UYIRI

Nature writing in Tamil

Archive for November 2014

கானுயிர் ஒளிப்படக்கலை – அழகும், அசிங்கமும்.

with one comment

கானுயிர் ஒளிப்படங்கள் எடுப்பதென்பது அண்மைக் காலங்களில் பெருகிவரும் ஒரு பொழுது போக்கு. வசதி படைத்தவர்கள், டிஜிடல் SLR காமிராக்கள் வாங்கி, அதில் முழம் நீளத்தில் பெரிய பெரிய லென்சுகளை இணைத்து படமெடுப்பதையும், ஓரளவிற்கு வசதையுள்ளவர்கள் சிறிய டிஜிடல் காமிராக்களிலும், வசதியில்லாதவர்கள் தங்களது கைபேசி காமிராக்களில் படமெடுப்பதை பொதுவாகக் காணலாம். பின்னர், தாங்கள் எடுத்த படங்களை முகநூலிலும், ட்விட்டரிலும், ஏனைய சமூக வலைத்தாளங்களிலும் ஏற்றி தங்களது நண்பர்களுக்கும், இந்த உலகிற்கும் காண்பிப்பார்கள். ஓரிரு தினங்களில் பல “லைக்குகளை” வாங்கிக் குவித்த பின், இந்த படங்கள் வலைப்பக்கங்களின் அடியின் ஆழத்தில் சென்று தேங்கிவிடும்.

Screen Shot 2014-11-26 at 3.47

தற்போதைய சூழலில் எந்த வகை காமிராயும் வைத்து கானுயிர்களை (கைபேசி காமிராக்களையும் சேர்த்துத் தான்) ஒளிப்படங்கள் எடுப்பவர் அனைவருமே கானுயிர் ஒளிப்படக் கலைஞர்களே (Wildlife Photographers). உயிரினங்களை மட்டுமே ஒளிப்படங்கள் எடுக்காமல் இயற்கையான வாழிடங்களையும், நிலப்பரப்புகளையும் படமெடுப்பதை இயற்கை ஒளிப்படக்கலை (Nature photography) எனலாம். எனினும் கானுயிர்களுக்கும், அவற்றின் வாழிடங்களுக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகளை ஒளிப்படங்கள் மூலம் பதிவு செய்வதை இயற்கை பாதுகாப்பு ஒளிப்படக்கலை எனலாம் (Conservation photography).

தமது செந்த விருப்பத்திற்காக இது போன்ற பொழுது போக்குகளை தொடர்வது நல்லதே என்றாலும், நாம் எடுக்கும் இயற்கை சார்ந்த, கானுயிர் ஒளிப்படங்கள் பலவகையில் இயற்கை பாதுகாப்பிற்கும் ஏதோ ஒரு வகையில் உதவும் வகையில் இருப்பின் நாம் செய்யும் இந்த வேலைக்கு ஒரு அர்த்தம் இருக்கும். எனினும், உதவி செய்யாவிடினும் நாம் விரும்பும் இயற்கைக்கும், கானுயிர்களுக்கும் நாம் எடுக்கும் படங்களால், எந்தவிதத்திலும் தொந்தரவு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். எந்த வகை ஒளிப்படக்காரராக இருந்தாலும், நேர்மையுடன் இருப்பது மிகவும் அவசியம். நாம் விருப்பத்திற்கு ஏற்றவாறு படங்கள் அமைய வேண்டும் என்பதற்காக குறுக்கு வழியில் சென்று, அத்துமீறிய முறைகளைக் கையாண்டு, படங்கள் எடுப்பது சரியல்ல.

முறையற்ற வகையில் கானுயிர் ஒளிப்படங்கள் எடுக்கப்படுவதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். ஒரு குரங்கின் படத்தை எடுக்க முயலும் போது, அது நம் காமிராவின் பக்கம் திரும்பும் வரை காத்திருந்து பின் படமெடுப்பதே சரி. அப்படியில்லாமல் அந்தக் குரங்கைச் சீண்டி தம் பக்கம் பார்க்க வைத்தோ, அவற்றிற்கு உணவளித்து நம் பக்கம் வரவழைத்தோ படமெடுப்பது சரியல்ல.

Photo: Keerthana Balaji

Photo: Keerthana Balaji

ஒரு உயிரினத்தை அதன் கூட்டில் படமெடுத்தல் பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. கூட்டினருகில் சென்று படமெடுக்கும் போது ஏற்படும் ஒலிமாசு, மற்றும் ஒளிப்படக்காரர்கள் பொறுப்பின்றி (படம் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக) கூடு இருக்கும் இடத்தின் தன்மையை மாற்றியமைப்பதாலும் பல வேளைகளில் சில பறவை வகைகள் தங்களது அடைகாக்கப்படாத முட்டைகளையோ, உணவூட்டப்படவேண்டிய குஞ்சுகளையோ விட்டு விட்டு கூட்டை விட்டு அகன்று விடுகின்றன.

