UYIRI

Nature writing in Tamil

காணாமல் போகும் சாலையோர உலகம்

leave a comment »

சமீபத்தில் திருச்சியிலிருந்து தஞ்சாவூருக்கு பயணம் மேற்கொள்ள நேரிட்டது. பல ஆண்டுகளாக இவ்வழியில் போய் வந்து கொண்டிருந்தாலும் கடைசியாக பயணித்த அனுபவம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. திருவெறும்பூரிலிருந்து ஒரு காலை வேளையில் காரில் புறப்பட்டோம். பாய்லர் தொழிற்சாலை, துவாகுடி வழியாகச் சென்று சுங்கச்சாவடியில் அந்த அகலமான சாலையில் போய் வர 59 ரூபாய் கட்டணம் செலுத்தி விட்டு கார் தஞ்சாவூரை நோக்கி வேகமெடுத்தது. ஸ்பீடோமீட்டர் 80க்குக் குறையாமல் காரோட்டி பார்த்துக்கொண்டார். அரைமணி நேரத்தில் ஊரின் எல்லைக்குள் நுழைந்து விட்டோம். பலகாலமாக அந்த வழியாகப் போகாமல் இருந்த எனக்கு இம்முறை இங்கு நான் கண்ட பல மாற்றங்கள் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. நான் போகவேண்டிய இடத்தை சீக்கிரமாக அடைந்ததில் ஒரு விதத்தில் மகிழ்ச்சி என்றாலும் பயணித்த அத்தருணத்தில் பலவற்றை இழந்ததைப் போன்ற ஒரு உணர்வே மேலோங்கி இருந்தது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் எனது மாமா ஒருவருடன் இவ்வழியில் பயணித்த போது இந்த இரண்டு ஊர்களுக்கிடையே வழிநெடுக சாலையிலிருந்தபடியே பார்க்கக்கூடிய பல ஏரிகளை பேருந்திலிருந்து காண்பித்துக்கொண்டே வந்தார். பல இடங்களில் அவை இருந்த சுவடே தெரியாமல் போனதைச் சுட்டிக்காட்டி கவலைப்பட்டுக்கொண்டார். அப்போது அவரது வார்த்தைகளின் அர்த்தம் அவ்வளவாகப் புரியவில்லை. அப்போழுதெல்லாம் வழிநெடுக ஆங்காங்கே சாலையோரமாக பனை, ஆல், புளியன் மரங்களைக் காணலாம். இப்பொது இவ்வழியே போகும்போது ஏரியும் இல்லை, மரங்களும் இல்லை. இப்போது சில ஊர்கள் கூட பார்வையிலிருந்து மறைந்ததும், தூரமாகவும் போய்விட்டன.

