UYIRI

Nature writing in Tamil

Posts Tagged ‘Commemorative stamp

அஞ்சல் தலையும் பறவைகளும்-21

leave a comment »

மலேசியா வெளியிட்ட அஞ்சல் தலையில் காட்டு நீலக்குருவி (Asian Fairy-bluebird Irena puella). மேலும் அஞ்சல் துறையின் நூற்றாண்டு நினைவு அஞ்சல் தலையின் உள்ளே (Commemorative stamp) இதே அஞ்சல் தலையும் இன்னும் ஒரு மிகப் பழைய அஞ்சல் தலையும் இருபதைக் காணலாம். அதில் Straits Settlements postage என்று எழுதியிருக்கும். இதில் Straits Settlements ‘நீரிணை குடியேற்றங்கள்’ என்பது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த மலேசியாவின் ஒரு சில பகுதியைக் குறிக்கும். அப்போது அப்பகுதிகளுக்கென அஞ்சல் தலைகள் இருந்தன. அதன் நூற்றாண்டு நினைவாகவே (1867-1967) இந்த வித்தியாசமான சரிவக வடிவத்தில் (Trapezoid) அமைந்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

Written by P Jeganathan

November 21, 2023 at 9:00 am

அஞ்சல் தலையும் பறவைகளும்-4

with one comment

இந்தியாவின் பல்லுயிர் செழுப்பிடங்களில் காணப்படும் ஓரிடவாழ் உயிரினங்கள் (Endemic species of Indian biodiversity hotspots) கொண்ட 2012இல் வெளிவந்த நினைவு அஞ்சல் தலை (Commemorative stamp). இதிலுள்ள உயிரினங்கள்:

புகுன் லியோகிக்ளா (Bugun liocichla) – அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஈகிள்நெஸ்ட் காட்டுயிர் சரணாலயத்தில் 1995இல் முதன்முதலில் பதிவுசெய்யப்பட்டு 2006இல் இது ஒரு புதிய வகை பறவை இனம் என்பது கண்டறியப்பட்டது.

நிக்கோபார் தீவுக்கோழி (Nicobar Megapode) – நிக்கோபார் தீவுகளில் மட்டுமே தென்படும் ஒரு பறவை. இவற்றின் கூடமைக்கும் திறன் நம்மை வியப்பில் ஆழ்த்தும். மண்ணை மேடு போல் குவித்துவைத்து, அதன் மேல் முட்டையிட்டு, மண்ணைப் போட்டு மூடிவிடும். சுமார் இரண்டு மாதங்கள் கழித்து குஞ்சுகள் முட்டையிலிருந்து பொரிந்து வெளியே வரும். மிகவும் அரிய பறவையினம். சுனாமி (2004இல்) வந்த போது இவற்றின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து போனது.

ஹுலக் வாலில்லாக் குரங்கு (Hoolock Gibbon). இவை இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களிலும், மியன்மாரின் சில பகுதிகளிலும் மட்டுமே தென்படுகின்றன. ஆண் குரங்குகள் கரிய நிறத்திலும், தெளிவாகத் தெரியும் வெள்ளை புருவங்களையும் கொண்டிருக்கும். அஞ்சல் தலையில் இருப்பது பெண் குரங்கு. இவை வெளிறிய பழுப்பு நிறத்தில் இருக்கும்.

மலபார் பறக்கும் தவளை – Venated gliding frog என்று அஞ்சல் தலையில் அச்சிடப்பட்டிருந்தாலும், இதன் பெயர் Malabar gliding frog. இவை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மழைக்காடுகளில் மட்டுமே தென்படும் அழகான தவளை இனம். இவை பறப்பதில்லை. மரத்தின் உச்சியிலிருந்து காற்றில் தவழ்ந்து கீழே குதிக்கும். குதிப்பதற்கு ஏதுவாக இவற்றின் விரலிடைச்சவ்வுகளை ஒரு பாராசூட் போல விரித்துக்கொள்ளும்.

Written by P Jeganathan

November 4, 2023 at 9:00 am

அஞ்சல் தலையும் பறவைகளும்-3

leave a comment »

உலகச் சுற்றுச்சூழல் தினம் 05-06-2005 அன்று வெளியான அஞ்சல் தலையும் அது பற்றிய சிற்றேடும். பசுமை நகரங்கள் (Green Cities) எனும் கருத்தைக் கொண்டுள்ள நினைவு அஞ்சல் தலை (Commemorative stamp). இதிலுள்ள பறவை என்னவென்று தெரியவில்லை.

Written by P Jeganathan

November 3, 2023 at 9:00 am