UYIRI

Nature writing in Tamil

சிட்டுக்குருவிகள் உண்மையிலேயே அழிந்து வருகின்றனவா?

with one comment

சில ஆண்டுகளாக மார்ச் மாதங்களில் பத்திரிக்கைகளில் அடிக்கடி இடம்பெறும் செய்தி சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன என்பது. அதற்கான முக்கிய காரணங்கள் நகரமயமாதல், செல் போன் டவரிலிருந்து வரும் மின்காந்த அலைகள் என்றும் எனவே அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்றெல்லாம் அக்கட்டுரைகளில் சொல்லப்பட்டிருக்கும். இதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை? இந்தக் கருத்துக்கள் எல்லாம் அறிவியல் ஆராய்ச்சியின் முடிவில் வெளிவந்த உண்மைகளா? அழிவின் விளிம்பில் இருக்கும் மற்ற பறவைகளைக் காட்டிலும் சிட்டுக்குருவியின் நிலை என்ன அவ்வளவு பரிதாபகரமாக உள்ளதா? இக்கேள்விகளுக்கான விடைகளை அறிய முற்படும் முன் பல சங்கதிகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

ஆண் சிட்டுக்குருவி. Photo: Tharangini Balasubramanian

ஆண் சிட்டுக்குருவி. Photo: Tharangini Balasubramanian

சிட்டுக்குருவிகள் உலகின் பல பகுதிகளில் பரவியுள்ள ஒரு பறவையினம். பன்னெடுங்காலமாக மனிதர்களுக்கும் சிட்டுக்குருவிகளுக்கும் இருக்கும் பிணைப்பை நாம் அனைவரும் அறிவோம். இப்பறவைகள் மனிதர்கள் இருக்கும் பகுதிகளிலேயே அதிகம் தென்படும். உச்சந்தலையில் சாம்பல் நிறமும், தொண்டை கருப்பாகவும், உடலின் மேலே அரக்கு நிறத்திலும் இருப்பவை ஆண் குருவிகள். பெட்டையின் உடலில் இதைப்போன்ற நிறங்கள் இருக்காது, மாறாக வெளிறிய பழுப்பு நிறத்திலும்  அதன் முகத்தை கொஞ்சம் உற்று நோக்கினால் கண்களின் மேலே நீண்ட புருவமும் இருப்பதைக் காணலாம். மளிகைக்கடை வாசலிலும், மார்க்கெட்டுகளிலும், நம் தெருக்களிலும் பறந்து திரிவதை எளிதில் காணலாம். சில நேரங்களில் நம் வீடுகளிலுள்ள சுவர் இடுக்குகளில் கூட வந்து கூடமைக்கும். சிறுவயதிலிருந்து நாம் பார்த்துப் பழகிய பறவைகளில் சிட்டுக்குருவிகள் முதலிடம் வகிக்கும்.

பெண் சிட்டுக்குருவி. Photo: Tharangini Balasubramanian

பெண் சிட்டுக்குருவி. Photo: Tharangini Balasubramanian

ஒரு உயிரினம் அழிந்துகொண்டு வருகிறது என்று சொல்வதற்கு முன் அதற்கான ஆதாரங்களை நாம் முன் வைக்கவேண்டும். முன்பு 20000 இருந்தது இப்போது வெறும் 500 தான் இருக்கிறது என்று சொல்லும் போது, ஒரு காலத்தில் இருந்த அதன் எண்ணிக்கை நமக்குத் துல்லியமாக தெரிந்திருக்கிறது. இதுவே அடிப்படைத் தகவல். பிறகே அந்த உயிரினம் எண்ணிக்கையில் குறைந்துபோனதற்கான காரணத்தை ஆராய முற்படுவோம். இந்த அடிப்படைத் தகவல்களை தெரிந்துகொள்ளவே பல ஆண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டும். ஆனால் இந்தியா முழுவதிலும் சிட்டுக்குருவிகள் எங்கெங்கு, எத்தனை இருந்தன என்கிற தகவல் இதுவரை இல்லை. இந்தத் தகவல் இல்லாமல், நாம் பார்க்கவில்லை என்பதற்காக அவை அழிந்து வருகின்றன என்றும் அதற்கான காரணங்களையும் தக்க ஆதாரங்களின்றி கூறுவது சரியல்ல. பிறகு எப்படி நம் பத்திரிக்கைகளில் சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதற்கான காரணங்கள் துல்லியமாக சொல்லப்படுகின்றன?