roadsidetrees1_Photo P Jeganathan_700

முன்பெல்லாம் பேருந்தில் தஞ்சாவூருக்குப் பயணித்தால் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். துவாகுடி தாண்டியதும் புதுக்குடி, தேவராயனேரி, செங்கிப்பட்டி வழியாக வல்லம் வந்தடைந்து பின் சுமார் இருபது நிமிடங்களில் தஞ்சாவூரைச் சென்றடையலாம். அப்போதிருந்த ஒரு சில சோழன் போக்குவரத்துக்கழக பேருந்துகளே எல்லா ஊர்களிலும் நிற்கும். பல தனியார் வண்டிகள் துவாகுடி, செங்கிப்பட்டி விட்டால் வல்லம் அதன் பின் தஞ்சாவூர்தான். இப்போதும் இந்த ஊருக்குள் போய்வரமுடியும். அதற்கென்று தனி பஸ் சர்வீஸ் இருக்கிறது. விரைவு வண்டிகள், காரில் பயணிப்போர் இங்கெல்லாம் போக வேண்டிய அவசியம் இல்லை. தொலை தூரத்திலிருந்து பயணிக்கும் வண்டிகளில் வருபவர்களுக்கு காலப்போக்கில் இந்தமாதிரியான ஊர்கள் இருப்பதே தெரியாமல் போய்விடும். இவ்வூர்களையெல்லாம் இருப்பதை தெரிந்து வைத்திருப்பதும், அவ்வழியே கடந்து செல்வதும் அவர்களுக்கு வேண்டுமானால் அவசியமில்லாமலிருக்கலாம். ஆனால் நான் உணர்ந்ததை பலகாலமாக அடிக்கடி இவ்வழியே பயணித்துக்கொண்டிருப்பவர்கள் ஒருவேளை உணரக்கூடும். நான் சொன்ன இந்த ஊர்களெல்லாம் மிகப்பிரபலமானவையோ, சுற்றுலாவிற்கான இடமோ அல்லது இவ்வூர்களிலெல்லாம் எனக்கு சொந்தக்காரர்களோ, தெரிந்தவர்களோ இல்லை. பிறகு ஏன் இந்த அங்கலாய்ப்பு என்கிறீர்களா? பயணம் மேற்கொள்வது சென்றடையும் இடத்தை அடைவதற்கு மட்டும் தானா? எவ்வழியே பயணிக்கிறோம், வழியில் என்ன செய்கிறோம், எதைப் பார்க்கிறோம் என்பது முக்கியம் இல்லையா?

நல்ல சாலையால் பல நன்மைகள் இருக்கத்தான் செய்கிறது. அகலமான சாலையில் வேகமாகப் பயணிப்பது ஒரு பரவசமூட்டும் அனுபவமாகவும், வேலையை முடிக்க ஒரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு துரிதமாகச் சென்றடையவும் முடிகிறது. ஆயினும் பலகாலமாக பார்த்துப் பழகிய மரங்களையும், ஊர்களையும் காணாமல் போகச்செய்கிறது இந்த நால்வழிச்சாலைகள். சிற்றூர்களை பார்க்கமுடியாமல் போனால் போகிறது. பெயர்ப்பலகைகளிலாவது அவற்றைப் பார்க்க முடிந்தது. ஆனால் ஓங்கி உயர்ந்த, நிழலளிக்கும் அழகான சாலையோர மரங்கள்?

_JEG0357_

நால்வழிச்சாலையின் நடுவில் இருந்த திட்டில் அரளிச்செடிகள் வளர்க்கப்பட்டிருந்தன. ஆட்கள் அவற்றிற்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தார்கள். பல்லாண்டு காலமாக வாழ்ந்து வந்த, எந்த பராமரிப்பும் செய்யத்தேவையில்லாத சாலையோர மரங்களை வெட்டிச்சாய்த்துவிட்டு வெறிச்சோடியிருக்கும் அந்த நான்குவழிச்சாலையின் நடுவில் பூச்செடிகளை வைத்து தண்ணீரையும் விரயம் செய்து கொண்டிருக்கிறோம். சாலையோர மரங்களை வெட்டாமல் சாலையே அமைக்க முடியாதா? நாம் நாட்டு தேசிய நெடுஞ்சாலைத்துறையில் சாலையோர மரங்களை விரும்பும் ஓர் அதிகாரி கூட இல்லையா? மிகச்சிறப்பாக சாலைகளை அமைக்கும் பொறியியல் வல்லுனர்களுக்கு சாலையின் ஒரு அங்கம் அதனோரத்தில் இருக்கும் மரங்கள் என்பது தெரியாதா?