Cartoon by Rohan Chakravarty: Green Humour

Cartoon by Rohan Chakravarty: Green Humour

சிலர் இரவாடிகளைப் படமெடுக்கும் போது அதிநவீன செயற்கை ஒளிஉமிழிகளை (flash) அடிக்கடி பயன்படுத்துகின்றனர். இவற்றை குறைவாகவோ அல்லது தற்போது வரும் அதிநவீன காமிராக்களில் இருக்கும் High ISO உதவியை உபயோகித்தால் இரவாடிகளின் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பினை வெகுவாகக் குறைக்க முடியும். சிலர் தாம் படமெடுக்க வேண்டிய (தவளை, பல்லி, ஓணான் முதலிய) உயிரினங்களை ஓரிடத்திலிருந்து பிடித்து வந்து அவற்றிற்கு சிறிய அளவில் மயக்க மருந்து கொடுத்து விடுகின்றனர். தமது தேவைக்கேற்ற பின்னனியில் அவற்றை வைத்து படமெடுக்கவே இந்த வேலை. சிலர் அரிய மலர்களை அவை வளர்ந்திருக்கும் செடிகளில் இருந்து கொய்து தமது வீட்டிற்கோ, ஸ்டூடியோவிற்கோ எடுத்து வந்து படமெடுக்கின்றனர்.

சாதாரண டிஜிடல் காமிரா வைத்திருப்பவர்களில் சிலர் அதி நவீன காமிராக்களால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களைப் பார்த்து விட்டு அதைப் போலவே அவர்களது படங்களும் இருக்க வேண்டும் என எண்ணி சில நேர்மையற்ற, பாதுகாப்பற்ற வழிகளில் படம் பிடிக்கின்றனர். உதாரணமாக அன்மையில் சிலர் தமது சிறிய டிஜிடல் காமிரா, கைபேசி காமிராவைக் கொண்டு அமைதியாக நின்றிருக்கும் யானைக்கூட்டத்தின் அருகில் சென்று படமெடுக்க முயன்றனர். இதனால் யானைகள் எரிச்சலடைந்து தாக்க எத்தனிக்கும் வாய்ப்புகள் அதிகம். அவற்றை சீண்டுவதும் இல்லாமல் அவை ஒரு வேளை தாக்க வந்தால் அல்லது தாக்கி அவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் பழி சுமத்தப்படுவது என்னவோ யானைகள் தான்.

Photo: MacMohan

Photo: MacMohan

அதீத தன்விருப்பம் (self-obsessed) மிகுந்த இத்தலைமுறையினர் சிலர் செல்பிகளை (selfies) சில காட்டுயிர்களுடனும் எடுத்துக் கொள்ள விரும்புகிறார்கள். அண்மையில் ஒரு வரையாட்டின் கால்களை வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்து தன்னுடன் நிற்கச் செய்து செல்பி எடுக்க முயன்ற ஒரு சுற்றுலா பயணி அவ்வழியே சென்ற வனத்துறை அதிகாரியிடம் சரியாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.

Photo: Pramodhini Kalingarayar

Photo: Pramodhini Kalingarayar

Photos Courtesy: www.facebook.com

Photos Courtesy: http://www.facebook.com

காத்திருந்து படமெடுத்தல் கானுயிர் ஒளிப்படக்கலையின் ஒரு முக்கிய அங்கம். ஆனால் விதவிதமான காமிராக்களும், இயற்கை ஆர்வலர்களும் பெருகி வரும் இச்சூழலில் பலருக்கு இந்தப் பண்பு வெகுவாக மாறி வருவது கவலையளிக்கிறது. இது குறித்த விரிவான கட்டுரைகளை தியோடோர் பாஸ்கரன் உயிர்மை மாத இதழிலும், சு. பாரதிதாசன் பூவுலகு சுற்றுச் சூழல் இதழிலும் (“கானுயிர் புகைப்படக்கலையா? கொலையா?” இதழ் Mar-April 2014 எழுதியுள்ளனர்.

எனினும் அனைத்து ஒளிப்படக்காரர்களுமே இப்படியில்லை. மிகவும் பொறுப்பாக செயல்படும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இயற்கை ஒளிப்படக்கலையில் பொறுப்பற்று செயல்படுவதில் மேற்சொன்னவை ஒரு வகை. படமெடுத்த பின் செய்யும் அத்துமீறல்களும், நேர்மையின்மையும் கூட உண்டு. ஆம், படமெடுத்து, கணிணியில் இட்டு, சில மென்பொருட்களால் படங்களை அழகுபடுத்துவது அனைவருக்கும் தெரிந்ததே. ஒளி குறைவாக இருப்பின் அதை சற்று அதிகப்படுத்தியும், சில வண்ணங்களை அதிகரிக்கவும், குறைக்கவும் செய்து படத்தை மெருகூட்டுவது ஒத்துக்கொள்ளப்பட்ட செயலே. எனினும், சிலர் சற்று அளவுக்கு மீறி சென்று விடுகின்றனர்.

Cartoon by Rohan Chakravarty: Green Humour

Cartoon by Rohan Chakravarty: Green Humour

உதாரணமாக ஒரு அழகான நிலவமைப்பை படமெடுக்கும் போது அதில் பல வேளைகளில் தந்திக்கம்பித் தொடரோ, மின் கோபுரமோ இருப்பது தற்போதைய சூழலில் இயல்பே. ஆனால் மென்பொருட்களைக் கொண்டு அவற்றை அப்படத்திலிருந்து நீக்கிவிடுகின்றனர். இது சரியா எனும் கேள்விக்கு மூன்று வகையில் பதிலலிக்கலாம். அந்தப் படத்தை பெரிது படுத்தி அச்சிட்டு நம் வீட்டில் நமக்காக மட்டுமே மாட்டி வைத்து அழகு பார்த்தால், அப்படிச் செய்வதில் தவறில்லை. ஆனால் இப்படத்தையே ஒரு ஒளிப்படப் போட்டியில் பங்கேற்க சேர்ப்பிக்கும் போது இவ்வகையான திருத்தங்களைச் செய்து அனுப்புவது முறையல்ல. ஒரு கட்டுரைக்காக அதே படத்தை அனுப்பும் போது ஆசிரியரிடம் முன்பே இது பற்றி கூறி, அச்சில் வரும் போது அப்படத்தின் கீழ் “படம் செயற்கை முறையில் மெருகேற்றப்பட்டுள்ளது” என அனைவருக்கும் தெரிவிப்பதும் வேண்டும். இது போன்ற பித்தலாட்டங்கள் இருப்பதாலேயே ஒளிப்படப் போட்டிகளில் இப்போது “RAW” வகை படங்களை கேட்கின்றனர்.