அத்தகவல்களெல்லாம் பெரும்பாலும் இங்கிலாந்திலிருந்து இறக்குமதிசெய்யப்படவை!  சிட்டுகுருவிகளைப்பற்றி இங்கிலாந்தில் 1940 களிலிருந்து இன்றுவரை ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல பறவையியலாளர்கள் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து அங்குள்ள சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை பல ஆண்டுகளாக கணக்கெடுத்து வருகின்றனர். ஒரு காலத்தில் பல இடங்களில் பரவியிருந்த சிட்டுக்குருவியை 2002ம் ஆண்டு அந்நாட்டில் அழிவின் விளிம்பில் இருக்கும் பறவைகளின் பட்டியலில் அந்நாட்டு அறிவியலாளர்கள் சேர்த்துவிட்டனர். சிட்டுகுருவிகளின் எண்ணிக்கை நகரப்பகுதிகளிலிருந்து முன்பு இருந்ததைக்காட்டிலும் சுமார் 90% வீழ்ச்சியடைந்துவிட்டதாக பலகாலமாக நடத்தப்பட்டுவரும் ஆராய்ச்சியின் வாயிலாகத் தெரியவந்தது.

இங்கிலாந்தில் 1920களிலேயே சிட்டுக்குருவிகள் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கையில் குறையத்தொடங்கின. அதாவது குதிரைவண்டிகள் போய் மோட்டார் வாகனங்கள் வந்த காலங்களில். குதிரைவண்டிகளில் கொண்டுசெல்லப்படும் மூட்டைகளிலிருந்து சிந்தும் தனியங்களையும், குதிரைகளின் கழிவுகளிலுள்ள செரிக்கப்படாத தானியங்களையும் உட்கொண்டு வாழ்ந்து வந்த சிட்டுக்குருவிகள் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை உயரத்தொடங்கிய பின் இப்பறவைகளின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்தன. எனினும் 2005ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் சுமார் 13 மில்லியன் சிட்டுக்குருவிகள் இருப்பது தெரியவந்தது. ஆனால் 1994 முதல் 2000 வரை தன்னார்வலர்களைக் கொண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் ஐரோப்பாவின் பல பகுதிகளில் சிட்டுக்குருவிகள் எண்ணிக்கையில் சற்று குறைந்தும், ஸ்காட்லண்டிலும், வெல்ஷிலும் அதிகரித்திருந்தது.