தஞ்சாவூரில் வேலையை முடித்துக்கொண்டு நீடாமங்கலத்திற்குப் பயணித்தோம். புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வழியாகச் சென்ற சாலையில் அதிக மாற்றம் ஏதுமில்லை. ஆங்காங்கே இருந்த பள்ளங்களை தாரிட்டு நிரப்பி முன்பு வந்த சாலையைபோல் ஒரே சீராக இல்லாமலும், சில இடங்களில் வேகத்தடைகளும், வழியெங்கிலும் மரங்களும் இருந்தது. காகங்களும், தவிட்டுக்குருவிகளும், நாகணவாய்களும் சாலையின் ஓரத்தில் அமர்ந்து எதையோ கொத்திக்கொத்தி சாப்பிட்டுக் கொண்டிருந்தன. வாகனங்கள் சீறி வரும் வேளையில் பறந்து சென்று, அவை கடந்து சென்றபின் மீண்டும் இருந்த இடத்திற்கே வந்தமர்ந்தன. சற்று தொலைவில் கத்திக்கொண்டிருந்த கெளதாரியின் குரலை தெளிவாகக் கேட்க முடிந்தது. தந்திக்கம்பிகள் சாலையின் அருகிலேயே நம்மைத்தொடர்ந்து பயணித்தன. அவற்றில் அமர்ந்திருக்கும் பறவைகளும் தான். பச்சைப்பசேலென வயல் கண்ணுக்கெட்டும் தூரம் வரையில் பரவியிருந்தது. ஆட்கள் ஆடுகளை சாலையின் ஓரமாக ஓட்டிக்கொண்டு போனார்கள். அவ்வப்போது அவைகளும் வண்டி ஓட்டுனர்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தின. காலை நேரமாதலால் சிறுவர்கள் பள்ளிக்கு சைக்கிளில் ஒருவர் பின் ஒருவராக போய்க்கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே ஊர்களும், கடைகளும் அவற்றின் வண்ண வண்ணப் பெயர்ப் பலகைகளும் தென்பட்டன. மக்கள் பேருந்துக்காக காத்துகொண்டிருந்தார்கள். சாலையை விட்டு சற்றுத் தள்ளியிருந்த அரசமரத்தடியில் சிலர் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தார்கள். லாரி ஒன்று நடு ரோட்டில் நிறுத்தப்பட்டு அதன் ஓட்டுனர் தலையை வெளியில் நீட்டி எதிரில் வந்த மற்ற லாரி ஓட்டுனரிடம் ஏதோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். இரண்டுமே ஹரியானா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டவை. நட்ட நடு ரோட்டில் இப்படி நிறுத்தி பேசிக்கொண்டிருப்பது மற்ற வாகனங்களின் போக்குவரத்திற்கு இடையூராக இருப்பதென்னவோ உண்மைதான். எங்கு பரிச்சயமானார்களோ எவ்வளவு நாள் கழித்து சந்தித்துக்கொள்கிறார்களோ! வண்டியை ஓரமாக நிறுத்தி பேச அவர்களுக்கெல்லாம் நேரமிருக்குமோ என்னவோ? இன்னும் பல கி.மீ தூரம் போகவேண்டியிருக்கலாம். பின் வரும் வாகனங்கள் திட்டிக்கொண்டே ஒலியெழுப்புவது அவர்களுக்குத் தெரியாமலில்லை. வண்டியை நகர்த்திக்கொண்டே கையசைத்து விடைபெற்றனர் இருவரும்.

Photo: TR Shankar Raman

Photo: TR Shankar Raman

காரோட்டி சொன்னார்,” இந்த ரோட்ட எப்ப அகலப்படுத்தப் போறாங்களோ, பைபாஸ் ரோடு ரெடி பண்ணிட்டா இந்த ஊருக்குள்ள வரவேண்டியதே இல்ல..”. எனக்கு ஏதும் பேசத் தோன்றவில்லை.புன்னகைத்துக் கொண்டே முகத்தைத் திருப்பி சாலையோர உலகை வேடிக்கை பார்ப்பதை தொடரலானேன்.

******

காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 8. புதிய தலைமுறை 30 ஆகஸ்ட் 2012

Written by P Jeganathan

August 31, 2012 at 7:01 pm

Posted in Environment, Plants

Tagged with ,

Leave a comment