Art Wolfe எனும் புகழ்பெற்ற இயற்கை ஒளிப்படக்கலைஞர் 1994ல் கானுயிர், இயற்கையான வாழிடங்களின் அழகிய படங்களைக் கொண்ட “Migration” எனும் நூலை வெளியிட்டார். எனினும் இரண்டு ஆண்டுகள் கழிந்து அந்நூலில் பதிப்பித்த பல படங்கள் யாவும் டிஜிடல் முறையில் மாற்றப்பட்டிருந்தது தெரிய வந்ததும் பலரது விமர்சனங்களுக்கு ஆளானார். வரிக்குதிரைகளின் நெருக்கமாக அருகருகே நிற்பது போன்ற அட்டைப் படத்தைக் கொண்டது இந்நூல். உண்மையில் அவை நெருக்கமாக அமைந்திருக்கவில்லை. படத்தில் இருந்த வெற்றிடத்தை ஓரிரு வரிக்குதிரை படங்களை இட்டு அவர் நிறப்பியிருந்தார் (Image here). இதை அவர் டிஜிடல் வரைபடம் (Digital Illustration) என்கிறார். இது போன்ற morphing, digital image cloning செய்தால் அதை அப்படத்தின் கீழ் அறிவித்துவிட வேண்டும். அழகாகத் தெரியவேண்டும் என்பதற்காக இயற்கையில் இல்லாததை படங்களில் டிஜிடல் முறையில் மாற்றியமைத்து பார்வைக்கு வைப்பது முறையல்ல. இதனால் இயற்கையில் இப்படித்தான் இருக்கும் என பொதுமக்களும், வளரும் இயற்கை ஆர்வலர்களும் தவறாக நினைக்கும் வாய்ப்புகள் அதிகம்.

இன்னும் சிலர் அடைத்து வைக்கப்பட்ட இடங்களில் இருக்கும் உயிரினங்களை இயற்கையில் இருப்பது போல படமெடுத்து அனைவரிடமும் பகிர்ந்து கொள்கின்றனர். இது போன்ற படங்களை ஓரளவிற்கு அனுபவமுள்ளவர்கள் கண்டு பிடித்துவிடுவார்கள் என்றாலும், விவரம் அறியாத பலர் அவை உண்மையிலேயே இயற்கையான சூழலில் எடுக்கப்பட்டிருப்பதாக நினைக்கும் வாய்ப்பு உள்ளது.

இயற்கையான வாழிடங்களுக்குச் செல்லும் போது அங்கு நாம் பார்க்கும் அழகிய நிலப்பரப்புகளையும், வாழிடங்களையும், கானுயிர்களையும், அழகிய முறையில் படமெடுத்துக் காட்டுவது புறவுலகின் பால் பலருக்கு நாட்டம் ஏற்படச்செய்ய உதவும் என்பது உண்மையே. எனினும், நடப்பு உலகில், பல கானுயிர்களும் அவற்றின் வாழிடங்களும் அற்றுப்போகும் நிலையில் உள்ளன.

சுற்றுப்புறச்சூழல் நாளுக்கு நாள் சீர்கெட்டுக் கொண்டே வருகிறது. இவ்வேளையிலும், அழகிய படங்களை மட்டுமே எடுத்துக் கொண்டிருப்பது நல்லதா? இயற்கையைக் காப்பாற்ற நம்மால் செய்யக்கூடியதை செய்யாமல், பார்த்துப் படமெடுத்து ரசித்துக் கொண்டிருப்பது, அழகா? ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்பதை நாம் அறிவோம். நாம் விரும்பும் இயற்கையைக் காப்பாற்ற எந்த வகை காமிராவையும் கொண்டு நேர்மையான முறையில் படமெடுத்து, யதார்த்தத்தையும் நம் படங்களில் பதிவு செய்து ஒரு நல்ல மாற்றத்திற்கு வித்திடலாம். இயற்கையைப் பாதுகாக்கும் ஒளிப்படக்கலையே இப்போதைய அவசியத் தேவை.

பெட்டிச் செய்தி

ScreenShot001_700

பஷீரின் குடுமிக் கழுகு எனும் கட்டுரையில் வந்த ஒரு குடுமிக்கழுகின் படத்தில் அதன் தலையில் காய்ந்த மரக்கிளை ஒன்று தொட்டுக்கொண்டு அக்கழுகின் குடுமி சரியாகத் தெரியாமல் இருந்ததது. இந்த கிளையை மென்பொருளின் உதவியால் நீக்கி அப்படத்தை அனுப்பியிருந்தேன். ஆசிரியரிடமும் இதைப்பற்றி முன்பே அறிவித்திருந்தேன். இதை உங்களுடன் இப்போது பகிர்ந்து கொள்கிறேன். இது பற்றிய கட்டுரையை எழுதும் எண்ணம் இருந்ததால் அப்படத்தில் செய்யப்பட்ட திருத்தம் பற்றி அக்கட்டுரையில் அறிவிக்கப்படவில்லை. ஒரு வேளை இதை நான் யாரிடமும் சொல்லாமல் மறைத்திருந்தால் அது நேர்மையற்ற செயலாகும் என நான் கருதுகிறேன்.

தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 11th November 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF  ஐ இங்கே பெறலாம்.

Written by P Jeganathan

November 12, 2014 at 6:59 pm

தமிழ் பறவைகள் (தமிழ்Birds) குழுவினர் சந்திப்பு

with 3 comments

_JEG8296_700

Tamilbirds_logo_new

பறவைகள் கூட்டமாகப் பறந்து திரிவதையும், பல இடங்களிலிருந்து ஓரிடத்தில் வந்தமர்வதையும் கண்டிருப்போம். அது போலவே பறவை ஆர்வலர்கள் கூட்டம் ஒன்று 1 & 2 நவம்பர் 2014 அன்று, திண்டுக்கல், காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் ஒன்று கூடியது. பறவைகளின் பாதுகாப்பு, அவற்றின் வாழிடங்களின் பாதுகாப்பு, தமிழகத்தில் தென்படும் பறவைகளின் பரவல் முதலியவற்றைப் பகிர்ந்து கொள்ளும் தமிழ் பறவைகள் யாஹூ குழு (Tamil Birds Yahoo Group) இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்த இணைய குழு 2006ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இக்குழுவினை ஒருங்கிணைத்து நடத்துபவர் மரங்கொத்திகளைப் பற்றி ஆராய்ச்சி செய்த Dr. ஷாந்தாராம். இவர் இந்தியாவின் சிறந்த பறவையியலாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இக்குழுவில் சுமார் 630 பேர் அங்கத்தினராக இருக்கின்றனர்.

Dr. ஷாந்தாரம் கூட்டதின் நோக்கத்தைப் பற்றி விளக்குகிறார்

Dr. ஷாந்தாரம் கூட்டதின் நோக்கத்தைப் பற்றி விளக்குகிறார்

பறவைகளுக்கு நாம் வகுத்த எல்லைகள் கிடையாது. அது போலவே தமிழ் பறவைகள் யாஹூ குழு என்பது தமிழர்களை மட்டுமே கொண்டதல்ல. தமிழகத்தில் தென்படும் பறவைகளைப் பற்றியும், அவற்றின் வாழிடங்கள் பற்றியும் கரிசனம் கொண்ட தமிழர்கள் அல்லாத, தமிழகத்தில் வசிக்காத பலரும் உறுப்பினர்களாக இருக்கின்றனர். குறிப்பாக இக்கூட்டத்தினை மிகவும் முனைப்புடனும், ஆர்வத்துடனும் ஏற்பாடு செய்தவர்களில் ஒருவர் இந்தியாவின் பறவையியலுக்கு பல வகையில் பங்களித்துக் கொண்டுள்ள J. ப்ரவீனும் ஒருவர். இவர் தமிழ் பறவை யாஹூ குழுவினைப் போலவே கேரளாவில் இயங்கிவரும் கேரளா பறவைகள் யாஹூ குழுவின் ஒருங்கிணைப்பாளர் (KeralaBirder Yahoo Group). கேரளப் பறவைகளைப் பற்றிய பல்லாண்டு கால ஆராய்ச்சியில் விளைந்த “Birds of Kerala – Status and Distribution” (2011) நூலின் ஆசிரியர்களில் ஒருவர். மேலும் கேரளாவில் பல பறவைகள் கணக்கெடுப்பினை நடத்தியவர்.

J . பிரவீன் (நின்று கொண்டிருப்பவர்)  கேரள பறவைகள் கணக்கெடுப்பு குறித்து அவரது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

J . பிரவீன் (நின்று கொண்டிருப்பவர்) கேரள பறவைகள் கணக்கெடுப்பு குறித்து அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

திண்டுக்கல் கூட்டத்தில் பல இயற்கை ஆர்வலர்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள், தன்னார்வக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என சுமார் 55 பேர் பங்குபெற்றனர். இக்கூட்டத்தை இந்திய பறவை பாதுகாப்பு கூட்டமைப்பு (IBCN – Indian Bird Conservation Network), பம்பாய் இயற்கை வரலாறு சங்கம் (Bombay Natural History Society – BNHS)மெட்ராஸ் இயற்கையியல் சங்கம் (MNS – Madras Naturalist Society) மற்றும் இந்தியப் பறவைகள் கணக்கெடுப்புத் திட்டத்தை ஊக்குவிக்கும் குழுமமான BirdCount India, இயற்கை காப்புக் கழகம்  (Nature Conservation Foundation – NCF) ஆகிய அமைப்புகளும், J. ப்ரவீன், Dr. T. பத்ரிநாராயணன் போன்ற தன்னார்வலர்களரும், காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறையின் பேராசிரியர்களும், மாணவர்களும் ஒருங்கிணைத்து நடத்தினர்.

