம்பன்

பாலை சிலம்பன்களுக்கு (Common Babbler Turdoises caudata) கண்ணைப் பறிக்கும் வண்ணச் சிறகுகள் இல்லாது, மெலியநிறங்களில் தான் இருக்கும். பொதுவாக 6 முதல் 20 பறவைகள் வரை ஆங்காங்கே பிரிந்து கூட்டமாக இரைதேடும். இடம் விட்டு இடம் போது ஒன்றன் பின் ஒன்றாக பறந்து செல்வது பார்க்க அழகாக இருக்கும். இவை நம்மூரில் இருக்கும் தவிட்டுக் குருவிகள் வகையைச் சேர்ந்தவை. வறண்ட நில புதர்க்காடுகளிலும், வெட்டவெளிகளிலும், பாலை நிலங்களிலும் இவை வசிக்கும். இந்தியாவில் பரவலாகத் தென்பட்டாலும், மேலே குறிப்பிட்ட வாழிடங்களில் தான் பார்க்க முடியும். தென்னிந்தியாவை விட வடபகுதியில் பொதுவாகப் பார்க்கலாம்.

பாலை சிலம்பன் (Common Babbler Turdoises caudata)

பாலை சிலம்பன் (Common Babbler Turdoises caudata)

மண்கொத்தியின் நண்டு வேட்டை

கடற்கரையில் பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது தென்பட்டது இந்த மண்கொத்தி (Common Sandpiper Actitis hypoleucos). இவை பூமியின் வடபகுதியிலிருந்து இந்தியாவிற்கு வலசை வருபவை. குடுகுடுவென கடலோரமாக ஓடி மணலைக் குத்திக் கொண்டு அதிலுள்ள பூச்சிகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. சட்டென அமைதியாக சில நொடிகள் நின்றது. பிறகு ஒரே பாய்ச்சலில் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு நண்டை அலகால் கொத்தி எடுத்தது. தலையை அங்குமிங்கும் ஆட்டி அந்த நண்டை தரையில் அடித்துக் கொண்டிருந்தது. பிறகு எதிர்பாராத வகையில் வேகமாக அருகில் தேங்கியிருந்த தண்ணீரை நோக்கி ஓடி அதில் அந்த நண்டை முக்கியது. இது போன்ற கடற்கரையில் இருக்கும் நண்டுகளை அலகால் பிடித்துக் கொண்டிருக்கும் போது தவறுதலாக விட்டு விட்டால் அவை வேகமாக ஓடி குழிக்குள் சென்று ஒளிந்து கொள்ளும். ஆனால் நீரில் அவை தப்பிக்க முடியாது. எனவே தான் நீரில் முக்கி அந்த நண்டை கொத்திக் கொத்தி சாப்பிட ஆரம்பித்தது.

மண்கொத்தி (Common Sandpiper Actitis hypoleucos)

மண்கொத்தி (Common Sandpiper Actitis hypoleucos)

தரையிரங்கும் வெண்கால் பாறு

வெண்கால் பாறு (Slender-billed Vulture Gyps tenuirostris) உலகிலேயே மிகவும் அபாயத்திற்குள்ளான பாறுகளில் ஒன்று. இமயமலை அடிவாரப் பகுதிகளும், வடகிழக்கு இந்தியாவிலும், நேபாளத்திலும் சுமார் 1000 பறவைகள் மட்டுமே தெற்போது எஞ்சியுள்ளன. இவற்றைக் காண அஸ்ஸாமில் உள்ள தின்சுக்கியா எனுமிடத்திற்குச் சென்றேன். இறந்து போன கால்நடைகளை போட்டுவைக்கும் திடலில் கூட்டமாக சுமார் 50 பறவைகளைக் கண்டேன். சில மரங்களின் மேலும், சில திடலில் கிடந்த இறந்த மாட்டின் தசைகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தன. இவைகளைக் கண்டதும் வெகுதூரம் பயணம் செய்து களைப்பும் காணாமல் போனது. இந்த அரிய பறவைகளை வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். அவற்றைப் பார்த்ததில் மகிழ்ச்சி என்றாலும், அவற்றின் நிலையை எண்ணி பெருமூச்சுடன் அந்த இடத்திலிருந்து அகன்றேன்.