வீட்டுச் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் பூனைகளும், நகரிலுள்ள காகங்களும் இவற்றை இரையாகக்கொள்வது, சிட்டுக்குருவிகள் கூடுகட்ட ஏதுவான பல புதர்ச்செடிகள் கொண்ட தோட்டங்கள் இல்லாமை, இனப்பெருக்க காலங்களில் குஞ்சுகளுக்குத் தேவையான பூச்சிகள் இல்லாமல் போவதால் ஏற்படும் உயிரிழப்பு போன்றவை காரணங்களாக இருக்கலாம் என்று பரவலாகத் தெரிவிக்கப்பட்டது. இவ்ற்றில் ஏதாவது ஒன்று மட்டுமே காரணமாக இல்லாமல் இவை அனைத்தும் ஒருங்கே சேர்வதால் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறையும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் அறியப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் சிட்டுக்குருவிகள் பல இடங்களில் மறைந்து வருவதைக்கண்டு அது இந்தியாவிற்கும் பொருந்தும் என நினைத்து இங்கும் அவற்றின் இனம் அழியாமலிருக்க (?) பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. மார்ச் 20ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. உண்மையில் நம்நாட்டிலுள்ள சிட்டுக்குருவிகளின் நிலை அவ்வளவு மோசமாக இன்னும் போய்விட்டதாகத் தெரியவில்லை. ஒரு சில நகரங்களிலுள்ள குறிப்பிட்ட சில பகுதிகளில் இவற்றின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம், அப்பகுதிகளிலிருந்து மறைந்தும் போயிருக்கலாம். ஆனால் பல ஆண்டுகள் தொடர்ந்து இவற்றின் எண்ணிக்கையை இங்கெல்லாம் கணக்கெடுத்த பின்னரே நாம் இதன் வீழ்ச்சி பற்றியும் அதற்கான காரணங்களையும் அறுதியிட்டுச் சொல்லமுடியும். புறநகர்ப்பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும், இவற்றின் எண்ணிக்கை மாறாமலும், ஓரளவிற்கு நல்ல எண்ணிக்கையிலும் இருப்பதாக புதுதில்லி, உத்திர பிரதேசத்தின் சில பகுதிகளில் நடத்தப்பட்ட சில குறுகிய கால ஆராய்ச்சி முடிவுகளின் வாயிலாக அறியமுடிகிறது. இன்னும் சொல்லப்போனால் அமெரிக்காவில் சிட்டுக்குருவிகள் மனிதர்களால் கொண்டுசெல்லப்பட்டு இப்போது அவை எண்ணிக்கையில் மிகுந்து சில பகுதிகளில் அந்நாட்டுக்குச் சொந்தமான பல பறவைகளின் பெருக்கத்திற்கு இடைஞ்சலாக இருக்கிறது.

கூட்டில் பெண் சிட்டுக்குருவி. Photo: Tharangini Balasubramanian

கூட்டில் பெண் சிட்டுக்குருவி. Photo: Tharangini Balasubramanian

இந்நிலையில் இந்தியாவிலுள்ள சிட்டுக்குருவிகளுக்கு இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கத்தான் வேண்டுமா? இந்தியாவில் அழிவின் விளிம்பில் தொற்றிக்கொண்டிருக்கும் பல பறவையினங்கள் இருக்கும் போது அவற்றையெல்லாம் காப்பாற்றும் முயற்சியின் ஈடுபடாமல் உலகெங்கிலும் காணப்படும் சிட்டுக்குருவிக்காக பரிதாபப்படுவது சரியா? இது எந்த விதத்திலாவது நம் நாட்டின் பல்லுயிர் பாதுகாப்பிற்கு உதவுமா?

உதவும். இதுவரை புலி போன்ற வசீகரமான விலங்குகளின் மேம்பாட்டிற்கான திட்டங்களை வகுப்பதற்கும், நிதி ஒதுக்கீடு செய்வதற்கும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் தான் முதலிடம் தரப்பட்டு வந்தது. அந்த வகையில் பல இடங்களிலும் காணப்படும் சிட்டுக்குருவிகளின் பாதுகாப்பிற்காக அதற்கென ஒரு தினத்தைத் தேர்ந்தெடுத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்  நல்லதே. இந்த விழிப்புணர்வை சிட்டுக்குருவிக்கு மட்டுமே இல்லாமல் நாம் நாட்டில் உள்ள பல அழிந்து வரும் பறவையினங்களுக்காகவும் செய்ய வேண்டும். அதற்கு சிட்டுக்குருவி பாதுகாப்பை ஒரு முதல் படியாக எடுத்துக்கொள்ளலாம். பறவைகளால் இயற்கைக்கும் மனிதகுலத்திற்கும் ஏற்படும் நன்மைகளை எடுத்துரைக்க இதைப்போன்ற தினங்களை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால் ஏற்படும் விழிப்புணர்வினால் அவற்றை பாதுகாக்கும் எண்ணமும், அவை அழியாமல் இருக்கச் செய்ய வேண்டிய தகுந்த ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான வாய்ப்பும் பெருகும்.