Dr. சுஹேல் காதர் eBird குறித்து விளக்குகிறார்

Dr. சுஹேல் காதர் eBird குறித்து விளக்குகிறார்

பறவைகளின் பரவல், தற்போதைய பாதுகாப்பு நிலை, எண்ணிக்கை, தென்படும் காலம், அவை தென்படும் வாழிடத்தின் நிலை முதலிய தகவல்கள் அவற்றின் பாதுகாப்பிற்கு பெரிதும் உதவியாக இருக்கும். பறவை ஆராய்ச்சிக்கும், அவற்றின் பாதுகாப்பிற்கும் மேலே குறிப்பிட்ட தகவல்களும், ஒரிடத்தில் இருக்கும் பறவை வகைகளின் பட்டியலும் அடிப்படைத் தேவையாகிறது. தமிழகத்தில் பல இடங்களிலிருந்து பல்வேறு பறவைப் பட்டியல்கள் இருந்தாலும், அவை ஒருங்கிணைக்கப்படாமல் வெவ்வேறு நூல்களிலும், ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இது வரை தமிழகத்தில் செய்யப்பட்ட பல பறவைகள் ஆராய்ச்சியினாலும், பறவை ஆர்வலர்கள் பலர் பார்த்து/அவதானித்து பதிப்பித்த தரவுகளின் வாயிலாகவும் தமிழகத்தில் சுமார் 550 பறவை வகைகள் தென்படுகின்றன என்பதை அறிய முடியும். எனினும் இப்பகுதியில் அண்மைக் காலங்களில் பார்த்து/அவதானிக்கப்பட்ட பறவைகள் பற்றிய குறிப்புகள் அனைத்தும் வெவ்வேறு அறிவியல் இலக்கிய இதழ்களிலும், நூல்களிலும் பதிப்பிக்கப்பட்டும், பல பதிவு செய்யப்படாமலும் உள்ளன. ஆகவே இக்கூட்டத்தில் முதற்கட்டமாக தமிழகப் பகுதியிலிருந்து பதிவு செய்யப்பட்ட பறவை வகைகள் அனைத்தையும், பட்டியலிட்டு, ஏற்கனவே இருக்கும் பட்டியலை மேம்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

அருளகம்  அமைப்பினைச் சேர்ந்த சு பாரதிதாசன் அவரது பாறு கழுகுகள் (பிணந்தின்னிக் கழுகுகள்) குறித்த ஆராய்ச்சியைப் பற்றி விளக்குகிறார்.

அருளகம் அமைப்பினைச் சேர்ந்த சு பாரதிதாசன் அவரது பாறு கழுகுகள் (பிணந்தின்னிக் கழுகுகள்) குறித்த ஆராய்ச்சியைப் பற்றி விளக்குகிறார்.

பறவைகளை அவதானித்து அவற்றை பட்டியலிட்டு நமது நாட்குறிப்புகளில் வைத்துக் கொள்வது நல்ல பழக்கமே. எனினும் அது நமக்கு மட்டுமே இல்லாமல் வெளியுலகிற்கும், குறிப்பாக மக்கள் அறிவியல் திட்டங்களுக்கும் பயனுள்ள வகையில் இருப்பின் நமது பறவைப் பட்டியல் (bird checklist) பறவைகள் பாதுகாப்பிற்கும், அவற்றின் வாழிடப் பாதுகாப்பிற்கும் உதவும். இவ்வகையில் பறவைப் பட்டியல்களின் களஞ்சியமான அனைவரும் பார்த்தறியும், பங்களிக்கும் வலைவாசலான eBird குறித்த காட்சிளிப்பும், விவாதங்களும் இக்கூட்டத்தில் நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள முக்கிய பறவைகள் வாழிடங்களைப் (Important Bird Areas – IBA’s) பற்றியும், அவற்றை தகுந்த கால இடைவெளியில் முறையாக கண்கானித்தல் பற்றியும், தமிழகத்தில் இருக்கும் மேலும் பல தகுதியான இடங்களை இனங்கண்டு அவற்றை முக்கிய பறவைகள் வாழிடமாக தீர்மானிக்கவும் இக்கூட்டத்தில் ஆலோசனைகளும், கருத்துக்களும் பரிமாரப்பட்டன. குறிப்பாக சென்னையில் உள்ள பள்ளிக்கரணை நீர்ச்சூழலை ஒரு முக்கிய பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.

காலை வேளையில் பறவைகளுடன்.

காலை வேளையில் பறவைகளுடன்.

பறவைகள், அவற்றின் வாழிடங்கள் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்கும் ஆதரவும் மிகவும் அவசியம். பறவைகளின் பால், புறவுலகின் பால் நாட்டமேற்பட, அவற்றின் மேல் கரிசனம் கொள்ள பொது மக்களிடையேயும், இளைய தலைமுறையினரிடையேயும் பறவைகள் அவதானித்தல் (Birdwatching) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பலர் ஆலோசனை வழங்கினர். இதை ஒரு நல்ல பொழுது போக்காக அனைவரும் எடுத்துக் கொள்ள மக்களிடையே எடுத்துச் சொல்வது அவசியம். ஆகவே, பறவைகள் பற்றிய விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தவும் பொங்கள் தினத்தன்று பறவைகளைப் பார்த்து கணக்கிட்டு, பட்டியலிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.

மேலை நாடுகளில் கிருஸ்துமஸ் தினத்தன்று பொதுமக்கள் தங்களது வீட்டினருகிலோ, வீட்டினை அடுத்த சுற்றுப்புறங்களிலோ அங்கு தென்படும் பறவைகளைப் பார்த்து பட்டியல் தயார் செய்து இணையத்தில் உள்ளீடு செய்வார்கள். Christmas Bird Count எனும் இக்கணக்கெடுப்பு பல்லாண்டு காலமாக தொடர்ந்து நடந்து வரும் செயல்பாடு. இதன் மூலம் பல பொதுப்பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளையும், பரவலையும் அறிந்து கொள்ள முடியும். இது போலவே கடந்த இரு ஆண்டுகளாக இந்தியாவில் ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு (GBBC – Great Backyard Bird Count) நடைபெற்று வருகிறது. அண்மையில் கேரளாவில் ஓணம் பண்டிகையின் போது பறவைகள் கணக்கெடுப்பினை KeralaBirders யாஹூ குழுவினர் நடத்தி வருகின்றனர். இவற்றைத் தொடர்ந்து 2015ம் ஆண்டிலிருந்து தமிழகத்திலும் பொங்கல் தின பறவைகள் கணக்கெடுப்பு ஜனவரி 15 முதல் 18 வரை நடத்தத் திட்டமிட இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தமிழ் பறவை(தமிழ்Birds) கூட்டம்