வெண்கால் பாறு (Slender-billed Vulture Gyps tenuirostris)

வெண்கால் பாறு (Slender-billed Vulture Gyps tenuirostris)

கிரெளஞ்சப் பறவை

சாரஸ் என வடமொழியில் அழைக்கப்படும் மிக அழகான பெருங்கொக்கு. வால்மீகி ராமாயணத்தில் வரும் கிரெளஞ்சப் பறவை தான் இந்த சாரஸ் பெருங்கொக்கு (Sarus Crane Grus antigone). ஏரி, குளங்களில், வயல்வெளிகளில் சோடியாக இருப்பதைக் காணலாம். மத்திய மற்றும் தென்னிந்தியாவில் பரவலாகத் தென்படுகிறது. ஆளுயரத்திற்கு  இருக்கும் இப்பெருங்கொக்கு நடனத்திற்குப் பெயர் போனது. மத்தியப் பிரதேசம் கோண்டியா மாவட்டத்தில் சாரஸ் சோடி ஒன்று வயலின் ஓரமாக கூடு கட்டி வைத்திருந்தது. வெகுநேரமாக ஆண் ஒன்று அடைகாத்துக் கொண்டிருந்தது. சற்று நேரத்தில் எங்கிருந்தோ பறந்து வந்த அதன் பெண் துணையைக் கண்டவுடன் எழுந்து நின்று, சிறகடித்து மேலும் கீழும் குதித்தது. வந்திறங்கிய பெட்டையும் அதைப் போலவே துள்ளிக் குதித்தது. சாரஸின் நடனம் ஒரு கண்கொள்ளாக் காட்சி.

சாரஸ் பெருங்கொக்கு (Sarus Crane Grus antigone)

சாரஸ் பெருங்கொக்கு (Sarus Crane Grus antigone)

குப்பையில் நின்றாலும்..

சில பறவைகளை எளிதில் காண அவை அதிகமாகத் தென்படும் இடங்களுக்குச் சென்று பார்த்துவிட்டு நேரத்தையும், அலைச்சலையும் மிச்சப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அது எப்படிப்பட்ட இடமாக இருந்தாலும் போவதற்குத் தயாராக இருக்க வேண்டும். பெரிய போதா நாரையைக் (Greater Adjutant Stork Leptoptilos dubius) காண அஸ்ஸாமின் தலைநகரமான குவஹாத்தியில் உள்ள பரந்து விரிந்து கிடக்கும், துர்நாற்றம் வீசும் குப்பை மேட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கு லாரி லாரியாகக் கொண்டு வந்து கொட்டும் குப்பைக் கூளங்களில் உள்ள உணவுப் பொருட்களையும், மாமிசக் கழிவுகளையும் எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தன அந்த நாரைகள். சில அங்கு குப்பைகளைத் தரம் பிரிப்பவர்களுக்கு வெகு அருகிலேயே கூட நின்று கொண்டிருக்கும். இனப்பெருக்கக் காலங்களில் இவற்றின் சிறகுகள் இல்லத தலை, கழுத்து, அதில் தொங்கும் பை போன்ற அமைப்பு யாவும் சிவப்பும், மஞ்சளும் கலந்த  நிறத்தில் இருக்கும். குப்பை மேட்டில் நின்றிருந்தாலும், அந்த மாலை வெயிலில் அழகாகத்தான் இருந்தது அந்த விசித்திரமான தோற்றம் கொண்ட பறவை.

பெரிய போதா நாரை (Greater Adjutant Stork Leptoptilos dubius)

பெரிய போதா நாரை (Greater Adjutant Stork Leptoptilos dubius)

பரத்பூரில் பறக்கும் ஆண்டிவாத்து

ராஜஸ்தானில், பரத்பூரில் உள்ள உலகப்புகழ் பெற்ற கியோலதோ தேசியபூங்கா (Keoladeo National Park) பறவைகளின் சொர்கபூமி. ஆகவே பறவை பார்ப்போருக்கும் தான். சுமார் 350 வகையான பறவைகள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும் வலசை வரும் பறவைகள். குறிப்பாக வாத்து, கொக்கு, நாரை முதலிய நீர்ப்பறவைகள். படத்தில் இருப்பது வலசை வரும் ஆண் ஆண்டிவாத்து (Northern Shoveler Anas clypeata).

ஆண்டிவாத்து (Northern Shoveler Anas clypeata)

ஆண்டிவாத்து (Northern Shoveler Anas clypeata)

பறவைகளில் அரசன்

ராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது சற்று தொலைவில் அமர்ந்திருந்தது இந்த அரசக் கழுகு (Eastern Imperial Eagle Aquila heliaca). வட இந்தியாவிற்கு வலசை வரும் கழுகினங்களில் ஒன்று இது. மொதுவாக முன்னேறி சற்று அருகில் சென்று அதைப் படமெடுத்தேன். இருநோக்கியில் கண்ட போதுதான் தெரிந்தது ஏன் இதற்கு இப்பெயர் வைத்தார்கள் என. அப்படி ஒரு மிடுக்கான தோற்றம் அதற்கு.

