UYIRI

Nature writing in Tamil

இந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா

leave a comment »

இந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா

வரையாடு (Nilgiri Tahr). Photo: Kalyan Varma/Wikimedia Commons

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இச்சரணாலயம் 1976ல் ஏற்படுத்தப்பட்டது. இதன் பரப்பு 850 சதுர கி.மீ. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமான இப்பகுதி பல்லுயிரியத்திற்கு பெயர் போனது. இந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதி. குடைசீத்த மரங்கள் கொண்ட தரைக்காடுகள், புல்வெளிகளையும் புதர்களையும் கொண்ட வெட்ட வெளிப் பகுதிகள், மழைக்காடுகள், இலையுதிர்காடுகள், ஆற்றோரக்காடுகள், மலையுச்சிப் புல்வெளிகள், சோலைக்காடுகள் என பல வகையான வாழிடங்களைக் கொண்டது. இதனாலேயே பலவித தாவர மற்றும் விலங்குகளின் பன்மயத்தைக் கொண்டுள்ளது. வேங்கைப்புலி, சிறுத்தை, செந்நாய், நரி, சிறுத்தைப்பூனை, கரடி, யானை, மிளா, கேளையாடு (Barking Deer), புள்ளி மான், சருகுமான், காட்டெருது (Gaur), மற்றும் ஓரிடவாழ்விகளான (Endemic species) வரையாடு (Nilgiri Tahr), நீலகிரி கருமந்தி (Nilgiri Langur), சோலைமந்தி (சிங்கவால் குரங்கு), பழுப்பு மரநாய் (Brown Palm Civet), சின்ன பறக்கும் அணில் (Travancore Flying Squirrel) முதலிய பாலுட்டிகளும், ஆனைமலை சாலியா ஓணான் (Anaimalai Spiny Lizard), மலபார் குழிவிரியன் (Malabar pit viper) முதலிய ஊர்வன இனங்களும், பல வகையான காலில்லாத் தவளைகள் (Caecilians), கொட்டான் எனும் பாதாளத் தவளை (Purple frog), என பல அரிய உயிரினங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது இப்பகுதி. பெரிய இருவாசி (Great Hornbill), கருங்கழுகு (Black Eagle) என சுமார் 218 வகைப் பறவைகள் இப்பகுதியில் தென்படுகின்றன. அவற்றில் நீலகிரி நெட்டைக்காலி (Nilgiri Pipit), மலபார் இருவாசி (Malabar Grey Hornbill), நீலகிரி ஈப்பிடிப்பான் (Nilgiri Flycatcher) போன்ற 12 வகை பறவைகள் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் மட்டுமே தென்படும் ஓரிடவாழ்விகள் ஆகும்.

கொட்டான் எனும் பாதாளத் தவளை (Purple frog). Photo by David Raju/Wikimedia Commons

இது தவிர இங்கு மட்டுமே தென்படக்கூடிய காட்டு காசித்தும்பைச் செடிகளும், ஆர்கிடுகளும் (Orchids), ஏனைய பிற அரிய தாவரங்களும் இங்குண்டு. மேலும் காடர்கள், மலை மலசர்கள். மலசர்கள், முதுவர்கள், புலையர்கள், எரவலர்கள் என பல வித பழங்குடியினரும் வாழும் பகுதி இது. இந்திரா காந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசிய பூங்காவைச் சுற்றி கேரளா பகுதியில் பரம்பிகுளம் புலிகள் காப்பகம், சின்னார் காட்டுயிர் சரணாலயம், வாழச்சால் காப்புக்காடு, எரவிகுளம் தேசியபூங்கா என தொடர்ச்சியான வனப்பகுதிகளைக் கொண்டுள்ளதால், பலவித காட்டுயிர்களுக்கும், யானைகளுக்குமான மிக முக்கியமான வழித்தடமாக இப்பகுதி அறியப்படுகிறது.

தேன் இழிஞ்சான் (Nilgiri Marten Martes gwatkinsii) சாலையைக் கடக்கும் காட்சி. (இணைக்கப்பட்ட படங்கள்).  Photo: P. Jeganathan/ Wikimedia Commons

இந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயத்துடன் 108 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கரியன் சோலை, அக்காமலை புல்வெளி, மஞ்சம்பட்டி ஆகிய பகுதிகள் 1989ல் சேர்க்கப்பட்டு தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது. தேக்குமரக்காடு, சோலைக்காடு, மழைக்காடு, மலையுச்சிப் புல்வெளிகள் என பல பல்லுயிரியம் செழிக்கும் மிக முக்கியமான வாழிடங்களைக் கொண்டது இப்பகுதி. யானை, வேங்கைப்புலி, சிறுத்தை, தேன் இழிஞ்சான் (Nilgiri Marten), சிறுத்தைப் பூனை, வரையாடு முதலிய பாலுட்டிகளும், பெரிய இருவாசி, மலபார் இருவாசி, தவளைவாயன், நீலகிரி நெட்டைக்காலி, குட்டை இறக்கையன் முதலிய பறவைகளும், பல வகையான வண்ணத்துப்பூச்சிகளும், தட்டான்களும், காட்டு காசித்தும்மை, ஆர்கிட் முதலிய பல அரிய தாவரங்களும் இப்பகுதியில் தென்படுகின்றன.

மனோரமா இயர்புக் 2015 ல் “தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள்” எனும் தலைப்பில் (பக்கங்கள் 178-195) வெளியான நெடுங்கட்டுரையின்  ஒரு பகுதி.

Written by P Jeganathan

January 28, 2018 at 9:00 am

Leave a comment