தமிழ் பறவை(தமிழ்Birds) கூட்டம்

நீர்நிலைகளின் தூதுவர்கள் – நீர்நாய்கள்

leave a comment »

சலசலவென ஒடிக்கொண்டிருந்தது ஆறு. ஆற்றின் நடுவில் பாறைகள் ஆங்கங்கே துருத்திக்கொண்டுடிருந்தன. அதைச் சுற்றி நீர் அல்லிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஆற்றின் கரையை வரிசையாக வளர்ந்திருந்த நீர் மத்தி (நீர் மருது) மரங்கள் அலங்கரித்திருந்தன. எனக்கு விருப்பமான மரங்களில் நீர் மத்தியும் ஒன்று. வழவழப்பான, வெண்ணிற மரத்தண்டு, ஆங்கங்கே உரியும் மரப்பட்டை, சிலவேளைகளில் ஓடும் நீரின் மத்தியில் வளர்வதாலேயே நீர்மத்தி எனப்பெயர் பெற்றது. இம்மரத்தை எங்கு கண்டாலும் அருகில் சென்று மரத்தண்டில் உள்ளங்கை பதிய தடவிக் கொடுத்துவிட்டு வருவது வழக்கம். முடியாத போது கண்ணாலாவது தடவிச் செல்வதுண்டு.

மாலை வேளை சூரிய ஒளி ஓடிக் கொண்டிருந்த நீரில்பட்டு தங்க நிறத்தில் தகதகத்தது. மீன் திண்ணிக் கழுகு ஒன்று தனது குழந்தைக் குரலில் கத்திக் கொண்டிருந்தது. இருநோக்கியில் ஆற்றின் ஒட்டத்தைக் கண்களால் துழாவிக் கொண்டிருந்த போது ஆற்று ஆலா ஒன்று தனது வெண்ணிற கத்தி போன்ற இறக்கைகளை மேலும் கிழும் அசைத்து பறந்து வந்தது தெரிந்தது. பறந்து கொண்டே தலையை அங்குமிங்கும் திருப்பி நிரின் மேற் பரப்பை நோட்டமிட்ட அந்த ஆலா சட்டென் நீரில் முழ்கி ஒரு மீனை தனது அலகால் பிடித்து வெளி வந்து தனது வசிகரமான சிறகசப்பைத் தொடர்ந்தது.

Photo: Wikimedia Commons

ஆற்று ஆலா Photo: Wikimedia Commons

இதுபோன்ற சுழலில்தான் முதன்முதலில் அங்கு ஒர் நீர்நாய் கூட்டத்தைக் கண்டேன். கரையோரத்தில் திடீரென நீரிலிருந்து தலையை மேலே தூக்கி அங்கும் இங்கும் பார்த்தது ஓர் நீர்நாய் அதை தொடர்ந்து மற்றொரு நீர்நாய் தலையை நீரிலிருந்து தலையை வெளியே நீட்டியது. நீர்முழ்கி கப்பலில் உள்ள பெரிஸ்கொப்பினை போல நீரிலிருந்து தலையை வெளியே நீட்டி சுற்றும் முற்றும் பார்த்து மீண்டும் ‘டபக்’ என தலையை உள்ளே இழுத்துக் கொண்டது. இதை கண்ட குதூகலத்தில் இருந்த போதே இவை இருந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் மணற்ப்பாங்கான் கரையில் அவை ஏறி அமர்ந்துக் கொண்டன. அதனைத் தொடர்ந்து இன்னும் இரு நீர்நாய்கள் வெளிவந்து அவற்றுடன் சேர்ந்து அமர்ந்துக் கொண்டன. சற்று நேரம் கூட சும்மா இல்லாமல் துருதுருவென ஒன்றின் மேல் விழுந்து விளையாடிக் கொண்டிருந்தன.

Photo: Kalyan Varma

ஆற்று நீர்நாய்கள். Photo: Kalyan Varma

நான் இருந்தது காவேரியாற்றின் கரையோரம். ஹோக்கனெக்கல் சரகத்தில் உள்ள பிலிகுண்டு எனும் சிறிய ஊருக்கு காவேரி ஆற்றோரமாக நடந்து சென்ற போது கண்ட காட்சியிது. இது நடந்ததது சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு. அண்மையில் அங்கு மீண்டும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இந்த முறை நடந்து செல்ல நேரமில்லை. ஹோக்கனெக்கலில் இருந்து பிலிகுண்டுக்கு அந்த காட்டின் குறுக்கே தார் சாலை போடப்பட்டிருந்தது. சாலை வந்தால் போதும் ஓர் இடத்தின் தன்மையே மாறிவிடும். பிலிகுண்டு பகுதிக்கு செல்ல வனத்துறையிடம் அனுமதி பெற்று ஒரு குழுவாக அங்கு சென்றிருந்தோம். ஆனால் அப்படியெல்லாம் செய்யாமல் நான்கு, ஐந்து கார்களில் வந்த சுற்றுலாவினர் கூட்டம் ஒன்று, ஆற்றோரத்தில் காரை நிறுத்தி குடித்துக் கொண்டிருந்தார்கள். பல ஆண்டுகளுக்கு முன் நான் நடந்து சென்ற ஆற்றோரப் பகுதி முழுவதிலும் பிளாஸ்டிக் குப்பைகள் சேர்ந்து கிடந்தன. அந்த குடிமக்களை எல்லாம் கடந்து சென்று ஆற்றோரமாக நடந்து சென்றோம். சுமார் 50 நிமிட ஆற்றோர நடை பயணத்தில் பல வகையான பறவைகளையும் அழகிய மரங்களையும் கண்டோம். சட்டென எங்களில் ஒருவர் நீர்நாய் என கத்தினார். எதிர்கரையில் இரண்டு நீர்நாய்கள் துள்ளி குதித்து நீரில் நீந்திக் கொண்டிருந்தன. நீர்நாய்களை அங்கே மீண்டும் பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி.