அரசக் கழுகு (Eastern Imperial Eagle Aquila heliaca)

அரசக் கழுகு (Eastern Imperial Eagle Aquila heliaca)

நண்டுதிண்ணி

குஜராத்திற்கு பறவைகள் பார்க்கச் செல்லும் முன், சில குறிப்பிட்ட பறவைகளைப் பார்க்க வேண்டும் என பட்டியல் தயார் செய்திருந்தேன். அதில் முக்கியமான ஒன்று இந்த நண்டுதிண்ணி (Crab Plover Dromas ardeola). பெயருக்கு ஏற்றாற்போல் நண்டுகளையே அதிகமாக உண்ணும் பறவை. இந்தியாவின் கடலோரப்பகுதிகளுக்கு வலசை வரும். பொதுவாக தனித்தனியே இரைதேடினாலும், கூட்டமாக வந்து ஓரிடத்தில் அடையும். அது ஒரு கண்கொள்ளாக் காட்சி.

நண்டுதிண்ணி (Crab Plover Dromas ardeola)

நண்டுதிண்ணி (Crab Plover Dromas ardeola)

சிறிய நீல  மீன்கொத்தி

இந்தியா முழுவதும் பரவலாகத் தென்படும் இந்த சிறிய நீல மீன்கொத்தி (Common Kingfisher Alcedo atthis). பரத்பூர் பறவைகள் காப்பிடத்தில் பார்த்துப் படமெடுத்தது. என்னதான் பல இடங்களுக்குச் சென்று பல வித பறவைகளைக் கண்டுகளித்தாலும், நம் ஊரில் தினமும் பார்க்கும் பறவைகள் நம் மனதில் எப்பொழுதுமே குடிகொண்டிருக்கும். சின்ன மீன்கொத்தியும் அதில் அடக்கம்.

சிறிய நீல மீன்கொத்தி (Common Kingfisher Alcedo atthis)

சிறிய நீல மீன்கொத்தி (Common Kingfisher Alcedo atthis)

உணவூட்டும் தந்தை

சிட்டுக்குருவிகள் (House Sparrow Passer domesticus) அழிந்து வருகின்றன என எப்படியே, யாரோ ஒரு தவறான தகவலைப் பரப்பிவிட்டு விட்டனர். நாம் பார்க்கவில்லை என்பதற்காக அவை முற்றிலும் அழிந்து விட்டது என அர்த்தமில்லை. சிட்டுக்குருவிகள் எண்ணிக்கையில் குறையாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம் தான். எனினும், அழியும் விளிம்பில் இருக்கும் இன்னும் பல வகையான பறவைகளை பாதுகாப்பதும், அதற்காகப் பாடுபடுவதுமே முதன்மையாக இருக்க வேண்டும். நாம் அடிக்கடி பார்த்து ரசிக்கும் சிட்டுக்குருவி போன்ற பொதுப்பறவைகள் (Common birds) நமக்கு எல்லாப் பறவைகளின் மேலும் நாட்டமும், கரிசனமும் ஏற்படக் காரணமாக இருக்கும். திருச்சியில் வீட்டின் முன்னே ஆண் சிட்டுக்குருவி ஒன்று அதன் குஞ்சுக்கு உணவூட்டிக் கொண்டிருந்தது. பார்க்கவே மிக அழகாக இருந்தது.

சிட்டுக்குருவிகள் (House Sparrow Passer domesticus)

சிட்டுக்குருவிகள் (House Sparrow Passer domesticus)

 

உணவிடலாமா?

நம்மில் பலர் பல காட்டுயிரினங்களுக்கு உணவிடுவதைப் பார்த்திருக்கலாம். அது சரியான செயலா? இதற்கு நேரிடையாக பதிலலிப்பது கடினம். நாம் கொடுக்கும் உணவினால், எந்த ஒரு உயிரினத்திற்கும் அவற்றின் உடல்நலத்திற்கு கேடும், இயல்பான குணத்தித்தில் மாற்றமும் ஏற்படக் கூடாது. பலர் குரங்குகளுக்கு உணவிடுவார்கள். அது பல வேளைகளில் நமக்கே பாதகமாக முடியும். சில தனிப்பட்ட குரங்குகள் கொஞ்சம் மூர்க்கத்தனமாக மாறி நம்மிடமிருந்தே உணவினை பரித்துச் செல்ல ஆரம்பித்துவிடும். எனினும் பொதுவாக பறவைகளுக்கு உணவிடுவதனால் நமக்கு அப்படி ஒன்றும் பெரிதாக பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆயினும், இதனால் அவை எந்த வகையில் பாதிப்படையும் என்கிற புரிதலும் நம்மிடையே அவ்வளவாக இல்லை. ஆகவே, எதையும் அளவோடு செய்வதே நல்லது. ராஜஸ்தானில் பயணித்துக் கொண்டிருந்தபோது சாம்பல் மைனாக்களுக்கு (Bank Myna Acridotheres ginginianus) ஒருவர் மிக்சரை அள்ளி வீசுவதைக் கண்டேன். அவை பறந்து பறந்து உணவினைப் பிடித்தது பார்க்க வேடிக்கையாக இருந்தது.

_JEG3457_700

Written by P Jeganathan

June 4, 2015 at 11:06 am

Posted in Birds, Photo Story

Tagged with , ,