பத்திரிக்கைகள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேளையில் ஒரு உயிரினத்தின் அழிவிற்கான அல்லது பெருக்கத்திற்கான காரணங்களை அத்துறையில் பலகாலமாக ஈடுபட்டு வருவோரிடம் கேட்டறிந்து பிரசுரிப்பதே நல்லது. எனினும் பல நேரங்களில் அனுபவமில்லாதவர்களின் கருத்துக்களையோ, வேறு நாட்டில் நடந்த ஆராய்ச்சியின் முடிவுகளையோ பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன. இதைப் போன்ற ஆராய்ந்தறியாமல் வெளியிடப்படும் அரைவேக்காட்டுச் செய்திகளினால் மூன்று முக்கிய பிரச்சனைகள் எழுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பல காலமாக பறவை ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் கோபி சுந்தர் கூறுகிறார்.

முதலாவதாக பாறு கழுகுகளின் (Vultures) நிலையை உதாரணமாகக் சொல்லலாம். இப்பறவைகள் நம் நாட்டின் பல பகுதிகளிலிருந்து முழுவதுமாக அற்றுப்போய்விட்டன. அடுத்த சந்ததியினர் இப்பறவையை படங்களில் மட்டுமே பார்த்தறியும் நிலை ஏற்பட்டுள்ளது. தகுந்த அடிப்படைத்தகவல் இல்லாத சிட்டுக்குருவியின் வீழ்ச்சியை பெரிது படுத்துவதால் அழிவின் விளிம்பில் இருக்கும் இதைப்போன்ற பல பறவைகளைக் காப்பாற்ற வேண்டியதற்கான கவனம் சிதறியோ, திசைதிருப்பப்பட்டோ விடுகிறது. எதற்கு அக்கறை காட்ட வேண்டுமோ அதை விட்டுவிட்டு தேவையில்லாத அல்லது உடனடியாக கவனம் செலுத்தத் தேவையில்லாத ஒன்றிற்காக நம் நேரத்தையும், பணத்தையும் விரயம் செய்வது எந்த விதத்திலும் உபயோகமாக இருக்காது.

இரண்டாவதாக, இது தான் இப்பறவைகள் குறைவதற்கான காரணம் என அறிவிக்கப்படுவதாலும் அந்த செய்தியை பரவலாக்குவதாலும் பலரும் அதையே உண்மையென நம்பிவிடும் அபாயம் உள்ளது. இதனால் அறிவியல் துல்லியமான கருத்துக்களே மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இத்துறையில் பலகாலமாக ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகள் மற்றும் நிறுவனங்களின் நீண்டகால உழைப்பும் வீணாகிறது.

மூன்றாவதாக மிக முக்கியமானதாக, அத்தகவல்களை அவர்கள் மறுக்கும் போதோ, உண்மையான காரணங்களை முன் வைக்கும் போதோ அவர்களின் கூற்று செல்லுபடியாகாமல் போகும் அபாயமும் உள்ளது.

நீங்கள் சிட்டுக்குருவியின் காதலரா? அது குறைந்து போனதற்காக அனுதாபப்படுகிறீர்களா? அது மட்டுமே போதாது அவற்றை காப்பாற்றுவதற்கு. அவற்றின் எண்ணிக்கையை பெருக்கும் அறிவியல் பூர்வமான முயற்சிகளில் பங்களியுங்கள். சிட்டுக்குருவியை பார்க்கும் அதே வேளையில் இந்தியாவிலுள்ள சுமார் ஆயிரத்து முந்நூறு பறவைகளின் மீதும் கவனம் செலுத்துங்கள். உங்களது ஆர்வமும், அனுதாபமும் சிட்டுக்குருவியிலிருந்து தொடங்கட்டும்.

——————————————————————————————————————————————————————

22 ஏப்ரல் 2012 அன்று தினமணி நாளிதழின் “கொண்டாட்டம்” ஞாயிறு இணைப்பில் வெளியான கட்டுரை இது. இதன் PDFஐ இங்கே தரவிரக்கம் செய்யலாம்.