Photo: Kalyan Varma

ஆற்று நீர்நாய்கள் Photo: Kalyan Varma

 நான் பார்த்துக் கொண்டிருந்தவை ஆற்று நீர்நாய்கள் (Smooth-coated otter Lutrogale perspicillata). ஆற்று நீர்நாய்களைப் பார்த்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. அவை ஒன்றொடுஒன்று விளையாட்டாக சண்டையிட்டுக் கொண்டு நீரில் முழ்குவதையும் பின்பு எதிர்பாராதவிதமாக முழ்கிய இடத்திலிருந்து சற்றுத்தொலைவில் மேல் எழும்பி நம்மை வியப்பில் ஆழ்த்தச் செய்யும். நீர்நாய்கள் குறும்புத்தனமும், மிகுந்த தைரியமும் கொண்டவை. அண்மையில் ஜிம் கார்பெட் புலிகள் காப்பகத்திற்கு சென்றபோது, அங்குள்ள ராம்கங்கா நதியில் நீர்நாய் ஒன்று தெளிந்த நீரினடியில் ஒரு மீனைப் போல நீந்திவருவதை உயரமான ஒரு பகுதியிலிருந்து பார்க்க முடிந்தது. இரண்டு கரியால் (Gharial) எனும் ஆற்று முதலைகள் அந்த நதிக்கரையோரம் வெயில்காய்ந்து கொண்டிருந்தன. நீரிலிருந்து வெளிவந்த அந்த நீர்நாய் அந்த முதலைகளில் ஒன்றின் வாலைக் கடித்தது. அந்த முதலை முகத்தைத் திருப்பாமலேயே வாலை வேகமாக அப்படியும் இப்படியும் ஆட்டி அந்த நீர்நாயை நெருங்க விடாமல் செய்தது. அந்த நீர்நாயும் சற்று நேரத்தில் நீருக்குள் சென்று மறைந்தது. இது போல காவிரி ஆற்றில் உள்ள முதலையை கூட்டமாக வந்த நீர்நாய்கள் கரையிலிருந்து நீருக்குள் விரட்டியடித்த சம்பவத்தினைப் பற்றிய குறிப்பு ஒன்று உள்ளது.

இந்தியாவில் மூன்று வகையான நீர்நாய்கள் உள்ளன. நீர்நாய்களின் முக்கிய உணவு மீன்களே. இதனால் ஆறு, ஏரி, நீர்த்தேக்கங்களில் மீன்பிடிப்போர்களுக்கு இவை தொந்தரவு கொடுக்கும் பிரணிகளாக கருதப்படுகின்றன. இதனால் இவை அவ்வப்போது கொல்லப்படுகின்றன. ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டுவதாலும், ஆற்றின் இயற்கையான போக்கை மாற்றியமைப்பதாலும், ஆற்று மணலை சுரண்டுவதாலும், இரசாயன கழிவுகளையும், ஏனைய கழிவுகளையும் ஆற்றில் கொண்டு சேர்ப்பதாலும், வேட்டு வைத்து மீன் பிடிப்பதாலும் (Dynamite fishing), வியாபார நோக்கத்தில் நம் நாட்டிற்குச் சொந்தமில்லாத மீன் வகைகளை (Invasive fishes)ஆற்றில் விட்டு வளர்ப்பதாலும், ஆற்றின் தன்மை சீர்கெட்டுப் போகிறது. நிலப்பகுதிகளில் இருக்கும் வனத்தை அழித்தால் அதன் விளைவையும், ஏற்பட்டிருக்கும் பாதிப்பையும் நாம் கண்கூடாகக் காண முடியும். எனினும் ஆற்றுக்கு நாம் இழைக்கும் பல கொடுமைகளை ஆறு பலவேளைகளில் வெளிப்படையாகக் காட்டிக்கொள்வதில்லை. ஆறு பல உயிரினங்களின் வாழிடம். ஆறு சீரழிக்கப்பட்டால் நீர்நாய்கள், முதலைகள், மேலும் ஆற்றைச் சார்ந்துள்ள இன்னும் பல உயிரினங்கள் வெகுவளவில் பாதிக்கப்படுகின்றன.

