UYIRI

Nature writing in Tamil

சிட்டுக்குருவி உங்கள் வீட்டுக்கு வருகிறதா?

leave a comment »

”சிறிய தானியம் போன்ற மூக்கு; சின்னக் கண்கள்; சின்னத் தலை; வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல் வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப் போர்த்த முதுகு; சிறிய தோகை; துளித் துளிக் கால்கள்”.

சிட்டுக்குருவியை வர்ணிக்கும் இந்த வரிகள் யாருடையது என்றுத் தெரிகிறதா? மகாகவி பாரதியாருடையவை! வெள்ளைக் கழுத்து என்று சொல்லியிருப்பதால் அவர் பெட்டைக்குருவியைக் குறிப்பிடுகிறார் என்று தெரிகிறது. ஆண் சிட்டின் கழுத்தில் கருப்புத்திட்டு இருக்கும். பாரதியார் மட்டுமல்ல சங்க இலக்கியங்களும் சிட்டுக்குருவியைப் பற்றிப் பாடுகின்றன. குறுந்தொகையில் குறிப்பிடப்படும் ‘மனையுறை குரீஇ’ என்பது சிட்டுக்குருவியாகத்தான் இருக்கக் கூடும். குருவி என இன்று நாம் வழங்கும் வார்த்தை குரீஇ எனும் சொல்லில் இருந்துதான் வந்திருக்க வேண்டும்.

சிட்டுக்குருவிகளைப் பற்றி தமிழ் சினிமாப் பாடல்கள் பல உள்ளன. நீங்கள் கொஞ்சம் வயதானவராக இருந்தால் சட்டென உங்கள் நினைவுக்கு வருவது எம். எஸ். ராஜேஸ்வரி அவர்கள் பாடிய, ”சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?..”, புதிய பறவையில் வரும், “சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே..” போன்ற பாடலாகத்தானிருக்கும். என்னைப்போல் 70வதுகளில் பிறந்தவராக இருந்தால், முதல் மரியாதையில் வரும், ”ஏ குருவி..சிட்டுக்குருவி..” நினைவுக்கு வரக்கூடும். நான் பட்டியலிட்ட வரை சிட்டுக்குருவி என தொடங்கும் பாடல்கள் மட்டும் பத்து. ஒரு நாள் முழுதும் யோசித்து, பலரிடம் தொலைபேசியில் கேட்டு, இணையதளங்களில் தேடி மொத்தம் பதினெட்டு தமிழ்ச் சினிமா பாடல்களின் வரிகளில் சிட்டுக்குருவி இருப்பதை அறிந்தேன். (அப்பதிவை இங்கே காண்க)

_JEG5817_700

சிட்டுக்குருவியைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. மனிதர்கள் வாழும் பகுதியிலேயே வாழ்ந்து வரும் பறவையினம் இது. இப்படி நம் இலக்கியங்களிலும் அன்றாட வாழ்விலும், கலந்திருப்பவை சிட்டுக்குருவிகள். சில வருடங்களாகவே பத்திரிக்கைகளிலும் ஊடகங்களிலும் சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன அவற்றை காப்பாற்ற வேண்டும் என்றெல்லாம் செய்திகள் வருவதைப் பார்த்திருக்கலாம். அவை குறைவதற்கான காரணங்கள் நகரமயமாதல், செல்போன் டவர்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு என்றெல்லாம் அச்செய்திகளில் சொல்லப்பட்டிருக்கும். இதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை? இந்தியாவில் சிட்டுக்குருவிகள் சில இடங்களிலிருந்து மறைந்து போயிருக்கலாம். சில இடங்களில் முன்பு இருந்ததைவிட எண்ணிக்கையில் தற்போது குறைந்தும் போயிருக்கலாம். ஆனால் அவற்றின் எண்ணிக்கையை துல்லியமாக அறியவும், ஏன் குறைந்து வருகிறது என்பதையும் அறிய பல வருட  களப்பணிகள் மேற்கொண்டும், தகுந்த அறிவியல் ஆராய்ச்சியின் முடிவிலும் தான் அறியமுடியும்.

பொதுவாக செய்திகளில் தெரிவிக்கப்படும் செல்போன் டவர் கதிர் வீச்சு போன்ற காரணங்களெல்லாம் ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்பட்ட பல வருட ஆராய்ச்சியின் முடிவு. அங்கும் கூட இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என யூகித்தார்களே ஒழிய இதுதான் முக்கிய காரணம் என திட்டவட்டமாகச் சொல்லவில்லை. இங்கிலாந்தில் சிட்டுக்குருவிகள் அழியும் நிலையில் உள்ளன. அதற்கான காரணங்கள் பல. நகரங்களில் இருந்த தோட்டங்கள், புதர்ச்செடிகள் வெகுவாகக் குறைந்து போனது, அவை கூடமைக்க ஏதுவான இடங்கள் இல்லாமல் போனது, முட்டை பொரிக்கும் காலங்களில் புழு, பூச்சிகளின் தட்டுப்பாட்டினால் குஞ்சுகளுக்கு சரியான இரையில்லாமல் போவது போன்றவையே காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்பட்டது. இவற்றில் எதாவது ஒன்று மட்டுமே இல்லாமல் இவையனைத்துமே காரணமாக இருக்கவும் கூடும் என்றறியப்பட்டது.