Dr. கோபி சுந்தர் (Dr. K. Gopi Sundar) சிட்டுக்குருவிகளைப் பற்றி எழுதிய ஆங்கிலக் கட்டுரையினை இங்கே காணலாம்.

——————————————————————————————————————————————————————

Citizen_sparrow_header

சிட்டுக்குருவிகள் குறைந்து விட்டன என்று சொல்லும் முன் இதற்கு முன் எவ்வளவு இருந்தது என்பதை தெரிந்திருப்பது மிக மிக அவசியம். ஆனால் இந்தியா முழுவதிலும் எங்கெங்கு எத்தனை சிட்டுக்குருவிகள் இருந்தன என்பது இதற்கு முன் கணக்கெடுக்கப்படவில்லை. இந்த அடிப்படைத் தகவலை இந்தியா முழுவதிலிருந்தும் திரட்டுவதற்கான முயற்சி citizensparrow எனும் மக்கள் அறிவியல் (Citizen Science) திட்டத்தின் மூலம் தொடங்கப்பட்டது. ஓரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட காலகட்டத்தில் சிட்டுக்குருவிகளின் இருப்பையும்(presence) இல்லாமையையும் (absence) இந்தியாவில் பல பகுதிகளிலிருந்து இக்காலகட்டத்தில் சுமார் பத்தாயிரம் பதிவுகள் செய்யப்பட்டது.

இந்த கணக்கெடுப்பு 1 ஏப்ரல் – 15 ஜூன் 2012 வரை நடைபெற்றது. இது ஒரு இணைய கணக்கெடுப்பு. இக்கணக்கெடுப்பின் சுருக்கமான தரவுகள் சில:

  • பல இடங்களில் முன்பு இருந்ததை விட தற்போது எண்ணிக்கையில் சற்று குறைந்துள்ளது*†.
  • சிறுநகரங்களையும், கிராமங்களைக்காட்டிலும் மாநகரங்களில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருப்பது தெரியவந்தது.
  • எனினும் இது மாநகரத்திற்கு மாநகரம் மாறுபட்டு இருந்தது. உதாரணமாக மும்பை, கோயம்பத்தூர் முதலிய நகரங்களில் பல இடங்களில் பரவியிருந்ததும், பெங்களூரு, சென்னை முதலிய நகரங்களில் பல இடங்களில் இல்லாமலும் இருந்தது தெரியவந்தது.

முழுவிவரங்களையும் (ஆங்கிலத்தில்) இந்த PDFல் காணலாம். மேலும் விவரங்களுக்கு www.citizensparrow.in இணையத்தை பார்க்கவும்.

*†இக்கணக்கெடுப்பின் தரவுகளை மிகவும் கவனத்துடன் விளக்கவும், புரிந்து கொள்ளவும் வேண்டும். முதலில் இது ஒரு இணையக் கணக்கெடுப்பு என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். குறுகிய காலகட்டத்தில் விரைவாக நடத்தப்பட்ட இக்கணக்கெடுப்பின் தரவுகள் ஓரளவிற்கு சிட்டுக்குருவிகளின் நிலையை வெளிப்படுத்தினாலும் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின்னரே அவை எண்ணிக்கையில் குறைந்து  அல்லது அதிகமாகி வருகின்றனவா என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியும். இத்தரவுகளை மேலோட்டமாக புரிந்து கொண்டு பொத்தம் பொதுவாக எல்லா இடங்களிலும் சிட்டுக்குருவிகள் குறைந்து வருகின்றன எனும் முடிவுக்கு வந்து விடக்கூடாது.

Written by P Jeganathan

April 30, 2012 at 1:17 pm

Posted in Birds

Tagged with ,

One Response

Subscribe to comments with RSS.

  1. Reblogged this on SALEM ORNITHOLOGICAL FOUNDATION.

    Salem Ornithological Foundation

    March 20, 2019 at 11:40 am


Leave a comment