வாழிடச்சிதைவினால் ஒரு பக்கம் நீர்நாய்கள் பாதிப்படைந்தாலும், அவற்றை அழிவின் விளிம்பிற்குத் தள்ளுவது கள்ளவேட்டையே. அவற்றின் தோலுக்காக (pelt) இவை பெருமளவில் கொல்லப்படுகின்றன. நவநாகரிக ஆடை வடிவமைப்போர், பல மேல்தட்டு மக்கள் மற்றும் சில பாப் பாடகிகள் (ஜெனிபர் லோபஸ்-Jenifer Lopez போன்றவர்கள்) நீர்நாய், மின்ங் (Mink) முதலிய பல உயிரினங்களில் தோலினால் ஆன உடைகளை விரும்பி அணிகின்றனர். இதனால் கள்ளச் சந்தையில் நீர்நாய்களின் தோலுக்கு மதிப்பு அதிகம். இந்தியாவில் கொல்லப்படும் நீர்நாய்களின் தோல் கான்பூர், லக்னோ, கோட்டா, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி முதலிய நகரங்களில் உள்ள கள்ளச் சந்தையில் விலை போகின்றன. இங்கிருந்து நேபாளம், வங்காளதேசம் முதலிய நாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்டு அங்கிருந்து உலகின் பல மூலைகளுக்கு கள்ளத்தனமாக கொண்டு செல்லப்படுகின்றன.

இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களின் சந்திப்பில் அமைந்துள்ள தேசிய சம்பல் நதி சரணாலயத்தில் ஒரு காலத்தில் ஆற்று நீர்நாய்களைப் பொதுவாகக் காணமுடியும். அங்கு அவற்றினைப் பற்றிய ஆராய்ச்சியும் நடைபெற்றது. ஆனால் இன்று அங்கு ஒரு நீர்நாய்கூட இல்லை. ஆறு, ஏரி முதலிய நீர்நிலைகளின் சீரழிவை சுட்டிக்காட்டும் தூதுவர்களாக (Ambassador of wetlands) நீர்நாய்கள் கருதப்படுகின்றன. ஏனெனில் நீர்நாய்கள் நீர்நிலைகளின் ஒரு முக்கிய இரைகொல்லி (predator). அவற்றை ஒரு இடத்தில் கண்டால் அந்த நீர்ச்சூழல் ஓரளவிற்கு சீர்கெடாமல் இருக்கிறது என அர்த்தம். நீர்நாய்கள் இல்லாத ஒரு நீர்நிலை, புலிகள் இல்லாத வனப்பகுதிக்குச் சமம்.

பெட்டிச் செய்தி

நீர்நாய்கள் நீரிலும் நிலத்திலும் வாழ்வதற்கான தகவமைப்பைப் பெற்றுள்ளன. நீண்ட, மெல்லிய, நீந்தும் போது குறைந்த எதிர்ப்பைத் தரும் உடலமைப்பையும், விரலிடைத்தோலுடன் கூடிய கால்களையும் பெற்றுள்ளன. அடர்த்தியான உரோமத்தால் உடல் போர்த்தப்பட்டிருக்கும். ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகாவைத் தவிர உலகெங்கும் பரவலாக காணப்படுகின்றன.

1. (Photo: Kalyan Varma) 2. (Photo: Kalyan Varma).3. (Photo: Wikipedia)

1. ஆற்று நீர்நாய் (Photo: Kalyan Varma) 2. காட்டு நீர்நாய் (Photo: Kalyan Varma) 3. யூரேசிய நீர்நாய் (Photo: Wikipedia)

இந்தியாவில் மூன்று வகையன நீர்நாய்கள் தென்படுகின்றன. ஆற்று நீர்நாய் (Smooth-coated otter Lutrogale perspicillata), காட்டு நீர்நாய் (Oriental small-clawed otter Aonyx cinerea), மற்றும் யூரேசிய நீர்நாய் (Common otter Lutra lutra). யூரேசிய நீர்நாய் உலகில் பல பகுதிகளில் பரவி காணப்படுகிறது. அதிகாலை அல்லது அந்திவேளையில் இந்நீர்நாய்களின் இயக்கம் உச்சநிலையை அடைகிறது. ஆற்று நீர்நாய் இந்தியாவின் பெரும்பாலான இடங்களிலும், பாலஸ்தீனம், மலேசியா, சுமத்ரா, ஜாவா மற்றும் போர்னியோ ஆகிய பகுதிகளிலும் பரவி காணப்படுகின்றன. ஈராக்கிலும் சிறு எண்ணிக்கையில் இவை உள்ளன. சமவெளிகளிலும், வறண்ட பிரதேசங்களிலும் தென்படும். இவற்றை கழிமுகப் பகுதிகள், நீர்த்தேக்கங்கள், பெரிய ஏரிகள், ஆறுகள் போன்ற பகுதிகளில் பல வேளைகளில் கூட்டம் கூட்டமாக பார்க்க முடியும். பெரும்பாலும் பகலிலோ, அந்திக் கருக்கலிலோ இவை வெளிவரும். யூரேசிய மற்றும் ஆற்று நீர்நாய்களின் பிரதானமான உணவு மீன்களே. காட்டு நீர்நாய் சிறியது. ஏனைய நீர்நாய்களின் அளவில் பாதி இருக்கும். ஆற்று நீர்நாய் பரவியுள்ள பகுதிகளிலும் இந்த நீர்நாய் தென்படும். இது ஒரு இரவாடி. இவை பொதுவாக மலைப்பாங்கான வனப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் வசிக்கின்றன. இவை ஏனைய நீர்நாய்களைப் போல் மீன்களை மட்டுமே உண்ணாமல், நீர்வாழ் பூச்சிகள், தவளைகள், நத்தைகள், இறால்கள், சிறிய மீன்கள் முதலியவற்றை உணவாகக் கொள்கின்றன.

******

தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 4th November 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF  ஐ இங்கே பெறலாம்.

Written by P Jeganathan

November 5, 2014 at 10:15 pm