_JEG5894_700

மேலை நாடுகளில் ஓரு குறிப்பிட்ட இடத்திலிருந்து அவை மாயமாய் மறைந்து, எண்ணிக்கையில் குறைந்து விட்டன என்று சொன்ன போது அவர்களிடம் அதற்கு முன் அந்த இடத்தில் எத்தனை சிட்டுக்குருவிகள் இருந்தன என்ற தகவல் இருந்தது. அதாவது ஒவ்வொரு வருடமும் கணக்கெடுப்பு நடத்தியதால் முன்பிருந்ததை விட இப்போது குறைந்து விட்டன என துல்லியமாகச் சொல்ல முடிந்தது. அமெரிக்காவில் கிருஸ்துமஸ் தினத்தன்று அந்நாட்டின் நகரங்களின் பல பகுதிகளில் சுற்றித்திரியும் பறவைகளை கணக்கிடுவார்கள். இப்பணியில் பல தன்னார்வலர்கள் பங்குகொண்டு அவர்கள் பார்த்தவற்றை பதிவு செய்து விஞ்ஞானிகளிடம் அத்தகவலை பகிர்ந்து கொள்வார்கள். இதைப் போன்ற திட்டங்களை நம் நாட்டிலும் செயல்படுத்த வேண்டும். இத்திட்டங்கள் பறவைகளையும், அவற்றின் வாழிடங்களையும் பாதுகாக்கும் எண்ணத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த உதவும். பொதுமக்கள் அறிவியல் ஆராய்ச்சியில் பங்கு கொள்ளும் இத்திட்டங்களுக்கு மக்கள் அறிவியல் (Citizen Science) என்று பெயர்.

பறவைகள் நாம் வாழும் சூழலின் தன்மையை, நிலையை அறிய உதவும் ஒரு உயிரினம். அதாவது சூழியல் சுட்டிக்காட்டிகள். ஒரு சில வகைப் பறவைகள் ஓரிடத்திலிருந்து குறைந்தாலோ, அழிந்துவிட்டாலோ அவ்விடங்களின் நிலை சீரழிந்து வருகிறது என்பதற்கான அறிகுறியாகும். ஆகவே நம் வீட்டின் அருகிலுள்ள பறவைகளை அடையாளம் கண்டு அவ்வப்போது அவற்றின் எண்ணிக்கையைப் பற்றிய குறிப்புகளை சேகரித்து வைக்கலாம். பறவைகளின் மேல் மட்டுமல்லாமல் இயற்கையின் மீதான கரிசனத்தை இவ்வகையான செயல்கள் அதிகப்படுத்தும்.

 பெண் சிட்டுக்குருவியின் மண் குளியல் (Dust Bathing)

பெண் சிட்டுக்குருவியின் மண் குளியல் (Dust Bathing)

உங்கள் வீட்டினருகில் சிட்டுக்குருவிகள் வருகின்றனவா என கவனியுங்கள். வந்தால் கொஞ்ச நேரம் அவற்றை பார்த்து ரசித்துக் கொண்டேயிருங்கள். தினமும் அவற்றை உங்கள் வீட்டினருகில் வரவழைக்க வேண்டுமா? கப்பலோட்டிய தமிழன் சினிமா பாருங்கள். அதில் பாரதியார் ஒரு காட்சியில் செல்லம்மா கடன் வாங்கி வைத்திருந்த அரிசியை முற்றத்தில் சிட்டுக்குருவிகள் கொத்திச் சாப்பிடுவதற்காக இரைத்து விடுவார். இதைக்கண்டு கோபித்துக்கொள்ளும் செல்லம்மாவிடம் சிட்டுக்குருவிகளின் பசி தீர்த்ததை எண்ணிப் பெருமைப்பட்டு அப்பறவைகளைப் போல் கவலைப்படாமல் இருக்கச்சொல்லி, “விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக்குருவியினைப் போலே…” எனப் பாடுவர். அதைப்போல நீங்களும் சிட்டுக்குருவிகளுக்கு தினமும் கொஞ்சம் தானியங்களை வைக்கலாம். கூடவே ஒரு சிறிய பாத்திரத்தில் அவற்றின் தாகம் தீர்க்கத் தண்ணீரையும் வைக்கலாம்.

கூட்டில் பெண் சிட்டுக்குருவி. Photo: Tharangini Balasubramanian

கூட்டில் பெண் சிட்டுக்குருவி. Photo: Tharangini Balasubramanian

ஒரு சிறிய அட்டைப்பெட்டி இருந்தால் (ஷு வாங்கி வந்த பெட்டிகூட போதும்) அது பிரியாமலிருக்க இருபுறமும் பசையிட்டு ஒட்டி, சிட்டுக்குருவி நுழையும் அளவிற்கு ஓட்டை போட்டு வீட்டின் ஓரமாக உயரே தொங்கவிட்டால் சிட்டுக்குருவியின் குடும்பத்தையே உங்கள் வீட்டிற்கே கொண்டுவரலாம். அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தால் நம் கவலை மறந்து, விட்டு விடுதலையாகி நிற்கலாம்!

******

காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 2. புதிய தலைமுறை 19 ஜூன் 2012

Written by P Jeganathan

July 21, 2012 at 5:22 pm

Leave a comment